http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Sunday, 20 May 2012

திருமந்திரம்-தந்திரம்04: பதிகம் எண் :05/2. சத்தி பேதம் (பாடல்கள்:16-30/30)பாகம் II








பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.

பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
================================================================== 

நான்காம் தந்திரம்:பதிக எண்:01: அசபை ............................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:02: திருவம்பலச் சக்கரம் ...பாடல்கள்: 089
நான்காம் தந்திரம்:பதிக எண்:03: அருச்சனை........................பாடல்கள்: 012
நான்காம் தந்திரம்:பதிக எண்:03: அருச்சனை.....................பாடல்கள்: 012
நான்காம் தந்திரம்:பதிக எண்:04: நவகுண்டம்....................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:05: சத்தி பேதம்....................பாடல்கள்: 030
======================================================(161+030=191)
நான்காம் தந்திரம்-பதிகம் எண்:05/2. சத்தி பேதம்.

(பாடல்கள்:16-30/30)பகுதி-II

பாடல் எண் : 16
தலைவி தடமுலை மேல்நின்ற தையல்
தொலைவில் தவம்செய்யும் தூய்நெறித் தோகை
கலைபல ஏன்றிடும் கன்னி என் உள்ளம்
நிலைபெற இங்கே நிறைந்துநின் றாளே.

பொழிப்புரை :  `வழிபாடுகளின் தலைவி` என மேற்கூறப்பட்ட திரிபுரை கொங்கைகள் விம்ம நிற்பவள்; அழிவில்லாத தவத்தைச் செய்யும் தூய நெறியை உடையவள்; நூல்கள் பலவற்றையும் தன்னுள் அடக்கி நிற்பவள்; என்றும் கன்னியாய் இருப்பவள். அவள் இவ்வுலகில் என் உள்ளத்திலே நீங்காது நிறைந்து நிற்கின்றாள்.
=========================================
பாடல் எண் : 17
நின்றவள் நேரிழை நீள்கலை யோடுற
என்றன் அகம்படிந் தேழுல கும்தொழ
மன்றது ஒன்றி மனோன்மனி மங்கலி
ஒன்றொனொ டொன்றிநின் றொத்தடைந் தாள.

பொழிப்புரை :  மேற்கூறியவாறு எனது உள்ளத்திலே நிறைந்து நிற்பவளாகிய திரிபுரை, மனத்துக்கு மேலே உள்ளவளாயும், அழியாத மங்கலத்தை யுடையவளாயும் இருப்பவள். தனது பல வகைப்பட்ட நிலைகளுடனும் என் உள்ளத்தில் பொருந்தியும், உலகமெல்லாம் வணங்கும்படி அம்பலத்தில் நின்றும் அவளையே பற்றி நிற்கின்ற என்னிடத்தில் வேறற நிற்க இசைந்து, அங்ஙனமே வந்து நின்றாள்.
=========================================
பாடல் எண் : 18
ஒத்தடங் குங்கம லத்திடை ஆயிழை
அத்தகை செய்கின்ற ஆய பெரும்பதி
மத்தடை கின்ற மனோன்மனி மங்கலி
சித்தடைக் கும்வழி தேர்ந்துண ரார்களே.

பொழிப்புரை :  அன்பர்களிடத்தில் ஒன்றியிருக்க இசைந்து, அவர்களது உள்ளத் தாமரையிலே அடங்கி நிற்கின்றவளும், அத் தன்மையை உடைய உயர்ந்த பெரிய தலைவனாகிய சிவனிடத்தில் நிறைந்து நிற்பவளும், மனோன்மனியும், நித்திய சுமங்கலியும் ஆகிய திரிபுரை பல வகைச் சித்துக்களையும் உயிர்களிடத்தில் புரிந்து நிற்கின்ற முறையை உலகர் ஆராய்ந்து அறிகின்றார்களில்லை.
=========================================
பாடல் எண் : 19
உணர்ந்துட னேநிற்கும் உள்ளொளி யாகி
மணங்கமழ் பூங்குழல் மங்கையுந் தானும்
புணர்ந்துட னேநிற்கும் போதருங் காலைக்
கணிந்தெழு வார்க்குக் கதிஅளிப் பாளே.

பொழிப்புரை :  உண்மையை உணர்ந்தவழி விரைய விளங்கும் உள்ளொளியாகிய சிவன் எவ்விடத்தும் சத்தியும், தானுமாய், இயைந்தே நிற்பான். அங்ஙனம் நிற்குங்கால் தம்மை எண்ணுகின்றவர்கட்கே திரிபுரை நற்கதி வழங்குவாள்.
=========================================
பாடல் எண் : 20
அளியொத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி
புளியுறு புன்பழம் போல்உள்ளே நோக்கித்
தெளியுறு வித்துச் சிவகதி காட்டி
ஒளியுற வைத்தென்னை உய்யஉண் டாளே.

பொழிப்புரை :  அன்பர்களது உள்ளத் தாமரையை வண்டுபோல விரும்பி உறைகின்றவளும், ஆனந்தமே உருவாய் அழகொடு நிற்பவளும் ஆகிய திரிபுரை, எனது உள்ளம் புளிய மரத்தில் பொருந்திய பழுத்த பழம்போல ஆகும்படி அருள் நோக்கம் செய்து பக்குவப் படுத்திச் சிவஞானத்தைத் தந்து சிவத்தைப் பெறுவித்து, யான் உய்யும் வண்ணம் என்னைத் தன்னுள்ளே அடக்கிக் கொண்டாள்.
=========================================
பாடல் எண் : 21
உண்டில்லை என்ன உருச்செய்து நின்றது
வண்டில்லை மன்றினுள் மன்னி நிறைந்தது
கண்டிலர் காரண காரணி தன்னொடும்
மண்டிலம் மூன்றுற மன்னிநின் றாளே.

பொழிப்புரை :  காரணங்கட்கெல்லாம் காரணமாய் உள்ள திரிபுரை, சிவத்தோடு மூன்றுலகங்களிலும் நீக்கமற நிறைந்து நிற்கின்றாள்; அதனையும், அவளே சமயவாதிகள் `உண்டு` என்றும், `இல்லை` என்றும் தம்முள் மாறுபட்டு வழக்கிட மறைந்து நிற்றலையும், அடியார் கட்கு உருவொடு தோன்றிக் காட்சியளித்தலையும், வளவிய தில்லையின் அம்பலத்துள் நிலைபெற்று நிற்றலையும் உலகர் அறிந்திலர்.
=========================================
பாடல் எண் : 22
நின்றாள் அவன்றன் உடலும் உயிருமாய்ச்
சென்றாள் சிவகதி சேரும் பராசத்தி
ஒன்றாக என்னுட் புகுந்துணர் வாகியே
என்றாள் பரஞ்சுடர் ஏடங்கை யாளே.

பொழிப்புரை :  சிவனது செயல்களிலெல்லாம் உடன் சேர்ந்தே நிற்கின்ற மேலான சத்தியாகிய திரிபுரை, அச்சிவனோடு உடலும் உயிரும்போலப் பிரிப்பின்றி வாளாதும் இருப்பாள்; செயற்பட்டும் நடப்பாள். மேன்மை பொருந்திய ஞானமேயாகின்ற அவள், முதலில் புத்தகம் ஏந்திய கையினையுடைய நாமகளாய் நின்று எனக்கு நூலறிவைத் தந்தும், பின்பு எனது உணர்வினுள் உணர்வாய் இன்புறச் செய்தும் என்னைத் தன் அடியவனாக ஏற்றுக்கொண்டாள்.
=========================================
பாடல் எண் : 23
ஏடங்கை நங்கை இறைஎங்கள் முக்கண்ணி
வேடம் படிகம் விரும்பும்வெண் டாமரை
பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள்
சூடுமின் சென்னி வாய்த்தோத்திரங்கள் சொல்லுமே.

பொழிப்புரை :  எங்கள் தலைவியாகிய திருபுரையே புத்தகத்தைக் கையில் ஏந்தியிருக்கும் நாமகளாகி நிற்பவள். அந்நிலையில் அவளது நிறம் பளிங்கு போல்வது. இருக்கை வெண்டாமரை மலர். கையில் உள்ள புத்தகமும் இசையோடு கூடிய திருப்பாட்டு எழுதப்பட்டது. ஆதலால், அவளைப்பிறள் ஒருத்தியாக நினையாது திரிபுரையாகவே அறிந்து, அவளது பாதமாகிய மலர்களைச் சென்னியில் சூடிக் கொள்ளுங்கள்; வாயால் அவளது புகழ்களைச் சொல்லுங்கள்.
=========================================
பாடல் எண் : 24
தோத்திரம் செய்து தொழுது துணையடி
வாய்த்திட ஏத்தி வழிபடு மாறிரும்
பார்த்திடும் அங்குச பாசம் பசுங்கரும்
பார்த்திடும் பூப்பின்னை ஆகுமாம் ஆதிக்கே.

பொழிப்புரை :  காணப்படுகின்ற அங்குச பாசங்கள் ஈரமுடைய கரும்பினாலாகிய வில், அதன்கண் பொருத்தப்படும் பூவாகிய கணைகள், இவை ஆதிசத்தியாகிய திரிபுரைக்கு உரிய அடையாளங்களாகும். அவைகளை அறிந்து, அவளது இரண்டு பாதங்களும் உங்கட்குக் கிடைத்தற் பொருட்டு அவளைத் தோத்திரித்தும், வணங்கியும் வழிபடுதற்காகவே உலகில் வாழ்வீராக.
=========================================
பாடல் எண் : 25
ஆதி விதம்மிகுத் தண்டந்த மால்தங்கை
நீதி மலரின்மேல் நேரிழை நாமத்தைப்
பாதியில் வைத்துப் பலகாற் பயில்விரேல்
சோதி மிகுத்துமுக் காலமும் தோன்றுமே.

பொழிப்புரை :  ஆதி சத்தியின் பேதங்கள் அனைத்துமாய் உலகத்தைச் சார்ந்து நிற்கின்றவளும், `திருமாலின் தங்கை` எனப்படுபவளும், நீதியாளர்களது நெஞ்சத் தாமரையில் விளங்குபவளும் ஆகிய திரிபுரையது மந்திரத்தை, நெஞ்சில் இருத்திப் பலமுறை கணிப்பீர்களாயின், அறிவு விரிவுற்று, முக்கால நிகழ்ச்சிகளும் ஒரு காலத்திதே உங்கட்கு விளங்குவனவாகும்.
=========================================
பாடல் எண் : 26
மேதாதி ஈரெட்டு மாகிய மெல்லியல்
வேதாதி நூலின் விளங்கும் பராபரை
ஆதார மாகியே ஆய்ந்த பரப்பினள்
நாதாதி நாதத்து நல்லரு ளாளே.

பொழிப்புரை :  திரிபுரை, மேதை முதலிய பிராசாத கலைகள் பதினாறுமானவள்; வேதம் முதலிய நூல்களின் பொருளாய் விளங்குபவள்; `இலயம், போகம்` என்னும் மேல் நிலையிலும் `அதிகாரம்` என்னும் கீழ் நிலையிலும் இருப்பவள்; எல்லாப் பொருள்கட்கும் நிலைக்களமாய் நுணுகிப் பரந்த வியாபகத்தை உடையவள்; நாதத்திற்கு முதலாகிய பரநாதத்தில் நிற்கும் அருள் வடிவானவள்.
=========================================
பாடல் எண் : 27
அருள்பெற் றவர்சொல்ல வாரீர் மனிதர்
பொருள்பெற்ற சிந்தைப் புவனா பதியார்
மருளுற்ற சிந்தையை மாற்றி அருமைப்
பொருளுற்ற சேவடி போற்றுவன் யானே.

பொழிப்புரை :  மனிதர்களே, நான் மயக்கம் பொருந்திய என் மனத்தை மாற்றி உண்மையை உணரப் பெற்ற அதன்கண், புவனங்கள் அனைத்துமாய் நிற்றல் பற்றி, `புவனை` எனப்படுகின்ற திரிபுரைக்குத் தலைவனாகிய சிவனது, அரிய பொருளாய்ப் பொருந்திய செம்மையான திருவடிகளையே போற்றுவேன்; உங்களில் அருள் பெற்றவராயுள்ளோர் என்னுடன் வாருங்கள்; அனைவரும் ஒருங்கு கூடிப் போற்றுவோம்.
=========================================
பாடல் எண் : 28
ஆன வராக முகத்தி பதத்தினில்
ஈனவ ராகம் இடிக்கும் முசலத்தோ
டேனை எழுபடை ஏந்திய வெண்ணகை
ஊனம் அறஉணர்ந் தார்உளத் தோங்குமே.

பொழிப்புரை :  திரிபுரை, ஒறுப்பிற்கு ஏற்றவராக முகத்தை உடையவள்; இழிகுணம் படைத்த தீயோரது உடலங்களைக் காலத்தில் அழிப்பாள்; உலக்கையோடு மற்றும் ஏழு ஆயுதங்களை ஏந்தி இருப்பாள்; சிரித்த முகத்தையுடையவள். தங்கள் துன்பங்களை நீக்க வேண்டித் தியானிப்பவர்களது உள்ளத்தில் அவள் இவ்வாறு விளங்குவாள்.
=========================================
பாடல் எண் : 29
ஓங்காரி என்பாள் அவள்ஒரு பெண்பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தை உடையவள்
ஆங்காரி யாகியே ஐவரைப் பெற்றிட்டு
இரீங்காரத் துள்ளே இனிதிருந் தாளே.

பொழிப்புரை :  பரவிந்துவாய் நிற்கின்ற சிவ சத்தியே `ஒரு கன்னிகை` எனச் சொல்லவும், பச்சை நிறத்தையுடைய திருமேனியளாக எண்ணவும் படுகின்றது. ஏனெனில், அஃது எழுச்சிபெற்றுப் பரநாத வடிவினனாகிய இறைவனோடு கூடிச் சதாசிவன் முதலிய ஐவரைக் கால்வழியினராகத் தோற்றுவித்து, `ஹ்ரீம்` என்னும் வித்தெழுத்தை இடமாகக்கொண்டு நன்கு பயனளித்து நிற்றலால்.
=========================================
பாடல் எண் : 30
தானே தலைவி எனநின்ற தற்பரை
தானே உயர்வித்துத் தந்த பதினாலும்
மானோர் தலமும் மனமும்நற் புத்தியும்
தானே சிவகதித் தன்மையு மாமே.

பொழிப்புரை :  உயிர்களால் பொதுப்பட `அது` எனக் கூறப்பட்ட தலைவியாய், அவ்வுயிர்கட்கு மேலே இருப்பவளும், ஐந்தொழிற்கும் முதல்வியும், சுத்த மாயை அசுத்த மாயைகளின் காரியங்கள் பதினான்கும், பிரகிருதியும், அதன் காரியங்களாகிய அந்தக்கரணம் முதலியனவுமாய் நின்று உயிர்களைப் பந்திப்பவளும், பின் அவற்றினின்றும் நீக்கி வீட்டை எய்துவிப்பவளும் எல்லாம் திரிபுரையே ஆவள்.
=========================================


மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!