http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Monday 24 September, 2012

திருமந்திரம்-தந்திரம்04: பதிகம் எண் :13. நவாக்கரிச் சக்கரம் (பாடல்கள்:026-050) பாகம் II




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

======================================================
நான்காம் தந்திரம்:பதிக எண்:01: அசபை ............................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:02: திருவம்பலச் சக்கரம் ...பாடல்கள்: 089
நான்காம் தந்திரம்:பதிக எண்:03: அருச்சனை.......................பாடல்கள்: 012
நான்காம் தந்திரம்:பதிக எண்:04: நவகுண்டம்......................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:05: சத்தி பேதம்......................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:06: வயிரவி மந்திரம்............பாடல்கள்: 050
நான்காம் தந்திரம்:பதிக எண்:07: பூரண சத்தி......................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:08: ஆதார ஆதேயம்.............பாடல்கள்: 100 
நான்காம் தந்திரம்:பதிக எண்:09: ஏரொளிச் சக்கரம்..........பாடல்கள்: 036
நான்காம் தந்திரம்:பதிக எண்:10: வைரவச் சக்கரம்...........பாடல்கள்: 006
நான்காம் தந்திரம்:பதிக எண்:11: சாம்பவிமண்டலச் சக்கரம் .பாடல்கள்:009
நான்காம் தந்திரம்:பதிக எண்:12: புவனாபதிச் சக்கரம்......பாடல்கள்: 012
நான்காம் தந்திரம்:பதிக எண்:13: நவாக்கரிச் சக்கரம்.......பாடல்கள்: 100

======================================================(434+100=534)
நான்காம் தந்திரம்-பதிகம் எண்:13.
நவாக்கரிச் சக்கரம் (பாடல்கள்:026-050) பாகம் II


பாடல் எண் : 26

தானது கம்இரீம் கௌமது ஈறாம்
நானது சக்கரம் நன்றறி வார்க்கெலாம்
கானது கன்னி கலந்த பராசத்திக்
கேனது! வையம் கிளரொளி யானதே.


பொழிப்புரை : தானே சக்கரமாகின்ற முதலெழுத்து `க்ரீம்` என்பதும், ஈற்றெழுத்து `கௌம்` என்பதுமாக அமைகின்ற அந்தச் சக்கரமே ஞானத்தை விரும்புவார்க்கு நான் சொல்வது. அது சத்திக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற நல்ல சோலையாய் விளங்கும். ஆயினும், அதில் வேறறக் கலந்து நிற்கின்ற அவளுக்கு அஃது எதன்பொருட்டு வேண்டும்! உலகம் ஒளி பெற்று விளங்குவதே அதன்பயன்.
==============================================
பாடல் எண் : 27
ஒளிக்கும் பராசத்தி உள்ளே அமரின்
களிக்கும் இச் சிந்தையிற் காரணங் காட்டித்
தெளிக்கும் மழையுடன் செல்வம்உண் டாக்கும்
அளிக்கும் இவளை அறிந்துகொள் வார்க்கே. 

  
பொழிப்புரை : இச்சக்கத்தில் நின்று ஞானத்தை வழங்குகின்ற சத்தி ஒருவனது உள்ளத்தில் நிலைபெறுவாளாயின், அவனது உள்ளம் அவனையும் அறியாமல் ஒரு களிப்பினை யுடையதாகும். தன் அடியவரைப் பல்லாற்றானும் நன்னிலையில் வைத்துக் காக்கின்ற இச்சத்தியது பெருமையை அறிந்து இவளை அடைகின்றவர்கட்கு இது பற்றிய ஆராய்ச்சியில் இதனைக் காரணங் காட்டித் தெளிவிப்ப தாகிய அருள்மழையுடன், பொருட் செல்வத்தையும் இவள் உண்டாக்குவாள்.
==============================================
பாடல் எண் : 28
அறிந்திடுஞ் சக்கர அற்சனை யோடே
எறிந்திடும் வையத் திடரவை காணின்
மறிந்திடும் மன்னனும் வந்தனை செய்வான்
பொறிந்திடும் சிந்தை புகையில்லை தானே.


பொழிப்புரை : உண்மையை நோக்குமிடத்து, இங்கு அறியப் படுகின்ற இச்சக்கர வழிபாட்டினால் உலகத்துன்பங்கள் அழிக்கப் படும். பிணங்குகின்ற அரசனும் இணங்கி வணங்குதல் செய்வான். தீக்குணத்தை உடைய உள்ளம் அஃது இன்றித் திருந்தும்.
==============================================
பாடல் எண் : 29
புகையில்லை சொல்லிய பொன்னொளி உண்டாம்
குகையில்லை கொல்வ திலாமையி னாலே
வகையில்லை வாழ்கின்ற மன்னுயிர்க் கெல்லாம்
சிகையில்லைச் சக்கரஞ் சேர்ந்தவர்க் காமே.


பொழிப்புரை :  மேற் சொல்லியவாறு தீக்குணம் அகலும்; முன்பு யோக நிலையிற் சொல்லிய பொன்போலும் உடல் ஒளியும் உண்டாகும். பகை யாதும் இல்லாமையால், அரண்தேட வேண்டுவ தில்லை. இப்பயன்களைப்பெற உலகருக்கு வகை இல்லை. தனக்கு மேல் ஒன்றில்லாத இச்சக்கர வழிபாட்டினை மேற்கொண்டவர்க்கே இவை கிடைப்பனவாம்.
==============================================
பாடல் எண் : 30
சேர்ந்தவர் என்றும் திசையொளி யானவர்
காய்ந்தெழும் மேல்வினை காணகி லாதவர்
பாய்ந்தெழும் உள்ளொளி பாரிற் பரந்தது
மாய்ந்தது காரிருள் மாறொளி தானே.


பொழிப்புரை :  இச் சக்கர வழிபாட்டினை மேற் கொண்ட வரிடத்தில் மிக விரைந்து எழுகின்ற உள்ளொளியாகிய ஞானம் உலகில் பலராலும் அறியப்படும். ஆதலின், ஆணவத்தால் விளையும் அறியாமையும், திரிபுணர்வும் கெடும். அதனால் இவர்கள் எட்டுத் திசைக்கும் விளக்குப்போல்பவரும், தம்மை வந்து வருத்துகின்ற ஆகாமிய வினை தோன்றப்பெறாதவரும் ஆவர்.
==============================================
பாடல் எண் : 31
ஒளியது ஹௌம்முன் கிரீமது ஈறாம்
களியது சக்கரம் கண்டறி வார்க்குத்
தெளியது ஞானமும் சிந்தையும் தேறப்
பளியது பஞ்சாக் கரமது வாமே.


பொழிப்புரை : ஒளியை உடையதாகிய `ஹௌம்` என்னும் பீசத்தை முதலிலும், `க்ரீம்` என்னும் பீசத்தை இறுதியிலும் கொண்ட, களிப்பைத் தருவதாகிய அச்சக்கரத்தின் உண்மையை நன்குணர்ந்த வர்கட்குத் தெளிவாகிய ஞானமும் தோன்ற, அதனை உள்ளமும் பற்ற, அதனால், அச்சக்கரம் எல்லா ஞானத்திற்கும் இடமாயுள்ள திருவைந்தெழுத்துமாய் விடும்.
==============================================
பாடல் எண் : 32
ஆமே சதாசிவ நாயகி யானவள்
ஆமே அதோமுகத் துள்அறி வானவள்
ஆமே சுவைஒளி ஊறோசை கண்டவள்
ஆமே அனைத்துயிர் தன்னுள்ளும் ஆமே.


பொழிப்புரை :  `சுத்த மாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை` என்னும் மூன்று மாயைகளினின்றும் மூவகைக் கருவிகளைத் தருபவளாகிய சத்தி, அக்கருவிகளைப்பெறும் உயிர்களாய் நிற்றலே யன்றி, இச் சக்கரத்துள்ளும் இதுவேயாய் நிற்பாள். 
==============================================
பாடல் எண் : 33
தன்னுளு மாகித் தரணி முழுதுங்கொண்
டென்னுளு மாகி இடம்பெற நின்றவள்
மண்ணுளும் நீரனல் காலுளும் வானுளும்
கண்ணுளும் மெய்யுளும் காணலு மாமே.


பொழிப்புரை :  இச்சக்கரத்தில் நின்றும், உலக முழுதையும் தன்னுடையதாகக் கொண்டும், என் உள்ளத்திலும் இருந்தும் எல்லாப் பொருளும் தன்னிடத்தில் அடங்க நிற்கின்ற சத்தி, பஞ்ச பூதங்களின் உள்ளும், என் கண்ணின் உள்ளும், உடம்பின் உள்ளும் காணக் கூடியவளாகின்றாள்.
==============================================
பாடல் எண் : 34
காணலு மாகும் கலந்துயிர் செய்வன
காணலு மாகும் கருத்துள் இருந்திடில்
காணலு மாகும் கலந்து வழிசெயல்
காணலு மாகும் கருத்துற நில்லே.


பொழிப்புரை : சத்தியின் துணையாலே உயிர்கள் செயற்பட்டு வரும் முறைகளை உணரலாம். `எப்பொழுது` எனின், அவள் உனது உள்ளத்தில் விளங்கும்பொழுது. அப்பொழுதே அவள் உயிர்களுக்கு உய்யும் வழியைச்செய்து வருதலையும் உணரலாம். ஆதலின், இவ்வுணர்வுகளைப் பெற நீ உனது உள்ளம் அவளிடத்திற்பொருந்தும் வகையில் நிற்பாயாக.  
==============================================
பாடல் எண் : 35
நின்றிடும் ஏழு புவனமும் ஒன்றாகக்
கண்டிடும் உள்ளம் கலந்தெங்கும் தானாகக்
கொண்டிடும் வையம் குணம்பல தன்னையும்
விண்டிடும் வல்வினை மெய்ப்பொரு ளாகுமே.
பொழிப்புரை : சத்தியது தியானத்தால் ஏழுலகங்களில் ஒன்றைச் சுட்டியறியும் ஏகதேச உணர்வு நீங்கப்பெற்று, அனைத்தையும் ஒன்றாகக் காண்கின்ற வியாபக உணர்வு வரப் பெற்ற உயிர் அவ்வுணர்வானே தனது வியாபகத்தையும் உணர்வதாகும். அதனால், முக்குண வயப்படுதலும், வினைத் தொடக்கும் ஒழியும். அஃது ஒழியவே, அவ்வுயிர் மெய்ப்பொருளைத் தலைப்படும்.
==============================================
பாடல் எண் : 36
மெய்ப்பொருள் (ஔம்)முதல் (ஹௌம)து ஈறாக்
கைப்பொரு ளாகக் கலந்தெழு சக்கரம்
தற்பொரு ளாகச் சமைந்தமு தேச்சரி
நற்பொரு ளாக நடுவிருந் தாளே.


பொழிப்புரை : சத்தி `அமுதேசுவரி` என்னும் பெயருடன், மெய்ப் பொருளை உணர்த்தும் `ஔம்` என்னும் பீசம் முதலாகவும், `ஹௌம்` என்னும் பீசத்தை ஈறாகவும் பொருந்திக் கைப்பொருள்போலத் தப்பாது பயன்தருகின்ற சக்கரத்தைத் தனது பொருளாகக் கொண்டு நன்மையைத் தருகின்ற ஒருபொருளாய் அதன் நடுவில் இருக்கின்றாள்.
==============================================
பாடல் எண் : 37
தாளதி னுள்ளே சமைந்தமு தேசுவரி
காலது கொண்டு கலந்துற வீசிடில்
நாளது நாளும் புதுமைகள் கண்டபின்
கேளது காயமும் கேடில்லை காணுமே.


பொழிப்புரை : இச்சக்கரத்திலே தனது திருவடி பொருந்த நிற்கின்ற அமுதேசுவரி வாசி யோகத்தால் வெளிப்படத் தோன்றும்படி பிராண வாயுவை அவள்பாற் கலக்கச் செய்யின், ஒவ்வொரு நாளும் புதுமைகள் பல தோன்றும். உடம்பும் அழிதலை யொழிந்து நிலை நிற்கும். ஆதலின், அங்ஙனம் செய்யப்படும் யோக முறையை வல்லார் வாய்க் கேட்டு, அதனை மேற்கொள்வாயாக. 
==============================================
பாடல் எண் : 38
கேடில்லை காணும் கிளரொளி கண்டபின்
நாடில்லை காணும் அந் நாள்முதல் அற்றபின்
மாடில்லை காணும் வரும்வழி கண்டபின்
காடில்லை காணும் கருத்துற் றிடத்துக்கே.


பொழிப்புரை :  பேரொளிப் பொருளாகிய அமுதேசுவரியை மேற்கூறியவாறு கண்டபின் காண விரும்பவேண்டுவது ஒன்றும் இல்லை; உடம்பிற்கு அழிவும் இல்லை. அழிவு இல்லாமையால், நாள் முதலிய பாகுபாடுகளையுடைய காலம் நீங்கினமையின், காலத்தோடு கூடியே தம் பயனைத் தருகின்ற இடப்பாகு பாடுகளும் இல்லையாம். இனி முற்கூறிய பேரொளியால் உயிரினது குறிக்கோள் பொருந்திய இடத்திற்குச் செல்லும் வழி நன்கு காணப்படுதலின், அதன்பின் அவ்வழியை மூடி மறைக்கும் வினைக்காடு இல்லையாம்.
==============================================
பாடல் எண் : 39
உற்றிட மெல்லாந் உலப்பிலி பாழாகிக்
கற்றிடமெல்லாம் கடுவெளி யானது
மற்றிட மில்லை வழியில்லை தானில்லை
சற்றிட மில்லை சலிப்பற நின்றிடே.


பொழிப்புரை :  கிளரொளியாகிய அமுதேசுவரியைக் கண்டபின் அக்காட்சி சலித்தற்குச் சிறிதும் இடனில்லாதபடி உறைத்து நில். நின் றால், காணப்பட்ட இடங்கள் யாவும் அழிவற்ற பாழாய், கற்ற நூல்கள் தாமும் வெற்ற வெளியாய் அவ்விடத்திற்குப் பயன் செய்யாதவை யாய்விடும். அங்ஙனம் ஆகாத இடங்களும், நூல்களும் இல்லை யாம். அதனால், அவளிடத்தினின்றும் விலகிச் செல்லுதற்கு ஏதுவே யில்லை. இனி, விலகிச்செல்ல, `தான்` என்று ஒரு முதலும் இல்லையாம்.
==============================================
பாடல் எண் : 40
நின்றிடும் ஏழ்கடல் ஏழ்புவி எல்லாம்
நின்றிடும் உள்ளம் நினைத்தவை தானொக்கும்
நின்றிடும் சத்தி நிலைபெறக் கண்டிட
நின்றிடும் மேலை விளக்கொளி தானே.


பொழிப்புரை :  அமுதேசுவரியைச் சலிப்பின்றிக் காணின், நிலை பெற்றுள்ள ஏழ் கடல், ஏழ் நிலம் முதலியயாவும், அலைவின்றி நிலைத்த அவ்வுள்ளத்தில் நினைத்தவாறே ஆகும். முடிவாக கிளரொளி யாகிய அச்சத்தி ஒழிவின்றித் தன்னிடத்தில் நிலைபெற்று நிற்கும்.
==============================================
பாடல் எண் : 41
விளக்கொளி (ஸௌம்)முதல் (ஔம)து ஈறா
விளக்கொளிச் சக்கரம் மெய்ப்பொரு ளாகும்
விளக்கொளி யாகிய மின்கொடி யாளை
விளக்கொளி யாக விளங்கிடு நீயே.


பொழிப்புரை : விளக்கொளி போல்வதாகிய `ஸௌம்` என்னும் பீசம் முதலும், `ஔம்` என்னும் பீசம் ஈறும் ஆகி நிற்பின் அச் சக்கரம் விளக்கொளிச் சக்கரமாம். அது மெய்ப்பொருளாயே நிற்கும். எல்லா வற்றையும் விளக்கியருள்கின்ற ஒளியாகிய சத்தியை அச்சக்கரத்தில் விளக்கொளி வடிவமாகவே நீ கருதி வழிபடு.
==============================================
பாடல் எண் : 42
விளங்கிடு மேல்வரு மெய்ப்பொருள் சொல்லின்
விளங்கிடு மெல்லிய லானது வாகும்
விளங்கிடு மெய்நின்ற ஞானப்பொருளை
விளங்கிடு வார்கள் விளங்கினர் தானே.


பொழிப்புரை : விளங்கி நிற்பதாக மேலைமந்திரத்திற் சொல்லப் பட்ட மெய்ப்பொருளை இன்னதெனக் கூறின், அது சிவ சத்தியேயாம். தானே விளங்குந் தன்மையுடையதும், மெய்ம்மையானதும், அறிவே வடிவாய் உள்ளதும் ஆகிய அந்தப்பொருளை உணர்பவர்களே ஞானம்பெற்றவராவர்.
==============================================
பாடல் எண் : 43
தானே வெளியென எங்கும் நிறைந்தவள்
தானே பரம வெளியது வானவள்
தானே சகலமும் ஆக்கி அழித்தவள்
தானே அனைத்துள அண்ட சகளமே.

பொழிப்புரை : மேற்கூறிய மெய்ப்பொருளாகிய ச்ததி, தான் ஒருத்தியே பூதாகாயமாகி எங்கும் நிறைந்தும், பராகாயமாகி எல்லா வற்றிற்கும் மேலாகியும் நிற்பாள். தானே எல்லாப் பொருளையும் தோற்றுவித்து அழிப்பவளாவாள். தானே பலவாயுள்ள அண்டங் களையும் தனது வடிவமாக உடையவளாவாள்.
==============================================
பாடல் எண் : 44
அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே.
 

பொழிப்புரை : அளத்தற்கு அரிய பொருளாய் அனைத்து அண்டங்களிலும் பரவி நிற்பவளும், உடம்பினுள்ளே தானே பரவெளியை அமைத்துள்ளவளும் ஆகிய சத்தியது தன்மைகள் பலவற்றை ஓம குண்டத்தில் பலர் மந்திரம் கிரியை பாவனைகளால் காண்பார்களாயினும், உடம்பினுள்ளே அவள் பொருந்தி நிற்கும் நிலையை அவர் அறிதல் இல்லை.
==============================================
பாடல் எண் : 45
கலப்பறி யார் கடல் சூழுல கெல்லாம்
உலப்பறி யார் உட லோடுயிர் தன்னைச்
சிலப்பறி யார் சில தேவரை நாடித்
தலைப்பறி யாகச் சமைந்தவர் தானே.
 

பொழிப்புரை : சிவ சத்தி இருக்க அவளை வணங்காமல் சில தேவர்களை நாடிச் சென்று வணங்குதலால், தலை இருந்தும் அஃது அற்றொழிந்த உடலை உடையார்போல ஆகி விட்டவர்கள் தாம் அடையத் தக்க பொருள் எது என்பதனையும், உலகம் அழிவது என்பதனையும் வாழும் பொழுதே உடலோடு கூடிய தம் உயிரை நல்வழியிற் செயற்படச் செய்வதனையும் அறிவாரல்லர்.
==============================================
பாடல் எண் : 46
தானே எழுந்தஅச் சக்கரம் சொல்லிடின்
மானே மதிவரை பத்திட்டு வைத்தபின்
தேனே இரேகை திகைப்பற ஒன்பதில்
தானே கலந்த வரைஎண்பத் தொன்றுமே.
 

பொழிப்புரை :  ஒன்ப தெழுத்துக்களால் இயல்பாக அமைந்த சக்கரத்தின் இயல்பைக் கூறின், நெடுக்காகப் பத்துக் கோடும், குறுக்காகப் பத்துக் கோடும் இட்டு, ஒன்பதிற்றொன்பது (9X9) எண்பத்தொன்றாகின்ற அறைகளை அறிவாயாக.
==============================================
பாடல் எண் : 47
ஒன்றிய சக்கரம் ஓதிடும் வேளையில்
வென்றிகொள் மேனி மதிவட்டம் பொன்மையாம்
கன்றிய ரேகை கலந்திடும் செம்மையில்
என்றியல் அம்மை எழுத்தவை பச்சையே.
 

பொழிப்புரை : மேற்கூறிய சகக்ரத்தின் இயல்பை இன்னும் சொல்லும்பொழுது, வெற்றியைக் கொண்ட அதன் வடிவமாகிய அறைகளின் நிறம் பொன்மை; அழுந்த இடப்பட்ட கோடுகளின் நிறம் செம்மை. ஞாயிற்றைப் போல ஒளிவிட்டு விளங்கும் சத்தி வடிவ மாகிய எழுத்துக்களின் நிறம் பச்சை.
==============================================
பாடல் எண் : 48
ஏய்ந்த மரவுரி தன்னில் எழுதிய
வாய்ந்தஇப் பெண்எண்பத் தொன்றில் நிரைத்தபின்
காய்ந்தவி நெய்யுட் கலந்துடன் ஓமமும்
ஆய்ந்தவி ஆயிரம் ஆகுதி பண்ணுமே.
 

பொழிப்புரை :  பொருந்திய மர உரியில் (மரப் பட்டையில்) எழுதப்பட்டுப் பொருந்திய எழுத்துக்களை மேற்சொல்லிய எண்பத் தோர் அறைகளில் அடைத்த பின்பு, வெண்ணெய் அப்பொழுது காய்ந்து அடங்கியதனால் உண்டான நெய்யில் நன்கு ஆய்ந்த அரிசியால் முறைப்படி அடப்பட்ட சோற்றைக் கலந்து ஆயிரமுறை ஆகுதியால் ஓமம் பண்ணி வழிபடுங்கள்.
==============================================
பாடல் எண் : 49
பண்ணிஅப் பெண்ணைப் பரப்பற நீபிடி
எண்ணிய நாட்களில் இன்பமும் எய்திடும்
நண்ணிய நாமும் நான்முகன் ஒத்தபின்
துண்ணென மேயநற் சொக்கனு மாமே.
 

பொழிப்புரை :  மேற்கூறிய முறையில் ஓமம் செய்து அச்சத்தியை நீ மெல்லப் பிடித்தால், கணக்கிட்டுக் கூறப்பட்ட நாள்களுக்குள்ளே நன்மை உண்டாகும். ஒமத்தைச் செம்மையாக வளர்த்தமையால், `பிரமனுக்கு நிகரான பிராமணனாயினான்` என்ற புகழை உலகத்தார் சொல்லும் அளவிற்கு இவ்வழிபாட்டில் சிறந்து நின்றபின், விரைவில் அவன் மிக உடல் அழகு பெற்றும் விளங்குவான்.
==============================================
பாடல் எண் : 50
ஆகின்ற சந்தனம் குங்குமம் கத்தூரி
போகின்ற சாந்து சவாது புழுகுநெய்
ஆகின்ற கப்பூரம் ஆகோ சனம்நீரும்
சேர்கின்ற ஒன்பதும் சேரநீ வைத்திடே.
 

பொழிப்புரை :  மேற்கூறிய சக்கரத்திற்கு ஆகும் பொருள்கள், `சந்தனம், குங்குமப்பூ, மான்மதம், கண்ணேறு போதற்கு ஏதுவான கருஞ்சாந்து, சவ்வாது, புனுகுசட்டம், நெய், கோரோசனை, நீர்` என்னும் ஒன்பதுமாம். இவற்றை ஒருங்கு கூட்டி வைத்துக்கொண்டு வழிபாட்டினைத் தொடங்குவாயாக.
==============================================


மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!