http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Sunday 20 May, 2012

திருமந்திரம்- தந்திரம்04:பதிகம் எண் :1/2. அசபை (பாடல்கள்:16-30/30) பாகம்-II






 
பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
====================================================

நான்காம் தந்திரம்:பதிக எண்:01: அசபை .................................பாடல்கள்: 030
========================================================(000+030=030)
நான்காம் தந்திரம்-பதிகம் எண்:1. அசபை .
(பாடல்கள்:16-30/30)பாகம்-II


பாடல் எண் : 16
ஏழா யிரமாய் இருபதாய் முப்பதாய்
ஏழா யிரத்தும் எழுகோடி தானாகி
ஏழா யிரத்துயிர் எண்ணிலா மந்திரம்
ஏழாய் இரண்டாய் இருக்கின்ற வாறே.

பொழிப்புரை :  மந்திரங்கள் அளவற்றனவாய் நின்று அளவற்ற உயிர்களில் நிற்பினும் அவை அனைத்தும் ஐம்பதெழுத்திற்குள்ளும், `ஏழு கோடி` என்னும் வகைக்குள்ளும், `ஏழு, இரண்டு` என்னும் வடிவத்துள்ளும், அடங்கி நிற்கும் முறைமை அறியத்தக்கது.
=============================================
பாடல் எண் : 17
இருக்கின்ற மந்திரம் ஏழா யிரமாம்
இருக்கின்ற மந்திரம் எத்திறம் இல்லை
இருக்கின்ற மந்திரம் சிவன்திரு மேனி
இருக்கின்ற மந்திரம் இவ்வண்ணந் தானே.

பொழிப்புரை :  உண்மையில் உள்ள மந்திரங்கள் அளவற்றன. எந்தப் பொருட்கு மந்திரம் இல்லை! அனைத்து மந்திரங்களும் சிவனது திருமேனியே. அவற்றின் உண்மை இதுவே.
=============================================
பாடல் எண் : 18
தானே தனக்குத் தகுநட்டந் தானாகும்
தானே அகார உகாரம தாய்நிற்கும்
தானேரீங் காரம்அத் தத்துவக் கூத்துக்குத்
தானே உலகில் தனிநடந் தானே.

பொழிப்புரை :  சிவன், தானே தான் ஆடத்தக்க கூத்து வகைகளை வகுத்துக்கொள்வான்; பின்பு அக்கூத்துக்களை மந்திரங்களையே வடிவாகக்கொண்டு ஆடுவான். அக்கூத்து வகைகளுள் சத்தியின் கூத்திலும் தான் நிறைந்து நிற்பான். சில கூத்துக்களைத் தன்னுடையனவாகவே ஆடி நிற்பான்.
=============================================
பாடல் எண் : 19
நடம்இரண் டொன்றே நளினமதாய் நிற்கும்
நடம்இரண் டொன்றே நமன்செய்யுங் கூத்து
நடம்இரண் டொன்றே நகைசெயா மந்திரம்
நடம்சிவ லிங்கம் நலம்செம்பு பொன்னே.

பொழிப்புரை :  ``தனிநடம்`` என மேற்குறிக்கப்பட்ட சிவ நடனம் இருவகைத்து. ஒன்று இன்பத்தையே தரும்; மற்றொன்று துன்பத்தையே தரும். துன்பத்தைத் தருவது மறைத்தலைச் செய்கின்ற எழுத்துக்களை முதலாகக் கொண்ட மந்திரத்தையே வடிவமாகக் கொள்ளும்; இன்பத்தைத் தருவது விளக்கத்தைச் செய்கின்ற எழுத்துக்களை முதலாகக் கொண்ட மந்திரத்தையே வடிவமாகக் கொள்ளும். பின்னதனால் விளைகின்ற நலம் செம்பு பொன்னானது போல அதியற்புதம் உடையதாகும்.
=============================================
பாடல் எண் : 20
செம்புபொன் னாகும் சிவாய நமஎன்னில்
செம்புபொன் னாகத் திரண்டது சிற்பரம்
செம்புபொன் னாகும் சிறீயும் கிரீயும்எனச்
செம்புபொன் னான திருவம் பலமே.

பொழிப்புரை :  மேற்கூறிய, செம்பு பொன்னாவது போன்ற அதிசயப் பயன் மேற்கூறிய ஞானநடனத்தின் வடிவாய் அமைந்த `சிவாயநம` என்பதை ஓதினால் கிடைக்கும். அப்பயன் உயிர்கட்குக் கிடைத்தற்பொருட்டே சிவன் அம்மந்திர வடிவைக் கொண்டான். இனி, `ஷ்ரீம், ஹ்ரீம்` என்பன அவ்வடிவம் நிற்கும் செம்பொன் மயமான திருவம்பலமாகிய சத்தியின் எழுத்துக்களாதலின், அவற்றை ஓதினாலும் மேலை மந்திரத்திற் சொல்லிய பயன் விளைவதாம்.
=============================================
பாடல் எண் : 21
திருவம் பலமாகச் சீர்ச்சக் கரத்தைத்
திருவம் பலமாக ஈராறு கீறித்
திருவம் பலமா இருபத்தஞ் சாக்கித்
திருவம் பலமாச் செபிக்கின்ற வாறே.

பொழிப்புரை :  சக்கர வழிபாட்டில் திருவம்பலம் அமைதற்கு அச்சிறப்பினதாகிய சக்கரத்தை நெடுக்கில் ஆறு கீற்றும், குறுக்கில் ஆறு கீற்றும் கீறி இருபத்தைந்து அறைகளாகத் தோற்றுவித்து மந்திர எழுத்துக்களை உரிய முறையால் அவ்வறைகளில் பொறித்து வழிபட்டுச் செபிக்க.
=============================================
பாடல் எண் : 22
வாறே சிவாய நமச்சிவா யந்நம
வாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பில்லை
வாறே அருளால் வளர்கூத்துக் காணலாம்
வாறே செபிக்கில் வருஞ்செம்பு பொன்னே.

பொழிப்புரை :  மேற்கூறிய முறையால் ஞான நடனத்தின் வடிவமாகிய, `சிவாயநம` என்னும் மந்திரத்தைப் பலகாலும், தொடரஓதிப் பயின்றால் இறப்பும், பிறப்பும் இல்லையாகும். அதற்குமுன்னே அவ்வோதுதலானே ஞானநடனத்தை நேரே காணுதல் கூடும். முன்னே சொன்ன செம்பு பொன்னானது போன்ற பயனாகிய சிவமாந்தன்மைப் பெரு வாழ்வும் கிடைக்கும்.
=============================================
பாடல் எண் : 23
பொன்னான மந்திரம் புகலவும் ஒண்ணாது
பொன்னான மந்திரம் பொறிகிஞ் சுகத்தாகும்
பொன்னான மந்திரம் புகைஉண்டு பூரிக்கில்
பொன்னாகும் வல்லோர்க் குடம்புபொற் பாதமே.

பொழிப்புரை :  பொன்போலச் சிறந்ததாகிய மேற் சொன்ன மந்திரம் வாயாற் சொல்லப்படாது. அதனால், அது மேற்கூறிய சக்கரத்துள் குங்குமத்தால் பொறிக்கப்படும். அங்ஙனம் பொறிக்கப்பட்ட அது தூப தீபங்களை ஏற்று மகிழுமாயின், அவ்வாறு மகிழ்விப்போரது உடம்பு பொன்போல ஒளிவிட்டு விளங்கும். மேலும், அதனை நன்கு வழிபட வல்லவர்க்கு அதனால் விளையும் பெரும் பயன், சிவபெருமானது பொன்போலும் திருவடியை அடைதலாகும்; அஃதாவது, `சிவனது அருள் கைவரப்பெறுதல் கூடும்` என்பதாம்.
=============================================
பாடல் எண் : 24
பொற்பாதம் காணலால் புத்திரர் உண்டாகும்
பொற்பாதத் தாணையே செம்புபொன் னாயிடும்
பொற்பாதங் காணத் திருமேனி யாயிடும்
பொற்பாதம் நன்னடஞ் சிந்தனை சொல்லுமே.

பொழிப்புரை :  திருவருள் கைவரப் பெறுதலால் சிவனுக்கு மைந்தராம் தன்மை உளதாகும்; `செம்பு பொன்னாதல் போல்வது` என மேலெல்லாம் சொல்லிவந்த சிவமாம் தன்மையும் கிடைக்கும். அதனால், மாயாகாரிய உடம்பும் சிவனது அருள்மயமான உடம்பாய்விடும். ஞான நடனத்தின் உண்மை தெளிவாகும்.
=============================================
பாடல் எண் : 25
சொல்லும் ஒருகூட்டில் புக்குச் சுகிக்கலாம்
நல்ல மடவாள் நயந்துட னேவரும்
சொல்லினும் பாசச் சுடர்ப்பாம்பு நீங்கிடும்
சொல்லும் திருக்கூத்தின் சூக்குமந் தானே.

பொழிப்புரை :  (இம்மந்திரம் இருபொருள் கொள்ள நிற்பது) ஓர் உரை:- தான் நிற்கும் உடல் துன்பம் உடையதாயும், மற்றோர் உடம்பு இன்பம் உடையதாயும் எவ்வகையாலேனும் தோன்றினால் நிற்கும் உடம்பை விட்டுத் தான் விரும்பிய வேறோர் உடம்பில் புகுந்து இன்புறலாம்; இல்லறத்தில் நிற்க விரும்பினால் நல்ல மனையாள், தன்னை விரும்பி விரைவில் வந்து அடைவாள்; மாணிக்கத்தைக் கொண்டு விளங்கும் கொடிய நாகமும் தான் சொல்லிய அளவில் கட்டுண்டு அகலும். மேற்சொல்லிய திருவம்பலச் சக்கரத்து வழிபாட்டின் மறைபொருள் (இரகசியம்) இது.
=============================================
பாடல் எண் : 26
சூக்குமம் எண்ணா யிரஞ்செபித் தால்உம் மேல்
சூக்கும மான வழிஇடைக் காணலாம்
சூக்கும மான வினையைக் கெடுக்கலாம்
சூக்கும மான சிவனதா னந்தமே.

பொழிப்புரை :  மறைவாகச் சொல்லப்படும் மொழியாகிய மேற்சொன்ன மந்திரத்தை இடைவிடாது செபித்தால் உங்கள் தலைமேல் உள்ள நுண்ணிய வழியை அச்செபத்திற்கு இடையே காணுதல் கூடும். அதனால், முன்னே முகந்து கொண்டதனால் நுண்ணியதாய்ப் பொருந்தி நிற்கின்ற பிராரத்த வினையையும் அழிக்க இயலும். அதனை அழிக்கவே, உயிரிடத்து விளைவதாகிய சிவானந்தம் வெளிப்படும்.
=============================================
பாடல் எண் : 27
ஆனந்தம் ஆனந்தம் ஒன்றென் றறிந்திட
ஆனந்தம் ஆஈஊ ஏஓம்என் றைந்திட
ஆனந்தம் ஆனந்தம் அஞ்சும்அ தாயிடும்
ஆனந்தம் ஆம்ஹிரீம் ஹம்க்ஷம்ஹாம் ஆகுமே.

பொழிப்புரை :  `சிவானந்தம் ஒன்றே ஆனந்தம்` என்று உணர, அவ்வானந்தம் விளைவதாம். `, , , , ஓம் என்னும் ஐந்தெழுத்துக்களை அச்சக்கரத்தில் இட்டுச் செபிக்க அவ்வானந்தம் மிக விளையும். அந்த ஐந்தெழுத்துத் தொடரே` திருவைந்தெழுத்துத் தொடருமாம். இனி, அம், ஹ்ரீம், ஹம், க்ஷம், ஹாம்` என்னும் ஐந்தைத்தாமும் மேற்கூறிய `` முதலிய ஐந்திற்கு ஈடாகவும், திருவைந்தெழுத்திற்கு ஈடாகவும் கொள்ளலாம்.
=============================================
பாடல் எண் : 28
மேனி யிரண்டும் விலங்காமல் மேற்கொள்ள
மேனி யிரண்டும்மிக் கார்அவி காரியாம்
மேனி யிரண்டும்ஊ ஆஈஏ ஓ என்னும்
மேனி யிரண்டும்ஈ ஓஊஆ ஏகூத்தே.

பொழிப்புரை :  மேலை மந்திரத்தில் உயிரெழுத்துக்களாகவும், திருவைந்தெழுத்தாகவும் சொல்லப்பட்ட இருவகை மந்திரங்களும் சிவனது திருமேனிகளாய் நிற்றற்கு உரியனவாம். அவற்றைப் பிழை யின்றி ஓதுதலைச் செய்தால், சிவனது திருமேனி திரிபின்றி அமையும். இனி அவ்விருவகை மந்திரங்களையும் இருவேறு வகையாக மாற்றி உச்சரிக்க, இறைவனது இருவகை நடனங்களும் அமைவனவாம்.
=============================================
பாடல் எண் : 29
கூத்தே சிவாய நமமசி யாயிடும்
கூத்தே, ஈஊ ஆ ஏஓசி வாய நமஆயிடும்
கூத்தேஇ, உஅஎ ஒசி வயநம வாயிடும்
கூத்தேஈ, ஊஆஏ ஓநமசி வாயகோள் ஒன்றுமே.

பொழிப்புரை :  மேற்கூறிய இருவகை நடனங்களுள் ஞான நடனம், `சிவாயநம` என்பதனாலேயும் அமையும். அம்மந்திரம் இவ்வாறு தனியாக உச்சரிக்கப்படுதலேயன்றி ஈம், ஊம், ஆம், ஏம், ஓம் என்னும் வித்தெழுத்துக்களுள் ஒன்றேனும் பலவேனும் கூட்டியும் உச்சரிக்கப்படலாம். இனி, மேற்கூறிய அவ்வெழுத்துக்கள் நெடிலாய் இல்லாமல் குறிலாய் நிற்கவும் கொண்டு உச்சரித்தற்கு உரியன. `சிவாய நம` என்னும் சூக்கும பஞ்சாக்கரமே நகாரம் முதலாய தூல பஞ்சாக்கரமாய் நிற்குமாதலின் அது ஊன நடனத்திற்கு உரியதாய் மேற்கூறியவாறே வித்துக்களைக் கூட்டாதும், கூட்டியும் உச்சரிக்கப்படும்.
=============================================
பாடல் எண் : 30
ஒன்றிரண் டாடஓர் ஒன்றும் உடனாட
ஒன்றினில் மூன்றாட ஓரேழும் ஒத்தாட
ஒன்றினா லாடஓர் ஒன்ப துடனாட
மன்றினில் ஆடினான் மாணிக்கத் கூத்தே.

பொழிப்புரை :  ஒன்று முதலாவது; சிவதத்துவம், இரண்டு இரண்டாவது; சத்தி தத்துவம், ஓர் ஒன்று, சத்தி தத்துவத்தின்பின் அடுத்தடுத்து நிற்கின்ற ஒன்றும், ஒன்றும்; சாதாக்கிய தத்துவமும், ஈசுர தத்துவமும். ஒன்றினில் மூன்று. ஈசுர தத்துவத்தை அடுத்துள்ள சுத்த வித்தியா தத்துவத்தில் `அரன், அரி, அயன்` என்பவரது அதிட்டானங்களாகிய மூன்று. ஓர் ஏழு, இந்த ஏழும். ஒன்பது, இவற்றுடன் இவற்றிற் கெல்லாம் மேலே உள்ள நாத விந்துக்கள் கூடிய அனைத்துத் தத்துவங்களும். ஒன்றினால் ஆட - அவை அனைத்தும் அங்ஙனம் ஆடல் மூர்த்தமாகிய ஒன்றினாலே ஆடும்படி இறைவன் மன்றினில் மாணிக்கக்கூத்து ஆடினான்.
=============================================
 
மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!