http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Sunday 3 March, 2013

திருமந்திரம்-தந்திரம்09: பதிகம் 03 & 04. பிரணவ சமாதி, ஒளிவகை–பாடல்கள்: 06 & 17.

 
 பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
*************************************************
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:01: குருமட தரிசனம்.......பாடல்கள்: 006  ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:02: ஞானகுரு தரிசனம்..பாடல்கள்: 019
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:03: பிரணவ சமாதி..........பாடல்கள்: 006  ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:04: ஒளிவகை....................பாடல்கள்: 017 *************************************************
தந்திரம் 8- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -004
கூடுதல் பாடல்கள்  (025+006+017=048)
*************************************************


ஒன்பதாம் தந்திரம்-3. பிரணவ சமாதி : பாடல்கள்:06
பாடல் எண் : 1
தூலப் பிரணவம் சொரூபானந்தப் பேருரை
பாவித்த சூக்குமம் மேலைச் சொரூபப் பெண்
ஆலித்த முத்திரை ஆங்கதிற் காரணம்
மேலைப் பிரணவம் வேதாந்த வீதியே.

பொழிப்புரை :  வேதங்களில் உயர்த்துச் சொல்லப்படுகின்ற பிரணவ மந்திரம் மெய்ப்பொருள் இன்பத்தைப் பொதுவாக விளக்கும் தூல மந்திரமேயாம். (அஃது அகாரம் முதலிய ஐந்து அக்கரங்களாகவே சொல்லப்படுகின்றது. அக்கரங்கட்கும் அத்தியான்மிக சத்திகள் உண்டு. எனினும் அவை வேத வேதாந்தங்களில் சொல்லப் படவில்லை. ஆகவே அத்தியான்மிக சத்திகளையுடையனவாகச் சொல்லப்படுகின்ற சீபஞ்சாக்கரமே (திருவைந்தெழுத்தே) சூக்கும மூல மந்திரமாகும். (இது பிரணவத்தை நோக்கி, `சூக்குமம்` எனப்பட்டது) இனித் திருவைந்தெழுத்திலும் மிகச் சூக்குமமானது ஞான குரு தமது கையால் காட்டுகின்ற சின்முத்திரை. இவற்றுள் முதற்கண் சொல்லப்பட்ட பிரணவ யோகம் வேதாந்த முறையாம்.
*************************************************
பாடல் எண் : 2
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே.

பொழிப்புரை : வேதாந்த சித்தாந்த ஞான குரவர்கள் ஒரு வார்த்தையாகச் சொல்லுகின்ற உபதேச மொழிகளும், சிவன் கொள்ளுகின்ற உருவம், அருவம். அருவருவம் என்கின்ற மூவகைத் திருமேனிகளும், பலவகை மொழிகளும் ஆகிய எல்லாம் `ஓம்` என்பதாகிய பிரணவத்தில் உள்ளனவேயாம். அதனால் பிரணவயோகத்தால் சித்தி முத்திகள் யாவும் கிடைக்கும்.
*************************************************
பாடல் எண் : 3
ஓங்காரத் துள்ளே உதித்தஐம் பூதமும்
ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம்
ஓங்காரா தீதத்(து) உயிர்மூன்றும் உற்றன
ஓங்கார சீவன் பரசிவ னாகுமே.

பொழிப்புரை : பஞ்ச பூதம் முதலிய தத்துவங்களும் அவற்றின் காரியங்களாகிய பலவகை உடம்புகளும் பிரணவத்திலிருந்தே தோன்றின. பிரணவமாகிய அதற்கு அப்பால் உள்ளன மூவகை உயிர்கள், ஆகவே பிரணவமே வடிவான உயிரை, `பரசிவன்` என்றே சொல்லலாம்.
*************************************************
பாடல் எண் : 4
வருக்கம் சுகமாம் பிரமமு மாகும்
அருக்கச் சராசரம் ஆகும் உலகில்
தருக்கிய ஆதார மெல்லாந்தன் மேனி
சுருக்கமில் ஞானம் தொகுத்துணர்ந் தோர்க்கே.

பொழிப்புரை : `ஓம்` எனச் சமட்டியாகச் சொல்லப்படுவது `பிரணவம்` எனவும் அதனை `அகாரம், உகாரம், மகாரம், விந்து. நாதம் எனப் பெரும்பான்மை ஐந்தாகவும், மற்றும் பலவாகவும் பிரித்து வியட்டியாகச் சொல்லப்படுகின்றவற்றை, `பிரணவத்திற்கு` இனம் எனவும் கூறுவர். அவ் இனங்களை மேல், `கலைநிலை` என்னும் அதிகாரத்தில் காணலாம். அந்த இனங்கள் ஞான வடிவான பல சத்திகளாகும். சத்திக்கும் சிவத்திற்கும் வேற்றுமையின்மையால் அவைகளை, `ஆனந்த மயமான சிவம்` என்றும் சொல்லலாம். அச்சத்திகள் அண்டத்தில் சரம், அசரம் ஆகிய அனைத்துப் பொருள்களிலும் வியாபித்து நிற்கும். மற்றும் பிண்டமாகிய உடம்பில் ஆறாதாரங்கள் முதலான பல இடங்களிலும் நிற்கும். இத்தன்மைகள் எல்லாவற்றையும் உணர்ந்தவர்கட்கே விரிந்த ஞானம் உளதாகும்.
*************************************************
பாடல் எண் : 5
மலையுமனோ பாவம் மருள்வன வாவ
நிலையின் தரிசனம் தீப நெறியாம்
தலமும் குலமும் தவம் சித்த மாகும்
நலமும் சன் மார்க்கத் துபதேசந் தானே.

பொழிப்புரை : தன்னறிவாலே தனக்குள் தோன்றும் மலைவுகள் எல்லாம் தெளிவைத் தாராது. மேலும், மேலும் மயக்கத்தையே தரும், இருள் நெறிகளேயாகும். ஆகையால், ஞான குருவின் தரிசனமே நிலையான உணர்வைத் தருகின்ற ஒளி நெறியாம். ஆகவே, தவத்திற்குரிய புண்ணியத் தலங்களும், அங்குள்ள தவத்தோர் கூட்டங்களும், அவரோடு கூடி ஒழுகுகின்ற தவ ஒழுக்கமாகிய நன்மையும் எல்லாம் நன்னெறியை உணர்த்துகின்ற நல்லாசிரியரது உபதேசமே.
*************************************************
பாடல் எண் : 6
சோடச மார்க்கமும் சொல்லும்சன் மார்க்கிகட்(கு)
ஆடிய ஈராறின் அந்தமும் ஈரேழில்
கூடிய அந்தமும் கோதண்ட மும்கடந்(து)
ஏறிய ஞானஞே யாந்தத் திருக்கவே.

பொழிப்புரை : ஞானத்தை அடைதற்குரிய வழியை அடைய விரும்புவோர்கட்கு, அவர்கள் ஆதாரயோகத்தின் முடிநிலையாகிய புருவ நடுவையும் கடந்து மேல் ஏறி ஏழாந்தானத்தை அடைந்து உணர்ந்த ஞானத்தினால் நிராதாரத்தையும் கடந்துள்ள ஞேயமாகிய சிவத்திற் சென்று அடங்கியிருத்தற்பொருட்டு, `பன்னிருகலை, பதினாறுகலை` என்று பிராசாத யோகங்களைப் பதினான்கு வித்தைகளின் முடிவாகிய பிராசாத நூல்கள் கூறும்.
*************************************************
 ஒன்பதாம் தந்திரம் - 4. ஒளிவகை : பாடல்கள் : 017
பாடல் எண் : 1
ஒளியை அறியில் உருவும் ஒளியும்
ஒளியும் அருவம் அறியில் அருவாம்
ஒளியின் உருவம் அறியில் ஒளியே
ஒளியும் உருக உடன்இருந் தானே.

பொழிப்புரை :   உலகத்தில் கண்வழியாகக் காட்சி நிகழுங்கால் அக்காட்சி காணப்படும் பொருள், அதுவும் அதனைக் காணும் கண்ணொளியும் விளங்குதற்கு இன்றியமையாத் துணையாகிய ஒளி, அவ்வொளியால் விளங்கி உருவத்தைக் காண்பதாகிய கண்ணொளி ஆகிய மூன்றன் கூட்டத்திலே நிகழ்வதாகும். ஆயினும் கண்ணால் உருவத்தைக் காண்கின்றவன் அம்மூன்றனையும் ஒருங்கே அறிதல் இயலாது) மற்று காணப்படும் உருவத்தையும், காண்பதாகிய கண்ணொளியையும் விளக்கி நிற்கின்ற அந்த ஒளியை அறிவானாயின் அப்பொழுது ஏனை யிரண்டும் அறியப்படாமல் மறைந்து நிற்கும். இனிக் காணப்படும் உருவத்தை அறிவானாயின் அப்பொழுது ஏனையிரண்டும் மறைந்து நிற்கும், இனிக் கண்ணொளியின் இயல்பை அறியின் அப்பொழுது ஏனையிரண்டும் அறியப்படாமல் மறைந்து நிற்கும். இம்முறையில் தான் சிவன்தான் ஆன்ம ஒளி மறைந்தவிடத்து அவன் அவ்வான்மாவினோடு உயிர்க்குயிராய் என்று உடனாகியிருத்தல் விளங்கும்.
*************************************************
பாடல் எண் : 2
புகல்எளி தாகும் புவனங்கள் எட்டும்
அகல்ஒளி தாய்இருள் ஆசற வீசும்
பகல்ஒளி செய்ததும் அத்தா மரையில்
இகல்ஒளி செய்தெம் பிரான் இருந்தானே.

பொழிப்புரை :   நிவிர்த்தி கலையில் `நூற்றியெட்டு` என்றும், பிரதிட்டா கலையில் `குய்யாட்டகம், அதிகுய்யாட்டகம், குய்யதராட்டகம்` என்று இன்ன பலவாகவும் எட்டு எட்டாகச் சொல்லப்படுகின்ற, சகல வருக்கத்தினராலும் எளிதில் அடையப்படும் புவனங்களிலும் ஞான ஒளியைப் பரப்பி அறியாமையாகிய இருளைப் போக்குகின்ற சிவனாகிய ஞாயிறு வெளிப்பட்டு விளங்குவதும் உள்ளதுமாகிய தாமரையிலேயாம். அத்தாமரையில் அந்த ஞாயிறாகிய சிவன் ஒன்றோடு ஒன்று மாறுபட்ட இரு நிற ஒளியுடையனாய் விளங்குகின்றான்.
*************************************************
பாடல் எண் : 3
விளங்கொளி அங்கி விரிகதிர் சோமன்
துளங்கொளி பெற்றன சோதி அருள
வளங்கொளி பெற்றது பேரொளி வேறு
களங்கொளி செய்து கலந்துநின் றானே.

பொழிப்புரை :   [முன் மந்திரதிற் கூறியவாறு, `சிவனே அண்டத்திலும், பிண்டத்திலும் ஒளியைத் தருகின்றான்` என்றால், `இங்குக் கண்கூடாகக் காணப்படும் - தீ ஞாயிறு, திங்கள் - என்பவை ஒளியைத் தருகின்றன` எனக் கருதுதல் பிழையோ எனில், அன்று; மற்று.]
ஆங்காங்கு அவ்வப்பொழுது காலவரையறை ஏதும் இன்றி வெளிப்பட்டு மறைகின்ற தீயும், சில கால வரையறைகளின்படி தோன்றி நின்று ஒளியைத் தந்துவிட்டு மறைகின்ற ஞாயிறும், திங்களும் ஆகிய அவையும் அவ்வாற்றால் ஏற்ற பெற்றியால் ஒளியைத் தந்து விளங்குதலு, ஒளியைத் தாராது மறைந்து போதலும் ஆகிய நிலைமையை உடையனவாகச் சிவன் அருள் செய்தனாலேயே அவை ஒரளவில் உலகிற்கு ஏற்ற பெற்றியால் ஒளியைத் தரும் செயற்கைச் சிற்றொளிப் பொருள்களாய் உள்ளன. என்றும் வற்றா வளம் கொண்டவனாகிய சிவன் கொண்டுள்ள ஒளியே முற்றும் நீக்க மாட்டாது சிறிது சிறிது நீக்குகின்ற அந்தச் சிற்றொளிப் பொருள்களை உலகிற்குப் படைத்துத் தந்து தான் அவற்றோடு இரண்டறக் கலந்து அவற்றை நிலைபெறுத்தியும் நிற்கின்றான்.
*************************************************
பாடல் எண் : 4
இளங்கொளி ஈசன் பிறப்பொன்றும் இல்லி
துளங்கொளி ஞாயிறும் திங்களும் கண்கள்
வளங்கொளி அங்கியும் மற்றைக்கண் நெற்றி
விளங்கொளி செய்கின்ற மெய்காயம் ஆமே.

பொழிப்புரை :   சிவன் என்றும், எவ்விடத்தும் பிறத்தலை இல்லாதவன் ஆதலால், அவனே இயற்கையாய் விளங்கம் ஒளி. அவனொழிந்த பிற பொருள்கள் எல்லாம் தோற்றம் உடையனவே யாதலால் அவற்றுள் சிலவாகிய முச்சுடர்களும் அவன் ஆக்கிய செயற்கை ஒளிகளே. முச்சுடர்களுள் ஞாயிறும், திங்களும் அவனது வல இடக் கண்களாகவும், தீ பிறருக்கில்லாத மூன்றாவதான நெற்றிக் கண்ணாகவும் உயர்ந்தோரால் சொல்லப்படுகின்றன. இனி அவனது திருமேனியே ஒளிமயமாகலின், ஒளியுடன் விளங்குகின்ற ஆகாயம் அவனது திருமேனியாகச் சொல்லப்படுகின்றது.
*************************************************
பாடல் எண் : 5
மேலொளிக் கீழதின் மேவிய மாருதம்
பார்ஒளி அங்கி பரந்தொளி ஆகாசம்
நீர்ஒளி செய்து நெடுவிசும் பொன்றினும்
ஓர் ஒளி ஐந்தும் ஒருங்கொளி யாமே.

பொழிப்புரை :   எல்லா ஒளிகளினும் மேலான ஒளியாகிய திருவருள் ஒளியின்கீழ் அதினின்றும் தோன்றியனவை, விரிந்து பரந்த ஒளியையுடைய ஆகாயம், காற்று, ஒளிப்பொருளாகிய தீ, நீர், நிலம் ஆகியவை. இவை ஐந்தும் உயிர்கட்கு அறிவைத் தந்து, ஆகாயம் ஒன்றிற்குள்ளே ஏனை நான்கும் அடங்கியிருப்பினும், இவை ஐந்தும் ஒடுங்கும் இடம் திருவருள் ஒளிதான்.
*************************************************
பாடல் எண் : 6
மின்னியல் தூவொளி மேதக்க செவ்வொளி
பன்னிய ஞானம் பரந்த பரத்தொளி
துன்னிய ஆறொளி தூய்மொழி நாடொறும்
உன்னிய ஆறொளி ஒத்தது தானே.

பொழிப்புரை :   [`ஒளி` என்பதனை `மின்னியல்` ஞானம் என்பவற்றோடும் கூட்டுக.]
சிவனது சத்தி, பரை, ஈசானி, பூரணி, ஆர்த்தி, வாமை, மூர்த்தி என முன்னர் ஆறாகி நின்று அருள்புரிவனவாம். (ஈசானி முதலிய ஐந்துமே ``ஈசானம்`` முதலிய பஞ்சப் பிரம மந்திரங்களாம்) அந்த ஆறின் வடிவாகவே நாள்தோறும் பிரணவத்துடன் கூட்டிச் சிகாரம் முதலாக வைத்து எண்ணப்படும் திருவைந்தெழுத்துக் கொள்ளப்படும்.
*************************************************
.
பாடல் எண் : 7
விளங்கொளி மின்னொளி யாகிக் கரந்து
துளங்கொளி ஈசனைச் சொல்லும்எப் போதும்
உளங்கொளி ஊனிடை நின்றுயிர்க் கின்ற
வளங்கொளி எங்கும் மருவிநின் றானே.

பொழிப்புரை :   சிவன் எல்லா ஒளிகளிலும் மேலாய் மிக விளங்குகின்ற ஒளியாய் இருப்பினும் தன்னை நினைக்கின்றவனது உள்ளத்தில் மட்டுமே விளங்கி நின்று, உடலிலும் உயிர்ப்பாய் இயங்குகின்ற வண்மையுடையவனாயும், மற்றை எல்லாப் பொருள்களிலும் மேகத்தில் ஒரே ஒரு காலத்தில் மட்டுமே சிறிது விளங்கி விரைவில் மறையும் மின்னல்போல மறைந்துள்ளவனாயும் இருக்கின்றான். ஆகையால் அவனை ஈங்கள் இடைவிடாது துதியுங்கள்.
*************************************************
பாடல் எண் : 8
விளங்கொளி அவ்வொளி அவ்விருள் மன்னும்
துளங்கொளி யான்தொழு வார்க்கும் ஒளியான்
அளங்கொளி யார்அமு தாரநஞ் சாரும்
களங்கொளி ஈசன் கருதது மாமே.

பொழிப்புரை :   சிவன் எல்லா ஒளிகளிலும் மேலாய் விளங்குகின்ற தனது ஒளியை, எல்லா இருளிலும் மேலானதாய் மிக மறைக்கின்ற ஆணவ இருளின் வலிகெடுதற்கு ஏதுவான ஒளியாக உடையவன். அவ்வொளியை அவன் எவ்வுயிரிடத்தும் மறைத்தல் இல்லை. ஏனெனில், விளங்கும் ஒளியுடம்பினராகிய தேவர்கள் அமுதம் உண்டற்பொருட்டு நஞ்சம் நிறைந்த கண்டத்தையுடைய அவனது திருவுள்ளம் அத்தகையது.
*************************************************
பாடல் எண் : 9
இலங்கிய தெவ்வொளி அவ்வொளி ஈசன்
துளங்கொளி போல்வது தூங்கருட் சத்தி
விளங்கொளி மூன்றே விரிசுடர் தோன்றி
உளங்கொளி யுள்ளே ஒருங்குகின் றானே.

பொழிப்புரை :   பிறிதொரு பொருள் விளக்க வேண்டாது தானே விளங்கும் ஒளி எந்த ஒளியோ அந்த `ஒளியே சிவன்` எனப்படும் பொருள். (எனவே, விளக்கினால் விளக்கும் ஒளி எந்த ஒளியே சீவன்` எனப்படும் பொருள் என்பது தானே விளங்கிற்று.) இனி, ஞாயிறு, பிறரால் காணப்படுதற்கு ஏதுவாய் அதனினின்றும் வியாபிக்கின்ற அதன் கதிர்போன்றது சிவனது சத்தி. ஆக, விளக்கம் உடைய ஒளிகள் மூன்றாகும். அவற்றுள் பேரொளியாகிய சிவன் தன்னை நினைக்கின்ற உயிரினது நெஞ்சத்தில் வெளிப்பட்டு அதனது ஒளியைத் தனது ஒளிக்குள் அடக்கி விளங்குவான்.
*************************************************
பாடல் எண் : 10
உளங்கொளி யாவதென்? உள்நின்ற சீவன்
வளங்கொளி யாய்நின்ற மாமணிச் சோதி
விளங்கொளி யாய்மின்னி விண்ணில் ஒடுங்கி
அளங்கொளி ஆயத்து ளாகிநின் றானே.

பொழிப்புரை :   பிறிதோர் ஒளியைத் தன்னுட் கொண்டிருக்கும் ஒளியாவது எந்த ஒளி? உடலினுள்ளே ஒளியாய் நிற்கும் சீவ ஒளியாம் அந்த ஒளிக்குள் ஒளியாகி நிற்கும் வன்மையை உடைய பெரிய மாணிக்க ஒளியாகிய சிவனை, தன்னைக் காணும் பக்குவம் எய்தினார் கண்முன் முதற்கண் திடீரென விளங்குகின்ற மின்னல் ஒளிபோல மின்னிப் பின்பு பரவெளியிலே ஒன்றி அதுவாகி, பேரொளியைப் பெற்ற திருக்கூட்டத்துள் நீங்காது நிற்பான்.
*************************************************
பாடல் எண் : 11
விளங்கொளி யான விகிர்தன் இருந்த
துளங்கொளிப் பாசத்துள் தூங்கிருள் சேரா
கலங்கொளி நட்டமே கண்ணுதல் ஆடி
உளங்கொளி உன்மனத் தோன்றிநின் றானே.

பொழிப்புரை :   தானே விளங்கும் ஒளியாகிய சிவன் விளங்கி நின்ற மெலியப்பெற்ற சீவ ஒளியின் உடல் பொறி காரணங்களில் முன்பு சேர்ந்திருந்த ஆணவ இருள் சேரமாட்டாது ஒதுங்கியிருக்கும். அவ்வாறு அந்த இருள் மெலிதற்குரிய அதிசூக்கும நடனத்தைச் செய்து கொண்டு தன்னை நினைக்கின்ற உயிரின் நுண்ணுடம்பில் முடிநிலைத் தானமாகிய உன்மனாந்தத்திலே இருப்பான்.
*************************************************
பாடல் எண் : 12
போது கருங்குழல் போல்நவர் தூதிடை
ஆதி பரத்தை அமரர் பிரானொடும்
சோதியும் அண்டத்தப் பால் உற்ற தூவொளி
நீதியின் அல்லிருள் நீக்கிய வாறே.

பொழிப்புரை :   ஆன்மாக்கள் சிவனுக்குத் தலைவனுக்குப் புதுமணம் செய்துகொண்ட மனைவியர் போன்றவர்கள். சிவனோ, புதுமணம் செய்து கொள்ளப்பட்ட மனைவியர் எளிதில் செல்லொணாத காவற் கட்டடத்தில் உள்ள தலைவன்போல் உள்ளான். இவர் இருதிறத்தாரிடையே தூதாகின்றவள் தலைவனுக்குக் காதற் பரத்தைபோன்ற ஆதி சத்தி. (திரோதான சத்தி) அவளது தூதின் பயனாகச் சிவன் இரங்கி வந்து ஆன்மாக்களது திணிந்த இருளை நீக்கியது வியப்பு.
*************************************************
பாடல் எண் : 13
`உண்டில்லை` என்னும் உலகத் தியல்பிது
பண்டில்லை என்னும் பரங்கதி உண்டுகொல்
கண்டில்லை மானுடர் கண்ட கருத்துறின்
விண்டில்லை உள்ளே விளக்கொளி யாமே.

பொழிப்புரை :   உலகம், சிலர் சிலவற்றை `உண்டு` எனக் கூறினால், உடனே அவற்றை `இல்லை` என மறுத்துக் கூறும் இஃது உலகத்தின் இயல்பு ஆதலை எளிதில் காணுதல் கூடும். காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டு, எளிதில் அகப்படுகின்ற பொருள் பற்றியே இவ்வாறாதலின், `காலம், இடம் இவற்றைக் கடந்த, `முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருள் உண்டு`8 என அறிந்தோர் கூறுவதை, உலகம் `இல்லை` எனக்கூறிப் பிணங்குகின்றது இவ்வுலகத்திற்கு `மேற்கதி` என்பது உண்டாகுமோ! உண்டாகாது. அந்த முன்னைப் பழம்பொருளை மக்கள் கண்டதில்லை. ஒரு சிலர் கண்டனரேனும், அவர் `அதன் இயல்பு இது` என விளக்கிச் சொல்லியதில்லை. `மற்று அதன் இயல்புதான் யாது` எனின், புறக்காட்சியை விடுத்து அறிவிற்குள்ளே ஒற்றித்துக்காணும் அகக்காட்சியில் விளங்குகின்ற ஓர் அதிசய விளக்கொளியாகும் அது.
*************************************************
பாடல் எண் : 15
ஒளிபவ ளத்திரு மேனிவெண் ணீற்றன்
அளிபவ ளச்செம்பொன் ஆதிப்பிரானும்
களிபவ ளத்தினன் காரிருள் நீக்கி
ஒளிபவ ளத்தென்னோ(டு) ஈசன்நின் றானே.

பொழிப்புரை :   சிவபெருமான் தனது திருமேனி பவளமும், செம்பொன்னும் போல்வதற்கு ஏற்ப அருமையாலும் அன்பினால் பிறர்க்கு அளிக்கப்படுகின்ற பவளமும், பொன்னும் போல்பவன் அவன், உலகிற்கு மகிழ்ச்சியைத் தருகின்ற பகலவன், உலகத்துத் திணிந்த இருளைப் போக்குதல் போல எனது உள்ளத்தில் திணிந்த இருளைப் போக்கி, `என் அறிவினுள்ளே இருக்கும் பவளம்` என்று சொல்லும்படி என்னும் இருக்கின்றான்.
*************************************************
பாடல் எண் : 16
ஈசன்நின் றான்இமை யோர்கள்நின் றார்நின்ற
தேசம்ஒன் றின்றித் திகைத்தழைக் கின்றனர்
பாசம்ஒன் றாகப் பழவினைப் பற்றுற
வாசம்ஒன் றாமலர் போன்றது தானே.

பொழிப்புரை :   உள்ளத்துள்ளே உள்ளொளியாகிய சிவனும் இருக்கின்றான். கண் இமைக்காது பார்த்துக் கொண்டிருக்கின்ற தேவர்களும் இருக்கின்றார்களும். இருப்பினும், அவர்கள் ஒளி தம்மிடத்தில் சிறிதும் இல்லாததுபோல, `ஒளி எங்கே உள்ளது` எனத் தேடித் திகைத்து, `சிவனே! சிவனே` என ஓலமிடுகின்றனர். அதற்குக் காரணம், ஆணவமாகிய ஒரு பாசம் முதலிலே பற்றியிருக்க, அது காரணமாக வகையால் இரண்டாய், விரியால் அளவிறந்தனவாகிய வினைகள் வந்து பற்றியிருப்பதேயாம். ஆகவே, அவர்களது செயல், மலர் இருந்தும் மணம் கமழாதது போன்றதாகும்.
*************************************************
பாடல் எண் : 17
தானே இருக்கும் அவற்றின் தலைவனும்
தானே இருக்கும் அவன்என நண்ணிடும்
வானாய் இருக்கும்இம் மாயிரு ஞாலத்துப்
பானாய் இருக்கப் பாவலும் ஆமே.

பொழிப்புரை :  வேதமாய் இருப்பவனும் சிவனே. வேதத்தைச் செய்தவனும் சிவனே. இனி வேதமும் இயல்பாகவே அவனையே, `முடிநிலைப் பொருள்` எனக் கூறி முடியும். ஆகவே, ஆகாயத்திற்குள் அடங்கியிருக்கும் உலகம் அனைத்தினுள்ளும், `ஞான சூரியனாய் உள்ளவன் சிவன் ஒருவனே` எனப் புகழ்ந்து பாடி அவனை அடைதலே தக்கது.
*************************************************

மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா
 

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!