http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Sunday 20 May, 2012

திருமந்திரம்-தந்திரம்04: பதிகம் எண் :06/2. வயிரவி மந்திரம் (பாடல்கள்:26-50/50)பாகம் II








பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.

பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
================================================================== 

நான்காம் தந்திரம்:பதிக எண்:01: அசபை ............................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:02: திருவம்பலச் சக்கரம் ...பாடல்கள்: 089
நான்காம் தந்திரம்:பதிக எண்:03: அருச்சனை........................பாடல்கள்: 012
நான்காம் தந்திரம்:பதிக எண்:03: அருச்சனை.....................பாடல்கள்: 012
நான்காம் தந்திரம்:பதிக எண்:04: நவகுண்டம்....................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:05: சத்தி பேதம்....................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:06: வயிரவி மந்திரம்..........பாடல்கள்: 050

====================================================(191+050=241)
நான்காம் தந்திரம்-பதிகம் எண்:06/2. வயிரவி மந்திரம் (பாடல்கள்:26-50/50) பகுதி-II


பாடல் எண் : 26
கோலக் குழலி குலாய புருவத்தள்
நீலக் குவளை மலரன்ன கண்ணினாள்
ஆலிக்கும் இன்னமு தானந்த சுந்தரி
மேலைச் சிவத்தை வெளிப்படுத் தாளே.

பொழிப்புரை :  `அழகிய கூந்தல், வளைந்த புருவம்` நீல நிறத்தை உடைய குவளை மலர்போலும் கண்கள்` களிப்பைத் தருகின்ற இனிய அமுதம் போன்ற ஆனந்தமே உருவான அழகிய வடிவம், இவைகளை உடைய வயிரவியே எப்பொருட்கும் மேலான சிவத்தை உயிர்கட்கு வெளிப்பட்டுத் தோன்றச் செய்தாள்.
==============================================

பாடல் எண் : 27
வெளிப்படு வித்து விளைவறி வித்துத்
தெளிப்படு வித்தென்றன் சிந்தையி னுள்ளே
களிப்படு வித்துக் கதிர்ப்படு சோதி
ஒளிப்படுவித்தென்னை உய்யக்கொண் டாளே.

பொழிப்புரை :  முன்னே சிவத்தை வெளிப்படுவித்துக் காணச் செய்து, பின் அக்காட்சியின் பயனாக முற்றறிவையும், முற்றறிவின் பயனாகத்தெளிவையும், தெளிவின், பயனாக இன்ப அனுபவத்தையும், அவ்வனுபவத்தின் பயனாக, சிவத்தைவிட்டு நீங்காது அதனுள்ளே அடங்கியிருத்தலையும் முறையே பெறச் செய்து என்னை உய்யக் கொண்டாள் வயிரவி.
==============================================

பாடல் எண் : 28
கொண்டனள் கோலம் கோடி அனேகங்கள்
கண்டனள் எண்ணெண் கலையின்கண் மாலைகள்
விண்டனள் மேலை விரிகதிர் மூன்றையும்
தண்டலை மேல்நின்ற தையல்நல் லாளே.

பொழிப்புரை :  வணங்குவாரது உச்சிமேல் நிற்பவளாகிய `வயிரவி` என்னும் நல்ல சத்தி, அளவிறந்த வடிவுகளைக் கொண்டாள், கொண்டு, அக இருளை நீக்குதற்கு `அறுபத்து நான்கு` எனப்படும் கலைத்துறைகள் அனைத்திலும் நூல்களை ஆக்கினாள். புற இருளைப் போக்குதற்கு வானத்தில் விளங்கும் ஞாயிறு, திங்கள், தீ என்னும் மூன்று ஒளிகளையும் படைத்தாள்.
==============================================

பாடல் எண் : 29
தையல்நல் லாளைத் தவத்தின் தலைவியை
மையலை நூக்கும் மனோன்மனி மங்கையைப்
பையநின் றேத்திப் பணிமின் பணிந்தபின்
வெய்ய பவம்இனி மேவகி லாவே.

பொழிப்புரை :  (இதன் பொருள் வெளிப்படை.)
குறிப்புரை :  ``பைய`` என்றது, `இயன்ற அளவு` என்றவாறு, அவளது பெருமை முழுவதையும் அறிந்து துதித்தலும், அப்பெருமை யளவிற்குத் தக வழிபடுதலும் ஒருவர்க்கும் கூடாமையின் ``பைய`` என்றார். மலையளவு சுவாமிக்குக் கடுகளவு கர்ப்பூரம்` என்பது பழமொழி.
``
ஏழை அடியார் அவர்கள் யாவைசொன
சொல்மகிழும் ஈசன்`` 2...  என்பதில் ஞானசம்பந்தர். அடியார்களை, `ஏழை அடியார்`` என்றருளிச் செய்ததும் இக்கருத்துப் பற்றி,
``
யானறி யளவையின் ஏத்தி ஆனாது
நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின்
நின்னடி உள்ளி வந்தனென்`` 3 ....என்றார் முருகாற்றுப்படையிலும், நூக்குதல் - போக்குதல். பவம் - பிறப்பு.  இதனால், சத்தியது பெருமையும், உயிர்களது சிறுமையும் கூறுமுகத்தால், உயிர்கள் அவளை வழிபடும் கடப்பாடுடையன வாதல் கூறப்பட்டது.
==============================================

பாடல் எண் : 30
வேயன தோளி விரையுறு மென்மலர்
ஏய குழலி இளம்பிறை ஏந்திழை
தூய சடைமுடிச் சூலினி சுந்தரி
ஏயென துள்ளத் தினிதிருந் தாளே.

பொழிப்புரை :  [ இதன் பொருள் வெளிப்படை.]
குறிப்புரை : வேய் - மூங்கில். விரை - நறுமணம். ஏய - பொருந்திய. குழல் - கூந்தல். பிறையைச் சூடிய ஏந்திழை` என்க. பிறை சடையில் உள்ளது. சூலினி - சூலத்தை ஏந்தியவள். ஏய் உள்ளம் - தான் இருத்தற்குப் பொருந்திய உள்ளம்; அஃதாவது, அறிவும், அன்பும் நிரம்பிய உள்ளம். ``சுந்தரி`` என்பதை ``குழலி`` என்பதன் பின்னர்க் கூட்டி, அது காறும் ஒருவகைக் கோலமும், பின், ``சூலினி`` என்பது காறும் வேறொரு வகைக் கோலமும் ஆக இருவேறு வடிவங்களைக் கூறினமை கொள்க. முன்னது அமைதிக் கோலமும், பின்னது கடுமைக் கோலமுமாதல் அறிக. எழுவாய் அதிகாரத்தால் வந்து இயைந்தது.  இது முதல் ஐந்து மந்திரங்களால் சத்தி தமக்கு அருள் புரிந்தவாறு கூறினார் என்க.
==============================================
பாடல் எண் : 31
இனியதென் மூலை இருக்குங் குமரி
தனியொரு நாயகி தானே தலைவி
தனிப்படு வித்தனள் சார்வு படுத்து
நனிப்படு வித்துள்ளம் நாடிநின் றாளே.

பொழிப்புரை :  தென்கோடியில் உள்ள இனிய கடற்கரையில் எழுந்தருளியிருக்கும் குமரியாகிய வயிரவி, தன்னோடு இணை ஒருவர் இல்லாத ஒப்பற்ற தலைவி; அதனால், அவள் ஒருத்தியே உலகத்திற்கு முதல்வி. அவள் என்னை உலகச் சார்பினின்றும் நீக்கித் தனியனாகச் செய்து, பின் தனது துணைமையில் இருக்கவைத்து, இன்பத்தை மிக உண்டாக்கி, இவ்வாறு என் உள்ளத்தில் நின்று பயனளித்தாள்.
==============================================

பாடல் எண் : 32
நாடிகள் மூன்றுள் நடுவெழு ஞாளத்துக்
கூடி யிருக்கும் குமரி குலக்கன்னி
பாடகச் சீறடி பைம்பொற் சிலம்பொலி
ஊடகம் மேவி உறங்குகின் றேனே.

பொழிப்புரை :  `இடை, பிங்கலை, சுழுமுனை` என்னும் மூன்று நாடிகளுள் நடுவிலே ஓங்குகின்ற நாளம் போல்வதாகிய சுழுமுனை நாடியுள்ளே பொருந்தி நின்ற, இளையவளும், கன்னிகையும் ஆகிய சத்தியது பாடகம் அணிந்த சிறிய பாதத்திலே உள்ள பசிய பொன்னா லாகிய சிலம்பினது ஒலி அந்த நாடிக்குள்ளே ஒலித்துக் கொண்டிருக் கவும் அதனைக் கேட்கமாட்டாமல் உறங்குகின்றேன் என்றால், எனது அறியாமையை என்னென்பது.
==============================================

பாடல் எண் : 33
உறங்கு மளவில் மனோன்மனி வந்து
கறங்கு வளைக்கைக் கழுத்தாரப் புல்லிப்
பிறங்கொளித் தம்பலம் வாயில் உமிழ்ந்திட்
டுறங்கல்ஐ யாஎன் றுபாயஞ்செய் தாளே.

பொழிப்புரை :  மேற் கூறியவாறு யான் உறங்கிக் கொண்டு இருக்கும் பொழுது மனோன்மனியாகிய சத்தி வந்து, ஒலிக்கின்ற வளையணிந்த தனது கைகள் என் கழுத்திற் பொருந்தும்படிக் கட்டிக்கொண்டு, விளங்குகின்ற ஒளியை உடைய தம்பலத்தை என் வாயில் உமிழ்ந்து உடனே `யான் சிறிது விழித்தபொழுது, ஐயா உறங்கியே காலத்தைக் கழிக்காதே` என்று சொல்லி, உறக்கம் வாராதிருத்தற்கு வழியும் செய்தாள்.
==============================================

பாடல் எண் : 34
உபாயம் அளிக்கும் ஒருத்திஎன் உள்ளத்
தபாயம் அறக்கெடுத் தன்பு விளைத்துச்
சுவாவை விளக்கும் சுழியகத் துள்ளே
அவாவை யடக்கிவைத் தஞ்சல்என் றாளே.

பொழிப்புரை :  எல்லாவற்றுக்கும் வழியைத் தருகின்ற ஒப்பற்றவள் ஆகிய சத்தி எனது மனத்தில் உண்டாகின்ற தீங்குளையெல்லாம் அறவே போக்கி, அவ்விடத்தில் அன்பு விளையச் செய்து, நல்லாள் ஆகிய குண்டலியை விளங்கச் செய்கின்ற சுழுமுனை நாடியினுள்ளே எனது மனத்தை ஒடுங்கப் பண்ணி `இனி நீ எதற்கும் அஞ்சவேண்டா` என்று என் அச்சத்தை நீக்கியருளினாள்.
==============================================

பாடல் எண் : 35
அஞ்சொல் மொழியாள் அருந்தவப் பெண்பிள்ளை
செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை
தஞ்சம்என் றெண்ணித்தன் சேவடி போற்றுவார்க்
கின்சொல் லளிக்கும் இறைவிஎன் றாரே.

பொழிப்புரை :  `சத்தி தனது திருவடியையே தஞ்சமாகக் கருதிப் போற்றுபவர்க்கே அருள்புரியும் இறைவியாவாள்` என்று அறிந்தோர் சொல்லுவர்.
==============================================

பாடல் எண் : 36
ஆருயி ராயும் அருந்தவப் பெண்பிள்ளை
காரியல் கோதையள் காரணி நாரணி
ஊரும் உயிரும் உலகும் ஒடுக்கிடும்
கோரிஎன் உள்ளங் குலாவிநின் றாளே.

பொழிப்புரை :  சத்தியானவள், அரிய உயிர்களின் பக்குவங்களையே எப்பொழுதும் நோக்கி நிற்பவளாதலின், இயல்பிலே அவள் ஞானத்தைத் தருகின்ற சாந்த ரூபியாயினும், உயிர்களது அபக்குவ நிலைபற்றிப் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் துன்பத்திற்கு ஏதுவான தொழில்களைச் செய்பவளாகின்றாள். எனினும், என் உள்ளத்தில் அவள் சாந்தரூபியாயே விளங்குகின்றாள்.
==============================================

பாடல் எண் : 37
குலாவிய கோலக் குமரிஎன் னுள்ளம்
நிலாவி யிருந்து நெடுநாள் அணைந்தும்
உலாவி யிருந்துணர்ந் துச்சியி னுள்ளே
கலாவி யிருந்த கலைத்தலை யாளே.

பொழிப்புரை :  மேற்கூறியவாறு என் உள்ளத்திலே மகிழ்ச்சியோடு இருக்கின்ற அந்தச் சத்தி அவ்வாறு அளவற்ற காலங்கள் இருந்தும் நீங்குதல் இல்லாதவளாய், நான் பிராசாத யோகத்திலே உழன்று நின்ற பொழுது அதன் கலைகளில் முடிவானதற்கு இடமாகிய துவாத சாந்தத்தில் பொருந்தி நிற்பவளாயினாள்.
==============================================

பாடல் எண் : 38
கலைத்தலை நெற்றிஓர் கண்ணுடைக் கண்ணுள்
முலைத்தலை மங்கை முயங்கி யிருக்கும்
சிலைத்தலை யாய தெரிவினை நோக்கி
அலைத்தபூங் கொம்பினள் ஆங்கிருந் தாளே.

பொழிப்புரை :  மேற் கூறிய அச்சத்தி, உன்மனாகலையின் இடமாகிய அந்தத் துவாத சாந்தத்தில் தான் தனியே இராது சிவத்தோடு கூடியே விளங்குவாள். அவ்வாறு விளங்குதல், பிராசாத யோகிகட்கு அவ்யோகத்தால் புருவ நடுவில் அவ்வப்பொழுது புதிது புதிதாகத் தோன்றுகின்ற உணர்வைக் கண்டுகொண்டேயாம்.
==============================================

பாடல் எண் : 39
இருந்தனள் ஏந்திழை என்னுள்ளம் மேவிப்
பொருந்திரு நால்விரல் புக்கனள் புல்லித்
திருந்திய தாணுவில் சேர்ந்துடன் ஒன்றி
அருந்தவம் எய்தினள் ஆதியி னாளே.

பொழிப்புரை :  என் இருதயத்தில் இருப்பவளாகிய அந்தச் சத்தி, மேற்கூறியவாறு சிவனுடன் துவாதசாந்தத்தில் விளங்குதல், பிராசாத யோகத்தைப் பற்றி இருதயத் தினின்றும் எழுந்து கண்டத்தானத்தை அடைந்து, அதன்பின்னர் அங்கு நின்றும் துவாதசாந்தத்தில் சென்றேயாம். அந்நிலையும் பழமையானதேயன்றிப் புதியதன்று.
==============================================

பாடல் எண் : 40
ஆதி அனாதி அகாரணி காரணி
சோதி அசோதி சுகபர சுந்தரி
மாது சாமாதி மனோன்மனி மங்கலி
ஓதிஎன் உள்ளத் துடன்இயைந் தாளே.

பொழிப்புரை :  என் உள்ளத்தில் இருந்துகொண்டு எனக்கு எல்லா வற்றையும் அறிவித்துக் கொண்டு என்னோடு உடனாய் இயைந்திருக்கின்ற சத்தி, ஆதியாதல் முதலிய பல பெருமைகளை உடையவள்.
==============================================

பாடல் எண் : 41
இயைந்தனள் ஏந்திழை என்னுள்ளம் மேவி
நயந்தனள் அங்கே நமசிவ என்னும்
பயன்தனை ஓரும் பதமது பற்றும்
பெயர்ந்தனள் மற்றுப் பிதற்றறுத் தாளே.

பொழிப்புரை :  சத்தி எனது உள்ளத்தில் பொருந்தியதனோடு அதனை விரும்பியும் இருக்கின்றாள். அவள், நான் அஞ்செழுத்தை ஓதி உணரும் பொழுது அவ்விடத்தைப் பற்றியிருக்கின்றாள். அதனை ஓதாத பொழுது நீங்கிவிடுகின்றாள். ஆயினும், பிற மந்திரங்களையும், பயனில்லாத சொற்களைப் பேசுதலையும் என்னிடத்தினின்றும் நீக்கிவிட்டாள்.
==============================================

பாடல் எண் : 42
பிதற்றிக் கழிந்தனர் பேதை மனிதர்
முயற்றியின் முத்தி யருளும் முதல்வி
கயற்றிகழ் முக்கண்ணும் கம்பலைச் செவ்வாய்
முகத்தருள் நோக்கமும் முன்னுள்ள வாமே.

பொழிப்புரை :  ஞானத்தைக் கொடுத்துப் பின் அது வழியாக முத்தியைத் தருகின்ற முதல்வியாகிய சத்தியது கயல்போலும் மூன்று கண்களும், அறைகூவி அருள்செய்கின்ற சிவந்த வாயும், முகத்திலே உள்ளதாகிய திருவருட் பார்வையும் அடியார்களுக்குத் கண்முன் னாகவே நிற்பனவாயிருக்க, அவைகளை எண்ணித் துதியாமல் அறிவில்லாத மக்கள் எதைஎதையோ பிதற்றிவிட்டுப் போய்விடுகின்றார்கள்; அவர்தம் அறியாமை இருந்தவாறு என்!
==============================================

பாடல் எண் : 43
உள்ளத் திதயத்து நெஞ்சத் தொருமூன்றுள்
பிள்ளைத் தடம்உள்ளே பேசப் பிறந்தது
வள்ளற் றிருவின் வயிற்றினுள் மாமாயைக்
கள்ள ஒளியின் கருத்தாகுங் கன்னியே.

பொழிப்புரை :  பரசிவத்தினது சத்தியாகிய பராசத்தியது வயிற்றில் உள்ள சுத்த மாயையின் தோன்றி மறையும் ஒளியாகிய கருவினுள் நிற்பவளாகிய ஆதி சத்தி, பிள்ளையாய்ப் பிறந்து தவழும் இடமும் அகத்து உள்ளதாகவே சொல்லும்படி அங்குப் பிறந்தது, `சித்தம், புத்தி, மனம்` என்னும் மூன்றனிடத்துமாம்.
==============================================

பாடல் எண் : 44
கன்னியும் கன்னி அழிந்திலள் காதலி
துன்னிஅங் கைவரைப் பெற்றனள் தூய்மொழி
பன்னிய நன்னூற் பகவரும் அங்குளர்
என்னேஇம் மாயை இருளது தானே.

பொழிப்புரை :  பராசக்தியின் வயிற்றினின்றும் பிறந்த ஆதி சத்தியாகிய பெண் தனது கன்னித்தன்மை அழியாமலே ஒருவனுக்கு மனைவியாய்ப் பொருந்தி ஐவர்மக்களைப் பெற்றாள். அவர்கள்பால் நல்ல நூல்களைக் கேட்டுணர்ந்த அறிவரும் பலர் உளர். இவ்வியப்புதான் என்னே!
==============================================

பாடல் எண் : 45
இருளது சத்தி வெளியதெம் அண்ணல்
பொருளது புண்ணியர் போகத்துள் இன்பம்
தெருளது சிந்தையைத் தெய்வம்என் றெண்ணில்
அருளது செய்யும்எம் ஆதிப் பிரானே.

பொழிப்புரை :  சிவம் வெளிப்படாது நிற்க நிகழும் செயல்களெல்லாம் ஆதிசக்தியுடையன. அவற்றின் பயனாகப் பின்னர்ச் சிவம் வெளிப்படுவதாகும். அவ்வெளிப்பாட்டினைப் பெற்ற புண்ணியர்கள் இம்மையிலும் பொருளாகத் தெளிவது சிவானந்தம் ஒன்றையே. அத்தகைய தெளிவைப் பெற்ற உள்ளமே சிவனுக்கு இருப்பிடம் என்று அறிந்தால், சிவன் முன்னின்று அருள்செய்வான்.
==============================================

பாடல் எண் : 46
ஆதி அனாதியும் ஆய பராசத்தி
பாதி பராபரை மேலுறை பைந்தொடி
மாது சமாதி மனோன்மனி மங்கலி
ஓதுமென் உள்ளத் துடன்முகிழ்த் தாளே.

பொழிப்புரை :  உலகத்தைத் தோற்றுவிக்க நினைப்பவளும், அத்தோற்றத்திற்கு முன்னே உள்ளவளும், சிவத்தில் செம்பாதியாய் நிற்பவளும் ஆகிய பராசத்தி, எல்லாப்பொருளிலும் நிறைந்து, அவற்றிற்கு அப்பாலும் உள்ளவளாய்ப் பின்பு சமாதியில் மேற் கூறியவாறு மனோன்மனியாயும், நன்மையையே உடையவளாயும் உள்ள அவளைத் துதிக்கின்ற எனது உள்ளத்தில் விரையத் தோன்றினாள்.
==============================================

பாடல் எண் : 47
ஓதிய வண்ணம் கலையின் உயர்கலை
ஆதிஇல் வேதமே யாம்என் றறிகிலர்
சாதியும் பேதமும் தத்துவ மாய்நிற்பள்
ஆதிஎன் றோதினள் ஆவின் கிழத்தியே.

பொழிப்புரை :  `பிறப்புக்கள் பலவும், பலவேறு வகைப்பட்ட ஏனைப் பொருள்களும், அவற்றிற்கு முதலாகிய தத்துவங் களுமாய் ஆதி சத்தி ஒருத்தியே நிற்பாள்` என்று ஆவுருவாய் நிற்கும் பெருமாட்டி எனக்கு அறிவித்தாள். எல்லா நூல்களிலும் மேம்பட்டதும், தனக்கு ஒரு முதல்நூல் இன்றித் தானே முதல் நூலாய் நிற்பதுமாகிய வேதம் சொல்லிய முறையும் இதுவே என்பதைப் பலர் அறிந்திலர்.
==============================================

பாடல் எண் : 48
ஆவின் கிழத்தி நல் ஆவடு தண்டுறை
நாவின் கிழத்தி நலம்புகழ்ந் தேத்திடும்
தேவின் கிழத்தி திருவாம் சிவமங்கை
மேவுங் கிழத்தி வினைகடிந் தாளே.

பொழிப்புரை :  ஆவுருவாய் நின்ற பெருமாட்டி திருவாவடு துறையில் பக்குவர்களுக்கு உண்மையை யுணர்த்துபவளும், தனது நன்மைகளை உயர்ந்தோர் பலரும் எடுத்துக் கூறித் துதிக்கின்ற கடவுள் தன்மை உடையவளும், முத்திச் செல்வத்தை உயிர்கள் அடைதற்கு ஏதுவான சிவசத்தியாய் நிற்பவளுமாய் இருந்து, உயிர்களின் சஞ்சித வினையை நீக்குகின்றாள்.
==============================================

பாடல் எண் : 49
வினைகடிந் தார்உள்ளத் துள்ளொளி மேவித்
தனையடைந் தோர்க்கெல்லாம் தத்துவ மாய்நிற்பள்
எனையடி மைக்கொண்ட ஏந்திழை ஈசன்
கணவனைக் காண அனாதியு மாமே.

பொழிப்புரை :  என்னை அடிமையாகக் கொண்ட அந்தத் தலைவி, வினை நீங்கியவரது உள்ளத்தில் ஞானமாய் நின்று, தன்னைப் புகலிட மாக அடைந்தவர்க்கெல்லாம் மெய்ப்பொருளாய் (சத்தாகி) நிற்பாள். இனி அவள், சிவனிடத்தில் அவனைத் தலைப்பட்டுணரும் பொழுது அவனோடு இயற்கையாயுள்ள எண் குணங்களாயும் நிற்பாள்.
==============================================

பாடல் எண் : 50
ஆதி அனாதி அகாரணி காரணி
வேதம தாய்ந்தனள் வேதியர்க் காய் நின்ற
சோதி தனிச்சுடர்ச் சொரூபம தாய்நிற்கும்
பாதி பராபரை பன்னிரண் டாதியே.

பொழிப்புரை :  சத்தியே வேதியர்கள் பொருட்டு வேதத்தை நுட்பமாக ஓதியும், உணர்த்தியும் நின்றாள். ஒளி வடிவினனாகிய சிவனுக்கு அவ்வுருவமும் ஆவாள். பன்னிரு கலையை உடைய பிரணவ ரூபியாகிய குண்டலியாயும் விளங்குவாள்.
==============================================


மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!