http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Thursday 10 May, 2012

திருமந்திரம்-தந்திரம்03-பதிகம்:13 காரியசித்தி (பாடல்கள்:16)







 
பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
===================================================================
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:01: அட்டாங்க யோகம்...........பாடல்கள்: 004
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:02: இமயம்................................பாடல்கள்: 001
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:03: நியமம்................................பாடல்கள்: 002 
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:04: ஆதனம்..............................பாடல்கள்: 006
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:05: பிரணாயாமம்...................பாடல்கள்: 014
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:02: பிரத்தியாகாரம்................பாடல்கள்: 010
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:07: தாரணை............................பாடல்கள்: 009
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:08: தியானம்.............................பாடல்கள்: 019
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:09: சமாதி ................................பாடல்கள்: 013 
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:10: அட்டாங்க யோகப்பேறு (பாடல்கள்: 008
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:11: அட்டமாசித்தி....................பாடல்கள்: 071
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:12: கலைநிலை......................பாடல்கள்: 012
மூன்றாம்தந்திரம்:பதிக எண்:13: காரிய சித்தி........................பாடல்கள்: 016
========================================================(169+016=185)

மூன்றாம் தந்திரம்-பதிகம்எண்: 13. காரியசித்தி (பாடல்கள்:16 )
பாடல் எண் : 1
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பபை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே. 

பொழிப்புரை :  உடம்பு அழியுமாயின், அதனைப் பெற்றுள்ள உயிரும் அழிந்ததுபோலச் செயலன்றி நிற்பதாம். ஆகவே, உடம்பு அழிந்தபின், அவ்வுடம்பைத் துணைக்கொண்டு இயங்கிய உயிர், தவமாகிய துணையைப் பெறவும், பின் அதனால் இறையுணர்வை அடையவும் இயலாததாய்விடும். இதுபற்றி, உடம்பை நிலைபெறுவிக்கும் வழியை அறிந்து அவ்வழியில் அதனை நிலைபெறுவித்த யான், உயிரை நலம் பெறச் செய்தவனே ஆயினேன்.
=======================================
பாடல் எண் : 2
உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்
றுடம்பினை யானிருந் தோம்புகின் றேனே. 

பொழிப்புரை :  சிவ நூல் கேட்பதற்கு முன்பெல்லாம் உடம்பை அழுக்கு ஒன்றையே உடையதாகக் கருதி இகழ்ந்திருந்தேன். சிவநூல் கேட்ட பின்னர், அதற்குள்தானே பயனை அடைதற்குரிய வழிகள் பலவும் இருத்தலை அறிந்தேன். அதனால், அவ்வறிவின் வழியே, உடம்பிற்குள் தானே இறைவன் தனக்கு இடம் அமைத்துக் கொண்டிருக்கின்றான் என்பதையும் அறிந்து, இப்பொழுது நான் உடம்பைக் கேடுறாதவாறு குறிக்கொண்டு காக்கின்றேன்.
=======================================
பாடல் எண் : 3
சுழற்றிக் கொடுக்கவே சுற்றிக் கழியும்
கழற்றி மலத்தைக் கமலத்தைப் பூரித்
துழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்
கழற்றித் தவிர்ந்துடல் அஞ்சன மாமே. 

பொழிப்புரை :  பிராண வாயுவை வாங்கியும், விட்டும் சுழலும்படி செய்ய, உடம்பில் உள்ள மாசுகளும் அதனோடே சுழன்று நீங்கும். அவ்வாற்றால் மாசுகளைப் போக்கித் தூய்தான பிராணவாயுவை ஆதாரத் தாமரைகளில் நிரப்பி, அவை வழியாக உடம்பில் உள்ள எல்லா நாடியினுள்ளும் அவ்வாயுச் சென்று உலவும்படி செய்து, அதன் ஆற்றலை அந்நாடிகட்குத் தருகின்ற இவ்வுபாயத்தை முறையறிந்து செய்ய வல்லவர்க்கு, உடம்பு நெருப்பிலிட்டுச் சுடப்படுதலினின்றும் நீங்கி, உயிரினுள் ஒளிந்து நிற்கும் கள்வனாகிய இறைவனைப் புலப்படக் காட்டும் மந்திரமையாய் அமையும்.
=======================================
பாடல் எண் : 4
அஞ்சனம் போலுடல் ஐஅறும் அந்தியில்
வஞ்சக வாதம் அறும்மத்தி யானத்தில்
செஞ்சிறு காலையிற் செய்திடில் பித்தறும்
நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே. 

பொழிப்புரை :  மந்திரமைபோல நின்று பயன்தரத் தக்கதாகிய உடலை. அன்ன தாகாத வாறு, `, வளி, பித்து` என்னும் மூன்றானும் தோன்றிக் கெடுக்கின்ற நோய்கள், முறையே, `மாலை, நண்பகல், காலை` என்னும் பொழுதுகளில் செய்யும் பிராணாயாமத்தால் நீங்கும். அதுவேயன்றி, முப்பொழுதும் செய்யும் பிராணாயாமத்தாலும் நரை திரைகள் வாரா தொழியும். இவ்வுபாயத்தை இங்கு, உடலைக் கொல்லும் நஞ்சுபோன்ற தீமைகள் நீங்குதல் நோக்கிக் கூறினோம்.
=======================================
பாடல் எண் : 5
மூன்று மடக்குடைப் பாம்பிரண் டெட்டுள
ஏன்ற இயந்திரம் பன்னிரண் டங்குலம்
நான்றஇம் மூட்டை யிரண்டையுங் கட்டியிட்
டூன்றி யிருக்க உடம்பழி யாதே.

பொழிப்புரை :  மூன்று வளைவை யுடையதாகிய பாம்பு, பதினாறு அங்குல அளவின வாகிய கயிறுகளைக் கொண்ட பூட்டையில் அழுந்தப் பொருந்தி யிருக்குமாயின், உடம்பு அழியாது நிலை பெற்றிருக்கும். அப்பாம்பு அங்ஙனம் பொருந்தி நிற்றற்கு, மேற்கூறிய பூட்டையில், அவிழ்ந்து கிடக்கும் நிலையினவாய்ப் பன்னிரண்டங்குல நீளம் தொங்கு கின்ற இரண்டு மூட்டைகள், அவிழ்ந்து வீழாதவாறு கட்டப்படல் வேண்டும்.
=======================================
பாடல் எண் : 6
நூறும் அறுபதும் ஆறும் வலம்வர
நூறும் அறுபதும் ஆறும் இடம்வர
நூறும் அறுபதும் ஆறும் எதிரிட
நூறும் அறுபதும் ஆறும் புகுவரே. 

பொழிப்புரை :  நூறு மாத்திரை காலமேயாயினும், அறுபது மாத்திரை காலமேயாயினும், ஆறு மாத்திரை காலமேயாயினும் பிராண வாயு சுழுமுனை நாடியை வலமாகச் சூழ்ந்தும் இடமாகக் சூழ்ந்தும், அதன் உட்புகுந்து மேலேறியும் வருமாயின், அத்துணை ஆண்டுக்கால வாழ்நாளினை மக்கள் எய்துவர்.
=======================================
பாடல் எண் : 7
சத்தியார் கோயில் இடம்வலம் சாதித்தால்
மத்தியா னத்திலே வாத்தியங் கேட்கலாம்
தித்தித்த கூத்தும் சிவனும் வெளிப்படும்
சத்தியம் சொன்னோம் சதாநந்தி ஆணையே. 

பொழிப்புரை :  மூன்று மடக்குடைப் பாம்புபோல உடம்பில் உள்ள குண்டலி சத்தி, மேற் கூறியவாறு ஊன்றியிருக்கும் இடமாகிய நடுநாடியைப் பிராண வாயு வலமும் இடமுமாகச் சுற்றிவருகின்ற சாதனையைப் புரிந்தால், உலக நோக்கில் இருக்கும் பொழுதே உடலில் உள்ள பத்து நாடிகளில் உண்டாவனவாக மேல் (பா.593) கூறிய ``மணி, கடல், யானை`` முதலியவற்றின் ஓசைபோலும் ஒலிகளைக் கேட்டல் கூடும். இனிச் சிவ பெருமான். தாள அறுதிக்கு இயைய ஆடும் ஆட்டத்தின் ஓசையும் கேட்கப்பட்டுப் பின் அப்பெருமானே விளங்கித் தோன்றுவான். மெய்யான இன்பமே வடிவமான எங்கள் ஆசிரியர் மேல் ஆணையாக, இவ்வாறு நாம் உண்மையையே உங்கட்குச் சொன்னோம்.
=======================================
பாடல் எண் : 8
திறத்திறம் விந்து திகழும் அகாரம்
உறப்பெற வேநினைந் தோதும் சகாரம்
மறிப்பது மந்திரம் மன்னிய நாதம்
அறப்பெறல் யோகிக் கறநெறி யாமே.

பொழிப்புரை :  நாதத்தை முற்றப் பெறக் கருதிச் சொல்லப்படுகின்ற, முறையே மகர மெய்யையும் புள்ளி வடிவினதாய எழுத்தையும் உடன் கொண்டு விளங்கும் அகரமும், சகரமுமே பிராணவாயுவைத் தடுத்தற்குரிய மந்திரமாம்; ஏனெனில், நாதத்தை முற்றும் உணரப் பெறுதலே யோகம் கைவந்தவனுக்குரிய தன்மையாதலின்.
=======================================
பாடல் எண் : 9
உந்திச் சுழியி னுடனேர் பிராணனைச்
சிந்தித் தெழுப்பிச் சிவமந் திரத்தினால்
முந்தி முகட்டின் நிறுத்தி அபானனைச்
சிந்தித் தெழுப்பச் சிவனவ னாமே.

பொழிப்புரை :  பூரக ரேசகங்களை மேற்கூறியவாறு அம்ஸ மந்திரத்தாற் செய்தபின் கும்பகம் செய்யும் பொழுது `ஹாம்` என்னும் வித்தெழுத்தாலே (பீஜாட்சரத்தாலே) பிராணனைச் சுழுமுனை நாடி வழியே கண்டத்தளவும் செலுத்திப் பின், `ஹௌம்` என்னும் வித்தெழுத்தால் ஆஞ்ஞையை அடைவித்து, அங்கே மலவெழுத்துக்கள் நீங்கிய திருவைந்தெழுத்து, `தத்துவமசி` மகாவாக்கியப் பொருளையும், `சோஹம்` என்பதன் பொருளையும் தருமாற்றை உபதேச முறையான் உணர்ந்து அதனானே அவ்வாயுவை அசையாது நிறுத்திப்பின் அபானவாயு எழத் தொடங்குமாயின், அதனைப் பிரணவத்தால் அடக்கிப் பிராணனை முன்போலவே மேலெழச் செய்யின், அவ்வாறு செய்பவன் சிவமாந் தன்மையை அடைவான்.
=======================================
பாடல் எண் : 10
மாறா மலக்குதந் தன்மேல் இருவிரல்
கூறா இலிங்கத்தின் கீழே குறிக்கொண்மின்
ஆறா உடம்பிடை அண்ணலும் அங்குளன்
கூறா உபதேசங் கொண்டது காணுமே. 

பொழிப்புரை :  அசுத்தத் தன்மை நீங்காதே எருவாய்க்கு இரண்டு விரற்கிடைமேலேயும், தன் சொல்லாற் சொல்லப்படாத குறிக்குக் கீழேயுமாய் உள்ள இடத்தில் தியானியுங்கள் `யாரை` எனின், உடம்பின் கண் ஆறு வகையில் உள்ள இறைவன் அங்கும் உளன். எனவே, அவனையே தியானியுங்கள் என்பதாம். அங்குத் தியானிக்குமிடத்து, ``ஊமை எழுத்து`` எனப்படும் பிரணவத்தால் தியானியுங்கள்.
=======================================
பாடல் எண் : 11
நீல நிறமுடை நேரிழை யாளொடுஞ்
சாலவும் புல்லிச் சதமென் றிருப்பார்க்கு
ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்
பாலனு மாவர் பராநந்தி ஆணையே. 

பொழிப்புரை :  பிராணனை முந்தி முகட்டில் நிறுத்திய பின், அதற்கு மேலே உள்ள ஏழாந் தானமாகிய உச்சியில் திருவருளோடு நேரே கூடி, ``இத்திருவருளல்லது பிறிதொன்றும் நிலையுடையதன்று`` என்பதை எவரேனும் உணர்ந்திருப்பார்களாயின், அவர்கள் ஆன்ம லாபத்தைப் பெறுதலேயன்றி, நரைதிரை அணுகாது, என்றும் இளமையோடு இருக்கும் நன்மையையும் அடைவர். இஃது எங்கள் ஆசிரியர் ஆணையாகச் சொல்லப்படும் உண்மை.
=======================================
பாடல் எண் : 12
அண்டஞ் சுருங்கில் அதற்கோ ரழிவில்லை
பிண்டஞ் சுருங்கிற் பிராணன் நிலைபெறும்
உண்டி சுருங்கில் உபாயம் பலவுள
கண்டங் கறுத்த கபாலியு மாமே. 

பொழிப்புரை :  உணவுக் குறைவால் முகத்தில் தசை ஒட்டிக் கண் குழியுமாயினும், அதனால், உடலுக்கு அழிவு வந்துவிடாது. மாறாக, உடம்பு இளைத்தால் பிராணவாயு வசப்பட்டு காய சித்தி கைகூடும். ஆகவே, உணவு குறையின், உயிர், நலம் பெறுதற்குரிய வழிகள் பலவும் அமையும். அதனால், உண்டி சுருக்கியவன், இறவாமையாலும், இன்ப நிறைவாலும் சிவனோடொத்து நிற்பான்.
=======================================
பாடல் எண் : 13
பிண்டத்துள் உற்ற பிழைக்கடை வாசலை
அண்டத்துள் உற்ற தடுத்தடைத் தேவிடின்
வண்டிச்சிக் கும்மம் மலர்க்குழல் மாதரார்
கண்டிச்சிக் கும்மந்நற் காயமு மாமே. 

பொழிப்புரை :  உடலில் பொருந்தியுள்ள, தவ ஓழுக்கத்திற்கு இழுக்குத் தருகின்ற கடைப்பட்ட வழியை. உச்சியில் விளங்குவதாகிய திருவருளைத் தலைப்படுமாற்றால் அடைத்தே விடின், உடம்பு, மகளிர் கண்ட உடன் விரும்பத் தக்க அழகைப் பெற்று விளங்கும் பயனையும் அடையலாகும்.
=======================================
பாடல் எண் : 14
சுழலும் பெருங்கூற்றுத் தொல்லைமுன் சீறி
அழலும் இரதத்துள் அங்கியுள் ஈசன்
கழல்கொள் திருவடி காண்குறில் ஆங்கே
நிழலுளுந் தெற்றுளும் நிற்றலும் மாமே. 

பொழிப்புரை :  சிவபெருமான், எவ்வுயிரையும் அதன் உடலினின்றும் பிரித்துக் கொண்டு போதற்குச் சுற்றிக் கொண்டிருக் கின்ற கூற்றுவனைத் தொன்றுதொட்டே சினந்து, முக்கோண வடிவான மூலாதாரத்தில் உள்ள அக்கினியில் காய்ந்து கொண்டு இருக்கின்றான்; ஆகையால், அவ்விடத்தில் அவனது கழல் அணிந்த திருவடியைக் காணப்பெற்றால், பின்னர் நிழலில் நிற்பினும், வெயிலில் நிற்பினும் ஒன்றே; அஃதாவது, அவற்றால் வரும் கேடு ஒன்றுமில்லையாம்.
=======================================
பாடல் எண் : 15
நான்கண்ட வன்னியும் நாலு கலையேழுந்
தான்கண்ட வாயுச் சரீர முழுதொடும்
ஊன்கண்டு கொண்ட உணர்வு மருந்தாக
மான்கன்று நின்று வளர்கின்ற வாறே. 

பொழிப்புரை :  ஈசன் இருத்தலை மேல் நான் தெரிந்து சொல்லிய மூலாக்கினி, `அகார கலை, உகார கலை, மகார கலை, விந்துகலை` என்னும் நான்கு கலைகள், மூலாதாரம் முதல் பிரமரந்திரம் ஈறாக உள்ள ஏழு ஆதாரங்களைப் பொருந்திய பிராணவாயு, உடம்பு முழுதும் உள்ள ஊன் ஆகிய இவைகளையே தன் பசிப்பிணிக்கு மருந்தாக உண்டு, ஒரு மான் கன்று வளர்கின்றவாறு வியப்புடைத்து!
=======================================
பாடல் எண் : 16
ஆகுஞ் சனவேத சத்தியை அன்புற
நீகொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையைப்
பாகு படுத்திப்பல் கோடி களத்தினால்
ஊழ்கொண்ட மந்திரந் தன்னால் ஒடுங்கே. 

பொழிப்புரை :  மேன்மேல் வளரத்தக்கதாகிய காயசித்தி ஆற்றலைப்பெற நீ விரும்புவை யாயின், அச்சத்தி ஒவ்வொரு நெல்லின் அளவாக மெல்ல மெல்ல வளர்கின்ற நுட்பத்தை உடலில் அளவற்ற இடங்களில் பாகுபடுத்திக் கண்டு. அவ்விடங்களில் எல்லாம், மேற்பல வகையாலும் முறைப்படச் சொல்லிய மந்திரங்களின் வழி அதனுள் ஒடுங்குவாயாக.
=======================================

மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமூலரின் திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!