http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Saturday 23 March, 2013

திருமந்திரம்-தந்திரம்09: பதிகம் 07, 08, 09 & 10. அதிசூக்கும பஞ்சாக்கரம், காரண பஞ்சாக்கரம், மகா காரண பஞ்சாக்கரம், திருக்கூத்து-பாடல்கள்:03, 03, 04 & 02.


 
 பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
*************************************************
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:01: குருமட தரிசனம்..................பாடல்கள்: 006 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:02: ஞானகுரு தரிசனம்...............பாடல்கள்: 019 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:03: பிரணவ சமாதி.........பாடல்கள்:006

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:04: ஒளிவகை..................பாடல்கள்:017
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:05: பஞ்சாக்கரம்-தூலம்......பாடல்கள்:010
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:06: பஞ்சாக்கரம்-சூட்குமம்.பாடல்கள்:005
 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:07: அதிசூக்கும பஞ்சாக்கரம்.பாடல்கள்:003
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:08: காரண பஞ்சாக்கரம்........பாடல்கள்:003
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:09: மகா காரணபஞ்சாக்கரம்:பாடல்கள்:004
 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:10: திருக்கூத்து..................பாடல்கள்:002 *************************************************
தந்திரம் 8- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -006
கூடுதல் பாடல்கள்  (063+003+003+004+002=075)
*************************************************

ஒன்பதாம் தந்திரம்-7. அதிசூக்கும பஞ்சாக்கரம் : பாடல்கள்: 03
பாடல் எண் : 1
ஓதிய நம்மலம் எல்லாம் ஒழிந்தட்(டு)அவ்
ஆதி தனைவிட் டிறைவன் அருட்சத்தி
தீதில் சிவஞான யோகமே சித்தக்கும்
ஓதும் சிவாய மலம்அற்ற உண்மையே.

பொழிப்புரை : மேல் எல்லாம் சொல்லப்பட்டு வந்த தூலமும், சூக்குமமும் ஆகிய ஐந்தெவுத்துக்களுள் திரோதாயியைக் குறிக்கும் நகாரமும், ஆணவத்தைக் குறஇக்கும் மகாரமும் ஆகிய இவ் இரண்டெழுத்துக்களையும் முற்ற நீக்கி, அதனாலே சிவனது `ஆதி` என்னும் சத்தி அருட் சத்தியாக மாறுவதால் முன்னர்க் குற்றம் அற்ற சிவஞானமும் பின்னர்ச் சிவயோகமும் கிடைக்கும். ஆனால் அவ்வாறு ஓதப்படும், `சிவாய` என்னும் மூன்றெழுத்தே பாசம் நீங்கிய முத்தி பஞ்சாக்கரம் ஆகும்.
*************************************************
பாடல் எண் : 2
அருள்தரும் ஆயமும் அத்தனும் தம்மில்
ஒருவனை ஈன்றவர் உள்ளுறை மாயை
திரிமலம் நீங்கச் `சிவாய` என்(று)ஓதும்
அருவினை தீர்ப்பதுவும் அவ்வெழுந் தாமே.

பொழிப்புரை : சீவான்மாவாகிய ஒருவனைத் தாயும், தந்தையுமாய்த் தம்மிற் கூடி ஈன்றவர்கள் மறமும், ஆம் இருவகையில் தோன்றும் அருளைத் தருகின்ற மகளிரும் சிவனும் ஆவர். மகளிருள் பிற நிலை யுடைய தாய்க்குத் தோழியாய் நின்றவள் மாயை. (அவளைச் சார்ந்து கன்ம மகளும், அவ்விருவர்க்கும் தலைவியாக ஆணவப் பெண்டும் உள்ளனர். ஆகவே அம்மூவரும் நீக்கத் தக்கவர்களே. அங்ஙனம் அவர்களை நீக்கவல்லது, பாச எழுத்துக்களை நீக்கி `சிவாய` என்று ஓதப்படும் அதிசூக்கும பஞ்சாக்கரமேயாகும்.
*************************************************
பாடல் எண் : 3
நமஎன்னும் நாமத்தை நாவில் ஒடுக்கிச்
சிவஎன்னும் நாமத்தைச் சிந்தையுள் ஏற்றப்
பவமது தீரும் பரிசும்அ தற்றால்
அவமதி தீரும அறும்பிறப் பன்றே.

பொழிப்புரை : `சிவாய நம` என்னும் ஐந்தெழுத்தில், `நம, என்னும் உறுப்பினை நா அளவில் கொண்டு, அதனையும் சொல்லாமல் அடக்கி, ஏனை மூன்றெழுத்தை மட்டும் மந்திரமாகக் கொண்டு அறிவாற் கணித்தலாகிய சுத்த மானதமாக உணர்ந்துணர்ந்து நிற்க வினை நீங்கும். வினை நீங்கவே பதிஞானம் இனிது விளங்க ஏனைப் பசுபாச ஞானங்கள் யாவும் அகற்றுவிடும். அவை அற்றுவிடவே பிறவியறுதல் நிண்ணமாம்.
*************************************************
ஒன்பதாம் தந்திரம் - 8. காரண பஞ்சாக்கரம் : பாடல்கள்: 03
பாடல் எண் : 1
சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர்
சிவசிவ வாயுவும் தேர்ந்துள் ளடங்கச்
சிவசிவ ஆய தெளிவின்உள் ளார்கள்
சிவசிவ மாகும் திருவரு ளாமே.

பொழிப்புரை : முன் அதிகாரத்திற் கூறிய மூன்றெழுத்துக்களுள் ஈற்றில் உள்ள ஆன்ம எழுத்தாகிய யகாரத்தையும் நீக்கி, எஞ்சிய இரண்டெழுத்துக்களை மட்டுமே மந்திரமாகக் கொண்டு தொடர்ந்து இடைவிடாது கணித்தல் சிறப்புடைத்து` என்பதைத் தெளிய மாட்டாதவர் அவ்வாறு கணியாமையால், பேசும் வன்மையிருந்தும் அஃது இல்லாத ஊமரேயாவர். அம்மந்திரத்தைக் கணிக்கும் தெளிவினுள் நிற்பவர்கள் அதனால் அடங்க, ஆன்ம போதமும் அடங்கச் சிவம் ஆதற்குரிய திருவருள் நிலை வாய்க்கப் பெறுவார்கள்.
*************************************************
பாடல் எண் : 2
சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரு மாவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே.

பொழிப்புரை :  (இதன் பொருள் வெளிப்படை)
குறிப்புரை : `தேவர்` என்றது அபரமுத்தரை. உம்மை சிறப்பு. அதனால் பத முத்தர் ஆதல் தானே பெறப்பட்டது. சிவகதி - சிவமாம் நிலை. இது சீவன் முத்தி நிலை, பரமுத்தி நிலை இரண்டையும் குறிக்கும். தான், அசை. ஏகாரம் தேற்றம். இதனால் சிவகதியின் அருமை விளங்கும்.  இதனால், `காரண பஞ்சாக்கரம் முத்தியை எய்தும் நிலையுடையவர்கட்கே கூடும்` என்பது கூறப்பட்டது.
*************************************************
பாடல் எண் : 3
செஞ்சுடர் ண்டலத் தூடுசென் றப்புறம்
மஞ்சண வும்முறை ஏறி வழிக்கொண்டு
துஞ்சு மவன்சொன்ன காலத் திறைவனை
நெஞ்சென நீங்கா நிலைபெற லாகுமே.

பொழிப்புரை : இறக்கும் நிலையை அடைந்த ஒருவன் அப்பொழுது இந்தக் காரண பஞ்சாக்காரத்தை இரண்டு முறையேனும் சொல்வா னாயின், அவன் சூரிய மண்டலத்தைப் பிளந்துகொண்டு, அப்பால் மின்னல் உலகத்தையடைந்து, பின்பு அதனையும் கடந்து சிவனையே தனக்கு உயிராகக் கொண்டிருக்கும் நிலையைப் பெறுவான்.
*************************************************
ஒன்பதாம் தந்திரம் - 9. மகா காரண பஞ்சாக்கரம்-பாடல்கள்: 04
பாடல் எண் : 1
அங்கமும் ஆகம வேதமும் ஓதினும்
எங்கள் பிரான்எழுத் தொன்றில் இருப்பது
சங்கைகெட்(டு) அவ்வெழுத் தொன்றையும் சாதித்தால்
அங்கரை சேர்ந்த அருங்கலம் ஆமே.

பொழிப்புரை : வேதம், வேதாங்கம், வேதாந்தம் முதலாக உள்ள அனைத்து நூல்களையும் ஒருவன் ஓதி உணர்ந்தாலும் ஏனெனில், சிவன் இருப்பது ஓர் எழுத்திற்குள்ளே. (அஃதாவது, `சி` என்னும் எழுத்தின் உள்ளேயாம். எனவே, `அதன் உண்மையை உணராமல், மற்றை எத்தனை நூல்களை ஓதி உணர்ந்தாலும் அவனை உணர்தல் இயலாது` என்பதாம்.) இது கேட்பதற்கு முக வியப்பாய் இருக்கும் ஆகையால், `இஃது உண்மையாய் இருக்க முடியுமா` என எழும் ஐயம் நீங்குதல் அரிது. முன்னைத் தவத்தாலும், குருவருளாலும் அந்த ஐயம் நீங்கப் பெற்று அதனை உறுதியுடன் சாதித்தால் அங்ஙனம் சாதிக்கின்ற ஆன்மாத் தான் என்று அடைந்தறியாத அழகிய கரையை அடைந்த மரக்கலத்திற்கு ஒப்பாகும்.
*************************************************
பாடல் எண் : 2
நாயோட்டு மந்திரம் நான்மறை நால்வேதம்
நாயோட்டு மந்திரம் நாதன் இருப்பிடம்
நாயோட்டு மந்திரம் நாதாந்த மாம்சோதி
நாயோட்டு மந்திரம் நாமறி யோமே.

பொழிப்புரை : மகா காரண பஞ்சாக்கரமாகிய `சி` என்னும் ஓர் எழுத்தே நான்கு வேதப் பொருள்களாய் விரிந்தது. அதுவே கடவுளது இருப்பிடம் எனவே, தத்துவாதீதமான ஒளிப்பொருளும் அதுவேயாம். ஆகவே, சித்தர்கள் `நாய் ஓட்டும் மந்திரம்` என நகை விளைக்குமாறு மறைத்துக் கூறுகின்ற அம்மந்திரத்தைப் பிறர் `இன்னது` என அறிதல் இயலாது.
*************************************************
பாடல் எண் : 3
சிவாய நம`எனச் சித்த ஒருக்கி
அவாய3ம் அறவே அடிமைய தாகிச்
சிவாய சிவசிவ என்றென்றே சிந்தை
அவாயம் கெடநிற்க ஆனந்தம் ஆமே.

பொழிப்புரை :  சூக்கும பஞ்சாக்கரக் கணிப்பினால் உள்ளம் உலகியலின் நீங்கிச் சிவன்பாற் செல்லும். அதனால் ஆன்மாத் தான் சிவனுக்கு ஆளாகி வினையாகிய தீங்கினின்றும் நீக்கும். அப்பால் அதி சூக்கும பஞ்சாக்கரக் கணிப்பினால் ஆன்ம அறிவு பாசஞானமாகிய தீங்கில்லதாம். அப்பால் காரண பஞ்சாக்கரக் கணிப்பினால் ஆன்மாப் பசு போதம் நீங்கிச் சிவபோதம் பெற்றுப் பிறப்பாகிய தீங்கினின்றும் நீங்கும். அப்பால் மகாகாரண பஞ்சாக்கரக் கணிப்பினால் ஆன்மாச் சிவானந் தத்தில் மூழ்கியிருக்கும் ``என்று என்று`` என்னும் அடுக்கினுள் முன்னதைச் ``சிவாய`` என்பத னோடு கூட்டி, `அவாயம் அறநிற்க` என ஒருமுறையும் பின்னர் நிற்கும் ``என்று`` என்பதனை ``அவாயம்கெட`` என்பதனோடு மற்றொரு முறையும் முடிக்க. ``அவாயம்`` என்பது ஏற்ற பெற்றி யால் பொருள் தந்தது. ``நிற்க`` என்பதன்பின், `பின்னர்` என ஒரு சொல் வருவிக்க. அதனால், `ஆனந்தம் ஆதல் ஓரெழுத்து மந்திரத்தால்` விளங்கிற்று. ``ஆம்`` என்றது `விளையும்` என்றபடி.
*************************************************
பாடல் எண் : 4
பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே
விழித்தங் குறங்கும் வினையறி வார் இல்லை
எழுத்தறி வோம்என் றுரைப்பார்கள் ஏதர்
எழுத்தை அழுத்தும் எழுத்தறி யாரே.

பொழிப்புரை :  பஞ்சாக்கரம் பழமையான வேதமாகிய மரத்தில் அரும்பாய் அரும்பி, போதாய் முதிர்ந்து, பிஞ்சாய் உருப்பட்டு, காயாய்க் காய்த்து, பழமாய்ப் பழுத்து, உண்ண வல்லவர்க்கு இனித்துப் பயன்படுகின்றது. அதனை உண்டு, அல்லல் அறு அமைதியுடன் அறிதுயில் கொள்ளும் பயிற்சியை அறிபவர் உலகில் இல்லை. ஆயினும் பள்ளியில் எழுத்தறி கல்வியை மட்டும் கற்றவரகள் கூட, `இந்த ஐந்தெழுத்துக்களை நாங்கள் அறிவோம்` எனக் கூறுகின்றனர். ஆயினும் வேதம் முதலிய அனைத்தையும் கற்றவர்கள் கூட ஐந்தெழுத்து ஊழை நீக்கும் எழுத்தாதலை அறிய மாட்டார்கள்.
*************************************************
ஒன்பதாம் தந்திரம் - 10. திருக்கூத்து-பாடல்கள்: 02
பாடல் எண் : 1
எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்
தங்கும் சிவன்அருள் தன்விளை யாட்டதே.

பொழிப்புரை :  சிவனது சத்தி `அங்கு, இங்கு` எனாதபடி எங்கும் நிறைந்திருத்தலால், `சத்தியே அவனது திருமேனி` என்பது பற்றி எங்கும் அவனது திருமேனி உள்ளதாம். `சத்தியே அவனது இருப்பிடமாகிய பர வெளி, அல்லது சிதாகாசம்` என்பது பற்றி, எங்கும் அவன் இருக்கும் சிதாகாரம் உள்ளதாம்; `அவனது சத்தி, அல்லது திருவருளே அவனது செயல்கள்` என்பது பற்றி, அவனது திருக்கூத்து எங்கும் நிகழ்வதாம். இவ்வாற்றால் எங்கும் எல்லாம் சிவமயமாய் இருத்தலால், எங்கு நிகழும் எந்தச் செயலும் அவனது திருவருள் திருவிளையாட்டேயாம்.
*************************************************
பாடல் எண் : 2
சிற்பரஞ் சோதி சிவானந்தக் கூத்தனை
சொற்பத மாய்அந்தச் சுந்தரக் கூத்தனை
பொற்பதிக் கூத்தனைப் பொற்றில்லைக் கூத்தனை
அற்புதக் கூத்தனை யார்அறி வாரே.

பொழிப்புரை : அறிவே வடிவாதல் பற்றி, பரஞ்சோதியாய் மேலான ஒளியாய் விளங்குகின்ற சிவனது அருள் விளையாட்டாக முன் மந்திரத்தில் கூறப்பட்ட அத்திருக்கூத்துத் தான் பலவாயினும் அவை, `சிவானந்தத்க் கூதது, சுந்தரக் கூத்து பொற்பதிக் கூத்து, பொற்றில்லைக் கூத்து, அற்புதக் கூத்து` என ஓராற்றால் ஐந்து வகையாகின்றன. அவற்றின் மேலும் பலவாகின்ற கூத்தினை இயற்றுகின்ற அவனது ஆற்றலை யாரே அளவிட்டறிவார்!
*************************************************

மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!