http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Wednesday 7 November, 2012

திருமந்திரம்-தந்திரம்07: பதிகம் எண் :20. விந்துற்பனம் - பாடல்கள்: 014.




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

==============================================
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:01: ஆறாதாரம்..............பாடல்கள்: 008 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:02: அண்டலிங்கம்........பாடல்கள்: 014
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:03: பிண்டலிங்கம்........பாடல்கள்: 004 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:04: சதாசிவலிங்கம்.....பாடல்கள்: 023
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:05: ஆத்மலிங்கம்.........பாடல்கள்: 010 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:06: ஞான லிங்கம்.........பாடல்கள்: 010
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:07: சிவலிங்கம்.............பாடல்கள்: 005 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:08: சம்பிரதாயம்..........பாடல்கள்: 014
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:09: திருவருள்வைப்பு .பாடல்கள்: 005
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:10: அருளொளி..............பாடல்கள்: 009 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:11: சிவபூசை..................பாடல்கள்: 021  
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:12: குருபூசை..................பாடல்கள்: 010 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:13: மகேசுவரபூசை.......பாடல்கள்: 009
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:14: அடியார்பெருமை
..பாடல்கள்: 015 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:15: போசன விதி...........பாடல்கள்: 009

ஏழாம்  தந்திரம்:பதிக எண்:16: பிட்சா விதி.............
.பாடல்கள்: 006 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:17: முத்திரை பேதம்....பாடல்கள்: 010

ஏழாம்  தந்திரம்:பதிக எண்:18: பூரணக் குகைநெறிச் சமாதி.
பாடல்கள்: 008 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:19: சமாதிக் கிரியை.....பாடல்கள்: 013

ஏழாம்  தந்திரம்:பதிக எண்:20: விந்துற்பனம்.........
.பாடல்கள்: 006 
============================================== 
தந்திரம் 7- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -020
கூடுதல் பாடல்கள்  (212+014 =226)

==============================================
ஏழாம் தந்திரம் - 20. விந்துற்பனம்-பாடல்கள்: 014
பாடல் எண் : 1
உதயத்தில் விந்துவில் ஓம்முதற் குண்டலி
உதயக் குடிலில் வயிந்தவம் ஒன்பான்
விதியிற் பிரமாதி கள்மிகு சத்தி
கதியிற் கரணம் கலைவை கரியே.

பொழிப்புரை :  முழுப்படைப்புக் காலத்தில் முதற்கண் சுத்த மாயா காரியங்களே தோன்றும். அக்காரியம் வாக்குகளும், இறைவனது நவந்தரு பேதங்கட்கும் இடமாய் நிற்கும் சுத்த தத்துவங்களும் ஆகும். நவந்தரு பேதங்களை ஒடுக்க முறையில் வைத்து எண்ணினால் பிரமன் முதலியனவாக அமையும். புண்ணியம் காரணமாக இறைவனது அதிகார சத்தி பதிதலால் அப்பெயர் பெற்று நிற்கும் அணுபக்கத்தினரும் உளர். அது நிற்க. வேறு பிரமனாதியர்க்கும், மற்றும் நால்வகை வாக்கிற்கும், அனைத்துப் பொருள்கட்கும் இடமாய் நிற்பன பஞ்சகலைகள்.
=======================================
பாடல் எண் : 2
செய்திடும் விந்துபே தத்திறம் ஐயைந்தும்
செய்திடும் நாதபே தத்திறன் நாலாறும்
செய்திடும் மற்றவை ஈரிரண் டின்திறம்
செய்திடும் ஆறாறு சேர்தத் துவங்களே.

பொழிப்புரை :  நவந்தரு பேதங்களில் நாதங்களும், விந்துக்களும் முறையே சிவமும், சத்தியும் ஆதலால் சிவனது `இலயம், போகம், அதிகாரம்` என்னும் மூற்று நிலைகளுள் அதிகார நிலையாகிய மகேசுரனது பேதங்கள் இருபத்தைந்தினையும் `சத்தியின் காரியங்கள்` என்றும், நவந்தரு பேதங்களில் விந்து, சத்தி இவை யொழிந்த ஏழும், குணமூர்த்திகள் மூவரும் ஆகப் பதின்மரும் நாயக, நாயகி பாவத்தில் நாயகர்கள் ஆதலால் அவர்களையே, `சிவ பேதங்கள்` என்றும் ஒருவாறு கூறலாம். இனி அந்தச் சத்தி சிவங்கள் ``சகுணம், சமலம், நின்மலம், ஆனந்தம்`` என்னும் காரணத்தால் நான்காகின்ற மாயையின் வகை மூன்றினின்றும் முப்பத்தாறு தத்துவங்களையும் வகைப்படத் தோற்றுவிக்கும்.
=======================================
பாடல் எண் : 3
வந்திடு பேத மெலாம் பரவிந்து
தந்திடும் மாமாயை வாகீசி தற்பரை
உந்து குடிலையோடு ஓம்உறு குண்டலி
விந்துவில் இந்நான்கும் மேவா விளங்குமே.

பொழிப்புரை :  மாயா காரியங்களாய் உள்ள பலவற்றிற்கும் காரணமாய் நிற்பது `பரவிந்து` என்னும் தத்துவம். அது சுத்த மாயையின் காரியமே எனினும் அதன்கண்ணே `அபரவாகீசுவரி, பரவாகீசுவரி`, அனைத்து மந்திரங்களையும் செலுத்துகின்ற பிரணவம், அதன வடிவமாகிய குண்டலி என்னும் நான்கும் பொருந்தி விளங்கும்.
=======================================
பாடல் எண் : 4
விளங்கு நிவிர்த்தாதி மேவக ராதி
வளங்கொள் உகார மகாரத்துள் விந்து
களங்கமில் நாதாந்தம் கண்ணினுள் நண்ணி
உளங்கொள் மனாதி உளமந்த மாமே.

பொழிப்புரை :  நிவர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்திய தீதை என்னும் பஞ்சகலைகளில் முறையே பொருந்தி நிற்கின்ற அகாரம், உகாரம், மகாரம், விந்து, நாதம் - என்னும் சூக்கும பஞ்சாக்கரங்கள் முறையே மனம் முதலாகப் புருடன் ஈறாக உள்ள கருவிகளைச் செலுத்தி நிற்கும்.
=======================================
பாடல் எண் : 5
அந்தமு மாதியு மாகிப் பராபரன்
வந்த வியாபி யெனலாகு மந்நெறி
கந்தம தாகிய காரண காரியம்
தந்தைங் கருமமுந் தான்செய்யும் வீயமே.

பொழிப்புரை :  முதல்வன் உலகத்திற்கு முதலும், முடிவுமாகி, அதனுள் எங்கும் நிறைந்து நிற்கும் முறைமையால் பல தொகுதிகளாய் நிற்கும் காரண காரியப் பொருள்களைத் தோற்றுவித்து, அவன் ஐந்தொழில் செய்ய முதற்கருவியாய் நிற்பது விந்துவாகிய சுத்த மாயையே.
=======================================
பாடல் எண் : 6
வீயம தாகிய விந்துவின் சத்தியால்
ஆய அகண்டமும் அண்டமும் பாரிப்பக்
காயஐம் பூதமும் காரிய மாயையில்
ஆயிட விந்து அகம்புற மாகுமே.

பொழிப்புரை :  அனைத்திற்கும் முதற் காரணமாகிய சுத்த மாயையின் ஆற்றலால் அனைத்திற்கும் வியாபகமாகிய நிவிர்த்தி முதலிய கலைகளும், அவற்றுள் அடங்கி நிற்கும் புவனங்களும் விரிந்து நிற்க, காரிய மாயையாகிய மூலப் பிரகிருதியினின்றும் பௌதிக சரீரத்திற்குக் காரணமாகிய ஐம்பூதங்களும் தோன்ற, சுத்தமாயை அவை அனைத்திலும் உள்ளும், புறம்புமாய் நிறைந்து நிற்கும்.
=======================================
பாடல் எண் : 7
புறமக மெங்கும் புகுந்தொளிர் விந்து
நிறமது வெண்மை நிகழ்நாதம் செம்மை
உறமகிழ் சத்தி சிவபாத மாய்உள்
திறனொடு வீடளிக் கும்செயல் கொண்டே.

பொழிப்புரை :  பிண்டத்தில் கரு உற்பத்திக் காரணமாய் ஆண் உடலில் வெண்ணிறம் உடைமை பற்றி, `சுக்கிலம்` எனப்படுகின்ற தாது `விந்து` எனப்பெயர் பெற்றதனை அண்டத்தில் புறம், அகம் என்னும் வேறுபாடின்றி எவ்விடத்தும் வியாபகமாய் நிற்கும் காரணப் பொருளாகிய `சுத்த மாயை` என்றே கொள்ளுதல் வேண்டும். (நாதத்தின் காரியத்தை `விந்து` என்னும் தத்துவமாகக் கொள்ளலாகாது` - என்பதாம்.) இனப் பெண்ணுடலில் செந்நிறம் உடைமை பற்றி, சோணிதம்` எனப்படுகின்ற தாது, காரியப் பொருளாகிய நாதம்` எனத் தக்கதாகும். ஆகவே அவை முறையே முதல்வனாகிய சிவனது கூறும், அவனுக்குத் துணைவியாகிய சத்தியது கூறுமேயாகும், (அவ்வாறில்லையேல் அவை உயிர்க்கு இன்றியமையாக் கருவிகளாகிய தனுகரணங்களைத் தோற்றுவித்தல் இயலாது என்பதாம்.) அவை அங்ஙனமாய்த் தனுகரணங்களைத் தோற்றுவித்து உயிர்கட்கு மன உறுதியுடன் செய்யும் ஞானச் செய்தி வாயிலாக வீட்டைத் தருவனவாம்.
=======================================
பாடல் எண் : 8
கொண்ட இவ்விந்து பரமம் போற்கோதற
நின்ற படம்குடி லாய்நிலை நிற்றலின்
கண்ட கலாதியின் காரண காரியத்து
அண்டம் அனைத்துமாய் மாமாயை யாகுமே.

பொழிப்புரை :  உயிர்களை மேற்கூறியவாறு அண்டத்தையேயன்றிப் பிண்டத்தையும் ஆட்கொள்கின்ற விந்து பரம்பொருளைப் போலவே மலகன்மங்களோடு விரவுதலின்றித் தூயதாய், ஆயினும் நூலும் மண்ணும், ஆடையும் குடமுமாய்க் காரியப்படுதல் போலக் காரியப்படுவதாய், காரணரூபத்தில் என்றும் அழிவின்றி, கலை முதலிய தத்துவங்களின் காரியமாய் உள்ள அனைத்து அண்டங்களிலும் அவையேயாய்க் கலந்து பெருமாயையாய் உள்ளது.
=======================================
பாடல் எண் : 9
அதுவித்தி லேநின்றங் கண்ணிக்கும் நந்தி
இதுவித்தி லேயுள வாற்றை உணரார்
மதுவித்தி லேமலர் அன்னம தாகிப்
பொதுவித்தி லேநின்ற புண்ணியந் தானே.

பொழிப்புரை :  `அது` எனச் சேய்மையாதாகச் சுட்டிச் சொல்லப்படுகின்ற மகாமாயையாகிய அந்த விந்துவிலே நின்று, அதனை அடைந்தவர்க்கு இனிப்பவனாகிய சிவன், `இது` என அண்மையாகச் சுட்டிச் சொல்லப்படுகின்ற சுக்கிலமாகிய இந்த விந்துவிலும் நின்று உயிர்களைப் பிறப்பித்துப் பின் வீடடையச் செய்தலை உணரும் உணர்வுடையார் உலகத்து அரியர், ஆயினும், மகாமாயையையே தனக்கு உடமாகக் கொண்டு விளங்குகின்ற அந்தப்பெருமான், நீரால் உண்டாக்கின்ற உணவுப்பொருளில் தங்கிப் பின் கருவுற்பத்திக்கு யாவரிடத்தும் பொதுவாய் உள்ள காரணமாகின்ற விந்துவிலும் இருக்கும் புண்ணியன் ஆகின்றான்.
=======================================
பாடல் எண் : 10
வித்தினி லன்றி முளையில்லை அம்முளை
வித்தினி லன்றி வெளிப்படுமா றில்லை
வித்தும் முளையும் உடனன்றி வேறல்ல
அத்தன்மைத் தாகும் அரன்நெறி காணுமே.

பொழிப்புரை :  முளை விதையில்தான் உள்ளது. என்றாலும் அது விதை தனியேயிருக்கும் பொழுது தோன்றாது. நிலத்தில் விதைத்தால் தான் தோன்றும். `வித்தில் முளை உள்ளது` என்றால், அது `குடத்தில் நீர் உள்ளது` என்பது போல்வதன்று. அஃதாவது இடமும், இடத்து நிற்கும் பொருளும் ஆகின்ற அவ்வளவினது அன்று. சிலந்தியின் உடம்பும், அதினின்றும் வெளிவருகின்ற நூலும் போலக் காரணகாரிய இயைபுடையனவாம். அது போன்றதே சிவன் உலகத்தைத் தோற்றுவிக்கின்ற முறையும்.
=======================================
பாடல் எண் : 11
அருந்திய அன்ன மவைமூன்று கூறாம்
பொருந்தும் உடல்மனம் போம்மலம் என்ன
திருந்தும் உடல்மனம் ஆங்கது சேர்ந்திட்டு
இருந்தன முன்னாள் இரதம தாகுமே.

பொழிப்புரை :  பலவகையாக உண்ணப்பட்ட உணவுகள் மூன்று கூறுபடும். ஒரு கூறு உடம்பாய்ப் பரிணமிக்கும். மற்றொரு கூறு மனத்தின் தன்மையாய் அமையும். இன்னொரு கூறு மலமாகிக் கழிந்தொழியும். உணவால் திருத்தம் உறுகின்ற உடம்பும், மனமும் சேர்ந்து முன்னாட்களில் காரண நிலையில் `சாரம்` என்பதாய் இருக்கும்.
=======================================
பாடல் எண் : 12
இரதம் முதலான ஏழ்தாது மூன்றின்
உரிய தினத்தின் ஒருபுற் பனிபோல்
அரிய துளிவிந்து வாகும் ஏழ்மூன்றின்
மருவிய விந்து வளருங்கா யத்திலே.

பொழிப்புரை :  மேல் சொல்லப்பட்ட `சாரம்` என்பது உட்பட ஏழ்தாதுக்களில் மூன்றிலிருந்து சில நாட்களில் புல் நுனியிற் பனியளவான துளிகள் பல உருவாகும். அந்தத்துளிகளே பிண்ட உற்பத்திக்குக் காரணமான `விந்து` எனக் குறிப்பிட்டுக் கூறப்படுகின்றன. அவை இருபத்தொரு நாள் வரையில் உடம்பினுள் அந்த நிலையிலே முதிர்ந்து வரும்.
=======================================
பாடல் எண் : 13
காயத்தி லேழ்மூன்று நாளிற் கலந்திட்டுக்
காயத்து டன்மன மாகும் கலாவிந்து
நேயத்தே நின்றோர்க்கு நீங்கா விடாமையின்
மாயத்தே செல்வோர் மனத்தோ டழியுமே.

பொழிப்புரை :  மேற்கூறியவாறு முன் இருபத்தொரு நாள் வரையில் முதிர்ந்து வந்த விந்துக்கள் பின் இருபத்தொரு நாட்கள் வரையில் மனத்தின் வழிப்பட்டு நிற்கும். `சத்திநிபாதரும், உலகரும்` எனமக்கள் இருதிறத்ததராதலின் அவருள் சத்திநிபாதர் மனம் சிவன் பஞ்சமூர்த்திகளாய் விளங்கி நிற்கின்ற நிவிர்த்தி முதலிய பஞ்சகலாரூபமாய் நிற்கும் சுத்த மாயையை நோக்கிச் செல்லுமாகலின் அவர் காமவசப்பட்டு விந்துவை வெளியே வீழ்ந்தொழிய விடாமையின் அவை அவரை விட்டு நீங்கா. (அவரது மனம் பஞ்ச கலைகளை நோக்கிச் செல்கின்ற செலவிற்கு அவை வலிமை தந்து நிற்கும் என்பதாம். அவரொழிந்த ஏனை உலகர் சிறிதுபோதிலே நிலையின்றி ஒழிவதாகிய காம இன்பத்திலே செல்பவர் ஆதலின் அவர் மனம் அங்ஙனம் சென்ற பொழுது அவரது விந்துக்களும் அதனுடன் சென்று வெளியே வீழ்ந்து அழிந்தொழியும்.
=======================================
பாடல் எண் : 14
அழிகின்ற விந்து அளவை யறியார்
கழிகின் றதனையுட் காக்கலும் ஓரார்
அழிகின்ற காயத் தழிந்தயர் வுற்றோர்
அழிகின்ற தன்மை யறிந்தொழி யாரே.

பொழிப்புரை :  உலகர் தாம் செல்கின்ற போக நெறியால் அழிந்தொழிகின்ற விந்துவினது ஆற்றலை, `இவ்வளவினது` என்று அறிய மாட்டார்கள். அதனால் கீழ்நோக்கி வீழும் இயல்புடைய அந்த விந்துவை அவ்வாறு வீழாது உள்ளே நிறுத்திக் காக்கும் வழியைப்பற்றி அவர்கள் எண்ணுவதும் இல்லை. அழிவைத் தனது இயல்பாக உடைய உடம்பினுள்ளே தங்கியிருந்து, அவ்வுடம்பால் உண்டாகின்ற பல இடுக்கண்களால் துன்பமுற்று மெலிகின்றவர்கள் தாம் பெற்றுள்ள பொருள்கள் அழியுந்தன்மை உடையவாதலை அறிந்து, அவ்வழியுந் தன்மையை நீக்கிக்கொள்ள மாட்டார்கள்.
=======================================
 


மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!