http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Thursday 17 May, 2012

திருமந்திரம்-தந்திரம்03 பதிகம்:21/2 சந்திரயோகம் (பாடல்கள்:20-33/33)பாகம் II

பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
===================================================================
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:01: அட்டாங்க யோகம்...........பாடல்கள்: 004
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:02: இமயம்................................பாடல்கள்: 001
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:03: நியமம்................................பாடல்கள்: 002 
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:04: ஆதனம்..............................பாடல்கள்: 006
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:05: பிரணாயாமம்...................பாடல்கள்: 014
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:02: பிரத்தியாகாரம்................பாடல்கள்: 010
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:07: தாரணை............................பாடல்கள்: 009
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:08: தியானம்.............................பாடல்கள்: 019
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:09: சமாதி ................................பாடல்கள்: 013 
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:10: அட்டாங்க யோகப்பேறு (பாடல்கள்: 008
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:11: அட்டமாசித்தி....................பாடல்கள்: 071
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:12: கலைநிலை......................பாடல்கள்: 012
மூன்றாம்தந்திரம்:பதிக எண்:13: காரிய சித்தி......................பாடல்கள்: 016
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:14: காலச் சக்கரம்.................பாடல்கள்: 030

மூன்றாம் தந்திரம்:பதிக எண்:15: ஆயுள் பரீட்சை................பாடல்கள்: 020
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:16: வார சரம்...........................பாடல்கள்: 006

மூன்றாம் தந்திரம்:பதிக எண்:17: வார சூலம்........................பாடல்கள்: 002

மூன்றாம் தந்திரம்:பதிக எண்:18: கேசரி யோகம்..................பாடல்கள்: 020
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:19: பரியங்க யோகம்.............பாடல்கள்: 020
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:20: அமுரி தாரணை..............பாடல்கள்: 005
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:21: சந்திர யோகம்..................பாடல்கள்: 033
========================================================(288+033=321)
மூன்றாம் தந்திரம்-பதிகம் எண்:21/2. சந்திரயோகம் (பாடல்கள்:20-33/33)பாகம்-II
பாடல் எண் : 20
ஊதியம் ஏதும் அறியார் உரைப்பினும்
ஓதியும் ஏதும் அறியாத ஊமர்கள்
ஆதியும் அந்தமும் அந்திக்க வல்லிரேல்
வேதியன் அங்கே வெளிப்படுந் தானே.

பொழிப்புரைநூல்களைக் கற்பினும் அவற்றின் பயனைச் சிறிதும் உணரமாட்டாத அறிவிலிகள், அவற்றைப் பிறர் உரைப்பினும் உணர் வாரல்லர். ஆதலின், அவர் நிற்க. நீவிர் யாம் கூறிய முறையால் குண்டலி சத்தியை அது தோன்றுகின்ற மணிபூரகத்தில் சந்தித்தலோடு ஒழியாது, அதன் முடிவிடமாகிய சந்திர மண்டலத்திலும் விடாது பொருந்தி நிற்றல் வேண்டும். அவ்வாறு நிற்க வல்லிராயின், அவ்விடத்தில் சிவன் வெளிப்பட்டுத் தோன்றுவான்.
==========================================
பாடல் எண் : 21
பாம்பு மதியைத் தினலுறும் அப்பாம்பு
தீங்கு கதிரையுஞ் சேரத் தினலுறும்
பாம்பும் மதியும் பகைதீர்த் துடன்கொளீஇ
நீங்கல் கொடானே நெடுந்தகை யானே. 

பொழிப்புரைகுண்டலினியாகிய பாம்பு சந்திரகலை, சூரியகலை என்னும் இருகலை வாயுவையும் ஒருங்கே உட்கொண்டு சிறந்து எழும். பின் பெருந்தகையோனாகிய சிவபிரான் அந்தப் பாம் பினையும், சகத்திராரத்தில் உள்ள சந்திரனையும் மாறிநிற்க விடாமல் ஒன்றியிருக்கச் செய்து, அவ்வொன்றுதலில் தானும் நீங்காது நிற்பான்.
==========================================
பாடல் எண் : 22
அயின்றது வீழ்வள வுந்துயில் இன்றிப்
பயின்ற சசிவீழ் பொழுதில் துயின்று
நயந்தரு பூரணை உள்ளம் நடத்தின்
வியந்தரு பூரணை மேவும் சசியே. 

பொழிப்புரைசர நிலையில் சந்திர கலை இயங்கும்பொழுது உறங்காமல் விழித்திருந்து, சந்திர கலை நின்று சூரிய கலை இயங்கும் பொழுது உறங்கி, இரண்டு கலையும் சேர இயங்கும்பொழுது யோகத்திற் சென்றால், சந்திர மண்டலம், விரிவடைதலாகிய பௌர்ணிமை நிலையை எய்தும்.
==========================================
பாடல் எண் : 23
சசியுதிக் கும்அள வந்துயி லின்றிச்
சசியுதித் தானேல் தனதூண் அருந்திச்
சசிசரிக் கின்றள வுந்துயி லாமற்
சசிசரிப் பிற்கண்தன் கண்டுயில் கொண்டதே. 

பொழிப்புரைசந்திர யோகத்தில் சந்திர மண்டலம் தோன்று மளவும் சோம்பல் இன்றி யோகத்தில் முயன்று, அது தோன்றியபின் அதினின்றும் பெருகும் அமுதத்தைப் பருகிச் சரவோட்டத்தில் சந்திர கலை இயங்காமல் சூரிய கலை இயங்கும் பொழுது உறங்குதல் தக்கது.
==========================================
பாடல் எண் : 24
ஊழி பிரியா திருக்கின்ற யோகிகள்
நாழிகை யாக நமனை அளப்பர்கள்
ஊழி முதலாய் உயர்வார் உலகினில்
தாழஅல் லார்இச் சசிவன்னர் தாமே. 

பொழிப்புரைஊழிகள் பல சென்றாலும் உலகிலே வாழ்கின்ற காய சித்த யோகிகள், தாம் யோகத்தில் இருக்கின்ற நாழிகையையே முழம் அளக்கும் கையாகக் கொண்டு எமனது ஆற்றலை அளப் பார்கள். ஆயினும், இங்குக் கூறப்படுகின்ற சந்திர யோகிகள் ஊழிக்கு முதல்வனாய் உள்ள சிவனேயாகின்ற உயர்நிலையை அடைவர்; உலகியலில் தாழ்தற்கு உரியரல்லராவர்.
==========================================
பாடல் எண் : 25
தண்மதி பானுச் சரிபூமி யேசென்று
மண்மதி காலங்கள் மூன்றும் வழிகண்டு
வெண்மதி தோன்றிய நாளில் விளைந்தபின்
கண்மதி வீழ்வள விற்கண மின்றே.

பொழிப்புரைமக்களது உணர்வு அவர்களது தலையில் உள்ள சந்திர மண்டலம் உருப்பெற்றுத் தோன்றிய பின் அவர்களது சந்திர கலை சூரிய கலைகளாகிய வாயுக்கள் இயங்கும் வழியிலே விளங்கி, உலகம் மதிக்கின்ற இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் முக்காலங் களிலும் நிகழும் நிகழ்ச்சிகளை முறையே கண்டு விளங்கிய பின், முடிவில் அச்சந்திர மண்டலம் வீழ்ச்சி அடையும்பொழுது ஒரு நொடி நேரமும் இல்லாதொழியும்.
==========================================
பாடல் எண் : 26
வளர்கின்ற ஆதித்தன் தன்கலை ஆறும்
தளர்கின்ற சந்திரன் தன்கலை ஆறும்
மலர்ந்தெழு பன்னிரண் டங்குலம் ஓடி
அலர்ந்து விழுந்தமை யாரறி வாரே. 

பொழிப்புரைசந்திரனிலும் ஆற்றல் மிகுகின்ற சூரியனது கலைகள் ஆறும், சூரியனும் ஆற்றல் மெலிகின்ற சந்திரனது கலைகள் ஆறும் தனித்தனி இருதயத்திற்குமேல் பன்னிரண்டங்குலம் சென்று சந்திர மண்டலத்தில் பரவி நின்றதன் பயனை அறிகின்றவர் உலகத்து அரியர்.
==========================================
பாடல் எண் : 27
ஆமுயிர்த் தேய்மதி நாளே யெனல்விந்து
போம்வழி எங்கணும் போகாது யோகிக்குக்
காமுற வின்மையிற் கட்டுண்ணும் மூலத்தில்
ஓமதி யுள்விட் டுரையுணர் வாலே. 

பொழிப்புரையோகிக்கு உணர்வு பெருகுகின்ற உயிர் போல் வதாகிய சந்திர கலை குறைகின்ற நாளே விந்து இழப்பாகின்ற காலம் என்க. ஆகவே, முன்னை மந்திரத்திற் கூறியவாறு சந்திர கலையைக் குறைவுறாதபடி செய்கின்ற சமநிலை யோகத்தையுடைய யோகிக்கு எக்காலத்தும் விந்து இழப்பாகாது. ஏனெனில், மூலாதாரத்தில் உள்ள ஓங்கார உணர்வு நுண்ணிய நாதமாத்திரையாய்ச் சந்திர மண்டலத்துட் சேர்க்கப்பட்டதனால் ஆகிய உரை உணர்வுகளால் காமம் மீதூரா தொழிய, விந்து தனக்கு மூலமாகிய சுவாதிட்டானத்தில் கட்டுண்டு நிற்கும் ஆதலால்.
==========================================
பாடல் எண் : 28
வேறுறச் செங்கதிர் மெய்க்கலை ஆறொடுஞ்
சூறுற நான்குந் தொடர்ந்துற வேநிற்கும்
ஈறில் இனன்கலை ஈரைந்தொ டேமதித்
தாறுட் கலையுள் அகலுவா வாமே.

பொழிப்புரைமேல் சூரிய கலை பன்னிரண்டினின்று வேறாகத் தோன்றக் கூறிய ஆறனுடன், சுவாதிட்டானத்தினின்றும் கீழ்ச் சென்று மூலாதாரத்தைத் தாக்குவதாகிய அக்கினி கலை நான்கு தொடர்ந்து பொருந்தி நிற்கும் இயல்புடையன. அவற்றால் பத்தாகின்ற சூரிய கலைகளோடு சந்திரனது அடக்கமான கலை ஆறு கூடின், அந்நிலை யோகிக்கு மேற்கூறிய உரை உணர்வுகள் முழுதும் அற்றொழிகின்ற அமாவாசியை நாளாம்.
==========================================
பாடல் எண் : 29
உணர்விந்து சோணி உறஇனன் வீசும்
புணர்விந்து வீசுங் கதிரிற் குறையில்
உணர்வும் உடம்பும் உவையொக்க நிற்கில்
உணர்வும் உடம்பும் ஒருகால் விடாவே. 

பொழிப்புரைபுணர்ச்சிக் காலத்துச் சந்திர கலை குறையுமாயின், சூரிய கலை உணர்விற்கு முதலாகிய வெண்பாலினையும், உடம்பிற்கு முதலாகிய செம்பாலினையும் மிக இழக்குமாறு தனது ஆற்றலைச் செயற்படுத்தி நிற்கும். ஆகவே, உணர்வும், உடம்பும் போல்வன வாகிய சூரிய கலை, சந்திர கலைகளாகிய அவை தம்மில் ஒத்து நிற்பின், உணர்விற்கு முதலாகிய வெண்பாலும், உடம்பிற்கு முதலாகிய செம்பாலும் ஒருபோதும் மிக இழக்கப்படா.
==========================================
பாடல் எண் : 30
அமுதப் புனல்வரும் ஆற்றங் கரைமேல்
குமிழிக்கத் தற்சுடர் ஐந்தையுங் கூட்டிச்
சமையத்தண் டோட்டித் தரிக்கவல் லார்க்கு
நமன்இல்லை நற்கலை நாள்இல்லை தானே. 

பொழிப்புரைசந்திர மண்டலத்தில் ஊறுகின்ற அமுதம், தான் பாய்கின்ற யாறாகிய புருவ நடுவின் எல்லையைக் கடந்து வழிந்து கொண்டிருக்க, அப்புருவ நடுவினின்றும் மேன்மேல் சுடர்விட்டு விளங்குகின்ற ஒளிகள் ஐந்தையும் ஒன்று படுத்தி, அவற்றிற்கு ஏற்பு டையதான அந்தத் தண்டின் முனையில் அவைகளை ஓங்கி எரியச் செய்து, அவற்றைச் சுமக்க வல்லவர்கட்கு, நமனது வருகையும், கலை, நாள் முதலாகச் சொல்லப்படுகின்ற காலப்பகுதிகளும் இல்லையாகும்.
==========================================
பாடல் எண் : 31
உண்ணீர் அமுதம் உறும் ஊறலைத்திறந்
தெண்ணீர் இணையடித் தாமரைக் கேசெலத்
தெண்ணீர்ச் சமாதி யமர்ந்துதீ ராநலங்
கண்ணாற் றொடேசென்று கால்வழி மாறுமே. 

பொழிப்புரைஉலகீர், அமுதம் நிறைந்துள்ள ஊற்றின் மடையைத் திறந்து, அவ்வமுதம் பெருகிவர, அதனை உண்ணுங்கள். அதனை உண்டதன் பயனாக இவ்வுலகிலே நெடுங்காலம் வாழ நினையாமல், ஞான சமாதியில் அமர்ந்து சிவனது இரண்டு திருவடிகளாகிய தாமரை மலரின்கீழ்ச் சென்று இருக்கவே நினையுங்கள். அங்ஙனம் இருத்தலாகிய அழியா இன்பத்தின் பொருட்டு முதற்கண் உங்கள் மூச்சுக் காற்றினை இருமூக்காகிய வழிகளை மாற்றிக் கண்வழியாகச் செலுத்துங்கள்.
==========================================
பாடல் எண் : 32
மாறும் மதியும்ஆ தித்தனும் மாறின்றித்
தாறு படாமல்தண் டோடே தலைப்படில்
ஊறு படாதுடல் வேண்டும் உபாயமும்
பாறு படாஇன்பம் பார்மிசைப் பொங்குமே. 

பொழிப்புரை :  இடநாடி வழியாகவும், வலநாடி வழியாகவும் இயங்குகின்ற தம் இயல்பினின்றும் மாறுகின்ற சந்திர கலையும், சூரியகலையும் பின், யோகத்திற்குரிய முறையில் மாறுபடாமலும், குறைவுறாமலும் சுழுமுனை வழியே சென்று சந்திர மண்டலம் உள்ள தலையை அடையுமாயின், உடல், தனது நலத்திற்கு வேண்டுகின்ற வழிகளில் சிறிதும் சிதைவு உண்டாகாது. என்றும் அழிவில்லாத வீட்டின்பமும் இவ்வுலகில் மிகுவதாகும்.
==========================================
பாடல் எண் : 33
விடாத மனம்பவ னத்தொடு மேவி
நடாவு சிவசங்க நாதங் கொளுவிக்
கடாவிடா ஐம்புலன் கட்டுண்ணும் வீடு
படாதன இன்பம் பருகார் அமுதமே. 

பொழிப்புரை :  ஓடுதலை விடாத மனம் பிராணாயாமத்தால் ஒருவழிப்பட்டுச் சிவநாத ஒலியைக் கேட்பிக்கும். மதம் நீங்காத ஐம்பொறிகளாகிய யானைகளும் உரிய இடத்தில் கட்டுப்படும். அதனால், பருகப்படுகின்ற சந்திர மண்டலத்து அரிய அமிர்தமே பெத்த காலத்தில் விளையாத பேரின்பமாய் நிற்கும்.
 
(திருமூலரின் திருமந்திரம் மூன்றாம் தந்திரம் முற்றும்)
==========================================

மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமூலரின் திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

Wednesday 16 May, 2012

திருமந்திரம்-தந்திரம்03 பதிகம்:21/1 சந்திர யோகம் (பாடல்கள்:01-19/33)பாகம் I

பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
===================================================================
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:01: அட்டாங்க யோகம்...........பாடல்கள்: 004
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:02: இமயம்................................பாடல்கள்: 001
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:03: நியமம்................................பாடல்கள்: 002 
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:04: ஆதனம்..............................பாடல்கள்: 006
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:05: பிரணாயாமம்...................பாடல்கள்: 014
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:02: பிரத்தியாகாரம்................பாடல்கள்: 010
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:07: தாரணை............................பாடல்கள்: 009
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:08: தியானம்.............................பாடல்கள்: 019
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:09: சமாதி ................................பாடல்கள்: 013 
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:10: அட்டாங்க யோகப்பேறு (பாடல்கள்: 008
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:11: அட்டமாசித்தி....................பாடல்கள்: 071
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:12: கலைநிலை......................பாடல்கள்: 012
மூன்றாம்தந்திரம்:பதிக எண்:13: காரிய சித்தி......................பாடல்கள்: 016
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:14: காலச் சக்கரம்.................பாடல்கள்: 030

மூன்றாம் தந்திரம்:பதிக எண்:15: ஆயுள் பரீட்சை................பாடல்கள்: 020
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:16: வார சரம்...........................பாடல்கள்: 006

மூன்றாம் தந்திரம்:பதிக எண்:17: வார சூலம்........................பாடல்கள்: 002

மூன்றாம் தந்திரம்:பதிக எண்:18: கேசரி யோகம்..................பாடல்கள்: 020
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:19: பரியங்க யோகம்.............பாடல்கள்: 020
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:20: அமுரி தாரணை..............பாடல்கள்: 005
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:21: சந்திர யோகம்..................பாடல்கள்: 033
========================================================(288+033=321)
மூன்றாம் தந்திரம்-பதிகம் எண்:21. சந்திரயோகம் (பாடல்கள்:01-19/33)பாகம்-I

பாடல் எண் : 1
எய்தும் மதிக்கலை சூக்கத்தில் ஏறியே
எய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள்
எய்துங் கலைபோல ஏறி இறங்குமாம்
துய்யது சூக்கத்துத் தூலத்த காயமே.

பொழிப்புரை :  சந்திரனிடத்துப் பொருந்தியுள்ள கலைகள் நுண்மை யினின்று வளர்ந்து பருமையாக நிறைவெய்தும், (பின் பருமை யினின்றும் தேய்ந்து நுண்மையாக ஒடுங்கும்) வளர்பிறை தேய்பிறை என்னும் இருவகைப் பக்கத்திலும் அவை அவ்வாறாதல் போல உடம்பில் உள்ள சந்திர மண்டலத்தின் ஆற்றல்களும் நுண்மையினின்றும் வளர்ந்து பருவுடம்பில் நிறைதலும், பருவுடம்பினின்றும் தேய்ந்து நுண்ணுடம்பில் ஒடுங்குதலும் உடையவாம்.
==========================================
பாடல் எண் : 2
ஆகின்ற சந்திரன் சூரியன் அங்கியுள்
ஆகின்ற ஈரெட்டொ டாறிரண் டீரைந்துள்
ஏகின்ற அக்கலை யெல்லாம் இடைவழி
ஆகின்ற யோகி அறிந்த அறிவே.

பொழிப்புரை :  யோகத்திற்கு உரியனவாகின்ற சந்திர கலை, சூரிய கலை, அக்கினி கலை என்பவை முறையே பதினாறு, பன்னிரண்டு, பத்து என்னும் எண்ணிக்கையை உடையன. இயங்குகின்ற அவ் எல்லாக் கலைகளும் யோகி தனது அறிவால் அறிந்து அமைக்க அமைவனவே; அண்டத்தில் உள்ள சந்திரன் முதலியவற்றின் கலைகள் போல இயல்பாக அமைந்தன அல்ல.
==========================================
பாடல் எண் : 3
ஆறாற தாங்கலை ஆதித்தன் சந்திரன்
நாறா நலங்கிளர் ஞாலங் கவர்கொளப்
பேறாங் கலைமுற்றும் பேருங்கால் ஈரெட்டும்
மாறாக் கதிர்கொள்ளும் மற்றங்கி கூடவே.

பொழிப்புரை :  சூரியன் பன்னிரண்டு கலைகளையே உடைய தாயினும் அது சந்திரனது பதினாறு கலைகளையும், அதற்கு ஏதுவாய் நிற்கும் பதினாறு மாத்திரைப் பிராண வாயுவையும் உட்கொள்ளும் ஆற்றல் படைத்தது. அஃது அன்னதாவது, தான் அக்கினி கலையோடு சேரும்பொழுதேயாம்.
==========================================
பாடல் எண் : 4
பத்தும் இரண்டும் பகலோன் உயர்கலை
பத்தினொ டாறும் உயர்கலை பால்மதி
ஒத்தநல் அங்கிய தெட்டெட் டுயர்கலை
அத்திறன் நின்றமை ஆய்ந்துகொள் வீரே.

பொழிப்புரை :  `சூரியன், சந்திரன்` என்னும் இரண்டற்கும் மேற் சொல்லிய கலையளவில் வேறுபாடில்லை. ஆயினும், அக்கினிக்கு மேற்சொல்லப்பட்ட கலையளவு இழிபளவாக, உயர்பளவு அறுபத்து நான்காம். இதனை யோக முறையை ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள்.
==========================================
பாடல் எண் : 5
எட்டெட் டனலின் கலையாகும் ஈராறுட்
சுட்டப் படுங்கதி ரோனுக்குஞ் சூழ்கலை
கட்டப் படுமீரெட் டாகும் மதிக்கலை
ஒட்டப் படாஇவை ஒன்றோடொன் றாகவே.

பொழிப்புரை :  அக்கினி முதலிய மூன்றற்கும் சொல்லப்பட்ட கலை அளவுகளை ஒன்றற்கு உரியது மற்றொன்றற்கு ஆகுமாறு பொருத்துதல் கூடாது.
==========================================
பாடல் எண் : 6
எட்டெட்டும் ஈராறும் ஈரெட்டும் தீக்கதிர்
சுட்டிட்ட சோமனில் தோன்றுங் கலையெனக்
கட்டப் படும்தா ரகைக்கதிர் நாலுள
கட்டிட்ட தொண்ணூற்றொ டாறுங் கலாதியே. 
பொழிப்புரை :  அக்கினிக்கு அறுபத்து நான்கு, சூரியனுக்குப் பன்னிரண்டு, சந்திரனுக்குப் பதினாறு எனக் கலைகள் மேற்கூறியவாறு வரையறுக்கப்படும் பொழுது அவற்றிற்கு மேலும் நட்சத்திரக் கலை என நான்கு சொல்லப்படும். ஆகவே, அவையும் கூடக் கலைகள் தொண்ணூற்றாறாம். இத்தொண்ணூற்றாறு கலைகளையும் தத்துவ தாத்துவிகங் களாகிய தொண்ணூற்று ஆறுமாகக் கொள்க.
==========================================
பாடல் எண் : 7
எல்லாக் கலையும் இடைபிங் கலைநடுச்
சொல்லா நடுநாடி யூடே தொடர்மூலம்
செல்லா எழுப்பிச் சிரத்துடன் சேர்தலால்
நல்லார் திருவடி நண்ணிநிற் பாரே. 

பொழிப்புரை
:  தொண்ணூற்றாறு கலைகளும், `இடை, பிங்கலை, சுழுமுனை` என்பவற்றுடன், நடுநாடி வழியாகக் கீழ்ப் போய்த் தொடர்கின்ற, இதுகாறும் சொல்லப்படாத மூலாதாரத்திலும் ``பூரகம், கும்பகம்`` என்பவற்றில் ஏற்ற பெற்றியால் பொருந்திப் பின் மேல் எழுந்து தலையிலே சேர்தலால், யோகிகள் சிவனது திருவடியை அடைய வல்லவராவர்.
==========================================
பாடல் எண் : 8
அங்கியிற் சின்னக் கதிரிரண் டாட்டத்துத்
தங்கிய தாரகை யாகும் சசிபானு
பங்கிய தாரகை யாகும் பரையொளி
தங்கு நவசக்ர மாகுந் தரணிக்கே.

பொழிப்புரை :  `அக்கினிகலையில் சந்திரன், சூரியன்` என்னும் இரண்டன் கலைகள் தாக்குதலால் அவற்றொடு வைத்து எண்ணப் படுகின்ற நட்சத்திரக் கலைகள் தோன்றும். இங்கு, `சந்திரன், சூரியன், அவற்றின் கூறுகளாகிய நட்சத்திரம்` என்று சொல்லப்படுவன வெல்லாம் சத்தியது ஒளிப்பகுதிகளே. அதனால், இவை பிரணவ யோகிகட்கு நவமண்டலமாயும் நிற்கும்.
==========================================
பாடல் எண் : 9
தரணி சலங்கனல் கால்தக்க வானம்
அரணிய பானு அருந்திங்கள் அங்கி
முரணிய தாரகை முன்னிய ஒன்பான்
பிரணவ மாகும் பெருநெறி தானே.

பொழிப்புரை :  `பிரணவயோகம்` எனப்படுகின்ற பெரிய நெறி, `பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், சந்திரன், சூரியன், அக்கினி, நட்சத்திரம்` என்னும் நவமண்டலங்களை (ஒன்பான் வட்டங்களை) உடையது.
==========================================
பாடல் எண் : 10
தாரகை மின்னும் சசிதேயும் பக்கத்துத்
தாரகை மின்னா சசிவளர் பக்கத்துத்
தாரகை பூவிற் சகலத்தி யோனிகள்
தாரகைத் தாரகை தானாம் சொரூபமே.

பொழிப்புரை :  நட்சத்திரங்கள் சந்திரன் தேயும் பக்கத்தில் விளங்கு தலன்றி, அது வளரும் பக்கத்தில் தனியே விளங்கா; சந்திரனது ஒளியிலே ஒன்றி அதுவாய்விடும். யோகத்தில் ``நட்சத்திரங்கள்`` எனப்படுபவை, பூமியில் உள்ள பலவகை உயிர்கள். எனவே, யோகியின் சந்திர மண்டலம் விளங்கி நிற்கும்பொழுது உலகப் பொருள் பற்றிய உணர்வுகள் முன்னை மந்திரத்துட் கூறிய நட்சத்திர மண்டலத்தில் வேறு நின்று விளங்காது, சிவ உணர்விலே ஒன்றிவிடும்.
==========================================
பாடல் எண் : 11
முற்பதி னஞ்சின் முளைத்துப் பெருத்திடும்
பிற்பதி னஞ்சிற் பெருத்துச் சிறுத்திடும்
அப்பதி னஞ்சும் அறியவல் லார்கட்குச்
செப்பரி யான்கழல் சேர்தலு மாமே.

பொழிப்புரை :  பிண்டத்தில் உள்ள சந்திர மண்டலமும், அண்டத்தில் உள்ள சந்திர மண்டலம் போலவே தனது முற்பக்க நாள் பதினைந்தில் தோன்றி வளர்ந்து, பிற்பக்க நாள் பதினைந்தில் நிறைவினின்றும் தேய்ந்துவிடும். அதனால், அவ்விருவகைப் பதினைந்து நாள்களையும் அறிந்து முற்பக்க நாளில் யோகம் புரிய வல்லவர்கட்கு, சொல்லுதற்கரிய சிவனது திருவடியைச் சேர்தலும் கூடும்.
==========================================
பாடல் எண் : 12
அங்கி எழுப்பி அருங்கதிர் வட்டத்துத்
தங்குஞ் சசியினால் தாமம்ஐந் தைந்தாகிப்
பொங்கிய தாரகை யாம்புலன் போக்கறத்
திங்கள் கதிரங்கி சேர்கின்ற யோகமே.

பொழிப்புரை :  முதற்கண் மூலாக்கினியை எழுப்பிப் பின் அவ்வக் கினியோடே சூரிய வட்டத்தில் தங்குகின்ற சந்திர கலையாகிய வாயு அங்ஙனம் ஓடித் தங்குதற்கு நாள்கள் பத்தாகிவிடப் பின் அவ்வக்கினி, நட்சத்திரங்களாகிய புலன் உணர்வு ஒழியும்படி சந்திர மண்டலத்தில் சென்று சேர்கின்ற யோக நாள்களே முற்பக்க நாள்களாம்.
==========================================
பாடல் எண் : 13
ஒன்றிய ஈரெண் கலையும் உடலுற
நின்றது கண்டும் நினைக்கிலர் நீசர்கள்
கன்றிய காலன் கருக்குழி வைத்தபின்
சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே.

பொழிப்புரை :  இங்குக் கூறிய இருவகைப் பக்கங்களின் படி வளர்ந்தும், தேய்ந்தும் நிற்கின்ற சந்திர கலை பதினாறும் அண்டத்தில் உள்ளது போலவே பிண்டத்திலும் பொருந்தி உள்ளதை உயர் நெறியில் வேட்கையில்லாதோர் நினைப்பதில்லை. அதனால், வாழ்நாளை வீணாளாக்கிய குற்றம்பற்றி அவர்கள்மேல் சீற்றங் கொள்கின்ற கூற்றுவன் அவர்களை இழிபிறப்பில் தள்ளியபின், அதிலே சென்று வீழ்ந்து மேல் ஏற வழியறியாது திகைத்தலையே அவர்கள் உடையராவார்கள்.
==========================================
பாடல் எண் : 14
அங்கி மதிகூட ஆகும் கதிரொளி
அங்கி கதிர்கூட ஆகும் மதியொளி
அங்கி சசிகதிர் கூடஅத் தாரகை
தங்கி அதுவே சகலமு மாமே.

பொழிப்புரை :  இடை நாடி வழியாகப் பூரிக்கப்படும் சந்திர கலையாகிய வாயு அக்கினி கலையாகிய சுவாதிட்டான கும்பகத்தில் முன்னர்ப் பொருந்தி நிற்பின், பின்னர் வல நாடி வழியாகப் பூரிக்கப்படும் சூரிய கலையாகிய வாயுவே அவ்வக்கினி கலையில் சென்று பொருந்துவதாகும். அவ்வாறே, சூரிய கலையாகிய வாயு முன்னர் சென்று அக்கினி கலையில் பொருந்தின், பின்னர் சந்திரகலையே அதன் கண் சென்று பொருந்துவதாகும். இவ்வாறு அக்கினி கலையில் சந்திர கலை, சூரிய கலை என்னும் இரண்டும் பொருந்திய பின்னரே, அதனை மூலாதாரத்திற் செலுத்துதலாகிய அந்த நட்சத்திர, கலை மூலா தாரத்தில் சென்று தங்கி, அதுவே அனைத்துக் கலைகளுமாய் அங்கு நிரம்பி நிற்கும்.
==========================================
பாடல் எண் : 15
ஈராறு பெண்கலை எண்ணிரண் டாண்கலை
பேராமற் புக்குப் பிடித்துக் கொடுவந்து
நேராகத் தோன்றும் நெருப்புற வேபெய்யில்
ஆராத ஆனந்தம் ஆனந்த மானதே.

பொழிப்புரை :  ``பன்னிரண்டு`` என வரையறுக்கப்பட்ட சூரிய கலைகள் பெண் கலைகள். ``பதினாறு`` என வரையறுக்கப்பட்ட சந்திர கலைகள் ஆண் கலைகள். இவைகளை இந்த அளவுகளில் குறையாமல் பூரித்து, மூலாக்கினி விளங்கும் இடமாகிய சுவாதிட்டானத்தில் கும்பித்தால், அவ்விடத்துத் தெவிட்டாது தோன்றுகின்ற இன்பம் பேரின்பமே.
==========================================
பாடல் எண் : 16
காணும் பரிதியின் காலை இடத்திட்டு
மாணும் மதியதன் காலை வலத்திட்டுப்
பேணியிவ் வாறு பிழையாமற் செய்வீரேல்
ஆணி கலங்காதவ் வாயிரத் தாண்டே.

பொழிப்புரை :  சூரிய கலையைப் பூரித்துப் பின் இடநாடி வழி இரேசித்தும், சந்திர கலையைப் பூரித்துப் பின் வலநாடி வழி இரேசித்தும் பிராணாயாமத்தை இவ்வாறு பன்முறை தவறாமல் போற்றிச் செய்வீராயின், ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும் உம் உடல் தளர்ச்சி யடையாமலே யிருக்கும்.
==========================================
பாடல் எண் : 17
பாலிக்கும் நெஞ்சம் பறையோசை ஒன்பதில்
ஆலிக்கும் அங்கே அமரர் பராபரன்
மேலைக்கு முன்னே விளக்கொளி யாய்நிற்கும்
காலைக்குச் சங்கு கதிரவன் தானே. 

பொழிப்புரை :  சிவன், யோகிகளது உள்ளத்திற்குத் தோன்றும்படி தருகின்ற தச நாதங்களில் சங்கொலி ஒழிந்த ஒன்பது நாதங்களாய் முதற்கண் அவர்கட்கு அநுபவப் படுவான். பின்பு மேலிடமாகிய ஆஞ்ஞையில் விளக்கொளி போலக் காட்சியளிப்பான். அஞ்ஞானம் ஆகிய இருள் நீங்கி ஞான ஒளி வெளிப்படுகின்ற நான்காம் சத்தி நிபாதமாகிய காலைப் பொழுதில் காலைச் சங்கொலியாயும், காலைக் கதிரொளியாயும் கேள்வியிலும், காட்சியிலும் அனுபவமாவான்.
==========================================
பாடல் எண் : 18 
கதிரவன் சந்திரன் காலம் அளக்கும்
பொதிரவ னுள்ளே பொழிமழை நிற்கும்
அதிரவன் அண்டப் புறஞ்சென் றடர்ப்ப
எதிரவன் ஈசன் இடமது தானே.

பொழிப்புரை :  சூரிய கலை சந்திர கலைகள் சரவோட்டத்தில் மக்களது வாழ்நாளைப் படிமுறையாகக் குறைத்து நிற்பன. உடல் அழியாது நிலைபெறும்படி பொழிகின்ற அமுத மழை, யோகத்தால் ஆற்றல் மிகுகின்றவனது உடலினுள்ளே நீங்காது நிலை பெற்றுள்ளது. பிராணாயாமத்தால் நாடிகள் மாற்றத்தை எய்தப்பெறுகின்ற யோகி, `அண்டம்` எனப்படுகின்ற தலைக்கு அப்பால் நிராதாரத்திற் சென்று அதனை ஒளி மண்டலமாகச் செய்ய, அவன் அங்குக் காண்பது சிவனது இருப்பிடத்தையே.
==========================================

பாடல்
எண் : 19 
உந்திக் கமலத் துதித்தெழுஞ் சோதியை
அந்திக்கும் மந்திரம் ஆரும் அறிகிலார்
அந்திக்கும் மந்திரம் ஆரும் அறிந்தபின்
தந்தைக்கு முன்னே மகன்பிறந் தானே.

பொழிப்புரை :  நாபித் தானத்தில் தோன்றிப் பின் மேல் ஓங்குகின்ற குண்டலி சத்தியைத் தலைப்படுதற்குரிய மந்திரத்தை அறிபவர் அரியர். அதனை அறிந்தால், தந்தைக்கு முன்னே மகன் பிறத்தலாகிய புதுமை காணப்படும்.