http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Sunday, 20 May 2012

திருமந்திரம்- தந்திரம்04:பதிகம் எண் :1/1. அசபை (பாடல்கள்:01-15/30) பாகம்-I







 
பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
====================================================

நான்காம் தந்திரம்:பதிக எண்:01: அசபை ............................பாடல்கள்: 030
========================================================(000+030=030)
நான்காம் தந்திரம்-பதிகம் எண்:1. அசபை 

(பாடல்கள்: 01-15/30) பாகம்-I
பாடல் எண் : 1
போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகல் ஞானத்தை
தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி
சாற்றுகின் றேன்அறை யோ சிவ யோகத்தை
ஏற்றுகின் றேன்நம் பிரான்ஓர் எழுத்தே.


பொழிப்புரை :  நமக்கெல்லாம் தலைவனாகிய சிவனுக்குரிய ஓரெழுத்து மந்திரமாம் பிரணவத்தின் சிறப்பே, ஏனை எல்லா மந்திரங்களினும் உயர்வுடையதாதலை இத்தந்திரத்துள் யான் கூறுவேன். அதனானே, ஞானங்கள் பலவற்றினும் மேலானதாக உயர்ந்தோர் சொல்கின்ற சிவஞானத்தைப் புகழ்ந்து பாதுகாப்பவனும், யாவருடைய உள்ளத்திலும், `சிவனது திருவடியே பொருள்` எனத்தெளிவிப்பவனும், சிவயோகத்தையும் சுருங்கக் கூறுபவனும் ஆவேன். பிரணவத்தினை அறிய விரும்புபவர்களே! இதனைச் செவிக்கொண்மின்.
=============================================
பாடல் எண் : 2

ஓரெழுத் தாலே உலகெங்கும் தானாகி
ஈரெழுத் தாலே இசைந்தங் கிருவராய்
மூவெழுத் தாலே முளைக்கின்ற சோதியை
மாவெழுத் தாலே மயக்கம துற்றதே.


பொழிப்புரை :  `ஓம்` என்று ஓரெழுத்தாகச்சொல்லப்படுகின்ற சமட்டிப் பிரணவத்தின் பொருளாகிய `இலய சிவன்` என்னும் அருவ நிலையால் உலகெங்கும் வரம்பின்றி நிறைந்து நின்று பின், `, ` என்று, மகாரம் இன்றி இரண்டெழுத்தாகச் சொல்லப் படுகின்ற சூக்கும வியட்டிப் பிரணவத்தில் முறையே அவ்வெழுத்துக்களின் பொரு ளாகிய சிவமும், சக்தியும் செம்பாதியான ஒளிவடிவாயுள்ள `போக சிவன்` என்னும் அருவுருவ மூர்த்தியாய் உலகத்தைத் தொழிற் படுத்த நினைந்து, பின், மேற்கூறிய இரண்டெழுத்துடன் மகாரத்தையும் கூட்டி `,,ம்` என மூன்றெழுத்தாகச் சொல்லப் படுகின்ற தூல வியட்டிப் பிரணவத்தில் முறையே அவ்வெழுத்துக் களின் பொருளாகிய `அயன், அரி, அரன்` என்னும் மூவராம் `அதிகார சிவன்` என்னும் உருவ மூர்த்தியாய்ப் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் தொழில்களில் தலைப்பட்டு நிற்கின்ற சிவனை அவனது திருவைந்தெழுத்தில் மகாரத்தின் பொருளாகிய மலத்தின் மறைப்பினால் அறியமாட்டாது உலகம் திகைக்கின்றது.
=============================================
பாடல் எண் : 3

தேவர் உறைகின்ற சிற்றம் பலம்என்றும்
தேவர் உறைகின்ற சிதம்பரம் என்றும்
தேவர் உறைகின்ற திருவம் பலம்என்றும்
தேவர் உறைகின்ற தென்பொது ஆமே.

பொழிப்புரை :  சிவபெருமானார் தாம் இயல்பாக என்றும் எழுந்தருளியிருக்கின்ற சிதாகாசமாகவே திருவுளத்துக் கொண்டு வெளிநின்றருள்கின்ற தில்லையம்பலமும் மேற்கூறிய ஓரெழுத்தேயாகும்.
=============================================
பாடல் எண் : 4

ஆமேபொன் னம்பலம் அற்புதம் ஆனந்தம்
ஆமே திருக்கூத் தனவரத தாண்டவம்
ஆமே பிரளய மாகும்அத் தாண்டவம்
ஆமேசங் காரத் தருந்தாண் டவங்களே.

பொழிப்புரை :  பொன்னால் இயன்றுள்ளதாகிய மேற்கூறியதென்போது, மேற்கூறியவாறு ஞானமாய் நிற்க. அதன் கண் நின்று சிவபிரான் நிகழ்த்துகின்ற திருக்கூத்து, அந்த ஞானத்தின் வழியே விளையும் ஆனந்தமாய் நிகழும். மேலும், அத்திருக்கூத்து இடை யறாது நிகழ்ந்து, ஊழிக்காலம் முழுவதும் உலகைத் தொழிற் படுத்துதலாகிய தூல ஐந்தொழிலை இயற்றுவதுமாம். அதுவேயன்றிச் சர்வ சங்காரத்தின்பின், உலகத்தை மீளத் தோற்றுவித்தற் பொருட்டுச் செய்யப்படுகின்ற செயல்களாகிய சூக்கும ஐந்தொழில்களை இயற்றும் திருக்கூத்தும் அதுவேயாம்.
=============================================
பாடல் எண் : 5
தாண்டவ மான தனியெழுத் தோரெழுத்துத்
தாண்டவ மான தனுக்கிர கத்தொழில்
தாண்டவக் கூத்துத் தனிநின்ற தற்பரம்
தாண்டவக் கூத்துத் தமனியந் தானே.


பொழிப்புரை :  மேற்குறித்த அனவரத தாண்டவ உருவாய் நிற்கின்ற ஒப்பற்ற திருவைந்தெழுத்தாவதும் ``ஓர் எழுத்து`` எனப்பட்ட அசபையேயாம். அத்தாண்டவம் உயிர்கட்கு அருள்புரியும் செயலே, அதனால், அஃது ஒப்பற்ற பரம் பொருளால் செய்யப்படுகின்றது. இப்பெருமையை உணர்த்தும் குறிப்பே அத்தாண்டவம் நிகழும் அம்பலம் பொன்மயமாய் நிற்றல்.
=============================================
பாடல் எண் : 6

தானே பரஞ்சுடர் தத்துவ மாய்நிற்கும்
தானே அகார உகாரம தாய்நிற்கும்
தானே பரஞ்சுடர் தத்துவக் கூத்துக்குத்
தானே தனக்குத் தராதலந் தானே.


பொழிப்புரை :  கூத்தப்பெருமான் ஒருவனே தத்துவம் எல்லாவற்றையும் கடந்து நிற்கும் பேரொளிப் பொருளாயும், தத்துவம் எல்லா வற்றிலும் அவையேயாய்க் கலந்து நிற்பவனாயும், பிரணவமாயும், மூவகை ஐந்தொழிற் கூத்திற்கும் முதல்வனாயும், அக்கூத்து இயற்றுங்கால் தன்னைத் தாங்கி நிற்கின்ற அம்பலமாயும் உள்ளான்.
=============================================
பாடல் எண் : 7

தராதல மூலைக்குத் தற்பரம் மாபரன்
தராதல வெப்பு நமவா சியஆம்
தராதலம் சொல்லின் தான்வா சியஆம்
தராதல யோகம் தயாவாசி ஆமே.

பொழிப்புரை :  ஆதாரங்களில் ஏனையவற்றிற்கெல்லாம் அடி யாகிய மூலாதாரத்திற்கு உரிய தெய்வ மந்திரம், நகாரம் முதலாக முழுமையாய் மாறாது நிற்கும் திருவைந் தெழுத்தாம். அதற்கு மேல் உள்ள அக்கினி மண்டலத்தில் அம்மந்திரம் அருள் எழுத்து மாறி இடை நிற்க ஏனைய எழுத்துக்கள் முன் நின்றவாறே நிற்க இருக்கும். அதற்கு மேல் உள்ள சூரியமண்டலத்தில் பாச எழுத்துக்கள் நீங்க, ஏனைய மூன்றும் முன் நின்றவாறே நிற்க இருக்கும். அதற்கு மேல் யோகத்தால் அடையப்படும் சந்திர மண்டலத்தில் பசு எழுத்து நீங்க, அருளேயான ஏனை இரண்டழுத்தும் அவ்வாறே நிற்க இருக்கும்.
=============================================
பாடல் எண் : 8

ஆமே சிவங்கள் அகார உகாரங்கள்
ஆமே பரங்கள் அறியா இடம்என்ப
ஆமே திருக்கூத் தடங்கிய சிற்பரம்
ஆமே சிவகதி ஆனந்த மாமே.

பொழிப்புரை :  பிரணவ யோகிகட்கு அகார உகாரமாய் நிற்கின்ற பிரணவ கலைகள் சிவயோகிகட்கு முறையே திருவைந்தெழுத்தில் சிகார வகாரங்களாய் நிற்கும். (எனவே சிகார வகாரங்களின் பொருள்களாகிய அபர சிவனும், ஆதி சத்தியும் சொல்லால் உணரப்படுபவர் என்பதாம்.) சொல்லால் உணரப்படாத நிலையில் நிற்பவர் பரசிவனும், பராசத்தியுமே. அவர்களது நிலை ஐந்தொழிற் கூத்தொழிய ஞானமாத்திரமாய், மேல் நிற்பதாம். `சிவ கதி` எனவும், ``சிவானந்த மயம்` எனவும் சொல்லப்படுகின்ற பரநிலை அவர்களது நிலையேயாம்.
=============================================
பாடல் எண் : 9

ஆனந்தம் மூன்றும் அறிவிரண் டொன்றாகும்
ஆனந்தம் சிவாய அறிவார் பலர்இல்லை
ஆனந்த மோடும் அறியவல் லார்களுக்கு
ஆனந்தக் கூத்தாய் அகப்படுந் தானே.

பொழிப்புரை :  திருவைந்தெழுத்தில் துன்பத்தைத் தரும் பாச எழுத்துக்களாகிய நகாரம் மகாரம் இரண்டும் நீங்க, எஞ்சிய மூன்றும் நின்றவழி உளதாவது இன்பமே. அம் மூன்றெழுத்துக்களில் சிகாரமும், வகாரமும் ஆகிய இரண்டெழுத்துக்கள் அறிவெழுத்துக் களாம். (சிகாரம் அறிவைச் செலுத்துவதும், வகாரம் செலுத்தியவாற்றிலே சென்று அறிவதும் ஆம்.) அவற்றுள்ளும் அறிவதாகிய வகாரம் தன்னைச் செலுத்து வதாகிய சிகாரத்திலே அடங்க, சிகாரமும் வகாரமும் ஆகிய இரண்டெழுத்தும் சிகாரமாகிய ஓர் எழுத்தேயாய் விடும். (அதுவே ஆனந்தாதீத நிலையாம்.) இவ்வாறு, `சிவாய` என்னும் மூன்றெழுத்து ஆன்மாக்களுக்கு ஆனந்தப்பேற்றினை வழங்குவனவாதலை அறிபவர் மிகச் சிலரே. அவற்றை அன்போடு அறிய வல்லவர்கட்கு ஆனந்தம், அம்பலத்தில் கண்கூடாகக் காணப்படும் அருள்நடனத்திலேயே எளிதில் உண்டாகும்.
=============================================
பாடல் எண் : 10
படுவ திரண்டு பலகலை வல்லார்
படுகுவ தோங்கார பஞ்சாக் கரங்கள்
படுவது சங்காரத் தாண்டவப் பத்தி
படுவது கோணம் பரந்திடும் வாறே.

பொழிப்புரை :  யோக நூல்களிலும், ஞானநூல்களிலும் வல்ல வர்கள் பொருந்துவது ``அம், சம்`` என்னும் இரண்டெழுத்திலும், ஓங் காரத்திலும் திருவைந்தெழுத்திலும் சிவனது அருளல் நடனத்தின் அன்பிலும், அவையெல்லாம் பலவகைச் சக்கரங்களில் பரவி விளங்குகின்ற முறைமைகளிலுமாம்.
=============================================
பாடல் எண் : 11
வாறே சதாசிவ மாறிலா ஆகமம்
வாறே சிவகதி வண்துறை பின்னையும்
வாறே திருக்கூத்தா கமவ சனங்கள்
வாறே பொதுவாகும் மன்றின் அமலமே.


பொழிப்புரை :  மேற்கூறிய மூன்று மந்திரங்களும் சதாசிவ மூர்த்தியால் அருளிச்செய்யப்பட்ட ஆகமங்களின் ஞானப் பகுதிகளும், அவற்றால் அடையப்படும் சிவகதியாகிய வளப்பமான கடல் துறையும், அத்துறையில் மூழ்கினோர்க்கு ஐம்பொறி வழியிலும் அவ் வானந்தத்தைத் தருகின்ற திருநடனமும், மற்றும், ஆகமங்களின் கிரியைப் பகுதிகளும், ஞானிகட்கேயன்றிப் பிறர் அனைவர்க்கும் பொதுவாகச் செய்யப்படுகின்ற அம்பலக்கூத்தும் ஆகிய அனைத்துமாய் நிற்கும்.
=============================================
பாடல் எண் : 12

அமலம் பதிபசு பாசங்கள் ஆகமம்
அமலம் திரோதாயி ஆகும்ஆ னந்தமாம்
அமலஞ்சொல் ஆணவ மாம்மாயை காமியம்
அமலம் திருக்கூத்தங் காமிடந் தானே.

பொழிப்புரை :  ``அமலம்`` எனப்பட்ட நடனமே முப்பொருள்களாயும், ஆகமங்களாயும், திரோதான சத்தி அருட் சத்திகளாயும், முப்பாசங்களாயும் நிற்கும். அந்நடனம் நிகழ்கின்ற அம்பலம் அருளே.
=============================================

பாடல் எண் : 13
தானே தனக்குத் தலைவியு மாய்நிற்கும்
தானே தனக்குத் தனமலை யாய்நிற்கும்
தானே தனக்குத் தனமய மாய்நிற்கும்
தானே தனக்குத் தலைவனு மாமே.

பொழிப்புரை :  ``திருக்கூத்து ஆமிடம்`` என மேற்குறிக்கப்பட்ட அருளாகிய சத்தி தனக்கு ஒரு தலைவியை வேண்டாது தானே தனக்குத் தலைவியாய் நிற்பாள்; மேலும், தானே தனக்கு இன்றியமையாத பொருள்களாயும், தன்னுள்ளே சூக்குமமாயும் நிற்பாள். இனி, தனக்குத் தலைவனாகிய சிவனும் அவளே.
=============================================
பாடல் எண் : 14
தலைவனு மாய்நின்ற தற்பரக் கூத்தனைத்


தலைவனு மாய்நின்ற சற்பாத் திரத்தைத்
தலைவனு மாய்நின்ற தாதவிழ் ஞானத்
தலைவனு மாய்நின்ற தாளிணை தானே.

பொழிப்புரை :  யாதொரு தொழிலுமின்றிச் சிவனாய் நிற்றலேயன்றி ஐந்தொழில் செய்யும் பதியாயும் நிற்கின்ற முதல்வனது தன்மையையும், அம்முதல்வனது தொழில்களில் பிறவற்றின் பயனையன்றி, இறுதித் தொழிலாகிய அருளலின் பயனையும் ஏற்கும் நல்ல கொள்கலமாகிய பக்குவம் வாய்ந்த உயிரினது தன்மையையும் மகரந்தங்களாக உதிர்த்து மலர்கின்ற திருவாய்மலரையுடைய சிறந்த ஞானாசிரியனாயும் நிற்பன சிவனது இரண்டு திருவடிகளே.
=============================================
 பாடல் எண் : 15
இணையார் திருவடி எட்டெழுத் தாகும்

இணையார் கழலிணை யீரைஞ்ச தாகும்
இணையார் கழலிணை ஐம்பத்தொன் றாகும்
இணையார் கழலிணை ஏழா யிரமே.

பொழிப்புரை :  சிவனது, இணைதல் பொருந்திய திருவடிகளே வித்தெழுத்துக்கள் மூன்றோடு கூடி எட்டெழுத்தாய் நிற்கும் பஞ்சாக்கரமும், பத்துக் கூறுகளாகப் பகுக்கப்பட்டு நிற்கும் பிரணவமும், மூல எழுத்துக்களாகிய (மாதுருகாட்சரங்களாகிய) அகாரம் முதல் க்ஷகாரம் ஈறாக உள்ள ஐம்பத்தோரெழுத்துக்களும், ஏழு கோடிகளையுடைய பல மந்திரங்களுமாய் நிற்கும்.
=============================================
மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!