http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Monday 11 February, 2013

திருமந்திரம்-தந்திரம்08: பதிகம் 13. நின்மலாவத்தை – பாடல்கள்: 51 பகுதி-I I





பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
 

பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
==============================================
எட்டாம் தந்திரம்:பதிக எண்:01: உடலில் பஞ்சபேதம்..பாடல்கள்: 018 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:02: உடல் விடல்.................பாடல்கள்: 003  
 எட்டாம் தந்திரம்:பதிக எண்:03: அவத்தை பேதம்.............பாடல்கள்: 025 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:04: மத்திய சாக்கிராவத்தை .பாடல்கள்: 016
எட்டாம் தந்திரம்:பதிக எண்:05: அத்துவாக்கள்....................பாடல்கள்: 003 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:06: சுத்த நனவாதி பருவம் .பாடல்கள்: 040
எட்டாம் தந்திரம்:பதிக எண்:07: கேவல சகலசுத்தம்.......பாடல்கள்: 042 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:08: பராவத்தை..........................பாடல்கள்: 026  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:09: முக்குண நிற்குனங்கள்.பாடல்கள்: 001 

எட்டாம் தந்திரம்:பதிக எண்:10: அந்தாதி பேதம்................பாடல்கள்: 002 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:11:பதினொன்றாந்தானமும் `அவத்தை` எனக்காணல் பாடல்கள்:003 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:12:கலவு செலவுகள் – பாடல்கள்:002 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:13: நின்மலாவத்தை...........பாடல்கள்: 051 
==============================================  
தந்திரம் 8- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -013
கூடுதல் பாடல்கள்  (181+051=232) 

==============================================  
பாடல் எண் : 26

 
தானே அறியான் அறிவிலோன் றானல்லன்
தானே அறிவான் அறிவு சதசத்தென்
றானால் இரண்டும் அரனரு ளாய்நிற்கத்
தானே யறிந்து சிவத்துடன் தங்குமே.

பொழிப்புரை : புருடன், (ஆன்மா) பிறிதொரு பொருள் அறிவியாமல் தானாகவே ஒன்றையும் அறியும் தன்மையுடைய னல்லன்; அதனால், அவன் அறிவில்லாத சடப்பொருளும் அல்லன். (`அறிவித்தால் அறிவான்` என்றபடி). இத்தன்மை உடைய இவன், பிறர் அறிவிக்க வேண்டாது, தானே எல்லாவற்றையும் அறிபவனாகிய சிவனது அறிவைக்கொண்டு தன்னை முன்மந்திரத்திற் கூறியவாறு, `சதசத்து` என அறிவானாயின்` அப்பொழுது இவனும், இவனால் சாரப்பட்ட கருவித்தொகுதியும் சிவனது அருளாகியே நிற்கும். (`இவனும் சிவமாகி, இவனது கரணங்களும் சிவகரணமாய்விடும்` என்றபடி). அங்ஙனம் நிற்கவே, முன்பு அசித்தோடு கூடி அசித்தாய் இருந்த, அல்லது ஏகதேசமாய் அறியும் சிற்றறிவை உடையவனாய் இருந்த இவனே, எல்லாவற்றையும் அறியும் அறிவுடையவனாகிச் சிவத்தோடே கூடி இரண்டற்றிருப்பான்.
**********************************************
 பாடல் எண் : 27
தத்துவ ஞானம் தலைப்பட் டவர்கட்கே
தத்துவ ஞானம் தலைப்பட லாய்நிற்கும்
தத்துவ ஞானத்துத் தான்அவன் ஆகவே
தத்துவ ஞானானந் தம்தான் தொடங்குமே.

பொழிப்புரை :  மாயாகாரியங்களாகிய கருவிகளின் உண்மையை உணர்ந்தவர்கட்கே மெய்ப்பொருளாகிய சிவத்தை உணரும் உணர்வு கிடைக்கும். அந்த உணர்வானே ஆன்மாச் சிவமாம் தன்மையை அடையும். அதனை அடையவே, அந்தச் சிவஞானமே சிவபத்தி -யாய்ப் பரிணமிக்க, அந்தப் பத்தியால் சிவானந்தம் விளைவதாகும்.
**********************************************
 பாடல் எண் : 28
தன்னை யறிந்து சிவனுடன் தான்ஆக
மன்னும் மலக்குணம் மாளும் பிறப்பறும்
பின்அது நன்முத்தி சன்மார்க்கப் பேரொளி
நன்னர்த்து ஞானத்தின் முத்திரை நண்ணுமே.

பொழிப்புரை : ஆன்மாத் தனது இயல்பை உள்ளவாறறிந்தால் தான் பாசத்துடன் நில்லாது சிவத்துடனே நிற்கும். அவ்வாறு நிற்கும் பொழுதுதான் மலங்களின் சேட்டை ஒழியும். பாசங்களின் சேட்டை ஒழிவே பிறப்பின் ஒழிவாகும். எவ்வாற்றானும் மீண்டும் பிறவி எய்தாத நிலையே முடிநிலைப் பரமுத்தியாகும். மற்றும் அதுவே நன்னெறியாகிய ஞானத்தால் அடையப்படும் பேரறிவுப் பொருளும் ஆகும். அது சின்முத்திரை வழியாகக் கிடைக்கும்.
**********************************************
 பாடல் எண் : 29
ஞானம்தன் மேனி கிரியை நடுஅங்கம்
தானுறும் இச்சை உயிராகத் தற்பரன்
மேனிகொண்(டு) ஐங்கரு மத்துவித் தாதலால்
மோனிகள் ஞானத்து முத்திரைபெற் றார்களே.

பொழிப்புரை : (சிவனுக்கு வடிவமாய் அமைவது. அவனது சத்தியே. அதனை, ``காயமோமாயை அன்று; காண்பது சத்தி தன்னால்l என்னும் சிவஞான சித்தியால் அறியலாம். `அரிதரு கண்ணியாணை ஒருபாகமாக அருள் காரணத்தில் வருவார்``3 என அருளிச் செய்ததும் இதனையே. அவ்வாறு ஆகுமிடத்து.)  ஞானசத்தியே உடல். கிரியாசத்தியே உடலில் உள்ள பல உறுப்புக்கள். இச்சாசத்தியே `உயிர்களை உய்விக்கவேண்டும்` என்னும் கருணையாய் உள்ளிருந்து உந்துவதாய் மேற்கூறியவைகளை இயக்கும் உயிராகும். இவைகளையெல்லாம் கொண்டு அவன் செய்யும் தொழில்கள் ஐந்து. (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்). இங்ஙனம் ஆகலின் அவ்வைந்தொழிலில் இறுதிக்கண்ணதாகிய அருளலை தற்போதம் அற்றிருந்தவர்கள் மட்டுமே பெற்றார்கள் (`பிறரெல்லாம் ஏனை நான்கையே பெறுகின்றனர்` என்பதாம்).
**********************************************
 பாடல் எண் : 30
உயிர்க்கறி வுண்மை உயிர்இச்சை மானம்
உயிர்க்குக் கிரியை உயர்மாயை சூக்கம்
உயிர்க்கிவை யூட்டுவோன் ஊட்டு மவனே
உயிர்ச்செய லன்றிஅவ் வுள்ளத் துளானே.

பொழிப்புரை : [முன்மந்திரத்தில் சிவனுக்கு உள்ளனவாகக் கூறிய ஞான சத்தி இச்சா சத்தி கிரியா சத்திகள் உயிர்கட்கும் உள்ளன, அஃது எவ்வாறு பெறப்படுகின்றது எனின்,], `சடப்பொருள்கட்கு வேறாய் உயிர் உண்டு` என உணரவைப்பதே உயிரினது ஞான சத்திதான், (அஃதாவது, எங்கே அறிவு நிகழ்கின்றதோ அங்கெல்லாம் `உயிர் உள்ளது` என உணரப்படுகின்றது என்பதாம்). இனி, அந்த அறிவு `யான்` எனத் தன்னைப் பற்றியும், `எனதும்` எனப் பிற பொருளைப் பற்றியும் கொள்கின்ற பற்றும் இச்சாசத்தியின் செயலேயாகும், அந்தப் பற்றுக் காரணமாக உயிர் பலவான மாயா காரியப் பொருள்களைச் செயற்படுத்தி, அவற்றால் பயன் உறுவது கிரியா சத்தியின் செயற் பாடே. இவ்வாறு இவை நுட்பமாக ஓர்ந்துணரத்தக்கன. (அங்ஙனம் உணராமல், `உயிர்கட்கு இந்தச் சத்திகள் இல்லை` என்று கருதிவிடுதல் கூடாது). எனினும், உயிர்கட்கு அவற்றின் வினைப்பயன்களை ஊட்டுவிக்கின்ற சிவன் செயற்படுத்தவே இச்சத்திகள் செயற்படும். ஆகையால், உயிர்கள் செய்யும் செயல்கள் அவைகளே தனி நின்று செய்யும் செயல்கள் ஆகாது, அவற்றுள் உயிர்க்கு உயிராய் நிறைந்து நிற்கும் சிவன் செயல்களே ஆகின்றன.
**********************************************
 பாடல் எண் : 31
தொழில்இச்சை ஞானங்கள் தொல்சிவன்சீவர்
கழிவற்ற மாமாயை மாயையின் ஆகும்
பழியற்ற காரணம் காரியம் பாழ்விட்(டு)
அழிவற்ற சாந்தாதீ தன்சிவன் ஆமே.

பொழிப்புரை : `கிரியை, இச்சை, ஞானம்` என்பன சிவனுக்கு என்றும் இயல்பாகவே விளங்கி நிற்கின்றன. `உயிர்கட்கோ` எனின், அவை அனாதியே ஆணவ மலத்தால் மறைக்கப்பட்டுப் பின்பு சிவனால் கூட்டப் பெறுகின்ற சுத்தமாயை அசுத்த மாயைகளின் காரியங்களில் அவை சிறிதே விளங்குகின்றன. சிவன் இந்த மாயைகள், அவற்றின் காரியங்கள், ஆணவம் ஆகிய அனைத்தையும் கடந்து, நிலைத்து நிற்பதாகிய துரியாதீத நிலையில் இருக்கின்றான்.
**********************************************
பாடல் எண் : 32
இல்லதும் உள்ளதும் யாவையும் தானாகி
இல்லதும் உள்ளது மாய்அன்றாம் அண்ணலைச்
சொல்லது சொல்லிடின் தூராதி தூரம்என்(று)
ஒல்லை உணர்ந்தால் உயிர்க்குயிர் ஆகுமே.

பொழிப்புரை : உணருமாற்றால் உணராதவர்களால், `இல்லை` என மறுத்துக் கூறப்படும் பொருளாய் உள்ளவனும், உணருமாற்றால் உணர்ந்தவர்களால், `உண்டு` என நிறுவப்படும் பொருளாய் உள்ளவனும், உலகின்கண், `சூக்குமம், தூலம்` என்னும் இருவகைப் பட்ட எல்லாப் பொருள்களிலும் ``அவையே தானாய்``க்* கலந்து நிற்பினும், அவற்றின் தன்மையைத் தான் எய்தாமையால் அவற்றின் வேறாய் உள்ளவனும் ஆகிய முதல்வனாம் சிவனை வாக்குக் குறிப்பிட முயலுமாயின் அதற்கு எட்டாத நெடுந்தொலைவில் உளன். இவ்வுண்மையை உயிர் எவ்வளவு விரைவாக அவ்வளவு விரைவில் அதன் உள்ளுயிராய் விளங்கி நிற்பான்.
**********************************************
 பாடல் எண் : 33
உயிர்இச்சை ஊட்டி ஒழித்தருள் சத்தி
உயிர்இச்சை வீட்டிமெய் உண்மையை நாட
உயிர்இச்சை கூட்டி உடன்உற லாலே
உயிர்இச்சை வாட்டி உயர்பதம் சேருமே.

பொழிப்புரை : சிவனது சத்தி (உயிர்கள் பக்குவம் எய்தாத பொழுது) அவற்றுக்கு உலகின்மேல் ஆசையை உண்டாக்குதலும், (பக்குவம் எய்திய பொழுது) அவற்றுக்கு அவ்வாசையைப் போக்குதலும் ஆகிய இரு செயல்களைச் செய்யும். (முன்னை நிலையில் திரோதான சத்தியாயும், பின்னை நிலையில் அருட் சத்தியாயும் அது நிற்கும். திரோதானசத்தி, `ஆதி சத்தி` என்றும் சொல்லப்படும்) உயிருக்கும் உலக ஆசை நீங்கிய பொழுது அருட் சத்தி உயிரை அசத்தை விடுத்து சத்தினை நாடுதலில் விருப்பம் உண்டாக்கி, இவ்வாறு அதனுடன் என்றும் உடனாய் நிற்றலால்தான் உயிர் உலகப் பற்றினை ஒழித்து, மேலான வீட்டினைச் சேர்வதாகின்றது.
**********************************************
 பாடல் எண் : 34
சேருஞ் சிவம்ஆனார் ஐம்மலம் தீர்ந்தவர்
ஓரொன் றிலார்ஐம் மலஇருள் உற்றவர்
பாரின்கண் விண்நர கம்புகும் பான்மையர்
ஆரும்கண்(டு) ஓரார் அவைஅருள் அன்றே.

பொழிப்புரை : `மலம்` எனப்படும் ஐந்தும் நீங்கப் பெற்றவர்களே சிவமாந்தன்மையைப் பெற்றார்கள். அவற்றுள் ஒன்று ஒன்று நீங்கப் பெற்றவர்களும், ஒருமலமேனும் நீங்கப் பெறாதவர்களும் நிலத்திற் பிறந்து, பின் சுவர்க்கத்திலும், நரகத்திலும், புகும் பகுதியினரேயாவர். ஆயினும், `இவ்விருவகை நிலைகளும் சிவனது கருணை காரணமாக அவனது சத்தியாலே நிகழ்வன` என்பதை அறிபவர் உலகத்தில் அரியர்.
**********************************************
 பாடல் எண் : 35
எய்தின செய்யும் இருமாயா சத்தியின்
எய்தின செய்யும் இருஞான சத்தியின்
எய்தின செய்யும் இருஞால சத்தியின்
எய்தின செய்யும் இறையருள் தானே.

பொழிப்புரை : ஏற்புடைய செயல்களை ஏற்குமாற்றால் செய்யும் இறைவனுடைய கருணை பரிக்கிரக சத்தியாகிய `சுத்த மாயை, அசுத்த மாயை` என்னும் இரு மாயைகளின் ஆற்றலைக் கொண்டும், `மந்தம, தீவிரம்` என்னும் இருவகை அருட் சத்தியைக் கொண்டும், கன்மத்தின் வழியாக, `இன்பம், துன்பம்` என்னும் இரண்டை ஊட்டுகின்ற திரோ தான சத்தியைக் கொண்டும் அவ்வப்பொழுது ஏற்புடையவற்றைச் செய்யும்.
**********************************************
 பாடல் எண் : 36
திருந்தினர் விட்டார் திருவில் நரகம்
திருந்தினர் விட்டார் திருவார் சுவர்க்கம்
திருந்தினர் விட்டார் செறிமலக் கூட்டம்
திருந்தினர் விட்டார் சிவமாய் அவமே.

பொழிப்புரை : ஆணவ மலத்தால் வளைக்கப்பட்ட கோணல் நீங்கி நேரான நிலையை அடைந்தோர் சிவமே ஆயினமையால், சுவர்க்கத்தை விரும்புதல், நரகத்திற்புகுதல், மாயை கன்மங்களின் குழாத்துள் இருத்தல், அவற்றால் பிறந்து இறந்தும், இறந்துபின் பிறந்து உழல்வதாகிய பயனில் செயல்களை உடையராதல் ஆகிய இவை அனைத்தையும் விட்டு நலம் பெற்றார்கள்.
**********************************************
 பாடல் எண் : 37
அவமும் சிவமும் அறியார் அறியார்
அவமும் சிவமும் அறிவார் அறிவார்
அவமும் சிவமும் அருளால் அறிந்தால்
அவமும் சிவமும் அவன்அரு ளாமே.

பொழிப்புரை : அவம் - பயன் இன்மை. பயனாவது நன்மையே, எனவே, ``அவம்`` என்றது, `நன்மை இன்மை` என்றபடி. அது தீமை உடையதாகவும் இருக்கலாம். சிவம் - நன்மை.  பகுத்தறிவில்லாதவர், `இஃது அவம், இது சிவம்` எனப்பகுத் துணர மாட்டார். (ஆகவே, `அவர் அவத்தைச் சிவமாக எண்ணி, அதனைப் பற்றிக்கொண்டு உழல்வர்` என்பதாம்). பகுத்தறி வுடையவர் அவற்றை நன்கு பகுத்துணர்வார். (ஆகவே `அவர் அவத்தை விடுத்துச் சிவத்தைப் பற்றி நன்மையடைவர்` என்பதாம்). பகுத்தறிவு திருவருளால் வாய்ப்பது. அங்ஙனம் வாய்க்கப்பெற்று, அவத்தினையும், சிவத்தினையும் உள்ளவாறு உணர்ந்தால், பகுத்தறிவு இல்லாத பொழுது, `உயிர் அவத்தில் உழன்றதும் சிவனது அருளால்தான் பின்பு அதனைவிடுத்துச் சிவத்தைப் பற்றியதும் சிவனது அருளால்தான் என்பது அனுபவமாய் விளங்கிவிடும்.
**********************************************
 பாடல் எண் : 38
அருளான சத்தி அனல்வெம்மை போலப்
பொருள்அவ னாகத்தான் போதம் புணரும்
இருள்ஒளி யாய்ஈண்டும் மும்மலம் ஆகும்
தருவரு ளாநந்தி செம்பொருள் ஆகுமே.

பொழிப்புரை :  [`சிவன் அருள்` என்றும், `சிவனது சத்தி` என்றும் சொல்லப்படுவது ஒருபொருளேயாகும். அதனால்,] அருளாகிய சத்தி, தீ பொருளாய் இருக்க, சூடு அதன் பண்பாய் அதன்கண் வேற்றுமையின்றியிருத்தல்போல, சிவம் பொருளாய் இருக்க, தான் அதன் பண்பாய் அதன்கண் வேற்றுமையின்றி யிருக்கும். அங்ஙனம் இருக்கும்பொழுது அறிவாகியேயிருக்கும். (இது சத்தியின் `உண்மை` எனப்படும் சொரூபம்) அதுவே, `ஆணவம், மாயை, கன்மம்` என்னும் மும் மலங்களாயும் நின்று (உயிர்கள் சிவனை அறியாதபடி மறைக்கும். இந்நிலையில் அது, `திரோதனகரி, திரோதாயி` - என்னும் பெயர்களைப் பெறும். இஃது அதன், `பொது` எனப்படும் தடத்தம்) பின்பு அதுவே தனது உண்மையான அருளாகும்பொழுது, சிவன் உயிர்களுக்கு முன்போல மறைந்து நில்லாமல், இனிது விளங்கும் பொருளாய்த் திகழ்வான்.
**********************************************
 பாடல் எண் : 39
ஆதித்தன் தோன்ற அரும்பது மாதிகள்
பேதித்த தம்வினை யால்செயல் பேதிப்ப
ஆதித்தன் தன்கதி ரால்அவை சேட்டிப்பப்
பேதித்துப் பேதியா வா(று)அருட் பேதமே.

பொழிப்புரை :  `படைக்கும் சத்தி, காக்கும் சத்தி, அழிக்கும் சத்தி` என இவ்வாறு சத்திகள் வேறு வேறாகச் சொல்லப்படினும், உண்மையில், அவை அனைத்தும ஒரு சத்தியின் பேதங்களே. அஃது எவ்வாறெனி ல் பூக்கள் அனைத்தும் ஒரு நிலையையே அடையாமல் பல நிலைகளை அடைகின்றன. (சில அரும்பாகவும், சில போதுக ளாகவும், சில மலர்களாகவும்,சில வாட்லகளாகவும் ஆகின்றன) அந்த வேறுபட்ட நிலைகள் அனைத்திற்கும் ஏற்பச் சூரியனது கதிர்கள்` என்னும் வகையில் ஒன்றேயாவது போல்வதாம்.
**********************************************
 பாடல் எண் : 40
பேதம் அபேதம் பிறழ்பேதா பேதமும்
போதம் அபோதம் புணர்போதா போதமும்
நாதம் அநாத முடன்நாதா நாதமும்
ஆதல் அருளின் அருளிச்சை யாமே.

பொழிப்புரை : `சிவனது அருள்` எனப்படும் சத்தி, உலகுயிர் களோடு பொருள் தன்மையால் வேறாய் நின்று அவற்றை அறிவித்தும், இயக்கியும் நிற்றல், அவ்வாறு நிற்பினும் தான் அவற்றின் வேறாய்த் தோன்றாது ஒன்றேயாய் நிற்றல் என்னும் இவ்வகைகளால் ஒரு வகையில் பேதமாயும், பிறிதொரு வகையில் அபேதமாயும் இருத்தலும், மலங்களை நீக்குதலால் உயிர்களின் அறிவை விளக்கு தலால் அறிவாயும், மலங்களைச் செலுத்துதலால் அவற்றின் அறிவை மறைத்து அறியாமையாயும் இவ்வகைகளால் ஒருவகையில் அறிவாயும், பிறிதொரு வகையில் அறியாமையாயும், நாதத்தை எழுப்புதலால் நாத மாயும், அதனை ஒடுக்குதலால் நாதம் இல்லதாயும் இவ் வகை களால் ஒரு வகையில் நாதமாயும், பிறிதொரு வகையில் நாதம் இல்ல தாயும் இவ்வாறெல்லாம் பேதப்பட்டு நிற்றல் அதன் இச்சையாலேயாம்.
**********************************************
 பாடல் எண் : 41
மேவிய பொய்க்கிரி ஆட்டும் வினையெனப்
பாவிய பூதங்கொண் டாட்டிப் படைப்பாதிப்
பூவியல் கூட்டத்தால் போதம் புரிந்தருள்
ஆவியை ஆட்டும் அரன்அரு ளாமே.

பொழிப்புரை : மனிதன் ஒருவன், யானைபோலப் பொய்யாகச் செய்யப்பட்ட பொறியினுட் புகுந்து மறைந்து கொண்டு, அதனை உயிருடையது போலப் பலவகையில் இயங்கச் செய்யும் செயல்போல, அருள் மாயையின் காரியமாய்ப் பரந்து விரிந்த உலகினுள் மறைந்து நின்று அதனைப் பலவகையாக இயங்கச்செய்து, அதனானே உயிரினது அறிவைப் படைத்தல் முதலிய தொழில்களால் பலவாறாக விளங்குவித்து, அவ் இயக்கத்துட்பட்டு அலமரச் செய்யும். `அருள்` எனப்படுவது சிவனது அருளே.
**********************************************
 பாடல் எண் : 42
ஆறா றகன்று தனைஅறிந் தான்அவன்
ஈறாகி யாவினும் யாவும் தனில்எய்த
வேறாய் வெளிபுக்கு வீடுற்றான் அம்மருள்
தேறாத் தெளிவுற்றுத் தீண்டாச் சிவம்ஆமே.

பொழிப்புரை : `தத்துவம் முப்பத்தாறினுள் ஒன்றேனும் தான் அல்லன்` எனத் தெளிந்து, அவைகளை, `தான்` என மயங்கும் மயக்கத்தினுள் நீங்கினவன் எவனோ அவனே, அவற்றிற்கு வேறாகி, மேலே உள்ள பரவெளியை அடைந்து வீடு பெற்றவனாவன் அந் நிலையில் முன்பு இருந்த மயக்கம் நீங்கித் தெளிவு பெற்று, எளிதில் அணுக இயலாத சிவத்தை அடைந்து அதுவேயாவன், அதுவே அவன் அடையவேண்டிய இறுதி நிலையாகும். அந்நிலையில் சிவனைப்போல இவனும் வியாபகமாய், ஏனை எல்லாப் பொருள்களும் தன்னில் வியாப்பியமாய் நிற்க விளங்குவான்.
**********************************************
 பாடல் எண் : 43
தீண்டற் கரிய திருவடி நேயத்தை
மீண்டுற் றருளால் விதிவழி யேசென்று
தூண்டிச் சிவஞான மாவினைத் தான்ஏறித்
தாண்டிச் சிவனுடன் சாரலும் ஆமே.

பொழிப்புரை : அடைதற்கரிய சிவபத்தியைப் பொதுவாகத்தான் அறிந்த முறையில் அடைந்து ஒழுகிய ஒருவன் பின்பு கிரியா குருவின் அருளால் சிறப்பாக அதனை அடைந்து, அவர் அறிவுறுத்த முறை யிலே சிவதன்மத்தில் ஒழுகிச் சிவயோகத்திலும் பயின்று, அதன் பயனாகப் பின்பு சிவஞானமாகிய யானையின்மீது ஏறிச் செலுத்தி, மும்மாயை களையும் தாண்டிச் சென்று, அப்பால் உள்ள சிவனோடு கூடுதலும் கூடும்.
**********************************************
 பாடல் எண் : 44
சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர்
சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியர்
சார்ந்தவர் நேயம் தலைப்பட்ட ஆனந்தர்
சார்ந்தவர் சத்த அருள்தன்மை யாரே.

பொழிப்புரை : முன் மந்திரத்தில், ``சிவனுடன் சாரலும் ஆமே`` எனக்கூறிய சார்ச்சி, `சரியை, கிரியை, யோகம், ஞானம்` என நால்வகைப் படுதலால், அவ்வம்முறையால் சிவனைச் சார்ந்தவர் முறையே. `சாரணர், சித்தர், சமாதியர், சாத்தியர்` என நிற்பர். எனினும் இறுதியில் சொல்லப்பட்ட சமாதியரே சிவானந்தத்தை அடைந்தவர். அவரே நிலையான அருள் தன்மையைப் பெற்றவரும் ஆவர்.
**********************************************
 பாடல் எண் : 45
தான்என் றவன்என் றிரண்டென்பர் தத்துவம்
தான்என் றவன்என் றிரண்டற்ற தன்மையால்
தான்என் றிரண்டுன்னார் கேவலத் தானவர்
தான்இன்றித் தானாகத் தத்துவ சுத்தமே.

பொழிப்புரை : (உண்மையுணர்ந்தோர்) `அறிபவனும், அறியப் படுபவனும் - என உள்பொருள் இரண்டு` எனக்கூறுவர் ஆயினும் அவ்விரண்டு பொருளும் எஞ்ஞான்றும் வேறுநில்லாது உடலும், உயிரும் போல ஒன்றாகியேயிருத்தலால், பாசமாகிய அசுத்தத்தின் நீங்கினோர், அறியப்படுபவனை யறிதலோடு அறிபவனையும் அறிதலாகிய இரண்டறிவையுடையராகாது, அறியப்படுபவனை மட்டுமே அறிதலாகிய அந்த ஓர் அறிவை மட்டுமே உடையவராய் இருப்பர் அவ்வாறிருத்லே நிறைவான சுத்த நிலையாகும்.
**********************************************
 பாடல் எண் : 46
தன்னினில் தன்னை அறியும் தலைமகன்
தன்னினில் தன்னை அறியின் தலைப்படும்
தன்னினில் தன்னை அறிகில னாயிடில்
தன்னினில் தன்னையும் சார்தற் கரியனே.

பொழிப்புரை : (`என்னை உடையானாகிய தலைவன் எங்குளன்` எனப்புறத்தே பலவிடத்துத் ``தேடியும் தேடொணாத் தேவனாய்`` உள்ள சிவனை, `இனி என்னுள்ளேதான் நான்தேட வேண்டும்` என உணர்ந்து, அவ்வாறே) அவனைத் தன்னுள்ளே அறிய முயல்கின்ற பெருமகன் அம்முயற்சியில் உறைத்து நிற்பனாயின், அவனைத்தான் அடைந்துவிடுவான். அம்முறையில் அவன் தன்னுள்ளே தேட முயலாது, புறத்திற்றானே தேடிக் கொண்டிருப்பானாயின், அவன் சிவனைத் தன்னுள்ளேயும் அடைதற்கு அறியவனாகியேயிருப்பான்.
**********************************************
 பாடல் எண் : 47
அறியகி லேன்என் றரற்றாதே நீயும்
நெறிவழி யேசென்று நேர்பட்ட பின்னை
இருசுட ராகிய இயற்றவல் லானும்
ஒருசுட ராய்வந்தென் உள்ளத்துள் ளானே.

பொழிப்புரை : மாணவகனே, குருவருள் பெறாத மற்றவர் -களைப்போல நீயும் இராக் கதிரிபோலச் சிறிதறிவைத் தருபவனாயும், பகற் கதிர்போலப் பேரறிவைத் தருபவனாயும் இருந்து எல்லா வற்றையும் செய்கின்ற சிவனைப் புறத்தெல்லாம் தேடி, `ஐயோ!` சிவனைக் காணமுடியவில்லையே` என்று கதறி அழாதே. ஏன் எனில், அவனை அகத்தே அறிதலாகிய அந்த நெறியைப் பற்றி, அதிலே சென்ற பொழுது அவன் எனக்குக் கிடைத்தான். அதன்பின் அவன் முன்போல இருசுடராய் இல்லாமல் பகற் கதிராகிய ஒரு சுடரேபோலத் தோன்றி, அந்நிலையினின்றும் மாற்றம் சிறிதும் இன்றி, என் உள்ளத்துள் நீங்காதிருக்கின்றான்.
**********************************************
 பாடல் எண் : 48
மண்ணொன்று தான்பல நற்கலன் ஆயிடும்
உண்ணின்ற யோனிகட் கெல்லாம் ஒருவனே
கண்ணொன்று தான்பல காணும் தனைக்காணா
அண்ணலும் அவ்வண்ண மாகிநின் றானே.

பொழிப்புரை : குடம், சால், சாடி முகலாகக்கலங்கள் பல வகையால் இருப்பினும் அவை அனைத்திலும் ஒருமண்ணே பொருந்தியிருத்தல் போலப் பிறப்பு வகையால் உயிர்களின் அறிவு பல்வேறு வகைப்பட்டிருப்பினும் ஒரு பேரறிவாகிய சிவன் அவை அனைத்தின் அறிவினுள்ளும் இருக்கின்றான், அங்ஙனமாயினும், கண் எல்லாப் பொருளையும் பார்க்க. பார்க்கப்பட்ட பொருள்கள் கண்ணைப் பாராததுபோல, அறிவுக்கறிவாய் உள்ள சிவன் அனைத்துயிர்களையும அறியினும் அவ்வுயிர்களுள் ஒன்றேனும் அவனை அறிதல் இல்லை.
**********************************************
பாடல் எண் : 49
ஓம்புகின் றான்உல கேழையும் உள்நின்று
கூம்புகின் றார்குணத் தின்னொடுங் கூடுவர்
தேம்புகின் றார்சிவம் சிந்தைசெய் யாதவர்
கூம்புகின் றார்வந்து கொள்ளலும் ஆமே.

பொழிப்புரை :  ஏழுலகத்தில் உள்ள உயிர்களையும் சிவன் ஒப்ப நோக்கித்தான் அவற்றின் உள்நின்று காத்து வருகின்றான். (என்றாலும், சிலரே அதனை யுணர்ந்து, ஏனையவற்றைப் பற்றாது விடுத்து அவனிடத்திலே சென்று அடங்குகின்றனர். அங்ஙனம் அடங்கினவர்கள் சிவனது எண்குணங்களையும் தாங்களும் உடையவராவர். பலர் அவ்வாறு உணர்ந்து சிவனை அடைதல் இல்லை. அங்ஙனம் அடையாதவர்கள் உலகியலில் சிக்கித் துன்புறுகின்றனர். சிவனை அடைந்து அடங்காதவர்கள் சிவனது குணத்தைப் பெறுதலும் கூடுமோ! (கூடாது).
**********************************************
பாடல் எண் : 50
குறியறி யார்கள் குறிகாண மாட்டார்
குறியறி யார்கடம் கூடல் பெரிது
குறியறி ஆவகை கூடுமின் கூடில்
அறிவறி வாய்இருந்(து) அன்னமும் ஆமே.

பொழிப்புரை : `குறிக்கொளத் தக்கது இது` என அறியாதவர்கள் அதனை அடைதல் எங்ஙனம் கூடும்? (கூடாது) அவர் உடம்பிற் கட்டுண்டு நிற்குங் காலம் பெரிதாகும். ஆகையால், நீவிர், `குறிக்கொள்ளத் தக்க பொருள் இது` என்பதை அறிந்து, பின்பு அதுவே யாகும்படி பொருந்தி நில்லுங்கள். நின்றால், உங்களுடைய அறிவு அறிவாய் இருக்கும். வீட்டின்பமும் சித்திக்கும்.
**********************************************
பாடல் எண் : 51
ஊனோ உயிரோ உறுகின்ற தேதின்பம்?
வானோர் தலைவி மயக்கத் துறநிற்க
யானோ பெரிதறி வேன்என்னும் மானுடன்
தானோ பிறப்போ டிறப்பறி யானே.

பொழிப்புரை :  உயிர் உடம்பொடு கூடி நிற்கும் நிலையில் வருகின்ற இன்பத் துன்பங்களை நுகர்வது உடம்பா? உயிரா? இதனை எண்ணிப் பார்த்து உண்மையை உணரமாட்டாமல் திரோதான சத்தியால் வரும் மயக்கத்திலே இருந்து கொண்டு, `யான் உண்மையைநன்கறிவேன்` என்றுசொல்கின்ற மனிதன்தான் பிறந்ததாகிய `பிறப்பு` என்பதும், பின்பு இறக்கப்போவதாகிய `இறப்பு` என்பதையுமே `இன்ன` என அறியமாட்டான்.
**********************************************
மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!