http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Thursday 5 July, 2012

திருமந்திரம்-தந்திரம்04: பதிகம் எண் :09/2. ஏரொளிச் சக்கரம் (பாடல்கள்:19-36/36) பாகம் II




 பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
================================================================== 
நான்காம் தந்திரம்:பதிக எண்:01: அசபை ............................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:02: திருவம்பலச் சக்கரம் ...பாடல்கள்: 089
நான்காம் தந்திரம்:பதிக எண்:03: அருச்சனை.......................பாடல்கள்: 012
நான்காம் தந்திரம்:பதிக எண்:04: நவகுண்டம்......................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:05: சத்தி பேதம்......................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:06: வயிரவி மந்திரம்............பாடல்கள்: 050
நான்காம் தந்திரம்:பதிக எண்:07: பூரண சத்தி......................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:08: ஆதார ஆதேயம்.............பாடல்கள்: 100 
நான்காம் தந்திரம்:பதிக எண்:09: ஏரொளிச் சக்கரம்..........பாடல்கள்: 036
======================================================(371+36=407)
நான்காம் தந்திரம்-பதிகம் எண்:09/2. 

ஏரொளிச் சக்கரம் (பாடல்கள்:19-36/36) பகுதி-II

பாடல் எண் : 19
கண்டிடு சக்கரம் விந்து வளர்வதாம்
கண்டிடு நாதமும் தன்மேல் எழுந்திடக்
கண்டிடு வன்னிக் கொழுந்தள வொத்தபின்
கண்டிடும் அப்புறங் காரொளி யானதே.

பொழிப்புரை :   மேற்கூறியவாற்றாற் கண்டு தியானிக்கின்ற சக்கரத்தின் பயன் விந்துவாகிய ஒளிக்காட்சியின் வளர்ச்சியே. அவ்வளர்ச்சியோடுகூட அதற்குத் தக நாத ஒலியும் மிக மிகக் கேட்கப்படும், அவ்விரண்டனாலும் ஆன்மாவின் உள்ளொளியாய் அதனுட் கரந்து நின்ற சிவமும் அனுபவப் பட்டுவரும். அன்னதொரு சிவானுபூதிக்குப்பின் ஆன்மாவைத் தன்னுள் அடங்கக்கொண்டு விரிந்துள்ள சத்தி ஒளியாகிய நீல ஒளி காட்சிப்படுவதாம்.
==============================================
பாடல் எண் : 20
காரொளி அண்டம் பொதிந்துல கெங்கும்
பாரொளி நீரொளி சாரொளி காலொளி
வானொளி ஒக்க வளர்ந்து கிடந்த பின்
நேரொளி ஒன்றாய் நிறைந்தங்கு நின்றதே.

பொழிப்புரை :  யோக முதிர்ச்சியில் நீல ஒளியாய்க் காணப்படும் சத்திஒளி பூதாகாயத்தின் மேற்பட்ட பராகாயமாய் உலகத்தைத் தன்னுட் கொண்டு பரந்து நிற்றலாலே ஐம்பெரும் பூதங்கள் முதலிய பொருள்கள் பலவும் பயன் தரும் பொருளாய்ச் சிறந்து விளங்கு கின்றன. அச்சத்தி ஒளியூடே அதனினும் நுண்ணிய சிவமாகிய மெய்ப் பொருள் ஒன்றுபட்டு அச்சத்தி ஒளி உள்ள பொருள்களில் எல்லாம் தானும் உடன் நிறைந்து நிற்கின்றது.
==============================================
பாடல் எண் : 21
நின்றது அண்டமும் நீளும் புவியெலாம்
நின்ற இவ் அண்டம் நிலைபெறக் கண்டிட
நின்ற இவ் அண்டமும் மூல மலமொக்கும்
நின்ற இவ் அண்டம் பலமது விந்துவே.

பொழிப்புரை :   மேற் கூறியவாறு சத்தியாகிய பராகாயம் பல அண்டங்கள் முதலிய எல்லாப் பொருள்களையும் தன்னுள் அடக்கிப் பரந்து நிற்பது, அவை நிலைபெறுதலைச் செய்தற் பொருட்டாம். இனி அவ்வண்டம் முதலிய பொருள்கள் மாயையின் விளைவுகளாய் உயிர்கட்குச் சிவத்தை மறைத்துத் தம்மையே காட்டி நிற்றலால், அவற்றை அவ்வாற்றாற் செயற் படச் செய்யும் சத்தியும் ஓராற்றால் ஆணவ மலத்தோடு ஒப்பதாம்.
==============================================
பாடல் எண் : 22
விந்துவும் நாதமும் ஒக்க விழுந்திடில்
விந்துவும் நாதமும் ஒக்க விதையதாம்
விந்திற் குறைந்திட்டு நாதம் எழுந்திடில்
விந்துவை எண்மடி கொண்டது வீசமே.

பொழிப்புரை :  `ஏரொளிச் சக்கரம் எல்லா உலகங்களையும் அடக்கி நிற்கும்` என்பது விளக்குதற்கு இது முதல் நான்கு மந்திரங்களால் உலக உற்பத்தி முறையை உணர்த்துகின்றார்.
`
விந்து, நாதம்` என்ற இரண்டு தத்துவங்கள் உலகிற்கு அடி நிலையாய் உள்ளன. அவை யிரண்டும் முதற்கண் நிற்றல் போலத் தனித்து நில்லாது சமமாய்க் கலந்து கீழ்வருமாயின், அங்ஙனம் கலந்த அக்கலப்பே உலகத்திற்கு முதலாய் நிற்கும். பின்பு விந்து மிகுதியாக நாதம் குறைந்து நிற்க வேண்டில், அங்ஙனம் நிற்றற்கும் நாதத்தினும் விந்துவை எண்மடங்கு மிகுதியாகக் கொண்ட ஒருநிலை முதலாக அமையும்.
==============================================
பாடல் எண் : 23
வீசம் இரண்டுள நாதத் தெழுவன
வீசமும் ஒன்று விரிந்திடும் மேலுற
வீசமும் நாதம் எழுந்துடன் ஒத்தபின்
வீசமும் விந்து விரிந்தது காணுமே.

பொழிப்புரை :   சிவத்தினின்றும் தோன்றும் உலக முதல்கள் இரண்டு உள்ளன. அவற்றுள் ஒன்று மேலாய் நிற்கும். (எனவே, மற்றொன்று கீழாய் நிற்பதாம். ) சிவத்தினின்றும் தோன்றும் அவ் இரு முதல்களும் முதற்கண் தனித்து நின்றவாறு நில்லாது சமமாய்க் கூடி நின்ற, பின்பே சுத்தமாயை பல உலகங்கட்கு முதலாய் நின்று, அவையாய் விரியும்.
==============================================
பாடல் எண் : 24
விரிந்தது விந்துவும் கெட்டது வீசம்
விரிந்தது விந்துவும் நாதத் தளவு
விரிந்தது உட்பட்ட எட்டெட்டு மாகில்
விரிந்தது விந்து விதையது வாமே.

பொழிப்புரை :   சுத்த மாயையே அனைத்தையும் வியாபித்து நிற்ப தாகலின், அதனை அறியாதார், `முக்குண வடிவான பிரகிருதி ஒன்றே உலகிற்கு முதனிலை` எனக் கூறும் கூற்று உண்மையன்றாய் ஒழிந்தது. சுத்த மாயை வித்தை முதலாக நாதம் முடிய விரிந்துநின்று அறுபத்து நான்கு கலைகளாகச் சொல்லப்படுகின்ற நூல்களையும் தன்னுட் கொண்டு நிற்குமாயின், சுத்த மாயையே வியாபகமானது; அதுவே உலகிற்குப் பெரு முதல்நிலை.
==============================================
பாடல் எண் : 25
விதையது விந்து விளைந்தன எல்லாம்
விதையது விந்து விளைந்த உயிரும்
விதையது விந்து விளைந்தவிஞ் ஞானம்
விதையது விந்து விளைந்தவன் தாளே.

பொழிப்புரை :  சுத்த மாயை முதனிலையாக நிற்பவே பலவகை உலகங்களும், அவற்றுள் வாழும் பல உயிரினங்களும், அவற்றுள் வாழும் பல உயிரினங்களும், சவிகற்ப ஞானமும் உளவாவன. ஆயினும் அவை அங்ஙனம் உளவாதல் அம்மாயை சிவசத்தியை நிலைக்களமாகக் கொள்ளுதலாலேயாம்.
==============================================
பாடல் எண் : 26
விளைந்த எழுத்தவை விந்துவும் நாதம்
விளைந்த எழுத்தவை சக்கர மாக
விளைந்த எழுத்தவை மெய்யினுள் நிற்கும்
விளைந்த எழுத்தவை மந்திர மாமே.

பொழிப்புரை :   காரணகாரியங்கட்கு உள்ள ஒற்றுமையால் விந்து நாதங்களின் காரியமாகிய எழுத்துக்கள் பலவும் விந்து நாதங் களாகவே கொள்ளப்படும். அத்தன்மையவான எழுத்துக்களாலே எல்லாச் சக்கரங்களும் அமைதலின், அச்சக்கரத் தியானத்தால் அவை உடம்பினுள் மூலாதாரம் முதலிய ஆதாரங்களில் நின்று உடம்பை யும் விந்து நாதமயமாக்கி, ஆன்மாவையும் மந்திரான்மாவாகச் செய்யும்; அஃது எவ்வாறெனில் எழுத்துக்கள்தாமே மந்திரமாய் உருப் பெறுதலின்.
==============================================
பாடல் எண் : 27
மந்திரம் சக்கர மானவை சொல்லிடில்
தந்திரத் துள்ளெழுத் தொன்றெரி வட்டமாம்
தந்திரத் துள்ளும் இரேகையில் ஒன்றில்லை
பெந்தம தாகும் பிரணவம் உன்னிடே.

பொழிப்புரை :   `மந்திரம், சக்கரம்` என்பவற்றின் உண்மையைச் சொல்லுமிடத்து, அவைகளைக்கூறும் நூல்களின் கருத்து, `நாதமாகிய உண்மை எழுத்து ஒன்றே சோதி மண்டலமாம்` என்பதே. ஆகையால், அவ்வுண்மை எழுத்துக்களை உணர்த்தும் கருவிகளாகிய ஆகாய ஒலியையும், அதற்கு அறிகுறியாய் உள்ள வரிவடிவத்தையும் மிகச் சிறப்பித்துக் கூறும் அந்நூன்மொழிகள் முகமனாய் (உபசாரமாய்) அமைவனவே. இதனை, உணர்ந்து பரமபந்தமாய் உள்ள பிரணவத்தைத் தியானிப்பாயாக.
==============================================
பாடல் எண் : 28
உன்னிட்ட வட்டத்தில் ஒத்தெழு மந்திரம்
பின்னிட்ட ரேகை பிழைப்பது தானில்லை
தன்னிட்ட டெழுந்த தகைப்பறப் பின்னிற்கப்
பன்னிட்ட மந்திரம் பார்க்கலு மாமே.

பொழிப்புரை :   தியானத்தின் பொருட்டு வரையப்பட்ட அறை களில் பொருந்தி விளங்கும் எழுத்துக்கள் அவ் அறைகளின் எல்லைக் கோடுகளைக் கடந்து ஒன்று மற்றொன்றிற் செல்வதில்லை. ஆகை யால், தியானிப்பவன் அவைகளைத் தனக்கு இயல்பாயுள்ள மறதி யாகிய தடை அற்றொழிய, அவ் அறைகளின் வழியே நின்று நினைக்கும் நிலையுடையனாயின், மேற்சொல்லிய உண்மை மந்திரத்தை நேரே காணுதல் கூடும்.
==============================================
பாடல் எண் : 29
பார்க்கலு மாகும் பகையறு சக்கரம்
காக்கலு மாகும் கருத்தில் தடம்எங்கும்
நோக்கலு மாகும் நுணுக்கற்ற நுண்பொருள்
ஆக்கலு மாகும் அறிந்துகொள் வார்க்கே.

பொழிப்புரை :  மேற்கூறிய முறைகளை அறிய வல்லவர்க்கு மந்திரங்களின் உண்மைக் காட்சியைக் காணுதலும், புறப்பகை அகப் பகைகளை நீக்குவதாய சக்கரத்தை நழுவ விடாது பற்றி அதனாற் பயன் அடைதலும், இருந்த இடத்திலிருந்தே எவ்விடப் பொருளையும் அகத்தில் காண்டலும், நுண்ணியவற்றிலும் நுண்ணிதாகிய சிவத்தைக் தன்னிடத்திலே பெறுதலும் கூடும்.
==============================================
பாடல் எண் : 30
அறிந்திடுஞ் சக்கரம் ஆதி எழுத்து
விரிந்திடுஞ் சக்கரம் மேலெழுத் தம்மை
பரிந்திடுஞ் சக்கரம்பார் அங்கி நாலும்
குவிந்திடுஞ் சக்கரம் கூறலு மாமே.

பொழிப்புரை :  ஏரொளிச்சக்கரத்தில் உள்ள எழுத்துக்கள் மேல் ``அம் முதல் ஆறும்`` என்னும் மந்திரத்தில் (1247) கூறியபடி முதலில் ஆறும், ஈற்றில் ஆறும், இடையில் நான்கும் ஆகிய எழுத்துக்கள் முறையே `சிவன், சத்தி, அக்கினி` என்னும் மூவருக்கும் உரியன ஆதலின், அவை முத்திறமும் கூடிநிற்கும் இச்சக்கரத்தின் பெருமை சொல்லில் அடங்குவதோ!
==============================================
பாடல் எண் : 31
கூறிய சக்கரத் துள்எழு மந்திரம்
ஆறியல் பாக அமைந்து விரிந்திடும்
தேறிய அஞ்சுடன் சேர்ந்தெழு மாரண
மாறியல் பாக மதித்துக்கொள் வார்க்கே.

பொழிப்புரை :   ஏரொளிச் சக்கரத்தில் உள்ள எழுத்துக்களாகிய மந்திரங்கள், சிற்றறிவினார் மதித்து விரும்பும் `தம்பனம், வசியம், மோகனம், ஆகருடணம், உச்சாடனம்` என்னும் ஐந்தோடு `மாரணம்` என்பதும் கூட ஆறாகின்ற மாறுபட்ட செயல்களை நல்லனவாக மதித்து விரும்புகின்றவர்கட்கு அவ்வாறே வேறுபட்டனவாகவும் அமைந்து விரிந்துநிற்கும்.
==============================================
பாடல் எண் : 32
மதித்திடும் அம்மையும் மாமாதும் ஆகும்
மதித்திடும் அம்மையும் மங்கனல் ஒக்கும்
மதித்தங் கெழுந்தவை மாரண மாகில்
கொதித்தங் கெழுந்தவை கூடகி லாவே.

பொழிப்புரை :   மேற்கூறிய அம் மந்திரங்கள் அவரவரது பக்குவத் திற்கு ஏற்ப, ஒருத்தியே ஆய அருட்சத்தியாயும், அளவற்றவளாய திரோதான சத்தியாயும் நிற்கும். அச்சத்திகள் பலவுமாகின்ற பராசத்தி நீறுபூத்த நெருப்பு போல்பவள். ஆதலின், அம்மந்திரங் களால் உலகப் பயன்கள் கைகூடுமாயினும், பிறரை நலிய எண்ணு கின்ற தம்பனம் முதலியவைகளைச் சிறப்பாக மாரணத்தைப் பெரிதாக மதித்து அவற்றைச் செபித்தால் அவை சீற்றம் அடையும்; அதனால், அவ் இழி பயன்கள் கைகூட மாட்டா.
==============================================
பாடல் எண் : 33
கூடிய தம்பனம் மாரணம் வச்சியம்
ஆடியல் பாக அமைந்து செறிந்தடும்
பாடியுள் ளாகப் பகைவரும் வந்துறார்
தேடிஉள் ஆகத் தெளிந்துகொள் வார்க்கே.

பொழிப்புரை : ஏரொளிச் சக்கரத்தின் சிறப்பை ஆராய்ந்து அதனை, `இம்மை மறுமை நலங்களைப் பயக்கும் திருவருளின் வாயில்` என்பதாக உள்ளத்திலே தெளிந்து, அவ்வாற்றால் அதனை மேற்கொள்பவர்க்கு, மேலே கூறிய தம்பனம் முதலிய ஆற்றல்கள் விளையாட்டின் தன்மையாக அவர்களிடம் தாமேவந்து பொருந்தி நிற்கும். அதனால், அவர்களைக் கெடுக்க எண்ணுகின்ற பகைவரும் அவர் இருக்கும் திருவருளாகிய பாசறைக்குள் புகமாட்டாதவராவர்.
==============================================
பாடல் எண் : 34
தெளிந்திடுஞ் சக்கர மூலத்தி னுள்ளே
அளிந்த அகாரத்தை அந்நடு வாக்கிக்
குளிர்ந்த அரவினைக் கூடிஉள் வைத்து
அளிந்தவை அங்கெழும் ஆடிய காலே.

பொழிப்புரை :   ஏரொளிச் சக்கரத்துள் அகார கலா சக்கரத்தை மூலா தாரத்தில் கருதிக் குண்டலினியோடு பொருந்த வைத்துத் தியானத்தைத் தொடங்க, கலா சக்கரங்கள் பலவும் பிராணாயாமத்தால் முறையே அருளுருவாய் முதிர்ந்து பயன் தரும்.
==============================================
பாடல் எண் : 35
காலரை முக்கால் முழுதெனும் மந்திரம்
ஆலித் தெழுந்தமைந் தூறி யெழுந்தவாய்ப்
பாலித் தெழுந்து பகையற நின்றபின்
மாலுற்ற மந்திரம் மாறிக்கொள் வார்க்கே.

பொழிப்புரை :  கால், அரை, முக்கால், ஒன்று என இங்ஙனம் பல வகையால் வரையறுக்கப்பட்ட மாத்திரைகளின் படி அகாரம் முதலிய கலைகள் மந்திரங்களாக உச்சரிக்கப்பட்டுத் தோன்றிப் பொருந்தி அழுந்தி நின்று வளர்ந்து தம் தம் பயனைத் தந்து மேற்போய் பிறவி யாகிய பகை நீங்கும்படி முற்றி நிற்குமாயின், ஏரொளிச் சக்கரத்தில் உள்ள அம்மந்திரங்களை அம் முறையானே மாறி நிற்கக் கொண்டு செபிக்கின்ற அவர்களுக்கு அம்மந்திரங்கள் அவர்களை மிகவும் விரும்புகின்றனவாய் அமையும்; `அஃதாவது அவர்க்குக் கைவந்து நிற்கும்` என்பதாம்.
==============================================
பாடல் எண் : 36
கொண்டஇம் மந்திரம் கூத்தன் எழுத்ததாய்ப்
பண்டைஉள் நாவில் பகையற விண்டபின்
மன்றுள் நிறைந்த மணிவிளக் காத்ஞிளி
என்றும் இதயத் தெழுந்து நமவே.

பொழிப்புரை :  பிராசாத கலைகளுக்குரிய மந்திரங்களாகக் கொள்ளப்பட்ட ஏரொளிச் சக்கர எழுத்துக்கள் இறைவன் எழுத் தாகவே ஆகி, யோக முறைப்படி உள்நாக்கில் மாறுபாடு நீங்க ஒலிக்கப் பட்ட பின்னர், முத்திக்கு நேரே வாயிலாகிய திருவைந்தெழுத்து இருதயத்திலே தோன்றி, அவ்வம்பலத்தில் நிறைந்து நிற்கின்ற, சிவமாகிய தூண்டாவிளக்காய் என்றும் ஒளிவிட்டு விளங்கும்.
==============================================
மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!