http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Saturday 2 February, 2013

திருமந்திரம்-தந்திரம்08: பதிகம் 13. நின்மலாவத்தை – பாடல்கள்: 51 பகுதி-I



பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

==============================================
எட்டாம் தந்திரம்:பதிக எண்:01: உடலில் பஞ்சபேதம்..பாடல்கள்: 018 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:02: உடல் விடல்.................பாடல்கள்: 003  
 எட்டாம் தந்திரம்:பதிக எண்:03: அவத்தை பேதம்.............பாடல்கள்: 025 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:04: மத்திய சாக்கிராவத்தை .பாடல்கள்: 016
எட்டாம் தந்திரம்:பதிக எண்:05: அத்துவாக்கள்....................பாடல்கள்: 003 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:06: சுத்த நனவாதி பருவம் .பாடல்கள்: 040
எட்டாம் தந்திரம்:பதிக எண்:07: கேவல சகலசுத்தம்.......பாடல்கள்: 042 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:08: பராவத்தை..........................பாடல்கள்: 026  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:09: முக்குண நிற்குனங்கள்.பாடல்கள்: 001 

எட்டாம் தந்திரம்:பதிக எண்:10: அந்தாதி பேதம்................பாடல்கள்: 002 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:11:பதினொன்றாந்தானமும் `அவத்தை` எனக்காணல் பாடல்கள்:003 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:12:கலவு செலவுகள் – பாடல்கள்:002எட்டாம் தந்திரம்:பதிக எண்:13: நின்மலாவத்தை...........பாடல்கள்: 051 
==============================================  
தந்திரம் 8- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -013
கூடுதல் பாடல்கள்  (181+051=232)

==============================================  
எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தைபாடல்கள்: 51 - பகுதி I
பாடல் எண் : 1
ஊமைக் கிணற்றகத் துள்ளே உறைவதோர்
ஆமையின் உள்ளே அழுவைகள் ஐந்துள
வாய்மையி னுள்ளே வழுவா தொடுங்குமேல்
ஆமைமென் மேலும்ஓர் ஆயிரத் தாண்டே.

பொழிப்புரை : [இம்மந்திரம் ஒட்டணி பெற்றது.]
ஊமைக் கிணறு - வாய் இல்லாத கிணறு. அஃதாவது, தோண்டப்படாமல் நிலத்தினுள்ளே கிடக்கின்ற நீர்நிலை. என்றது கேவல நிலையை. ஆமை, கேவலத்தில் கிடக்கும் ஆன்மா. அழுவை - அழுவம்; பள்ளம். பள்ளங்கள் ஐந்தாவன, கேவலம், சகலத்திற் கேவலம், சகலத்திற் சகலம், சகலத்தில் யோகம், சகலத்தில்ஞானம்` என்னும் காரண அவத்தைகள், அவற்றுள், `வாய்மை` என்னும் பள்ளம் சகலத்தில் ஞானம். இதுவே நின்மலாவத்தை. இதனை அடைந்த ஆன்மா நித்தியமாம் தன்மையைப் பெறும்.
**********************************************

பாடல் எண் : 2
கால் அங்கி நீர் பூக் கலந்தஆ காயமே
மால் அங்கி ஈசன் பிரமன் சதாசிவன்
மேல் அஞ்சும் ஓடி விரவவல் லார்கட்குக்
காலனும் இல்லை கருத்தில்லை தானே.

பொழிப்புரை : `நிலம், நீர், தீ, காற்று, வானம்` என்னும் ஐம்பூதங்களும் முறையே பிரமன், மால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன் என்னும் ஐவர்களாலேதான் தொழிற்படுகின்றன. ஆகவே அந்த ஐவரையும் ஆதார யோகத்தால் `சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை` என்னும் ஆதாரங்களில் முறையாகக் கண்டு, பின்நிராதாரத்தை அடைய வல்லவர்கட்கு இறப்பும் இல்லை. வாழ்வில் உணர்வும் இல்லையாம்.
**********************************************

பாடல் எண் : 3
ஆன்மாவே தன்மைந்த னாயினன் என்பது
தான்மா மறைஅறை தன்மை அறிகிலர்
ஆன்மாவே மைந்தன் அரனுக்(கு) இலனென்றால்
ஆன்மாவும் இல்லையால் ஐயைந்தும் இல்லையே.

பொழிப்புரை : `உயிர்கள் அனைத்திற்கும் சிவன் தந்தை` என்பதும், `சித்தி தாய்` என்பதும் வேதாகமங்களில் எங்கும் முழங்கும் முழக்க மாதலை அறியாது சிலர் ஆன்மாவை, `தாயும் இலி; தந்தையிலி` என்கின்றார்கள். அஃது உண்மையாயின், சடப்பொருள்களாகிய தத்துவங்களும், அவற்றைக் கொண்டு ஆன்மாக்கள் உலகில் பிறந்து வினைகளை நுகர்ந்தும் ஈட்டியும், பின்பு இறந்தும் செல்லும்நிலை இல்லையாகவேண்டும்.
**********************************************

பாடல் எண் : 4
உதயம் மழுங்கல் ஒடுங்கல்இம் மூன்றின்
கதிசாக் கிரம்கன வாதி சுழுத்தி
பதிதரும் சேதனன் பற்றாத் துரியத்(து)
அதிசுப னாய்அனந் தானந்தி யாகுமே.

பொழிப்புரை : அறிவு உதயசூரியன் போலத் தோன்றி விளங்குதலும், அவ்வாறின்றி மேகங்களால் மறைக்கப்பட்ட சூரியனைப் போல மழுங்கி நிற்றலும், அத்தமித்த சூரியன்போல ஒடுங்கியிருத்தலும் ஆகிய இவையே பெத்தத்தில் நிகழும் சாக்கிர சொப்பன துரியங்களாகும். ஆகவே, `அவற்றின்பின் நிகழும் துரியமும் அறிவுசெயற்படாது அடங்கிக் கிடக்கும் நிலை` என்பது சொல்ல வேண்டா. இந்தப் பெத்தநிலை அவத்தைகளை விடுத்துச் சுத்தநிலை அவத்தையை ஒருவன் எய்துவானாயின்` அவன் மிக நன்மையை அடைந்தவனாய், எல்லையில்லாத ஆனந்தத்தை யுடையவனாவான்.
**********************************************

பாடல் எண் : 5
எல்லாம்தன் னுட்புக யாவுளும் தானாகி
நல்லாம் துரியம் புரிந்தக்கால் நல்லுயிர்
பொல்லாத ஆறாறுட் போகாது போதமாய்ச்
செல்லாச் சிவகதி சென்றெய்து மன்றே.

பொழிப்புரை : சட உலகங்கள் யாவும் தனக்குள் அடங்கியிருக்க, சிவஞானத்தால் எல்லாப் பொருளையும் ஒருங்கேயறியும் தன்மை யுடையவன் ஆகின்ற அத்தகைய நல்ல துரியத்திலே தங்கும் நிலையை ஓருயிர் அடைந்துவிட்டால் அது நல்ல உயிராகும், பின்பு அது பிறவியாகிய தீமையை விளைவிக்கின்ற முப்பத்தாறு தத்துவங்களில் செல்லாது. முன்பெல்லாம் சடங்களாகிய அவற்றிற்சென்று அவையேயாய் இருந்ததுபோல் இல்லாமல் அவற்றின் நீங்கி அறிவுப் பொருளாய், செல்லாது செல்வதாகிய சிவகதியை அடையும்.
**********************************************

பாடல் எண் : 6
காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும்
வாய்ந்த கனலென வாதனை நின்றாற்போல்
ஏய்ந்த கரணம் இறந்த துரியத்தும்
தோய்ந்த கருமத் துரிசக லாதே.

பொழிப்புரை : நெருப்பில் காய்ந்து நெருப்பாகவே இருந்த இரும்பு நெருப்பை விட்டு நீங்கினால் நெருப்பாய் இராமல் இரும்பாகவே இருக்கும். இருப்பின் நெருப்பின் சூடு விரைவில் ஆறிவிடாது; இருக்கவே செய்யும். அதுபோல நின்மல சாக்கிர சொப்பன சுழுத்திகளோடு தத்துவங்களின்றும் ஆன்மா நீங்கியபோதிலும் துரியத்திலும் அவற்றில் முன்பு மூழ்கியிருந்த வாசனை இருக்கவே செய்யும்.
**********************************************

பாடல் எண் : 7
ஆன மறையாதி யாம்உரு நந்திவந்து
தேனை யருள்செய் தெரிசனா வத்தையில்
ஆன வகையை விடும் அடைந் தாய்விட
ஆன மலாதீதம் அப்பரந் தானே.

பொழிப்புரை : வேதம் முதலாகிய சொல்லுலகங்களையும், மற்றும் பொருள் உலகங்களையும் தனது வடிவமாகக் கொண்டுள்ள சிவன் புலப்பட்டு நின்று, தனது திருவருளாகிய தேனை வழங்குகின்ற நின்மலாவத்தையில் கடக்க வேண்டிய சாக்கிரம் முதல் நான்கையும் கடந்து முடிந்தபின் துரியாதீதமே பாரவத்தையாய் விளங்கும்.
**********************************************
பாடல் எண் : 8
சுத்த அதீதம் சகலத்தில் தோய்வுறில்
அத்தன் அருள்நீங்கா(து) ஆங்கணில்தான் ஆகச்
சித்த சுகாவத்தை தீண்டாச் சமாதிசெய்
அத்தனொ டொன்றற் கருள்முத லாகுமே.

பொழிப்புரை : மத்தியாலவத்தையிற்றானே நின்மல துரியாதீத நிலை (இதுவே `சாக்கிரத்தில் அதீதம்` எனப்படுவது) தோன்ற, ஆன்மா அதிலே நிலைத்திருக்குமாயின், சிவனது திருவருள் அதனை விட்டு நீங்காது. அந்நிலையில் நீ பராவத்தையை அடைவதற்குச் சித்த சலனத்தால் பற்றக்கூடிய உலகியல் நிலை வந்து சிறிதும் தீண்டாதபடி சமாதி நிலையில் நில். அப்பொழுது முன் சொன்ன திருவருள் உன்னைச் சிவனோடு ஒன்றுபடுத்தும்.
**********************************************

பாடல் எண் : 9
வேறுசெய் தான்இரு பாதியின் மெய்த்தொகை
வேறுசெய் தான்என்னை எங்கணும் விட்டுய்த்தான்
வேறுசெய் யாஅருட் கேவலத் தேவிட்டு
வேறுசெய் யாஅத்தன் மேவிநின் றானே.

பொழிப்புரை : எவ்வுயுரினின்றும் தன்னை வேறுபடுத்திக் கொள்ளாது, அதனோடு ஒன்றாகியே, அதற்கு அப்பனாகியும் இருக்கின்ற சிவன். எவ்வுலகிலும் உள்ள உடற்கூட்டத்தை `ஆண், பெண்` என இருசமபாதிகளாகப் பிரித்து வைத்துள்ளான். என்னையும் தன்னினின்றும் வேறுபடுத்தி, அத்தகையனவாகிய உடம்புகள் உள்ள அனைத்திடங்களிலும் செல்லவிடுத்து, அந்த உடம்புகளுக்குள்ளே புகுத்தினான். பின்பு தன்னினின்றும் என்னை வேறுபடுத்தாது ஒன்றாக்கிக் கொள்கின்ற அருட்கேவலத்திலே செலுத்தி, என்னோடு பொருந்தி நிற்கின்றான்.
**********************************************

பாடல் எண் : 10
கறங்கோலை கொள்ளியின் வட்டம் கடலில்
நிறஞ்சேர் திரைதயிர் மத்தின் மலத்தே
அறம்காண் சுவர்க்கம் நரகம் புவிசேர்ந்(து)
இறங்கா உயிர்அரு ளால்இவை நீங்குமே.

பொழிப்புரை : உயிர்கள் காற்றாடியில் உள்ள ஓலைகளைப் போலவும் கொள்ளியைச் சுழற்றுங்காலத்தில் தோன்றுகின்ற வட்ட வடிவுபோலவும், கடலில் அலைகள் போலவும், தயிரைக்கடையும் மத்தைப்போலவும் `மேல், கீழ், நடு` என்னும் மூன்றுலகங்களிலும் விரையச் சென்று மீண்டு மீண்டு, ஆழ்குழிப்பட்டுத் துன்புற்று, சிவன் அருள்புரிந்தபொழுது அவ்வருளால் ஆழ்குழிகளாகிய இவற்றினின்றும் மீண்டு கரையேறி, அவனை அடைந்து இன்புறும்.
**********************************************

பாடல் எண் : 11
தானே சிவமான தன்மை தலைப்பட
ஆன மலமும்அப் பாசபே தங்களும்
ஆன குணமும்ப ரான்மா உபாதியும்
பானுவின் முன்மதி போல்பட ராவே.

பொழிப்புரை : `ஆன்மாவே சிவம்` என்று சொல்லத்தக்க நிலையை ஆன்மா அடைந்தபின், அநாதியே பொருந்திய சகசமலமாகிய ஆணவமும், அதனை முன்னிட்டு வந்த, `மாயை` கன்மம், மாயேயம், திரோதாயி, என்னும் பாசவேறுபாடுகளும் அவற்றிற்கு உரியவாய் ஆன்மாவினிடத்து விளங்கிய இழிகுணங்களும், இவை நீங்கினாலும் நீங்கப் பெற்ற சுத்தான்மாவிடத்திலும் பின்னும் நிற்கின்ற இவற்றின் வாசனைகளும் சூரியன்முன் சந்திரன் போல அடங்கி ஒடுங்கிவிடும். (வாதிக்கமாட்டா` என்றபடி).
**********************************************

பாடல் எண் : 12
நெருப்புண்டு நீருண்டு வாயுவும் உண்டங்(கு)
அருக்கனும் சோமனும் அங்கே அமரும்
திருத்தக்க மாலும் திசைமுகன் றானும்
உருத்திர சோதியும் உள்ளத் துளாரே.

பொழிப்புரை : [இதன்பொருள் வெளிப்படை]
குறிப்புரை : `உள்ளம்`, ஏற்புழிக்கோடலால், `யோகியர் உள்ளம்` என்க. ஏனையோர்க்கு அப்பாவனை இல்லாமையறிக. `நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன் என்றாற்போல்வனவும் இக்கருத்தே பற்றி வரும் என்க. செய்யுளாகலின் உள்ளத்தைச் சுட்டும் `அங்கு` என்பது முன்னே வந்தது. `தத்துவ தாத்துவிகங்களும், அவற்றைச் செலுத்தும் கடவுளரும் யோகபாவனையால் கடக்கத்தக்கவர்கள்` என்பதை உணர்த்தும் முகத்தால் யோகத்தை விதித்தவாறு.  இதனால், நின்மலாவத்தைக்கு உரிய வாயிலின் சிறப்புக் கூறப்பட்டது.
**********************************************

பாடல் எண் : 13
ஆனைகள் ஐந்தும் அடக்கி அறிவென்னும்
ஞானந் திரியில் கொளுவி அதனுட்புக்(கு)
ஊனை இருளற நோக்கும் ஒருவற்கு
வானகம் ஏற வழிஎளி தாகுமே.

பொழிப்புரை : (இதன் பொருளும் வெளிப்படை)
குறிப்புரை: அறிவு என்னும் ஞானம் - அறிவுகளில் எல்லாம் மேலானமை பற்றி, `அறிவு` என்றே சொல்லப்படுகின்ற மெய்யறிவு. நாயனாரது நோக்கில் அது சிவஞானமே. ``திரி`` என்றது உயிர் அறிவை. ``உயிர் எனும் திரி மயக்கி`` என்பதிலும் ``உயிர்`` என்பது அப்பொருட்டு. ஞானத்தை - தீ - என்னாதது ஏகதேச உருவகம். உயிரை, `திரி` என்றே கூறியது சிறப்புருவகம். ``அதனுட்புக்கு ஊனை நோக்கும்`` என்றதை, `ஊனுட்புக்கு அதனை நோக்கும்` எனக் கொள்க. இருளற நோக்கியவழி முன் புலப்படாதிருந்தவை புலப் படுதல் போல, ஊனை இருளற நீக்கினால் முன் மந்திரத்திற் கூறியன எல்லாம் விளங்கும் ஆகலின், ``வானகம் ஏற வழி எளிதாமே`` என்றார். ``வானகம்`` என்றது, யோகத்திற்கு அப்பாற்பட்ட நின்மலா வத்தையை,
``உடம்பெனும் மனைய கத்துள் உள்ளமே தகளி யாக,
மடம்படும் உணர்நெய் யட்டி உயிரெனுந் திரிம யக்கி,
இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கில்,
கடம்பமர் காளை தாதை கழலடி காண லாமே``   -திருமுறை - 4.75.4.
என்று அருளினமையை நோக்குக. மடம்படும் உணர் - பசு போதம்.
இதனால், `மேல் குறிப்பால் உணர்த்திய யோகம் சிவயோகம் ஆதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.
**********************************************

பாடல் எண் : 14
ஆடிய காலின் அசைக்கின்ற வாயுவும்
தாடித் தெழுந்த தமருக ஓசையும்
பாடி யெழுகின்ற வேதா கமங்களும்
நாடியி னுள்ளாக நான்கண்ட வாறே.

பொழிப்புரை : நான் எனது விருப்பப்படியே விட்டும், வாங்கியும் இயக்குகின்ற பிராணவாயுவையும், மிகுத்தெழுக்கின்ற தமருக ஓசையையும், வல்லுநர்கள் பாடுதலால் எழுகின்ற வேதாகம ஒலிகளையும், நான் கண்ட முறை, சுழுமுனா நாடியினுள்ளாக, நடனத்தில் தூக்கிய காலின் கீழாம்.
**********************************************

பாடல் எண் : 15
முன்னை யறிவினில் செய்த முதுதவம்
பின்னை அறிவினைப் பெற்றால் அறியலாம்
தன்னை அறிவ(து) அறிவாம் அஃதன்றிப்
பின்னை அறிவது பேயறி வாகுமே.

பொழிப்புரை : முதலில் நிகழும் அறிவு பெரிய தவஅறிவாயும், பின்னர் நிகழும் அறிவு அந்தத்தவத்தால் வரும் மெய்யறிவாயும் நிகழ்தல் வேண்டும். பின்னை அறிவு மெய்யறிவாய் நிகழ்ந்தவழியே முன்னை அறிவு தவஅறிவாய் நிகழ்ந்தமை அறியப்படும், இல்லையேல், அது வெற்றறிவாக அறியப்படும். முதல் அறிவால் நிகழ்ந்த தவத்தால் பெறத்தக்க அறிவாவது, தன்னை உள்ளவாறு அறியும் அறிவே தன்னை உள்ளவாறு அறியாமல் பிறவற்றை அறியும் அறிவுகள் எல்லாம் மருள் அறிவுகளேயாம்.
**********************************************

பாடல் எண் : 16
செயலற் றிருக்கச் சிவானந்த மாகும்
செயலற் றிருப்பார் சிவயோகம் தேடார்
செயலற் றிருப்பார் செகத்தோடுங் கூடார்
செயலற் றிருப்பார்க்கே செய்திஉண் டாகுமே.

பொழிப்புரை : நின்மல துரியத்தை அடைந்தவர்கட்கே, அதன் பின்னர் ஆனந்த நிலையாகிய அதீதநிலை வாய்க்கும். அதனால் அவர் அந்த அதீத நிலையை அடைய முயலுதலன்றி, முன்சொன்ன சிவயோகத்தைப் புரிய எண்ணமாட்டார்கள். அவ்யோகத்தைப் புரியாமையால், அவர்கள் உலகப்பற்றில் வீழ்ந்துவிடமாட்டார்கள். ஆகவே, சிவானுபவமாகிய செயல் ஞான துரியாதீதத்தை அடைந்தவர்கட் கல்லாது. ஏனைச் சிவயோகிகட்கு உண்டாகமாட்டாது.
**********************************************

பாடல் எண் : 17
தான்அவ னாகும் சமாதிகை கூடினால்
ஆன மலம்அறும் அப்பசுத் தன்மைபோம்
ஈனமில் காயம் இருக்கும் இருநிலத்(து)
ஊனங்கள் எட்டும் ஒழித்தொன்று வோர்கட்கே.

பொழிப்புரை : [கீழாலவத்தை மத்தியாலவத்தைகளை நோக்க, மேலாலவத்தையாகிய யோகாவத்தை நிறைவுடையதேயாம். எனினும், ஞானாவத்தையை நோக்கின் அது குறைவுடையதேயாகும். ஆகையால்] இயமம், நியமம் முதலாக உள்ள அந்த எட்டுறுப்புக் களையும் (சமாதி உட்படக்) கடந்து, நின்மல துரிய நிலையில் ``அவனே தானே ஆகிய அந்நெறி ஏகனாகி நிற்றலாகிய`` அந்தச்சமாதி கைவந்தால்தான் அநாதிதொட்டே பற்றியுள்ள ஆணவமலம் வாசனையும் இன்றி நீங்கும். (அப்பொழுது பின் வந்த மாயை கன்மங்களாகிய பாசங்களும் அவ்வாறாம். ஆகவே, அப்பொழுதுதான்) ஆன்ம, `பசு` என்கின்ற நிலைமை நீங்கப்பெற்று, `சிவம்` எனப்படும் நிலையை எய்தும்.
**********************************************

பாடல் எண் : 18
தொலையா அரனடி தோன்றும்ஐஞ் சத்தி
தொலையா இருள்ஒளி தோற்ற அணுவும்
தாலையாத் தொழில்ஞானம் தொன்மையில் நண்ணித்
தொலையாத பெத்தமுத் திக்கிடை தோயுமே.

பொழிப்புரை : (இருவினையொப்பு மலபரிபாகம் வந்தபொழுது ஆன்ம அறிவில் பதிகின்ற அருட்சத்தியை மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என அதன் தன்மை பற்றி வழங்கப்படுமாயினும் அவை `நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியதீதை` என்னும் சக்தி களின் வகையாகவே சொல்லப்படுகின்றது.l அந்த ஐந்து சக்திகளும் சிவனது திருவடியேயாம். (அருளை `அடி` எனக் கூறுதல் மரபு. அதனால், சத்தி நிபாதத்தில் உண்டாகின்ற ஞானமும் `திருவடி ஞானம்` என்றே கூறப்படும்). அந்த ஞான ஒளி தோன்றியவுடன், அநாதி தொட்டு விடாது பற்றி நிற்கின்ற ஆணவ இருள் நீங்கும். அது நீங்கவே, ஆன்மாவிற்கு இயல்பாய் உள்ள இச்சாஞானக்கிரியா சத்திகள் (ஆணவத்தால் தடுக்கப்பட்டிருந்தனவேயன்றி, அழிக்கப் படாமையால்) விளக்கம் பெற்று ஆன்மாத் தனது இயற்கை நிலையை அடையும். அடைந்த பொழுது முதற்கண் முற்றும் நீங்காத பெத்தமும் அது முற்றும் நீங்கிய முத்தியும் என்னும் இரண்டற்கும் இடைநிலையில் ஆன்மா இருக்கும்.
**********************************************

பாடல் எண் : 19
தோன்றிய பெத்தமும் முத்தியும் சூழ்சத்தி
மான்றும் தெருண்டும் உயிர்பெறும் மற்றவை
தான்றரும் ஞானந்தன் சத்திக்குச் சத்தன்றான்
ஊன்றல்இல் லாஉள் ளொளிக்கொளி யாகுமே.

பொழிப்புரை : உயிர்கள் அவற்றைச் செலுத்துகின்ற சிவசத்தியின் தன்மைக்கு ஏற்ப மயக்க உணர்வைப் பெற்றுப் பெத்தத்தையும், மெய் உணர்வைப் பெற்று முத்தியையும் ஏனெனில், அந்த `மயக்கம், மெய்` என்னும் இரண்டையும் உயிர்கட்குத் தருகின்ற ஞானமாகிய தன் சத்திக்குச் சத்தனாய் உள்ள சிவன், ஒரு பெற்றியில் நில்லாது இருவேறாய் நிற்கின்ற அந்தச் சத்திக்கு உயிராய் நின்று அதனைச் செலுத்துவன் ஆதலின்.
**********************************************

பாடல் எண் : 20
அறிகின் றிலாதன ஐயேழும் ஒன்றும்
அறிகின்ற என்னை அறியா திருந்தேன்
அறிகின்றாய் நீஎன் றருள்செய்தான் நந்தி
அறிகின்றேன் நான்என் றறிந்துகொண் டேனே.

பொழிப்புரை : தத்துவங்கள் முப்பத்தாறினையும், அவை தாமே அறிந்தும், செய்தும் வருவனவாக மயங்கி, உண்மையில், `அவற்றைக் கருவிகளாகக் கொண்டு அறிபவனும்` செய்பவனும் நான்தான்` என்பதையான் பெத்த காலத்தில் அறிந்து கொள்ளாமலே மயங்கியிருந்தேன். பின்பு நந்திபெருமான், மேற்குறித்த உண்மையை எனக்கு அறிவுறுத்தருளினார். அந்த உண்மையை அங்ஙனமே அறிந்து கொண்டமையால், முத்தனாயினேன்.
**********************************************

பாடல் எண் : 21
தான்அவன் ஆகியன் ஞானத் தலைவனை
வானவர் ஆதியை மாமணிச் சோதியை
ஈனமில் ஞானத்(து) இன்னருட் சத்தியை
ஊனம் இலாள்தன்னை ஊனிடைக் கண்டதே.

பொழிப்புரை : தான் `சீவன்` என்கின்ற நிலைமை நீங்கி, `சிவன்` என்கின்ற நிலைமையை அடைந்த பெரியோன் சிவன் சத்தி இருவனாயும் நேரே கண்டது தன்னுடையே உடம்பிற்குள்ளேயாகும்.
**********************************************

பாடல் எண் : 22
ஒளியும் இருளும் பரையும் பரையுள்
அளிய தெனலாகும் ஆன்மாவை யன்றி
அளியும் அருளும் தெருளும் கடந்து
தெளிபவ ருள்ளே சிவானந்த மாமே.

பொழிப்புரை : ஆணவ இருளைச் சிறிதே நீக்குவனவாகிய மாயா காரியக் கருவிகளும் அவற்றால் சிறிதே நீக்கப்படுகின்ற ஆணவ இருளும், அதனை நீக்க உதவுகின்ற சிவசத்தியும் அச்சத்தியால் காப்பாற்றப்படும் ஆன்மாவும் ஆகிய இவைகளை முறையாக முன்னர் உணர்தல் வேண்டும். (அவ்வாறு உணர்தலே அரிது. ஆயினும்) அதன்பின் அவற்றோடு நில்லாது ஆன்மாவின் எளிய நிலையையும், அந்நிலையை உணர்ந்து சிவன் அதன்மேல் கொள்ளும் இரக்கத்தையும், அவ்விரக்கத்தால் ஆன்மாவிற்கு உண்டாகின்ற அனைத்துப் பொருள்களையும் பற்றிய உண்மையான உணர்வின் சிறப்பையும் உணர்ந்து, பின் பல பொருள் உணர்வை விடுத்துச் சிவன் ஒருவனையே உணர்கின்ற உணர்வு உண்டாகுமானால், அதன் பின்பே சிவனது பேரின்பம் ஆன்மாவிற்கு உளதாகும்.
**********************************************

பாடல் எண் : 23
ஆனந்த மாகும் அரன்அருட் சத்தியில்
தான்அந்த மாம்உயிர் தானே சமாதிசெய்(து)
ஊன்அந்த மாய்உணர் வாய்உள்ளுணர்வுறின்
கோன்அந்தம் வாய்க்கும் மகாவாகியம் ஆமே.

பொழிப்புரை : `சிவானந்தம்` என்பதும் சிவனது அருட்குணங்களில் ஒன்றேயாம். (வரம்பில் இன்பம்) ஆகவே, அச்சத்தி வழியாக ஞான நிலைகளில் முடிநிலையை அடைந்த உயிர் பின் சிவத்திலே அழுந்தி, ஐவகை உடம்புகளினின்றும் நீங்கி, அறிவே வடிவாய், அந்த அறிவுக்கு அறிவாய் உள்ள சிவத்திலேயே பிரிதல் இன்றி நிற்குமாயின் சிவனை முற்றும் பெறுதலாகிய மிகப்பெரிய பேறு உளதாகும்.
**********************************************

பாடல் எண் : 24
அறிவிக்க வேண்டா அறிவற் றவர்க்கும்
அறிவிக்க வேண்டா அறிவுற் றவர்க்கும்
அறிவுற்ற றறியாமை எய்திநிற் போர்க்கே
அறிவிக்க தம்அறி(வு) ஆர்அறி வாரே.

பொழிப்புரை : அறிவித்தாலும் அறியும் தன்மையில்லாத அபக்குவர்க்கும் குருவின் உபதேசம் ஏற்புடையதன்று; (பயன் இன்மையால்) முற்பிறவியிலே கேட்டுச் சிந்தித்துத் தெளிந்தும் நிட்டை கூடாது விட்டமையால் கருவிலே திருஉடையவராய்ப் பிறந்து, ஞானத்தின் திருவுருவாயே நிட்டையை வேண்டி நிற்பவர்க்கும் குருஉபதேசம் வேண்டுவதன்று. எனவே அறிவித்தால் அறியும் பக்குவம் உடையவராய் அறிவிப்பாரை நாடிநிற்கும் அவர்கட்கே ஞான குரவர் உபதேசத்தைச் செய்வராக. பக்குவம் வாய்ப்பினும் தம்மையும், தலைவனையும் குருஉபதேசத்தாலன்றித் தாமாகவே அறிபவர் உலகில் யார் இருக்கின்றார்கள்? (ஒருவரும் இல்லை).
**********************************************

பாடல் எண் : 25
சத்தும் அசத்தும் சதசத்தும் தாம்கூடிச்
சித்தும் அசித்தும் சிதசித்து மாய்நிற்கும்
சுத்தம் அசுத்தம் தொடக்காத் துரியத்துச்
சுத்தராய் மூன்றுடன் சொல்லற் றவர்கட்கே.

பொழிப்புரை :  சகலத்தில் சுத்தமாகிய மேலாலவத்தையும், (யோகாவத்தையும்) சகலத்திற் சகலமாகிய மத்தியாலவத்தையும், சகலத்தில் கேவலமாகிய கீழாலவத்தையும் ஆகிய இவைகளின் தொடர்புகள் சிறிதும் இல்லாது நீங்கிய நின்மல துரியத்தில் நிற்றலால் சுத்தான்மாக்களாய், சொல் நிகழ்ச்சி அத்துரியத்திற்கு முற்பட்ட, `சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி` என்னும் மூன்றோடே நீங்கப் பெற்றவர்கட்கு, சத்தாய் உள்ள சிவமும், அசத்தாய் உள்ள பாசங்களும், சதசத்தாய் உள்ள ஆன்மாவும் முறையே சித்தும், அசித்தும், சிதசித்தும் ஆதல் முற்ற அனுபவமாய் விளங்கும்.
**********************************************

பாடல் எண் : 26
தானே அறியான் அறிவிலோன் றானல்லன்
தானே அறிவான் அறிவு சதசத்தென்
றானால் இரண்டும் அரனரு ளாய்நிற்கத்
தானே யறிந்து சிவத்துடன் தங்குமே.

பொழிப்புரை : புருடன், (ஆன்மா) பிறிதொரு பொருள் அறிவியாமல் தானாகவே ஒன்றையும் அறியும் தன்மையுடையனல்லன்; அதனால், அவன் அறிவில்லாத சடப்பொருளும் அல்லன். (`அறிவித்தால் அறிவான்` என்றபடி). இத்தன்மை உடைய இவன், பிறர் அறிவிக்க வேண்டாது, தானே எல்லாவற்றையும் அறிபவனாகிய சிவனது அறிவைக்கொண்டு தன்னை முன்மந்திரத்திற் கூறியவாறு, `சதசத்து` என அறிவானாயின்` அப்பொழுது இவனும், இவனால் சாரப்பட்ட கருவித்தொகுதியும் சிவனது அருளாகியே நிற்கும். (`இவனும் சிவமாகி, இவனது கரணங்களும் சிவகரணமாய்விடும்` என்றபடி). அங்ஙனம் நிற்கவே, முன்பு அசித்தோடு கூடி அசித்தாய் இருந்த, அல்லது ஏகதேசமாய் அறியும் சிற்றறிவை உடையவனாய் இருந்த இவனே, எல்லாவற்றையும் அறியும் அறிவுடையவனாகிச் சிவத்தோடே கூடி இரண்டற்றிருப்பான்.
**********************************************
மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!