http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Sunday 20 May, 2012

திருமந்திரம்-தந்திரம்04: பதிகம் எண் :08/1. ஆதார ஆதேயம் (பாடல்கள்:01-25/100) பாகம் I








 


பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
================================================================== 

நான்காம் தந்திரம்:பதிக எண்:01: அசபை ............................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:02: திருவம்பலச் சக்கரம் ...பாடல்கள்: 089
நான்காம் தந்திரம்:பதிக எண்:03: அருச்சனை........................பாடல்கள்: 012
நான்காம் தந்திரம்:பதிக எண்:03: அருச்சனை.....................பாடல்கள்: 012
நான்காம் தந்திரம்:பதிக எண்:04: நவகுண்டம்....................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:05: சத்தி பேதம்....................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:06: வயிரவி மந்திரம்..........பாடல்கள்: 050
நான்காம் தந்திரம்:பதிக எண்:07: பூரண சத்தி....................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:08: ஆதார ஆதேயம்........பாடல்கள்: 100
======================================================(271+100=371)

நான்காம் தந்திரம்-பதிகம் எண்:08/1. ஆதார ஆதேயம் 
(பாடல்கள்:01-25/100) பகுதி-I


பாடல் எண் : 1
நாலிதழ் ஆறில் அவிர்ந்தது தொண்ணூறு
நாலித ழானவை நாற்பத்து நாலுள
பாலித ழானஅப் பங்கய மூலமாய்த்
தானித ழாகித் தரித்திருந் தாளே.

பொழிப்புரை :   நான்கு இதழ்களையுடைய தாமரையாகிய மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களில் சுத்த தத்துவம் ஐந்தும், புருடன் ஒன்றும் தவிர, ஏனையதத்துவ தாத்துவிகங்கள் தொண்ணூறும் அடங்கி நிற்கின்றன. இடைநான்கு ஆதாரத்தின் தாமரைகளில் நாற்பத்து நான்கு இதழ்கள் உள்ளன. இரண்டிதழ்களையுடைய அந்த ஆஞ்ஞைத் தாமரைக்கு அடியாயுள்ள ஏனைய ஆதாரத் தாமரைகளாய் நின்று அந்த ஆஞ்ஞையைத் தாங்கியும், அவ் ஆஞ்ஞைத் தாமரையாய் நின்று அதன்கண் விளங்கும் தியானப்பொருளைத் தாங்கியும் அருள் புரிகின்றாள் சத்தி.
===============================================

பாடல் எண் : 2
தரித்திருந் தாள்அவள் தன்னொளி நோக்கி
விரித்திருந் தாள்அவள் வேதப் பொருளை
குறித்திருந் தாள்அவள் கூறிய ஐந்தும்
மறித்திருந் தாள்அவள் மாதுநல் லாளே.

பொழிப்புரை :   சத்தி அனைத்துயிர்க்கும் தாயாகலின் அவள் மேற் கூறியவாறு ஆதார பங்கயங்களின் ஆதாரமும், ஆதேயமுமாய் நிற்றல் தனது ஒளியுருவை யோகியர் காணுதல் குறித்தும், கலைஞானத்தை மிகத்தந்தும், ஐம்புல ஆசைகளின் கொடுமையைக் கண்டு அதனைத் தடுத்துக் கொண்டுமாம்.
===============================================

பாடல் எண் : 3
மாதுநல் லாளும் மணாளன் இருந்திடப்
பாதிநல் லாளும் பகவனும் ஆனது
சோதிநல் லாளைத் துணைப்பெய்ய வல்லிரேல்
வேதனை தீர்தரும் வெள்ளடை யாமே.

பொழிப்புரை :   சத்தி தனது மணாளனாகிய சிவன் ஒருபோதும் தன்னைவிட்டு நீங்காதிருத்தலினாலே ஒரு பாதியே தானாய், மற்றொரு பாதி அச்சிவனாய் இருக்கின்றாள். (இந்நிலை எக்காலத்தும் வேறு படுதல் இல்லை என்றபடி) அத்தன்மையை உடைய ஒளி வடிவி னளாகிய அவளைத் துணையாக உங்கள் உள்ளத்தில் இருத்த வல்லீராயின், எல்லாத் துன்பமும் நீங்கும்; வெளுக்கப்பட்ட ஆடைபோல் ஆன்மா மும்மலங்களும் நீங்கத் தூயதாய் விளங்கும்.
===============================================

பாடல் எண் : 4
வெள்ளடை யான்இரு மாமிகு மாமலர்க்
கள்ளடை ஆரக் கமழ்குழ லார்மனம்
மள்ளடை யானும் வகைத்திற மாய்நின்ற
பெண்ணொரு பாகன் பிறவிபெண் ணாமே.

பொழிப்புரை :   கருவி கரணங்கள் சென்று பற்றும் வகையில் வெளி நில்லாதவனும், கரிய வண்டுகள் மொய்க்கின்ற மலர்களின் தேன் பொருந்தி நிரம்புதலால் நறுமணம் கமழ்கின்ற கூந்தலையுடைய மகளிரால் மனம் வருந்துதல் இல்லாதவனும் ஆகிய சிவன், அத் தன்மையனாயினும், சிலபொழுது தனது கூறேயான ஒரு பெண்ணைத் தன் உடம்பில் ஒருபாதியில் கொண்டவனாய்க் காணப்படுதலும், சிலபொழுது பெண்ணேயாய்க் காணப்படுதலும் உடையன்.
===============================================

பாடல் எண் : 5
பெண்ணொரு பெண்ணைப் புணர்ந்திடும் பேதைமை
பெண்ணிடை ஆணும் பிறந்து கிடந்தது
பெண்ணிடை ஆணின் பிறப்பறிந் தீர்க்கின்ற
பெண்ணுடை ஆணிடைப் பேச்சற்ற வாறே.

பொழிப்புரை :   ஒரு பெண் மற்றொரு பெண்ணோடு புணர்தலால் பயனின்மையின் அங்ஙனம் புணர்தல் பேதமைச் செயலாதல் தெளியப்பட்டதாயினும், அச்செயலால் ஆண் ஒன்று பிறந்த பயன் ஓரிடத்தில் காணப்படுகின்றது (இஃது அதிசயம்) இனி, புணரப்பட்ட அப் பெண்ணிடத்தினின்றும் பிறந்த அந்த ஆணின் உண்மையை உணர்ந்து, யாவரையும் அந்த ஆணினிடத்தே ஈர்த்து வைக்கின்ற அந்தப் பெண்ணைத் துணைவியாக உடைய அந்த ஆணின்பக்கல் அந்தப் பெண் ஈர்த்தவாறே சென்று அடைவதே, `இஃது இயற்கைக்கு மாறாய் இயலாததொன்றாம்` என்று பேசும் பேச்சு அற்றொழிதற்கு வழியாம்.
===============================================

பாடல் எண் : 6
பேச்சற்ற நற்பொருள் காணும் பெருந்தகை
மாச்சற்ற சோதி மனோன்மனி மங்கையாம்
காச்சற்ற சோதி கடவு ளுடன்புணர்ந்
தாச்சற்றெ னுட்புகுந் தாலிக்குந் தானே.

பொழிப்புரை :   சொல்லற்ற இடத்தில் நிற்கும் தலைவனாகிய சிவன் குற்றம் அற்ற ஒளிப்பொருள். துணைவியாகிய சத்தியும் அங்ஙனம் குற்றம் அற்ற ஒளிப்பொருளே. ஆயினும் சத்தியே சிவத்துடன் வந்து குற்றம் அற்ற என்உள்ளத்தில் புகுந்து ஆரவாரிக்கின்றாள்.
===============================================

பாடல் எண் : 7
ஆலிக்குங் கன்னி அரிவை மனோன்மனி
பாலித் துலகில் பரந்துபெண் ணாகும்
வேலைத் தலைவியை வேத முதல்வியை
ஓலித் தொருவன் உகந்துநின் றானே.

பொழிப்புரை :   என் உள்ளத்தில் புகுந்து ஆரவாரிக்கின்ற கன்னிப் பெண்ணாகிய சத்தி பெண் தன்மையை உடையளாய் உலகெங்கும் நிறைந்து உலகினைப் பாதுகாத்து நிற்பாள். உலகத்தலைவியும், வேதங்களால் குறிப்பிடப்படும் முதல்வியுமாகிய அவளை வேதங்களும் காணமாட்டாது ஓலமிட்டு நிற்கின்ற சிவன் யாண்டும் பிரியாதே கூடி நிற்கின்றான்.
===============================================

பாடல் எண் : 8
உகந்துநின் றான்நம்பி ஒண்ணுதற் கண்ணோ
டுகந்துநின் றான்நம் முழைபுக நோக்கி
உகந்துநின் றான்இவ் வுலகங்க ளெல்லாம்
உகந்துநின் றான்அவ டன்றோ டொகுத்தே.

பொழிப்புரை :   நம்பியாகிய சிவன் காமனை எரித்த நெற்றிக் கண்ணோடு நின்றே மேற்கூறிய நங்கையாகிய வேத முதல்வியை விரும்பி நின்றான். பின்பு அவளது தோள்களைத் தன் தோளோடு ஒன்றாகும்படிச் சேர்த்து மகிழ்ந்து நின்றான். இவை முறையே அவன் உயிர்களாகிய நம்மிடம் வருதல் குறித்தும் அனைத்து உயிர்களுக்கும் போகத்தைத் தருதல் குறித்துமாம்.
===============================================
பாடல் எண் : 9
குத்து முலைச்சி குழைந்த மருங்கினள்
துத்தி விரிந்த சுணங்கினள் தூமொழி
புத்தகச் சீறடிப் பாவை புணர்வினைத்
தொத்த கருத்தது சொல்லகி லேனே.

பொழிப்புரை :   சத்தி பெண்ணியல்புகள் பலவும் தோன்ற நின்று சிவனை மணந்ததில் உள்ள கருத்து சொல்லுதற்கரிதாம்.
===============================================

பாடல் எண் : 10
சொல்லவொண் ணாத சுடர்ப்பொதி மண்டலம்
செல்லவொண் ணாது திகைத்தங் கிருப்பர்கள்
வெல்லவொண் ணாத வினைத்தனி நாயகி
மல்லவொண் ணாத மனோன்மனி தானே.

பொழிப்புரை :   அருள் ஒளி மண்டலம் உயிர்களது சொல்லுக்கு எட்டாதது. அதனால், அங்குச் செல்லமாட்டாது பலரும் திகைத்து நிற்கின்றார்கள். அம்மண்டலமாவாள் பிறரால் கடத்தற்கரிய செயல்களை உடையவளும், வலிந்து பற்றிக் கொள்ளவாராதவளும் ஆகிய சத்தியே.
===============================================

பாடல் எண் : 11
தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்
தானே சுடும்அங்கி ஞாயிறுந் திங்களும்
தானே மழைபொழி தையலுமாய் நிற்கும்
தானே வடவரை தண்கடற் கண்ணே.

பொழிப்புரை :   (இதன் பொருள் வெளிப்படை)
குறிப்புரை :  ``தான்`` என்றது சத்தியை. தாங்குதல், இடந்தருதல். மழை பொழி தையல், கங்காதேவி. எனவே, கங்கையை உமைக்கு மாற்றாள்போல வைத்துச் சொல்வனவெல்லாம் செய்யுளின்பம் படக்கூறும் கூற்றேயாதல் தெளியப்படும். வடவரை - மேருமலை. தலைமை பற்றி இதனைக் கூறவே பிறமலைகளும் கொள்ளப்படும். ``கண்`` என்பது, `இடம்` எனப் பொருள்தரும் பெயர்ச்சொல். எனவே, ``கடற்கண்`` என்பது இருபெயரொட்டாயிற்று. `தண்கடலாகுமே` என்பதும் பாடம்.  இதனால், சத்தி ஆதராமாய் நிற்கும் வகைகள் சில கூறப்பட்டன. மழை பொழி தையலாய் நிற்றல் உயிர்கள் அழியாதவாறு நிறுத்தலாம். இதனுள் ``தான்`` என்றதனைச் சிவத்திற்கு ஆக்கி, சிவபரத்துவ அதிகாரத்திலும் இம்மந்திரத்தை, ``பொன்னாற் புரிந்திட்ட`` என்னும் மந்திரத்தின்பின் ஒருமுறை ஓதுவாரும் உளர்.

===============================================

பாடல் எண் : 12
கண்ணுடை யாளைக் கலந்தங் கிருந்தவர்
மண்ணுடை யாரை மனித்தரிற் கூட்டொணா
பண்ணுடை யார்கள் பதைப்பற் றிருந்தவர்
விண்ணுடை யார்களை மேலுறக் கண்டே.

பொழிப்புரை :   எவ்விடத்தையும் தனதாக உடைய சத்தியைக்கூடி அவளுடன் எங்கும் வியாபகமாய் நின்ற அறிவர் சிவத்தன்மை பெற்றவர்; சீவத் தன்மையாகிய முனைப்பு நீங்கியவர். அதனால் பர வெளியில் நிற்பவராகிய அவரை மிக்க மேன்மை உடையவராக அறிந்து, மண்ணில், வாழ்பவராகிய மனிதரில் வைத்து எண்ணாதொழிதல் வேண்டும். (`விண்ணில் வாழும் கடவுளரில் வைத்து எண்ணல் வேண்டும்` என்றபடி).
===============================================

பாடல் எண் : 13
கண்டெண் டிசையும் கலந்து வருங்கன்னி
பண்டெண் டிசையும் பராசத்தி யாய்நிற்கும்
விண்டெண் டிசையும் விரைமலர் கைக்கொண்டு
தொண்டெண் டிசையும் தொழநின்ற கன்னியே.

பொழிப்புரை :   எல்லா உலகங்களையும் நினைவு மாத்திரத்தாலே உண்டாக்கி, அவை அனைத்திலும் நிறைந்து நிற்கின்ற சத்தி, அதற்கு முன்னே அவ்வுலகங்களைக் கடந்து நின்ற ஒரு சத்தியாய் இருப்பாள். அதனால், எட்டுத்திக்கில் உள்ளாரும் தாம் தாம் தமக்கு ஏற்ற பெற்றியால் மணம் பொருந்திய மலர்களைக் கையிலே கொண்டு தோத்திரங்களைச் சொல்லித் தொண்டுபட்டு அம்மலர்களைத் தூவித் தொழுகின்ற தேவி அப்பராசத்தியே யாவாள்.
===============================================

பாடல் எண் : 14
கன்னி யொளியென நின்றஇச் சந்திரன்
மன்னி யிருக்கின்ற மாளிகை செந்நிறம்
சென்னி யிருப்பிடம் சேர்பதி னாறுடன்
பன்னி யிருப்பப் பராசத்தி யாமே.

பொழிப்புரை :   இறைவி அழியாத ஒளி வடிவாய் நிற்கும் இடம் இது போலும் பிறைவடிவம் பொருந்தியிருக்கின்ற ஆஞ்ஞைத்தானமாம். அது சிவந்த நிறத்தை உடைய தாமரை மலர் வடிவும் உடையது. அவள் தலையாகிய இருப்பிடத்தில், நிரம்பிய பதினாறு கலைகளையுடைய சந்திரனோடு கூடியிருக்கும் பொழுது பராசத்தியாய் விளங்குவாள்.
===============================================

பாடல் எண் : 15
பராசத்தி என்றென்று பல்வகை யாலும்
தராசத்தி யான தலைப்பிர மாணி
இராசத்தி யாமள ஆகமத் தாள்ஆங்
குராசத்தி கோலம் பலஉணர்ந் தேனே.

பொழிப்புரை :   `பராசத்தி` என்றே பல வகையிலும் பன்முறை துதிக்கப்பட்டு எல்லாவற்றிற்கும் ஆதார சத்தியாய் நிற்கின்ற, வேதத்தின் வழி அறியப்படுகின்ற அவளே முழுமுதற் சத்தியாம். அவளை யாமள ஆகமம் பலபடக் கூற, அவ்வாறும் பல்கி நின்ற அவளது பல கோலங்களையும் யான் அவளது அருளாலே அறிந்தேன்.
===============================================

பாடல் எண் : 16
உணர்ந்துல கேழையும் யோகினி சத்தி
உணர்ந்துயி ராய்நிற்கும் உன்அதன் ஈசன்
புணர்ந்தொரு காலத்துப் போகம(து) ஆதி
இணைந்து பரமென் றிசைந்திது தானே.

பொழிப்புரை :   சிவன் தனது சங்கற்ப மாத்திரையானே தோற்று வித்த ஏழு உலகங்களையும், அவ்வுலகத்தோடே பொருந்துவதாகிய சத்தி,  தான் அறிந்து, அவற்றிற்கு உயிராய், அவைகளோடு கலந்து நிற்கும். அங்ஙனம் நிற்கின்ற அச்சத்திக்குச் சத்தனாய் நிற்கின்ற இறைவன் அச்சத்தியை மணந்த பொழுதே உயிர்கட்குப் போகம் அமையும். அச்சிவத்தோடு இணைந்து நின்ற இச்சத்தியே உலகிற்குத் தலைமையாவது.
===============================================

பாடல் எண் : 17
இதுவப் பெருந்தகை எம்பெரு மானுள்
பொதுவக் கலவியுள் போகமு மாகி
மதுவக் குழலி மனோன்மனி மங்கை
அதுவக் கலவியுள் ஆயுழி யோகமே.

பொழிப்புரை :   `போகத்தைத் தருவது` என மேற்கூறப்பட்ட இம்மறைப்புச் சத்தி சிவனுடன் உயிர்கட்கெல்லாம் பொதுவாயுள்ளபோகக் கலப்பில் நின்று போகத்தைத் தந்து `அருட்சத்தி` என்னும் அந்தச் சத்தியாய் அச்சத்திக்கும் சிவத்திற்குமே சிறப்பாய் உள்ள அந்த அருட்கலவியுள் நின்றவழி உயிர்கட்கு யோகம் உளதாகும்.
===============================================

பாடல் எண் : 18
யோகநற் சத்தி ஒளிபீடந் தானாகும்
யோகநற் சத்தி ஒளிமுகம் தெற்காகும்
யோகநற் சத்தி உதரம் நடுவாகும்
யோகநற் சத்திதாள் உத்தரம் தேரே.

பொழிப்புரை :   `போகசத்தி, யோகசத்தி` என்னும் இருசத்திகளில் யோக சத்திக்கு வானத்தில் சூரியனும், பூமியில் வேள்வித்தீயும் ஆசனமாகும். அவ்வாசனங்களின்மேல் அவள் தெற்கு நோக்கிய முகத்துடன் உடம்பை நடுவில் வைத்துக் கால்களைப் பாதங்கள் வடக்குநோக்க மடக்கி நீட்டிக்கிடந்த கோலமாய் இருப்பாள். இதனை அறிந்து வழிபடுக.
===============================================

பாடல் எண் : 19
தேர்ந்தெழு மேலாம் சிவனங்கி யோடுற
ஆர்ந்தெழு மாயையும் அந்தம தாய்நிற்கும்
ஓர்ந்தெழு விந்துவும் நாதமும் ஓங்கிடக்
கூர்ந்தெழு கின்றனள் கோல்வளை தானே.

பொழிப்புரை :   யோக சத்தி யோகத்தை விரும்புவர்க்கு அதனை அருளுமாற்றை யறிந்து சிவாக்கினியோடு பொருந்தி நிற்பின், பல்வேறு வகையாய்ப் பரிணமித்து நின்று பந்திக்கின்ற மாயை அங் ஙனம் பந்தத்தைச் செய்தலைத் தவிர்ந்து, ஞானத்திற்குத் துணையாய் நிற்கும். அதன்பின் விந்து நாதங்களின் வடிவாய் உள்ள குண்டலி சத்தி துயிலெழுந்து மேலோங்கிச் செல்லுமாறு யோகசத்தி மேலும் அருள் மிகுந்து நிற்பாள்.
===============================================

பாடல் எண் : 20
தானான வாறெட்ட தாம்பரைக் குள்மிசை
தானான வாறும்ஈ ரேழும் சமகலை
தானான விந்து சகமே பரமெனும்
தானாம் பரவா தனையெனத் தக்கதே.

பொழிப்புரை :   சத்திக்குத்தானே அதுவாய் நின்று அருள்செய் கின்ற சிறந்த ஆதாரம், உள்ளே எட்டாயும் வெளியே பதினான்காயும், இடையில், `இரண்டு பத்து` என்னும் சம அளவினவாயும் உள்ள கோணங்களை உடைய சக்கரமாகும். இச்சக்கரம் சொல்லும், பொருளும் ஆகிய இருவகை உலகங்களாயும், அவற்றைச் செயற்படுத்துகின்ற கடவுளராயும், அக்கடவுளரது செயல்களாயும் விளங்கும்.
===============================================

பாடல் எண் : 21
தக்க பராவித்தை தான்இரு பானேழில்
தக்கெழும் ஓர்ருத்தி ரஞ்சொல்லச் சொல்லவே
மிக்கிடும் எண்சத்தி வெண்ணிற முக்கண்ணி
தொக்கதை யோடுதொன் முத்திரை யாளே.

பொழிப்புரை :   ஸ்ரீ சக்கரத்தில் சத்தியை வழிபட்டு, அவளுக்கு உரிய மந்திரங்களில் எந்த ஒரு மந்திரத்தையேனும் திரும்பத்திரும்பச் சொல்லி உருவேற்றினால், வெண்ணிறமும், மூன்று கண்களும், திருமேனி அழகும், அபய வரத முத்திரைகளும் உடையவளாகிய ஞான சத்தியாகிய மனோன்மனியே ஏனை வாமாதி எண்சத்திகளாயும் மிகத்தோன்றி அருள்புரிவாள்.
===============================================

பாடல் எண் : 22
முத்திரை மூன்றின் முடிந்தமெய்ஞ் ஞானத்தள்
தத்துவ மாய்அல்ல வாய சகலத்தள்
வைத்த பராபர னாய பராபரை
சத்தியும் ஆனந்த சத்தியும் கொங்கே.

பொழிப்புரை :   மலரில் மணம் போலச் சிவத்தில் வேறாகாது நிற்பவளாகிய சத்தி மூன்று பிரிவுகளாய் அமைந்த பஞ்ச தசாட்சரி (பதினைந்தெழுத்து) மந்திரத்தில் முற்ற விளங்குகின்ற மெய்ஞ்ஞான வடிவினள்; தத்துவங்களாயும், அவையல்லவாயும் எல்லாமாய் இருப்பவள்; வேதம் முதலிய நூல்கள் பலவும் முடித்துக் கூறுகின்ற சிவனோடு ஒன்றான சிவையாய் விளங்குபவள்; அருட் சத்தியும், ஆனந்த சத்தியுமானவள்.
===============================================

பாடல் எண் : 23
கொங்கீன்ற கொம்பிற் குரும்பை குலாங்கன்னி
பொங்கிய குங்குமத் தோளி பொருந்தினள்
அங்குச பாசம்எனும் அகி லம்களி
தங்கும் அவள்மனை தானறி வாயே.

பொழிப்புரை :   `நறுமணத்தை வெளிப்படுத்துகின்ற பூங்கொம்பில் தென்னங்குரும்பைகள் விளங்குவது போலும் தோற்றத்தையுடைய கன்னிகையாகிய சத்தி, குங்குமம், பூசப்பட்ட தோள்களை உடை யவள்` என்றும், அங்குச பாசங்களை ஏந்தியவள்` என்றும், `அவளது மகிழ்ச்சியுள்ள கோயில் அகில உலகங்களும்` என்றும் உண்மை நூல்கள் கூறும். இதனை அறிந்து போற்றுவாயாக.
===============================================

பாடல் எண் : 24
வாயும் மனமும் கடந்த மனோன்மனி
பேயும் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும்நல் தாரமும் ஆமே.

பொழிப்புரை :   (இதன் பொருள் வெளிப்படை).
குறிப்புரை :  இப்பொருள் மேலேயும் குறிக்கப்பட்டது. ``தாய்`` எனல், சத்தி தத்துவ சத்தியினின்று சதாசிவன் தோன்றுதல் பற்றி. ``மகள்`` எனல், சிவ தத்துவ சிவத்தினின்று மேற்கூறிய சத்தி தத்துவ சத்தி தோன்றுதல் பற்றி. ``தாரம்`` எனல், யாண்டும் சத்தனுக்குச் சத்தியாய் நிற்றல் பற்றி. வாய் - வாக்கு. கணம் - பூதக் குழாம்.
இதனால், சத்தி சிவனுடன் பல்வேறு வகையில் இயைந்து நின்று செயலாற்றுதல் கூறப்பட்டது.
===============================================
பாடல் எண் : 25
தாரமும் ஆகுவள் தத்துவ மாய்நிற்பள்
காரண காரிய மாகும் கலப்பினள்
பூரண விந்து பொதிந்த புராதனி
பாரள வாந்திசை பத்துடை யாளே.

பொழிப்புரை :   (இதன் பொருளும் வெளிப்படை).
குறிப்புரை :  தத்துவம் - முதற்பொருள். தாய் நிலை காரணமும், மகள் நிலை காரியமும் ஆதல் அறிக. கலப்புச் சிவனோடென்பது வெளிப்படை. பூரணம் - பெரு வியாபகம். விந்து - சுத்த மாயை. `விந்துவிற் பொதிந்த` என்க. புராதனி - பழமையானவள். பார் - உலகம்.  அளவு - எல்லை. உடையாள் - தன்னுடையனவாக உடையவள். இதனால்மேலதனை வேறோராற்றால் விளக்கி, சத்தி உலக நாயகியாதல் கூறப்பட்டது.
===============================================


மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.