http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Sunday, 24 March 2013

திருமந்திரம்-தந்திரம்09: பதிகம் 15. அற்புதக் கூத்து-பாடல்கள்:42. பாகம்-I

 
 பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
*************************************************
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:01: குருமட தரிசனம்..............................பாடல்கள்: 006 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:02: ஞானகுரு தரிசனம்..........................பாடல்கள்: 019 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:03: பிரணவ சமாதி..............பாடல்கள்:006
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:04: ஒளிவகை......................பாடல்கள்:017
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:05: பஞ்சாக்கரம்-தூலம்........பாடல்கள்:010
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:06: பஞ்சாக்கரம்-சூட்குமம்.பாடல்கள்...:005

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:07: அதிசூக்கும பஞ்சாக்கரம்.பாடல்கள்:003
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:08: காரண பஞ்சாக்கரம்........பாடல்கள்:003
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:09: மகா காரணபஞ்சாக்கரம்:பாடல்கள்:004

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:10: திருக்கூத்து.....................பாடல்கள்:002  
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:11: சிவானந்தக் கூத்து..........பாடல்கள்:008
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:12: சுந்தரக் கூத்து................பாடல்கள்:006

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:13: பொற்பதிக் கூத்து..........பாடல்கள்:011
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:14: பொற்றில்லைக்கூத்து....பாடல்கள்:013 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:15: அற்புதக் கூத்து..............பாடல்கள்:042
*************************************************

தந்திரம் 8- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -015 

கூடுதல் பாடல்கள்  ..............................................(104+042=146)

*************************************************
ஒன்பதாம் தந்திரம் - 15. அற்புதக் கூத்து : பாடல்கள் : 042 (பாகம்-I)
பாடல் எண் : 1
குருஉரு அன்றிக் குனிக்கும் உருவம்
அருஉரு ஆவதும் அந்த உருவே
திரிபுரை யாகித் திகழ்தரு வாளும்
உருவரு வாளும் உமையவள் தானே.

பொழிப்புரை :  சிவபிரானது கூத்த வடிவமே சகல வருக்கத்தினருக்குக் குருவாகி வந்து ஞானத்தை உணர்த்தும் வடிவமும், திருக்கோயில்களில் மூலத்தானத்தில் எழுந்தருளியிருந்து வழிபாட்டினை ஏற்று அருள்புரியும் இலிங்க வடிவமும் ஆகும். இனி அவ்வடிவத்தின் பக்கத்தில் பெண்ணுருவாய் நிற்பவளும், மற்றும் சிவனுக்கு மூவகைத் திருமேனியாய் விளங்குபவளும் கூத்தப் பெருமானது சத்தியே.
*************************************************
பாடல் எண் : 2
திருவழி யாவது சிற்றம் பலத்தே
குருவடி வுள்ளாக் குனிக்கும் உருவமே
உருஅரு ஆவதும் உற்றுணர்ந் தோர்க்கு
அருள்வழி யாவதும் அவ்வழி தானே.

பொழிப்புரை : ஒருவனுக்கு வீட்டு நெறியாவது, அவனது உள்ளத்தில் அவனுக்குக் குருவாய் வந்து அருள் புரிந்தவர் நீங்காதிருக்க, வெளியில் சிற்றம்பலத்தில் அம்பலவாணர் ஆடுதலேயாகும். (உள்ளத்தில் குருவைத் தியானித்தலும், வெளியில் திருக்கூத்தைக் காணுதலுமேயாகும்` என்பதாம்.) உண்மையை ஊன்று உணர்ந் தோர்க்கு மூவகைத் திருமேனிகளும் ஞான நெறியும் அவையேயாம்.
*************************************************
பாடல் எண் : 3
நீடும் சிரசிடைப் பன்னிரண் டங்குலம்
ஓடும் உயிர்எழுந் தோங்கி உதித்திட
நாடுமின் நாதாந்த நம்பெரு மான்உகந்(து)
ஆடும் இடம்திரு அம்பலத் தானே.

பொழிப்புரை : உள்ளே புகுந்து, வெளியே ஓடும் இயல்புடைய பிராணன் மூலாதாரத்திலினின்றும் எழுந்து சுழுமுனை வழியாக மேலே செல்லுங்கால், புருவ நடுவையும் கடந்து உச்சியை அடைந்து, அதற்கு மேலேயும் பன்னிரண்டங்குலம் சென்றால் பின்பு கிடைப்பது மேல் நிலைத் தத்துவமாகிய நாதத்தையும் கடந்து நிற்கின்ற நம் பெருமானாகிய சிவன் மிகவும் விரும்பி ஆடும் இடமாகிய திருவம்பலமே. அதனை நீங்கள் உணருங்கள்.
*************************************************
பாடல் எண் : 4
வளிமேகம் மின் வில்லு வாகை ஓசை
தெளிய விசும்பில் திகழ்தரு மாறுபோல்
களிஒளி ஆறும் கலந்துடன் வேறாய்
ஒளியுரு வாகி ஒளிந்துநின் றானே.

பொழிப்புரை : [அம்பலங்கள் பலவற்றையும் உகந்து ஆடும் நம்பெருமான் வானத்தில் அடங்கியுள்ள காற்று, மேகம், மின்னல், வில், இடி, ஓசை என்பவைபோல,] நிவிர்த்தி முதலிய கலைகளில் அடங்கியுள்ள `தத்துவம், புவனம், வன்னம், பதம், மந்திரம்` என்னும் ஐந்தோடும், கலையையும் கூட்ட ஆறோடும் ஒன்றாய், வேறாய், உடனாய்க்கலந்து அறிவு வடிவாய் அவற்றினின்றும் பிரித்துக்காண வாராமல் மறைந்தே நிற்கின்றான்.
*************************************************
பாடல் எண் : 5
தீமுதல் ஐந்தும் திசைஎட்டும் கீழ்மேலும்
ஆயும் அறிவினுக் கப்புற ஆனந்தம்
மாயைமா மாயை கடந்துநின் றார்காண
நாயகன் நின்று நடம்செய்யு மாறே.

பொழிப்புரை : இருளை ஓட்டுதலால் முதன்மை பெற்ற தீ முதலிய ஐம்பெரும் பூதங்களும், கிழக்கு முதலிய எட்டுத் திசைகளும், மற்றும் அவற்றோடு உடன் எண்ணப்படுகின்ற `கீழ், மேல்` என்னும் பக்கங்களும், இவற்றையெல்லாம் பற்றி ஆராய்ந்தறிவதாகிய உயிர்களின் அறிவும் ஆகிய இவையெல்லாவற்றிற்கும் அப்பால் உள்ளது உண்மையான இன்பம், அதனை அசுத்த மாயை, சுத்த மாயை ஆகிய இருமாயைகளையும் கடந்தவரே பெறுவர். அவர் அங்ஙனம் அதனைப் பெறுதற் பொருட்டே சிவன் நிலவுலகில் நின்று பொற்பதிக் கூத்து, பொற்றில்லைக் கூத்து இவற்றைச் செய்கின்றான்.
*************************************************
பாடல் எண் : 6
கூத்தன் கலந்திடும் கோல்வளை யாளொடும்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஆனந்தம்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஞானத்துக்
கூத்தனும் கூத்தியும் கூத்ததின் மேலே.

பொழிப்புரை : கூத்தப் பெருமான், தான் மட்டும் தனியே நின்று ஆடாமல், உமை ஒருபால் நிற்கக் கொண்டு, அவள் கானவே ஆடுதல் வெளிப்படை. அதனாலேதான் அவனது கூத்து ஆனந்தமயமாயும், ஞானமயமாயும் உள்ளது. ஒரு கூத்திலே இருவர் பங்கும் உள்ளனவேயன்றி, இருவரும் இருகூத்து இயற்றிலர்.
*************************************************
பாடல் எண் : 7
இடங்கொண்ட சத்தியும் எந்தை பிரானும்
நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன்
படங்கொண்டு நின்றஇப் பல்லுயிர்க் கெல்லாம்
அடங்கலும் தாமாய்நின் றாடுகின் றாரே.

பொழிப்புரை : `எம் தந்தையாகிய சிவனது இடப் பாகத்தைக் கவர்ந்து கொண்ட, எம் தாயாகிய சத்தியும் அவளுக்குத் தனது இடப் பாகத்தைத் தந்த சிவனும் என ஒருவரே இருவராய் நின்று கூத்தியற்றுகின்றார்கள்` என்பதை நானும் கருதலளவையால் உணர்ந்து கொண்டேன். ஆகவே, துணியால் பொதியப்பட்ட மூடைபோல ஆணவ மலத்தால் மறைக்கப்பட்டுள்ள அனைத்துயிர்களின் பொருட்டாகவே அவ்விருவரும், மாயா காரியங்கள் அனைத்திலும் நிறைந்து நின்று, அவைகளை இயக்கித் தாம் ஆடுகின்றனர்` எனப் பிறர்க்கும் உணர்த்துகின்றேன்.
*************************************************
பாடல் எண் : 8
சத்தி வடிவு சகலஆ னந்தமும்
ஒத்தஆ னந்தம் உமையவள் மேனியாம்
சத்தி வடிவு சகளத் தெழுந்திரண்(டு)
ஒத்தஆ னந்தம் ஒருநடம் ஆமே.

பொழிப்புரை : எல்லா உயிர்கட்கும் ஏற்புடையதாகிய `இன்பம்` என்பது `சத்தி` என்னும் கூறே. அதனால், எந்த இன்பப் பொருளிலும் உள்ள எந்த இன்பமும் `சத்தி` என்னும் கூறே. (பொருள், `சிவம்` என்னும் கூறாம்) இனி எல்லாத் திருமேனி வகைகளும் சத்தியே. அந்நிலையில் பெருமானது சத்தியால் தோன்றி நிகழ்கின்ற ஒப்பற்ற நடனம், முத்தியின்பமாகிய பேரின்ப நடனமாகும்.
*************************************************
பாடல் எண் : 9
நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி
உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடும் மந்திரம்
பற்றுக்குப் பற்றாய்ப் பரமன் இருந்திடம்
சிற்றம் பலம்என்று தேர்ந்துகொண் டேனே.

பொழிப்புரை : நெற்றிக்குக் கீழே, இரு புருவங்கட்கு இடையேயுள்ள வெற்றிடம் தன்னை உற்று உற்றுப் பார்க்க, பார்க்குந்தோறும், பார்க்குந்தோறும் பார்ப்பவர்க்கு ஒளியை மிக மிக வீசுகின்ற ஓர் இல்லமாய் விளங்கும். `அந்த இல்லமே` சிவன் யாவரும் பற்றுதற்குரிய பற்றாய் இருக்குமிடம். அஃதாவது `ஞானாகாசம் என நான் திருவருளால் ஆராய்ந்து அடைந்தேன்.
*************************************************
பாடல் எண் : 10
அண்டங்கள் தத்துவம் ஆதி சதாசிவம்
தண்டினில் சாத்தவி சாமபி ஆதனம்
தெண்டினில் ஏழும் சிவாசன மாகவே`
கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே.

பொழிப்புரை : உலகங்கள் ஏழு, சாதாக்கியம் முதலாகக் கீழ் நோக்கியும், மேல் நோக்கியும் எண்ண வருகின்ற தத்துவங்கள் ஏழு, `தண்டு` எனப்படுகின்ற சுழுமுனை நாடியில் உள்ள, `சத்தம்` எனப்படுகின்ற வாக்கிற்கு முதல்வியாதல் பற்றி சாத்தவியாம் குண்டலி சத்திக்குரிய ஆதாரங்கள் ஏழு, அவற்றிற்குமேல் `வியாபினி, வியோம ரூபை, அனந்தை, அனாதை, அனாசிருதை, சமனை, உன்மனை என்னும் சிவசத்திகளது இடங்கள் ஏழு, யாழ், குழல் முதலியவற்றினின்றும் எழுகின்ற இசைகள் ஏழு ஆகியவற்றை எல்லாம் தனது இடமாகக் கொண்டு சிவன் நடம் புரிகின்றான்.
*************************************************
பாடல் எண் : 11
மன்று நிறைந்த விளக்கொளி மாமலர்
நன்றிது தான்இதழ் நாலொடு நூறவை
சென்றது தான்இரு பத்திரு நூறுள
நின்றது தான்நெடு மண்டல மாகுமே.

பொழிப்புரை : முன் மந்திரத்திற் கூறியவாற்றால் அம்பலங்கள் தாம் அளவிலவாதல் பெறப்பட்டமையால், அவைகளில் விளக்கொளி போல விளங்கி ஆடும் மூர்த்திகளும் எண்ணிலர். இனி அந்த அம்பலங்கள் மலராக விளங்க, இருநூற்றிருபத்து நான்கு புவனங்கள் அவற்றின் இதழாக, நிலையின்றித் தோன்றியழிவன. ஆகவே, என்றும் நிலையாயுள்ள சத்தியே அவனுக்கு என்றும் உள்ளதாகிய அம்பலமாம். ஆகவே, இதுவே அவனுக்கு நன்றாய அம்பலமாகும்.
*************************************************
பாடல் எண் : 12
அண்டம் எழுகோடி பிண்டம் எழுகோடி
தெண்டிரை சூழ்ந்த திசைகள் எழுகோடி
எண்டிசை சூழ்ந்த இலிங்கம் எழுகோடி
அண்டன் நடம்செயும் ஆலயந் தானே.

பொழிப்புரை : அளவின்றி உள்ள அண்டங்கள், பிண்டங்கள், (உடல்கள்) பிருதிவி அண்டங்கள் தோறும் உள்ள அளவற்ற எழுவகைக் கடல்கள், அவைகளால் சூழப்பட்ட எழுவகைத் தீவுகள், எல்லாத் திசைகளிலும் நிறைந்துள்ள அளவற்ற மூர்த்தங்கள் இவை அனைத்தும் சிதாகாச வெளியில் உள்ள சிவன் நடனம் புரியும் இடங்களாம்.
*************************************************
பாடல் எண் : 13
ஆகாச மாம் உடல் ஆங்கார் முயலகன்
ஏகாச மாம்திசை எட்டும் திருக்கைகள்
மோகாய முக்கண்கள் மூன்றொளி தானாக
மாகாய மன்றுள் நடம்செய்கின் றானே.

பொழிப்புரை : ஆகாயம் ஒன்றேயாய் எங்கும் வியாபித்துள்ளது. ஆயினும் செயற்கையால் வரையறுக்கப்பட்டு, `மடாகாயம், கோயில் ஆகாயம், மன்ற ஆகாயம்` முதலாகப் பலவாறு வழங்கப்படுகின்றன. அவையெல்லாம் சிறு ஆகாயங்களாக, இயற்கை ஆகாயம் `மகாகாயம்` எனப்படும். சிறு ஆகாயங்களில் பல உருவங்களில் நடனம் செய்கின்ற சிவன் மகாகாயத்தையே அம்பலமாக ஒன்றேயான விசுவ ரூபத்தை உடையவனாயும் நடனம் புரிகின்றான். அந்நிலையில் அவனுக்கு ஆகாயமே உடல்; உயிர்களின் ஆணவ மலமே முயலகன்; போர்வை போலச் சுற்றியுள்ள எட்டுத் திசைகளே எட்டுக் கைகள்; சூரியன், சந்தரன், அக்கினி என்னும் முச்சுடர்களே விரும்பத்தக்க மூன்று கண்கள் என இவ்வாறு அமையும்.
*************************************************
பாடல் எண் : 14
அம்பல மாவ அகில சராசரம்
அம்பல மாவன ஆதிப் பிரானடி
அம்பல மாவன அப்புத்தீ மண்டலம்
அம்பல மாவன அஞ்செழுத் தாமே.

பொழிப்புரை :  சிவபெருமான் திருக்கூத்தியற்றுதற்குரிய அம்பலமாய் நிற்பன, நீர், தீ (இனம் பற்றி, நிலம், வளி, வான்) இவற்றின் அண்டங்களும், அனைத்து இயங்கு திணை நிலைத்திணை உயிர்களும், திருவைந்தெழுத்தும், அவனது வட இடத்திருவடிகளும் ஆகும்.
*************************************************
பாடல் எண் : 15
கூடிய திண்முழ வம்குழல் `ஓம்`என்ன
ஆடிய மானுடர் ஆதிப் பிரான்என்ன
நாடிய நற்கணம் ஆரும்பல் பூதங்கள்
பாடிய வாறொரு பாண்டரங் காமே.

பொழிப்புரை : சிவனது பலவகைக் கூத்தில் `பாண்டரங்கம்` என்னும் கூத்து (திரிபுரத்தை எரித்த காலத்தில் நிகழ்த்தப்பட்ட ஆதலின்,) ஒன்றோடு ஒன்று இயைந்து ஒலிக்கும் மத்தளமும், குழலும் `ஓம்` என்று ஒலிக்கவும், அந்நடனத்தின் குறிப்பை ஆராய்ந்து நோக்கிய பதினெண்கணங்களும் நிறைந்த பூதப்படைகளும் பல பாடல்களைப் பாடவும், அவர்களோடு மக்களும் கண்டு, `இவனே முதற்கடவுள்` என உணர்ந்து களி நடம்புரியவும் நிகழ்ந்தது.
*************************************************
பாடல் எண் : 16
அண்டத்தில் தேவர்கள் அப்பாலைத் தேவர்கள்
தெண்டிரை சூழ்புவிக் குள்ளுள்ள தேவர்கள்
புண்பரி கப்பதப் பொன்னம் பலக்கூத்துக்
கண்டுசே வித்துக் கதிபெறு வார்களே.

பொழிப்புரை : வானம் அண்டங்களுக்கு உள்ளேயும் உள்ளது; வெளியேயும் உள்ளது. அதுபோல, நிலத்திற்கு அண்மையிலேயும் உள்ளது. சேய்மையிலேயும் உள்ளது. அதனால் அந்த இடங்களில் எல்லாம், வானவராகிய தேவர்களும் இந்த இடங்களில் உள்ளனர். அவர்கள் அனைவரும் தில்லைப் பொன்னம்பலத்தில் கூத்தப் பெருமான் தாமரை மலர்போலும் திருவடிகளைப் பெயர்த்து ஆடும் திருக்கூத்தினைக் கண்டு வணங்கி நற்கதியை அடைகின்றார்கள்.
*************************************************
பாடல் எண் : 17
புளிக்கண் டவர்க்குப் புனல்ஊறு மாபோல்
களிக்கும் திருக்கூத்துக் கண்டவர்க் கெல்லாம்
துளிக்கும் அருட்கண்ணீர் சோர்நெஞ் சுருக்கும்
ஒளிக்குள்ஆ னந்தத் தமுதூறும் உள்ளத்தே.

பொழிப்புரை : புளியை நாவில் இட்டுச் சுவையாவிடினும் அதனைப் பார்த்தபோதே பார்த்தவர்கட்கு அதனைச் சுவைத்தாற் போல நாவில் நீர் ஊறுதல் அனைவரும் அறிந்தது. அதுபோல, கூத்தப் பெருமானது ஆனந்தக் கூத்தினைக் கண்டவர்கட்கு அக்கூத்தில் காணப்படும் குறிப்பின் பொருளைப் பெறாவிடினும் பெற்றுவிட்டது போன்ற இன்பம் உள்ளத்தில் ஊற்றெடுக்க உடலிலும் அதற்குரிய மெய்ப்பாடுகள் தோன்றும்.
*************************************************
பாடல் எண் : 18
திண்டாடி வீழ்கை சிவானந்த மாவது
உண்டார்க்(கு) உண(வு) உண்டால் உன்மத்தம் சித்திக்கும்
கொண்டாடும் மன்றுள் குனிக்கும் திருக்கூத்துக்
கண்டார் வருங்குணம் கேட்டார்க்கும் ஒக்குமே.

பொழிப்புரை : சிவானந்தத்தை அடைந்தவர்கட்கு உளவாகும் மெய்ப்பாடுகள் உடல் நிற்கலாற்றாது தள்ளாடி வீழ்தல் முதலியனவாம். (இந்நிலை எய்தினாரை, `ஆவேசம் வரப்பெற்றவர்` என்பார்.) இனிய உணவுகளால் விளையும் மகிழ்ச்சி அவற்றை உண்டபின்பே உண்டவர்க்கு உளவாகும். ஆயினும் யாவராலும் புகழப்பெறும் திருவம்பலத்தில் சிவன் செய்யும் கூத்துக் கண்டவுடனே கண்டவர்க்குப் பெருமகிழ்வை உண்டாக்கும். எனவே, திண்டாடி வீழ்தல் முதலியன கண்டார்க்கும் உண்டாவனவாம்.) இனி அதனைக் கண்டார்க்கேயன்றிக் கண்டவர் அக்கூத்தின் இயல்பைச்சொல்ல, அதனைக் கேட்டவர்க்கும் அத்தகைய மகிழ்வை அக்கூத்து உண்டாக்கும்.
*************************************************
பாடல் எண் : 19
அங்கி தமருகம் அக்கமாலை பாசம்
அங்குசம் சூலம் கபால முடன் ஞானம்
தங்கு பயமுன் தருநீல மும்முடன்
மங்கையோர் பாகமாய் மாநடம் ஆடுமே.

பொழிப்புரை : சிவபெருமான் திருக்கூத்து நிகழ்த்துங்கால், நான்கு கைகளோடே நிகழ்த்துதலும் உண்டு. எட்டுக் கைகளோடு நிகழ்த்துதலும் உண்டு. எட்டுக் கைகளோடு நிகழ்த்துங்கால் அவற்றில்,) தீயகல், உடுக்கை, உருத்திராக்க வடம், பாசம், அங்குசம், சூலம், பிரம கபாலம் என்பவற்றுடன் ஞானத்தின் பயனாகிய அஞ்ஞானத்தை நீக்குதலைக் குறிக்கும் நீல மலரையும் ஏந்தி, உமையம்மை ஒருபால் நிற்க ஆடுவான்.
*************************************************
பாடல் எண் : 20
ஆடல் பதினொன் றுறுப்பும் அடைவாகக்
கூடிய பாதச் சிலம்புகைக் கொள்துடி
நீடிய நாதம் பராற்பர தேயத்தே
ஆடிய நந்தி புறம்அகத் தானே.

பொழிப்புரை : கூத்துப் பதினொன்றின் உறுப்புக்கள் எல்லாம் முறையாகக் கூடிய பாதத்தில் அணியப்பட்டுள்ள சிலம்பும், கையில் கொண்டுள்ள உடுக்கையும் ஒலியை எப்பொழுதும் எழுப்பிக் கொண்டிருக்கின்றன. அவ்வாறாக, மேலானவற்றிற்கெல்லாம் மேலான இடத்தில் ஆடுபவனாகிய சிவன் எல்லா உலகிலும் உள்ள உயிர்களின் அகத்தும், புறத்தும் ஆடுகின்றான்.
*************************************************
பாடல் எண் : 21
ஒன்பதும் ஆட ஒருபதி னாறாட
அன்புறு மார்க்கங்கள் ஆறும் உடன்ஆட
இன்புறும் ஏழினும் ஏழ் ஐம்பத் தாறாட
அன்பனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே.

பொழிப்புரை : சிவவேதங்கள் ஒன்பதும், பிராசாத கலைகள் பதினாறும், சமயங்கள் ஆறும் ஒருங்கு ஆடும்படியும், உயிர்கள் இன் புறும் இடமாகிய ஏழ்அண்டத்துள் சிறப்பாக நிலவுலகில் ஏழு தீவுகளும், அவற்றினும் சிறப்பிற் சிறப்பாக பரத கண்டத்து ஐம்பத்தாறு நாடுகளும் ஆடும்படியும் உயிர்கள் மாட்டு அருள் உடையோனாகிய சிவன் ஆனந்தத்தை விளைக்கும் திருக்கூத்தைத் தில்லையில் ஆடுகின்றான்.
*************************************************

மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா

1 comment:

  1. விளக்கம் அருமையாக உள்ளது அய்யா

    ReplyDelete

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!