http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Monday 22 October, 2012

திருமந்திரம்-தந்திரம் 06: பதிகம் எண் :14. பக்குவன் - பாடல்கள்: 014.




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

=============================================
ஆறாம் தந்திரம்:பதிக எண்:01: சிவகுரு தரிசனம்..............பாடல்கள்: 016
ஆறாம் தந்திரம்:பதிக எண்:02: திருவடிப்பேறு....................பாடல்கள்: 015 
ஆறாம் தந்திரம்:பதிக எண்:03: ஞாதுரு ஞான  ஞேயம் .....பாடல்கள்: 009
ஆறாம் தந்திரம்:பதிக எண்:04: துறவு ...................................பாடல்கள்: 010
ஆறாம் தந்திரம்:பதிக எண்:05: தவம்.............................................பாடல்கள்: 007
ஆறாம் தந்திரம்:பதிக எண்:06: தவ தூடணம்......................பாடல்கள்: 013
ஆறாம் தந்திரம்:பதிக எண்:07:அருளுடைமையின் ஞானம்வருதல் பாடல்கள்:010
ஆறாம் தந்திரம்:பதிக எண்:08: அவ வேடம்........................பாடல்கள்: 006
ஆறாம் தந்திரம்:பதிக எண்:09: தவ வேடம்..............................பாடல்கள்: 004

ஆறாம் தந்திரம்:பதிக எண்:10: திருநீறு ...................................... பாடல்கள்-003
ஆறாம் தந்திரம்:பதிக எண்:11: ஞான வேடம்......................பாடல்கள்: 008
ஆறாம் தந்திரம்:பதிக எண்:12: சிவ வேடம்............................பாடல்கள்: 004
ஆறாம் தந்திரம்:பதிக எண்:13: அபக்குவன்.........................பாடல்கள்: 009
ஆறாம் தந்திரம்:பதிக எண்:14: பக்குவன்.................................பாடல்கள்: 014

=============================================
தந்திரம் 6- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -14
கூடுதல் பாடல்கள்  (114+014=128)

==============================================
(ஆறாம் தந்திரம் முற்றியது)


ஆறாம் தந்திரம்-14. பக்குவன்-பாடல்கள்: 14
பாடல் எண் : 01
தொழிலறி வாளர் சுருதிகண் ணாகப்
பழுதறி யாத பரம குருவை
வழியறி வார்நல் வழியறி வாளர்
அழிவறி வார்மற்றை யல்லா தாரே.

பொழிப்புரை :  குற்றத்தைப் பொருந்துதல் சிறிதும் அறியாத மேலான் ஆசிரியரை நூல்முறை வழியே வழிபட்டு அவர்பால் உய்யும் வழியை அறிபவரே நல்வழியை அறிபவராவர். அல்லாதா ரெல்லாம் ஏனைக்கெடும் வழியை அறிபவரேயாவர்.
==============================================
பாடல் எண் : 02
பதைத்தொழிந் தேன்பர மாஉனை நாடி
அகைத்தொழிந் தேன் இனி ஆரொடுங் கூடேன்
சிதைத்தடி யேன்வினை சிந்தின தீர
உதைத்துடை யாய்உகந் தாண்டரு ளாயே.

பொழிப்புரை :  யாவர்க்கும் மேலானவரே, உம்மை அடைய விரும்பியே அடியேன் துடித்தேன்; அவ்விருப்பதின் படி உம்மை அடைந்து இனி ஒருவரோடும் சேர மாட்டேன்; அவரது சேர்க்கையை எல்லாம் அறுத்து விட்டேன். ஆகையால் அடியேனது வினைகள் அழிந்தொழியும்படி போக்கி என்னை ஏற்று, என் தலையிலும், உள்ளத்திலும் உமது திருவடிகளைச் சூட்டி என்னை ஆட்கொண்டருள்வீர்.
==============================================
பாடல் எண் : 03
பதைக்கின்ற போதே பரமென்னும் வித்தை
விதைக்கின்ற வித்தினை மேல்நின்று நோக்கிச்
சிதைக்கின்ற சிந்தையைச் செய்வே நிறுத்தி
இசைக்கின்ற அன்பருக் கீயலு மாமே.

பொழிப்புரை :  உள்ளமாகிய நிலத்தில் ஆசிரியராகிய உழவர் விதைக்கின்ற விதையை முளைத்து வளர ஒட்டாது தின்றொழிக்கின்ற ஐம்புல ஆசையாகிய கிருமியை உடைய மனமாகிய மேல் மண்ணை யோக முயர்ச்சியால் ஆஞ்ஞையும், அதனைக்கடந்த ஏழந்தானமும் ஆகிய வானத்தில் நின்று நோக்கும் மெய்யுணர்வாகிய வெயிலால் அக்கிருமிகளை அழித்துச் செம்மை படுத்தி அம்மனத்தைத் தம்மோடு ஓத்துவரச் செய்கின்ற அடியவருக்குச் `சிவஞானம்` என்னும் விதையை உள்ளத்தில் ஊன்றக் கொடுத்தல் தக்கது.
==============================================
பாடல் எண் : 04
கொள்ளினும் நல்லக் குருவினைக் கொள்ளுக
உள்ள பொருள்உடல் ஆவி யுடன் ஈக
எள்ளத் தனையும் இடைவிடா தேநின்று
தெள்ளி அறியச் சிவபதந் தானே.

பொழிப்புரை :  (இதன் பொருள் வெளிப்படை.)
==============================================
பாடல் எண் : 05
சோதி விசாகம் தொடர்ந்திரு தேள்நண்டு
ஓதிய நாளே உணர்வது தான் என்று
நீதியுள் நீர்மை நினைந்தவர்க் கல்லது.
ஆதியும் ஏதும் அறியகில் லானே.

பொழிப்புரை :  `விரிச்சிகமும், கற்கடகமும் என்னும் இரண்டு ஓரைகளையுடைய `சுவாதி, விசாகம்` என்னும் இரு நட்சத்திங்கள் பொருந்திய, முன்னோர் சொல்லிய இருநாட்களே குருமொழியை உணர்தற்கு உரிய நாள்கள்` என்று மரபு நெறியின் சிறப்பை எண்ணுவாருள் அங்ஙனம் உணர்ந்து ஒழுகுவார்க்குக் கூறியதல்லது, இறைவனும் அதற்குரிய காரணம் எதனையும் எங்கும் சொல்லி வைக்கவில்லை.
==============================================
பாடல் எண் : 06
தொழிலார மாமணித் தூய்தான சிந்தை
எழிலால் இறைவன் இடங்கொண்ட போதே
விழலார் விறலாம் வினையது போகக்
கழலார் திருவடி கண்டரு ளாமே.

பொழிப்புரை :  சரியை முதலிய பணிகள் நிரம்பிவர, அதனால், சிறந்த முத்துப் போலும் தூயதான மனத்தில் உண்டாகும் எழுச்சி காரணமாக இறைவன் அதனைத் தனக்கு இடமாகக் கொண்டருளுவான். அப்பொழுது வீணரது வெற்றிப்பாடாம் வினை நீங்கிப்போக, அப்பணிகளில் நின்றோன் சிவனது வீரக்கழலை அணிந்த திருவடியை நேரே கண்டு, அவனது அருளேயாய் நிற்பன்.
==============================================
பாடல் எண் : 07
சாத்திக னாய்ப்பர தத்துவந் தானுன்னி
ஆத்திக பேத நெறிதோற்ற மாகியே
ஆர்த்த பிறவியின் அஞ்சி அறநெறி
சாத்தவல் லானவன் சற்சீட னாமே.

பொழிப்புரை :  சத்துவ குணம் மிக்கவனாய், பரம்பொருளை அடைய எண்ணி, அப்பரம்பொருள் முதலிய நுண்பொருள்களின் உண்மையை அடியாகக் கொண்ட சமயங்களே `சமயங்கள்` என்னும் உணர்வு உள்ளத்தில் தோன்றப்பெற்று, தொன்று தொட்டு விடாது கட்டியுள்ள பிறவிக் கட்டிற்கு அஞ்சி அறநெறியைத் தளராது மேற்கொள்ள வல்லவனே சற்சீடன் - நன்மாணாக்கன் ஆவான்.
==============================================
பாடல் எண் : 08
சத்தும் அசத்தும்எவ் வாறெனத் தான்உன்னிச்
சித்தம் உருக்கிச் சிவனருள் கைகாட்டப்
பத்தியின் ஞானம் பெறப்பணிந் தானந்த
சத்தியின் இச்சை தகுவோன் சற் சீடனே.

பொழிப்புரை :  சிவனது திருவருள் ஆன்மாவைப் பக்குவப் படுத்தி நன்னெறியை அடைவித்தமையால், `நிலையுடைய பொருள் நிலையாமையுடைய பொருள்களின் இயல்புகள் யாவை` என்னும் ஆராய்ச்சியைத் தலைப்பட்டு அவற்றை உள்ளவாறு ணரும் உணர்வைப் பெறுதல் பொருட்டு ஆசாரியரை அன்போடு வழிபட்டு, சிவனது ஆனந்த சத்தியில் மூழ்குதற்கண் வேட்கை மிக்கவனே சற்சீடனாவன்.
==============================================
பாடல் எண் : 09
அடிவைத் தருளுதி ஆசான் இன்றென்னா
அடிவைத்த மாமுடி மாயப் பிறவி
அடிவைத்த காய அருட்சத்தி யாலே
அடிபெற்ற ஞானத்தன் ஆசற் றுளோனே.

பொழிப்புரை :  என்றும் சிவனது திருவடியைத் தாங்கி நிற்கின்ற தனது சீரியதலை, நிலையாமையுடைய  பிறவித் தொடர்ச்சியின் மூலங்களைக் காய்ந்தபின் அருட் சத்தியால் ஆசாரியரை அடைந்து, `ஆசாரியரே, இன்றே அடியேனுக்கு உமது திருவடியைச் சூட்டி அருள்செய்ய வேண்டும்` என வேண்டி நின்று, அவ்வாறே திருவடி சூட்டி அருளப்பட்ட ஞானத்தால் அசைவற நிற்பவனே மலம் நீங்கிய முத்தனாவான்.
==============================================
பாடல் எண் : 10
சீராரும் ஞானத்தின் இச்சை செலச்செல
ஆராத காதல் குருபரன் பால் ஆகச்
சாராத சாதகம் நான்கும்தன் பால்உற்றோன்
ஆராயும் ஞானத்த னாம்அடி வைக்கவே.

பொழிப்புரை :  சிறப்புப் பொருந்திய ஞானத்தின் கண் விருப்பம் மிக மிக, அது காரணமாகர ஞானாசிரியன்பால் அடங்காத அன்புளதாக, அதனால், அவ்வாசிரியன் அவன் மேல் தனது திருவடியைச் சூட்டி அருள்செய்ய, அவ்வாற்றானே, `கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டைகூடல்` என்னும் நான்கு சாதனங்களையும் முற்றி உலகியலில் நீங்கினவனே அறிவுடையோரால் `ஞானி` என ஆராய்ந்து கூறப்படும் முதிர்ந்த ஞானியாவான்.
==============================================
பாடல் எண் : 11
உணர்த்தும் அதிபக் குவர்க்கே உணர்த்தி
இணக்கிற் பராபரத் தெல்லையுள் இட்டுக்
குணக்கொடு தெற்குத் தரபச்சி மங்கொண்
டுணந்த்தும் மின் ஆவுடை யாள்தன்னை உன்னியே.

பொழிப்புரை :  உண்மை ஞானாசிரியனாயுள்ளவன் சிவ ஞானத்தை உணரத்தத்தக்க அதிபர்குவர்கட்கே அதனை முன்பு கேள்வியளவான் உணர்த்தி, அதன்பின் அவர்கள் அதனைச் சிந்தித்துத் தெளிந்த தெளிவு நிலையில் சிவனது வியாபகத்துள் அவர்களை வியாப்பியமாகச் செய்தலாகிய நிட்டையை எய்துவித்து, அந்நிட்டை நிலைபெற்ற வழி கிழக்கு முதலிய திசைப் பாகுபாடு களுள் யாதும் இல்லாதவாறு சிவனது வியாபகத்தை முற்றுமாகத் தலைப் படுவிப்பன். அங்ஙனம் அச்செயல் அனைத்தையும் அவன் செய்வது, அனைத் துயிர்களையும் உடைய அருட் சத்தியைத் தியானித்தே.
==============================================
பாடல் எண் : 12
இறையடி தாழ்ந்ததை வணக்கமும் எய்திக்
குறையது கூறிக் குணங்கொண்டு போற்றச்
சிறையுடல் நீயறக் காட்டிச் சிவத்தோ
டறிவுக் கறிவிப்போன் சன்மார்க்கி யாமே.

பொழிப்புரை :  குருவருளை விரும்பும் மாணவனே, உன்முன் குருவாய் வந்து நிற்கும் சிவனை அங்ஙனமான சிவனாகவே கண்டு அவனது திருவடிகளில் வீழ்ந்து, ஏகாங்க திரியங்க பஞ்சாங்க சடங்க அட்டாங்கங்களாகிய ஐந்து வணக்கங்களையும் செய்து, பிறவித் துயரால் வருந்தும் உனது குறையை விண்ணப்பித்து, அச்சிவனது அருட்குணங்கள் பலவற்றையும் எடுத்துக் கூறிப் புகழ்ந்தபொழுது, நீயிருக்கும் சிறைக்கூடமாகிய உடம்பையே நீ என மயங்கி ருக்கும் உனது மயக்கத்தைப் போக்கி உனது உண்மையை உனக்குத் தெரிவித்து, நீ சிவத்தோடு ஒன்றாகும் நிலையை உன் அறிவு அறியும்படிச் செய்பவனே உண்மை ஞானாசிரியனாவான்.
==============================================
பாடல் எண் : 13
வேட்கை விடுநெறி வேதாந்த மாதலால்
வாழ்க்கைப் புனல்வழி மாற்றிச் சித் தாந்தத்து
வேட்கை விடும்மிக்க வேதாந்தி பாதமே
தாழ்க்கும் தலையினோன் சற்சீட னாமே.

பொழிப்புரை :  காமியத்தை நிரப்பும் நெறி வேதநெறியாக, அதனை விடுத்து நிட்காமியமாவது சிவனிடத்துச் செய்யும் பத்தியே யாதலாலும், ஒழுக்கமாகிய நீரை உலகியலாகிய மடையினின்றும் மாற்றிச் சித்தாந்த நெறியாகிய மடையிற் பாய்ச்சி ஆசையை ஒழிக்கும் உண்மை வேதாந்தியே குருவாகத்தெளிந்து அவன் திருவடிகளில் தாழ்ந்து வணங்கி, அவன் வழி நிற்பவனே சற்சீடனாவன்.
==============================================
பாடல் எண் : 14
சற்குணம் வாய்மை தாயவிவே கம்தண்மை
சற்குரு பாதமே சாயைபோல் நீங்காமே
சிற்பர ஞானம் தெளியத் தெளிவோர்தல்
அற்புத மேதோன்றல் ஆகும்சற் சீடனே.

பொழிப்புரை :  சற்குணம் முதல் அற்புதம் ஈறாக உள்ள ஏழியல்பும் உடையவனே சற்சீடனாவான்.

(ஆறாம் தந்திரம் முற்றியது)
==============================================


மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!