http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Sunday, 20 May 2012

திருமந்திரம்-தந்திரம்04: பதிகம் எண் :05/1. சத்தி பேதம் (பாடல்கள்:01-15/30)பாகம் I









 

பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
================================================================== 

நான்காம் தந்திரம்:பதிக எண்:01: அசபை ..............................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:02: திருவம்பலச் சக்கரம் ...பாடல்கள்: 089
நான்காம் தந்திரம்:பதிக எண்:03: அருச்சனை........................பாடல்கள்: 012
நான்காம் தந்திரம்:பதிக எண்:03: அருச்சனை.....................பாடல்கள்: 012
நான்காம் தந்திரம்:பதிக எண்:04: நவகுண்டம்.....................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:05: சத்தி பேதம்.....................பாடல்கள்: 030
=========================================================(161+030=191)
நான்காம் தந்திரம்-பதிகம் எண்:05/1. சத்தி பேதம்

(பாடல்கள்:01-15/30)பகுதி-I


பாடல் எண் : 1
மாமாயை மாயை வயிந்தவம் வைகரி
ஓமாயை நாரணி ஓராறு கோடியில்
தாமான மந்திரம் சத்திதன் மூர்த்திகள்
ஆமாய் அலவாம் திரிபுரை ஆங்கே.

பொழிப்புரை :  மாமாயை முதலாகச் சொல்லப்படும் பொருள்கள் யாவும் தானேயாயும், அல்லவாயும் சிவ சத்தி நிற்பாள்.
=========================================
பாடல் எண் : 2
திரிபுரை சுந்தரி அந்தரி சிந் தூரப்
பரிபுரை நாரணி ஆம்பல வன்னத்தி
இருள்புரை ஈசி மனோன்மனி என்ன
வருபல வாய்நிற்கும் மாமாது தானே.

பொழிப்புரை :  மகாதேவியாகிய சிவசத்தி, திரிபுரை முதலிய பல காரணப் பெயர்களைப் பெற்று, அவ்வகையிலெல்லாம் விளங்குவாள்.
=========================================
பாடல் எண் : 3
தானே அமைந்தஅம் முப்புரந் தன்னிடைத்
தானான மூவுரு ஓருருத் தன்மையள்
தானான பொன்செம்மை வெண்ணிறத் தாள் கல்வி
தானான போகமும் முத்தியும் நல்குமே.

பொழிப்புரை :  சத்தி, தனது வியாபகத்தைப் பெற்றுள்ள, `உருத்திர லோகம், விட்டுணுலோகம், பிரமலோகம்` என்னும் மூன்று உலகங்களில் தலைமை பூண்டு நிற்கின்ற உருத்திரன், விட்டுணு, பிரமன் என்னும் மூவரையும் தோற்றி ஒடுக்கும் நான்காவது பொருளாய் நிற்பாள். அவள் ஓருத்தியே பொன்னிறம் உடைய சத்தியாய் நின்று முத்தியையும், செந்நிறம் உடைய திருமகளாய் நின்று செல்வத்தையும், வெண்ணிறம் உடைய கலைமகளாய் நின்று கல்வியையும் தருவாள்.
=========================================
பாடல் எண் : 4
நல்குந் திரிபரை நாத நாதாந்தங்கள்
பல்கும் பரவிந்து பார்அண்ட மானவை
நல்கும் பரை அபிராமி அகோசரி
புல்கும் அருளும் அப் போதம்தந் தாளுமே.

பொழிப்புரை :  ஐந்தொழில் முதல்வரைத் தருகின்ற திரிபுரை நாதம், நாதாந்தம், பலவாய் விரியும் பரவிந்து, நிலம், வானம் முதலிய அளவற்ற பொருள்களை ஆக்குவாள். அதனால், அவள் அனை வர்க்கும் மேலானவள்; பலரையும் இன்புறச் செய்பவள்; மன வாக்குகளுக்கு அகப் படாதவள். பக்குவம் வந்த நிலையில் அருட் சத்தியாயும் பதிவாள். பின்பு ஞானத்தைக் கொடுத்துத் தன் திருவடிக்கு ஆளாக்கிக் கொள்வாள்.
=========================================
பாடல் எண் : 5
தாளணி நூபுரம் செம்பட்டுத் தான் உடை
வாரணி கொங்கை மலர்க்கன்னல் வாளிவில்
ஏரணி அங்குச பாசம் எழில்முடி
காரணி மாமணிக் குண்டலக் காதிக்கே.

பொழிப்புரை :  திருவடிகளில் சிலம்பு, இடையில் சிவந்த பட்டுடை, மார்பில் கச்சு, நான்கு கைகளிலும் கரும்பு வில், மலர்க்கணை, அங்குசம், பாசம், சென்னியில் நவமணிகளின் அழகு விளங்கும் முடி, காதுகளில் நீல ரத்தினம் மின்னுகின்ற குண்டலம் - இவைகளே திரிபுரைக்கு உள்ள அடையாளங்களாம்.
=========================================
பாடல் எண் : 6
குண்டலக் காதி கொலைவிற் புருவத்தள்
கொண்ட அரத்த நிறம்மன்னு கோலத்தள்
கண்டிகை ஆரம் கதிர்முடி மாமதிச்
சண்டிகை நாற்றிசை தாங்கிநின் றாளே.

பொழிப்புரை :  குண்டலம் அணிந்த காதினை உடையவள்; கொலை செய்கின்ற வில்லை ஒத்த புருவத்தை உடையவள்; சிவந்த மேனியை உடையவள்; உருத்திராக்க மாலையைப் பூண்டவள்; ஒளிவீசுகின்ற கிரீடத்திலே பிறை அணிந்தவள்; `சண்டிகை` என்னும் பெயர் உடையவள்; இவள் உலகங்களைத் தீமையினின்றும் நீக்கிக் காத்தருள்கின்றாள்.
=========================================
பாடல் எண் : 7
நின்ற திரிபுரை நீளும் புராதனி
குன்றலில் மோகினி மாதிருக் கும்சிகை
நன்றறி கண்டிகை நாற்கால் கரீடிணி
துன்றிய நற்சுத்த தாமரைச் சுத்தையே.

பொழிப்புரை :  நித்தியளாகிய திரிபுரை கால எல்லையைக் கடந்த பழமை உடையவள். மாயை வழியாக உயிர்களை மயக்குபவள்; அழகிய கூந்தலை உடையவள்; நன்கு விளங்குகின்ற உருத்திராக்க மாலையை அணிந்திருப்பவள்; நான்கு கால்களை உடைய யானையை ஊர்பவள். வெண்டாமரைமேல் வீற்றிருக்கும் வெள்ளைத் திருமேனியை உடையவள்.
=========================================
பாடல் எண் : 8
சுத்தஅம் பாரத் தனத்தி சுகோதையள்
வத்துவ மாய்ஆளும் மாசத்தி மாபரை
அத்தகை யாயும் அணோரணி தானுமாய்
வைத்தஅக் கோலம் மதியவ ளாகுமே.

பொழிப்புரை :  திரிபுரை இன்னும் தூய, அழகிய, திண்ணிய கொங்கைகளை உடையவள்; பேரின்பத் தோற்றத்திலே விளங்கு பவள்; மெய்ப்பொருள்களை உணரும் ஞானமாய் நின்று உயிர்களை ஆட்கொள்கின்ற பேராற்றலை உடையவள். எல்லாச் சத்திகளினும் பெரியளாய் மேலான சத்தி; அப்பொழுதே அணுவினுள் அணுவாய் நிற்கும் நுண்ணியளுமாய் எண்ணப்பட்டு அழகிய நிறைமதி போலும் ஒளியினை உடையவளுமாவாள்.
=========================================
பாடல் எண் : 9
அவளை அறியா அமரரும் இல்லை
அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவளன்றி ஐவரால் ஆவதொன் றில்லை
அவளன்றி ஊர்புகும் ஆறறி யேனே.

பொழிப்புரை :  [இதன் பொருள் வெளிப்படை.]
குறிப்புரை : ஐவர், படைத்தல் முதலிய ஐந்தொழில்களைச் செய்யும் தலைவர். ஊர், முத்தி. சிவ பரத்துவம் உணர்த்திய. ``அவனை ஒழிய அமரரும் இல்லை`` என்ற மந்திரத்தினை (41) இதனுடன் வைத்து நோக்குக. இதனாலும், அவளது பெருமை பிற சில கூறப்பட்டன.
=========================================
பாடல் எண் : 10
அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பர்
அறிவார் அருவுரு வாம்அவள் என்பர்
அறிவார் கருமம் அவள்இச்சை என்பர்
அறிவார் பரனும் அவளிடத் தானே.

பொழிப்புரை :  திரிபுரையை அனுபவமாக உணர்ந்தவர்கள் அவளை, `ஆனந்தமாய் இருப்பவள்` என்றும், `அருவமாயும், உருவ மாயும் விளங்குபவள்` என்றும் `நிறைந்தஞானம், கிரியை, இச்சை என்னும் வகையினள்` என்றும் கூறுவர். அதனால், அறிவுருவின னாகிய சிவனும் அவள் வழியாகவே தோன்றுவான்.
=========================================
பாடல் எண் : 11
தான்எங் குளன்அங் குளள்தையல் மாதேவி
ஊன்எங் குளஅங் குளஉயிர் காவலன்
வான்எங் குளதங் குளேவந்தும் அப்பாலாம்
கோன்எங்கும் நின்ற குறிபல பாரே.

பொழிப்புரை :  உடம்புகள் எங்கு உள்ளனவோ அங்கெல்லாம் உள்ள உயிர்களைக் காப்பவனாகிய சிவன், தான் எங்கு இருப்பவனாக அறியப்படுகின்றானோ அங்கெல்லாம் சத்தியும் உடன் இருக் கின்றாள். அதனால், ஆகாயம் உள்ள இடங்களில் எல்லாம் இருக்கின்ற எல்லாப் பொருள்களிலும் நிறைந்து நின்றும், அப்பொருள்களையும், அவற்றிற்கு இடம் தந்து நிற்கின்ற ஆகாயத்தையும் கடந்து நிற்பவ னாகிய சிவன் எங்கும் விளங்குகின்ற எந்த உருவமும் சத்தி என்றே அறிவாயாக.
=========================================
பாடல் எண் : 12
பராசத்தி மாசத்தி பல்வகை யாலும்
தராசத்தி யாய்நின்ற தன்மை உணராய்
உராசத்தி ஊழிகள் தோறும் உடனாம்
புராசத்தி புண்ணிய மாகிய போகமே.

பொழிப்புரை :  `திரிபுரை` என்னும் சத்தியே மேலானவளும், பெரியவளும் ஆவள். அதனால், அவளே பல்வேறு வகையான காப்புச் சத்தியாய் நிற்றலை, மாணவனே, நீ அறிவாயாக. இனி, அக் காப்புத்தான், திரிவுபடுகின்ற ஊழிகள் தோறும் உடனாய் நின்று புண்ணியத்தின் பயனாகிய உலகின்பத்தைத் தருதலேயாம்.
=========================================
பாடல் எண் : 13
போகம்செய் சத்தி புரிகுழ லாளொடும்
பாகம்செய் தாங்கே பராசத்தி யாய்நிற்கும்
ஆகம்செய் தாங்கே அடியவர் நாள்தொறும்
பாகம்செய் ஞானம் படர்கின்ற கொம்பே.

பொழிப்புரை :  அடியார்கள் நாள்தோறும் தங்கள் உள்ளத்தில் தியானிக்க, அங்ஙனம் தியானிக்குந்தோறும் அவர்களது உள்ளத்தைப் பக்குவப்படுத்தி, உண்மை ஞானமாகிய கொடி படர்தற்கு ஏற்ற கொழு கொம்பாய் நிற்கின்ற அருட்சத்தியே, முன்பு ஒரு கூற்றில் அவ் விடத்துத் திரோதான சத்தியாய் நின்று, பின் அருட் சத்தியாயே விளங்குவாள்.
=========================================
பாடல் எண் : 14
கொம்பனை யாளைக் குவிமுலை மங்கையை
வம்பவிழ் கோதையை வானவர் நாடியைச்
செம்பவ ளத்திரு மேனிச் சிறுமியை
நம்பிஎன் னுள்ளே நயந்துவைத் தேனே.

பொழிப்புரை :  [இதன் பொருள் வெளிப்படை.]
குறிப்புரை : கொம்பு அனையாள் - பூங்கொம்பு போன்றவள். வம்பு அவிழ்கோதை - வாசனையோடு மலர்கின்ற பூக்களையுடைய மாலையை அணிந்தவள். நாடி - நாடப்பட்டவள். சிறுமி - கன்னி. நம்பி - தெளிந்து. நயந்து - விரும்பி. இதனுள்ளும் அம்மைக்குச் செம்மை நிறம் கூறப்பட்டமை அறியத் தக்கது. ``மென்கடிக் குங்கும தோயம் என்ன விதிக்கின்ற மேனி [அபிராமி`` ௧]  எனப் பின்வந்த அடியவரும் கூறினார். இதனால், திரிபுரையது தியானச் சிறப்புக் கூறப்பட்டது.
=========================================
பாடல் எண் : 15
வைத்த பொருளும் மருவுயிர்ப் பன்மையும்
பத்து முகமும் பரையும் பாரபரச்
சித்தக் கரணச் செயல்களும் செய்திடும்
சத்தியும் வித்தைத் தலைவிய ளாம.

பொழிப்புரை :  பலவகை வழிபாட்டிலும் விளங்கும் தலைவி யாகிய திரிபுரையே, உலகத்தில் வைக்கப்பட்டுள்ள பல சடப்பொருள் களும், அளவிறந்த உயிர்களாகிய சித்துப்பொருள்களும், உலகின் பத்துத் திசைகளும், சூக்குமை முதலிய நால்வகை வாக்குகளும் அந்தக் கரணங்களது உயர்வும், தாழ்வுமாகிய எண்ண அலைவுகளும், அவ் எண்ணங்களின் வழி நிகழ்கின்ற செயலாற்றல்களுமாய் நிற்பாள்.
=========================================


மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!