http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Sunday, 20 May 2012

திருமந்திரம்-தந்திரம்04:பதிகம் எண்:02/3. திருவம்பலச் சக்கரம் (பாடல்கள்:47-70/89)பாகம்-III







 
பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
================================================================== 

நான்காம் தந்திரம்:பதிக எண்:01: அசபை ..............................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:02: திருவம்பலச் சக்கரம் ....பாடல்கள்: 089
========================================================(030+089=119)
நான்காம் தந்திரம்-பதிகம் எண்:02. திருவம்பலச் சக்கரம் (பாடல்கள்:47-70/89)பாகம்-III
பாடல் எண் : 47
அருவினில் அம்பரம் அங்கெழும் நாதம்
பெருகு துடியிடை பேணிய விந்து
மருவி யகார சிகாரம் நடுவாய்
உருவிட ஆறும் உறுமந் திரமே.

பொழிப்புரை :  சிவம் சூக்குமமான நிலையில் பரவெளியாய் நிற்க, அதன்கண் நாதம் தோன்றும். பின்பு சத்தி அச்சிவத்தைவிட தூலமாய் அவ்வெளியினுள் தோன்ற, அதனிடத்து விந்து தோன்றும். ஆகவே, அப்பெற்றியவாய நாத விந்துக்களின் நடுவில் சிகார யகாரங்கள் பொருந்தி நிற்க நின்ற ஆறு எழுத்துக்களும் உயர்ந்த மந்திரமாய் விளங்கும்.
=============================================
பாடல் எண் : 48
விந்துவும் நாதமும் மேவி உடன்கூடிச்
சந்திர னோடே தலைப்படு மாயிடின்
அந்தர வானத் தமுதம்வந் தூறிடும்
அங்குதி மந்திரம் ஆகுதி யாமே.

பொழிப்புரை :  விந்துவும், நாதமும் திருவைந்தெழுத்து மந்திரத்தோடு ஒருசேரப் பொருந்திச் சந்திர மண்டலமாகிய ஆயிர இதழ்த் தாமரையுள்ள தலையை அடையுமாயின் நிராதாரத்தில் உள்ள தேவாமிர்தமாகிய சிவன் இன்ப ஊற்றாய் வெளிப்படுவான். அவனுக்கு அவ்விடத்து நினைக்கப்படுகிற அந்த மந்திர செபமே வேள்வியாய் அமையும்.
=============================================
பாடல் எண் : 49
ஆறெழுத் தோதும் அறிவார் அறிகிலர்
ஆறெழுத் தொன்றாக ஓதி உணரார்கள்
வேறெழுத் தின்றி விளம்பவல் லார்கட்கு
ஓரெழுத் தாலே உயிர்பெறல் ஆமே.

பொழிப்புரை :  திருவைந்தெழுத்தைப் பிரணவத்தோடு சேர்த்து ஆறெழுத்தாக ஓதி உணரும் உணர்வின் பயனை அறிபவர் உலகில் ஒருவரும் இல்லை. அதனால், அந்த மந்திரத்தை ஒப்பற்ற ஒன்றாகக் கொண்டு ஓதிப் பெறும் உணர்வையும் யாரும் அடைவதில்லை. வேறு மந்திரத்தை அதற்கு நிகரானதாக நினையாமல் அந்த மந்திரம் ஒன்றையே ஓத வல்லவர்கட்கு அதன்கண் உள்ள ஓர் எழுத்தாலே ஆன்ம லாபத்தைப் பெறுதல் இயையும்.
=============================================
பாடல் எண் : 50
ஓதும் எழுத்தோ டுயிர்க்கலை மூவைஞ்சும்
ஆதி எழுத்தவை ஐம்பதோ டொன்றென்பர்
சோதி எழுத்தினில் ஐயிரு மூன்றுள
நாத எழுத்திட்டு நாடிக்கொள் ளீரே.

பொழிப்புரை :  உச்சரிக்கும் எழுத்தாகிய அகாரத்தோடு ஏனைய பதினைந்தும் உயிரெழுத்துக்களாம்; ஆயினும், `மூல எழுத்துக்கள் ஐம்பத்தொன்று` என்று மந்திர நூலார் கூறுவர். அவையெல்லாம் எவ்வாறாயினும், முதல்வனுக்குரிய முதன்மை மந்திரத்தில் மேற் சொல்லிய ஆறெழுத்துக்களே உள்ளன. அவற்றை நால்வகை வாக்கிலும் வைத்து ஆராய்ந்து கொள்ளுங்கள்.
=============================================
பாடல் எண் : 51
 விந்துவி லும்சுழி நாதம் எழுந்திடப்
பந்தத் தலைவிபதி னாறு கலையதாய்க்
கந்தர வாகரம் கால்உடம் பாயினாள்
அந்தமும் இன்றியே ஐம்பத்தொன் றாயதே.

பொழிப்புரை :  சுத்த மாயையினின்றும் ஓங்காரமாய் நாதம் தோன்ற, அந்த நாதத்தின் தலைவியாகிய குண்டலினி சக்தி, பதினாறு கலைகளையுடைய பிரணவமே தானாகி மக்களது உடம்பில் `தலை, கால், உடல்` என்னும் உறுப்புக்களில் நிற்கின்றாள். அவள் ஒன்றி நிற்கப் பெறுதலே பிரணவம் அழிவின்றி மேற்கூறிய ஐம்பத்தோரெழுத்தாயிற்று.
=============================================
பாடல் எண் : 52
ஐம்ப தெழுத்தே அனைத்துவே தங்களும்
ஐம்ப தெழுத்தே அனைத்தா கமங்களும்
ஐம்ப தெழுத்தேயும் ஆவ தறிந்தபின்
ஐம்ப தெழுத்தும்போய் அஞ்செழுத் தாமே.

பொழிப்புரை :  மேற் சொல்லிய ஐம்பத்தோரெழுத்துக்களே வேதம், ஆகமம் அனைத்துமாய் நிற்கும். அவ் உண்மையை உணர்ந்த பின் `ஐம்பதெழுத்து அல்லது ஐம்பத்தோரெழுத்து` என்றெல்லாம் எண்ணுகின்ற அலைவு நீங்கி, `ஐந்தெழுத்து` என்று உணர்ந்து நிற்கின்ற அடக்கம் உண்டாகும்.
=============================================
பாடல் எண் : 53
அஞ்செழுத் தால்ஐந்து பூதம் படைத்தனன்
அஞ்செழுத் தால்பல யோனி படைத்தனன்
அஞ்செழுத் தால்இவ் வகலிடம் தாங்கினன்
அஞ்செழுத் தாலே அமர்ந்துநின் றானே.

பொழிப்புரை :  சிவபெருமான் தத்துவங்களைப் படைத்தும், அவற்றின் காரியமாகிய எண்பத்து நான்கு நூறாயிர வகைப் பிறவிகளான உடம்புகளையும் ஆக்கி உயிர்கட்குத் தந்தும், அவைகளைக் காத்தும், அவ்வுயிர்கள் தன்னை மன மொழி மெய்களால் வழிபட்டு நலம் பெறுதற் பொருட்டுத் திருமேனி கொண்டு எழுந்தருளியிருப்பதும் ஆகிய எல்லாம் திருவைந்தெழுத்தாலேயாம்.
=============================================
பாடல் எண் : 54
வீழ்ந்தெழல் ஆம்விகிர் தன்திரு நாமத்தைச்
சோர்ந்தொழி யாமல் தொடங்கும் ஒருவற்குச்
சார்ந்த வினைத்துயர் போகத் தலைவனும்
போந்திடும் என்னும் புரிசடை யோனே.

பொழிப்புரை :  சிவனது திருப்பெயராகிய திருவைந்தெழுத்தைத் தளர்ச்சியின்றி ஓத உறுதிபூண்டு நிற்பவர்கட்கு, வினைக்குழியில் வீழ்ந்து கிடந்தாலும் எழுந்து கரையேறுதல் கூடுவதாம். மேலும் அப்பெருமான் அவர்களை வினைத்துன்பம் விட்டொழியுமாறு தன்மாட்டு அழைத்து ஆண்டுகொள்வான்.
=============================================
பாடல் எண் : 55
உண்ணும் மருந்தும் உலப்பிலி காலமும்
பண்ணுறு கேள்வியும் பாடலு மாய்நிற்கும்
விண்ணின் றமரர் விரும்பி அடிதொழ
எண்ணின் றெழுத்தஞ்சு மாகிநின் றானே.

பொழிப்புரை :  சிவபெருமான், தேவர்கள் தன்னை விண்ணுலகத்தில் விருப்பத்தோடு அடிபணிய, அவர்கட்கு அவர்கள் உண்ணுகின்ற அமுதமாயும், அதன் பயனாகிய நீண்ட வாழ்நாளாயும், அவர்கட்கு விருப்பத்தைத் தருகின்ற இசையாயும், பாட்டாயும் நிற்றலேயன்றி, அவர்களது கருத்தில் நிற்கும் திருவைந்தெழுத்தாயும் நின்று மேலை மந்திரத்திற் கூறிய பயன்களை அளிப்பன்.
=============================================
பாடல் எண் : 56
ஐந்தின் பெருமையே அகலிட மாவதும்
ஐந்தின் பெருமையே ஆலய மாவதும்
ஐந்தின் பெருமையே அறவோன் வழக்கமும்
ஐந்தின் வகைசெயப் பாலனும் ஆமே.

பொழிப்புரை :  உலகம் நிலைபெற்றிருத்தலும் கல் முதலியவற்றால் கட்டப்பட்டு அமைந்த இடங்கள் சிவபெருமானது அருள் நிலையங் களாதலும், அந்நிலையங்களில் அவன் விளங்கி நின்று, வேண்டு வார்க்கு வேண்டுவன வழங்குதலும் திருவைந்தெழுத்தாலேயாகும். இனி, அதனை அதன் வகை பலவற்றையும் அறிந்து ஓத, அப்பெருமான் அங்ஙனம் ஓதுவாரது பக்கத்திலே எப்பொழுதும் இருப்பவனாவான்.
=============================================
பாடல் எண் : 57
வேரெழுத் தாய்விண்ணாய் அப்புற மாய்நிற்கும்
நீரெழுத் தாய்நிலம் தாங்கியும் அங்குளன்
சீரெழுத் தாய்அங்கி யாய்உயி ராம்எழுத்
தோரெழுத் தீசனும் ஒண்சுட ராமே.

பொழிப்புரை :  சிவபெருமான் நாத எழுத்தாகிய பிரணவமாய் அதன் வழியே வானத்தில் பொருந்தி எல்லாப் பொருட்கும் வியாபகமாய் நிற்பான். நீரெழுத்தாகிய நகாரமாய் அதன்வழியே நீரில் பொருந்தி அதன்வழியே பொருள்களைப் பதம் செய்வான். நிலவெழுத் தாகிய மகாரமாய் அதன்வழியே நிலத்திற் பொருந்தி எல்லாவற்றையும் தாங்குவான். நெருப்பெழுத்தாகிய சிகாரமாய் அதன் வழியே நெருப்பில் பொருந்திப் பொருள்களைச் சுட்டுப் பக்குவப் படுத்துவான். காற்றெழுத்தாகிய வகாரமாய் அதன் வழியே காற்றிற் பொருந்திப் பரந்து சலித்துப் பொருள்களைத் திரட்டுவான். எஞ்சிய ஓரெழுத்தாய யகாரமாய் அதன்வழியே ஆன்மாவிலும், இருசுடரிலும் பொருந்தி அறிதலும், ஒளிவீசலும் செய்வான்.
=============================================
பாடல் எண் : 58
நாலாம் எழுத்தோசை ஞாலம் உருவது
நாலாம் எழுத்தினுள் ஞாலம் அடங்கிற்று
நாலாம் எழுத்தே நவிலவல் லார்கட்கு
நாலாம் எழுத்தது நன்னெறி தானே.

பொழிப்புரை :  மேற்கூறிய எழுத்துக்களில் பிரணவம் நீங்க நகாரம் முதலாக முறையானே நின்ற ஐந்தெழுத்துக்களில் இறுதி நின்ற யகாரம் ஒழித்து நான்காய்நின்ற எழுத்துக்களது ஓசையே உலகெங்கும் வியாபிப்பது. அதனால், எல்லா உலகமும் அவ்வெழுத்திற்குள்ளே அடங்கியுள்ளன. அதனால், அவற்றாலாய அவ்வோசையின் பெருமை அறிந்து அதனையே ஓதவல்லவர்கட்கு அதுவே நன்னெறியாய் நன்மை பயக்கும்.
=============================================
பாடல் எண் : 59
இயைந்தனள் ஏந்திழை என்உளம் மேவி
நயந்தனள் அங்கே நமசிவ என்னும்
பயந்தனை ஓரும் பதமது பற்றும்
பெயர்த்தனன் மற்றுப் பிதற்றறுத் தேனே.

பொழிப்புரை :  மேற்கூறியவாறு யான் அந்நான்கு எழுத்தையே ஓதினமையால் சிவசத்தி என்னிடத்து வந்து பொருந்தி, எனது உள்ளத்தை இடமாகக் கொள்ள விரும்பி, அங்ஙனம் அதன்கண்ணே அமர்ந்தாள். அதனால், யான் எனது சீவநிலையினின்று நீங்கினேன். பிறமந்திரங்களைப் பல்வேறு பயன் குறித்துப் பிதற்றுதலையும் ஒழித்தேன். ஆகவே, நீவிரும் `நமசிவ` என்று ஓதுதலின் பயனை ஆய்ந்து உணர்மின்; உணர்ந்து அம்மந்திரத்தைப் பற்றுமின்.
=============================================
பாடல் எண் : 60
ஆமத் தினிதிருந் தன்ன மயத்தினை
ஓமத்தி லேஉதம் பண்ணும் ஒருத்திதன்
நாம நமசிவ என்றிருப் பாருக்கு
நேமத் தலைவி நிலவிநின் றாளே.

பொழிப்புரை :  அரிசி முதலியவற்றில் உடலுக்கு நலந்தரும் பொருளாய் நின்று, அவை சோறு முதலியனவாய்ப் பக்குவப்பட்ட பின்பு அவற்றை, வயிற்றுத்தீ வேள்வித் தீயாகுமாறு அதில் நின்று அவிசாகச் சீரணிப்பிக்கின்ற அத்தன்மையளான திரோதான சத்திக் குரிய நகாரம் முதலாக நின்ற அந்நான்கெழுத்தே துணை என்று இருப்பவர்கட்குச் சிவசத்தி அவர்களது வழிபாட்டின் பயனைத் தரும் முதல் வியாய் நீங்காது நிற்பாள்.
=============================================
பாடல் எண் : 61
பட்ட பரிசே பரன்அஞ் செழுத்தின்
இட்டம் அறிந்திட் டிரவு பகல்வர
நட்டம தாடும் நடுவே நிலயங்கொண்
டட்டதே சப்பொருள் ஆகிநின் றானே.

பொழிப்புரை :  சிவன், `ஐம்பூதம், இருசுடர், ஆன்மா` என்னும் உலகப் பொருள் எட்டுமாய் நிற்பவன் ஆதலால், அவரவர் விருப்பத்தை உணர்ந்து அவரவர் மேற்கொள்ளப்பட்ட வகையிலே அமைந்த அஞ்செழுத்தின் உள் நின்று இரவும் பகலும் ஆகிய காலங்கள் மாறிமாறித் தொடர்ந்துவர இடையறாது நடம் புரிந்து நிற்பான்.
=============================================
பாடல் எண் : 62
அகாரம் உயிரே உகாரம் பரமே
மகாரம் மலமாய் வரும்முப்பத் தாறில்
சிகாரம் சிவமா வகாரம் வடிவா
யகாரம் உயிரென் றறையலும் ஆமே.

பொழிப்புரை :  முப்பத்தாறு தத்துவங்களில் ஆன்ம தத்துவம் இருபத்து நான்கும் அகாரத்தைப் பற்றியும், சிவ தத்துவம் ஐந்தும் உகாரத்தைப் பற்றியும், வித்தியா தத்துவம் ஏழும் மகாரத்தைப் பற்றியும் நிற்கும். இனித் திருவைந்தெழுத்தில் சிறப்புடைய மூன்றில் அவ்வாறின்றிச் சிகாரம் சிவமும், வகாரம் சத்தியுமேயாக, யகாரம் ஆன்மாவேயாம் என்று சொல்லுதலும் கூடும்.
=============================================
பாடல் எண் : 63
நகார மகார சிகாரம் நடுவா
வகாரம் இரண்டு வளியுடன் கூடி
ஒகாரம் முதற்கொண் டொருகால் உரைக்க
மகார முதல்வன் மனத்தகத் தானே.

பொழிப்புரை :  நகார மகாரங்களை முன்னர் உடைய சிகாரம் நடுவணதாய் நிற்க, அவற்றின் பின்னதாகிய வகாரம் இடைகலை, பிங்கலை என்னும் இரு வாயுக்களுடன் பொருந்தி, ஓங்காரத்தை முதற்கண்ணே பெற்று ஓதப்படின், மேற்கூறிய எழுத்துக்களில் மகாரத்திற்கு முதல்வனாய் நின்று அதனைப் பரிபாகப்படுத்திவரும் சிவன், அங்ஙனம் ஓதுவாரது உள்ளத்தைத் தனக்கு இடமாகக் கொண்டு எழுந்தருளியிருப்பான்.
=============================================
பாடல் எண் : 64
அஞ்சுள ஆனை அடவியுள் வாழ்வன
அஞ்சுக்கும் அஞ்செழுத் தங்குச மாவன
அஞ்சையுங் கூடத் தடுக்கவல் லார்கட்கே
அஞ்சாதி ஆதி யகம்புகல் ஆமே.

பொழிப்புரை :  ஒரு காட்டில் வாழ்வனவாகிய ஓர் ஐந்து யானைகள் உள்ளன. அவைகளை அடக்குதற்குச் சிவ நாமத்தில் உள்ள ஐந்து எழுத்துக்களே அங்குசங்களாய் உதவும். அந்த அங்குசத்தைக் கொண்டு அவைகளை முழுதும் அடக்கவல்லவர்கட்கே ஐந்து பூதம் முதலிய தத்துவங்கட்கு முதல்வனும், முதற்கடவுளுமாகிய சிவனது இடத்தில் புகுதல் கூடும்.
=============================================
பாடல் எண் : 65
ஐந்து கலையில் அகராதி தன்னிலே
வந்த நகராதி மாற்றி மகாராதி
நந்தியை மூலத்தே நாடிப் பரையொடும்
சந்திசெய் வார்க்குச் சடங்கில்லை தானே.

பொழிப்புரை :  நிவிர்த்தி முதலிய ஐந்து கலைகளில் உள்ள அகரம் முதலிய எழுத்துக்களில் சிலவாயுள்ள நகாரம் முதலிய ஐந்தெழுத்துக்களை அம்முறையில் நில்லாது பிரணவம் முதலாக மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களிலும் முறையே நிற்க மாற்றி வைத்து, தடத்த சிவனை மூலாதாரம் முதலாகவே திரோதன சத்தியோடுகூடத் தியானித்து, இவ்வாறு சந்தியா காலங்களில் வழிபடுபவர்க்கு வேறு சந்தியாவந்தனம் முதலிய சடங்குகள் வேண்டுவதில்லை.
=============================================
பாடல் எண் : 66
மருவுஞ் சிவாயமே மன்னும் உயிரும்
அருமந்த யோகமும் ஞானமு மாகும்
தெருள்வந்த சீவனார் சென்றிவற் றாலே
அருள்தங்கி அச்சிவ மாவது வீடே.

பொழிப்புரை :  உயிர்கள் சிவனை அடைவதற்கு வாயிலாகப் பொருந்திய, `சிவாய` என்னும் மூன்றெழுத்துக்களே உயிர்கட்கு உயிரும், கிடைத்தற்கரிய யோகமும், ஞானமுமாய்ச் சிறந்து நிற்பன. இவ்வுண்மையைப் பரிபாகம் வரப்பெற்றமையால் நகர மகரங்களின் நீங்கி யகரமாய் நின்ற உயிர், வகரமாகிய அருளிலே தங்கிப் பின் சிகரமாகிய சிவத்தை அடைந்து அதுவாய் விடுதலே வீடுபேறாம்.
=============================================
பாடல் எண் : 67
அஞ்சுக அஞ்செழுத் துண்மை அறிந்தபின்
நெஞ்சகத் துள்ளே நிறையும் பராபரம்
வஞ்சகம் இல்லை மனைக்கும் அழிவில்லை
தஞ்சம் இதுஎன்று சாற்றுகின் றேனே.

பொழிப்புரை :  ஐந்து மலங்களும் நீங்கிப் போகும்படி அஞ்செழுத்தின் பொருளை எவரேனும் அறிந்தபின், இறைவன் அவர்களது நெஞ்சத்தில் நிரம்பி விளங்குவான். அவர்களது உறைவிடத்திற்கும் `அழிவு` என்பது உண்டாகாது. ஆகையால், இந்த மந்திரமே யாவர்க்கும் புகலிடமாகும். நான் உண்மையாகவே சொல்லுகின்றேன்; இதில் சிறிதும் பொய்யில்லை.
=============================================
பாடல் எண் : 68
சிவாயவொ டவ்வே தெளிந்துளத் தோதச்
சிவாயவொ டவ்வே சிவனுரு வாகும்
சிவாயவொ டவ்வும் தெளியவல் லார்கள்
சிவாயவொ டவ்வே தெளிந்திருந் தாரே.

பொழிப்புரை :  மேற்கூறிய ``சிவாய`` என்னும் மூன்றெழுத்தை `` என்னும் வித்தெழுத்தோடு ஒரு மந்திரமாகத் தெளிந்து, அங்ஙனமே ஓதினால், அம்மந்திரமே சிவனது வடிவாய் விளங்கும். அதனால், அத்தெளிவை உடையவர்கள் பிற மந்திரங்களைத் தெளிதல் இல்லை.
=============================================
பாடல் எண் : 69
சிகார வகார யகார முடனே
நகார மகார நடுவுற நாடி
ஒகார முடனே ஒருகால் உரைக்க
மகார முதல்வன் மதித்துநின் றானே.

பொழிப்புரை :  மேல், ``நகார மகார சிகார நடுவாய்`` (959) என்ற மந்திரத்தின் பொருளே இதன் பொருளாகும்.
=============================================
பாடல் எண் : 70
நம்முதல் ஓரைந்தின் நாடுங் கருமங்கள்
அம்முதல் ஐந்தில் அடங்கிய வல்வினை
சிம்முதல் உள்ளே தெளியவல் லார்கட்குத்
தம்முத லாகும் சதாசிவன் றானே.

பொழிப்புரை :  நகாரம் முதலாக நின்ற ஐந்தெழுத்து மந்திரத்தால் நினைத்த செயல் கைகூடும்; எவ்வாறெனில், ஆன்மாக்களுக்குப் பயனை விளைக்கின்ற வினைகள் அதன்கண் அடங்கியிருத்தலால். சிகாரம் முதலாக நின்ற மேற்கூறிய மூன்றெழுத்து மந்திரத்தில் அவையின்மையால், அதனைத் தெளிந்து ஓத வல்லவர்கட்கு உண்மை முதல்வனாகிய சதாசிவ மூர்த்தியே தலைவனாய் நிற்பான்; என்றது, `அபரமுத்திப் பெரும் பயன் உளதாகும்` என்றவாறு.
=============================================


மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!