http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Monday 16 July, 2012

திருமந்திரம்-தந்திரம்04: பதிகம் எண் :13. நவாக்கரிச் சக்கரம் (பாடல்கள்:001-025) பாகம் I




 பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
================================================================== 
நான்காம் தந்திரம்:பதிக எண்:01: அசபை ............................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:02: திருவம்பலச் சக்கரம் ...பாடல்கள்: 089
நான்காம் தந்திரம்:பதிக எண்:03: அருச்சனை.......................பாடல்கள்: 012
நான்காம் தந்திரம்:பதிக எண்:04: நவகுண்டம்......................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:05: சத்தி பேதம்......................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:06: வயிரவி மந்திரம்............பாடல்கள்: 050
நான்காம் தந்திரம்:பதிக எண்:07: பூரண சத்தி......................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:08: ஆதார ஆதேயம்.............பாடல்கள்: 100 
நான்காம் தந்திரம்:பதிக எண்:09: ஏரொளிச் சக்கரம்..........பாடல்கள்: 036
நான்காம் தந்திரம்:பதிக எண்:10: வைரவச் சக்கரம்...........பாடல்கள்: 006
நான்காம் தந்திரம்:பதிக எண்:11: சாம்பவிமண்டலச் சக்கரம் .பாடல்கள்:009
நான்காம் தந்திரம்:பதிக எண்:12: புவனாபதிச் சக்கரம்......பாடல்கள்: 012
 

நான்காம் தந்திரம்:பதிக எண்:13: நவாக்கரிச் சக்கரம்.......பாடல்கள்: 100
======================================================(434+100=534)
நான்காம் தந்திரம்-பதிகம் எண்:13

நவாக்கரிச்  சக்கரம் (பாடல்கள்:001-025) பாகம் I

பாடல் எண் : 1
நவாக்கரி சக்கரம் நான்உரை செய்யின்
நவாக்கரி ஒன்று நவாக் கரியாக
நவாக்கரி எண்பத் தொருவகை யாக
நவாக்கரி அக்கிலீம் சௌம்முதல் ஈறே.

பொழிப்புரை நவாக்கரி சக்கரத்தின் இயல்பை நான் உனக்குச் சொல்லுமிடத்து, ஒன்பதெழுத்துத் தொகுதியில் ஒவ்வொன்றும் ஒன்பதெழுத்தாகின்ற முறையால் ஒன்பதெழுத்துக்கள், `எண்பத்தோரெழுத்து` என்னும் தொகை பெறும்படி ஒன்பதெழுத்தாய் நிற்கும் அத் தொகுதியாவது `ஸௌம்` என்னும் முதலினையும், `க்லீம்` என்னும் இறுதியையும் உடையது.

==============================================

பாடல் எண் : 2
சௌம்முதல் அவ்வொடும் ஔவுடன் ஆம்கிரீம்
கௌவுமும் ஐமும் கலந்திரீம் சிரீம்என்
றொவ்வில் எழும்கிலீம் மந்திர பாதமாச்
செவ்வுள் எழுந்து சிவாயநம என்னவே.

பொழிப்புரை : `ஸௌம்` என்பது `முதல்` என மேற்கூறிய அவற்றோடு, `ஔம், ஆம், க்ரீம், கௌம், ஐம், ஹ்ரீம்,  ‹்ரீம்` என்பவை முறையே தொடர்ந்த பின் `க்லீம்` என்பதை மந்திரத்தின் முடி வெழுத்தாக வைத்து, ஒவ்வொரு முறையும், `சிவாய நம` என்று சொல்; நவாக்கரி சக்கர வழிபாடு கைவரும்.
==============================================

பாடல் எண் : 3
நவாக் கரியாவதும் நானறி வித்தை
நவாக் கரியுள்எழும் நன்மைகள் எல்லாம்
நவாக் கரிமந்திரம் நாவுளே ஓத
நவாக் கரிசத்தி நலந்தருந் தானே.

பொழிப்புரை நவாக்கரி சக்கர வழிபாடும் நான் சிறந்த ஒன்றாக அறிந்த வழிபாடாம். அதனால், நலங்கள் பல விளையும். ஆதலின், நவாக்கரி மந்திரத்தை நாம் புடைபெயரும் அளவாகக் கணித்தால், அம்மந்திரத்திற்குரிய சத்தி எல்லா நன்மைகளையும் தருவாள்.

==============================================

பாடல் எண் : 4
நலந்தரு ஞானமும் கல்வியும் எல்லாம்
உரந்தரு வல்வினை உம்மைவிட் டோடிச்
சிரந்தரு தீவினை செய்வ தகற்றி
வரந்தரு சோதியும் வாய்த்திடுங் காணே.

பொழிப்புரை : நவாக்கரி சக்கர வழிபாட்டினால் பெருநன்மையைத் தருவதாகிய அனுபவ ஞானமும் அதற்கு ஏதுவாகிய கலா ஞானமும் வலியுற்று நிலைபெறும். அதற்கு முன்னே உம்முடைய வலிய வினைகள் உம்மை நோக்காது விட்டு ஓடிவிடும். `அஃது எவ்வாறு` எனில், இவ்வழிபாட்டினால், வேண்டுவார் வேண்டுவதைத் தருகின்ற சிவனது திருவருள் கைவந்து, உமக்குத் துன்பத்தைத் தரஇருந்த அந்தத் தீய வினைகளை ஓட்டும் ஆதலால்,

==============================================

பாடல் எண் : 5
கண்டிடும் சக்கரம் வெள்ளிபொன் செம்பிடை
கொண்டிடும் உள்ளே குறித்த வினைகளை
வென்றிடும் மண்டலம் வெற்றி தருவிக்கும்
நின்றிடும் சக்கரம் நினைக்கு மளவே.

பொழிப்புரை நவாக்கரி சக்கரத்தை வெள்ளி, பொன், செம்பு என்னும் இவற்றுள் ஒன்றாலான தகட்டிலே அமையுங்கள்; பின்பு மனத்திலும் அதனை ஊன்றி நினையுங்கள். அங்ஙனம் நினைத்தலால் உள்ளத்தில் நிலைபெறுகின்ற அச்சக்கரம் உம்மை நோக்கி வருகின்ற வினைகளை வெல்லவும், உலகத்தை வெற்றிகொள்ளவும் நீவிர் நினைப்பீராயின் நினைத்த அளவிலே அப்பயன்களை உங்களுக்குத் தரும்.

==============================================

பாடல் எண் : 6
நினைத்திடும் அச்சிரீம் அக்கிலீம் ஈறா
நினைத்திடும் சக்கரம் ஆதியும் அந்தமும்
நினைத்திடும் நெல்லொடு புல்லினை உள்ளே
நினைத்தி (டு) அருச்சனை நேர்தரு வாளே.

பொழிப்புரை உன்னத் தக்க க்லீம் என்பவற்றை ஈறாக உடைய நவாக்கரங்களை அங்ஙனமே வைத்து உன்னப்படுகின்ற சக்கரத்தின் முதலெழுத்து முதல் ஈற்றெழுத்து முடிய, இச்சக்கர சத்தி தன்னுள்ளே விரும்புகின்ற செந்நெல், அறுகம் புல் என்பவற்றை நீயும் மனத்திலே கொண்டு அவற்றைக்கொண்டு அருச்சனை செய். அப்பொழுது உனது அருச்சனையை அச்சத்தி ஏற்றுக்கொள்வாள்.

==============================================

பாடல் எண் : 7
நேர்தரு மந்திர நாயகி யானவள்
யாதொரு வண்ணம்? அறிந்திடு பொற்பூவை
கார்தரு வண்ணம் கருதின கைவரும்
நார்தரு வண்ணம் நடந்திடு நீயே.

பொழிப்புரை : வழிபடுவார்க்கு நேர் வந்து அருள் புரிகின்ற அந்தச் சக்கர சத்தி என்ன நிறத்தை உடையவள்? அழகிய தேவியாகிய அவள் மேகம் போலும் நிறத்தை உடையவள். இதனை அறிந்து அவள்பால் உனது அன்பு செல்லும் வண்ணம் நீ நட; அப்பொழுது நீ நினைத்தவை யெல்லாம் உனக்குக் கைகூடும்.

==============================================

பாடல் எண் : 8
நடந்திடும் பாரினில் நன்மைகள் எல்லாம்
கடந்திடும் காலனும் கண்ணிய நாளும்
படர்ந்திடும் நாமமும் பாய்கதிர் போல
அடைந்திடும் வண்ணம் அடைந்திடு நீயே.

பொழிப்புரை : இச்சக்கர சத்திபால் நீ அன்புசெய்து ஒழுகினால் நீ இவ்வுலகில் நினைக்கின்ற நன்மைகள் எல்லாம் நினைத்தபடியே முடியும்; கூற்றுவன் உன்னைக் கொண்டு போவதற்குக் குறித்துவைத்த நாளும் அங்ஙனம் கொண்டுபோகாமலே கடந்துவிடும். உனது பெயர் உலகெங்கும் பரவும்; உனது உடம்பின் நிறம் பகலவனது விரிந்து வீசுகின்ற கதிர்கள் போல விளங்குவதாகும். இப்பயன்களை யெல்லாம் இவ்வகையில் நீ எய்துவாயாக.

==============================================

பாடல் எண் : 9
அடைந்திடும் பொன்வெள்ளி கல்லுடன் எல்லாம்
அடைந்திடும் ஆதி அருளும் திருவும்
அடைந்திடும் அண்டத் தமரர்கள் வாழ்வும்
அடைந்திடும் வண்ணம் அறிந்திடு நீயே.

பொழிப்புரை : பொன், வெள்ளி, நவமணிகள் ஆகிய பொருள்கள் யாவும் குறைவின்றி உன்பால் வந்துசேரும்; நல்வினையாலன்றிச் சிவனது அருளால் ஆம் செல்வங்கள் கிடைக்கும். தேவர்கள் பதவியும் தாமாகவே வரும்; இவையெல்லாம் இங்ஙனம் ஆமாற்றை அறிந்து இச்சக்கர வழிபாட்டினை நீ செய்.

==============================================

பாடல் எண் : 10
அறிந்திடு வார்கள் அமரர்க ளாகத்
தெரிந்திடு வானோர் தேவர்கள் தேவன்
பரிந்திடு வானவன் பாய்புனல் சூடி
முரிந்திடு வாளை முயன்றிடும் நீரே.

பொழிப்புரை : மெய்யறிவுடையோர் உண்மை அமரர்களாதல் பொருட்டு அறிந்து வழிபடுகின்ற தேவதேவனும், வானத்தைப் பிளந்துகொண்டு கீழே பாய்ந்த வலிய ஆகாய கங்கையைச் சடையில் சூடிக்கொண்டவனும் ஆகிய சிவபிரான் பணிகின்ற சத்தியை நீவிர் வழிபட்டு மேற்கூறிய பயன்களைப் பெறுங்கள்.

==============================================

பாடல் எண் : 11
நீர்பணி சக்கரம் நேர்தரு வண்ணங்கள்
பாரணி யும்இரீம் உன்சிரீம் ஈறாம்
தாரணி யும்புகழ்த் தையல்நல் லாளைக்
காரணி யும்பொழில் கண்டுகொள் வீரே.

பொழிப்புரை : நீங்கள் வழிபடுகின்ற நவாக்கரி சக்கரத்தின் வகை ஒன்பதில் \\\"ஹ்ரீம்\\\" என்பது முதலாகவும், `ஷ்ரீம்` என்பது இறுதி யாகவும் அமையும் வகை சிறந்ததாகும்.

==============================================

பாடல் எண் : 12
கண்டுகொள் ளும்தனி நாயகி தன்னையும்
மொண்டுகொள் ளும்முக வச்சியம தாயிடும்
பண்டுகொ ளும்பர மாய பரஞ்சுடர்
நின்றுகொ ளும்நிலை பேறுடை யாளையே.

பொழிப்புரை :மேற்கூறிய வகைச் சக்கரத்தின் வழியே ஒப்பற்ற அச்சத்தியைக் காணுங்கள். கண்டால், முகந்து கொள்ளலாம் போலும் முக வசீகரம் உங்கட்கு உண்டாகலாம். அநாதி பரஞ்சுடராகிய சிவபெருமானும் நீவீர் காணநின்று, அழிவற்ற அவளைத் தன்பால் எடுத்து வைத்துக்கொள்வான்.

==============================================

பாடல் எண் : 13
பேறுடை யாள்தன் பெருமையை எண்ணிடில்
நாடுடை யார்களும் நம்வச மாகுவர்
மாறுடை யார்களும் வாழ்வது தான்இலை
கூறுடை யாளையும் கூறுமின் நீரே.

பொழிப்புரை : நீங்கள் பெறத் தக்க பேறுகட்கெல்லாம் உரியவளாகிய சத்தியின் பெருமையை அறிந்து வழிபட்டால் மன்னரும் நம் வசப்படுவர்; பகைவர்கள் சீவித்திரார். ஆதலின், சிவனது ஒரு கூற்றைத் தனதாக உடைய அவளை நீவிர் துதியுங்கள். இரண்டாம் அடி உயிரெதுகை.

==============================================

பாடல் எண் : 14
கூறுமின் எட்டுத் திசைக்கும் தலைவியை
ஆறுமின் அண்டத் தமரர்கள் வாழ்வெனல்
மாறுமின் வையம் வரும்வழி தன்னையும்
தேறுமின் நாயகி சேவடி சேர்ந்தே.

பொழிப்புரை : சத்தி எல்லா உலகங்களையும் உடையளாதலை அறிந்து துதியுங்கள்; அதனால், உலகின் சில பகுதிகட்குத் தலைவராயுள்ள தேவர்களது வாழ்வு வேண்டும் என்னும் ஆசை நீக்குங்கள்; பின்னும், மீள மீள இவ்வுலகில் பிறக்கும் நிலையையும் நீங்குங்கள். முடிவாக அச்சத்தியது திருவடியைச் சேர்ந்து மயக்கமெல்லாம் அற்றுத் தெளிவு பெறுங்கள்.

==============================================

பாடல் எண் : 15
சேவடி சேர்ந்து செறிய இருந்தவர்
நாவடி யுள்ளே நவின்றுநின் றேத்துவர்
பூவடி இட்டுப் பொலிய இருந்தவர்
மாவடி காணும் வகையறி வாரே.

பொழிப்புரை :சத்தி தன் திருவடியில் சேர்ந்து நீங்காது இருக்க எண்ணினவர் அவளது மந்திரத்தை நாவிற்குள்ளே சொல்லித் துதிப்பர். புறத்திலே மலர்களை அவளது திருவடியிலே தூவி விளக்கம் பெற்றிருப்பவர், அவளது பெருமை பொருந்திய திருவடிகளைத் தரிசிக்கும் வழியை அறிந்தவராவர்.

==============================================

பாடல் எண் : 16
ஐம்முத லாக அமர்ந்தெழு சக்கரம்
ஐம்முத லாக அமர்ந்திரீம் ஈறாகும்
ஐம்முத லாகி யவற்றுடை யாளை
மைம்முத லாக வழுத்திடு நீயே.

பொழிப்புரை : நவாக்கரி சக்கர வகைகளுள் `ஐம்` என்பதை முதலாகப் பொருந்திச் செல்லுகின்ற சக்கரம் அந்த `ஐம்` என்பது முதலாகப் பொருந்திப் பின்பு, `ஹ்ரீம்` என்பதை ஈற்றில் உடைய தாகும். அந்த `ஐம்` என்பதை முதலாகக் கொண்ட அனைத்தெழுத்துக் களையும் தன்னுடையனவாக உடைய அந்தச் சக்கர சத்தியையே உன்னுடைய அறியாமையைப் போக்கும் தலைவியாக அறிந்து நீ துதிசெய்.

==============================================

பாடல் எண் : 17
வழுத்திடும் நாவுக் கரசிவள் தன்னைப்
பகுத்திடும் வேதம்மெய் யாகமம் எல்லாம்
தொகுத்தொரு நாவிடை சொல்லவல் லாளை
முகத்துளும் முன்னெழக் கண்டுகொ ளீரே.

பொழிப்புரை :மேற்கூறிய சக்கர சத்தி சிவாகமங்கள் கூறும் வாகீசுவரியாம், `வேதம்` என்றும், `ஆகமம்` என்றும் இவ்வாறு பலவாகப் பகுத்துச் சொல்லப்படும் நூல்கள் அனைத்தையும் தனது ஒரு நாவினாலே எளிதிற் சொல்ல வல்லவளாகிய இச்சத்தியை நீங்கள் உங்கள் வாக்கிலும் விரையத் தோன்றும் வண்ணம் வணங்குங்கள்.

==============================================

பாடல் எண் : 18
கண்டஇச் சக்கரம் நாவில் எழுதிடில்
கொண்டஇம் மந்திரம் கூத்தன் குறியதாம்
மன்றினுள் வித்தையும் மானுடர் கையதா
வென்றிடும் வையகம் மெல்லியல் மேவியே.

பொழிப்புரை :மேற்சொல்லிய வகையில் அறியப்பட்ட இச்சக்கரத்தினை நாவில் பதித்துக்கொண்டால், இதற்குக் கொள்ளப் பட்ட இந்த எழுத்துக்களே சிவனது எழுத்துக்களாய் விடும். அதனால், திருவம்பலத் தியானமாகிய தகர வித்தையும் மக்களுக்குக் கைவர, ஞானசத்தி பதிதலால், இவ்வழிபாட்டைச் செய்பவனும் உலக மாயையை வெல்லுபவனாவான்.

==============================================

பாடல் எண் : 19
மெல்லிய லாகிய மெய்ப்பொரு ளாள்தனைச்
சொல்லிய லாலே தொடர்ந்தங் கிருந்திடும்
பல்லிய லாகப் பரந்தெழு நாள்பல
நல்லிய லாக நடந்திடுந் தானே.

பொழிப்புரை :மெய்ப்பொருளாம் இயல்பினளாகிய இச்சத்தியை இங்குக் கூறிய இம்மந்திரத்தின் வழியே பற்றி அவ்வழிபாட்டில் நில்லுங்கள். பல்வேறு வகையினவாய் மிக்குச் செல்லுகின்ற உங்கள் நாள்கள் பலவும் நல்ல நாள்களேயாய்ச் செல்லும்.

==============================================

பாடல் எண் : 20
நடந்திடும் நாவினுள் நன்மைகள் எல்லாம்
தொடர்ந்திடும் சொல்லொடு சொற்பொருள்கள் [தானும்
கடந்திடும் கல்விக் கரசிவளாகப்
படர்ந்திடும் பாரில் பகையில்லை தானே.

பொழிப்புரை : இச்சக்கர சத்தி வாகீசுவரி யாதலின், இவளது அருள் கிடைக்கப் பெற்றவனுக்கு அவன் வேண்டிய நன்மைகள் யாவும் அவன் சொன்ன அளவிலே அங்ஙனமே முடியும். வழக்கும் செய்யுளுமாய்த் தொடர்கின்ற சொற்கள் அனைத்தையும், அவற்றின் பொருளோடு அவன் முற்ற உணர்ந்தவனாவான். விரிந்துகிடக்கின்ற இவ்வுலகில் ஓரிடத்தும் அவனுக்குப் பகையாவர் இல்லை. (நண்பரும் உறவினருமே உளராவர் என்பதாம்.)

==============================================

பாடல் எண் : 21
பகையில்லை கௌம்முதல் ஐம் அது ஈறாம்
நகையில்லை சக்கரம் நன்றறி வார்க்கு
மிகையில்லை சொல்லிய பல்லுரு வெல்லாம்
வகையில்லை யாக வணங்கிடுந் தானே.

பொழிப்புரை : இனி, `கௌம்` என்பதை முதலாகவும், `ஐம்` என்பதை இறுதியாகவும் கொண்ட சக்கரத்தின் பெருமையை நன்கு அறிந்து வழிபடுகின்றவர்கட்கு இவ்வுலகில் வெளிப்படையாய் வருகின்ற பகைவரும், மறைவாக நின்று புறங்கூறுபவரும் இலராவர். (நண்பரும், உறவினருமாய் நெஞ்சாரப் புகழ்கின்றவரே உளராவர் என்றபடி.) மேலும் பல்வேறு வகையினவாய உயிர்களும் இவனை எதிர்க்க வழியில்லாமல் பணிந்து நடக்கும். யான் சொல்லிய இவை மிகையாதல் இல்லை; உண்மையேயாம்.

==============================================

பாடல் எண் : 22
வணங்கிடும் தத்துவ நாயகி தன்னை
நலங்கிடும் நல்லுயி ரானவை யெல்லாம்
கலங்கிடும் காம வெகுளி மயக்கம்
துளங்கிடும் சொல்லிய சூழ்வினை தானே.

பொழிப்புரை : மும்மலங்களால் வருந்துகின்ற பல உயிர்களுள் பக்குவம் எய்தப் பெற்ற உயிர்கள் சத்திதன் பெருமையை உணர்ந்து அவளை வணங்கும். அவ்வணக்கத்தின் பயனாக அவைகளைப் பற்றியுள்ள, `காமம், வெகுளி, மயக்கம்` என்னும் முக்குற்றங்களும் நீங்கும். அவை நீங்கவே `அவற்றால் உண்டாகும்` என நூல்கள் சொல்லிய வினைகளும் இல்லையாம்.

==============================================

பாடல் எண் : 23
தானே கழறித் தணியவும் வல்லனாய்த்
தானே நினைத்தவை சொல்லவும் வல்லனாய்த்
தானே தனிநடங் கண்டவள் தன்னையும்
தானே வணங்கித் தலைவனு மாமே.

பொழிப்புரை : பக்குவ முதிர்ச்சியால் சத்தியை வழிபடுபவன், தனது தவற்றைத் தானே திருத்தியமையவும், தான் ஆய்ந்துணர்ந்த வற்றைப் பிறருக்குச் செவியறிவுறுக்கவும் வல்லனாய், இறைவனது ஒப்பற்ற நடனத்தை எஞ்ஞான்றும் காண்பவளாகிய சத்தியையும் தானே விரும்பி வழிபட்டுச் சமயத் தலைவனாயும் விளங்குவான்.

==============================================
பாடல் எண் : 24
ஆமே அனைத்துயிர் ஆகிய அம்மையும்
தாமேசகலமும் ஈன்றஅத் தையலும்
ஆமே அவளடி போற்றி வணங்கிடில்
போமே வினைகளும் புண்ணிய னாகுமே.
 


பொழிப்புரை : தானே எல்லாமாய் நிற்கின்ற சத்தி, அனைத்துயிராகியும் நிற்கின்றாள். எல்லாப் பொருள்களும் தம் தன்மையில் தாமேயாயும், சத்தியின் வியாபகத்தால் தம்மை ஈன்ற அவளாகியும் நிற்கும். ஆகையால் பக்குவன் அவளை வணங்கிய வழியே வினை நீக்கமும், தவப் பேறும் ஆகிய பயன்களை எய்துவான்.
==============================================
பாடல் எண் : 25
புண்ணிய னாகிப் பொருந்தி உலகெங்கும்
கண்ணிய னாகிக் கலந்தங் கிருந்திடும்
தண்ணிய னாகித் தரணி முழுதுக்கும்
அண்ணிய னாகி அமர்ந்திருந் தானே.
 


பொழிப்புரை : சத்தியைப் பக்குவ முதிர்ச்சியால் வழிபடுபவன் உலக முழுவதும், தவ மிகுதியால் வரும் பெருமையுடையவானகவும், அருளுடைமையால் இனியவனாகவும், அனைவர்க்கும் உரியவனாய் விளங்குவான்.
==============================================
மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.



No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!