http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Sunday 15 April, 2012

திருமந்திரம்-தந்திரம்02 - பதிகம்: 1&2. அகத்தியம் பாடல்கள்:02; பதிவலியில் வீரட்டம் எட்டு : பாடல்கள்:08










பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.  
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:01: அகத்தியம்..................................பாடல்கள்: 002
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:02: பதிவலியில் வீரட்டம் எட்டு .:பாடல்கள்: 008
=================================================================
இரண்டாம் தந்திரம் -  பதிகம் எண்:1. அகத்தியம் (பாடல்கள்:2)

பாடல் எண் : 1
நடுவுநில் லாதிவ் வுலகஞ் சரிந்து
கெடுகின்ற தெம்பெரு மானென்ன ஈசன்
நடுவுள அங்கி அகத்திய நீபோய்
முடுகிய வையத்து முன்னிரென் றானே. 

பொழிப்புரை : ஒருபொழுது நிலம் சமனாய் நின்று உயிர்களைத் தாங்காது, ஒருபாற் சாய்ந்து கீழ்மேலாகப் புரண்டு அழியும் நிலை உண்டாக, அதனை அறிந்த தேவர்கள் அச்சுற்றுச் சிவபெருமானிடம் விண்ணப்பித்து முறையிடுதலும், அப்பெருமான் அகத்திய முனிவரை அழைத்து, `இருதய வெளியுள் பரஞ்சுடரை எப்பொழுதும் இருத்தி நிற்றலால் அகத்தியன் (அகத் தீயன் - உள்ளொளியைப் பெற்றவன்) எனப்பெயர் பெற்ற முனிவனே, உலகத்தை நிலைநிறுத்த வல்லவன் நீ ஒருவனுமே ஆவை; ஆதலால், விரையக் கெடும் நிலை எய்திய நிலத்தில், மேல் எழுந்த இடத்தில் நீ சென்று அமர்ந்து சமன் செய்` என்று அருளிச் செய்தான்; அதனால், இவ்வுலகம் நிலை பெற்றது.
================================================
பாடல் எண் : 2
அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்
அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடு
மங்கி உதய வடபால் தவமுனி
எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே. 

பொழிப்புரை : `புறத்தும் அகத்தும் சுடர் விட்டுளன் எங்கள் சோதி` (தி.3 ப.54 பா.5) என்றபடி, புறத்தும், அகத்தும் தீயை உண்டாக்கி வளர்க்கின்ற, மேற்றிசைக்கண் ஞானாக்கினியாய் விளங்கிய அகத்திய முனிவர் தென்றிசையிலும், தவம் உடையவரே காணத்தக்காராக அரிதில் விளங்குகின்ற தவக் கோலத்தை உடைய முனிவனாகிய சிவபெருமான் வடதிசையிலும் வீற்றிருந்து உலகமுழுவதையும் விளக்குகின்ற ஒளியாய்த் திகழ்கின்றார்கள்.
================================================
தந்திரம் 02 பதிகம் எண் 02. பதிவலியில் வீரட்டம் எட்டு : பாடல்கள்: 8

பாடல் எண் : 1
கருத்துறை அந்தகன் றன்போல் அசுரன்
வரத்தின் உலகத் துயிர்களை எல்லாம்
வருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக்
குருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றானே. 

பொழிப்புரை : அக இருளாகிய ஆணவமலத்தை ஒத்து, `அந்தகன்` எனப் பெயர் பெற்ற அசுரன் ஒருவன் தான் பெற்ற வரத்தினால் உலகத்து உயிர்களை எல்லாம் துன்புறுத்த, அது பற்றி வருந்தி முறையிட்ட தேவர்கள் பொருட்டுச் சிவபெருமான் சூலத்தின் நுனியில் அவனை ஏற்றித் துன்புறுத்தி அழித்தார்.
================================================
பாடல் எண் : 2
கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்
தலையைத் தடிந்திட்டுத் தான்அங்கி யிட்டு
நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்
தலையை யரிந்திட்டுச் சந்திசெய் தானே.

பொழிப்புரை : தக்கன் சிவபெருமானை இகழ்ந்து செய்த வேள்வியை அப்பெருமானது அருளாணையின்வழி வீரபத்திரக் கடவுள் சென்று அழித்தபொழுது, தக்கனது இகழ்ச்சியை மறாது உடன் பட்டிருந்த தேவர் பலரையும் பலவாறு ஒறுத்தலோடு ஒழித்து, அவ் இகழ்ச்சியைச் செய்தவனாகிய தக்கனது தலையை வெட்டித் தீக்கு இரையாக்கி, `சிவனை இகழ்ந்தவர் பெறும் இழிநிலைக்கு இவன் தக்க சான்றாகற்பாலனாகலின், அதன் பொருட்டு இவன் உலகிற்கு இன்றியமையாத ஒருவன்` எனக் கருதி அவனை அழித்தொழியாது ஆட்டுத் தலையைப் பொருத்தி உயிரோடு இருக்கச் செய்தார்.
================================================
பாடல் எண் : 3
எங்கும் பரந்தும் இருநிலந் தாங்கியும்
தங்கும் படித்தவன் தாளுணர் தேவர்கள்
பொங்கும் சினத்துள் அயன்தலை முன்னற
அங்கச் சுதனை உதிரங்கொண் டானே. 

பொழிப்புரை : ஆகாயத்தினும் மேலாய்ப் பரந்து எல்லாப் பொருட் கும் இடங்கொடுத்தும், பூமியினும் கீழாய் நின்று அனைத்தையும் தாங்கியும் நிற்கும் தன்மைத்தாகிய சிவபெருமானது திருவடியின் பெருமையை மறவாது உணர்ந்து அடங்கி ஒழுகற் பாலராய தேவர்கள், தம் அதிகாரச் செருக்கால் ஓரோவழி அதனை மறந்து மாறுபடுகின்ற காலத்து அவர்தம் செருக்கைச் சிவபெருமான் அழித்து அவரைத் தெருட்டுதற்கு அறிகுறியாகப் பிரமன் செருக்குற்ற பொழுது அவன் தலையை, வைரவக் கடவுளை விடுத்து அரிந்து, அத்தலை ஓட்டில் தேவர் பலரது உதிரத்தையும் பிச்சையாக ஏற்பித்து, முடிவில் திரு மாலது உதிரத்தையும் கொள்வித்துச் செருக்கொழித் தருளினான்.
================================================
பாடல் எண் : 4
எங்கும் கலந்தும்என் உள்ளத் தெழுகின்ற
அங்க முதல்வன் அருமறை யோதிபாற்
பொங்குஞ் சலந்தரன் போர்செய்ய நீர்மையின்
அங்கு விரற்குறித் தாழிசெய் தானே.

பொழிப்புரை : எல்லா இடங்களிலும் நிறைந்து நிற்பினும், என் உள்ளத்தில் விளங்கி நிற்கின்றவனும், ஆறங்கம் அருமறைகளை அருளிச்செய்த முதல்வனும் ஆகிய சிவபெருமானிடம், மிக்க சினத்தை உடைய `சலந்தரன்` என்னும் அசுரன் போர் செய்யச் சென்றபொழுது, அப்பெருமான் அவனது வரத்தின் தன்மையை அறிந்து அதற்கு ஏற்பத் தமது காற்பெருவிரலால் நிலத்தில் ஒரு சக்கரத்தைக் கீறி அதனை அவனாலே எடுப்பித்து அதன்வழி அவன் தன்னாலே தான் அழியச் செய்தான்.
================================================
பாடல் எண் : 5
அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறி வாரே. 

பொழிப்புரை சிவபெருமான் திரிபுரம் எரித்த வரலாற்றைப் புராணங்கள் கூறக் கேட்கின்றுழி, அறிவிலாதார் அவ் வரலாற்றை மட்டுமே கேட்டு, அவ்வளவில் சிவபெருமானைப் புகழ்ந்தொழி கின்றனர். ஆயினும், அவ்வரலாற்றால் அறியத் தக்க உண்மையை அறிகின்றவர் எத்துணையர்! மிகச் சிலரே. அதனால், `இரும்பு, வெள்ளி, பொன்` என்பவற்றால் ஆகிய மூன்று கோட்டைகளும் முறையே `ஆணவம், மாயை, கன்மம்` என்னும் மும்மலக் கட்டினைக் குறிப்பனவாக, `சிவபெருமான் அக்கோட்டைகளை எரித்துச் சாம்பலாக் கினான்` என்பது, `அம்மும்மலங்களின் வலியை அழித்துக் கட்டறுத் தருளுவன்` என்னும் உண்மையையே சிறப்பாக உணர்த்தி நிற்கும்.
================================================
பாடல் எண் : 6
முத்தீக் கொளுவி முழங்கெரி வேள்வியுள்
அத்தி யுரிஅர னாவ தறிகிலர்
சத்தி கருதிய தாம்பல தேவரும்
அத்தீயி னுள்ளெழுந் தன்று கொலையே. 

பொழிப்புரை முனிவர் சிலர் செய்த வேள்வியுள் எழுந்த யானை உருவினனாகிய கயாசுரனால் தம் ஆற்றலையே பெரிதாகக் கருதி யிருந்த தேவர் பலரும் அன்று அங்குச் சென்று கொலையுண் டாரேயாகச் சிவபெருமான் ஒருவனே அவனை அழித்து அவனது தோலைப் போர்வையாகக் கொண்டான் என்பதைக் கேட்டும் அப்பெருமானது பெருமையைச் சிலர் அறியாது, ஏனைத் தேவருள் அவனையும் ஒருவனாக வைத்து எண்ணுகின்றனர்.
================================================
பாடல் எண் : 7
மூலத் துவாரத்து மூளும் ஒருவனை
மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்
காலுற்றுக் காலனைக் காய்ந்தங் கியோகமாய்
ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே. 

பொழிப்புரை சிவபெருமான் நிலவுலகில் உள்ள திருக்கடவூரில் காலால் காலனை உதைத்துத் தள்ளி, ஒர் யோகி போல் இருத்தல் வியப்பைத் தருவது.
================================================
பாடல் எண் : 8
இருந்த மனத்தை இசைய இருத்திப்
பொருந்திய லிங்க வழியது போக்கித்
திருந்திய காமன் செயலழித் தங்கண்
அருந்தவ யோகங் கொறுக்கை அமர்ந்ததே. 

பொழிப்புரை : சிவபெருமான் திருக்குறுக்கை வீரட்டத்தில் எழுந் தருளியுள்ள நிலை, தன்வழி நின்ற மனத்தை நம் வழிப் பொருந்துமாறு நிறுத்திப்பின் மகளிரோடு மெய்யுறுதலை அறவே விடுத்து, எத்தகை யோர்க்கும் காமத்தை விளைத்தலில் வல்ல காமவேளது குறும்பை அழித்து, அந்நிலைக்கண் நாம் அசையா திருக்கத்தக்க அரிய தவயோக நிலையேயாம்.
================================================
மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!