http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Monday 2 April, 2012

திருமந்திரம்-தந்திரம் 01: பதிகம்:19: அறஞ் செய்வான் சிறப்பு (பாடல்கள் :09)



பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
================================================================== 

விநாயகர் வணக்கம்...............................................................பாடல்கள்: 001
பாயிரம். பதிக்க வரலாறு.......................................................பாடல்கள்: 039
முதல் தந்திரம்:பதிக எண்:01: சிவபரத்துவம்.....................பாடல்கள்: 056
முதல் தந்திரம்:பதிக எண்:02: வேதச் சிறப்பு .....................பாடல்கள்: 006
முதல் தந்திரம்:பதிக எண்:03: ஆகமச் சிறப்பு ....................பாடல்கள்: 010
முதல் தந்திரம்:பதிக எண்:04: உபதேசம்.............................பாடல்கள்: 030
முதல் தந்திரம்:பதிக எண்:05: யாக்கை நிலையாமை.....பாடல்கள்: 025
முதல் தந்திரம்:பதிக எண்:06: செல்வம் நிலையாமை....பாடல்கள்: 009
முதல் தந்திரம்:பதிக எண்:07: இளமை நிலையாமை......பாடல்கள்: 010
முதல் தந்திரம்:பதிக எண்:08: உயிர் நிலையாமை...........பாடல்கள்: 010
முதல் தந்திரம்:பதிக எண்:09: கொல்லாமை.....................பாடல்கள்: 002
முதல் தந்திரம்:பதிக எண்:10: புலால் மறுத்தல்.................பாடல்கள்: 001
முதல் தந்திரம்:பதிக எண்:11: பிறன்மனை நயவாமை.....பாடல்கள்: 003
முதல் தந்திரம்:பதிக எண்:12: மகளிர் இழிவு......................பாடல்கள்: 006
முதல் தந்திரம்:பதிக எண்:13: நல்குரவு................................பாடல்கள்: 005
முதல் தந்திரம்:பதிக எண்:14: அக்னி காரியம்.....................பாடல்கள்: 010
முதல் தந்திரம்:பதிக எண்:15: அந்தணர் ஒழுக்கம்............பாடல்கள்: 014
முதல் தந்திரம்:பதிக எண்:16: அரசாட்சி முறை.................பாடல்கள்: 010
முதல் தந்திரம்:பதிக எண்:17: வானச் சிறப்பு......................பாடல்கள்: 002
முதல் தந்திரம்:பதிக எண்:18: தானச் சிறப்பு.......................பாடல்கள்: 001
முதல் தந்திரம்:பதிக எண்:19: அறஞ் செய்வான் சிறப்பு...பாடல்கள்: 009
=======================================================(240+009=249)
முதல் தந்திரம்: 27-பதிகங்கள்
பதிகம் எண் :19.அறஞ்செய்வான் சிறப்பு  
(09 பாடல்கள்)

பாடல் எண் : 1
தாமறி வாரண்ணல் தாள்பணி வாரவர்
தாமறி வாரறந் தாங்கிநின் றாரவர்
தாமறி வார்சில தத்துவ ராவர்கள்
தாமறி வார்க்குத் தமன்பர னாமே.

பொழிப்புரை`சிவபெருமானது திருவடியை வணங்குதல், பிறர்க்கும் பிற உயிர்க்கும் உதவுதலை மேற்கொண்டு செய்தல், தத்துவ உணர்வு பெறுதல்` என்னும் இவற்றுள் ஒன்றையோ, பலவற்றையோ உடையவரே அறிவுடையோராவர். அவர்க்கே சிவபெருமான் உறுதுணையாவான்.
***************************************************

பாடல் எண் : 2
யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே. 

பொழிப்புரைஉண்ணப்புகும்பொழுது இறைவனுக்கு ஒரு பச்சிலை சூட்டி வணங்குதலும், பசுவிற்குச் சிறிது உணவு கொடுத் தலும், வறியார்க்குச் சிறிது சோறிடுதலும், அவ்வாறிடும் பொழுது இன்சொல் சொல்லுதலும் எல்லார்க்கும் இயல்வனவே.
***************************************************
பாடல் எண் : 3
அற்றுநின் றாருண்ணும் ஊணே அறனென்னுங்
கற்றன போதங் கமழ்பவர் மானிடர்
உற்றுநின் றாங்கொரு கூவற் குளத்தினிற்
பற்றிவந் துண்ணும் பயன்அறி யாரே. 

பொழிப்புரை : `பொருள் இல்லாத வறியவர், பொருள் உடை யவர் கொடுக்க உண்ணும் அதுவே பொருள் உடையவர்க்கு அறமாகி நிலை பெறும்` என்பதை நூல்களால் அறிந்த அறிவு செயலில் மணக்கப் பெறுபவரே மக்களாக மதிக்கப் பெறுவர். ஆயினும் அவ்வறிவைப் பெற்றும், சிலர், நீர்வேட்கையுடையார் பலரும், (பெரிய நீர் நிலையாகிய கடலை நோக்கிச் செல்லாது) ஊருணியாகிய சிறிய கிணறு குளங்களைத் தேடிச் சென்று உண்ணும் செயலின் தன்மையை அறிதல் இல்லை.
***************************************************
பாடல் எண் : 4
அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்
தழுக்கிய நாளில் தருமமுஞ் செய்யீர்
விழித்திருந் தென்செய்வீர்? வெம்மை பரந்து
இழுக்கவன் றென்செய்வீர்? ஏழைநெஞ் சீரே.

பொழிப்புரை : அறியாமை வழிப்பட்ட மனத்தை உடையவரே! நீவிர், `செல்வத்துப் பயன் ஈதலே` என அறியும் அறிவை மறைத்து நிற்கின்ற அறியாமையை நல்லோர் இணக்கம் முதலியவற்றால் போக்கி அறிவை நிறைத்துக்கொள்ள மாட்டீர்; அதனால், செல்வக் காலத்தில் தருக்கிநின்று அறத்தைச் செய்கிலீர்; நும் செல்வத்தைக் குறிக்கொண்டு காத்து என்ன பயன் அடையப்போகின்றீர்? இறுதிக் காலத்தில் கூற்றுவன் வந்து கோபம் மிகுந்து கண்ணில் தீப்பொறி பரக்க நும்மைக் கட்டி இழுக்கும்பொழுது என்ன செய்ய வல்லீர்?
***************************************************
பாடல் எண் : 5
தன்னை அறியாது தாம்நலர் என்னாதிங்
கின்மை யறியா திளையரென் றோராது
வன்மையில் வந்திடும் கூற்றம் வருமுன்னம்
தன்மமும் நல்ல தவஞ்செய்யும் நீரே.

பொழிப்புரை : கூற்றுவன், தன்னைப் பிறர் காணாதபடியும், தன்னால் பற்றப்படுவர் நற்பண்பினை உடையர் என்றோ, தம்மை யன்றித் தம் சுற்றத்தார்க்குக் களைகணாவாரை இலர் என்றோ முதியர் என்றோ, இளையர் என்றோ எண்ணாமலும், பிறரால் தடுத்தற்கரிய ஆற்றலோடு வருவன். அவ்வாறு வருமுன்னே நீவிர் அறத்தையும், தவத்தையும் செய்து கொள்ளுங்கள்.
***************************************************
பாடல் எண் : 6
துறந்தான் வழிமுதற் சுற்றமும் இல்லை
இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை
மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன்
அறந்தான் அறியும் அளவறி வாரே. 

பொழிப்புரை : மெய்ம்மையை ஆராய்ந்தறியும் அறிவுடையீரே! முற்றத் துறந்தவனுக்குச் சுற்றத் தொடர்பு இல்லை. அதனால் அவன் இறைவனை மறவான். மறவானாகவே அவனுக்குக் கெடுவது யாதும் இல்லை. அங்ஙனம் முற்றத் துறக்கமாட்டாதவன் சுற்றத்தொடு கூடி வாழும்பொழுது அறஞ் செய்யாதே இறந்தொழிவனாயின், அதன் பின்னர் அவனுக்கு அறமேயன்றி அவன் விரும்பிய இன்பமும் இல்லையாம். அவன் தான் வாழுங்காலத்து இறைவனை மறவா திருத்தல் கூடாமையின் இறைவனும் அவனுக்குத் துணைவாரான்; அதனால் அவன் இருமையும் இழப்பன். ஆகவே, நீவிர், `இல்லறம், துறவறம்` என்னும் இருவகை அறங்களின் தன்மையை அறிந்து அவற்றுள் இயன்றதொன்றில் நில்லுங்கள்.
***************************************************
பாடல் எண் : 7
தான்தவஞ் செய்வதாம் செய்தவத் தவ்வழி
மான்தெய்வ மாக மதிக்கும் மனிதர்கள்
ஊன்தெய்வ மாக உயிர்க்கின்ற பல்லுயிர்
நான்தெய்வம் என்று நமன்வரு வானே. 

பொழிப்புரை : மக்கட்பிறப்பைப் பெற்றுடையீர், அறிவுடை மகனால் செய்யத்தக்கது தவம் ஒன்றே. தவநெறி சிவபிரானையே பரம் பொருளாக உணர்ந்து ஒழுகுதலாய் இருக்கும். பலர் இந்நெறி நில்லாது உடம்பையே தெய்வம்போலப் பேணி மூச்சு விடுகின்ற பிணங்களாய் நிற்கின்ற உலகாயத நெறியில் உள்ளனர். அவர்க்கு இறுதியில் யமன், `தெய்வம் இல்லை என்ற உங்கட்குக் காட்சியளிக்கின்ற தெய்வம் நான்தான்` என்று சொல்லுவான்போலக் கண்முன் வந்து நிற்பான்.
***************************************************
பாடல் எண் : 8
திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி
இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு
கிளைக்குந் தனக்கும்அக் கேடில் புகழோன்
விளைக்குந் தவம்அறம் மேற்றுணை யாமே. 

பொழிப்புரை : அறம் செய்தற்கு `இல்நிலை, துறவு நிலை` என இரண்டு வழிகள் உண்டு. அவற்றுள் அழிதல் இல்லாது நின்று நிலவும் புகழை உடைய துறவோன், தனக்கும், தன் சுற்றத்திற்கும் பயன் விளையு மாறு செய்யும் தவம், உயிர் கரை காணமாட்டாது அழுந்திக் கிடக்கின்ற வினையாகிய கடலை நீந்துதற்கு அமைந்த தோணியாய், பிறந்தும், இறந்தும் உழலும் இளைப்பினை நீக்கும். இல்லறத்தில் நின்று செய்யும் விருந்தோம்பல் முதலிய அறம் மறுமைக்குத் துணையாய் வரும்.
***************************************************
பாடல் எண் : 9
பற்றது வாய்நின்ற பற்றினைப் பார்மிசை
அற்றம் உரையான் அறநெறிக் கல்லது
உற்றுங்க ளால்ஒன்றும் ஈந்தது வேதுணை
மற்றண்ணல் வைத்த வழிகொள்ளு மாறே.

பொழிப்புரை : சிவபெருமான் எவ்வுயிர்க்கும் உண்மைப் பற்றாய் உள்ள அறத்தை அஃது அரிய மறைபொருள் (இரகசியம்) என்று, அறநெறியில் நிற்பார்க்கன்றி ஏனையோர்க்கு உணர்த்துதல் இல்லை. அதனை அவன் அருள்வழி நான் பெற்றவாற்றால் உங்கட்குக் கூறுவதாயின், ஒன்றேயாயினும், உங்களால் மனம் பொருந்திப் பிறர்க்கு ஈந்தது உண்டாயின், அதுவே உங்கட்குத் துணையாவது. இன்னும் அப்பெருமான் வகுத்த நன்னெறியை மேற்கொள்ளும் முறைமையும் அதுவேயாம்.
***************************************************

மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத் தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!