http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Monday, 25 March 2013

திருமந்திரம்-தந்திரம்09: பதிகம் 16 & 17. ஆகாசப்பேறு, ஞானோதயம்-பாடல்கள்:10 & 11.

,
 பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
*************************************************
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:01: குருமட தரிசனம்..............................பாடல்கள்: 006 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:02: ஞானகுரு தரிசனம்..........................பாடல்கள்: 019 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:03: பிரணவ சமாதி..............பாடல்கள்:006
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:04: ஒளிவகை......................பாடல்கள்:017
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:05: பஞ்சாக்கரம்-தூலம்........பாடல்கள்:010
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:06: பஞ்சாக்கரம்-சூட்குமம்.பாடல்கள்...:005

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:07: அதிசூக்கும பஞ்சாக்கரம்.பாடல்கள்:003
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:08: காரண பஞ்சாக்கரம்........பாடல்கள்:003
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:09: மகா காரணபஞ்சாக்கரம்:பாடல்கள்:004

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:10: திருக்கூத்து.....................பாடல்கள்:002  
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:11: சிவானந்தக் கூத்து..........பாடல்கள்:008
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:12: சுந்தரக் கூத்து................பாடல்கள்:006

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:13: பொற்பதிக் கூத்து..........பாடல்கள்:011
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:14: பொற்றில்லைக்கூத்து....பாடல்கள்:013 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:15: அற்புதக் கூத்து..............பாடல்கள்:042
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:16: ஆகாசப்பேறு...................பாடல்கள்:010
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:17: ஞானோதயம்..................பாடல்கள்:011  
*************************************************
தந்திரம் 8- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -017 
கூடுதல் பாடல்கள்  ..............................................(146+010+011=167)

*************************************************



ஒன்பதாம் தந்திரம் - 16. ஆகாசப் பேறு : பாடல்கள் : 010
பாடல் எண் : 1
உள்ளத்துள் ஓம்எனும் ஈசன் ஒருவனை
உள்ளத்து ளேஅங்கி யாய ஒருவனை
உள்ளத்து ளேநீதி யாய ஒருவனை
உள்ளத்து ளேஉறல் ஆகாய மாமே.

பொழிப்புரை :  உயிர்களின் அறிவிலே சிவன் `ஓம்` என்னும் பிரணவ வடிவாயும், அதனால் உண்டாக்கப்படுகின்ற உணர்வு வடிவாயும், அவ்வுணர்வில் தோன்றுகின்ற அற வடிவாயும் விளங்குகின்றான். அவனை அங்கு அம்முறையானே சென்று தலைப்படும் இடம் அருள் வெளியேயாம்.
*************************************************
பாடல் எண் : 2
பெருநில மாய்அண்ட மாய்அண்டத் தப்பால்
குருநில மாய்நின்ற கொள்கையன் ஈசன்
பெருநில மாய்நின்று தாங்கிய தாளோன்
அருநில மாய்நின்ற ஆதிப் பிரானே.

பொழிப்புரை :  சிவன் (உடலில் உயிர்போல எப்பொருளிலும் கலந்து நிற்கும் கலப்பினால்) பெரிய பூமியாயும், அப்பூமிபோன்ற பல உலகங்களையும் அடக்கி நிற்கும் அண்டங்களாயும் இருப்பினும் அவை அனைத்தையும் கடந்த திண்ணிலமாகிய அருள் வெளியிலே விளங்குபவனாய்த்தான் இருக்கின்றான். அதனாற்றான் அவன் எல்லாவற்றையும் தாங்கும் பெரிய பூமிபோல. எல்லாவற்றையும் தாங்கும் ஆற்றலையும் ஒருவராலும் சென்று அணுகுதற்கரிய இடத்தையும் உடைய முதற்கடவுளாய் இருக்கின்றான்.
*************************************************
பாடல் எண் : 3
அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன்
பிண்ட ஒளியால் பிதற்றும் பெருமையை
உண்ட வெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது
கொண்ட குறியைக் குலைத்தது தானே.

பொழிப்புரை :  அகண்ட ஒளியாகிய சிவ சொரூபத்தையும் தான் கண்ணாற் காணும் போல ஞாயிறு, திங்கள், பிறகோள்கள், விண்மீன் ஆகிய ஒளிகளைப் போலவே உடன் வைத்து எளிதில் கண்டு விட்டதாக, உடம்பாற் பெற்ற சிற்றறிவு கொண்டு பிதற்றுலாகிய சிறுமையை, அதனை விழுங்கி நிற்கின்ற அருள் வெளிக்குள்ளே ஒளியாகிய சிவ ஒளிக்குள் மறைந்து நிற்கச் செய்வதே, சீவன் தான் பெற்றுள்ள `சீவன்` என்னும் அப்பெயரைப் போக்கும் செயலாகும்.
*************************************************
பாடல் எண் : 4
பயனுறு கன்னியர் போகத்தின் உள்ளே
பயனுறும் ஆதி பரஞ்சுடர்ச் சோதி
அயனொடு மால்அறி யாவகை நின்றிட்(டு)
உயர்நெறி யாய்வெளி ஒன்றது வாமே.

பொழிப்புரை :  உயிர்கட்குப் புறத்தே பெறப்படும் பயனாகிய மகளிரது இன்பத்தைப்போல, அகத்தே பெறப்படும் பயனாய் விளையும் இன்பமாய் நிற்பது, எல்லாவற்றிற்கும் முதலாயும், மேலாயும் உள்ள பேரொளிப் பொருள். அஃது அயன், மால் முதலியோர்க்கும் அறிய வாரா நிலைமையதாயும், மேலாய நெறியின் பயனாயும் பரவொளியின்கணுள்ள ஒரு பொருளாகும்.
*************************************************
பாடல் எண் : 5
அறிவுக் கறிவாம் அகண்ட ஒளியும்
பிறியா வலத்தினிற் பேரொளி மூன்றும்
அறியா தடங்கிடில் அத்தன் அடிக்குள்
பிறியா திருக்கிற் பெருங்காலம் ஆமே.

பொழிப்புரை :  உயிர்களின் அறிவுக்கறிவாய் நிற்கின்ற, `சிவம்` என்னும் ஒளியுடைப் பொருளையும், அதனை விட்டு நீங்காது தாதான்மியமாய் நிற்கும் ஆற்றலாய் எங்கும் பரவி நிற்கும் `இச்சை, ஞானம், கிரியை` என்னும் முச்சுடர்களையும் ஒருவன் தன்னின் வேறாக வைத்துச் சுட்டி உணராமல் அவற்றினுள்ளே அடங்கி ஒன்றாகி, அந்நிலையினின்றும் நீங்காதிருப்பானாயின், அவன் காலத்திற்குக் காலமாய் விளங்குவான்.
*************************************************
பாடல் எண் : 6
ஆகாச வண்ணன் அமரர் குலக்கொழுந்(து)
ஏகாச மாசுணம் இட்டங் கிருந்தவன்
ஆகாச வண்ணம் அமர்ந்துநின் றப்புறம்
ஆகாச மாய்அங்கி வண்ணனு மாமே.

பொழிப்புரை :  ஐந்து தத்துவங்களாய் நிற்கும் சுத்த மாயையினையே ஐந்து தலைகளையுடைய பாம்பாக ஆடைபோல் அணிந்து, அந்தத் தத்துவங்களிலே நிற்கின்ற சிவன் அவையாகிய சுத்த மாயையிடத்தவனாய், `அமரர்` என்னும் பெயருக்கு, முகமனாக அன்றி, உண்மையாகவே உரிய சிவலோகத்தார்க்குத் தலைவனாவான். இன்னும் அவன் அத்தத்துவங்கட்கு அப்பாற்பட்ட பரவெளியில் நிற்றலையே விரும்பி நிற்பினும் இங்குள்ளார் பொருட்டு இப்பூதா காசமாகியும், அதன்கண் விளங்குகின்ற ஒளியாகியும் இருக்கின்றான்.
*************************************************
பாடல் எண் : 7
உயிர்க்கின்ற வாறும் உலகமும் ஒக்க
உயிர்க்கின்ற உள்ளொளி சேர்கின்ற போது
குயிற்கொண்ட பேதை குலாவி உலாவி
வெயிற்கொண்டென் உள்ளம் வெளியது வாமே.

பொழிப்புரை :  சேதனம், அசேதனம்` என்னும் இருவகை உலகங்களும் இயங்குமாறு உளங்கொள்கின்ற உள்ளொளியாகிய சிவன் தன்னைச் செலுத்தியபோது, குயில்போலும் குரலையுடைய அருட்சத்தி அவனோடே குலாவி உலாவுதலால், எனது உள்ளம் அவனது ஒளியைப் பெற்று, இருள் நீங்கிப் பிரகாசிக்கின்றது.
*************************************************
பாடல் எண் : 8
நணுகில் அகல்கிலன் நாதன் உலகத்(து)
அணுகில் அகன்ற பெரும்பதி நந்தி
நணுகிய மின்னொளி சோதி வெளியைப்
பணியின் அமுதம் பருகலும் ஆமே.

பொழிப்புரை :  சிவன் தன்னைச் சாராமல் உலகத்தைச் சாரின் அவர்களை விட்டு மிகச் சேயனாய் நீங்கி நிற்பன். உலகத்தைச் சாராது தன்னைச் சாரின், அவர்களை விட்டு எப்பொழுதும் நீங்கான். முதற்கண் மின்னல் ஒளி போலத் தோன்றிப் பின்னர்ப் பேரொளியாகி விளங்குகின்ற பரவெளியாம் அவனை வணங்கினால் அவன் கூறியவாறு நீங்காது நின்று அமுதத்தைப் பொழிவான். அதனை உண்டு தேக்கி மகிழலாம்.
*************************************************
பாடல் எண் : 9
மிக்கார் அமுதுண்ண நஞ்சுண்ட மேலவன்
தக்கார் உரைத்த தவநெறி யேசென்று
புக்கால் அருளும் பொன்னுரை ஞானத்தை
நக்கார்க் கழல்வழி நாடுமின் நீரே.

பொழிப்புரை :  (பதிப்புக்களில் வருகின்ற அதிகாரத்தில் மூன்றாவதாய்க் காணப்படும் இம்மந்திரம் இங்கிருத்தற்குரியது.)  எழுவகைப் பிறப்புக்களில் மேற்பிறப்பை எய்தினவராகிய தேவர்கள் அமுதுண்ண வேண்டித் தான் அதற்கு முன்னே தோன்றிய விடத்தை உண்டதனானே, `எல்லாரினும் மேலானவன் சிவன்` என்பது இனிது விளங்கும். இன்னும்,
``அப்புறுத்த கடல்நஞ்சம் உண்டான் தன்னை,
அமுதுண்டார் உலந்தாலும் உலவா தானை``*
என்று அருளிச்செய்தபடி, அமுதத்தை உண்டவர் சாவவும், தான் நஞ்சுண்டும் என்றும் ``சாவா மூவாச் சிங்கமாய்`` இருத்தலாலும் அவனது மேன்மை தெளிவாகும். அறிவும், ஆற்றலும் உடையாரினும் அருளுடையாரே மேலானவர் ஆதலாலும், அவ்வருட் பெருக்கம் தன்னையடைந்தார் அமுதுண்ண வேண்டித் தான் நஞ்சத்தை உண்டமையானே தெற்றென விளங்குதலாலும் ``மிக்கார் அமுதுண்ணத் தான் நஞ்சுண்டவன் மேலவன்``* ஆகின்றான். அவனைத் தக்கார் உரைத்த தவநெறியில் சென்று அடைந்தால் அங்ஙனம் அடைந் தவர்களைத் தானாம் வண்ணம் அருளுவான். ஆகையால் அவரது பொன்போலும் மொழியால் விளக்கப்படும் ஞானத்தை `இதுவோ ஞானம்` என இகழ்கின்றவர்களை விட்டு விலகும் உபாயத்தை நீங்கள் ஆராய்ந்து அறிவீர்களாக.
*************************************************
பாடல் எண் : 10
புறத்துள்ஆ காசம் புவனம் உலகம்
அகத்துள்ஆ காசம்எம் ஆதி அறிவு
சிவத்துள்ஆ காசம் செழுஞ்சுடர்ச் சோதி
சகத்துள்ஆ காசந் தான்அம் சமாதியே.

பொழிப்புரை :  (`ஆகாசமாவது யாது` என்பார்க்கு, `ஆகாசமாவது ஏனை யெல்லாப் பொருள்கட்கும் இடம் தருவது` என்பது விடையாயின், பிற பொருளுக்கு இடம் தருவன யாவும் ஆகாசமாம். அந்நிலையில் பூதங்களில் ஒன்றை மட்டும் `ஆகாசம்` என்றல் இடுகுறியாம். அவ்வாறன்றிக்) காரண வகையால் நோக்கின் `புவனங்கள்` என்றும், `உலகங்கள்` என்றும் சொல்லப்படுவன புற ஆகாசங்களாம். எல்லாப் பொருள்களும் அறிவினுள் அகப்பட்டுத் தோன்றுதலால் நம் அறிவுகள் அக ஆகாசங்களாம். நமது அறிவுகளையும் அகப்படுத்தி நிற்பது சிவனது அறிவு ஆதலின் அஃது உள்ளுக்குள் ஆகாசமாம். அதனை அகப்படுத்தி நிற்பது வேறொன்றில்லை ஆகலின் அதுவே பரமாகாசமாம். அந்த ஆகாசத்தை இந்தஉலகிலே பெறுதல் அழகிய`சமாதி`என்னும் நிலையாகும்.
*************************************************
 ஒன்பதாம் தந்திரம் - 17. ஞானோதயம் : பாடல்கள்:011
பாடல் எண் : 1
மன சந்தியில் கண்ட மன்நன வாகும்
கனவுற ஆனந்தங் காண்டல் அதனை
வினவுற ஆனந்தம் மீதொழி வென்ப
இனமுறா னந்திஆ னந்தம் இரண்டே.

பொழிப்புரை :  மனம் புறக் கருவிகளோடு கூடிப் புறப்பொருளைப் பற்றும் நனவு நிலை (அவ்விடத்து இன்பமும் சிறிது உளதாயினும்) பொதுவாகத் துன்ப நிலையேயாதலும், அந்த மனம் புறத்திற் செல்லாது அகத்தே அடங்கிய கனவு, உறக்கம் முதலிய நிலைகள் இன்ப நிலையாலும் அனுபவமாக அறியப்படுவன. அந்த முறையை ஆராய்ந்து பார்த்தால், `இன்பமாவது, கருவி கரணங்களின் மேற் செல்லுதலை ஒழிதலே` என்பது விளங்கும். அவ்வொழிவினை எய்தியவன் அடையும் இன்பங்கள் இரண்டு. (உலகின்பம், வீட்டின்பம் என்பன.)
*************************************************
பாடல் எண் : 2
கரியட்ட கையன் கபாலம்கை ஏந்தி
எரியும் இளம்பிறை சூடும்எம் மானை
அரியன் பெரியன்என்(று) ஆட்பட்ட தல்லால்
கரியன்கொள் சேயன்கொல் காண்கின்றிலேனே.

பொழிப்புரை :  சிவபெருமானை, மந்திரம் 337-இல் கூறியவாறு, `பிரமன் தலையைக் கிள்ளிக் கையில் ஏந்தியவன்` எனவும் மந்திரம் 340-இல் கூறியவாறு `யானையை உரித்தவன்` எனவும், `தக்கனுடைய சாபத்திற்கு அஞ்சி வந்து அடைக்கலம் புகுந்த சந்திரனைத் தலையில் அணிந்து காத்தவன்` எனவும் மற்றும் இவ்வாறு வரும் வரலாறுகள் பலவற்றால் உயர்ந்தோர் புகழ்ந்து கூறிய சொற்களால் அவனையே, `அரியவன்` என்றும், பெரியவன் என்றும் துணிந்து யான் அவனுக்கு ஆட்பட்டதல்லது, அவனை யான் நேரில் `கறுப்பன்` என்றோ, `சிவப்பன்` என்றே பார்த்து உணர்ந்ததில்லை.
*************************************************
பாடல் எண் : 3
விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு
விளக்குடை யான்கழல் மேவலும் ஆமே.

பொழிப்புரை :  ஆணவ இருளால் அறிவை இழந்த நின்ற உயிருக்கு அந்த ஆணவ இருளைச் சிறிதே நீக்கும் விளக்குப் போல்வன மாயா காரியங்களாகிய தூல, சூக்கும, அதிசூக்கும உடம்புகள். அறிவை விளக்கி நிற்கும் கருவிகளாகிய அவைகளையே `அறிவாகிய தான்` என உயிர் மயங்குகின்றது. அம்மயக்கம் நீங்கி, அவ்வுடம்புகளைத் தனக்கு வேறாக நீக்கி, அறிவு விளக்காம் தன்னைத் தான் உணர்ந்து, பின் தன் அறிவிற்குள்ளே அறிவாய் விளங்கும் திருவருளை விளங்கச் செய்து, பின் அந்தத் திருவருளாகிய விளக்கினுள் தானாகிய விளக்கினை, வெயிலின்முன் உள்ள பகல் விளக்குப்போல அடங்கி விளங்கச் செய்யவல்லவர்க்கு அந்தத் திருவருளாகிய ஒளியை உடையவனாகிய சிவனது இன்பக்கடலைப் பெறுதல் கூடும்.
*************************************************
பாடல் எண் : 4
தத்துவம் எங்குண்டு தத்துவன் அங்குண்டு
தத்துவம் எங்கில்லை தத்துவன் அங்கில்லை
தத்துவ ஞானத்தின் தன்மை யறிந்தபின்
தத்துவன் அங்கே தலைப்படுந் தானே.

பொழிப்புரை :  பொருள்களின் பொதுமையை மட்டும் உணர்ந்தொழியாது, அவற்றின் மெய்ம்மையை உணர்ந்தவரிடத்தில்தான் மெய்ப்பொருளாய் உள்ள சிவனும் விளங்கியிருப் பான். மெய்ம்மையை உணராதவரிடத்தில் அவன் விளங்குதல் இல்லை. ஆகவே, மெய்யுணர்வி சிறப்பினை உணர்ந்து அதனை ஒருவன் பெற்றுவிட்டால், உடனே சிவன் அவனிடம் வந்து விளங்குவான்.
*************************************************
பாடல் எண் : 5
விசும்பொன்றத் தாங்கிய மெய்ஞ்ஞானத்துள்ளே
அசும்பினின் நூறும் ஆரமு தாகும்
பசும்பொன் திகழும் படர்சடை மீதே
குசும்ப மலர்க்கந்தம் கூடிநின் றானே.

பொழிப்புரை :  பசிய பொன்போல விளங்கும் தனது விரிந்த சடையின்கண் குசும்ப மலரின் வாசனை கமழ நிற்கின்ற சிவன் ஆகாயத்தைப்போல எல்லாப் பொருளையும் தன்னுள் அடங்கக் கொண்டிருக்கின்ற உண்மை ஞானத்திலிருந்து கசிந்து ஊறுகின்ற அரிய அமுதமாவான்.
*************************************************
பாடல் எண் : 6
முத்தின் வயிரத்தின் முந்நீர்ப் பவளத்தின்
தொத்துப் பசும்பொன்னின் தூவொளி மாணிக்கம்
ஒத்துயர் அண்டத்தி னுள்ளமார் சோதியை
எத்தன்மை வேறென்று கூறுசெய் வீரே.

பொழிப்புரை :  முத்து, வைரம், பவளம், கட்டியான பசும்பொன், மாணிக்கம் ஆகியவற்றில் உள்ள ஒளிகளைப் போல அண்டங்களால் வேறறக் கலந்து நிற்கின்ற ஞான ஒளியை நீவிர் அவற்றினின்றும் வேறுபடுத்திப் பெறுவீர்? சொல்லுமின்.
*************************************************
பாடல் எண் : 7
நானென்றும் தானென்றும் நாடினேன் நாடலும்
நானென்று தானென் றிரண்டில்லை என்பது
நானென்ற ஞான முதல்வனே நல்கினான்
நானென்று நானும் நினைப்பொழிந் தேனே.

பொழிப்புரை :  (`நான்` என்று உணர்கின்ற என்னையன்றி, எனக்கு வேறாய், `தான்` என்று ஒருவன் இல்லை என்று இறுமாந்திருந்த எனக்கு, `தான் என்று ஒருவன் இருக்கின்றான்`` என்று ஞான குரு உணர்த்த, அவர் உணர்த்திய முறையில்,) `நான்` என்கின்ற எனக்கு வேறாய், `தான்` என்று ஒருவன் இருத்தலை முறையான ஆய்வினால் ஆராய்ந்து உணர்ந்தேன். அங்ஙனம் அவனது இருப்பை, மட்டும் உணர்ந்த யான், எனது இயல் பிற்கு வேறாக அவன்தான் கொண்டிருக்கின்ற இயல்பு யாது` என ஆராயும் பொழுது அவன் என்னின் வேறாய் இல்லாது, என்னில் யானாகவே கலந்து நிற்றலையும், முதற்கண், `நான் அன்றித் `தான்` என்று ஒருவன் இல்லை` என யான் உணர்ந்திருந்த அந்த உணர்வையும், பின்னர், `என்னின் வேறாய், `தான்` என்று ஒருவன் இருக்கின்றான்` என்று உணர்ந்த உணர்வையும், இது பொழுது `என் இயல்பு யாது, அவன் இயல்பு யாது` என ஆராயும் ஆராய்ச்சி உணர்வையும், அந்த ஆராய்ச் சியில், `அவன் வேறாய் இல்லாமல், யானாகவே என்னிற் கலந்து நிற் கின்றான்` என உணர்ந்த உணர்வையும், அந்த ஆராய்ச்சியில், `அவன் வேறாய் இல்லாமல், யானாகவே என்னிற் கலந்து நிற்கின்றான்` என உணர்ந்த உணர்வையும் `தந்தவன் அவனே` என்னும் உணர்வையும் அவனே அருளினான். அதனஆல், நான், `நான்` என என்னை உணர்தலை அறவே ஒழித்து, அவனை மட்டுமே உணர்ந்து நிற்கின்றேன்.
*************************************************
பாடல் எண் : 8
ஞானத்தின் நன்னெறி நாதந்த நன்னெறி
ஞானத்தின் நன்னெறி நான்அறி வென்றோர்தல்
ஞானத்தின் நல்யோகம் நன்னிலை யேநிற்றல்
ஞானத்தின் நன்மோனம் நாதாந்த வேதமே.

பொழிப்புரை :  ஞானமாகிய உயர்நெறியில் முதற் கண்ணதாகிய ஞானத்திற் கிரியையாவது, நிலம் முதல் நாதம் ஈறாய்ச்சுட்டி அறியப் படுகின்ற அனைத்தையும் `சடம்` எனவும், அவற்றில் அவையேயாய்க் கலந்து ஒன்றி நிற்கின்ற உயிரை, `சித்து` (அறிவு) எனவும் இவ்வாறு இரண்டன் தன்மைகளும் வேறு வேறாதலை ஆராய்ச்சியால் உணர்ந்து, அங்ஙனம் உணர்கின்ற உயிர் அவை யனைத்தையும் தள்ளித் தன்னை அவற்றின் வேறாக உணர்தலாம்.அப்பால் ஞானத்தில் யோகமாவது, தான் சடத்தின் வேறாதலை யுணர்ந்தபின் மீட்டும் அவற் றின்கண் வீழ்ந்து தன்னை அவையாக மயங்காமல், உயர்நிலையில் நிற்றலாம். (உயிர் எப்பொழுதும் தனித்து நில்லாது ஆகையால் தனக்குத் தாரகமாகிய திருவருளில் நிற்றலே சடத்தில் வீழாது நன்னிலைக்கண் நிற்றலாகும் என்பது கருத்து. `நன்மை` என்றது திரு வருளையேயாம்.) இனி ஞானத்தில் ஞானமாகிய முடிநிலையாவது, நாதத்தின் துணையில்லாமலே பொருள்களை நன்குணரும் நிலையாம்.
*************************************************
பாடல் எண் : 9
உய்யவல் லார்கட் குயிர்சிவ ஞானமே
உய்யவல் லார்கட் குயிர்சிவ தெய்வமே
உய்யவல் லார்கட் கொடுக்கும் பிரணவம்
உய்யவல் லார்உள் ளறிவறி வாரே.

பொழிப்புரை :  பிறவித் துன்பத்தினின்றும் தப்ப வல்லவர்கட்கு அவர்தம் உயிர்போலச் சிறந்த நிற்பன சிவஞானமும், அதனால் அறியப்படுகின்ற சிவமாகிய கடவுளுமாம். அவர்கள் புறத்தே பரந்து சென்று அலையாமல் அகத்தே ஒடுங்கி அமைதியுறுதற்குத் துணையாவது பிரணவ மந்திரம். அம்மந்திரத்தின் வழியாக அவர் அகத்தே ஒடுங்கி, அறிவினுள் அறிவாய் நிற்கும் சிவத்தை அடைவார்கள்.
*************************************************
பாடல் எண் : 10
காணவல் லார்க்கவன் கண்ணின் மணியொக்கும்
காணவல் லார்க்குக் கடலின் னமுதொக்கும்
பேணவல் லார்க்குப் பிழைப்பிலன் பேர்நந்தி
ஆணம்வல் லார்க்கே அவன்துணை யாமே.

பொழிப்புரை :  (பிறபொருள்களை அறிதல்போல அறிவால் அறியாது, அறிவிறந்தே அவனை அறிதல் வேண்டும்.) அவ்வாறு அறிவார்க்கு அவன் அவர்தம் அறிவினுள் அறிவாய் விளங்கி, தேவர்கள் கடலைக் கடைந்து வருந்திப்பெற்ற அமுதம்போல வருந்தாது பெறப்பட்ட அமுதமாய்ப் பேரின்பத்தை விளைப்பான். அங்ஙனமாயின், (பெற்றதைச் சிறிதாயும், பெறாததைப் பெரிதாயும் கருதும் பழைய பழக்கத்தின்படி அவனைப் பேணாதொழிவார்க்கு அவன் முன்போல அயலவனாய் விடுவான். ஆதலால், அவ்வாறின்றிப்) பின்னும், பின்னும் பேணி ஒழுகுவாரை விட்டு அவன் நீங்குதல் இல்லை. ஆனந்த வடிவினன் ஆதல் பற்றி, `நந்தி` எனப்பெயர் சொல்லப்படுகின்ற அவன் அன்புடையார்க்கே அவ்வாறு உடனாய் நிற்பன்.
*************************************************
பாடல் எண் : 11
ஓமெனும் ஓரெழுத் துள்நின்ற ஓசைபோல்
மேனின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள்
சேய்நின்ற செஞ்சுடர் எம்பெரு மான்அடி
ஆய்நின்ற தேவர் அகம்படி யாமே.

பொழிப்புரை :  ``ஓம்`` என்று எழும் இசையோசையின் உள்ளீடாய் நிற்கும் எழுத்தோசையாகிய நாதம் போல, சுத்த மாயா உலகத்தில் வாழும் ஞான ஒளியினர் உயிர்க்குயிரான பரம்பொருளாக என்றும் விரும்பப்படுபவன் எங்கள் சிவபெருமான். அவனது அருள் சத்தி நிபாதர் அல்லார்க்கு ஞானம் இல்லாமையால் சேயனவாயினும் சத்திநிபாதராய் ஞானத்தைப் பெற்றவர்க்கு அவர்தம் அகத்தே விளங்குவனவாம்.
*************************************************

மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!