http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Friday 3 May, 2013

திருமந்திரம் - தந்திரம் 09: பதிகம் 28. தோத்திரம் - பாடல்கள்: 46. பகுதி-I

,
 பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
*************************************************
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:01: குருமட தரிசனம்..............................பாடல்கள்: 006 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:02: ஞானகுரு தரிசனம்..........................பாடல்கள்: 019 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:03: பிரணவ சமாதி..............பாடல்கள்:006
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:04: ஒளிவகை......................பாடல்கள்:017
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:05: பஞ்சாக்கரம்-தூலம்........பாடல்கள்:010
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:06: பஞ்சாக்கரம்-சூட்குமம்.பாடல்கள்...:005

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:07: அதிசூக்கும பஞ்சாக்கரம்.பாடல்கள்:003
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:08: காரண பஞ்சாக்கரம்........பாடல்கள்:003
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:09: மகா காரணபஞ்சாக்கரம்:பாடல்கள்:004

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:10: திருக்கூத்து.....................பாடல்கள்:002  
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:11: சிவானந்தக் கூத்து..........பாடல்கள்:008
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:12: சுந்தரக் கூத்து................பாடல்கள்:006

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:13: பொற்பதிக் கூத்து..........பாடல்கள்:011
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:14: பொற்றில்லைக்கூத்து....பாடல்கள்:013
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:15: அற்புதக் கூத்து..............பாடல்கள்:042
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:16: ஆகாசப்பேறு...................பாடல்கள்:010 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:17: ஞானோதயம்..................பாடல்கள்:011
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:18: சத்தியஞானானந்தம்...பாடல்கள்:009   
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:19: சொரூப உதயம்...........பாடல்கள்: 011
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:20: ஊழ்................................பாடல்கள்: 006 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:21: சிவரூபம்......................பாடல்கள்: 003
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:22: சிவதரிசனம்................பாடல்கள்:008 

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:23: முத்திபேதம் கருமநிருவாணம்.பாடல்கள்:002

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:24: சூனிய சம்பாடனை..........பாடல்கள்: 067

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:25: மோன சமாதி..................பாடல்கள்: 020

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:26: வரையுரை மாட்சி...........பாடல்கள்: 003
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:27: அணைந்தோர் தன்மை.....பாடல்கள்: 022
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:28: தோத்திரம்.....................பாடல்கள்: 046
*************************************************
தந்திரம் 9- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -028 
கூடுதல் பாடல்கள்  .........................................(318+046=364)

*************************************************
ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம் -பாடல்கள்:046: பகுதி-I
பாடல் எண் : 1
மாயனை நாடி மனநெடுந் தேர்ஏறிப்
போயின நாடறி யாதே புலம்புவர்
தேயமும் நாடும் திரிந்தெங்கள் நாதனைக்
காயமின் நாட்டிடைக் கண்டுகொண் டேனே.

பொழிப்புரை : எத்துணையோ பேர் எத்துணையோ வகையில் காண முயன்றும் காணப்படாது ஒளிந்து நிற்கும் கள்வனாகிய சிவனை, `எப்படியும் கண்டுவிட வேண்டும்` என்று பலர் அவன் ஒளிந்திருக்கும் இடத்தையறியாமல், மனமாகிய நெடுந்தூரம் செல்லத்தக்க தேர்மேல் ஏறிக்கொண்டுச் சென்று வருந்துகின்றார்கள். நானும் அவர்களைப் போலத்தான் எங்கெங்கோ அவனைத் தேடி வருந்தினேன். ஆயினும் நான் `அவன் ஒளிந்திருக்கும் இடம் எனது உடம்பாகிய ஒளியிடந்தான்` என்று தெரிந்து அங்குச் சென்று அவனைக் கண்டு விட்டேன்.
*************************************************
பாடல் எண் : 2
மன்னும் மலைபோல் மதவா ரணத்தின்மேல்
இன்னிசை பாட இருந்தவர் யாரெனின்
முன்னியல் காலம் முதல்வனார் நாமத்தைப்
பன்னினர் என்றேதம் பாடறி வீரே.

பொழிப்புரை : நிலைபெற்ற மலைபோலும் தோற்றத்தை உடையதாய், ஆயினும் மதத்தால் அடங்காது நடக்கும் யானையின் மேல் பலர் இனிய இசைபாடிச் சூழ்ந்து வர இப்பொழுது உலாவரும் அரசர்கள் யாவரெனின், `முற்பிறப்பில் சிவனது ஆயிரம் நாமங்களை எடுத்தோதித் திரித்தவர்` என்றே அவரது பெருமையின் காரணத்தை உணர்ந்துகொள்ளுங்கள்.
*************************************************
பாடல் எண் : 3
முத்தினில் முத்தை முகிழிள ஞாயிற்றை
எத்தனை வானோரும் ஏத்தும் இறைவனை
அத்தனைக் காணா(து) அரற்றுகின் றேனை ஒர்
பித்தன் இவன்என்று பேசுகின் றாரே.

பொழிப்புரை : பொன்னின் தராதரத்தை அளத்தற்கு உதவுகின்ற பொன் `ஆணிப் பொன்` எனப்படும். அஃது ஏனை எல்லாப் பொன்னினும் உயர்ந்தது. அதுபோல முத்துக்களின் தராதரத்தை அளக்க உதவுகின்ற முழுதும் `ஆணி முத்து` எனப்படும். அஃது ஏனை எல்லா முத்துக்களினும் உயர்ந்தது. அதுபோலச் சிவன் ஏனைத் தேவர் பலரினும் உயர்ந்தவன். பின் அவன், திருமேனி அழகால் காலையில் தோன்றும் ஞாயிற்றை ஒப்பான்,
``காலையே போன்றிலங்கும் மேனி; கடும்பகலின்
வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு - மாலையின்
தாங்குருவே போலும் சடைக்கற்றை; மற்றவற்கு
வீங்கிருளே போலும் மிடறு``1
என அம்மையாரும் அருளிச்செய்தார். தேவர் என்று எத்துணைப் பேர் உளரோ அத்துணைப் பேராலும் `இறைவன்` என்று ஏத்தப் படுபவன் அவன்; கருவுற்ற நாள்முதல் இன்றுகாரும் அவன் என்னைப் புரந்து வருதலால் எனக்குத் தந்தை. ஆகவே, அரைக்கணமேனும் அவனை நான் காணமல் எப்படியிருத்தல் கூடும்?
``பாணியில் வீணை பயின்றவர் வீரட்டம்
காணி லல்லதென் கண்துயில் கொள்ளுமே``2
என அப்பரும் அருளிச்செய்தார். அதனால் இவ்வுலக நிலை அவனை இடையறாது காணும் தன்மையுடைத்தாகாமையால் யான் `` என்று அழைத்து அரற்றிக் கதறுகின்றேன். எனது நிலைமையை அறிந்து கொள்ளாத உலகர், `துன்பத்திற்கு ஏதும் காரணம் இல்லாதிருக்கவும் இப்படி இவன் எப்பொழுது அழுது கொண்டிருக்கின்றான்; இவன் பித்துக் கொள்ளியல்லது வேறு யார்? என்று தங்களுக்குள் பேசிக்கொள்கின்றார்கள்.
*************************************************
பாடல் எண் : 4
புகுந்துநின் றான்எங்கள் புண்ணிய மூர்த்தி
புகுந்துநின் றான்எங்கள் போதறி வாளன்
புகுந்துநின் றான்அடி யார்தங்கள் நெஞ்சம்
புகுந்துநின் றானையே போற்றுகின் றேனே.

பொழிப்புரை : பல்வேறு வகைப்பட்ட அறங்களையெல்லாம் தனது வடிவாகக் கொண்டிருத்தலால் `அற ஆழி` எனப்படுபவனும், எல்லா வற்றையும் ஒருங்கேயறிதலால், பேரறிவாளன் - முற்றுணர்வினன்` எனப்படுபவனும், எல்லாப் பொருள்களிலும் தான் நீக்கம் அற நிறைந் திருப்பினும் அங்கெல்லாம் பாலல் நெய்போல விளங்காது நின்று, தன் அடியவர் உள்ளங்களில் தயிரில் நெய்போல விளங்கி நிற்பவனுமாய் இருப்பவன் எங்கள் சிவபெருமான். அவன் என் உள்ளத்திலும் புகுந்துவிட்டமையால் அவனையே தோத்திரித்து நிற்கின்றேன்.
*************************************************
பாடல் எண் : 5
பூதக்கண் ணாடி புகுந்திலன் போதுளன்
வேதக்கண் ணாடியில் வேறே வெளிப்படும்
நீதிக்கண் நாடி நினைவார் மனத்துளன்
கீதக்கண் ணாடியிற் கேட்டுநின் றேனே.

பொழிப்புரை : பூதக் கண் ஆடி - பூத காரியமாகிய `கண்` என்னும் ஆடி. இஃது உருவகம். இது முகத்தில் உள்ள கண்ணைக் குறித்தது. இக் கண்ணிற்கு அகப்படாதவன் சிவன். ஆயினும், போது - அடியார் களுடைய உள்ளக் கமலத்தில் என்றும் விளங்கியே நிற்கின்றான். வேதக் கண்ணாடி - வேதமாகிய கண்ணாடி. இதுவும் உருவகம். பொருள்களைத் தெளிவுற விளக்குதல் பற்றி வேதத்தைக் கண்ணாடியாக உருவகம் செய்தார். இஃது ஆகமத்தையும் உள்ளடக்கியதே. வேதாகமங்களை உணர்வார்க்குச் சிவன் அந்நூல்களின் பொருளாய், உணர்பவர்க்கு வேறாய் நின்று விளங்குகின்றான். இனி, நீதிக்கண் நாடி நினைவார் மனத்து - ``சிவன் - நீதி பலவும் தன்ன உருவாம் என மிகுத்த தவன்``1 என உணர்ந்து அந்த உணர்வு வடிவாகத் தமது அறிவினுட் காண்பவர் கட்கு அவன் அவர்தம் அறிவுக்கறிவாய், ஒன்றாகியே விளங்கு கின்றான். அத்தகையோனை நான் பலர் பாடும் தோத்திரப் பாடல் -களில் கேட்டுக் கண்ணாடி நிழலைத் தெளிவாக உணர்தல் போல உணர்ந்து நின்றேன். இங்குள்ள கண்ணாடி அதன் நிழலைக் குறித்த ஆகுபெயர். அந்நிழல், தெளிவாக உணரப் படுதற்கு உவமையாயிற்று.
*************************************************
பாடல் எண் : 6
நாமமொ ராயிரம் ஓதுமின் நாதனை
ஏமமொ ராயிரத் துள்ளே யிசைவீர்கள்
ஓமமொ ராயிரம் ஓதவல் லாரவர்
காமமோ ராயிரங் கண்டொழிந் தாரே.

பொழிப்புரை : `அளவற்ற மந்திரங்களை ஓத வல்லேம்` என்று சொல்லி, வேத வேள்விகளை அளவின்றிச் செய்தோர் யாவரும் அவற்றின் பயனாகிய போகங்களை அனுபவித்தலோடு போய் விட்டார்கள். ஆகவே, சிவனை அவனது அளவற்ற திருப்பெயர்களைச் சொல்லித் தோத்திரியுங்கள்; அளவற்ற இன்பத்தில் பொருந்துவீர்கள்.
*************************************************
பாடல் எண் : 7
நானா விதஞ்செய்து நாடுமின் நந்தியை
ஊனார் கமலத்தி னூடுசென் றப்புறம்
வானோர் உலகம் வழிபட மீண்டவன்
தேனார உண்டு தெவிட்டலும் ஆமே.

பொழிப்புரை : தேவருலகமும் உங்களை வழிபடுமாறு, நீவிர் உங்கள் உடம்பில் உள்ள ஆதார கமலங்களில் மந்திர ரூபமாய் நுணுகிச் சென்று, அவற்றிற்கு அப்பால் நிராதாரம், அதற்கப்பால் மீதானம் ஆகிய இடங்களை அடைந்து அங்கே நின்றுகொண்டு சிவனைப் பல்லாற்றானும் நினையுங்கள். அவ்வாறு நினைகின்றவர்களில் எவனாயினும் ஒருவன் மீண்டு கீழே வருவானாயின், அவன் மயக்கம் தருகின்ற மதுவை நிரம்ப உண்டு, அதன் கீழ்மையை உணர்ந்து வெறுப்படையும் நிலை உண்டாதலும் கூடும்.
*************************************************
பாடல் எண் : 8
வந்துநின் றான்அடி யார்கட் கரும்பொருள்
இந்திர னாதி இமையவர் வேண்டினும்
சுந்தர மாதர்த துழனிஒன் றல்லது
அந்தர வானத்தின் அப்புற மாமே.

பொழிப்புரை : (`தோத்திரம்` என்னும் அதிகாரத்தை முதலில் `தோத்திரத்தின் சிறப்புணர்த்துவது` என்னும் பொருளதாக வைத்து, முன் மந்திரம் வரையில் அதனையே கூறிவந்த நாயனார் தோத்திரத்தைக் கூறுவது` என்னும் பொருளதாக வைத்து, இது முதலாக வரும் மந்திரங்களில் தோத்திரமே செய்கின்றார். `இவ்வாற்றால் பிறரும் தோத்திரம் செய்யப் பயன்படும்` என்பது பற்றி திருவள்ளுவ நாயனாரும், `பெரியாரைப் பிழையாமை` என்ற ஓர் அதிகாரத்தை இரண்டு பொருளதாக வைத்துக் கூறியதைக் காணலாம்.) இவ்வுலகில் சிறந்தெடுத்துப் பேசப்படுகின்ற இன்ப ஆரவாரமே யல்லது பிறிதொரு சிறப்பும் இல்லாத விண்ணுலகச் சிற்றின்பத்தை, நூறு பரிமேதங்களை வேதம் நுவன்றவாற்றானே சிறிதும் குறையின்றி வருந்திச் செய்து இந்திர பதவி எய்துவோர் முதலாகப் பலர் மயக்கத்தால் விரும்பினாராயினும் தன் அடியவர்களால் மட்டுமே பெறப்படுகின்ற சிவன் தரும் இன்பமே அவ்விண்ணுலக இன்பங்கட் கெல்லாம் அப்பாற்பட்ட அரிய பெரிய இன்பமாகும்.
*************************************************
பாடல் எண் : 9
மண்ணிற் கலங்கிய நீர்போல் மனிதர்கள்
எண்ணிற் கலங்கி `இறைவன் இவன்` என்னார்
உண்ணிற் குளத்தின் முகந்தொரு பால்வைத்துத்
தெண்ணிற் படுத்தச் சிவன்அவன் ஆமே.

பொழிப்புரை : வானில் தெளிவாய் இருந்த நீர் மண்ணில் வீழ்ந்த வுடன் அம்மண்ணின் தன்மையைப் பெற்றுத் தன் தன்மை திரிந்தது போல, மக்களும் அநாதியே மும்மலச் சார்பினால் அறிவு கலங்கி, வேதாகமங்கள், ``சிவனொடொக் குந்தெய்வம் தேடினும் இல்லை; அவனொடொப்பார் இங்கு யாவரும் இல்லை`` என அறுதி யிட்டுரைக்கவும் அதனைத் தெளிய மாட்டாராய், ``அதேவர் தேவர் அவர் தேவர் என்றிங்ஙன் - பொய்த்தேவு பேசிப் புலம்புவார்`` ஆயினர். ஆயினும், பருகுதற்கு உரிய நீராக ஒருவன் குளத்தினின்றும் சிறிது நீரை எடுத்து இல்லத்தில் ஒரு பக்கத்தில் தேற்றாங் கொட்டை யிட்டுத் தெளிய வைப்பதுபோல நல்லாசிரியன் ஓரிடத்திலிருந்து, பல சொல்லி ஆரவாரியாது ஒரு சொல் உறுதியாற் சொல்லித் தெளிவித்த வழி. அங்ஙனம் தெளிவிக்கப்பட்டவன், `சிவனே தெய்வம்` என்று தெளிந்து சிவனை அடைந்து, சிவனே ஆய்விடுவான்.
*************************************************
பாடல் எண் : 10
மெய்த்தவத் தானை விரும்பும் ஒருவர்க்குக்
கைத்தலஞ் சேர்தரு நெல்லிக் கனியொக்கும்
சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற தேவர்கள்
அத்தனை நாடி அமைந்தொழிந் தேனே.

பொழிப்புரை : சிவன், மெய்த்தவத்தாலன்றிப் பொய்த்தவத்தால் அணுகப்படாதவன்; பிறிதொன்றை விரும்பாது தன்னையே விரும்பு -பவர்கட்கு அங்கை நெல்லிக் கனியென விளங்கி அதனோடேதானும் தூயனாய், அவரையும் தூய்மை செய்து இன்பப் பொருளாயும் இலங்குபவன். ஆகவே, நானும் அவனையே நாடிய காரணத்தால், ``அலையிலாத சாகரம் போலவும், அநிலம் இல்லா விளக்குப் போலவும்`` அலையின்றி அமைதியுற்றேன்.
*************************************************
பாடல் எண் : 11
அமைந்தொழிந் தேன் அள வில்புகழ் ஞானம்
சமைந்தொழிந் தேன் தடு மாற்றம்ஒன் றில்லை
புகைந்தெழும் பூதலம் புண்ணியன் நண்ணி
வகைந்து கொடுக்கின்ற வள்ளலு மாமே.

பொழிப்புரை : இம் மண்ணுலகம் தீக்குணங்கள் பலவும் மூண்டு எரியும் இடம். புண்ணியமே வடிவான சிவன் இதன்கண் தன் திருவடி தோயும்படி எழுந்தருளி வந்து மெய்ந்நெறிப் பொருளை வகை வகையாக வகுத்துத் தெளிவிக்கின்ற குருமூர்த்தியும் ஆவான். அத்தகைய குருவருளால் நான் அளவற்ற புகழையுடைய ஞானத்தைப் பெற்றுவிட்டேன். அதன் கண் எனக்குத் தடுமாற்றம் யாதும் இல்லை. எனவே, யான் அலைவு ஒன்றும் இன்றி, முழு அமைதியை உடையவனாயினேன்.
*************************************************
பாடல் எண் : 12
வள்ளல் தலைவனை வானநன் னாடனை
வெள்ளப் புனற்சடை வேத முதல்வனைக்
கள்ளப் பெருமக்கள் காண்பர் கொலோ என்றென்(று)
உள்ளத்தி னுள்ளே ஒளித்திருந் தாளுமே.

பொழிப்புரை : [தலைவனை, நாடனை, முதல்வனை என வந்த வற்றிற்கு, `இத்தன்மையேனாகிய என்னை` என்பதே கருத்தாகலான், இவை தன்மைக்கண் படர்க்கை வந்த இட வழுவமைதி.]
`ஒப்புயர்வற்ற தலைமையையும், சிற்பர வியோமத்தில் இருக்கும் இருப்பையும், வேதத்தைச் செய்த முதலாசிரியத் தன்மையும் உடையேனாகின்ற என்னை, எனது உண்மையை உணராது, தாங்களையே தலைவர்களாகக் கருதிக் கொண்டு செயற்படுகின்ற மாக்கள் என்று உணர்வார்களோ` என்னும் அருள் நோக்குடன் சிவபெருமான் உயிர்களின் உள்ளத்துள்ளே தோன்றாத் துணையாய் இழிந்து, காலம் வந்தபொழுது தோன்றி ஆட்கொள்கின்றான்.
*************************************************
பாடல் எண் : 13
ஆளும் மலர்ப்பதம் தந்த கடவுளை
நாளும் வழிபடும் நன்மையுள் நின்றவர்
கோளும் வினையும் அறுக்கும் குரிசிலின்
வாளும் மனத்தொடு வைத்தொழிந் தேனே.

பொழிப்புரை : [இங்கும் ``கடவுளை`` என வேறுபோலக் கூறப்பட்டதை, `கடவுளாகிய தன்னை` என ஒன்றுபடுத்தி உரைக்க.]
குறிப்புரை : நாளும் - நாள்தோறும். நன்மை - நன்றிச்செயல். ``தன்னை யறிவித்துத் தான்தானாச் செய்தானைப் - பின்னை மறத்தல் பிழையலது``1 என்றார் மெய்கண்ட தேவர். `நின்றவரது, குரிசிலினது` என ஆறாவது விரிக்க. கோள் - கிரக சாரம். ``கோட்பாலனவும், வினையும் குறுகாமை``2 என்றார் ஞானசம்பந்தரும். குரிசில் - சிவபிரான். அவன் தந்த வாள், ஞானம். ``நமன் வரின் ஞானவாள் கொண்டே எறிவன்``3 என முன்னருங் கூறினார் உம்மை, சிறப்பு `மனத்தொடு பொருந்த` என ஒருசொல் வருவிக்க.  இதனால், ஞானம் பெற்றபின்னும் தன்னை வழிபடுவாரைச் சிவன் கைவிடாது காக்கும் கருணை புகழ்ந்து கூறப்பட்டது. ``துறக்குமா சொலப்படாய், துருத்தியாய்``4 என்பதும் ஞானசம்பந்தர் வாக்கு.
*************************************************
பாடல் எண் : 14
விரும்பில் அவனடி வீர சுவர்க்கம்
பொருந்தில் அவனடி புண்ணிய லோகம்
திருந்தில் அவனடி தீர்த்தமு மாகும்
வருந்தி அவனடி வாழ்த்த வல்லார்க்கே.

பொழிப்புரை : ``கோழை மிடறாக, கவி கோளும் இலவான``5 நிலைமையை யுடையோரும் முயன்று, ``இசை கூடும் வகையால்``6 சிவனது திருவடிகளை வாழ்த்துபவர்கட்கு அவர்கள், `வீர சுவர்க்க இன்பம் எவ்வாறு உள்ளது` எனக் காண ஒரு கால் விரும்புவாராயின் அத்திருவடிகளே அதுவாய் நின்று அவர்கட்கு அதனைக் காட்டும். அங்கு அவர்கள் செல்ல வேண்டுவதில்லை.
இனிப் பொதுவான சுவர்க்க இன்பத்தைக் காண அவர்கள் அவ்வாற்றான் விரும்புவராயின் அதுவாயும் அத்திருவடிகள் நின்று இனிப்பிக்கும். தீர்த்தங்கள் பலவற்றில் சென்று மூழ்க அவர்கள் விரும்பு வராயின் அவையாயும் அத்திருவடிகள் அவர்கட்கு நின்று அவர்கள் விருப்பத்தை நிறைவு செய்யும்.
*************************************************
பாடல் எண் : 15
வானகம் ஊடறுத் தான் இவ் வுலகினில்
தானகம் இல்லாத் தனியாகும் போதகன்
கானக வாழைக் கனிநுகர்ந் துள்ளுறும்
பானகச் சோதியைப் பற்றிநின் றேனே.

பொழிப்புரை : ஞானாசிரியன் தனது ஞானத்தால் அண்டங் கடந்த பொருளாய் உள்ளான். அவன் இவ்வுலகத்தில் இருப்பினும் ஏனையோர் போல `யான், எனது` என்னும் பற்றுடையவன் ஆகாது, பற்றற்றுத் தூயனாய் இருக்கின்றான். அவன் தந்த மலைவாழைக் கனியை நுகர்ந் -தமையால், நான் என்னுள்ளே ஊறுகின்ற அமுதமாயும், ஒளியாயும் உள்ள அம்மெய்ப் பொருளைப் பற்றி அசைவின்றி நிற்கின்றேன்.
*************************************************
பாடல் எண் : 16
விதியது மேலை யமரர் உறையும்
பதியது பாய்புனற் கங்கையும் உண்டு
துதியது தொல்வினைப் பற்றறு விக்கும்
மதியது வவ்விட்ட(து) அந்தமும் ஆமே.

பொழிப்புரை : ஓர் அறிவு எனது அறிவைத் தன்னுள் விட்டது. அஃது எல்லாப் பொருள்கட்கும் அதுவது இயங்குதற்குரிய நெறி முறைகளை வகுப்பது. சுவர்க்க லோகத்தில் வாழும் அமரர்கட்கு மேலான அமரர்கள் வாழ்கின்ற அந்த உலகத்தில் அஃது உள்ளது. அதன் சடை முடியில் வேகமாகப் பரந்து பாய்கின்ற வெள்ள நீர் அடங்கிக் கிடக்கின்றது. யார் யார் எந்த எந்த பெயரைச் சொல்லிப் புகழ்ந்தாலும் அந்தப் புகழ்ச்சிகளையெல்லாம் உண்மையில் தன்னுடையனவாகவே உடையது. அது பழவினையாகிய கட்டினை ஆசானைக் கொண்டு அறுப்பிக்கும். கடைசியாக எல்லாப் பொருட்கும் அதுவே புகலிடமாய் உள்ளது.
*************************************************
பாடல் எண் : 17
மேலது வானவர் கீழது மாதவர்
தானிடர் மானுடர் கீழது மாதனம்
கானது கூவிள மாலை கமழ்சடை
ஆனது செய்யும் எம் ஆருயிர் தானே.

பொழிப்புரை : மேலே உள்ள வானத்தில் வாழ்பவரும் கீழே உள்ள நிலத்தில் வாழும் பெருந்தவத்தோரும் தவம் இன்மையால் துன்புறுகின்ற உலகரும் ஆகிய அனைவர்க்கும் வெளித்தோன்றாது புதைந்துள்ளது ஒரு பெருநிதி. அது வில்வமாலை மணக்கும் சடையை உடையது. எங்கட்கு ஆவனவற்றையெல்லாம் அது தானாகவே செய்யும். அதுவே எங்கட்கு அரிய உயிர்.
*************************************************
பாடல் எண் : 18
சூழுங் கருங்கடல் நஞ்சுண்ட கண்டனை
ஏழின் இரண்டிலும் ஈசன் பிறப்பிலி
ஆழும் சுனையும் அடவியும் அங்குளன்
வாழும் எழுத்தைந்தின் மன்னனு மாமே.

பொழிப்புரை : `நஞ்சத்தை உண்டமையால் கருமை நிறம் பெற்ற கண்டத்தை உடையவன்` எனச் சொல்லப்படுகின்ற அந்தச் சிவனையே கருமை நிறம் பொருந்திய கடல் சூழ்ந்து நிற்கின்றது என்றது, `நில உலகச் சிவன் கறைமிடற்றண்ணல்` என்றபடி. இவன், `சீகண்ட பரம சிவன்` எனப்படுவான். `பிரமாண்டம்` எனப் பெயர் பெற்ற இந்த அண்டத்தில் உள்ள, கீழ் ஏழ், மேல் ஏழ் ஆகிய பதினான்கு உலகங்கட்கும் இவனே மகேசுரன்; பிறப்பிறப்பில்லாத பரமசிவன். ஆழ்ந்த சுனைகளையும், காடுகளையும் உடைய கயிலாய மலையில் இவன் எழுந்தருளியிருக்கின்றான். மேலும் இவ்வுலகில் உள்ளார் ஓதும் திருவைந்தெழுத்து மந்திரத்திற்கு முதல்வனும் இவனே.
*************************************************
பாடல் எண் : 19
உலகம தொத்துமண் ஒத்(து) உயர் காற்றை
அலகதிர் அங்கிஒத்(து) ஆதிப் பிரானும்
நில(வு) இயல் மாமுகில் நீர்ஓத்தும் ஈண்டல்
செலவொத்(து) அமர்திகைத் தேவர் பிரானே.

பொழிப்புரை : எல்லாப் பொருள்கட்கும் முதலாயுள்ள சிவன் நிலம், நீர், தீ, காற்று, வானம், ஞாயிறு, திங்கள் என்னும் பொருள்களாக அவற்றுடன் ஒன்றாய்க் கலந்திருத்தலால், எல்லா உயிர்களும் அவனேயாய், அவை செல்லும் நெறிகளிலும் அவற்றோடு உடனாய் உதவி புரிந்து எண்திசைக் காவலர்கட்கும் தலைவனாய், உலக முதல்வன் ஆயினான்.
*************************************************
பாடல் எண் : 20
பரிசறிந் தங்குளன் அங்கி அருக்கன்
பரிசறித் தங்குளன் மாருதத் தீசன்
பரிசறிந் தங்குளன் மாமதி ஞானப்
பரிசறிந் தன்னிலம் பாரிக்கு மாறே.

பொழிப்புரை : தீக்குத் தலைவனாகிய தீக் கடவுள், கதிர்க்குத் தலைவனாகிய கதிர்க் கடவுள். மதிக்குத் தலைவனாகிய மதிக்கடவுள், மற்றும் காற்றிற்குத் தலைவனாகிய காற்றுக் கடவுள் ஆகியோரும், நிலத்திற்குத் தலைவியாகிய நிலமகள், `எல்லாப் பொருள்களையும் தாங்கும் திண்மையை எனக்கு அருளியவன் சிவன்` என்னும் உண்மை யுணர்வோடே எல்லாவற்றையும் தாங்குதல் போலவே`` தாம் தாம் தீ முதலாக மேற்கூறியவற்றிற்குத் தலைவராய் இருந்து, அவற்றின் செயல்களைச் செய்வித்து வருகின்றனர்.
*************************************************
பாடல் எண் : 21
அந்தம் கடந்தும் அதுவது வாய்நிற்கும்
பெந்த உலகினிற் கீழோர் பெரும் பொருள்
தந்த உலகெங்குந் தானே பராபரன்
வந்து படைக்கின்ற மாண்பது வாமே.

பொழிப்புரை : தான் படைத்த உலகத்திற்குத் தானே முன்னைப் பழம் பொருளும், பின்னைப் புதுப் பொருளுமாய்,1 நிற்கும் சிவன், தான் தன் மேல்நிலையினின்றும் இறங்கி வந்து உலகத்தைப் படைக்கின்ற முறை அதுவாகும் (அஃதாவது, `உலகத்திற்கு அது தோன்றும் இடமும், பின் ஒடுங்கும் இடமும் தானேயன்றிப் பிறரில்லாத தனியொரு முதல்வன்` என்பதாம்.) அவன் உலகத்திற்கு வித்தாகிய மாயையின் வியாபகத்தைக் கடந்து அப்பால் உள்ளவ -னாயினும் அசுத்த உலகமாகிய இந்தப் பிரகிருதி புவனத்தில் உள்ளவர்கட்கும் அவனே முதல்வன்.
*************************************************
பாடல் எண் : 22
முத்தண்ட ஈரண்ட மேமுடி யாயினும்
அத்தன் உருவம் உலகே ழெனப்படும்
அத்தன்பா தாள அளவுள்ள சேவடி
மத்தர் அதனை மகிழ்ந்துண ராரே.

பொழிப்புரை : மூன்றும், இரண்டும் ஆக ஐந்தாய உலகங்களே அனைத்துலகங்கட்கும் முடியாய், `சிவனுக்கு உரியன` என்று சொல்லப்பட்டாலும், எல்லா உலகங்களுமே அவனுக்கு உருவமாகும். அப்படிப் பார்க்கின்றபொழுது, பிருதிவி அண்டத்தில் அதன் கீழ்ப் பகுதியாகச் சொல்லப்படுகின்ற பாதாள உலகங்களே அவனுக்குத் திருவடியாம். (சிவ தத்துவ உலகமே முடியாதல் முதலடியிற் கூறியதனானே பெறப்பட்டது.) அறியாமையுடையவர்கள் இந்த உண்மையை அறிந்து மகிழ்வெய்தும் நிலையில்லாதவராவர்.
*************************************************
பாடல் எண் : 23
ஆதிப் பிரான்நம் பிரான் இவ்வகலிடச்
சோதிப் பிரான்சுடர் மூன்றொளி யாய்நிற்கும்
ஆதிப் பிரான்அண்டத் தப்பும் கீழவன்
ஆதிப் பிரான்நடு வாகிநின் றானே.

பொழிப்புரை : அனைத்துலகங்களும் ஒடுங்கிய பின்னும் தான் ஒடுங்காது, ஒடுங்கிய உலகம் மீளத் தோன்றுதற்கு முதல்வனாய் உள்ளவன் எவனோ அவனே நமக்குப் பெருமான். அவன், விரிந்த இடத்தையுடைய இந்த உலகத்திற்கு விளக்காய் உள்ள `கதிர், மதி, தீ` என்னும் மூன்றிற்கும் ஒளியைத் தரும் பேரொளிப் பெருமான்; முன் மந்திரத்திற் கூறியவாறு விசுவ ரூபியாய் நிற்றலேயன்றி, விசுவாதி கனாய், அனைத்துலகங்களையும் கடந்து அவற்றிற்குமேலும், கீழும் இருக்கின்றான். இனி மேற்கூறியவாறு அவற்றினுள்ளும் விசுவ ரூபியாயும் இருக்கின்றான்.
*************************************************

மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா

1 comment:

  1. Las Vegas Sands Casino | Tournaments - SegaCasino.com
    The Sands Casino is a 카지노사이트 3-reel, five-row, 샌즈카지노 25-table casino featuring a 30-story, 1,200 room gaming arcade worrione and a 60000 square foot gaming

    ReplyDelete

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!