http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Sunday 29 April, 2012

திருமந்திரம்-தந்திரம்02-பதிகம்:18,19 & 20. 18.தீர்த்தஉண்மை(பாடல்கள்:6); 19.திருகோயிற்குற்றம்(பாடல்கள்:5); 20.அதோமுகதரிசனம்(பாடல்கள்:6).





 

 
பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
=======================================================
 
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:01: அகத்தியம்..................................பாடல்கள்: 002
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:02: பதிவலியில் வீரட்டம் எட்டு ....பாடல்கள்: 008
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:03: இலிங்க புராணம் .....................பாடல்கள்: 006
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:04: தக்கன் வேள்வி..........................பாடல்கள்: 009 

இரண்டாம் தந்திரம்:பதிக எண்:05: பிரளயம் ......................................பாடல்கள்: 005
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:06: சக்கரப் பேறு ...............................பாடல்கள்: 004
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:07: எலும்பும் கபாலமும்.................பாடல்கள்: 001 
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:08: அடிமுடி தேடல்...........................பாடல்கள்: 010
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:09: சருவசிருட்டி ...............................பாடல்கள்: 030
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:10: திதி..................................................பாடல்கள்: 009
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:11: சங்காரம்........................................பாடல்கள்: 010 
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:12: திரோபவம் ...................................பாடல்கள்: 009
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:13: அநுக்கிரகம் .................................பாடல்கள்: 009
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:14: கர்ப்பக் கிரியை ..........................பாடல்கள்: 040
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:15: மூவகைச் சீவ வர்க்கம்.............பாடல்கள்: 008 
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:16: பாத்திரம்.......................................பாடல்கள்: 004
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:17: அபாத்திரம்  .................................பாடல்கள்: 004
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:18: தீர்த்த உண்மை......................,....பாடல்கள்: 006
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:19: திருக்கோயிற் குற்றம்...............பாடல்கள்: 005 
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:20: அதோமுக தரிசனம்...................பாடல்கள்: 006

=========================================(பாடல்கள்: 168 + 006 + 005 + 006 = 185 )
இரண்டாம் தந்திரம்–பதிகஎண்:18. தீர்த்த உண்மை(பாடல்கள்:6)

பாடல் எண் : 1
உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பரந்து திரிவரே
கள்ள மனமுடைக் கல்வியி லோரே.

பொழிப்புரை :  உள்ளத்திற்றானே நற்புண்பகளாகிய பல தீர்த்தங்கள் உள்ளன. வினை நீங்குமாறு அவற்றில் மூழ்குதலை மெல்லப் பயிலாத வஞ்சமனம் உடைய அறிவிலிகள், புறத்தே பல தீர்த்தங்களைத் தேடிப் பள்ளமும், மேடும் கடந்து நடந்து இளைக்கின்றனர்.
=================================================
பாடல் எண் : 2
தளியறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும்
குளியறி வாளர்க்குக் கூடவும் ஒண்ணான்
வளியறி வாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும்
தெளியறி வாளர்தஞ் சிந்தையு ளானே. 

பொழிப்புரை :  தெளிந்த ஞானிகளது உள்ளத்தில் வீற்றிருப்பவனாகிய சிவபெருமான், அன்பினால் கண்ணீர் துளிக்கத் தெரிந்தவர்க்குக் குளிர்ச்சி உடையனாய் விளங்குவான். யோக நெறியில் மூச்சை அடக்க அறிந்தவர்க்கும் அவன் ஒருகால் விளங்குதல் கூடும். ஆயினும், ஞானம், அன்பு, யோகம் என்ற இவற்றுள் ஒன்றும் இன்றித் தீர்த்தத்திலே மட்டும் சென்று முழுகத் தெரிந்தவர்க்கு அவன் அடைதற்கு அரியன்.
=================================================
பாடல் எண் : 3
உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனை
கள்ளத்தின் ஆருங் கலந்தறி வாரில்லை
வெள்ளத்தை நாடி விடும்அவர் தீவினைப்
பள்ளத்தில் இட்டதோர் பத்தல்;உள் ளானே. 

பொழிப்புரை :  அகத்தே உயிர்க்குயிராக உணரப்படும் ஒருவனாகிய சிவபெருமானை அவ்வுள்ளத்துள் அன்பில்லாது ஆரவார மாத்திரையாகச் செய்யும் செயல்களால் ஒருவரும் அடைதல் இயலாது. ஆகவே, அன்புமிகும் வழியை நாடாமலே புறத்தில் தீர்த்தங்கள் பலவற்றை நாடிச்செல்பவர், தீவினையாகிய கிணற்றில் போடப்பட்ட பத்தலேயாவர். அதனால், அவருள்ளத்தில் அவன் விளங்குவனோ!
=================================================
பாடல் எண் : 4
அறிவார் அமரர்கள் ஆதிப் பிரானைச்
செறிவான் உறைபதஞ் சென்று வலங்கொள்
மறியார் வளைக்க வருபுனற் கங்கைப்
பொறியார் புனல் மூழ்கப் புண்ணியராமே. 

பொழிப்புரை :  சிவபெருமானை அறிவால் அறிகின்றவரே அமரர் (இறப்பும், பிறப்பும் இல்லாதவர்) ஆவர். அவரே சிவலோகத்தில் சென்று வீறுபெற்று வாழ்ந்து, பின் மீளாநிலையைப் பெறுவர். ஆகவே, சிலர் அவனை அங்ஙனம் அறிவால் அறிதலைச் செய்யாமலே, தன்னிடத்து மூழ்குவாரை ஈர்த்துச் செல்ல வருகின்ற கங்கையாற்றில் மரக்கலம் செல்லத்தக்கவாறு ஆழ்ந்தும் அகன்றும் ஓடும் நீரில் முழுகிய துணையானே அறிவராய் விடுவரோ!
=================================================
பாடல் எண் : 5
கடலிற் கெடுத்துக் குளத்தினிற் காண்டல்
உடலுற்றுத் தேடுவார் தம்மையொப் பாரிலர்
திடமுற்ற நந்தி திருவரு ளாற்சென்
றுடலிற் புகுந்தமை ஒன்றறி யாரே.

பொழிப்புரை :  சிவபெருமானை, `எங்குளன்` என்று தீர்த்தங்களில் வருந்தி முழுகிக் காணச் செல்பவரது செயல், கடலில் போடப்பட்ட பொருளைக் குளத்தில் எடுக்கச் செல்பவரது செயல்போல்வதாம். அவரை ஒத்த அறிவிலிகள் பிறர் இலர். ஏனெனின், என்றும் ஒருபெற்றியனாகிய சிவபெருமான், தனது திருவருள் காரணமாக யாவர் உடலிலும் புகுந்து நிற்றலைச் சிறிதும் உணராமையால்.
=================================================
பாடல் எண் : 6
கலந்தது நீர துடம்பிற் கறுக்கும்
கலந்தது நீர துடம்பிற் சிவக்கும்
கலந்தது நீர துடம்பில் வெளுக்கும்
கலந்தது நீர்நிலங் காற்றது வாமே.

பொழிப்புரை :  நீர்தான், `நிலம், காற்று` என்பவற்றில் கலப்பினும் அது அதுவாம் இயல்புடையது. ஆதலின், அஃது எவ்வுடம்பிற் கலந்ததாயினும் அவ்வுடம்பின் தன்மைக்கு ஏற்பக் கறுத்தும், சிவத்தும், வெளுத்தும் நிற்பதாம்.
=================================================
இரண்டாம் தந்திரம்–பதிகஎண்:19. திருக்கோயிற் குற்றம்(பாடல்கள்:5)

பாடல் எண் : 1
தாவர லிங்கம் பறித்தொன்றில் தாபித்தால்
ஆவதன் முன்னே அரசு நிலைகெடும்
சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும்
காவலன் பேர்நந்தி கட்டுரைத் தானே. 

பொழிப்புரை :  ஒரு திருக்கோயிலில் உள்ள அசையாத சிவக் குறியைப் பெயர்த் தெடுத்துக் கொண்டுபோய் வேறொரு திருக்கோயிலில் நிறுவினால், அச்செயல் முற்றுப்பெறுவதற்கு முன்பே அரசனது ஆட்சி நிலைகுலையும்; அச்செயலுக்கு உரியவன், தான் இறப்பதற்கு முன்பு தொழுநோய் கொண்டு துன்புற்று இறப்பான். இவ்வாறு எங்கள் தலைவராகிய நந்திபெருமான் எங்கட்கு உறுதிப்பட உரைத்தார்.
=================================================
பாடல் எண் : 2
கட்டுவித் தார்மதிற் கல்லொன்று வாங்கிடில்
வெட்டுவிக் கும்அபி டேகத் தரசரை
முட்டுவிக் கும்முனி வேதிய ராயினும்
வெட்டுவித் தேவிடும் விண்ணவன் ஆணையே.

பொழிப்புரை :  திருக்கோயிலில் மதிலைக்கட்டுவித்தவரே பின்பு பொருளாசை முதலிய காரணங்களால் அதினின்றும் ஒரு கல்லை எடுப்பினும், சாதாக்கிய தத்துவத்தில் இருந்துகொண்டு ஆகமங்களை அருளிச்செய்த சதாசிவ மூர்த்தியின் ஆணை அவரை அழிக்கும். அக்குற்றம் நிகழாவாறு காவாமைபற்றி, அப்பொழுது முடிசூடி ஆள்கின்ற அந்நாட்டு அரசரையும் அவ்வாணை இடருறச் செய்யும். அக்குற்றத்தைச் செய்தவர், `முனிவர்` என்று உயர்த்துச் சொல்லப்படுகின்ற அந்தணராயினும், அவ்வாணை அவரைக் கொலையுண்டு மடியவே செய்யும்.
=================================================
பாடல் எண் : 3
ஆற்றரு நோய்மிக் கவனி மழையின்றிப்
போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
கூற்றுதைத் தான்திருக் கோயில்க ளானவை
சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே. 

பொழிப்புரை :  சிவபெருமானது திருக்கோயில்களில் அன்றாட வழிபாடு, சிறப்புநாள் விழாக்கள் முதலியவை இல்லாதொழியினும், ஆகமங்களில் சொல்லப்பட்ட முறைதவறி நடப்பினும், நாட்டில் தீர்க்கலாகாத நோய்கள் பரவி, மழையும் பொய்த்துப்போக, சிற்றரசரால் வணங்கப்படுகின்ற பேரரசர்களும் பகைவரை வெல்லும் வலியிலராய்த் தம் நாட்டை இழப்பர்.
=================================================
பாடல் எண் : 4
முன்னவ னார்கோயில் பூசைகள் முட்டிடின்
மன்னர்க்குத் தீங்குள வாரி வளங்குன்றும்
கன்னங் களவு மிகுத்திடுங் காசினி
என்னரு நந்தி எடுத்துரைத் தானே. 

பொழிப்புரை :  சிவபெருமானது திருக்கோயில்களில் மேற்கூறிய குறைகள் உளவாகுமாயின், அரசர்கள் வலிமை யிழத்தலேயன்றிப் பிற தீமைகளையும் அடைவர். நாட்டில் விளைவும், பிற வருவாய்களும் குறையும். மாளிகைகளில் கன்னம் இட்டுக் களவாடுதல், கொள்ளை முதலிய பிற களவுகள் மிகுதியாகும். எங்கள் அருளாசிரியராகிய நந்திபெருமான் எங்கட்கு இவ்வாறு எடுத்து அருளிச்செய்தார்.
=================================================
பாடல் எண் : 5
பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை
அர்ச்சித்தாற் போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே
சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே. 

பொழிப்புரை :  பிறப்புப் பற்றிப் பலராலும் சொல்லப்படுகின்ற `பார்ப்பான்` என்னும் பெயரைமட்டும் பெற்றுச் சிவபிரானிடத்து அன்பும், சிவாகம அறிவும், ஒழுக்கமும் இல்லாத அந்தணன் திருக்கோயிலில் சிவபெருமானைப் பிறர் பொருட்டு வழிபடுவானாயின், அக்கோயிலை உடைய நாட்டில் உள்நாட்டுக் கலகங்களும், வெளி நாட்டுப் போர்களும் விளைதலோடு, அந்நாட்டில் கொடிய நோய்களும், வயல்கள் வன்னிலங்களாய் விளைவில்லாது பஞ்சமும் உளவாகும் என்று எங்கள் திருமரபின் முதல்வராம் சிறப்புப் பொருந்திய நந்திபெருமான் எங்கட்கு ஆகமங்களை ஆய்ந்துரைத் தருளினார்.
=================================================
இரண்டாம் தந்திரம்–பதிகஎண்:20. அதோமுக தரிசனம்(பாடல்கள்:6)

பாடல் எண் : 1
எம்பெரு மான்இறை வாமுறை யோஎன்று
வம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்ல
அம்பவழ் மேனி அறுமுகன் போய்அவர்
தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே.

பொழிப்புரை :  பிரகிருதி புவனத்தில் நிலவுலகத்தில் வாழ்ந்த சூரபதுமனாகிய அசுரனால் விளைந்த துன்பத்தை இயற்கை மணம் கமழும் மேனியராகிய தேவர்கள் விண்ணப்பித்து, `எம் பெருமானே, இறைவனே, முறையோ` என்று சொல்லி முறையிட, `அழகிய பவழம் போலும் மேனியை உடைய அறுமுகன் சென்று அவர்தம் பகைவனை அழிக்க` என்று திருவுளம் பற்றிய பெருமான் சாதாக்கிய தத்துவத்தில் சதாசிவனாய் நிற்கும் அவனே.
=================================================
பாடல் எண் : 2
அண்டமொ டெண்டிசை தாங்கும் அதோமுகம்
கண்டங் கறுத்த கருத்தறி வாரில்லை
உண்டது நஞ்சென் றுரைப்பர் உணர்விலோர்
வெண்டலை மாலை விரிசடை யோற்கே. 

பொழிப்புரை :  சிவபெருமானது அதோமுகமே நிலவுலகத்தைப் புரப்பது. அதற்கு அறிகுறியாகவே அது கறுத்த கண்டத்தையுடைய வடிவினதாய்த் தோன்றுதலை அறிபவர் ஒருவரும் இல்லை. அதனால், பலரும், `அது நஞ்சுண்டது` என்று மட்டுமே கூறி யொழிகின்றனர். இனி அவ்வடிவாகிய கறைமிடற்றண்ணலுக்கு மார்பில் அணியும் மாலையும் இறந்தாரது வெள்ளிய தலைகளால் ஆயதே. அதனது உண்மையையும் அறிவாறில்லை.
=================================================
பாடல் எண் : 3
செய்தான் அறியுஞ் செழுங்கடல் வட்டத்துப்
பொய்யே யுரைத்துப் புகழும் மனிதர்கள்
மெய்யே யுரைக்கில்அவ் விண்ணோர்தொழச் செய்வன்
மைதாழ்ந் திலங்கு மணிமிடற் றோனே. 

பொழிப்புரை :  படைப்பவனாகிய பிரமதேவனது அண்டம் எனப்படும் நிலவட்டத்தின் கண் நின்றுகொண்டு அறியாமை காரணமாக வேறு வேறு தேவரை, `முதற்கடவுள்` என்று சொல்லிக் கொண்டாடுகின்ற மனிதர்கள், அறியாமை நீங்கிப் பரமசிவன் தமக்குக் கறைமிடற்றண்ணலாய் (சீகண்டனாய்) நின்று அருள் புரிதலை உணர்ந்து புகழவல்லாராயின், அவ்வண்ணல் அவர்களை முன்பு அவரால் புகழப்பட்ட தேவர்களே வந்து வணங்குமாறு உயர் நிலையில் வைத்தருளுவன்.
=================================================
பாடல் எண் : 4
நந்தி எழுந்து நடுவுற ஓங்கிய
செந்திக் கலந்துட் சிவனென நிற்கும்
உந்திக் கலந்தங் குலகம் வலம்வரும்
அந்தி இறைவன் அதோமுக மாமே. 

பொழிப்புரை :  சிவபெருமானது அதோமுகம் வடதிசைத் தீ, (ஆகவநீயம் தென்றிசைத்தீ, (தக்கிணாக்கினி) என்னும் இரண்டற்கும் நடுவிலே இல்லத் தீ, (காருகபத்தியம்) எனப் பெயர்பெற்று வளர்ந்து எரிகின்ற தீயினுள் நின்று அதனைச் சிவாக்கினியாகச் செய்யும். இனி ஏனைய இரண்டு தீயினுள்ளும் சென்று கலந்து உலகம் முழுதும் பரவியும் நிற்கும்.
=================================================
பாடல் எண் : 5
அதோமுகங் கீழண்ட மான புராணன்
அதோமுகந் தன்னொடும் எங்கும் முயலும்
சதோமுகத் தொண்மலர்க் கண்ணிப் பிரானும்
சதோமுகன் ஊழித் தலைவனு மாமே.

பொழிப்புரை :  அதோ முகத்தால் அதோ மாயையாகிய அசுத்த மாயையின் காரியங்களாகிய அண்டங்களில் நிறைந்து நிற்கும் பழையோனாகிய சிவபெருமான், அவ்வதோ முகத்தோடே எங்கும் பொருந்தி நின்று செயலாற்றுவான். அதனால், தாமரை மலர் மாலையை அணிந்த பிரமதேவனும், பிரம கற்பத்திற்குத் தலைவனும் அவனேயாவன்.
=================================================
பாடல் எண் : 6
அதோமுக மாமல ராயது கேளும்
அதோமுகத் தாலொரு நூறாய் விரிந்து
அதோமுக மாகிய அந்தமில் சத்தி
அதோமுக மாகி அமர்ந்திருந் தானே. 

பொழிப்புரை :  சிவபெருமானது அதோமுகம் பெரியதொரு தாமரை மலராய் நிற்கும் முறையினைக் கேண்மின்கள்; சுத்த மாயையினின்றும் கீழ்நோக்கி வருகின்ற அவனுடைய அளவில்லாத சத்திகள் அதோமுகமாகி நூறிதழ்களை உடையதாய் விரிந்து நிற்க, அம்மலரின் கண்ணே சிவபெருமான் அமர்ந்திருக்கின்றான்.
=================================================

மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரமாம் திருவாசகத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருவாசகரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!