http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Sunday 1 April, 2012

திருமந்திரம்-தந்திரம் 01: பதிகம்:09&10 கொல்லாமை(02); புலால் மறுத்தல்(01)



பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
================================================================== 

விநாயகர் வணக்கம்...............................................................பாடல்கள்: 001
பாயிரம். பதிக்க வரலாறு.......................................................பாடல்கள்: 039
முதல் தந்திரம்:பதிக எண்:01: சிவபரத்துவம்.....................பாடல்கள்: 056
முதல் தந்திரம்:பதிக எண்:02: வேதச் சிறப்பு .....................பாடல்கள்: 006
முதல் தந்திரம்:பதிக எண்:03: ஆகமச் சிறப்பு ....................பாடல்கள்: 010
முதல் தந்திரம்:பதிக எண்:04: உபதேசம்.............................பாடல்கள்: 030
முதல் தந்திரம்:பதிக எண்:05: யாக்கை நிலையாமை.....பாடல்கள்: 025
முதல் தந்திரம்:பதிக எண்:06: செல்வம் நிலையாமை....பாடல்கள்: 009
முதல் தந்திரம்:பதிக எண்:07: இளமை நிலையாமை......பாடல்கள்: 010
முதல் தந்திரம்:பதிக எண்:08: உயிர் நிலையாமை..........பாடல்கள்: 010
முதல் தந்திரம்:பதிக எண்:09: கொல்லாமை....................பாடல்கள்: 002
முதல் தந்திரம்:பதிக எண்:10: புலால் மறுத்தல்................பாடல்கள்: 001
====================================================(196+002+001=199)
பதிகம் எண் :9.கொல்லாமை  (02பாடல்கள்)

பாடல் எண் : 01
பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர்
மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்
நற்றார் நடுக்கற்ற தீபமுஞ் சித்தமும்
உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே. 

பொழிப்புரை : மெய்யுணர்வு நிலைபெறுதற்குத் துணையாய குருவழிபாட்டிற்கும் பல மலர்களால் தொடுக்கப்பட்டமாலை முதலியவை இன்றியமையாதனவே. ஆயினும், சிறப்புடைய மாலை பிற உயிர்களைக் கொல்லாமைகள் பலவும் இயைந்த பண்பே. இன்னும் சிறப்புடைய அசையா விளக்கு ஒருதலைப் பட்ட மனமும், இலிங்கம் இருதயத்தில் பொருந்தி நிற்கும் உயிராகிய ஒளியின் முனையுமாம்.
****************************************************
பாடல் எண் : 02
கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை
வல்லடிக் காரர் வலிக்கயிற் றாற்கட்டிச்
செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை
நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே.

பொழிப்புரை : இதன் பொருள் வெளிப்படை. குறிப்புரை : : ``கொல்லிடு, சொல்லிடு`` என்பவற்றில் இடு, துணைவினை, ``நில்லிடும்`` என்றதில் இடு, இசைநிறை, வல்லடிக் காரர், வலிய தண்டலாளர்; யமதூதர். வலிக் கயிறு - வலிமையுடைய கயிறு; யம பாசம். இஃது அவர் நினைத்த அளவில் நினைக்கப் பட்டோரை இறுகிக் கட்டும் கடவுள் தன்மை பெற்றது. ``நில்லென்று`` என்றது, தம் தலைவன் முன் கொண்டுபோய் நிறுத்திக் கூறுவது. இதனால், கொலைப் பாவத்தினது கொடுமை கூறும் முகத்தால் கொல்லாமை வலியுறுத்தப்பட்டது.
****************************************************
பதிகம் எண் :10.புலால் மறுத்தல்  (01பாடல்)

பாடல் எண் : 01
பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாருங் காண இயமன்றன் தூதுவர்
செல்லாகப் பற்றியத் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பாரே.

பொழிப்புரை : இதன் பொருள் வெளிப்படை.
குறிப்புரை :  பொல்லாங்கு, கொலையால் வருவதாயும், கொலை செய்யத் தூண்டுவதாயும் இருத்தல். இது பற்றி அதனை உண்பாரை, `புலையர்` என்றார். புலையர் - கீழ்மக்கள்.    
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போற் போற்றாக் கடை`` -குறள் 315  ......என்றவாறு, அருளில்லார், `அறிவுடையார்` எனப்படாமை யானும்,
தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிதூன் உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். -குறள் 252.....என்பதனால் புலால் உண்பவர் அருளுடையாராதல் கூடாமை யானும் அவர் `உயர்ந்தோர்` எனப்படாது `இழிந்தோர்` எனவே படுவர் என்பது உணர்க. செல்லாக - சிதல்போல; சிதல் அரித்துத் தின்னும் இயல்புடையது. மறித்து - மீள ஒட்டாது மடக்கி.
உண்ணாமை உள்ள துயிர்நிலை ஊன்உண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு. -குறள் 255.....எனத் திருவள்ளுவரும், `புலால் உண்பவர் நிரயம் புகுந்து மீளார்` என்றார். இரண்டிடத்தும், `மீளாமை` என்பதற்கு, `நெடுங்காலம் கிடத்தல்` என்பதே கருத்து என்க.
****************************************************
மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத் தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!