http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Monday 17 December, 2012

திருமந்திரம்-தந்திரம்08: பதிகம் 04&05 . மத்திய சாகிராவத்தை&அத்துவாக்கள் - பாடல்கள்: 016 & 003.




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

==============================================
எட்டாம் தந்திரம்:பதிக எண்:01: உடலில் பஞ்சபேதம்..பாடல்கள்: 018 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:02: உடல் விடல்.................பாடல்கள்: 003  
 எட்டாம் தந்திரம்:பதிக எண்:03: அவத்தை பேதம்.........பாடல்கள்: 025 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:04: மத்திய சாக்கிராவத்தை .பாடல்கள்: 016
எட்டாம் தந்திரம்:பதிக எண்:05: அத்துவாக்கள்............பாடல்கள்: 003 
============================================== 
தந்திரம் 7- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -005
கூடுதல் பாடல்கள்  (046+016 +003=065)
==============================================
எட்டாம் தந்திரம் - 4. மத்திய சாக்கிராவத்தை பாடல்கள்: 016
பாடல் எண் : 1
சாக்கிர சாக்கிரந் தன்னில் திரோதாயி
சாக்கிர சொப்பனந் தன்னிடை மாயேயம்
சாக்கிரந் தன்னிற் சழுத்திதற் காமியம்
சாக்கிரந் தன்னில் துரியத்து மாயையே.

பொழிப்புரை :   மத்தியாலவத்தையாகிய சாக்கிர சாக்கிரத்தில் மட்டுமே திரோதானமலம் செயற்படும். (எனவே இந்நிலையில்தான் அனைத்துக் கருவிகளும் செயற்பட, ஆன்மா உலகினை நன்கு உணர்வதாகும்). சாக்கிர சொப்பனத் தளவிலேதான் - அஃதாவது, சாக்கிர சாக்கிரம், சொப்பனம் என்னும் இரண்டில் மட்டுமே ஆன்ம தத்துவம் செயற்படும். (அவற்றுள் சாக்கிரத்தில் மட்டுமே புறக் கருவிகள் செயற்படச் சொப்பனத்தில் அந்தக்கரண நிகழ்ச்சியாகிய சிந்தனை மட்டுமே உளதாகும்) சாக்கிர சுழுத்தியளவில்தான் - அஃதாவது சாக்கிர சாக்கிரம், சாக்கிர சொப்பனம், சாக்கிர சுழுத்தி என்னும் மூன்றளவிலேதான் கன்மங்கள் நிகழும். (எனவே, அந்த மூன்றளவிலேதான் ஆன்மாவிற்குச் சுக துக்கங்கள் விளங்கித் தோன்றும்). சாக்கிர துரியத்தளவில்தான் வித்தியா தத்துவங்கள் செயற்படும். (எனவே, அந்த நான்களவில்தான் ஆன்மாவிற்கு `யான்` என்னும் தன்னுணர்வு உளதாகும்).
**********************************************
பாடல் எண் : 2
மாயை எழுப்பும் கலாதியை மற்றதின்
ஏய இராகாதி ஏய்ந்த துரியத்துத்
தோயும் சுழுனை கனா நனாவும் துன்னி
ஆயினன் அந்தச் சகலத் துளானே.

பொழிப்புரை :   சிவதத்துவம் அனைத்தும் செயற் படாமையால், வித்தியா தத்துவங்களும் செயற்படாது ஒடுங்கிய அதீத நிலையில் சிவதத்துவங்கள் தொழிற்படத் தொடங்கிய பொழுது வித்தியா தத்துவங்களில் மாயா தத்துவம் எழுந்து, கலை, காலம், நியதி என்னும் மூன்று தத்துவங்களை எழுப்பும். பின்பு கலையினால் வித்தையும், வித்தையால் அராகமும் எழுந்து தொழிற்படும். இவ்வாற்றால் மத்தியா லவத்தைகளில் துரியாதீதம் முதலிய ஐந்தும் நிகழும், அவை ஐந்தும் `மகாசகலம்` எனப் பொதுப் பெயரைப்பெறும்.
**********************************************
பாடல் எண் : 3
மேவிய அந்தன் விழிகட் குருடனாம்
ஆவயின் முன்அடிக் காணும் அதுகண்டு
மேவும் தடிகொண்டு சொல்லும் விழிபெற
மூவயின் ஆன்மா முயலுங் கருமமே.

பொழிப்புரை :   பிறவிக் குருடன் கண்ணை விழித்து விழித்துப் பார்ப்பினும் யாதொன்றையும் காணமாட்டுவானல்லன். (இது போன்றது சாக்கிர துரியாதீதநிலை அஃதாவது, உணர்வு சிறிதும் இன்றிக் கிடக்கும் நிலையாம்).
ஒன்றும் காணப்படாத நிலையில் அக்குருடன் தன் காலில் கீழ்க் கிடப்பதைத் தடவித் தடவிப்பார்ப்பான். (இதுபோன்றது சாக்கிர துரிய நிலை. அஃதாவது, உணரத் தக்கனவற்றைச் சிறப்பாக அன்றிப் பொதுவாக உணரும் நிலையாம்).
தடவிப் பார்த்த குருடனுக்குக் கோல் ஒன்று கிடைத்ததாயின் அதனைத் துணையாகப் பற்றிச் சில இடங்களுக்குச் செல்வான். (இது போன்றது சாக்கிரச் சுழுத்தி நிலை; உணரப்படும் பொருள்களைச் சிந்தனையால் உணரும் நிலையாம்).
இதன் பிறகு அக்குருடன்தனக்குக் கண் தெரிவதற்கு வேண்டியவற்றைச் செய்வாரை அணுகி அவர்கட்கு உபசார வார்த் தைகளைச் சொல்வான். (இதுபோன்றது சாக்கிரச் சொப்பனநிலை. உணரவேண்டுவனவற்றை உணர்தற்கு முனையும் நிலையாகும்).
(
இறுதியில் குருடன் கண்பெறுதலும் உண்டு. அதுபோன்றதே சாக்கிர சாக்கிரம்) சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி என்னும் மூன்று நிலைகளில்தான் ஆன்மா செயற்பாடுடையதாம். ஏனை இரண்டும் செயலற்ற நிலைகளாம்).
**********************************************
பாடல் எண் : 4
மத்திமம் ஒத்த சிலந்தி வலையத்துள்
ஒத்தங் கிருந்தங் குயிருண்ணு மாறுபோல்
அத்தனு ஐம்பொறி ஆடகத் துள்நின்று
சத்தம் முதல்ஐந்தும் தான்உண்ணு மாறே.

பொழிப்புரை :  ஐம்பொறிகளைக் கருவியாக உடைய அந்த உடம் பாகிய ஆடரங்கத்துள் நின்று சத்தம் முதலிய புலன்களை உயிர் நுகரும் முறை, சிலந்தியானது வலைக்குள் ஏற்புடைய இடத்தில் இருந்து கொண்டு, அங்குவந்த உயிர்களை உண்ணும் முறைபோல்வது. ஆதலின், அதற்கு ஏற்புடையன மத்தியாலவத்தைகளே.
**********************************************
பாடல் எண் : 5
வைச்சன அச்சு வகையிரு பத்தஞ்சோ(டு)
உச்ச முடன் அணை வான்ஒரு வன்னுளன்
பிச்சன் பெரியன் பிறப்பிலி என்றென்று
நச்சி அவனருள் நான்உய்ந்த வாறே.

பொழி ப்புரை :  உயிர்களுக்கு உதவியாக அவைகளின் வசமாக வைக்கப்பட்ட கருவிகள் இருபத்தஞ்சு. எனினும், (அவைகளை வைத்துமட்டும் போதாமையால்) எல்லாவற் றையும் நடத்தும் தலைமைப்பாட்டோடு உடனாய், நீங்காது ஒருவன் இருக்கின்றான். அவனை எல்லா நூல்களும் ஒருமுகமாக, `பித்தன்` என்றும் `பெரியோன்` என்றும் `பிறப்பிலி` என்றும் கூறுதலையறிந்து. அவனையே விரும்பி நான் உய்ந்தவாறு குறிக்கொளத்தக்கதாகும்.
**********************************************
பாடல் எண் : 6
நாலா றுடன்புருடன் நற்றத் துவம்உடன்
வேறான ஐயைந்து மெய்ப்புரு டன்பரம்
கூறா வியோமம் பரம்-எனக் கொண்டனன்
வேறான நாலேழு வேதாந்தி தத்வமே.

பொழிப்புரை :   `சாங்கியர் கூறும் நிலம் முதல் மூலப் பகுதி ஈறான இருபத்து நான்கு தத்துவங்களுடன் அவர் இருபத்தைந்தாவதாகக் கூறு கின்ற புருடனையும் ஒரு தத்துவமாகக் கூட்ட, சாங்கியர் கொள்கை யினின்றும் வேறான இருபத்தைந்து தத்துவங்கள் உளவாகின்றன. அவற்றிற்கு மேல் உண்மையில் `புருடன்` எனச்சொல்லத்தக்க ஈசுரனும் அவனுக்கும் மேலான, சொல்லுக்கு எட்டாத பராகாயமும், அதற்கு மேல் பரப்பிரமமும் ஆகத்தத்துவம் இருபத்தெட்டு` எனத் `தத்துவ எண்ணிக் -கையை இவ்வாறு கொள்வதே சிறப்பு` என வேதாந்திகள் கூறுகின்றனர்.
**********************************************
பாடல் எண் : 7
ஏலங்கொண் டாங்கே இடையொடு பிங்கலை
கோலங்கொண் டாங்கே குணத்தி னுடன்புக்கு
மூலங்கொண் டாங்கே முறுக்கிமுக் கோணிலும்
காலங்கொண் டானடி காணலு மாமே.

பொழிப்புரை :   உயிர் (ஏலாத நிலைகளின் நீங்கி) ஏற்புடையதாகிய அழகிய நிலையைத் தலைப்பட்டபொழுது, இடைகலை, பிங்கலை நாடிகள் வழியாக இயங்குகின்ற காற்றோடு பொருந்தி அவற்றின் வடிவாகி, அப்பொழுதே இராசத சத்துவ தாமத குணங்களிலும் பொருந்திக் (கீழ்நோக்கிச் சென்று) மூலாதாரத்தை யடைந்து, அங்கே உள்ள குண்டலி சத்தியின் கீழ் நோக்கு நிலையை மாற்றி மேல்நோக்கி எழச் செய்து, பின்பு பிருதிவிமண்டலம், அப்புமண்டலம், தேயு மண் டலம் ஆகிய மூன்று மண்டலங்களிலும் மேற்கூறிய முக்குண வடிவாய் உள்ளமும் மூர்த்திகளிடமாக இறைவனைத் தரிசித்தல் கூடும்.
**********************************************
பாடல் எண் : 8
நாடிகள் பத்தும் நலந்திகழ் வாயுவும்
ஓடிய காலின் ஒடுங்கி யிருந்திடும்
கூடிய காமம் குறிக்கும் இரதமும்
நாடிய நல்ல மனமும் உடலிலே.

பொழிப்புரை :   நாடிகள் பத்தும், நன்மை விளங்குகின்ற வாயுக்கள் பத்தும் நாடிகளில் சிறப்புடைய, `இடை, பிங்கலை, என்னும் இரு நாடிகள் வழியாக இயங்குகின்ற `பிராணன்` என்னும் வாயுவிற்குக் கீழ்ப்பட்டு, அவற்றின்வழி நிற்கும். ஆணும், பெண்ணும் கூடியதனால் விளைகின்ற இன்பத்தில் உயிர் மூழ்குதற்குக் காரணமான சுக்கில சோணிதங்களும், அவ்வின்பத்தை விரும்புவதாய் அன்பைச் செய்கின்ற மனமும் உடல் முழுவதுமாய் இருக்கும்.
**********************************************
பாடல் எண் : 9
பத்தொடு பத்தும் ஓர் மூன்றும் பகுதியும்
உய்த்த துரியமும் உள்ளுணர் காலமும்
மெய்த்த வியோமமும் மேலைத் துரியமும்
தத்துவம் நாலேழ் எனஉன்னத் தக்கதே.

பொழிப்புரை :  (`வேதாந்திகள் கொள்வன` - என மேற்கூறப்பட்ட) தத்துவங்கள் இருபத்தெட்டு என்னும் தொகை, தூலபூதம் ஐந்து, சூக்கும பூதம் (தன்மாத்திரை) ஐந்து, ஆகிய பூதங்கள் பத்தும், ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து ஆகிய இந்திரியங்கள் பத்தும், `மனம், அகங்காரம், புத்தி` - என்னும் அந்தக் கரணங்கள் மூன்றும், மூலப்பகுதி ஒன்றும் ஆகிய சடங்கள் இருபத்து நான்கும், அவற்றிற்கு மேல் அபர துரியமாகிய புருடன், அல்லது சீவன் ஒன்றும், அதற்குமேல் காலத்தின் வாயிலாக எல்லாவற்றையும் இயக்குகின்ற ஈசுரன் ஒருவனும், அவனுக்கு மேலேயுள்ள மாயையாகிய பராகாசமும், அவனுக்கு மேல் பரதுரியமாகிய பரம்பொருள் ஒன்றும் எனக் கருதத் தக்கதாகும்.
**********************************************
பாடல் எண் : 10
விளங்கிடும் முந்நூறு முப்ப தொருபான்
தளங்கொள் இரட்டிய(து) ஆறு நடந்தால்
வழங்கிடும் ஐம்மலம் வாயு எழுந்து
விளங்கிடும் அவ்வழித் தத்துவம் நின்றே.

பொழிப்புரை :   முந்நூறு, அதனுடன் முப்பதொருபான்; அஃதா வது முந்நூறு, இரண்டும் கூட அறுநூறு. தளம் - படி. இரட்டிய தாகிய ஆறு. ஆறாறு = முப்பத்தாறு, அறுநூற்றை முப்பத்தாறு படியாக உறழ வருவது இருபத்தோராயிரத்து அறுநூறு. இஃது ஒரு நாளைக்கு வெளிச்சென்றும், உட்புகுந்தும் நடக்கின்ற மூச்சின் எண்ணிக்கை யாகும். இவ்வாறு வாயு - பிராணன். எழுந்து நடந்தால், உயிரைப் பற்றி யுள்ள பஞ்சமலங்களும் தன் தன் வேலையைச் செய்யும். அப்பொழுது தான் மாயா காரியமாகிய தத்துவங்களின் செயல்களும் விளங்குவனவாம்.
**********************************************
பாடல் எண் : 11
நாலொரு கோடியே நாற்பத் தெண்ணாயிரம்
மேலும்ஓர் ஐந்நூறு வேறாய் அடங்கிடும்
பால்அவை தொண்ணூற்றோ டாறுட்படும் அவை
கோலிய ஐயைந்து ளாகும் குறிக்கிலே.

பொழிப்புரை :   `நாலுகோடியே நாற்பத்தொண்ணாயிரத்து ஐந்நூறு` என்பது முற்கூறிய எண்ணிக்கையில் உயிர்ப்பு இயங்கும் இயக்கத் தொகை. அத்தொகையளவு, சிறிதே ஏற்றம் உள்ள ஐந்தாண் டுகளாம். (எனவே, அந்த அளவு மூச்சு, உடல் வளர்வதற்குத்தவிர, உயிர்க்கு யாதும் பயன்தருவன அல்லவாம்). இனி, `மூச்சு இயங்கும் காலத்தில் விளங்கிடும்` எனப்பட்ட தத்துவங்கள் தொண்ணூற்றா றாகும். எனினும், அவற்றை இருபத்தைந்தில் அடக்குவார் உளர்.
**********************************************
பாடல் எண் : 12
ஆகின்ற தொண்ணூற்றோ டாறும் பொதுஎன்பர்
ஆகின்ற ஆறா(று) அருஞ்சைவர் தத்துவம்
ஆகின்ற நாலேழ்வே தாந்திக்கு வைணவர்க்(கு)
ஆகின்ற நாலா(று)ஐ யைந்துமாயா வாதிக்கே.

பொழிப்புரை :  இதன் பொருள் வெளிப்படை.
குறிப்புரை :  மாயா வாதியை வேறு கூறினமையால், `வேதாந்தி` என்றது பிரம பரிணாம வாதியையாயிற்று. இதனானே மேல் `வேதாந்தி` என்றதும் இவனையேயாதல் தெளிவாம். ஐயைந்து` என் பதில் அந்தக்கரணம் நான்காக, அவற்றிற்குமேல் பிரகிருதி உளதாம்.  இதனால், மதவாதிகளின் தத்துவக்கொள்கைகள் தொகுத்துக் கூறப்பட்டன.
**********************************************
பாடல் எண் : 13
தத்துவ மானவை தன்வழி நின்றிடில்
ளித்தக னாகி விளங்கி யிருக்கலாம்
பொய்த்தவ மானவை போயிடும் அவ்வழி
தத்துவ மாவ(து) அகார எழுத்தே.

பொழிப்புரை :   மெய்` என்பன யாவும் ஒருவனது அறிவினுள்ளே அடங்கித் தோன்றுமாயின் அவன் ஏனையோர் பலரினும்திறம் மிக உடையனாய் விளங்கலாம். அப்பொழுது பயனில்லாத செயல்கள் யாவும் ஒழிந்து, பயனுள்ள செயல் கைவரும். அங்ஙனம் உணரப்படும் மெய்களில் நாதம் தலையாயது.
**********************************************
பாடல் எண் : 14
அறிவொன் றிலாதன ஐயேழும் ஒன்றும்
அறிகின்ற என்னை அறியா திருந்தேன்
அறிகின்ற நீஎன் றருள்செய்தான் நந்தி:
அறிகின்ற நான்என் றறிந்துகொண் டேனே.

பொழிப்புரை :   `நான் எது` என்று தொடங்கி, முப்பத்தாறு தத் துவங்களையும் நிலம் முதல் நாதம் ஈறாக, ஒவ்வொன்றாக ஆராய்ந்து வந்தபொழுது, அவை அனைத்துமே சடமாய் இருத்தலால், `யான்` என்றும், `எனது` என்றும் உணரும் உணர்வுகளையுடைய நான் அவை களில் ஒன்றேனும் அல்லாமை புலப்பட்டது. ஆயினும் `அவ்வுணர் வினையுடைய நான் எது` என உணர இயலாமலே திகைத்திருந்தேன். அப்பொழுது நந்தி பெருமான், `முப்பத்தாறு தத்துவங்களும் சடம்` என்றும், `நான் அவைகளில் ஒன்றேனும் அல்லேன்` என்றும் உணர்ந்தது எது? அதுதான் நீ என்று உணர்த்தினார். அதன் பின் நான் அவ்வாறே உணர்ந்து மெய்யுணர்வு உடையனாயினேன்.
**********************************************
பாடல் எண் : 15
சாக்கிர சாக்கிர மாதிதனில் ஐந்தும்
ஆக்கு மாலவத்தை ஐந்தும் நனவாதி
போக்கிச் சிவத்தொடும் பொய்யான ஆறாறும்
நீக்கி நெறிநின்றோன் தானாகி நிற்குமே.

பொழிப்புரை :   சகலத்தில் சகலமாகிய சகலசாக்கிரத்திற்றானே நிகழும் சாக்கிரம் முதலிய ஐந்தையும், ஆணவத்தாலே ஆக்கப் படுகின்ற கேவல சாக்கிரம் முதலிய ஐந்தையும் அவை நிகழாதபடி, முதலாவதாகச் சொல்லப்படுகின்ற சகல சாக்கிரத்தில் உறைத்து நிற்கு மாற்றானே போக்கிச் சிவத்தோடும் திருவருள் வழியில் நிற்பவன், சடம் ஆதலின் நிலையின்றித் தோன்றியழிவனவாகிய முப்பத்தாறு தத்துவங்களுட்பட்டு, தத்துவான்மாவாய் நில்லாது, அவற்றின் நீங்கிச் சுத்தான்மா ஆவான்.
**********************************************
பாடல் எண் : 16
ஆணவ மாதிமலம் ஐந்(து) அலரோனுக்(கு)
ஆணவ மாதிநான் காம்மாற்(கு) அரனுக்கு
ஆணவ மாதிமூன்(று) ஈசர்க்(கு): இரண்டென்ப
ஆணவம் ஒன்றே சதாசிவர்க் கானதே.

பொழிப்புரை :   (பஞ்ச மலங்களும், `ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி` என்னும் முறையில் வைத்துச் சொல்லப்படும். இவற்றுள் மறைத்தல் தொழிலைச் செய்வதில் தலைமை பெற்று நிற்பது திரோதாயியே. அதனால்), பிரமன் சிவனைச் சிறிதும் உணராதவன் ஆகலின் அவனைப் பஞ்ச மலங்களையும் உடையவனாகவும், மாயோன் சிவனைச் சிறிது அறிந்தவன் ஆகலின் அவனை, திரோதாயி ஒழிந்த ஏனை நான்கு மலங்களை உடையவனாகவும், மாயோன் சிவனைச் சிறிது அறிந்தவன் ஆகலின் அவனை, திரோதாயி ஒழிந்த ஏனை நான்கு மலங்களை உடையவனாகவும், சீகண்ட ருத்திரன் பிரளயாகலன் ஆகலின் அவனைத் திரோதாயி, மாயேயம் - இவை யொழிந்த மூன்று மலங்களே உடையவனாகவும், வித்தியேசுரர் மந்திர மகேசுரர் முதலியோர் விஞ்ஞானகலர் ஆயினும் அதிகார மலம் நீங்கா மையால் ஆணவத்தோடு, கன்மமும்கூட, இரண்டு மலங்களை யுடையவர்களாகவும், அணு சதாசிவர்கள் அதிகார மலம் நீங்கினும் போக மலம் நீங்காமையால் ஆணவம் நீங்கப் பெறாது அஃது ஒன்றனையே உடையவர்களாகவும் கூறலாம்.
**********************************************

எட்டாம் தந்திரம் - 5. அத்துவாக்கள்பாடல்கள் : 003
பாடல் எண் : 1
தத்துவம் ஆறாறு தன்மனு ஆறைந்து
மெய்த்தகு வன்னம்ஐம் மானொன்று மேதினி
ஒத்திரு நூற்றிரு பான்நான்(கு) எண்பானொன்று
வைத்த பதம்கலை ஓரைந்தும் வந்தவே.

பொழிப்புரை :   ஆறத்துவாக்களில், `தத்துவம் முப்பத்தாறு` என்பது முன்பே குறித்து, விளக்கம் தரப்பட்டது. (எனவே, அஃது இங்கு நினை வூட்டும் அளவே கூறப்பட்டதாம்.)
**********************************************
பாடல் எண் : 2
நாடிய மண்டலம் மூன்றும் நலம்தெரிந்(து)
ஓடும் அவரோ(டு) உள்இருபத் தைந்தும்
கூடினர் கூடிக் குறிவழி யேசென்று
தேடினர் தேடித் திகைத்திருந் தார்களே.

பொழிப்புரை :   (அத்துவாக்களைத் தரிசிக்க, அஃதாவது உள்ளபடி நேரிலே காண விரும்பியவர்கள் பிராசாத நெறியில் நின்று) உடம்பிலே கீழிருந்து பாவிக்கப்படுகின்ற நெருப்பு மண்டலம், நீர் மண்டலம், நிலா மண்டலம் - என்னும் மூன்று மண்டலங்களை உள்ளே உணர்ந்து இடை கலை, பிங்கலை வழியாக ஓடுகின்ற அந்தத் துணைவரோடு தாமும் ஓடித் தூல சூக்கும தத்துவங்களாகிய இருபத்தைந்து தத்துவங்களைக் கண்டார்கள். அதன் பின்பு அந்தத் துணைவரால் ஆகாமையின், குரு காட்டிய அந்தக் குறியான வழியிலே சென்று பர தத்துவங்களைத் தேடினர். அவ்வாறு தேடியும் அவை தரிசனப்படாமையால், ஒன்றும் தோன்றாது திகைத்து நின்றுவிட்டார்கள்.
**********************************************
பாடல் எண் : 3
சாக்கிர சாக்கிர மாதித் தலையாக்கி
ஆக்கிய தூலமள வாக்கிஅ தீதத்துத்
தாக்கிய அன்பான தாண்டவம் சார்ந்தது
தேக்கும் சிவமாதல் ஐந்தும் சிவாயமே.

பொழிப்புரை :  `நமசிவாய` என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை (ஏனைக் கிரியா மந்திர யோக மந்திரங்களைப் போல எண்ணாமல், உண்மையை அனுபவமாக உணர்விக்கும் ஞான மந்திரமாகக் கொண்டு) சகலசாக்கிரத்தில் (சகலஐந்தவத்தைகள் நிகழாதவாறு தடுத்து,) ஞானவத்தைகளாகிய சுத்த சாக்கிரம் முதலியனவே நிகழுமாறு, அந்தச் சாக்கிரம் முதலிய ஐந்திலும் ஐந்து வகையாகச் சுத்த மானதம் ஆகிய அறிவினாலே கணித்து, ஆதாரங்கள் ஆறும், அவற்றிற்கு மேல் ஏழாவதாகிய நிராதாரமும் உடம்பளவினவாய் நீங்க, உடம்பைக் கடந்த துவாதசாந்தமாகிய மீதானத்தில் சென்று பொருந்திய அன்பே வடிவாய் நிகழும் திருக்கூத்தை உயிர் சென்று அடைவதே, எல்லையில் இன்பத்தைச் சிவம் பெருக்கி, அதற்கு வழங்குகின்ற சிவமாம் நிலையாகும்.
**********************************************
 
மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!