http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Wednesday 2 May, 2012

திருமந்திரம்-தந்திரம்03-பதிகம்:7 தாரணை (பாடல்கள்:09)







பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
===================================================================
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:01: அட்டாங்க யோகம்...........பாடல்கள்: 004
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:02: இமயம்................................பாடல்கள்: 001
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:03: நியமம்................................பாடல்கள்: 002 
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:04: ஆதனம்..............................பாடல்கள்: 006
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:05: பிரணாயாமம்..................பாடல்கள்: 014
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:02: பிரத்தியாகாரம்..............பாடல்கள்: 010
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:07: தாரணை...........................பாடல்கள்: 009
=======================================================(037+009=046)
மூன்றாம் தந்திரம்-பதிகஎண்:7. தாரணை(பாடல்கள்:9)

பாடல் எண் : 1
கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி
வீணாத்தண் டூடே வெளியுறத் தான்நோக்கிக்
காணாக்கண் கேளாச் செவியென் றிருப்பார்க்கு
வாணாள் அடைக்கும் வழியது வாமே. 

பொழிப்புரை :  கோணுதல் (புலன்வழி ஓடுதல்) உடையதாய் இருந்த மனம், பிரத்தியாகாரத்தில் அதனை விடுத்து ஒருவழிப் பட, அதனை அவ்வழியில் முன்போல மீளாதவாறு குறிக் கொண்டு தடுத்து, சுழுமுனை வழியாக மேலே செல்கின்ற வாயுவே பற்றுக்கோடாக மேற்செலுத்தி, ஆஞ்ஞையை அடையு மாற்றால் அவ்விடத்திலே செய்யும் தியானத்தால் ஐம்பொறிகள் செயலற்றிருக்கும் நிலையை எய்தினவர்கட்கு, அந்நிலைதானே பிறவி வரும் வழியை அடைக்கின்ற உபாயமாகிவிடும்.
=======================================
பாடல் எண் : 2
மலையார் சிரத்திடை வானீர் அருவி
நிலையாரப் பாயும் நெடுநாடி யூடுபோய்ச்
சிலையார் பொதுவில் திருநட மாடும்
தொலையாத ஆனந்தச் சோதி கண் டேனே. 

பொழிப்புரை :  மேருமலையின் உச்சியினின்றும் வானீர் அருவி எப்பொழுதும் வீழ்ந்துகொண்டிருக்கும். வில் வடிவாய் அமைந்த அம்பலத்தில் ஒளிவடிவாகிய சிவன், எல்லையில் இன்பத்தைத் தரும் ஆனந்தத் திருக்கூத்தினை எப்பொழுதும் ஆடிக் கொண்டே இருப்பான். இவ்விரண்டையும் நான் நீண்ட சுழுமுனை நாடி வழியாகச் சென்று கண்டேன்.
=======================================
பாடல் எண் : 3
மேலை நிலத்தினாள் வேதகப் பெண்பிள்ளை
மூல நிலத்தில் துயில்கின்ற மூர்த்தியை
ஏல எழுப்பி இவளுடன் சந்திக்கப்
பாலனும் ஆவான் பராநந்தி ஆணையே. 

பொழிப்புரை :  கருவை ஏற்றுக் குழவியாக மாற்றித் தருகின்ற பெண், மேல் மாடத்தில் எதிர்நோக்கி இருக்கின்றாள். அவளுடன் சேர வேண்டிய ஆடவனோ அடித் தலத்தில் உறங்கிக் கொண்டிருக் கின்றான். அவனை நன்றாக விழித்தெழச் செய்து அப் பெண்டுடன் கூடப்பண்ணினால், நல்ல பாலகன் பிறப்பான்; இதற்கு என் குருவின்மேல் ஆணை.
=======================================
பாடல் எண் : 4
கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி
இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி
மடைவாயிற் கொக்குப் போல் வந்தித் திருப்பார்க்
குடையாமல் ஊழி இருக்கலு மாமே. 

பொழிப்புரை :  பூரக இரேசகம் செய்து கும்பிக்கப்பட்ட பிராணவாயு கீழ்ப்போகாதவாறு எருவாயை அடைத்து அதனால் போகாது நின்ற வாயுவை மூலாதாரம், சுவாதிட்டானம் முதலாக மேல் நோக்கிப் போகச்செய்து, ஆஞ்ஞைக்குக் கீழ் உள்ள இடை ஆதாரங்கள் ஒவ்வொன்றிலும் மனத்தை நன்றாகப் பொருந்த வைத்து, நீர் மடையில் கொக்கு, தான் வேண்டுகின்ற மீன் வரும் வரையில் அதனையே குறிக்கொன்டு நோக்கிச் செயலின்றியிருத்தல் போல, அங்குக் கருதப்படுகின்ற கடவுளரால் அவ்வாதாரயோகம் கைவருமளவும் அவரை வழிபட்டிருப்பவர்கட்கு, யோகநிலை முற்றும் கைவரும் காலம் வரையில் இறவாமலே இருத்தலும் கூடும்.
=======================================
பாடல் எண் : 5
கலந்த உயிருடன் காலம் அறியில்
கலந்த உயிரது காலின் நெருக்கம்
கலந்த உயிரது காலது கட்டிற்
கலந்த உயிருடல் காலமும் நிற்குமே.

பொழிப்புரை :  காலத்தால் கலந்திடப்பட்ட உயிருடன் அக்காலம் கலந்து நிற்கும் இயல்பை ஆராய்ந்து அறியின், அது பிராண வாயுவின் திட்பமேயாம். ஆகவே, அந்த உயிர் பிராண வாயுவை அடக்கும் முறையை அறிந்துகொள்ளுமாயின், உயிர் நிற்பது போலவே அதனைக் கலந்து நிற்கின்ற காலமும் ஓடாது ஒரு நிலையாய் நிற்கும்.
=======================================
பாடல் எண் : 6
வாய்திற வாதார் மனத்திலோர் மாடுண்டு
வாய்திறப் பாரே வளியிட்டுப் பாய்ச்சுவர்
வாய்திற வாதார் மதியிட்டு மூட்டுவர்
கோய்திற வாவிடிற் கோழையு மாமே. 

பொழிப்புரை :  யாவரிடத்திலும் உள்ளமாகிய கருவூலத்தில் ஒரு பெருஞ்செல்வம் உள்ளது. ஆயினும், அக்கருவூலத்திற்கு வாயிலாய் உள்ள சுழுமுனை வழியைத் திறக்க மாட்டாதவர் அச்செல்வத்தை எய்தப் பெறார். அவ்வழியைத் திறக்க விரும்புவோர் பிராண வாயுவை அங்குக் கும்பகம் செய்து திறந்து கும்பித்த அவ்வாயுவை உள்ளே பாய்ச்சுவர். அது செய்யாதோர் மேற்கூறிய செல்வத்தைப் பெறுதற்குத் தம் அறிவை அக்கருவூலத்தின் புறத்தே மோதவிட்டு அல்லற்படுவர். கருவூலத்தைத் திறவாமலே அதிலுள்ள செல்வத்தைப் பெற முயலுபவன் அதனைப் பெறாது பாழுக்கு உழைப்பவனாதலேயன்றி, `அறிவிலி` என அறிவுடையாரால் இகழவும் படுவான்.
=======================================
பாடல் எண் : 7
வாழலு மாம்பல காலம் மனத்திடைப்
போழ்கின்ற வாயு புறம் படாப் பாய்ச்சுறில்
ஏழுசா லேகம் இரண்டு பெருவாய்தற்
பாழி பெரியதோர் பள்ளி அறையே.

பொழிப்புரை :  சுழுமுனை வழியை ஊடறுத்துச் செல்ல வல்ல தாகிய பிராணவாயுவைப் புறத்துப் போகாதவாறு தடுத்து அச்சுழு முனை வழியுட் பாய்ச்சினால் ஏழு பலகணிகளையும், `தலைவாயில், கடைவாயில்` என்னும் இரண்டு பெரு வாயில்களையும் உடைய பாழ் வீடு இன்பமாகக் கிடந்து உறங்கத் தக்க நல்ல பள்ளியறை யாய்விடும். அப்பொழுது அதில் ஆதாரங்களாகிய கட்டிலிற் கிடந்து பல காலம் இன்புற்றிருக்கலாம்.
=======================================
பாடல் எண் : 8
நிரம்பிய ஈரைந்தில் ஐந்திவை போனால்
இரங்கி விழித்திருந் தென்செய்வை பேதாய்
வரம்பினைக் கோலி வழிசெய்கு வார்க்குக்
குரங்கினைக் கோட்டை பொதியலு மாமே.

முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர்
பின்னை வந்தவர்க் கென்ன பிரமாணம்
முன்னுறு கோடி உறுகதி பேசிடில்
என்ன மாயம் இடிகரை நிற்குமே.

பொழிப்புரை :  ஒன்றும் அறியாத மாணவனே! உடம்பினுள் நிறைந்திருக்கின்ற பத்து வாயுக்களில் இயங்கும் வாயுக்கள் ஐந்து வீணாய்ப் போய்விட்டால், நீ விழித்திருந்தும் என் செய்ய மாட்டுவாய்! கழிந்ததற்கு இரங்கி நிற்பவனேயாவாய். ஆகையால், பிராணா யாமத்திற்குக் கூறிய முறையைக் கடைப்பிடித்துப் பிராண வாயு மேலேறுதற்கு வழியை உண்டாக்குபவர்கட்கு, மனமாகிய குரங்கை ஆதாரங்களாகிய கோட்டையை விட்டுப் புறத்தே குதித்து ஓடாதபடி நிற்கச் செய்தலும் கூடும்.
=======================================
பாடல் எண் : 9
அரித்த வுடலைஐம் பூதத்தில் வைத்துப்
பொருத்தஐம் பூதம்சத் தாதியிற் போந்து
தெரித்த மனாதிசித் தாதியிற் செல்லத்
தரித்தது தாரணை தற்பரத் தோடே. 

பொழிப்புரை :  தாரணையை மேற்கூறிய பாவனையளவில் செய்யாது, தத்துவ ஞானத்தைப் பெற்று அதன் வழிச் செய்யின், அஃது இறைவனோடே ஒன்றி நிற்பதாகும்.
=======================================

மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமூலரின் திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!