http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Sunday, 24 March 2013

திருமந்திரம்-தந்திரம்09: பதிகம் 15. அற்புதக் கூத்து-பாடல்கள்:42. பாகம்-II

 
 பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
*************************************************
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:01: குருமட தரிசனம்..............................பாடல்கள்: 006 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:02: ஞானகுரு தரிசனம்..........................பாடல்கள்: 019 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:03: பிரணவ சமாதி..............பாடல்கள்:006
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:04: ஒளிவகை......................பாடல்கள்:017
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:05: பஞ்சாக்கரம்-தூலம்........பாடல்கள்:010
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:06: பஞ்சாக்கரம்-சூட்குமம்.பாடல்கள்...:005

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:07: அதிசூக்கும பஞ்சாக்கரம்.பாடல்கள்:003
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:08: காரண பஞ்சாக்கரம்........பாடல்கள்:003
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:09: மகா காரணபஞ்சாக்கரம்:பாடல்கள்:004

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:10: திருக்கூத்து.....................பாடல்கள்:002  
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:11: சிவானந்தக் கூத்து..........பாடல்கள்:008
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:12: சுந்தரக் கூத்து................பாடல்கள்:006

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:13: பொற்பதிக் கூத்து..........பாடல்கள்:011
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:14: பொற்றில்லைக்கூத்து....பாடல்கள்:013 ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:15: அற்புதக் கூத்து..............பாடல்கள்:042
*************************************************

தந்திரம் 8- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -015 

கூடுதல் பாடல்கள்  ......................................................(104+042=146)

*************************************************

ஒன்பதாம் தந்திரம்-15. அற்புதக் கூத்து : பாடல்கள்:042(பாகம்-II)

பாடல் எண் : 22
ஏழினில் ஏழாய் இயைந்தெழுத் தேழாதாய்
ஏழினில் ஒன்றாய் இழிந்தமைந் தொன்றாய
ஏழினில் சன்மார்க்கம் எங்கள் பரஞ்சோதி
ஏழினை நாடகத் தேஇசைந் தானே.

பொழிப்புரை : ஏழ் நரம்புகளில் ஏழு வகையாய்த் தோன்றி, அவற்றிற்குப் பொருந்திய ஏழ் எழுத்துக்களால் குறிக்கப்பட்டு, அந்த ஏழ் எழுத்துக்களில் ஒன்றே ஏற்றத்தின் தொடக்கமும், இறக்கத்தின் முடிவுமாய் நிற்க அமையும் ஏழு பண்களினாலும் பாடப்படுகின்ற நன்னெறியை எங்கள் சிவபெருமான் ஏழிசைகளோடு கூடிய தனது கூத்திலே பொருந்தி ஆடுகின்றான்.
*************************************************
பாடல் எண் : 23
மூன்றினில் அஞ்சாகி முந்நூற் றறுபதாய்
மூன்றினில் ஆறாய் முதற்பன்னீர் மூலமாய்
மூன்றினில் அக்கம் முடிவாக முந்தியே
மூன்றினில் ஆடினான் மோகாந்தக் கூத்தே.

பொழிப்புரை : (காலம், கதிர், மதி, சேய், மால், பொன், வெள்ளி காரி` என்னும் ஏழு கோள்களின் இயக்கம் பற்றிப் பலவகையாகப் பகுக்கப்படும். அவற்றுள் கதிரியக்க அளவில் அதற்கும், மதிக்கும் இடையேயுள்ள வழியளவு பதினைந்தாகப் பகுக்கப்பட்டு அவற்றுள் ஒவ்வொரு பகுதியும் `திதி` (ஸ்திதி-நிலை) எனப்படுகின்றது. மதி கதிருக்கு முன்னாக அகன்று செல்லும் நிலை பதினைந்தும் `முற்பக்கம் பூர்வ பட்சம் - மதியது ஒளி மிகுந்து வருதலால் சுக்கில பட்சம்` என்றும், மதி கதிரை அணுகிப் பின்னாக வருதலால் `அபர பட்சம்` என்றும், மதியது ஒளி குறைந்து வருதலால் கிருட்டினபட்சம் என்றும் சொல்லப்படுகின்றன. ஒவ்வொரு பட்சத்திலும் உள்ள திதிகள் மூன்று வட்டங்களாக வகுக்கப்பட்டு, ஒவ்வொரு வட்டத்திலும் உள்ள ஐந்து திதிகளும் முறையே `நந்தை, பத்திரை, சயை, இரித்தை, பூரணை` எனப்பெயர் சொல்லப்படும். எனவே, ஒன்று, ஆறு, பதினொன்றாம் திதிகள் நந்தையும் இரண்டு, ஏழு, பன்னிரண்டாம் திதிகள் பத்திரையும், மூன்று, எட்டு, பதின்மூன்றாந் திதிகள் சயையும் நான்கு, ஒன்பது, பதினான்காம் திதிகள், இரித்தையும், ஐந்து, பத்து, பதினைந்தாம் திதிகள் பூரணையும் ஆகின்றன. இவ்வாறு.) பதினைந்து திதிகளும் ஐந்தாகத் தொக்கு நின்று பயன் தருதலையே ``மூன்றினில் அஞ்சாதி`` என்றார். மூன்று - மூன்று. வட்டம். அஞ்சு - நந்தை முதலிய ஐந்து சிறப்பு நிலை. இவையெல்லாம் கணி நூல்களில் (சோதிட சாத்திரங்களில்) காணப்படும்.
*************************************************
பாடல் எண் : 24
தாமுடி வானவர் தம்முடி மேல்உறை
மாமணி ஈசன் மலரடித் தாளிணை
யாமணி யன்புடை யார்மனத் துள்ளெழும்
காமணி ஞாலம் கடந்துநின் றானே.

பொழிப்புரை : கற்பக மலர் மாலையை அணிந்த முடியை உடைய தேவர்களது தலைமேல் இருப்பனவாகிய, மாணிக்கம்போலும் சிவபெருமானது இருபாதங்களும், தகுதி வாய்ந்த அணியாகிய அன்பை உடையவர்களது உள்ளத்திலே விளங்கும் கற்பகத் தருவும், சிந்தாமணியும் ஆகும். ஆயினஉம் அவன் உலகத்தைக் கடந்தே யிருக்கின்றான்.
*************************************************
பாடல் எண் : 25
புரிந்தவன் ஆடில் புவனங்கள் ஆடும்
தெரிந்தவன் ஆடு மளவெங்கள் சிந்தை
பரிந்தவன் ஆடிற்பல் பூதங்கள் ஆடும்
எரிந்தவன் ஆடல்கண் டின்புற்ற வாறே.

பொழிப்புரை : அனைத்தையும் படைத்தவனாகிய சிவன் அடி பெயர்த்து ஆடினால், அவனால் படைக்கப்பட்ட அகலிடங்கள் அனைத்தும் தாமாகவே ஆடும். (இயங்கும் `அவன் ஆடாவிடில் அவையும் ஆடா; இயங்கா` என்பது கருத்து.) இதை அறிந்த சிவன் அவை ஆடும் பொருட்டுத் தான் ஆடுமளவும் எங்கள் அறிவுகள் அறிதலைச் செய்யும். (`அவன்` ஆடாவிடில் எங்கள் அறிவுகளும் அறிதலைச் செய்யா` என்பது கருத்து.) இது பற்றி அவன் கருணை கூர்ந்து எங்கும், எப்பொழுதும் ஆடுகின்றான். அப்பொழுது அவனது சுற்றமாகிய பல பூதங்களும் களிப்பினால் ஆடுகின்றான். நாங்கள் இன்பம் அடைந்ததும் அவன் சோதியாய் விளங்கி நின்று ஆடுதலைக் கண்டேயாம்.
*************************************************
பாடல் எண் : 26
ஆதி நடம்செய்தான் என்பர்கள் ஆதர்கள்
ஆதி நடம்செய்கை ஆரும் அறிந்திலர்
ஆதி நடம்ஆடல் ஆரும் அறிந்தபின்
ஆதி நடம்ஆடல் ஆம்அருட் சத்தியே.

பொழிப்புரை : எப்பொருட்கும் முதல்வனாகிய சிவன் கூத்தனாய் நிற்றலைக்கண்டு, அதன் உண்மையை அறியும் அறிவு இல்லாதவர்கள், அக்கூத்தினை அவன் எவையோ சில பயன்களைப் பெற வேண்டி ஆடுகின்றான்` எனப் பிதற்றுவார்கள். (`எப்பொருட்கும் முதல்வ னாகியவனுக்குப் பிறர்பால் பெற வேண்டியது யாதுளது` என்பது கருத்து.) அவன் நடம் செய்தபின் உண்மை யாவராலும் அறிதற்கு அரிதேயாம். யாரேனும் அவ்வுண்மையை அரிவார்களாயின், `அவனுக்கு இயல்பாய் உள்ள கருணையின் விளைவே அவனது கூத்து` என்பதே அவ்வுண்மையாய் முடியும்.
*************************************************
பாடல் எண் : 27
ஒன்பதொ டொன்பதாம் உற்ற அசிபதத்(து)
அன்புறு கோணம் அசிபதத்(து) ஆடிடத்
துன்புறு சத்தியுள் தோன்றிநின் றாடிட
அன்புறும் எந்தைநின்(று) ஆடலுற் றானே.

பொழிப்புரை : தனித்தனி ஒன்பது, ஒன்பது பகுதிகளையுடையனவும், `தத், துவம்` என்னும் இரு சொற்களால் குறிக்கப்படுவனவும் ஆகிய, `பதி, பசு` என்னும் இரண்டும் `அசி` என்னும் சொல்லில் இணையும்படியும், அதற்கு முன்னே பசு துன்பத்தைச் செய்கின்ற திரோதான சத்தியின் வசப்பட்டு எங்கும் பிறந்தும், வாழ்ந்தும் சுழலும் படியும் பசுக்களின் கருணையுடையவனாகிய எம்தந்தை சிவன் ஆடல் தொழிலைப் பொருந்தி நிற்கின்றான்.
*************************************************
பாடல் எண் : 28
தத்துவம் ஆடச் சதாசிவன் தான்ஆடச்
சித்தமும் ஆடச் சிவசத்தி தான்ஆட
வைத்த சராசரம் ஆட மறைஆட
அத்தனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே.

பொழிப்புரை : முன் மந்திரத்தில் கூறியபடி பசு பல நிலைகளில் செயற்படும்படி சத்தி ஆடுதலால், சிவனும் அதற்கு இயையப் பல நிலைகளில் நின்று ஆடுகின்றான்.
*************************************************
பாடல் எண் : 29
இருவரும் காண எழில்அம் பலத்தே
உருவோ டருவோ டுருவரு ரூபமாய்த்
திருவருட் சத்திக்குள் சித்தன் ஆனந்தன்
அருளுரு வாகநின் றாடலுற் றானே.

பொழிப்புரை : உண்மையில் அருட்சத்திக்கு உள்ளே சென்று அடையப்படுபவனாய் ஆனந்தத்தைப் பொழியும் சிவன் இவ்வுலகில் `பதஞ்சலி, வியாக்கிரபாதர்` என்னும் முனிவர் இருவர் எப்பொழுதும் கண்டு களிக்கும்படி, உருவம் `அருவம், உருஅருவம்` என்னும் மூன்று திருமேனிகளில், அத்திருமேனிகள் அருளேயாய் நிற்க நின்று ஆடுதலை மேற்கொண்டுள்ளான்.
*************************************************
பாடல் எண் : 30
சிவம்ஆடச் சத்தியும் ஆடச் சகத்தின்
அவம் ஆட ஆடாத அம்பர ஆட
நவமான தத்துவம் நாதாந்தம் ஆடச்
சிவம்ஆடும் வேதாந்த சித்தாந்தத் துள்ளே.

பொழிப்புரை : சிவ முதற்பொருள், தான் செய்வோனாய் நின்று சங்கற்பிக்க, அச்சங்கற்பந்தானே சத்தியாகிப் பலவகையில் நிற்க, அதனால் உலகத்தில் தீயனயாயும் நிலைகெட்டு நீங்கும் நிலையை எய்த, உலகில் அசைவற்றதாக எண்ணப்படுகின்ற ஆகாயமும் ஒலி அலைகளைத் தோற்றுவித்துச் செயற்பட, புதிது புதிதாய்த் தோன்றியமைகின்ற தத்துவங்கள் நிலம் முதல் நாதம் ஈறாக நின்று செயற்பட எப்பொழுதும் ஆடும் இவ்வுண்மை வேதாந்தத்திலும், சித்தாந்தத் திலுமே காணப்படும்.
*************************************************
பாடல் எண் : 31
நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும்
வேதத்தின் அந்தமும் மெய்ச்சிவ அந்தமும்
தாதற்ற நல்ல சதாசிவ அந்தமும்
நாதப் பிரம சிவநட மாமே.

பொழிப்புரை : உயிர் தத்துவங்கள் அனைத்தையும் `தான் அல்ல` என்று கண்டு கழித்துத் தன்னை அவற்றிற்கு வேறான சித்துப் பொருளாக உணர்தலும், பின்பு, `தான், அறிவித்தால் அறியும் தூல சித்தாவதல்லது, தானே அறியும் சூக்கும சித்தன்று` எனத் தனது உண்மையை உணர்ந்து, அதனானே, `தானே அறிந்தும், உயிர்கட்கு அறிவித்தும் நிற்கும் சூக்கும சித்துத் தலைவனாம் சிவன்` என அறிதலும், இவ்வறிவு வேதாகமங்களாகிய அபர ஞானங்களாய் இல்லாது, அவற்றைக் கடந்த அனுபவமாம் பரஞானமாகப் பெறுதலும் ஆகிய இவையெல்லாம் தனக்கு ஒரு மூலம் இல்லாது தானே மூலமாய் நிற்கும் சதாசிவ மூர்த்திக்கு மேலே நாதமாய் நின்று `நாதப்பிரமம்` எனப்படுகின்ற ஆதி சிவனது நடனத்தின் பயனேயாகும்.
*************************************************
பாடல் எண் : 32
சிவமாதி ஐவர்திண் டாட்டமும் தீரத்
தவமார் பசுபாசம் ஆங்கே தனித்துத்
தவமாம் புரன்எங்குந் தானாகி ஆடும்
தவமாம் சிவானந்தத் தோர் ஞானக் கூத்தே.

பொழிப்புரை : சரியை முதலிய இறப்பில் தவங்களை நிரம்பச் செய்த உயிரைப் பாசங்கள் அப்பொழுதே விட்டு நீங்குதலால், அவ்வுயிர் சிவன் முதலிய ஐவரால் உண்டாகும் அலமரல் நீங்கும்படி, தவத்தின் வடிவாய் விளங்கும் சிவன் எங்கும் தானாய்த் திருக்கூத் தியற்றுவன். அக்கூத்துத் தவத்தால் விளைந்த ஞானத்தின் பயனாக அதற்கு உரியோர் பொருட்டுச் செய்யப்படுவதாகும்.
*************************************************
பாடல் எண் : 33
கூட நின்றான் ஒரு காலத்துத் தேவர்கள்
வீட நின்றான் விகிர் தாஎன்னும் நாமத்துத்
தேட நின்றான்திக ழும்சுடர் மூன்றொளி
ஆட நின்றான் என்னை ஆட்கொண்ட வாறே.

பொழிப்புரை : `தேவர் என்பார் அனைவரும் தனது முன்னிலையில் ஒருங்கு கூடி வணங்க இருப்பவனும் அவர் அனைவருமே அழிந்து இல்லையாகிய காலத்திலும் தான் அழியாது ஒருவனாய்த் தனித்திருப் பவனும், உள்ள காலத்திலும் உயிர் வருக்கத்துட் பட்டார் யாவரும் `எம்மில் வேறாம் தன்மை யுடையவனே`, (தலைவனே) என அந்தப் பெயரைச் சொல்லித் தேட நிற்பவனும் தனது முக்கண்கள் சுழலுதலால், உலகத்தார் முன் விளங்குகின்ற, `ஞாயிறு, திங்கள், தீ` என்னும் முச்சுடர்களும் சுழலும் படி ஆடகின்றவனும் ஆகிய அவன் என்னை ஆட்கொண்டவாறு வியப்பிற்குரியது.
*************************************************
பாடல் எண் : 34
நாதத் துவங்கடந் தாதி மறைநம்பி
பூதத் துவத்தே பொலிந்தின்பம் எய்தினர்
நேதத் துவமும் அவற்றொடு நீதியும்
பேதப் படாவண்ணம் பின்னிநின் றானே.

பொழிப்புரை : வேதாந்தத்திலே விளங்குகின்ற நம் சிவன், நாத தத்துவத்தையும் கடந்த முதல்வன். அவனை இந்தப் பூமியிலே இங் குள்ளவர்கள் தெளிவாகக் கண்டு ஆனந்தத்தை அடைகின்றார்கள். அது பற்றி அவன் அவர்களிடத்து வைத்த கருணையும், நடுவு நிலைமையும் முரணாகிவிடவில்லை; நேரொன்றியே நிற்கின்றன. அவ்வாறு உள்ளது அவன் இப்பூமியில் இயைந்து நிற்கின்ற நிலை.
*************************************************
பாடல் எண் : 35
ஆனந்தம் ஆனந்தம்` என்பர் அறிவிலார்
ஆனந்தம் மாநடம் ஆரும் அறிகிலர்
ஆனந்தம் மாநடம் ஆரும் அறிந்தபின்
ஆனந்தம் அற்றிட ஆனந்தம் ஆமே.

பொழிப்புரை : ``பேரின்பத்தை அடைய வேண்டும், அடைய வேண்டும் என்று, அஃது இருக்குமிடத்தை அறியாத பலர் அதனைத் தேடி அலைகின்றனர், ஆயினும் பேரின்பம் இவ்வுலகில் சிவன் செய்யும் திருக்கூத்திலே இருத்தலை யாரும் அறிதல் இல்லை. அறிவார்களாயின், அக்கூத்து, உலக இன்பம் அனைத்தும் கெடும்படி பேரின்பமாய் நிகழும்.
*************************************************
பாடல் எண் : 36
திருந்தநற் `சீ` என் றுதறிய கையும்
அருந்தவ `வா` என் றணைத்தபொற் கையும்
பொருந்தில் அமைப்பில் இயஎன்பொற் கையும்
திருந்தத் தீ ஆகும் திருநிலை மவ்வே.

பொழிப்புரை : சிவனது திருக்கூத்தினைக் காணுங்கால். அதில் உதறிய கையை, மாயையை, `சீ` என்று உதறும் கையாகவும், வீசி அணைத்த கையை, அடியவனை, `வா` என்று அழைத்து அருள் வழங்கும் கையாகவும், சார்ந்தவிடத்து, `அஞ்சற்க` என அமைந்த கையை, `இனிதிருக்க` எனத்தேற்றம் தரும் கையாகவும், தீ ஏந்திய கையை, வினைகள் கெடத் திருவருள் வழி நிற்கச் செய்யும் கையாகவும், ஊன்றிய திருவடியை மலத்தை மிதித்து நிற்கும் திருவடியாகவும் காணுதல் வேண்டும்.
*************************************************
பாடல் எண் : 37
மருவும் துடியுடன் மன்னிய வீச்சு
மருவு மமைப்பு அனலுடைக் கையும்
கருவின் மிதித்த கமலப் பதமும்
உருவில் சிவாய நமஎன ஓதே.

பொழிப்புரை : கூத்தப் பிரான் திருவுருவத்தில் உடுக்கை வீச்சு, அமைப்பு, நெருப்பு இவைகளையுடைய நான்கு கைகளையும், ஊன்றிய திருவடியையும் முறையே `சி, வா, , , ` என்னும் எழுத்துக்களாகக் கண்டு துதித்து வணங்குக.
*************************************************
பாடல் எண் : 38
அரன்துடி தோற்றம் அமைத்தல் திதிஆம்
அரன்அங்கி தன்னில் அறையின் சங் காரம்
அரன்ஊற் றணைப்பில் அமருந்திரோ தாயி
அரன்அடி என்றும் அனுக்கிரகம் என்னே.

பொழிப்புரை :  கூத்தப் பிரானது திருவுருவில் தோன்றும் குறிப்பைக் கூறுமிடத்து, உடுக்கையால் ஒலியை உண்டாக்கல் படைத்தல் தொழிலை யும், நெருப்பை ஏந்தியிருத்தல் அழித்தல் தொழிலையும், மேல் எடாமல் உறுதியாக முயலகன்மேல் ஒருகாலை ஊன்றியிருத்தல் மறைத்தல் தொழிலையும், மற்றொரு காலை உயரத் தூக்கியிருத்தல் அருளல் தொழிலையும் இவ்வாறாக ஐந்தொழிலையும் உணர்த்தும் என்க.
*************************************************
பாடல் எண் : 39
நீத்திரட் சோதி திகழொளி யுள்ஒளிக்
கூத்தனைக் கண்டஅக் கோமளக் கண்ணினன்
மூர்த்திகள் மூவர் முதல்வ னிடைச் செல்லப்
பார்த்தனள் வேதங்கள் பாடினள் தானே.

பொழிப்புரை : அக்கரங்கள் ஐம்பதைக் குறிக்கும் சுடர்கள் மேல் எல்லாம் விளங்குகின்ற, முதல் ஒளியாகிய ஓங்காரமாம் திருவாசியுள், அவ்வோங்காரத்தின் உள்ளொளியாய் விளங்கும் கூத்தப் பெருமானது கூத்தினை எப்பொழுதும் காண்கின்ற அழகிய கண்களை யுடைய சிவகாமியம்மை அந்தக் கண்களினாலே மூவர் மூர்த்திகளும் பெருமானது மூன்று கண்களினின்றும் தோன்றும் வண்ணம் பார்த்தாள். (உடனே அவர்கள் தோன்றினார். பின்பு அவர்களுக்கு வழிகாட்டுதற் பொருட்டுப்) பல வேதங்களையும் பாடி உணர்த்தினாள்.
*************************************************
பாடல் எண் : 40
நந்தியை எந்தையை ஞானத் தலைவனை
மந்திரம் ஒன்றுள் மருவி அதுகடந்(து)
அந்தர வானத்தின் அப்புரத் தப்பர
சுந்தரக் கூத்தனை என்சொல்லு மாறே.

பொழிப்புரை : மேல், ``சுந்தரக் கூத்து`` எனக் கூறப்பட்ட கூத்தினைச் செய்யும் சிவன் இங்குள்ளவர்களுக்கு `ஓம்` என்னும் அந்த ஒரு மந்திரத்திலும், அதற்கு மேலாய திருவைந்தெழுத்து மந்திரத்திலும் நிறைந்து நின்று அருள்புரிகின்றான் என்றாலும், உண்மையில் அவன் அவற்றைக் கடந்து, எல்லா அண்டங்களுக்கும் அப்பாற்பட்டே யிருக்கின்றான். ஆகையால், `அவன் இன்ன தன்மையன்தான்` என்று யார் வரை செய்து கூற இயலும்!.
*************************************************
பாடல் எண் : 41
சீய குருநந்தி திருவம் பலத்திலே
ஆயுறு மேனி யாரும் அறிகிலர்
தீயுறு செம்மை வெளுப்போடும் அத்தன்மை
ஆயுறு மேனி அணைபுக லாமே.

பொழிப்புரை : ஆசிரியராய் உள்ளார் அனைவர்க்கும் அவ் ஆசிரியத் தலைமையை அருளிய இயற்கை ஆசிரியத் தலைவன் சிவபெருமானே. அவனே திருவம்பலத்தில் கூத்துக் கோலமும் கொண்டு ஆடுகின்றான். அதனால் அவனது திருமேனியின் தன்மை ஆய்ந்துணரத்தக்கது. அதனை அவ்வாறு ஆய்ந்துணர்ந்தவர் யாரும் இல்லை அதன் தன்மையாவது, நெருப்புப் பார்வைக்குச் சிவப்பு நிறத்தையும், உண்மையில் வெளுப்பு நிறத்தையும் உடையதுபோல இருதன்மைப்பட்டது. அதனை உணர்ந்தால் அவனைச் சார்ந்து அவனுள்ளே இரண்டறக் கலந்துவிடலாம்.
*************************************************
பாடல் எண் : 42
தானான சத்தியும் தற்பரமாய் நிற்கும்
தானாம் பரற்கும் உயிருக்கும் தரும் இச்சை
ஞானாதி பேதம் நடத்தும் நடித்தருள்
ஆனால் அரனடி நேயத்த தாமே.

பொழிப்புரை : சத்தி சிவனின் வேறன்று ஆதலால், சிவன் உயிர்களைக் கடந்து `நிற்றல் போலவே சத்தியும் உயிர்களைக் கடந்து நிற்கும் (`இந்நிலையில் சிவன், `பரமசிவன்` என்றும், சத்தி, `பராசத்தி` என்றும் சொல்லப்படுவர். எனினும் அந்தச் சத்தி) பரமசிவனுக்கும், அவனுக்குக் கீழே உள்ள உயிர்கட்கும் முறையே ஐந்தொழில் செய்தலிலும், போக மோட்சங்களை அடைதலிலும் இச்சையையும், அவற்றிற்கு ஆவனவற்றை அறியும் அறிவையும், அறிந்தவாறே ஆற்றும் செயலையும் தந்து, உலகத்தை நடத்தும். நடத்துமிடத்து அஃது `ஆதி சத்தி` எனப் பெயர் பெறும். (`திரோதான சத்தி` எனப்படுவதும் இதுவே.) இவ்வாறு உயிர்களை நடத்துதலே திருக்கூத்து இயற்றுதல் ஆதலின் அக்கூத்தின் பயனாக உயிர்கள் திருவருளைப் பெறும் தன்மையை எய்துமாயின், அந்த ஆதி சத்தியே அருட்சத்தியாய் அவைகட்கு இறைவனுடைய திருவடியில் அன்பைப் பெருக்கும்.
*************************************************

மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!