http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Saturday 28 April, 2012

திருமந்திரம்-தந்திரம்02-பதிகம்:15,16&17. 15.மூவகைச்சீவ வர்க்கம்(பாடல்:8); 16.பாத்திரம்(பாடல்:4); 17.அபாத்திரம்(பாடல்:4).






 


பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
=======================================================
 
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:01: அகத்தியம்..................................பாடல்கள்: 002
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:02: பதிவலியில் வீரட்டம் எட்டு ....பாடல்கள்: 008
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:03: இலிங்க புராணம் .....................பாடல்கள்: 006
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:04: தக்கன் வேள்வி..........................பாடல்கள்: 009 
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:05: பிரளயம் ......................................பாடல்கள்: 005
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:06: சக்கரப் பேறு ...............................பாடல்கள்: 004
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:07: எலும்பும் கபாலமும்.................பாடல்கள்: 001 
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:08: அடிமுடி தேடல்...........................பாடல்கள்: 010
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:09: சருவசிருட்டி ...............................பாடல்கள்: 030
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:10: திதி..................................................பாடல்கள்: 009
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:11: சங்காரம்........................................பாடல்கள்: 010 
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:12: திரோபவம் ...................................பாடல்கள்: 009
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:13: அநுக்கிரகம் .................................பாடல்கள்: 009
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:14: கர்ப்பக் கிரியை ..........................பாடல்கள்: 040
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:15: மூவகைச் சீவ வர்க்கம்.............பாடல்கள்: 008 
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:16: பாத்திரம்.......................................பாடல்கள்: 004
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:17: அபாத்திரம்  .................................பாடல்கள்: 004 =========================================(பாடல்கள்: 152 + 008 + 004 + 004 = 168 )
இரண்டாம் தந்திரம்-பதிகஎண்:15. மூவகைச்சீவவர்க்கம்(பாடல்கள்:8)

பாடல் எண் : 1
விஞ்ஞானர் நால்வரும் மெய்ப்பிரள யாகலத்
தஞ்ஞானர் மூவரும் தாங்கு சகலத்தின்
அஞ்ஞானர் மூவரு மாகும் பதின்மராம்
விஞ்ஞான ராதியர் வேற்றுமை தானே. 

பொழிப்புரை :  எல்லா உயிர்களும் `விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என்னும் மூவகையுள் அடங்கி நிற்கும். அம்மூவகையினருள் விஞ்ஞானகலர் நான்கு வகையினர்; பிரளயாகலரும், சகலரும் தனித்தனி மும்மூன்று வகையினர்; ஆக அனைவரும் பத்து வகையினராவர்.
=================================================
பாடல் எண் : 2
விஞ்ஞானர் கேவலத் தாராது விட்டவர்
தஞ்ஞானர் அட்டவித் தேசுரம் சார்ந்துளோர்
எஞ்ஞானர் ஏழ்கோடி மந்திர நாயகர்
மெய்ஞ்ஞானர் ஆணவம் விட்டுநின் றாரே. 

பொழிப்புரை :  மேற்கூறியோருள் விஞ்ஞானகலர் நால்வராவார், `ஆணவமலத்தில் அழுந்தாத அவ்வளவில் நிற்போரும், அட்ட வித்தியேசுரபதவி, சத்தகோடி மகாமந்திரங் கட்குத் தலைவராம் பதவி இவற்றைப் பெற்றோரும், ஞானம் முதிரப் பெற்றோரும், அம்முதிர்ச்சியால் ஆணவமலம் பெரிதும் நீங்கப்பெற்ற முத்தரும்` என இவராவர்.
=================================================
பாடல் எண் : 3
இரண்டா வதில்முத்தி எய்துவர் அத்தனை
இரண்டாவ துள்ளே இருமல பெத்தர்
இரண்டாகு நூற்றெட் டுருத்திரர் என்பர்
முரண்சேர் சகலத்தர் மும்மலத் தாரே. 

பொழிப்புரை :  இனிப் பிரளயாகலர் மூவராவார், `அபக்குவரும், பக்குவரும்` என இருதிறப்படும் நிலையில் பக்குவர், `சுத்தவித்தையில் நின்று அசுத்தமாயா புவனங்களைக் காவல் செய்பவரும், குணதத்துவத்தில் நின்று பிரகிருதிமாயா புவனங்களைக் காவல் செய்பவரும், எனத் தனித்தனி நூற்றெண்மராம் உருத்திரர்களாவர். எனவே, இவ்விருவரோடு, பெத்தராகிய அபக்குவரும் கூடப் பிரளயாகலர் மூவராகின்றனர். இனிச் சகலராவார் ` ஆணவம், கன்மம், மாயை` என்னும் மும்மலமும் உடையவரே.
=================================================
பாடல் எண் : 4
பெத்தத்த சித்தொடு பேண்முத்தச் சித்தது
ஒத்திட் டிரண்டிடை யூடுற்றார் சித்துமாய்
மத்தத்து மும்மலம் வாட்டுகை மாட்டாதார்
சத்தத் தமிழ்ந்து சகலத்து ளாரே. 

பொழிப்புரை :  சகலரும், `அபக்குவர், பக்குவர்` என இருதிறப் பட்ட நிலையில் பக்குவர், `சாதகரும், சீவன்முத்தரும்` என இரு வகையினர் ஆவர்.
=================================================
பாடல் எண் : 5
விஞ்ஞானர் ஆணவ கேவல மேவுவோர்
தஞ்ஞானர் மாயையில் தங்கும் இருமலர்
அஞ்ஞானர் அச்சக லத்தர் அகலராம்   
விஞ்ஞான ராதிகள் ஒன்பான்வே றுயிர்களே. 

பொழிப்புரை :  இயற்கையில் அகலராய் நில்லாது, தவமாகிய செயற்கையால் அகலராய் நிற்பார் ஒன்பது வகைப்படுவர். அவரும், `விஞ்ஞானகலர், பிரளயாகலர்` என்னும் பெயரைப் பெறுவர். அவ்வொன்பதின்மராவர், விஞ்ஞானகலருள் அபக்குவர் ஒழிந்த நால்வரும், பிரளயாகலருள் அபக்குவர் ஒழிந்த, `உருத்திரர், மால், அயன், இந்திரன், பிறகடவுளர்` என்னும் ஐவருமாவர்.
=================================================
பாடல் எண் : 6
வெஞ்ஞான கன்மத்தால் மெய்யகங் கூடியே
தஞ்ஞான கன்மத்தி னால்சுவர் யோனிபுக்
கெஞ்ஞான மெய்தீண்டி யேயிடை யிட்டுப்போய்.
மெய்ஞ்ஞான ராகிச் சிவமேவல் உண்மையே. 

பொழிப்புரை :  சகல வருக்கத்தினர் வெவ்விய ஞானமாகிய சீவபோதத்தால் செய்துகொண்ட வினைகளில் சில நல்வினை காரணமாக மக்களுடம்பைப் பெற்றுப் பூலோகத்தில் வாழ்ந்து, அங்கும் அந்தச் சீவபோதத்தால் செய்த கன்மங்களில் சில நல்வினை காரணமாகச் சுவர்க்கலோகத்தில் தேவராய் இன்பந்துய்த்துப் பின் எம் ஞானம் போல்வதாகிய மெய்ஞ்ஞானத்தைத் தலைப்பட்டு, அது முதிராமையால் இடையீடுபட்டுப் பதமுத்தி அபரமுத்திகளில் நின்று, முடிவில் மெய்ஞ்ஞானம் முதிரப்பெற்றுச் சிவத்தோடு இரண்டறக் கலத்தல் உள்ளதே.
=================================================
பாடல் எண் : 7
ஆணவந் துற்ற அவித்தா நனவற்றோர்
காணிய விந்துவாம் நாத சகலாதி
ஆணவ மாதி யடைந்தோர்க்க வரன்றே
சேணுயர் சத்தி சிவதத்வ மாமே

பொழிப்புரை :  ஆணவத்தால் மிகுவிக்கப்பட்ட அறியாமையில் நிகழும் சாக்கிரம் முதலிய அவத்தைகளைக் கடந்தவர்க்கே, நாதம், விந்து முதலிய எல்லாத் தத்துவங்களும் தெளிவாய் விளங்கும். ஏனெனில், ஆணவமும், அதுவழியாகக் கன்ம மாயைகளும் ஆகிய அவற்றுட் கட்டுண்டு நின்றவர் பொருட்டன்றோ அவ்விந்து நாதம் முதலிய தத்துவங்கள் தோன்றுகின்றன!
=================================================
பாடல் எண் : 8
சிவமாகி ஐவகைத் திண்மலஞ் செற்றோர்
அவமாகாச் சித்தர்முத் தாந்தத்து வாழ்வார்
பவமான தீர்வோர் பசுபாசம் அற்றோர்
நவமான தத்துவம் நாடிக்கண் டோரே. 

பொழிப்புரை :  ஐவகை மலங்களையும் முற்றக் கெடுத்துச் சிவமானவரே முடிந்த பயனைப் பெற்ற வல்லுநர். அதனால், அவமே பரமுத்தியாகிய சிவசாயுச்சத்தைப் பெற்று என்றும் இன்புறுவர். இனி வியப்பைத் தருவனவாகிய தத்துவங்களின் இயல்பை ஆராய்ச்சியால் உணர்கின்றவர் பாசஞான பசுஞானங்களின் நீங்கினாராயினும், அதன் பின்னர் அவற்றைத் தெளிய உணருங்காலத்தே பதிஞானம் எய்தி வீடுபெறுவர்.
=================================================
இரண்டாம் தந்திரம்- பதிக எண்:16. பாத்திரம்(பாடல்கள்: 4)

பாடல் எண் : 1
திலமத் தனையே சிவஞானிக் கீந்தால்
பலமுத்தி சித்தி பரபோக முந்தரும்
நிலமத் தனைப்பொன்னை நின்மூடர்க் கீந்தால்
பலமுமற் றேபர போகமுங் குன்றுமே. 

பொழிப்புரை :  கொடுக்கப்படுவது எள்ளளவு பொன்னேயாயினும் அதனைச் சிவஞானம் கைவரப்பெற்ற ஒருவர்க்குக் கொடுத்தால், அது தன்பயனாக எண்பெருஞ் சித்திகளையும், பதமுத்தி அபரமுத்திகளையும், பரமுத்தியையும் தரும். வேட மாத்திரத்தால் சிவஞானிகள் போல நின்று யாதும் அறியாத முழுமூடர்க்கு நிலமத்தனைப் பொன்னைக் கொடுப்பினும், அது யாதும் பயன் தாராமையேயன்றி, ஞானம் குறைதற்கு ஏதுவாயும் விடும்.
=================================================
பாடல் எண் : 2
கண்டிருந் தார்உயிர் உண்டிடுங் காலனைக்
கொண்டிருந் தார்உயிர் கொள்ளுங் குணத்தனை
நன்றுணர்ந் தார்க்கருள் செய்திடு நாதனைச்
சென்றுணர்ந் தார்சிலர் தேவரு மாமே.

பொழிப்புரை :  உலகத்தில் உணர்வுடையார் சிலரே உயிர்கள் அனைத்தையும் ஒவ்வொரு கால எல்லையில் கூற்றுவன் கொண்டு போதலை மனத்துட் கொண்டார்கள். பின்னும் தன்னை உட்கொண்டவரது உயிரைத் தான் தன்னுட்கொள்ளும் குணம் உடையவனும், நன்னெறியாகிய ஞானநெறியில் சென்றவர்மாட்டு அருள்மீக்கூர்கின்றவனும் ஆகிய சிவபெருமானை அந்நன்னெறியிலே சென்று உணர்ந்தார்கள். அவர் மேன்மக்களா தலன்றியும், `தேவர்` எனவும் போற்றப்படுதற்கு உரியராவர்.
=================================================
பாடல் எண் : 3
கைவிட்டி லேன்கரு வாகிய காலத்தும்
மெய்விட்டி லேன்விகிர் தன்னடி தேடுவன்
பொய்விட்டு நானே புரிசடை யானடி
நெய்விட் டிடாத இடிஞ்சிலு மாமே.

பொழிப்புரை :  நான் சிவபெருமானது திருவடியைக் கருவில் இருந்தபொழுதும் மறந்திலேன், பிறந்து வாழ்கின்ற இப்பொழுதும் அதனை மெய்யன்போடே நான் தேடுகின்றேன். அதனால், அத் திருவடி எனக்கு நெய்விட்டு ஏற்றாது இயல்பாகவே ஒளிவிடும் விளக்காகும்.
=================================================
பாடல் எண் : 4
ஆவன ஆவ அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன்
ஏவின செய்யும் இலங்கிழை யோனே.

பொழிப்புரை :  விளங்குகின்ற மெய்ந்நூலை உணர்ந்தவன், `ஆகற்பாலன ஆகுமேயன்றி அழியா; அழியற்பாலன அழியுமேயன்றி அழியாதொழியா; நீங்குவன நீங்குமேயன்றி நில்லா; வருவன வருமேயன்றி நீங்கா` என்பதனை உணர்ந்து, ஒன்றையும் தானே காணாது, அவை அனைத்திற்குங் காரணனான சிவன் காட்டியதைக் கண்டு, அவன் அருளாணையால் ஏவிய செயல்களையே செய்திருப்பான்.
=================================================
இரண்டாம் தந்திரம்-பதிகஎண்:17. அபாத்திரம்  (பாடல்கள்:4)

பாடல் எண் : 1
கோல வறட்டைக் குனிந்து குளகிட்டுப்
பாலைக் கறந்து பருகுவ தேயொக்கும்
சீலமும் நோன்பும் இலாதவர்க் கீந்தது
காலங் கழிந்த பயிரது ஆகுமே. 

பொழிப்புரை :  சிவநெறி ஒழுக்கமும், தவமும் இன்மையால் உயர்வு பெறாத மக்களை வேடமாத்திரத்தால் வழிபட்டுத் தானம் செய்வது, வறட்டுப் பசுவைப் பிறவி மாத்திரத்தால் வணங்கி உணவளித்துப் பாலைக் கறந்து பருக நினைத்தலோடு ஒக்கும். இனித் தானத்தை உயர்ந்தோரை அறிந்து செய்யாமல் எவரிடத்தும் செய்தல், ஒரு பயிரைக் காலம் அறிந்து செய்யாது, எக்காலத்திலும் செய்தலையும் ஒக்கும்.
=================================================
பாடல் எண் : 2
ஈவது யோக இயம நியமங்கள்
சார்வ தறிந்தன்பு தங்கு மவர்க்கன்றி
ஆவ தறிந்தன்பு தங்கா தவர்களுக்
கீவ பெரும்பிழை யென்றுகொ ளீரே. 

பொழிப்புரை :  பொருளைத் தானம் செய்தல், யோக நெறியில் இயம நியமங்களாகச் சொல்லப்படும் தவிர்வன செய்வன அறிந்து அந் நிலைக்கண் உறைத்து நிற்கும் உரனுடையோர்க்கேயாம். அவ் வாறன்றி, அவ்வுரனிலார்க்குச் செய்தல் பெருங்குற்றமாம் என்பதை உணர்மின்கள்.
=================================================
பாடல் எண் : 3
ஆமா றறியான் அதிபஞ்ச பாதகன்
தோமாறும் ஈசர்க்குந் தூய குரவற்குங்
காமாதி விட்டோர்க்குந் தூடணம் கற்பிப்போன்
போமா நரகில் புகான்போதங் கற்கவே.

பொழிப்புரை :  குற்றம் நீங்குதற்கு நிமித்தனாய சிவபிரானுக்கும், சிவகுரவர்க்கும், சிவயோகியர்க்கும் குற்றம் கற்பித்து இகழ்பவன் பின்விளைவதை அறியான். அவன் பஞ்ச மாபாதகனிலும் பெரும் பாதகன். அதனால், அவன் பின்னர்ப் பெருநரகில் வீழ்வான். இகழ்ந்து நிற்கும் அவன் பின்னொரு ஞான்று நல்லறிவைப் பெற்று அவர்களைப் புகழ்ந்து வழிபடுவானாயின், முன் செய்த பாதகத்தினின்றும் நீங்கி நரகம் புகாதொழிவான்.
=================================================
பாடல் எண் : 4
மண்மலை யத்தனை மாதனம் ஈயினும்
அண்ணல் சிவனென்றே யஞ்சலி யத்தனாய்
எண்ணி இறைஞ்சாதாற் கீந்த இருவரும்
நண்ணுவர் ஏழாம் நரகக் குழியிலே. 

பொழிப்புரை :  `தலைவனே, சிவபெருமானே` என்று அவனது நாமத்தைச் சொல்லிக் கைகூப்பி அவனை நினைத்து வணங்கித் தானம் வாங்க அறியாதவர்க்கு, நிலத்தளவும், மலையளவுமான பெரும் பொருளைத் தானமாகக் கொடுத்தாலும் அப்பொருளால் பயன் பெறாது, ஈந்தோனும் ஈயப்பட்டோனும் (ஏற்போனும்) ஆகிய இருவரும் மீளாத நரகக் குழியிலே வீழ்வர்.
=================================================



மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரமாம் திருவாசகத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருவாசகரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

திருமந்திரம்-தந்திரம்02-பதிகம்:14/2. கர்ப்பகிரியை(பாடல்:21-40/40)பகுதி-II







 

பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
========================================================================

இரண்டாம் தந்திரம்:பதிக எண்:01: அகத்தியம்..................................பாடல்கள்: 002
 
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:02: பதிவலியில் வீரட்டம் எட்டு ....பாடல்கள்: 008
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:03: இலிங்க புராணம் .....................பாடல்கள்: 006 
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:04: தக்கன் வேள்வி..........................பாடல்கள்: 009
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:05: பிரளயம் ......................................பாடல்கள்: 005

இரண்டாம் தந்திரம்:பதிக எண்:06: சக்கரப் பேறு ...............................பாடல்கள்: 004
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:07: எலும்பும் கபாலமும்..................பாடல்கள்: 001 
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:08: அடிமுடி தேடல்..........................பாடல்கள்: 010
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:09: சருவசிருட்டி ...............................பாடல்கள்: 030
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:10: திதி.................................................பாடல்கள்: 009
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:11: சங்காரம்.....................................பாடல்கள்: 010 

இரண்டாம் தந்திரம்:பதிக எண்:12: திரோபவம்.................................பாடல்கள்: 009

இரண்டாம் தந்திரம்:பதிக எண்:13: அனுக்கிரகம்...............................பாடல்கள்: 009

இரண்டாம் தந்திரம்:பதிக எண்:14: கர்ப்பக் கிரியை ..........................பாடல்கள்: 040

=================================================(பாடல்கள்: 112 + 040 = 152 )
இரண்டாம் தந்திரம் –பதிக எண்:14. கர்ப்பக் கிரியை 
(பாடல்கள்: 21-40/40) பகுதி-II
பாடல் எண் : 21
கேட்டுநின் றேன்எங்குங் கேடில் பெருஞ்சுடர்
மூட்டுகின் றான்முதல் யோனி மயனவன்
கூட்டுகின் றான்குழம் பின்கரு வைஉரு
நீட்டிநின் றாகத்து நேர்பட்ட வாறே.
 
பொழிப்புரை :  நான்கு வேத சிவாகமங்கள் அனைத்திலும் கேட்டு நின்றது, `என்றும் அழிவில்லாத பேரொளியாகிய சிவபெருமானே உலகனைத்திற்கும் முதற்காரண வடிவாய் நின்று அவற்றைக் கோக்கின்றான்` என்பது. எனவே, தாயது வயிற்றில் நெகிழ்ந்துபட்ட கருவை உறுதிப்படுத்தி உருவாக அமைப்பவன் அவனே. ஆதலின், தந்தை தாயாரது உடற்கூட்டம் அவனது செய்கைக்கு ஒரு கருவியாய் அமையும் அளவேயாம்.
==============================================
பாடல் எண் : 22
பூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின்
காவுடைத் தீபங் கலந்து பிறந்திடும்
நீரிடை நின்ற குமிழி நிழலதாய்ப்
பாருடல் எங்கும் பரந்தெட்டும் பற்றுமே.  

பொழிப்புரை :  தாய் தந்தையரது கூட்ட உறுப்புக்கள் தம்மிற் கூடிய காலத்து முன்பு தந்தையுடலில் நின்ற கரு, தாயது கருப்பையுட் சென்று கலந்து முட்டை (பிண்டம்) ஆகும். அம்முட்டையினுள் நீர்க்குமிழியில் நிழல்போல நுண்ணுடம்புக் கருவிகள் எட்டும் பருவுடல் எங்கும் பரந்து அதனைத் தாங்கி நிற்கும்.
==============================================
பாடல் எண் : 23
எட்டினுள் ஐந்தாகும் இந்திரி யங்களும்
கட்டிய மூன்று கரணமு மாய்விடும்
ஒட்டிய பாச உணர்வென்னுங் காயப்பைக்
கட்டி அவிழ்த்திடுங் கண்ணுதல் காணுமே. 

  
பொழிப்புரை :  நுண்ணுடம்புக் கருவிகள் எட்டனுள் தன் மாத் திரைகள் ஐந்தனையும் புலன்களாகக் கொள்கின்ற ஞானேந்திரியங்கள் ஐந்தும், அப்புலன்களைத் தம்பால் பற்றிக் கொள்கின்ற, எஞ்சிய `மனம், அகங்காரம், புத்தி` என்கின்ற அந்தக்கரணங்கள் மூன்றும் கூடிய உடம்பென்னும் பையினுள் உயிர் என்கின்ற சரக்கைச் சிவபெருமான் முன்னர்க் கட்டிவைத்துப் பின்னர் அவிழ்த்து விடுவான்.
==============================================
பாடல் எண் : 24
கண்ணுதல் நாமங் கலந்துடம் பாயிடப்
பண்ணுதல் செய்து பசுபாசம் நீக்கிட
எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை
மண்முத லாகவகுத்துவைத் தானே. 

  
பொழிப்புரை :  உயிர்கள் தூலமும், சூக்குமமும் ஆய உடம்புகளையே உடம்பாகப் பற்றிநில்லாது, சிவபெருமானது திருப்பெயராகிய திருவைந்தெழுத்தே தம்முள் ஒன்றித் தமக்கு உடம்பாகுமாறு அதனை மொழிதல் (வாசகம்), முணுமுணுத்தல் (உபாஞ்சு), கருதல் (மானதம்), உணர்தல் (சுத்தமானதம்) என்னும் முறைகளில் கணித்து (செபித்து)ப் பாசங்களினின்றும் நீங்குமாறு வேதம் முதலாகப் பொருந்திய பரந்த நூல்களை மண்ணுலகம் முதலிய எல்லா உலகங்களிலும் வகுத்து வைத்துள்ளான்.
==============================================
பாடல் எண் : 25
அருளல்ல தில்லை அரன்அவன் அன்றி
அருளில்லை யாதலின் அவ்வோர் உயிரைத்
தருகின்ற போதிரு கைத்தாயர் தம்பால்
வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே.
 
பொழிப்புரை :  அருளின்றிச் சிவன் இல்லை. சிவனின்றி அருள் இல்லை. ஆகவே, என்றும் அருளோடே நிற்கின்ற அவன், கருவில் வீழ்கின்ற அந்த ஒர் உயிரை வளர்க்கத் தருகின்ற பொழுது திரோதான சத்தி, அதனை வளர்க்கின்ற செவிலித் தாய் என்னும் இரு தாயாரிடத்து அன்பை உண்டாக்கித் தருவான்.
==============================================
பாடல் எண் : 26
வகுத்த பிறவியை மாதுநல் லாளும்
தொகுத்திருள் நீக்கிய சோதி யவனும்
பகுத்துணர் வாகிய பல்லுயிர் எல்லாம்
வகுத்துள்ளும் நின்றதோர் மாண்பது வாமே. 

  
பொழிப்புரை :  பாசஞானத்தைத் தருகின்ற உடம்பை வளர்க்கின்ற அம்மையும், நூல்களை மிக உணர்த்திப் பாச ஞானத்தைப் போக்கிப் பசுஞான பதிஞானங்களைத் தருகின்ற அப்பனும் செய்யும் செயல்களாவன முறையே, ஐம்புலன்களைப் பகுத்துணரும் வகையில் உயிர்கட்குப் பலவகைப் பிறப்புக்களைத் தருதலும், அவற்றின் அறிவுக்கறிவாய் நிற்றலைப் புலப்படுத்துதலும் ஆகும்.
==============================================
பாடல் எண் : 27
மாண்பது வாக வளர்கின்ற வன்னியும்
காண்பது ஆண்பெண் அலியென்னுங் கற்பனை
பூண்பது மாதா பிதாவழி போலவே
ஆம்பதி செய்தான்அச் சோதிதன் ஆண்மையே.

 
பொழிப்புரை :  மாட்சிமையோடு கருப்பையுள் வளர்கின்ற கருவைச் சிவபெருமான் செய்வது, `ஆண், பெண், அலி` என்னும் மூவகை அச்சாக. அவ்வச்சுக்கள் அமைவது, மாதா பிதாக்களின் உடற் கூறாகிய காரணப்பொருட்கு ஏற்பவாம். அவற்றிற்கெல்லாம் தக்கவாறே அப்பெருமான் தனது ஆற்றற் பதிவைச் செய்கின்றான்.
==============================================
பாடல் எண் : 28
ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகிற் பெண்ணாகும்
பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும்
தாண்மிகு மாகில் தரணி முழுதாளும்;
பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே.

 
பொழிப்புரை :  கலவியால் கருப்பையுள் கலக்கும் பொருள்களில் ஆண்மகனது வெண்டுளி மிகுந்திருக்குமாயின் பிறக்கும் குழவி ஆணாகும். பெண்மகளது செந்துளி மிகுந்திருக்குமாயின் பிறக்கும் குழவி பெண்ணாகும். இரண்டும் சமமாய் இருக்கின் பிறக்கும் குழவி அலியாகும். அதுவன்றி, மிகுந்துள்ள வெண்டுளியில் உயிராற்றல் மிக்கிருக்குமாயின் பிறக்கும் மகன் ஆற்றல் மிக்கவனாய் அரசாளுதற்கும் உரியவனாவான். அவ்வாறன்றி மிகுந்திருக்கும் செந்துளியில் அழிக்கும் ஆற்றல் மிக்கிருக்குமாயின் பதிந்த கருப்பயனின்றி அழிந்தொழியும்.
==============================================
பாடல் எண் : 29
பாய்ந்தபின் அஞ்சோடில் ஆயுளும் நூறாகும்
பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந் திவ்வகை
பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலு மாமே. 
பொழிப்புரை :  துணையர் (தம்பதிகள்) கூட்டத்தில் வெண்டுளி கருப்பையினுள் சென்றபின்பும் ஆடவனுக்கு ஐந்து மூச்சு நிகழுங் காறும் இருவரும் பிரியாது முன்போலவே புல்லிக் கிடப்பாராயின், பிறக்கின்ற குழவியது வாழ்நாள் நூறாண்டாக அமையும். நான்கு மூச்சு நிகழுங்காலும் பிரியாதிருப்பாராயின் அஃது எண்பது ஆண்டாக அமையும். இவ்வாறே ஒரு மூச்சிற்கு இருபது ஆண்டாகக் கணக்கிட்டு அறியலாம். ஆயினும், மூச்சுக்களின் கணக்கை உண்மையாக அறிவதோ, மூச்சினை நெறிப்படுத்தி இயக்குதலோ பொதுமக்களுக்கு இயலாது. யோகிகளாயின் அக்கணக்கினை அறியவும், அதன்படி மூச்சினை நெறிப்படுத்து இயக்கவும் வல்லராவர்.
==============================================
பாடல் எண் : 30
பாய்கின்ற வாயுக் குறையிற் குறளாகும்
பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படிற் கூனாகும்
பாய்கின்ற வாயுமா தர்க்கில்லைப் பார்க்கிலே. 
பொழிப்புரை :  முன்னை மந்திரத்துள், `அஞ்சு, நாலு` எனக் குறிக்கப்பட்ட மூச்சுக்காற்று அங்ஙனம் இயங்கும்பொழுது இயல்பாக இயங்கும் அளவில் சிறிதே குறையுமாயின், குழவி குறளாய் (வளராது குட்டையாய்க் கிடப்பதாகப்) பிறக்கும். மிகக் குறையுமாயின் குழவி கைகால்கள் முடமாகப் பிறக்கும். இஃது ஆடவரது மூச்சுக் கணக்கேயன்றி மகளிரது மூச்சுக் கணக்கன்று.
==============================================
பாடல் எண் : 31
மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே. 
பொழிப்புரை :  கலவிக் காலத்தில், தாயது வயிற்றில், நீங்கற் பாலதாகிய மலம் நீங்காது தங்கியிருக்குமாயின், அவள் வயிற்றில் தந்தையிடமிருந்து வந்து கருவாய்ப் பொருந்திய குழவி, மந்த புத்தி உடையதாய் இருக்கும். நீங்கற் பாலதாகிய நீர் நீங்காது அவள் வயிற்றில் தங்கியிருக்குமாயின், குழவி ஊமையாகும். மலம், நீர் இரண்டுமே நீங்கற்பாலன நீங்காது தங்கியிருக்கின், குழவி குருடாகும்.
==============================================
பாடல் எண் : 32
குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவி இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அலியாகும் கொண்டகால் ஒக்கிலே.
பொழிப்புரை :  கலவிக் காலத்தில் கணவனுக்கு மூச்சுக்காற்று வலமூக்கின் வழி இயங்கிக் கொண்டிருப்பின், குழவி ஆணாய் அமையும். இடமூக்கின் வழி இயங்கிக் கொண்டிருப்பின், குழவி பெண்ணாய் அமையும். இருவழியிலும் மாறி மாறி இயங்கிக் கொண்டிருப்பின் குழவி அலியாய் அமையும். இவை நிற்க, கருத் தங்கும் காலத்தில் தாய் வயிற்றில் கீழ்ப்போகும் காற்றுப் போக்கப் படாமல் தடுக்கப்பட்டு மேலெழுந்து பாயுமாயின், இரண்டு கரு தங்கும்.
==============================================
பாடல் எண் : 33
கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தெழில்
கொண்ட குழவியுங் கோமள மாயிடும்
கொண்டநல் வாயுஇரு வர்க்குங் குழறிடில்
கொண்டதும் இல்லையாம் கோல்வளை யாட்கே. 
பொழிப்புரை :  கலவிக் காலத்தில் மூச்சுக் காற்று இருவர்க்கும் வலம், இடம் என்னும் வகையில் ஒருவகையிலே, ஓரளவிலே இயங்குமாயின், தங்கிய கருச் சிதையாது மேற்கூறியவாறு குழவி ஆணும், பெண்ணுமாய் நிலைபெறுதலோடு, அழகாயும் இருக்கும். அவ்வாறின்றி அவர்க்கு மாறி மாறி இயங்கின், தங்கிய கரு பின் நிலைபெறாது அழியும்.
==============================================
பாடல் எண் : 34
கோல்வளை உந்தியிற் கொண்ட குழவியும்
தால்வளை யுள்ளே தயங்கிய சோதியாம்
பால்வளர்ந் துள்ளே பகலவன் பொன்னுருப்
போல்வளர்ந் துள்ளே பொருந்துரு வாமே.  
பொழிப்புரை :  தாய் தனது கருப்பையில் ஏற்றுக்கொண்ட குழவி, முதற்கண் தந்தையது நடுநாடியில் தீயின் கூறாக விளங்கி முதிர்ந்து, பின் தாயது கருப்பையினுள்ளே ஞாயிற்றின் நிறம்போலும் செந்நிறத்தை உடையதாய் முற்றி, அதன்பின்னர், வகைபடத் தோன்றுகின்ற உறுப்புக்களை உடையதாகும்.
==============================================
பாடல் எண் : 35
உருவம் வளர்ந்திடும் ஒண்டிங்கள் பத்தில்
பருவம தாகவே பாரினில் வந்திடும்
மருவி வளர்ந்திடு மாயையி னாலே
அருவம தாவதிங் காரறி வாரே. 
பொழிப்புரை :  தங்கிய கருவின் உருவம் பத்துத் திங்கள்காறும் கருப்பையிலே வளரும். பத்தாந்திங்களே பிறக்கும் பருவமாக, அப்பொழுது நிலத்தில் வந்து சேரும். வந்தபின் தாய் தந்தையரைப் புறந்தருபவராகப் பொருந்தி வளரும். அவ்வளர்ச்சி, சுவரெடுத்தல், ஆடைநெய்தல், மாலைதொடுத்தல் முதலியவற்றிற்போலக் கட்புலனாகாது, மாயையினாலே கணந்தோறும் நிகழ்தலை ஒருவரும் காணவல்லரல்லர்.
==============================================
பாடல் எண் : 36
இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள்
தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்திலன்
பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்
கெட்டேன் இம்மாயையின் கீழ்மைஎவ் வாறே! 
பொழிப்புரை :  கருவை இட்டவனாகிய தந்தையும் அதனை இட்டமை இடாமைகளை அறிந்தானில்லை. ஏற்றவளாகிய தாயும் அதனை ஏற்றமை ஏலாமைகளை அறிந்தாளில்லை. அக்கருவாகிய பொன்னைக் குழவியாகிய அணியாக்குகின்ற பொற்கொல்லனாகிய பிரமன் அவற்றை அறிந்திருந்தும் அவருள் ஒருவர்க்கும் சொல்லிற்றிலன். வினை நிகழ்ச்சி இருந்தவாறே அப்பொற் கொல்லனுக்குப் பணிக்கின்ற தலைவனாகிய சிவனும் அவ்விருவரோடே இருக்கின்றான்; அவனும் அவர்க்கு அவ் வினையியல்பையே உரைத்திலன். அந்தோ! இம்மாயையின் வஞ்சனை எவ்வகையினதாய் உள்ளது!
==============================================
பாடல் எண் : 37
இன்புற நாடி இருவருஞ் சந்தித்துத்
துன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின்
முன்புற நாடி நிலத்தின்முன் தோன்றிய
தொண்புற நாடிநின் றோதலு மாமே  
 
பொழிப்புரை :  ஒருவன், ஒருத்தி ஆகிய இருவர் தம்முள் இன்பம் நுகரவே விரும்பிக் கூட, துன்பத்திற்குக் காரணமான அவ்விருப் பத்தால் ஓர் உயிர் பிறந்து வளர்ந்தபின், அவ்வுயிர், தான் நிலத்தில் வந்து சேர்தற்கு முன்பு கருப்பையினுள் உள்ள துன்பத்தால் `விரைவில் வெளிப்படல் வேண்டும்` என்று விரும்பிப் பெரிதும் முயன்று வெளிப்பட்டுப் பிறந்த செய்தியைப் பின் அறிவுடையோர் அவ்வுயிரும் தம்போல அறிவைப் பெறுமாறு அதற்குச் சொல்லுதல் கூடுமோ!
==============================================
பாடல் எண் : 38
குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக்கூட் டிட்டால்
அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல்
இயக்கில்லை போக்கில்லை ஏனென்ப தில்லை
மயக்கத்தால் யாக்கை வளர்க்கின்ற வாறே.
 
பொழிப்புரை :  குயிற்குஞ்சாகத் தக்க முட்டையை அவ்வாறாதற் பொருட்டு அதன் தாய் காக்கையினது கூட்டில் இட, காக்கை அதனைச் சிறிதும் வேறாக நினையாது தன் முட்டை என்றே கருதி அடை காத்தல்போல, சிவன் தனது மகவாகிய உயிர், உடல் பெற்றுச் செயற்படுதற் பொருட்டுக் கருவிலே இட, தாய் அதனைச் சிறிதும் வேறாக நினையாது, உடல் வருந்தத் தொழில் செய்யாமலும், அதனைப் போக்கிவிட நினையாமலும், `ஏன் வந்தது` என்று மனம் வருந்தாமலும் பேணிக் காத்தல் மயக்கத்தாலாவதே.
==============================================
பாடல் எண் : 39
முதற்கிழங் காய்முளை யாய்அம் முளைப்பின்
அதர்ப்புத லாய்ப்பல மாய்நின் றளிக்கும்
அதற்கது வாய்இன்ப மாவது போல
அதற்கது வாய்நிற்கும் ஆதிப் பிரானே. 
பொழிப்புரை :  மரவகைகளுள் சில, கிழங்காய் நின்றே பயன்படும்; சில, முளையானபின் பயன்படும்; சில, முளைக்குப் பின் புதலாய் நின்று பயன்படும்; சில, காய்த்துப் பழமாய்ப் பயன்படும். அந்த அந்த மரவகைக்கு அந்த அந்தப் பொருளே உளதாகிப் பயன் தருதல்போலச் சிவபெருமான் மக்கள் உயிர்க்கேயன்றிப் பிற உயிர்கட்கும் அவ்வவற்றின் தோற்றத்திற்கு ஏற்ப அத்தோற்றப் பொருள்களாய் நின்று அவற்றைத் தோற்றுவிப்பன்.
==============================================
பாடல் எண் : 40
பரத்திற் கரைந்து பதிந்தநற் காயம்
உருத்தரித் திவ்வுடல் ஓங்கிட வேண்டின்
திரைக்கடல் உப்புத் திரண்டது போலத்
திரித்துப் பிறக்குந் திருவரு ளாலே. 

பொழிப்புரை :  உலகம் ஒடுங்குங் காலத்து உடம்பும் பல தத்துவங்களாய் ஒடுங்கி, முடிவில் எல்லாவற்றுடனும் மாயையில் ஒடுங்கும். ஒடுங்கிய உடல் மீளவும் முன்போலத் தோன்றுதல் வேண்டும் எனச் சிவபெருமான் திருவுளம் கொள்ளின், கடல் நீரில் தோன்றாது நின்ற உவர்ப்புச் சுவை பின் தோன்றி நிற்கும் உப்பாகத் திரண்டு உருவெடுத்தல்போல, அவனது திருவருட் செயலாலே மீளவும் முன்போலத் தோன்றும்.
==============================================


மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரமாம் திருவாசகத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருவாசகரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.