http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Wednesday 19 December, 2012

திருமந்திரம்-தந்திரம்08: பதிகம் 06 . சுத்த நனவாதி பருவம் - பாடல்கள்: 040.(பகுதி-I)




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

==============================================
எட்டாம் தந்திரம்:பதிக எண்:01: உடலில் பஞ்சபேதம்..பாடல்கள்: 018 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:02: உடல் விடல்.................பாடல்கள்: 003  
 எட்டாம் தந்திரம்:பதிக எண்:03: அவத்தை பேதம்.........பாடல்கள்: 025 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:04: மத்திய சாக்கிராவத்தை .பாடல்கள்: 016
எட்டாம் தந்திரம்:பதிக எண்:05: அத்துவாக்கள்............பாடல்கள்: 003 

எட்டாம் தந்திரம்:பதிக எண்:06: சுத்த நனவாதி பருவம் .பாடல்கள்: 040

==============================================
 
தந்திரம் 8- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -006
கூடுதல் பாடல்கள்  (065+040=105)
==============================================
எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம் - பாடல்கள்: 040 பகுதி -I

பாடல் எண் : 1
நனவாதி தூலமே சூக்கப் பகுதி
அனவான ஐயைந்தும் விந்துவின் சத்தி
தனதாம் உயிர்விந்து தான்நின்று போந்து
கனவாம் நனவில் கலந்ததிவ் வாறே.

பொழிப்புரை :  கீழாலவத்தையாய் யாவராலும் நன்கு உணர நிகழும் கேவல சாக்கிரம் முதலிய ஐந்தையும் போல்வனவே, நுண்ணறி வுடையோரால் மட்டும் ஊன்றியுணரப் படுகின்ற மத்தியாலவத்தை யாகிய சகல சாக்கிரம் முதலிய ஐந்தும். அந்த ஈரைந்து அவத்தை களிலும் உள்ள இருபத்தைந்து தத்துவங்களும் சுத்த மாயையிலும் உள்ளன. (யோகாவத்தையில் அவை செயற்படும்) அவைகளி னின்றும் உயிர் தனது உணர்வு விடுபட்டுச் சென்று, திருவருளில் முன் பெல்லாம் தான் கண்டு வந்த கனவு போல உணரப்படுகின்ற காட்சியில் தோய்கின்ற நிலையே சுத்த சாக்கிரம் முதலிய சுத்தாவத்தைகளாம்.
**********************************************
பாடல் எண் : 2
நனவில் அதீதம் பிறந்தார் கிடந்தார்
நனவில் துரியம் நிகழ்ந்தார் தவழ்ந்தார்
நனவில் சுழுத்தி நடந்தார் வளர்ந்தார்
நனவில் கனவோடல் நற்செய்தி யானதே.

பொழிப்புரை :  `சாக்கிரத்தில், `அதீதம்` என்னும் நிலை தோன்றப் பெற்றவர், தம்மால் உணரப்பட்ட பொருளையும் தம்மையும் வேறு வேறாக அறிதல் இன்றி அப்பொருளேயாய் அழுந்தித் தற்போதத்தை இழந்திருப்பர். அதனால் அவர், இடம் பெயரமாட்டாது கிடந்த கிடப்பில் கிடக்கும் பசுங்குழவி போல்பவாவர். சாக்கிரத்தில் `துரியம்` - என்னும் நிலை தோன்றப் பெற்றவர், தம்மால் உணரப்படும் பொருளையும், தம்மையும் வேறு வேறாக அறிந்து, அந்த அளவில் அனுபவிக்கும் உணர்வு உடையவராவர், அதனால், அவர் இடம் பெயர்ந்து தவழ்ந்து செல்லும் குழவி போல்வர். சாக்கிரத்தில், `சுழுத்தி` என்னும் நிலை தோன்றப் பெற்றவர் உணரப்படும் பொருளையும், உணரும் தம்மையும் வேறுவேறாகப் பகுத்து நன்குணர்வர். அதனால் அவர் வளர்ச்சியடைந்து நன்கு நடக்கும் சிறுபிள்ளைகள் போல்வர். சாக்கிரத்தில், `சொப்பனம்` என்னும் நிலை தோன்றப் பெற்றவர், பொருளில் மேலும் மேலும் நாடும் நாட்டம் மிகுந்து இருப்பர். அதனால் அவர் நன்கு ஓடி ஆடும் பருவச் சிறுபிள்ளை களோடு ஒப்பர். (மகளிரில், `பெதும்பைப் பருவத்தாரோடு ஒப்பர்` எனலாம்.). சாக்கிரத்தில், `சாக்கிரம்` என்னும் நிலை தோன்றப் பெற்றவர் வாழ்க்கையில் முழுமையாக ஈடுபடுவர். அதனால் அவரக்ள கட்டிளமையுடையவரோடு ஒப்பர். (எனினும், ஆடவர்களில் பிரமசாரிகளையும், பெண்டிரில் கன்னிகைகளையும் இங்கு உவமையாகக் கொள்க.)
**********************************************
பாடல் எண் : 3
செறியுங் கிரியை சிவதத் துவமாம்
பிறிவில் சுகயோகம் பேரருள் கல்வி
குறிதற் றிருமேனி குணம்பல ஆகும்
அறிவில் சராசரம் அண்டத் தளவே.

பொழிப்புரை :   சிவநெறி மார்க்கம் நான்கனுள் சற்புத்திர மார்க்க மாகிய கிரியையில் நிற்பின் சிவ தத்துவங்கள் ஐந்தும் காட்சிப்படுவன வாம். சிவத்தோடு தன்னை ஒன்றவைத்து உன்னும் சகமார்க்க மாகிய யோகத்தால் சிவனது திருவருளை நிரம்பப் பெறுதல் கூடும். சிவனது ஞானத்தை உணர்தலாகிய சன்மார்க்கத்தால் ஆன்மாவினது ஞானமும் சிவஞானமேயாய், அதுவே தற்சொரூப மாய் நிற்கும். அந்நிலையில் சிவனது எல்லாக் குணங்களும் ஆன்மாவுக்கு உளவாகும். அப்பொழுது ஆன்மாவும் சிவனைப் போலவே எங்கும் நிறைந்து விளங்கும்.
**********************************************
பாடல் எண் : 4
ஆதி பரம்சிவம் சத்தி சதாசிவம்
ஏதமில் ஈசன்நல் வித்தையாம் தத்துவம்
போதம் கலைகா லமேநியதி மாயையும்
நீதி அராகம் நிறுத்தினன் என்னே.

பொழிப்புரை :   `சிவம், சத்தி, சதாசிவம், ஈசுரம், சுத்தவித்தை` என்னும் சிவ தத்துவங்களையும், அவற்றின் கீழ் உள்ள `கலை, காலம், நியதி, வித்தை, அராகம், மாயை` என்னும் வித்தியா தத்துவங்களையும் அநாதி நிலையினின்றும் இறங்கி ஆதியாய் நிற்கின்ற சிவன் படைத்தருளினான் என்று உணர்க.
**********************************************
பாடல் எண் : 5
தேசு திகழ்சிவம் சத்தி சதாசிவம்
ஈசன்நல் வித்தை - இராகம் கலை காலம்
மாசகல் வித்தை நியதி மகாமாயை
ஆசில் புருடாதி ஆன்மா - ஈ ராறே.

பொழிப்புரை :   (மேற்கூறிய இருவகைத் தத்துவங்களையும் கூட்டித் தொகை காணின்) `சிவம், சத்தி, சதாசிவம், ஈசுரம், சுத்த வித்தை, கலை, காலம், நியதி, வித்தை, அராகம், புருடன், மாயை` - எனப் பன்னிரண்டாம். இவற்றுள் `புருடன்` என்பது ஏனையபோல ஒரு தத்துவம் அன்று. கலை முதலிய ஐந்தனோடும் கூடி நிற்கும் ஆன்மாவே.
**********************************************
பாடல் எண் : 6
ஆணவம் மாயையும் கன்மமும் ஆம்மலம்
காணும் முளைஅத் தவிடுமி ஆன்மாவும்
தாணுவைப் போலாமல் தண்டுல மாய்நிற்கும்
பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே.

பொழிப்புரை :  `ஆணவம், மாயை, கன்மம்` - என மலங்கள் மூன்றாம். அவற்றை எதிர்நிரல் நிறையாக வைத்து, அரிசிக்கு முளை, தவிடு, உமி இவைபோல்வனவாக உணர்க. ஆன்மாவும் சிவனைப் போலச் சித்துப் பொருளேயாயினும், அரிசி போன்ற ஒரு தன்மையை அஃது உடைமையால் அரிசிக்கு உமி முதலிய குற்றங்கள் அநாதியாக இருத்தல் போல, ஆணவம் முதலிய குற்றங்கள் அநாதியே உளவாக, அது சிவனைப் போலப் பதியாகாது, பசுவேயாய் நின்றது. உனது தன்மையை இங்ஙனம் நீ உள்ளவாறு உணர்ந்து, பாசங்களில் பற்றுக் கொள்ளாது விடுத்துப் பதியாகிய சிவனைப் பற்றி இன்புறுவாயாக.
**********************************************
பாடல் எண் : 7
பசுக்கள் பலவண்ணம் பால்ஒரு வண்ணம்
பசுக்களை மேய்க்கின்ற ஆயன்ஒருவண்ணம்
பசுக்களை மேய்க்கின்ற ஆயன்கோல் போடின்
பசுக்கள் தலைவனைப் பற்றி யிடாவே.

பொழிப்புரை :  உலகில் பாலைத் தரும் பசுக்கள்யாவும் ஒரே நிறம் உடையன அல்ல; பல நிறம் உடையன. (அது போல, சீவர்களாகிய பசுக்களும், `பசுத்துவம்` எனப்படும் பந்தத்தைத் ஒரே வகையாக உடையன அல்ல; ஒரே வகையை உடையனவாயின், பந்தத்தினின்றும் விடுபடுதலும் எல்லாப் பசுக்களுக்கும் ஒரு காலத்திலே நிகழ்தல் வேண்டும். அவ்வாறில்லாமையால், பந்த வேறுபாடு பலதிறப் பட்ட தாம்.) ஆயினும், பசுக்கள் தரும் பயனாகிய பால் ஒரு நிறமேயாம். (அது போல அவை அடையும் வீடுபேறு ஒருதன்மையுடையதே.) இனிப் பசுக்களை மேய்க்கின்ற ஆயன் ஒருவன். (ஆகவே, அவன் ஒரு தன்மையனேயன்றிப் பல தன்மை உடையவன் அல்லன். (அதுபோலச் சீவர்களை, `பெத்தம், முத்தி` என்னும் இரு நிலைகளிலும் உடன்நின்று நடாத்தும் பதி ஒருவனே, ஆகையால் அவன் பதித்தன்மை ஒன்றே உடையனன்றிப் பசுக்கள் போலச் சார்த்ததன் வண்ணமாய்த் தன்மை வேறுபடுபவனல்லன்.)ஆயன் பசுக்களை மேய்க்காமல் அவற்றின் இச்சைப்படி விட்டு விடுவானேயானால் இவை ஆயனைச் சென்று சேராமல், காட்டில் திரிந்து அல்லற்பட்டே ஒழியும். (அதுபோல, சிவன் சீவர்களைக் கண் ணெடுத்துப் பார்க்காமல் விட்டுவிடுவானேயானால், அவை அவனை அறிந்து இன்புற மாட்டா, பந்தத்தால் விளையும் துன்பத்தில் கிடக்கும்.
``
மேய்ப்பாரும் உண்டாய், வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ப் பொழியுமே``
எனப் பின்னரும் பசுக்களுக்கு மேய்ப்பான் இருத்தல் இன்றியமையாது எனக் கூறுவார்.)
**********************************************
பாடல் எண் : 8
உடல் இந் தியம்மனம் ஒண்புத்தி சித்தம்
அடல்ஒன் றகந்தை அறியாமை மன்னிக்
கெடும்அவ் வுயிர்மயல் மேலும் கிளைத்தால்
அடைவது தான்ஏழ் நரகத்து ளாயே.

பொழிப்புரை :   தாத்துவிகங்களாகிய உடம்பு, அதில் கரணங் களாய்ப் பொருந்தியுள்ள ஞானேந்திரியங்கள், கன்மேந்திரியங்கள், அந்தக் கரணங்கள் ஆகிய இவற்றின் இயல்பினை அறியாமையால் அவை களையே `தான்` என மயங்கிக் கெடுகின்ற அந்த உயிர், (அந்த அறியா மையை நீக்கிக் கொள்ள முயலாமல்) மேலும் மேலும் அந்த அறியா மையையே வளர்த்துக் கொண்டிருக்குமானால், அது அடைவது ஏழு நரகங்களிலும் சென்று வீழ்ந்து அங்குள்ள துன்பத்தைத்தான்.
**********************************************
பாடல் எண் : 9
தற்றெரி யாத அதீதம்தன் ஆணவம்
சொற்றெரி கின்ற துரியம்சொற் காமியம்
பெற்ற சுழுத்தி பின்பேசுறும் காதலாம்
மற்றது உண்டி கனாநன வாதலே

பொழிப்புரை :  `கேவலம், சகலம், சுத்தம்` - என்னும், காரண அவத்தை மூன்றனுள் கேவலத்தில் துரியாதீதம், உயிர், `நான்` என் -கின்ற தன்னுணர்வும் இன்றி, ஆணவத்தில் அழுந்தி அதுவேயாய்க் கிடந்த நிலை `யான்` என்னும் உணர்வு முகிழ்க்கின்ற கேவலத்தில் துரியம், மேற் குறித்த நிலையில் இறைவன் அவ்வுயிருக்கு மூலகன் மத்தைக் கூட்டு வித்த நிலை. கேவலத்தில் சுழுத்தி, மூலகன்மத்தோடு காரண சரீரமாகிய மாயா தத்துவத்தைக் கூட்டிய நிலை. இவைகளில் ஆன்மாவிற்கு வினையை ஈட்டுதல் நுகர்தல்கள் இல்லை, கேவலத்தில் சொப்பனம் கால நியதிகளைக் காட்டுவித்த நிலை. சாக்கிரம் கலை வித்தை அகாரகங் களைக் கூட்டிய நிலை. இந்தச் சொப்பன சாக்கிரங்களில் தான் உயிர் வினைகளை ஈட்டுதலும் நுகர்தலும் நிகழும்.
**********************************************
பாடல் எண் : 10
நனவிற் கனவில்லை ஐந்தும் நனவில்
கனவிலாச் சூக்குமம் காணும் சுழுத்தி
தனில்நுண் பகுதியே தற்கூட்டு மாயை
நனவில் துரியம் அதீதம் தலைவந்தே.

பொழிப்புரை :  நனவில் கனவு இல்லாமைபோலக் கனவிலும் நனவு இல்லை யாதலின், சுழுத்தியில், சுழுத்தி முதலிய மூன்று நுட்ப அவத்தைகள் மட்டுமே உள்ளனவாம். (அவைகளை `சுழுத்தியிற் சுழுத்தி, சுழுத்தியில் துரியம், சுழுத்தியில் துரியா தீதம்` எனக் கூறிக் காண்க.), இங்ஙனம் கூறியதனானே, சொப்பனத்தில் சாக்கிரம் ஒழிந்த நான்கும் உளவாதல் பெறப்பட்டது. நனவில் சொல்லப்படும் துரியமும், துரியாதீதமும் தாமே தனித்து நிகழும் நிலையில் துரியத்தில் இரண்டும், துரியாதீதத்தில் அஃது ஒன்றுமாகவே நிகழும். (அவை, `துரியத்தில் துரியம்` துரியத்தில் துரியாதீதம்` எனவும், `துரியாதீதத்தில் துரியாதீதம், எனவும் சொல்லப்படும்.). ``ஐந்துசாக்கிரத்தில்; நான்கு கனவினில்`` என்னும் சிவஞான சித்திச் செய்யுளுக்கு இதுவும் பொருளாமாறு அறிந்து கொள்க.
**********************************************
பாடல் எண் : 11
ஆறாறில் ஐயைந் தகலல் நனாநனா
ஆறாம் அவைவிட வாகும் நனாக்கனா
வேறான ஐந்தும் விடவே நனாவினில்
ஈறாம் சுழுத்தி இனிமாயை தானே.

பொழிப்புரை :  தத்துவம் முப்பத்தாறில் ஆன்ம தத்துவம் இருபத்து நான்கும், வித்தியா தத்துவத்தில் புருடன் ஒன்றும் ஆக இருபத்தைந்து தத்துவங்களை ஆன்மாத் தன்னின் வேறாகக் கண்டு நீங்குதலே சகலத்தில் சுத்த சாக்கிரமாகும். பின்னர், வித்தியா தத்துவத்தில் எஞ்சியுள்ள ஆறு தத்துவங் களையும் அவ்வாறு கண்டு நீங்குதலே சகலத்தில் சுத்த சொப்பனமாகும். பின்னர், சிவ தத்துவம் ஐந்தனையும், `இவை பிரளயாகலர் சகலர்கட்கு பிரேரக மாத்திரையாயும், விஞ்ஞானகலருக்குத் தனு கரண புவன போகங்களாயும் பயன்பட்டுத் தோற்றமும் அழிவும் உடைய அநித்தியப் பொருள்களேயன்றி, இவை தாமே சிவனது இலய போக அதிகாரத் திருமேனிகளாகிய நித்தியப் பொருள்கள் அல்ல; அத் திரு மேனிகள் இவற்றின் வேறாய்ச் சத்தி வடிவாவனவே` எனத் தெளிந்து, அவை பற்றியிருந்த மயக்கத்தின் நீங்குதலே சகலத்தில் சுத்த சுழுத்தி யாகும். இவற்றிற்குப் பின் எஞ்சி நிற்பது காரண நிலையில் உள்ள சுத்த மாயையே,
**********************************************
பாடல் எண் : 12
மாயையில் வந்த புருடன் துரியத்தில்
ஆய முறைவிட் டதுவும்தான் அன்றாகிச்
சேய்கே வலம் விந்து வும் செலச் சென்றக்கால்
ஆய தனுவின் பயன்இல்லை யாமே.

பொழிப்புரை :  (முன்னை மந்திரத்திற் கூறியவாறு) உயிர் மாயா காரியங்களை யெல்லாம் கடந்து எஞ்சி நின்ற காரண நிலையில் உள்ள சுத்த மாயை தாரக மாகச் சிவத்தை உணர்ந்து நிற்றலே சகல சாக்கிரத்தில் சுத்த துரியமாகும். பின்னர் ஆன்மா அந்த நிலையிலும் நில்லாமல் விட்டு நீங்கி, அந்தக் காரண மாயையும் தொடர்பின்றி நிற்கச் சிவமே தாரகமாக அதனை உணர்ந்து நிற்றல் சகல சாக்கிரத்தில் சுத்த துரியாதீதமாகும். இந்நிலையில் உடம்பு இருந்தும் இல்லாததேயாம்.
**********************************************
பாடல் எண் : 13
அதீதத் துரியத் ததீனாம் ஆன்மா
அதீதத் துரியத் ததனால் புரிந்தால்
அதீதத் தெழுந்தறி வாகிய மானன்
முதிய அனலின் துரியத்து முற்றுமே.

பொழிப்புரை :  நின்மல துரியாதீத நிலையில் சிவனையன்றிப் பிறிதொன்றையும் தாரகமாகக் கொள்ளாமையால், சடத்தன்மை சிறிதும் இன்றித் தூய அறிவேயாய் நிற்கின்ற ஆன்மா, அந்நிலையில், பழஞ் சுடராகிய சிவனது அவ்வருள் வழியே, தொடர்ந்து அவனையே உணர்ந்துநிற்குமாயின், அவ்வருளால் தனது தூய்மை கெடாது, என்றும் அந்நிலையிலே நிற்கும் நிலை கைகூடுவதாகும்.
**********************************************
பாடல் எண் : 14
ஐயைந்து பத்துடன் ஆனது சாக்கிரம்
கைகண்ட ஐயைந்தில் கண்டம் கனாஎன்பர்
பொய்கண்ட மூவர் புருடன் சுழுனையில்
மெய்கண் டவன்உந்தி மேவில் துரியமே.

பொழிப்புரை :  பிரிந்தும், கூடியும் வரும் கருவிகளில் முப்பத்தைந்து கருவிகள் மட்டுமே கூடிச் செயற்படுவது கேவல சாக்கிரம். (இதுவும் சகல சாக்கிரம்போலப் புருவநடுவில் நிகழும்` என்பது மேற் பல இடங்களில் கூறப்பட்டது.)
சிவதத்துவம் ஐந்தும், வித்தியா தத்துவம் ஏழும் ஆகப் பன்னிரண்டு தத்துவங்களும் ஆன்மாவை எப்பொழுதும் விட்டுக் நீங்குவன அல்ல, அதனால், `புருடன்` என ஒன்றுபோலக் கூறுமிடம் எல்லாம் அவத்தை பேதத்தில் இப்பன்னிரண்டு தத்துவங்களும் கொள்ளப்படும். `அவற்றுள் முப்பத்தைந்து கருவிகள் மட்டுமே கேவல சாக்கிரத்தில் தொழிற்படும்` என்றமையாலும், அவற்றுள் `புருடன்` என்பது, மற்றும் பதினொரு கருவிகள் கூடியது ஆகையாலும், நாற்பத்தாறு கருவிகள் கேவல சாக்கிரத்தில் தொழிற்படும். கேவலசாக்கிரத்தில் செயற்படும் நாற்பத்தாறு கருவிகளாவன; ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து, ஞானேந்திரிய விடய மாகிய சத்தாதி ஐந்து, கன்மேந்திரிய விடயமாகிய வசனாதி ஐந்து, அந்தக் கரணம் நான்கு, புருடன் ஒன்று, பிரணாதி வாயுக்கள் பத்து என்பன, ``புருடன்` என்பது பன்னிரண்டு கருவிகளை அடக்கியது - என்பது மேலே கூறப்பட்டது.  ஆன்மா புருவ மத்தியிலே நிற்பினும் தொண்ணூற்றாறு கருவிகளும் செயற்படின் சகல சாக்கிரமும், அவற்றுள் ஐம்பது கருவிகள் நீங்க, கேவல சாக்கிரமும் நிகழும் என்க. சகல சாக்கிரத்தில் ஆன்மா புலன்களை அறிவதில் தீவிரமாய், நன்குணர்ந்து நிற்கும். கேவல சாக்கிரத்தில் ஆன்மாப் புலன்களை அறிந்தும் அறியாதது போன்ற மந்த உணர்வு உடையதாய் இருக்கும். இவை அவ்விரு சாக்கிரத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடு. முப்பத்தைந்து கருவிகளில் ஞானேந்திரியம் ஐந்தும், கன் மேந்திரியம் ஐந்தும் ஆகப் பத்துக் கருவிகள் நீங்க, ஏனை இருபத்தைந்து கருவிகள் மட்டும் செயற்படுவது கேவல சொப்பனம். இந்நிலையில் ஆன்மாக் கண்டத் தானத்தில் நிற்கும். கைகண்ட சாக்கிரத்தில் நன்கு துய்க்கப்பட்ட. அவ்விருபத்தைந்தில் சித்தம், பிராணன், புருடன் ஆகிய மூன்று கருவிகள் மட்டுமே செயற்படுவது கேவல சுழுத்தி. (பொய் என்றது ஐம்புலன்களை. `சுழுனையில் பொய்கண்ட மூவர் உளர்` என இயைத்துக் கொள்க. `இவருள் புருடனும் ஒருவன்` என்பதாம்.) `சுழுத்தி நிகழும் இடம் இருதயம்` என்க. பொருள்களை உணரும் ஆற்றல் உடைய புருடன் இரு -தயத்தை விட்டு உந்தியை அடைந்தால் அந்நிலை கேவல துரியமாம். அப்பொழுது பிராணன் மட்டுமே உளதாக இருவரே இருப்பர். (இரு கருவிகள் மட்டுமே அவ்விடத்தில் செயற்படும்` என்றபடி.) இங்குப் புருட தத்துவத்தையே உயிராக உபசரித்தார். `உந்தி மேவில்` என்றதனால் முன்பு இருதயத்தில் நின்றமை பெறப்பட்டது.
**********************************************
பாடல் எண் : 15
புரியட் டகமே பொருந்தல் நனவு
புரியட் டகந்தன்னில் மூன்று கனவு
புரியட் டகத்தில் இரண்டு சுழுத்தி
புரியட் டகத்தொன்று புக்கால் துரியமே.

பொழிப்புரை :  (`புரியட்டக சரீரம்` - என்பது பெரும்பான்மையும் சூக்குமசரீரத் தையும், சிறுபான்மை பரசரீரத்தையும் குறிக்கும். இது சிவஞான போத இரண்டாம் சூத்திரத்து இரண்டாம் அதிகரண சிவஞான மாபாடியத்தாலும் விளங்கும்.). தன்மாத்திரை ஐந்தும், அந்தக் கரணம் மூன்றும் ஆக எட்டும் கூடியது சூக்கும சரீரம். இவ்விடத்தில் சித்தம் பிரகிருதியில் அடங்கும். மூலப் பிரகிருதி ஒன்றும், வித்தியா தத்துவம் ஏழும் ஆக எட்டும் கூடியது பர சரீரம்.
எனவே, `புரியட்டகம்` என்பது இவ்விரு சரீரங்கட்கும் பெயராதல் விளங்கும். (இவை இரண்டுமே இம் மந்திரத்திற் குறிக்கப்படுகின்றன.). இரு புரியட்டக சரீரங்களும் தூல சரீரத்தோடு பொருந்தி நிற்கும் நிலையே இருவகைச் சாக்கிராவத்தையாகும். (இருவகை சகலமும், கேவலமும், இவ்வாறு சுருங்கக் கூறினாராயினும் கேவல சாக்கிரத்திலும் கனவிற் போலவே புரியட்டக சரீரம் நிற்கும் என்க.) சத்தாதி ஐந்தும், வசனாதி ஐந்தும், பிராணாதி பத்தும் ஆக இருபதும் தாத்துவிகங்கள். ஆகையால் அவற்றை எண்ணாமல் விடுக்கச் சூக்கும சரீரத்தில் மூன்று அந்தக்கரணங்கள் மட்டுமே செயற்படும் நிலை கேவல சொப்பனமாம். கேவல சாக்கிரத்தல் இருவகை இந்திரியங்கள் செயற்படும். கேவல சொப்பனத்தில் அவை செயற்படா. (இங்குப் பரசரீரம் கருத்தில் கொள்ளப் படவில்லை.) பரசரீரத்தில் `பிரகிருதி, புருடன்` என்னும் இரண்டு மட்டுமே தொழிற்படும் நிலை கேவல சுழுத்தியாம். (இங்கும் பிராணன் எண்ணப்பட வில்லை.) பரசரீரத்தில் புருடன் ஒன்று மட்டுமே செயற்படும் நிலை கேவல துரியமாம். (இங்கும் பிராணன் எண்ணப்படவில்லை. ஒரு கருவியும் இன்றி ஆணவ மாத்திரம் இருத்தலே கேவல துரியாதீதம்` என்பது கருத்து.)
**********************************************
பாடல் எண் : 16
நனவில் நனவு புலனில் வழக்கம்
நனவில் கனவு நினைத்தல் மறத்தல்
நனவில் சுழுத்திஉள் நாடல் இலாமை
நனவில் துரியம்அதீதத்தூண் நந்தியே.

பொழிப்புரை :  சாக்கிரத்தில் சாக்கிரமாவது உயிர் பொறிகளின் வழியாகப் புறத்தே உலாவிப் புலன்களைப் புதிது புதிதாக உணரும் நிலை. சாக்கிரத்தில் சொப்பனமாவது, புறத்துச் சென்று புதிய காட்சி -களைக் காணாது முன்பு கண்டவற்றைப் பற்றியே நினைந்திருத்தல்.  சாக்கிரத்தில் சுழுத்தியாவது, முன்பு கண்ட காட்சிகளை நினைதலையும் விடுத்துப் பொதுமையின் நிற்றல். சாக்கிரத்தில் துரியமாவது, புறப்பொருள்களால் விளைந்தது துன்பமாயின் அதனைப் போக்கவும், இன்பமாயின் அதனைக் காக்கவும் ஆன வழிகளைப் பலவாக எண்ணுதல்.  சாக்கிரத்தில் துரியாதீதமாவது, அவ்வாறு எண்ணுதல் இன்றி, துன்பம், அல்லது இன்பத்திலே மூழ்கித் தன்னை மறத்தல்.
**********************************************
பாடல் எண் : 17
கனவில் நனவுபோல் காண்டல் நனவாம்
கனவினில் கண்டமறத்தல் கனவாம்
கனவில் சுழுத்தியும் காணாத காணல்
அனுமாதி தேய்தலில் ஆன துரியமே.

பொழிப்புரை :   (மேல், `நனவிற் கனவில்லை` என வந்த மந்திரத்தில் சித்தாந்தம் கூறிய நாயனார். இது முதல் மூன்று மந்திரங்களால் சில பூர்வபக்கம் கூறுகின் றார்.). கனவு நனவுபோல மிகத் தெளிவாக நிகழ்தல் சொப்பனத்தில் சாக்கிரம். (இதுவே, `சொப்பனத்தில் சொப்பனம்` என்பது சித்தாந்தம்.), கனவு தெளிவாக அன்றி, மந்தமாக நிகழ்தல் சொப்பனத்தில் சொப்பனம். (இது வேறன்று என்பது சித்தாந்தம்.). கனவில் காட்சியாகக் காணாது, கருத்தாக மட்டும் சிலவற்றை உணர்தல் சொப்பனத்தில் சுழுத்தி. அந்த உணர்வும் இன்றி இருத்தல் சொப்பனத் தில் துரியம் (இதனானே, `உணர்வு கனவில் உண்டாகும் இன்பத்துன்பங் களிலே அது அதுவாக அழுந்துதலே சொப்பனத்தில் துரியாதீதம்` - என்பது பெறப்படும்.)
**********************************************
பாடல் எண் : 18
சுழுத்தி நனவொன்றும் தோன்றாமை தோன்றல்
சுழுத்திக் கனவுதன் உண்மை சுழுத்தியில்
சுழுத்தி அறிவறி வாலே அழிகை
சுழுத்தித் துரியமாம் சொல்லறும் பாழே.

பொழிப்புரை : சுழுத்தியில் ஒருகால், `இது நல்ல உறக்கம்` என அதனை உணர்தல் சுழுத்தியில் சாக்கிரம். சுழுத்தியில் `நாம் நன்கு உறங்குகின்றோம்` எனத்தன்னை உணர்தல் சுழுத்தியில் சொப்பனம். (இவை இரண்டும் நிகழில் சுழுத்தியில்லை யாம் என்பது சித்தாந்தம்.)
**********************************************
பாடல் எண் : 19
துரிய நனவாம் இதம்உணர் போதம்
துரியக் கனவாம் அகம்உணர் போதம்
துரியச் சுழுத்தி வியோமம் துரியத்
துரியம் பரம் - எனத் தோன்றிடுந் தானே.

பொழிப்புரை :  துரியத்தில் பேருறக்கத்தில் விளைகின்ற மிக்க இன்பத்தினைக் காலத்தொடு ஒட்டி நெடிதுணர்தல் துரியத்தில் சாக்கிரம். அவ்வின்பத்தை உணராது தன்நிலையை உணர்தல் துரியத் தில் சொப்பனம். துரியத்தில் திருவருள் உணர்வு தோன்றல் துரியத்தில் சுழுத்தி. துரியத்தில் திருவருட்கு முதலாகிய சிவத்தை உணர்தல் துரியத்தில் துரியம். (இதனால், சிவத்தில் ஒடுங்கல் துரியத்தில் துரியாதீத மாதல் கொள்ளப்படும்.). (இவற்றுள், `முதற்கண் கூறிய நிலையே துரியத்தில் துரியம்` என்பதும், அவ்வின்பத்தில் தோய்ந்து, அதுவேயாய்க் கிடத்தலே துரியத்தில் துரியாதீதம்` என்பதும், `பிறவெல்லாம் கீழாலவத்தைக் கண் நிகழா` என்பதுமே சித்தாந்தம்.)  ஏகான்ம வாதிகள், `கீழாலவத்தையில் நிகழும் சுழுத்தியில் சீவன் பிரமமாய்விடும்` எனவும், `அதனால் அங்கு நிகழ்வது பிரமானந்தமே` எனவும் கூறுவர். இம்மந்திரத்திற் கூறிய பூர்வ பக்கமும் அவர்களது கொள்கையோடு ஓராற்றான் ஒத்துள்ளன். இனி `இங்குக் கூறப்பட்ட துரியம் பரதுரியமே` எனக் கொள்வாரும் உளர். துரியாதீத நிலை இங்குக் கூறப்படாமையால், அதில், `சித்தாந்தத்திற்கு வேறாய்ச் சொல்லப்படுவன இல்லை` என்பதாகின்றது.
**********************************************
பாடல் எண் : 20
அறிவறி கின்ற அறிவு நனவாம்
அறிவறி யாமை அடையக் கனவாம்
அறிவறி யவ்வறி யாமை சுழுத்தி
அறிவறி வாயின தான துரியமே.

பொழிப்புரை :   ஆன்மாத் தத்துவங்களின் இயல்பை அறியுமுகத்தானே தன்னியல்பை அனுமித்தறியும் நிலை சகலத்தில் சுத்த சாக்கிரம். (இதனை, `ஆன்மரூபம்` என்க.) தத்துவங்களின் இயல்பை உணரும் முகத்தால் அவற்றால் தனக்கு உண்டாகும் பாச அறிவை நீக்கி நிற்கும் நிலை சகலத்தில் சுத்த சொப்பனம். (இதனை, `தத்துவ சுத்தி` என்க.) பாச அறிவை நீக்கிய ஆன்மாப் பதியறிவை நாடி அது தோன்றாது நிற்கும் நிலை சகலத்தில் சுத்த சுழுத்தி. (இதனை, `ஆன்ம தரிசனம்` என்க. `சிவரூபம்` இங்கு உடன் நிகழும்.) பதியறிவை நாடி அதனை அறிந்த ஆன்மா, அந்த அறிவில் தனது அறிவு ஒடுங்கத் தான் தோன்றாது அது வேயாய் நிற்கும் நிலை சகலத்தில் சுத்த துரியமாம். (இதுவே, ஆன்ம சுத்தியும், சிவதரிசனமும், சிவயோக மும் என்க.) இதற்கு மேல் ஆன்மாத் தன்னால் பற்றப்பட்ட சிவம் விளைக்கின்ற ஆனந்தத்தில் மூழ்கிப் பிறிதொன் றையும் அறியாது நிற்றலே சகலத்தில் சுத்த துரியாதீதம் என்பது குறிப்பால் கொள்ளக்கிடந்தது. அதுவே `ஆன்ம லாபம்` என்க.
**********************************************
 
மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!