http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Thursday 29 November, 2012

திருமந்திரம்-தந்திரம்07: பதிகம் எண் :36. கூடா ஒழுக்கம் - பாடல்கள்: 016.




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

==============================================
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:01: ஆறாதாரம்..............பாடல்கள்: 008 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:02: அண்டலிங்கம்........பாடல்கள்: 014
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:03: பிண்டலிங்கம்........பாடல்கள்: 004 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:04: சதாசிவலிங்கம்.....பாடல்கள்: 023
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:05: ஆத்மலிங்கம்.........பாடல்கள்: 010 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:06: ஞான லிங்கம்.........பாடல்கள்: 010
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:07: சிவலிங்கம்.............பாடல்கள்: 005 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:08: சம்பிரதாயம்..........பாடல்கள்: 014
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:09: திருவருள்வைப்பு .பாடல்கள்: 005
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:10: அருளொளி..............பாடல்கள்: 009 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:11: சிவபூசை...................பாடல்கள்: 021  
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:12: குருபூசை..................பாடல்கள்: 010 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:13: மகேசுவரபூசை......பாடல்கள்: 009
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:14: அடியார்பெருமை ..பாடல்கள்: 015 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:15: போசன விதி...........பாடல்கள்: 002
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:16: பிட்சா விதி............. .பாடல்கள்: 006 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:17: முத்திரை பேதம்....பாடல்கள்: 010
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:18: பூரணக் குகைநெறிச் சமாதி. பாடல்கள்: 008 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:19: சமாதிக் கிரியை.....பாடல்கள்: 013
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:20: விந்துற்பனம்.......... .பாடல்கள்: 006 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:21: விந்துசயம்...............பாடல்கள்: 037
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:22: ஆதித்தநிலை.........பாடல்கள்: 010 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:23: பிண்டாதித்தன்......பாடல்கள்: 003
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:24: மனவாதித்தன்...... .பாடல்கள்: 005 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:25: ஞானாதித்தன்........பாடல்கள்: 008
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:26: சிவாதித்தன்............ பாடல்கள்: 004 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:27: பசு லக்கணம்-பிராணன்-பாடல்கள்: 002
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:28: புருடன்.......................பாடல்கள்: 004 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:29: சீவன்...........................பாடல்கள்: 004
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:30: பசு................................பாடல்கள்: 002 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:31: போதன.......................பாடல்கள்: 006
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:32: ஐந்திரியம் அடக்கும் அருமை .. பாடல்கள்: 008 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:33: ஐந்திரியம் அடக்கும் முறைமை .பாடல்கள்: 013
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:34: அசற்குரு நெறி......பாடல்கள்: 005 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:35: சற்குரு நெறி..........பாடல்கள்: 018
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:36: கூடா ஒழுக்கம்.....பாடல்கள்: 005 

============================================== 
தந்திரம் 7- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -036
கூடுதல் பாடல்கள்  (331+016 =347)

==============================================
ஏழாம் தந்திரம் - 36. கூடா ஒழுக்கம்– பாடல்கள்: 016
பாடல் எண் : 1
கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்
கண்காணி இல்லா இடம்இல்லை காணுங்கால்
கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களவொழிந் தாரே.

பொழிப்புரை :   அறிவில்லாதவர் `தங்களை உடன் இருந்து காவல் புரிபவன் எவனும் இல்லை` என்று தவறாகக் கருதிக் கொண்டு தவறான செயல்கள் பலவற்றைச் செய்கின்றனர். உண்மையை உணர்ந்தால் யாவரையும் உடன் இருந்து காவல் புரிகின்ற ஒருவன் எங்கும் இருக்கின்றான். அவன் இல்லாத இடம் இல்லை. (எனவே தவறு செய்பவர் அவனால் ஒறுக்கப்படுதல் திண்ணம்) எவ்விடத்திலும் நிறைந்து காவல் புரிகின்ற அவனை அங்ஙனம் காவல் புரிபவனாக அறிந்தோர் யாவரும் தவற்றை ஒரு ஞான்றும் செய்யாது ஒழிந்திருக்கின்றனர்.
=======================================
பாடல் எண் : 2
செய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப்
பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள்
மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன்
மைதாழ்ந் திலங்கு மிடறுடை யோனே.  

பொழிப்புரை :   `செழுங்கடல் வட்டத்து நிகழ்வனவற்றை அவற்றைச் செய்தான் அறியும்` எனக் கூட்டுக.  ஏனைய வெளிப்படை.
குறிப்புரை :  `நிகழ்வனவற்றை` என்பது சொல்லெச்சம். பொய்யினது இழிவைப் புலப்படுத்தற்கு, `பேசும் மனிதர்கள்` என்னாது, ``புலம்பும் மனிதர்கள்`` என்றார். ``செய்தான்`` என்றது, `எதன் பொருட்டுப் படைத்தானோ அதன் பொருட்டாகவே ஒழுகு வோரையும் அவ்வாறின்றி யொழுகுவோரையும் அவன் நோக்கி யிருந்து அவரவர்க்குத் தக்க பயனைத் தருவான்` என்னும் குறிப்பினது. பின்னர், ``மைதாழ்ந்திலங்கு மிடறுடையோன்`` என்றமையால், முன்னர், ``செய்தான்`` என்றதும் அவனையேயாயிற்று. `நல் லொழுக்கத்தினாலே நற்பயன் பெறுதல் கூடுவதாய் இருக்க அதனை விடுத்துத் தீயொழுக்கத்தில் ஒழுகுதல் அறியாமை` என்பது கருத்து. மெய்யுரைப்பார்க்குச் சுவர்க்கத்தைத் தருதல் கூறுமுகத்தால் பொய்யுரைப்பார்க்கு நரகத்தைத் தருதல் உணர்த்தப்பட்டது.   இதனால், `ஞான நெறியில் நிற்பார்க்குப் பொய்யுரைத்தல் சிறிதும் ஆகாது` என்பது கூறப்பட்டது.
=======================================
பாடல் எண் : 3
பத்திவிற் றுண்டு பகலைக் கழிவிடும்
மத்தகர்க் கன்றோ மறுபிறப் புள்ளது
வித்துக்குற் றுண்டு விளைபுலம் பாழ்செய்யும்
பித்தர்கட் கென்றும் பிறப்பில்லை தானே.

பொழிப்புரை :   சற்குரு அருளால் ஞானம் பெற்றவர்கட்கும் மறு பிறப்பு உண்டு` எனக் கூறுதல் அதன் பின்பும் பத்திச் செய்கைகளைத் தமக்கு விருப்பமின்றி உலகத்தார் பாராட்டுதற் பொருட்டே செய்து அதனால் புகழும் பொருளும் பெற்றுக் காலத்தைக் கழிக்கின்ற அந்தப் பித்தர்களுக்கேயாம். அவ்வாறின்றிப் புகழ் பொருள் முதலியவற்றுள் ஒன்றையும் விரும்பாது பத்திச் செய்கைகளைத் தமது அன்பானே செய்து ஒழுகுமாற்றால் மறுபிறப்பாகிய பயிருக்கு வித்தாய் அமைகின்ற ஆகாமிய வினையை வித்தைக் குற்றியுண்பார்போல வலுத்து நில்லாதபடி அழித்து, மறுபிறப்பாகிய பயிர் விளைக்கின்ற நெறியைப் பாழாய்க் கிடக்கும்படி செய்கின்ற அந்தப் பித்தர்களுக்கு ஒருஞானறும் மறுபிறப்பு உண்டாதல் இல்லை.
=======================================
பாடல் எண் : 4
வடக்கு வடக்கென்பர் வைத்ததொன் றில்லை
நடக்க உறுவரே ஞானம் இலாதார்
வடக்கில் அடங்கிய வையகம் எல்லாம்
அகத்தில் அடங்கும் அறிவுடை யோர்க்கே.  

பொழிப்புரை :   குருவருளைப் பெற்றபின்னும் இறைவனை எவ்விடத்தும் ஒருபெற்றியாகவே உணர்ந்து அவனது திருவருளில் மூழ்கி நிற்றலாகிய ஞானத்தில் ஞானமாம் அசைவிலா நிட்டை நிலையை எய்த மாட்டாதவரே அவனைக் காலம், இடம் முதலிய, சிறப்புக்கள் காரணமாக ஏகதேசமாக உணர்ந்து அவ்வாற்றான் வழிபடும் வழிபாடுகளை நிறைவேற்ற முயல்வர். மேற்கூறிய அந்த நிட்டை நிலையை எய்தினார்க்கு எவ்விடத்தும், எக்காலத்தும் இறை யருட் சிறப்பு அவரது ஞானத்தினுள்ளே இனிது விளங்கியே நிற்கும்.
=======================================
பாடல் எண் : 5
காயக் குழப்பனைக் காயநன் னாடனைக்
காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத்
தேயத்து ளேஎங்கும் தேடித் திரிவார்கள்
காயத்துள் நின்ற கருத்தறி யாரே.

பொழிப்புரை :   காயக் குழப்பன் - உயிர்களின் உடம்புகளை அவற்றின் வினைக்கேற்ப உழல் விப்பவன். காயநன்னாடன் - உயிர்க்கு உயிராய் நிற்றலால் உயிர்களின் உடம்புகளைத் தனது இடமாக உடையவன். காயத்தினுள்ளே கமழ்தல் - ``உற்ற ஆக்கையின் உறுபொருளாய் நறுமலர் எழுதரு நாற்றம்போல்`` (தி.8 அதிசயப்பத்து, 9) உள்நோக்கி உணர்வார்க்கு நுண்ணிய இனிய பொருளாய் வெளிப்படுபவன்.
ஏனைய வெளிப்படை.
=======================================
பாடல் எண் : 6
கண்காணி யாகவே கையகத்தே எழும்
கண்காணி யாகக் கருத்துள் இருந்திடும்
கண்காணி யாகக் கலந்து வழிசெய்யும்
கண்காணி யாகிய காதலன் றானே.

பொழிப்புரை :   உயிர்களின் கண்ணைத் தன் இடமாகக் கொண்டு அவற்றிற்கு அக்கண்போலச் சிறந்து நிற்கின்ற இறைவன் ஞானிகட்கு அவர்தம் புறக் கண்ணிற்குப் புலனாகின்றவனாகியும் இனிது விளங்கு வான்.அகக்கண்ணிற்குப் புலனாகின்றவனாகியும் இனிது விளங்கு வான். ஆகையால் அவர்களது செயல்திறங்களை இடைவிடாது நோக்கி அவற்றிற்கு ஏற்ற பயனை அருளுதல் அவனுக்கு இயல்பாகும்.
=======================================
பாடல் எண் : 7
கன்னி ஒருசிறை கற்றோர் ஒருசிறை
மன்னிய மாதவம் செய்தோர் ஒருசிறை
தன்னியல் புன்னி யுணர்ந்தோர் ஒருசிறை
என்னிது ஈசன் இயல்பறி யாரே.

பொழிப்புரை :   திருவருட்சத்தி பதிவு எல்லோர்க்குமன்றி ஒரு சிலர்க்கே உண்டாவதால் உண்மை நூல்களை ஓதுதலை சிலர் செய்தும், மற்றும் சிலர் சிவனைக் கிரியா முறையில் வழிபடுதலைச் செய்தும், மற்றும் சிலர் யோகம் புரிதலைச் செய்தும் மற்றும் சிலர் சிவனது உண்மை நிலையைக் கேட்டல் சிந்தித்தல் தெளிதல்களால் உணர் தலைச் செய்தும் நிற்கின்றனர். ஆகவே, மிகப்பலர் இவற்றுள் ஒன்ற னையும் செய்யாது சிவவேடத்தை மட்டும் புனைந்து கொண்டு திரி கின்றனர். இஃது என்ன முறைமை!
=======================================
பாடல் எண் : 8
காணா தவர்கண்ணில் படலமே கண்ணொளி
காணா தவர்கட்குக் காணாத தவ்வொளி
காணா தவர்கட்கும் கண்ணாம் பெருங்கண்ணைக்
காணாது கண்டார் களவொழிந் தாரே.

பொழிப்புரை :   முகக்கண்கள் புறப்பொருளைக் காணுதல் இயல் பாயினும் சில கண்கள் அப்பொருள்களைக் காணமாட்டாதன ஆதற்குக் காரணம் அக்கண்ணில் ஒளிக்கு மாறாகப் படலம் இருப்பதே யாகும். இனி முகக்கண் உடையார்க்கே யன்றி அக்கண் இல்லா தவர்க்கும் அகக்கண்ணாகிய அறிவுக்கு அறிவாய் உள்ள பேரறிவாம் சிவ ஒளியைத் தற்போத வழியாற் காணாது அருள் வழியாகக் கண்டவரே கள்ளத்தனமாகச் செய்யும் செயல்களைச் செய்யாது ஒழிவர். அந்தச் சிவ ஒளி அகக்கண்ணாகிய ஞானக் கண் இல்லா தவர்க்குக் காணப்படாத ஒன்றேயாய் இருக்கும்.
=======================================
பாடல் எண் : 9
பித்தன் மருந்தால் தெளிந்து பிரகிருதி
உய்த்தொன்று மாபோல் விழியுந்தன்கண்ணொளி
அத்தன்மை யாதல்போல் நந்தி அருள்தரச்
சித்தம் தெளிந்தேன் செயலொழிந் தேனே.

பொழிப்புரை :   பித்துக் கொண்டவன் அதற்காக மருத்துவன் தரும் மருந்தால் பித்து நீங்கித் தெளிவுற்று உடம்பை முன்போலத் தறிகெட்ட நிலையில் செலுத்திக் கெடுக்காமல் இயற்கை நிலையில் செலுத்தி ஏனையோர் குழாத்தில் தானும் ஒருவனாய் ஒன்றுபடுதலைப் போலவும், படலத்தால் மறைக்கப்பட்ட கண்ணும் அவ்வாறே மருத்துவன் செய்யும் சிகிச்சையால் படலம் நீங்கித் தனது ஒளி கிடைக்கப் பெறும் அத்தன்மையைப் போலவும் அஞ்ஞானத்தால் அறிவு மயங்கி, `யான், எனது` எனச் செருக்கித் திரிந்த யான் எம் ஆசிரியாராகிய நந்திபெருமான் ஞானத்தை அருளியதனால் அறிவு தெளிந்து செருக்கொழிந்து அருள் வழியில் ஒழுகி ஏனைய அருளாளரது குழாத்தில் சேர்ந்து அவர்களில் ஒருவன் ஆயினேன்.
=======================================
பாடல் எண் : 10
பிரான்மய மாகப் பெயர்ந்தன எட்டும்
பராமய மென்றெண்ணிப் பள்ளி உணரார்
சுராமய முன்னிய சூழ்வினை யாளர்
நிராமய மாக நினைப் பொழிந் தாரே.

பொழிப்புரை :   கள்ளை மிக உண்டலால் உடல் அக்கள்மயமே யாய் இருத்தலை விரும்பும் வஞ்சமனத்தவர் ஞானிகட்குச் சிவமயமாகத் திகழ்கின்ற உலகப் பகுதி எட்டினையும் அருள்மயமாக எண்ணி அடங்குதலாகிய ஞானவிழிப்பைக் கொள்ளாது அஞ் ஞானத்தில் உறங்குவோராய்த் தாம் குற்றம் சிறிதும் இல்லாத தூயராய் இருத்தல் வேண்டும் என்பதைச் சிறிதும் நினையாதே கெடுகின்றனர்.
=======================================
பாடல் எண் : 11
ஒன்றிரண் டாகிநின் றொன்றிஒன் றாயினோர்க்(கு)
ஒன்றும் இரண்டும் ஒருகாலும் கூடிடா
ஒன்றிரண் டென்றே உரைதரு வோர்க்கெலாம்
ஒன்றிரண் டாய்நிற்கும் ஒன்றோடொன் றானதே.

பொழிப்புரை :   `பலவாய் உள்ள உயிர் ஒன்றாய் உள்ள சிவத்தோடு இரண்டறக் கலத்தலே முடிநிலைப் பயன்` என்பது எல்லோர்க்கும் உடன்பாடு. ஆயினும், ஒரு பொருளாய் உள்ள பிரமமே அவிச்சை யால் பலவாய் உள்ள உயிர்களாக மயங்கி அறியப்பட்டு, அவிச்சை நீங்கியவுடன் உயிர் முன்போல ஒரு பொருளாகிய பிரமத்தோடு ஒன்றாய்விடும் எனக் கூறுகின்றவர்கள் அவிச்சைக்குக் காரணம் கூறாமையால் உயிர் பிரமமேயான நிலைநிலைத்தல் இன்றிப் பிரமமும் உயிரும் வேறு வேறாய் நிற்கும் அவிச்சை நிலையே நிலைபெறுவ தாகும். ஆகவே அவர்கட்கு இரண்டும் ஒன்றாகும் நிலை என்றும் கிட்டுவதின்றாம் இனி `ஒன்றாகிய பரமனும், பலவாகிய உயிர்களும் என்றும் வேறு வேறாக இருத்தல் அன்றி, ஒன்றாதல் இல்லை` எனக் கூறுவார்க்கு அவ்வாறு நிற்றலே பயனாவதன்றி, முதற்கண் கூறிய முடிநிலைப் பயன்கிட்டாதாம்.
=======================================
பாடல் எண் : 12
உயிரது நின்றால் உணர்வெங்கு மாகும்
அயரறி வில்லையால் ஆருடல் வீழும்
உயிரும் உடலும் ஒருங்கிக் கிடக்கும்
பயிரும் கிடந்துள்ளப் பாங்கறி யாரே.

பொழிப்புரை :   உயிர் உடம்பில் இருப்பதனால்தான் அந்த உடம்பு முழுதிலும் அறியுந்தன்மை காணப்படுகின்றது. (அத் தன்மையால் உடல் வீழ்ந்தொழியாது வாழ்ந்து செயற்படுகின்றது) உயிர் உடலை விட்டு நீங்கினால் உடலைச் செயற்படுத்துகின்ற அந்த அறிவு இல்லையாய்விடும். அறிவு இல்லையானால், வேறு எல்லா அமைப்புக்களும் நிறைந்துள்ள உடம்பு அவ்வமைப்பால் பயனின்றி வீழ்ந்து அழியும். ஆகவே `உயிர்` எனப்படுவது உடம்பிற்கு வேறாதல் தெளிவாகலின் அத்தகைய உயிரும் உடம்பும் ஒன்றி நிற்கும் பயப்பாடு வெள்ளிடை மலைபோல் விளங்கிக் கிடக்கவும் சிலர் உடம்பையே தாமாக மயங்கிக் கூடா ஒழுக்கத்தினை மேற்கொள்கின்றனர்.
=======================================
பாடல் எண் : 13
உயிரது வேறாய் உணர்வெங்கு மாகும்
உயிரை அறியின் உணர்வறி வாகும்
உயிரன் றுடலை விழுங்கும் உணர்வை
அயரும் பெரும்பொருள் ஆங்கறி யாரே.

பொழிப்புரை :   உயிர் உடம்பு போல அன்றி அதனின் வேறாய் இருத்தலால்தான் அந்த உடம்பு முழுதும் அறிவுத் தன்மை காணப் படுகின்றது. இதனை ஆய்ந்தறியும் அறிவே மெய்யறிவாகும். உயிர் தான் உடம்போடு சேர்ந்த அன்று முதலாக உடம்பு முழுவதையும் தனது அறிவால் அகப்படுத்தி ஆண்டு வருகின்ற அந்தச் செயலை அவ் வுயிர்க்கு உயிராய் நின்று செய்து வருகின்ற ஒரு பெரும் பொருளை அறிபவர் உலகத்தில் ஒரு சிலரே.
=======================================
பாடல் எண் : 14
உலகாணி ஒண்சுடர் உத்தம சித்தன்
நில ஆணி ஐந்தனுள் நேருற நிற்கும்
சிலஆணி யாகிய தேவர் பிரானைத்
தலைவாணி செய்வது தன்னை யறிவதே.

பொழிப்புரை :   அனைத்துலகங்களின் தொகுதியாகிய தேரினை நிலைபெறச் செய்கின்ற அச்சாணியாய் உள்ளவன் ஒளியாய் உள்ள அனாதி முத்தனாகிய சிவனே. அவன் நிவிர்த்தி முதலிய ஆதார கலைகள் ஐந்திலும் நுண்ணியனாய் நிறைந்து நிற்கின்றான். அவ் வைந்து கலைகளுக்கு உட்பட்டுள்ள இடங்களில் சிற்சிலவற்றிற்குத் தலைவராய், `தேவர்` எனப்பெயர் பெற்று விளங்கும் அனைவர்க்கும் தலைவனாய் உள்ள அந்தப் பெருமானையே ஒருவன் தன் தலைமேல் வைத்து ஒழுகுவானாயின், அவன் அவ்வாறு ஒழுகுதலே தனது இயல்பை உள்ளவாறு அறிந்துஒழுகும் ஒழுக்கமாகும்.
=======================================
பாடல் எண் : 15
தானந்த மாமென நின்ற தனிச் சுடர்
ஊனந்த மாய்உல காய்நின்ற ஒண்சுடர்
தேனந்த மாய்நின்ற சிற்றின்பம் நீஒழி
கோனந்த மில்லாக் குணத்தரு ளாமே.

பொழிப்புரை :   மாணவகனே, நீ `எல்லாவற்றையுங் கடந்துவிட்ட எனக்கு இனி அறம் பாவங்கள் எங்குள` எனச் செருக்கி, தேன் துளியால் வரும் இன்பம்போல மிகச்சிறியன வாய்ப் பெறப்படுகின்ற சிற்றின்பத்தைப் பெறும் செயலை அறவே ஒழி. அவ்வாறு ஒழித்தால்தான் சிவனது அளவில்லாத இன்பத்திற்கு ஏதுவாகிய அவனது அருள் முற்றக் கிடைக்கும்.
=======================================

பாடல் எண் : 16
உன்முத லாகிய ஊன்உயிர் உண்டெனும்
கன்முதல் ஈசன் கருத்தறி வார்இல்லை
நன்முதல் ஏறிய நாமம் அறநின்றால்
தன்முத லாகிய தத்துவம் ஆமே.

பொழிப்புரை :   ``காட்சியால்`` உணரப்படும் உடம்பேயன்றிக் கருதலால் உணரப்படும் உயிரும் உடம்பினுள்ளே உண்டு என்னும் உண்மையையும், `அவ்வுயிருக்குத் தலைவராகச் சொல்லப்படுவோர் பலருள்ளும் கயிலைக் கடவுளாகிய சிவனே முழுமுதல் தலைவன்` என்னும் உண்மையையும் அறிகின்றவர் உலகத்து அரியர். இனி அவ் வுண்மையை உணர்ந்தவர்களும் அவற்றை உணர்வதற்குமுன் கொண்டிருந்த ஆசை வழிப்பட்ட செயல்களை முற்றவிடுத்தால்தான், ஓர் உயிரும் எஞ்சாதபடி ஒவ்வொன்றிற்கும் முதலாய் உள்ள மெய்ப் பொருளின் விளக்கம் நிரம்ப உண்டாகும்.
=======================================
 


மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!