http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Sunday 17 June, 2012

திருமந்திரம்-தந்திரம்04: பதிகம் எண் :08/3. ஆதார ஆதேயம் (பாடல்கள்:51-75/100) பாகம் III




 பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
================================================================== 
நான்காம் தந்திரம்:பதிக எண்:01: அசபை ............................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:02: திருவம்பலச் சக்கரம் ...பாடல்கள்: 089
நான்காம் தந்திரம்:பதிக எண்:03: அருச்சனை........................பாடல்கள்: 012
நான்காம் தந்திரம்:பதிக எண்:03: அருச்சனை.....................பாடல்கள்: 012
நான்காம் தந்திரம்:பதிக எண்:04: நவகுண்டம்....................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:05: சத்தி பேதம்....................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:06: வயிரவி மந்திரம்..........பாடல்கள்: 050
நான்காம் தந்திரம்:பதிக எண்:07: பூரண சத்தி....................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:08: ஆதார ஆதேயம்........பாடல்கள்: 100
======================================================(271+100=371)

நான்காம் தந்திரம்-பதிகம் எண்:08/3. ஆதார ஆதேயம் 
(பாடல்கள்:51-75/100) பகுதி-III

பாடல் எண் : 51
கருத்துறுங் காலம் கருது மனமும்
திருத்தி யிருந்தவை சேரும் நிலத்து
ஒருத்தியை உன்னி உணர்ந்திடு மேன்மேல்
இருத்திடும் எண்குணம் எய்தலும் ஆமே.
பொழிப்புரை :  சத்தியிடத்து மனம் செல்லும் பொழுது அதனை நன் மனமாகச் செய்து, அதன்கண் உள்ள எண்ணங்களெல்லாம் குவிகின்ற இடமாகிய இருதயத்தில் ஒப்பற்றவளாகிய அவளையே முதல்வியாக உணர்ந்து தியானி. அங்ஙனம் தியானித்தால், அவள் உன்னை மேன் மேல் உயரச் செய்வாள். அதனால், நீ முடிவில் சிவனது எண்குணங் களையும் பெற்று விளங்கலாம்.
==============================================
பாடல் எண் : 52
ஆமைஒன் றேறி அகம்படி யான்என
ஓமஎன் றோதிஎம் உள்ளொளி யாய்நிற்கும்
தாம நறுங்குழல் தையலைக் கண்டபின்
சோம நறுமலர் சூடிநின் றாளே.
பொழிப்புரை :   யான் ஆமையைப்போல ஐம்புல ஆசைகளைத் திருவருளுக்குள்ளே அடக்கி, மெல்லென மேலேறிச் சென்று, புறத்தே செல்லாது அகத்தே நிற்பவனாகி, ஓங்காரத்தை உச்சரித்து, எம்போல் வார்க்கு உள்ளொளியாய் விளங்குகின்ற யோக சத்தியைத் தரிசித்த பின்பு, அவள் சந்திரமண்டலத்தில் உள்ள நறுமணம் பொருந்திய தாமரை மலரைச் சூடி வெளிநின்றாள்.
==============================================
பாடல் எண் : 53
சூடிடும் அங்குச பாசத்துளை வழி
கூடும் இருவளை கோலக்கைக் குண்டிகை
நாடும் இருபதம் நன்னெடு ருத்திரம்
ஆடிடம் சீர்புனை ஆடக மாமே.
பொழிப்புரை : யோக சத்தியை அணுகும் வழி சுழுமுனா நாடி. அவளது இருகைகளில் காணப்படுவன சங்கமும், குண்டிகையும். அவளுக்குரிய சீருத்திர மந்திரம் சிகாரமும், வகர ஆகாரமும் ஆகிய இரண்டெழுத்துக்களால் ஆகிய சொல். அவள் நடனம் புரிகின்ற அரங்கு `புகழை உடைய பொன்மன்று` எனப்படும் புருவநடு.
==============================================
பாடல் எண் : 54
ஆம்அயன் மால் அரன்ஈசன் சதாசிவன்
தாம்அடி சூடிநின் றெய்தினர் தம்பதம்
காமனும் சாமன் இரவி கனலுடன்
சோமனும் வந்தடி சூடநின் றாளே.
பொழிப்புரை :  உலகிற்கு முதல்வராம் `அயன், மால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன்` என்னும் ஐவர்தாமும் சத்தியை வழிபட்டே தங்கள் பதவியைப் பெற்றார்கள். மற்றும் காமன், சாமன், சூரியன், அங்கி, சந்திரன் என்னும் இவர்களும் வந்து வணங்க அவள் வீற்றிருக்கின்றாள்.
==============================================
பாடல் எண் : 55
சூடும் இளம்பிறை சூலி கபாலினி
நீடும் இளங்கொடி நின்மலி நேரிழை
நாடி நடுவிடை ஞாளம் உருவநின்
றாடும் அதன்வழி அண்ட முதல்வியே.
பொழிப்புரை :   உலக முதல்வியாகிய சத்தி இளம் பிறையைச் சூடிக் கொண்டும், சூலத்தையும் கபாலத்தையும் ஏந்திக் கொண்டும், என்றும் மாறாத கொடிபோல்பவளாய் இருப்பாள்; இயல்பாகவே மலம் நீங்கியவள்; நேரிய (நுண்ணிய வேலைப்பாடமைந்த) அணி கலங்களை யணிந்தவள். அவள் நடு நாடியாகிய சுழுமுனையிடத்து அதன் உள்துளையில் பிராணவாயு ஊடுருவிச் செல்லும்பொழுது அவ்வாயுவின் வழியே நின்று நடனம் புரிவாள்.
==============================================
பாடல் எண் : 56
அண்ட முதலா அவனி பரியந்தம்
கண்டதொன் றில்லைக் கனங்குழை யல்லது
கண்டனும் கண்டியு மாகிய காரணம்
குண்டிகை கோளிகை கண்டத னாலே.
பொழிப்புரை :   ஆகாயம் முதல் பூமி ஈறாகப் பார்த்தால் நாம் கண்டது சத்தியைத் தவிர வேறொரு பொருளும் இல்லை. சத்தி தான் மாத்திரமாய் நின்று உலகிற்கு முதற்பொருளாகாது சிவத்தொடு கூடி நின்றே முதற்பொருளாயிருத்தல், உலகம், `ஆண், பெண்` என்னும் இரு பகுதிப்பட்டே நிற்றலைக் காண்கின்ற அதனானே அறியப்படும்.
==============================================
பாடல் எண் : 57
ஆலம்உண் டான்அமு தாங்கவர் தம்பதம்
சாலவந் தெய்தும் தவத்தின்பந் தான்வரும்
கோலிவந் தெய்தும் குவிந்த பதவையே
டேலவந் தீண்டி யிருந்தனள் மேலே.
பொழிப்புரை :   சத்தி, எல்லா உலகங்களையும் கடந்து சென்று எய்தப்படுவதாகிய சிவலோகத்திற்குத் தலைவனாகிய சிவனுடனே மிக அணிமையில் வந்து யோகியர்தம் உச்சியிலே இருக்கின்றாள். அவளை அடைதலாலே, சிவன் நஞ்சை உண்டதனால் அமுதத்தை உண்ணப் பெற்ற அந்தத் தேவர்கள் பதவிகள் மிகக் கிடைக்கும்; அதுவேயன்றிச் சரியை முதலிய தவங்களால் வருகின்ற சிவலோகத்து இன்பமும் கிடைக்கும்.
==============================================
பாடல் எண் : 58
மேலாம் அருந்தவம் மேன்மேலும் வந்தெய்தக்
காலால் வருந்திக் கழிவர் கணத்திடை
நாலாம் நளினம்நின் றேற்றிநட் டுச்சிதன்
மேலாம் எழுத்தினல் ஆமத்தி னாளே.
பொழிப்புரை :   உணவுப் பொருளாய் நின்று உடம்பையும், அது வழியாக உயிரையும் வளப்பவளாகிய சத்தி, நாலிதழ்த் தாமரையாகிய மூலாதாரத்திலிருந்து மேலேற்றிப் பல ஆதாரங்களில் ஊன்றப்பட்டு முடிவில் தலைக்குமேல் உள்ள துவாதசாந்தத்தில் முடிகின்ற பிரணவ வடிவாய் இருந்து அருள் புரிகின்றாள். இதனை யறியாது, பலர் மேலாகிய ஞானயோகம் முதிர்தற்பொருட்டு மலை, காடு, தீர்த்தக்கரை முதலிய இடங்களை அடைந்து துன்புற்று விரைய இறந்தொழி கின்றார்கள்.
==============================================
பாடல் எண் : 59
ஆமத் தினிதிருந் தன்ன மயத்தினள்
ஓமத்தி லேயும் ஒருத்தி பொருந்தினள்
நாமம் நமசிவ யவ்வென் றிருப்பார்க்கு
நேமத் துணைவி நிலாவிநின் றாளே.
பொழிப்புரை :  அடப்படாத உணவுப் பொருளாயிருந்து பின் அடப்பட்ட உணவாகவும் ஆகின்ற சத்தி, வயிற்றுத் தீயும், குண்டத் தீயு மாகிய ஓமத் தீக்களிலும் ஒப்பற்ற ஒருத்தியாய் இருந்து அவற்றை அடையும் பொருள்களைச் செரிப்பித்தும், அவியாக்கியும் உதவு கின்றாள். அவளது பெயராகிய திருவைந்தெழுத்தையே துணையாகப் பற்றி அமைதியுற்று இருப்பவர்கட்கு, தவத்தின் முதல்வியாகிய அவள் இனிது விளங்கி அருள்புரிவாள்.
==============================================
பாடல் எண் : 60
நிலாமய மாகிய நீள்படி கத்தி
சிலாமய மாகுஞ் செழுந்தர ளத்தி
சுலாமய மாகும் சுரிகுழற் கோதை
கலாமய மாகக் கலந்துநின் றாளே.
பொழிப்புரை :   நிலவைப் போன்ற ஒளியையுடைய படிகத்தின் நிறத்தையும், ஒளிக் கல்லாகிய முத்தின் நிறத்தையும் உடையவளும், செறிந்த சுரிந்த கூந்தலை உடையவளும் ஆகிய சத்தி பிரணவ கலைகளின் வடிவாய் யோகிகளிடத்தில் கலந்து நிற்கின்றாள்.
==============================================
பாடல் எண் : 61
கலந்துநின் றாள்கன்னி காதல னோடும்
கலந்துநின் றாள்உயிர்க் கற்பனை யெல்லாம்
கலந்துநின் றாள்கலை ஞானங்கள் எல்லாம்
கலந்துநின் றாள்கன்னி காலமு மாயே.
பொழிப்புரை ::   சத்தி சிவனோடு தாதான்மியமாய் ஒன்றுபட்டு நின்றே, உயிர்களின் அறிவு. வேதம் முதலிய எண்ணிறந்த நூல்கள், காலம் முதலிய தத்துவங்கள் ஆகிய எல்லாப் பொருளிலும் அத்து விதமாய் ஒன்று பட்டிருக்கின்றாள்.
==============================================
பாடல் எண் : 62
காலவி எங்கும் கருத்தும் அருத்தியும்
கூலவி ஒன்றாகும் கூடல் இழைத்தனள்
மாலினி மாகுலி மந்திர சண்டிகை
பாலினி பாலவன் பாகம தாகுமே.
பொழிப்புரை :   காலமாய் இருப்பவளும், எல்லா இடமுமாய் இருப் பவளும், உயிர்களின் எண்ணமும், விருப்பமும் கைகூட உதவியாய் இருப்பவளும், எல்லாப்பொருளிலும் தான் ஒன்றாயிருக்கும் கலப்பினைச் செய்தவளும், உயிர்களை மயக்குகின்றவளும், அம்மயக்கம் நீங்கத் தெளிவைத் தருகின்ற மேன்மை வாய்ந்தவளும், மந்திரங்களின் ஆற்றலாய் நிற்பவளும், உயிர்களைக் காக்கின்றவளும் ஆகிய சத்தி தன்னில் ஒரு கூறாய் நிற்கின்ற சிவனிடத்துத் தான் அவனிடத்தில் ஒரு கூறாய் இருப்பாள்.
==============================================
பாடல் எண் : 63
பாகம் பராசத்தி பைம்பொற் சடைமுடி
ஏக இருதயம் ஈரைந்து திண்புயம்
மோக முகம்ஐந்து முக்கண் முகந்தொறும்
நாகம் உரித்து நடம்செய்யும் நாதற்கே.
பொழிப்புரை :   பசிய பொன்போலும் சடைமுடியையும், ஒரே எண்ணத்தையும். திண்ணிய பத்துத்தோள்களையும், விருப்பத்தைத் தருகின்ற ஐந்து முகங்களையும், முகந்தோறும் மும்மூன்று கண் களையும் கொண்டு, யானையை உரித்துப் போர்த்து நடனம் புரிபவ னாகிய சிவபெருமானுக்கு அவனது ஒரு கூறாய் இருப்பாள் பராசத்தி.
==============================================
பாடல் எண் : 64
நாதனும் நாலொன்ப தின்மருங் கூடிநின்
றோதிடும் கூடங்கள் ஓரைந் துளஅவை
வேதனும் ஈரொன் பதின்மரும் மேவிநின்
றாதியும் அந்தமும் ஆகிநின் றாளே.
பொழிப்புரை :  தலைவனாகிய இறைவனும், அவனால் செயற் படுத்தப்பட்ட முப்பத்தாறு தத்துவங்களும் ஏற்ற பெற்றியால் பொருந்தி நிற்பவனவாகச் சொல்லப்படுகின்ற நிலையங்கள் ஐந்து உள்ளன. அவைகளில் பிரமன் முதலியோரும், பதினெண், கணங்களும், வந்து வணங்கச் சத்தி அவற்றிற்கு முதலும், முடிவுமாகி நிற்கின்றாள்.
==============================================
பாடல் எண் : 65
ஆகின்ற நாள்களில் ஐம்பத் தொருவர்கள்
ஆகிநின் றார்களில் ஆருயி ராம்அவள்
ஆகிநின் றாள்உட னாகிய சக்கரத்
தாகிநின் றான்அவன் ஆயிழை பாடே.
பொழிப்புரை :  உலகம் தோன்றும்பொழுது பஞ்ச கலைகளிலும் நிற்கும் எழுத்துக்கள் ஐம்பத்தொன்றும் முதலில் முறையானேதோன்ற, அவற்றிற்கு முதல்வர் ஐம்பத்தொருவரும் உடன்தோன்றி நிற்பர். அங்ஙனம் நிற்கும் அவர் எல்லார்க்கும் சத்தி உயிராய் உள் நிற்பாள். ஆகவே, அவ் எழுத்துக்களைப் பல்வேறு முறையில் தம்முட்கொண்ட சக்கரங்களில் எல்லாம் அச்சத்தி உயிராய் நிற்றல் பெறப்படுதலின், சிவனும் அவளிடத்து நீக்கமின்றி அச்சக்கரங்களில் நிற்பவனாவான்.
==============================================
பாடல் எண் : 66
ஆயிழை யாளொடும் ஆதிப் பரனிடம்
ஆயதொ ரண்டவை ஆறும் இரண்டுள
ஆய மனந்தொ றாறுமுக மாமவற்
றேய குழலி இனிதுநின் றாளே.
பொழிப்புரை :  சத்தி, சிவன் இருவருக்கும் உரிய இடம், உலக முதல்களுக்கு மேலாய், எட்டாய் அமைந்த இதழ்களையுடைய தாமரை மலராகும். அதுவன்றியும் தியான வகையால் வேறுபடுகின்ற ஆறு இடங்களும் உள. எல்லாவற்றிலும் சத்தி இனிது வீற்றிருக் கின்றாள்.
==============================================
பாடல் எண் : 67
நின்றனள் நேரிழை யோடுடன் நேர்பட
இன்றென் அகம்படி ஏழும் உயிர்ப்பெய்தும்
துன்றிய ஓரொன் பதின்மரும் சூழலுள்
ஒன்றுயர் வோதி உணர்ந்துநின் றாளே.
பொழிப்புரை ::   யான் சத்தியோடு ஒன்றிச் செவ்வியனாகும்படி அவள் எனக்கு இனிது வெளிநிற்கின்றாள். எதனால் எனின், இப் பொழுது என் உடலுள்ளே உயிர்ப்புக் காற்று என் வசமாய் ஆறு ஆதாரங் களிலும், அவற்றின்மேல் உள்ள ஏழாந்தானமாகிய சிரசிலும் செல் கின்றது. பத்து வாயுக்களும் நெருங்கி நின்று சுழலுகின்ற உடம்பினுள் ஏனை ஒன்பதினும் உயர்வுடையது. உயிர்ப்புக் காற்று ஒன்றே என்பதை எனக்கு அவள் அறிவித்து, என்பொருட்டு அறிந்தும் நின்றாள்.
==============================================
பாடல் எண் : 68
உணர்ந்தெழு மந்திரம் ஓம்எனும் உள்ளே
மணந்தெழு மாகதி யாகிய தாகும்
கொணர்ந்தெழு சூதனும் சூதியும் கூடிக்
கணந்தெழும் காணும்அக் காமுகை யாமே.
பொழிப்புரை :   உயிர் உணர்ந்து உணர்ந்து மேன்மேல் உயர்தற் குரிய மந்திரம் `ஓம்` என்பது எனச்சொல்லப்படும். உணர்வால் இறையொடு கூடி மேன்மையுறுகின்ற முடிந்த பேறாகிய வீடுபேறும், பிறவும் அதனாலே கிடைக்கும். உயிரை இவ்வாறு மேல்நிலைக்குக் கொண்டு செல்கின்ற கள்வனும், கள்வியுமாகிய சிவனும், சத்தியும் இணைந்து நிற்றலும், அதனால் விரைய விளங்கும். அங்கு முன்னர்க் காணப்படுபவள் சிவனிடத்துப் பெருவிருப்புடையளாகிய சத்தியே.
==============================================
பாடல் எண் : 69
ஆமது அங்கியும் ஆதியும் ஈசனும்
மாமது மண்டலம் மாருத மாதியும்
ஏமது சீவன் சிகைஅங் கிருண்டிடக்
கோமலர்க் கோதையும் கோதண்ட மாகுமே.
பொழிப்புரை :  `ஆதி` எனப்படுபவளாகிய சத்தியும், `ஈசன்` எனப் படுபவனாகிய சிவனும் வழிபாட்டிற்கு மிகச்சிறந்ததாகச் சொல்லப் படுகின்ற வேள்வித்தீ, யோகத்தில் சிறப்பிடம் பெற்று நிற்கும் சந்திர மண்டலம், வாயு முதலிய பூதங்கள் என்னும் இவைகளாய் நின்று உயிருக்கு நலம் செய்கின்றனர். அவ்விடத்தில், சத்தி, யோகியரது உடம்பில் தோன்றுகின்ற நரை முதலியவை அங்ஙனம் தோன்றாது அகலச் சிகை கறுத்தல் முதலிய இளமைத் தன்மைகள் தோன்றும்படி அவரது ஆஞ்ஞைத் தானத்தில் விளங்கி நிற்பாள்.
==============================================
பாடல் எண் : 70
ஆகிய கோதண்டத் தாகும் மனோன்மனி
ஆகிய ஐம்ப துடனே அடங்கிடும்
ஆகும் பராபரை யோடப் பரைஅவள்
ஆகும் அவள்ஐங் கருமத்தள் தானே.
பொழிப்புரை :  `மேன்மைத் தானம்` எனப்படுவதாகிய ஆஞ்ஞை யில் சத்தி விளக்கமுற்றுத் திகழும் நிலையில் அது முதல் மூலாதாரம் ஈறாக நிற்கின்ற ஐம்பது எழுத்துக்களும் அவளிடத்தே செயலற்று அடங்கிவிடும். அஃது எவ்வாறெனின், சுத்த மாயையினின்றும் விருத்திப்படுகின்ற நால்வகை வாக்குகளில் அவ் எழுத்துக்களுக்கு முதல் நிலைகளாகிய `பைசந்தி, சூக்குமை` என்னும் வாக்குகளாய் நிற்றலோடு, ஐந்தொழிலையும் தன்னுடையனவாக உடையவள் அவளேயாதலின்.
==============================================
பாடல் எண் : 71
தானிகழ் மோகினி சார்வான யோகி
போன மயமுடை யார்அடி போற்றுவர்
ஆனவர் ஆவியின் ஆகிய அச்சிவந்
தானாம் பரசிவம் மேலது தானே.
பொழிப்புரை :   சிவசத்தி தனக்கு இடமாகக் கொள்கின்ற குண்டலினி சத்தி, அவளைச் சார்பாகக் கொண்டு விளங்கும் யோகினி சத்தி என்னும் இவர்கள் நீங்கத் தாம் தூயராய் நிற்போரே ஆதி சத்தியைத் தலைப் படுவர். அவரது உணர்வில் அவையேயாய்க் கலந்து நிற்கின்ற ஆதி சிவமாம் நிலையை அடைகின்ற பரசிவம் அந்நிலைக்கு மேலுள்ளது.
==============================================
பாடல் எண் : 72
தானந்தம் மேலே தருஞ்சிகை தன்னுடன்
ஆனந்த மோகினி யாம்பொற் றிருவோடு
மோனையில் வைத்து மொழிதரு கூறது
ஆனவை ஓம்எனும் அவ்வுயிர் மார்க்கமே.
பொழிப்புரை :  ஆதி சத்தி, யோகியரது உச்சியிலும், அதற்கு மேலுள்ள பன்னிரண்டு அங்குலமாகிய நிராதாரத்திலும் குண்டலி சத்தியோடு அவட்கு முன்னவளாம்படி வைத்துச் சொல்லப்படும் வியட்டிப் பிரணவநிலைகளே பிரணவ யோக நெறியாகும்.
==============================================
பாடல் எண் : 73
மார்க்கங்கள் ஈன்ற மனோன்மனி மங்கலி
யார்க்கும் அறிய அரியாள் அவளாகும்
வாக்கும் மனமும் மருவஒன் றாவிட்டு
நோக்கும் பெருமைக்கு நுண்ணறி வாமே.
பொழிப்புரை :  ஆதி சத்தி, பலவகைப்பட்ட யோக நெறிகளையும் அவரவரது பக்குவத்திற்கு ஏற்ப அமைத்து வைத்தவள்; நிலையான மங்கலத்தை உடையவள்; ஆதலின், அவள் யார்க்கும் அறிதற்கரிய வளாவாள். ஆயினும் பாச ஞானம், பசுஞானம் என்னும் இரண்டும் ஒருசேர நீங்கும்படி விட்டுப் பதிஞானத்தால் அறிகின்ற பெரியோர்க்கு அவரது அறிவுக் கறிவாய் அவள் விளங்குவாள்.
==============================================
பாடல் எண் : 74
நுண்ணறி வாகும் நுழைபுலம் மாந்தர்க்கு
பின்னறி வாகும் பிரானறி(வு) அத்தடம்
செந்நெறி யாகும் சிவகதி சேர்வார்க்குத்
தன்னெறி யாமது சன்மார்க்க மாமே.
பொழிப்புரை :  மக்கட்கு ஐம்புலன்களில் செல்லுகின்ற அறிவு சுதந்திர அறிவாகவே தோன்றும்; ஆயினும், சிவனுடைய அறிவு அவர் தம் அறிவை அவற்றின் பின்னே இருந்து செலுத்துகின்ற அறிவாய் நிற்கும். (அஃது இல்லையாயின், எவரது அறிவும் ஒன்றிலும் நுழைய மாட்டாது. ஆகவே, உயிர்களின் அறிவு இறைவனது அறிவின் வழி யவேயன்றிச் சுதந்திரம் உடையன அல்ல). இங்ஙனம் சிவனது அறிவாய காட்டினை (காட்சிக்குத் துணையாவதை) அறிவதே செந்நெறியாம். இனிச் சிவனை அடைய விரும்புவோர்க்கு அவனது அறிவாலே அவனை அறிதலே தக்க நெறியாம்.
=============================================
பாடல் எண் : 75
சன்மார்க்க மாகச் சமைதரு மார்க்கமும்
துன்மார்க்க மானவை யெல்லாம் துரந்திடும்
நன்மார்க்கத் தேவரும் நன்னெறி யாவதும்
சன்மார்க்கத் தேவியும் சத்திஎன் பாளே.

பொழிப்புரை :   ஒன்றாக அமைந்த நன்னெறி ஏனை தீநெறிகள் பலவற்றையும் போக்கிவிடும்; அந்நன்னெறிக்கு முதல்வராய கடவுள ராயும், அவரால் தோற்றுவித்துக் காக்கப்படும் அந்நன்னெறியாயும், அந்நன்னெறியால் அடையப்படும் அருட் சத்தியாயும் உள்ளவள், தலைமை பற்றி, `சத்தி` என்று, அடைகொடாது யாவராலும் சொல்லப்படுகின்ற சிவசத்தியேயாவாள்
==============================================


மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!