http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Monday 25 February, 2013

திருமந்திரம்-தந்திரம்08: பதிகம் 35&36. இலக்கணாத் திரயம், 'தத்துவமசி' மகாவாக்கியம் – பாடல்கள்: 02 & 17.




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
 

பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

==============================================
எட்டாம் தந்திரம்:பதிக எண்:01: உடலில் பஞ்சபேதம்..பாடல்கள்: 018 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:02: உடல் விடல்.................பாடல்கள்: 003  
 எட்டாம் தந்திரம்:பதிக எண்:03: அவத்தை பேதம்.............பாடல்கள்: 025 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:04: மத்திய சாக்கிராவத்தை .பாடல்கள்: 016
எட்டாம் தந்திரம்:பதிக எண்:05: அத்துவாக்கள்....................பாடல்கள்: 003 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:06: சுத்த நனவாதி பருவம் .பாடல்கள்: 040
எட்டாம் தந்திரம்:பதிக எண்:07: கேவல சகலசுத்தம்.......பாடல்கள்: 042 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:08: பராவத்தை..........................பாடல்கள்: 026  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:09: முக்குண நிற்குனங்கள்.பாடல்கள்: 001 

எட்டாம் தந்திரம்:பதிக எண்:10: அந்தாதி பேதம்................பாடல்கள்: 002 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:11:பதினொன்றாந்தானமும் `அவத்தை` எனக்காணல் பாடல்கள்:003 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:12:கலவு செலவுகள் – பாடல்கள்:002 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:13: நின்மலாவத்தை. ..........பாடல்கள்: 051 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:14: அறிவுதயம்......................பாடல்கள்: 014 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:15: ஆறந்தம்............................பாடல்கள்: 034  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:16: பதி, பசு, பாசம்...............பாடல்கள்: 020 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:17: அடிதலை அறியும் திறங்கூறல் .பாடல்கள்: 010  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:18: முக்குற்றம்....................பாடல்கள்: 002   
எட்டாம் தந்திரம்:பதிக எண்:19: முப்பதம்......................பாடல்கள்: 008 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:20: முப்பரம்.......................பாடல்கள்: 007
எட்டாம் தந்திரம்:பதிக எண்:21: பர லக்கணம்............பாடல்கள்: 014
எட்டாம் தந்திரம்:பதிக எண்:22: முத்துரியம்...............பாடல்கள்: 008 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:23: மும்முத்தி..................பாடல்கள்: 004

எட்டாம் தந்திரம்:பதிக எண்:24: முச்சொருபம்..........பாடல்கள்: 007
எட்டாம் தந்திரம்:பதிக எண்:25: முக்கரணம்...............பாடல்கள்: 003 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:26:
முச்சூனிய தொந்தத்தசி.பாடல்கள்: 007
எட்டாம் தந்திரம்:பதிக எண்:27: முப்பாழ்.....................பாடல்கள்: 006 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:28: காரண காரிய உபாதி ..பாடல்கள்: 004  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:29: உபசாந்தம்..........பாடல்கள்: 006  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:30: புறங்கூறாமை...பாடல்கள்: 015
எட்டாம் தந்திரம்:பதிக எண்:31: அட்டதள கமல முக்குண அவத்தை ..பாடல்கள்: 010
எட்டாம் தந்திரம்:பதிக எண்:32: நவாத்தை அபிமானி.......பாடல்கள்: 009 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:33: சுத்தா சுத்தம்-பாடல்கள்:பாடல்கள் :011
எட்டாம் தந்திரம்:பதிக எண்:34: மோட்ச நிந்தை: பாடல்கள்: 007
எட்டாம் தந்திரம்:பதிக எண்:35: இலக்கணாத் திரயம்......பாடல்கள்: 002 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:36: 'தத்துவமசி' மகாவாக்கியம் :பாடல்கள் :017
==============================================  
தந்திரம் 8- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -036
கூடுதல் பாடல்கள்  (445+002+017=464)
==============================================

எட்டாம் தந்திரம் - 35. இலக்கணாத் திரயம் : பாடல்கள் : 02
பாடல் எண் : 1
விட்ட இலக்கணை தான்போம் வியோமத்து
தொட்டு விடாத(து) உபசாந்தத் தேதொகும்
விட்டும் விடாதது மேவும்சத் தாதியில்
சுட்டும் இலக்கணா தீதம் சொரூபமே.

பொழிப்புரை : ஆன்மாவின் சொரூப (இயற்கை) நிலையைக் குறித்து வரும் சொற்களெல்லாம் இலக்கணைச் சொல்லாகாது இலக்கணச் சொல்லேயாம். அஃதாவது நேர்ப்பொருளைத் தருவனவேயாம். அவை `ஆன்மா நித்தியம், வியாபகம், சித்து` என்றல் போல்வன. ஆன்மாவின் சொரூப நிலையைக் கூறாது, தடத்த (செயற்கை) நிலையைக் குறித்து வரும் சொற்களே இலக்கணைச் சொல்லாய் நிற்கும். அஃதாவது நேரே பொருளை யுணர்த்தாமல், ஒன்றை இடையிட்டுப் பொருளுணர்த்தும். அது மூன்று வகைப்படும். (அவ்வகைகள் மேலே காட்டப்பட்டன.)  `ஆன்மா, மேல், கீழ், நடு உலகங்களில் பிறந்தும், இறந்தும் உழலும்` என்றால், ஆன்மா உண்மையில் வியாபகப் பொருள் ஆகையால், அதற்குப் போக்கு வரவு இல்லையாதலின், ஆன்மாவை விட்டு, `அதன் சூக்கும, பரசரீரங்களே அவ்வாறு உழல்வன` எனக் கொள்கின்றோம். ஆகவே இது விட்ட இலக்கணை. இனி, `ஆன்மாச் சகலத்திற் கேவலம், சகலம், சுத்தம் என்னும் அவத்தைகளை அடைகின்றது` என்றால், அவ்வவத்தைகளில் உணர்வு வேறுபடுவது ஆன்மாவே ஆகையாலும், அதன் கருவிகளின் கூடுதல் பிரிதல்கள் என்பவற்றாலும், சீவ கரணங்கள் சிவ கரணங்களாய் வேறுபடுதலாலுமே அவத்தைகள் நிகழ்தலாலும் ஆன்மாவை விடாமலே அதன் கருவிகளின் கூடுதல் குறைதல்களையே கொள்கின்றோம். அதனால் இது விடாத இலக்கணையாம்.  இனி, `ஆன்மா புறத்தே உள்ள ஓசையைக் கேட்கின்றது, உருவத்தைக் காண்கின்றது` என்றால், கேட்டல் காண்டல்களைத் தான் நேரே செய்யாது, செவியும், கண்ணுமாகிய பொறிகளே அவற்றைச் செய்கின்றன என்றும், ஆயினும் அப்பொறிகள் அச்செயல்களைச் செய்யுமாறு ஆன்மா அவற்றை அதிட்டித்து (வாயிலாகப் பற்றி ஏவி) நிற்கின்றது என்றும் கொள்கின்றோம். இதனால், இது விட்டும் விடாத இலக்கணையாம்.
**********************************************
பாடல் எண் : 2
வில்லின் விசைநாணில் கோத்திலக் கெய்தபின்
சொல்லுங் களிறைந்தும் கொலொடே சாய்ந்தன
இல்லில் இருந்தெறி கூறும் ஒருவற்குக்
கல்கலன் என்னக் கதிர்எதி ராகுமே.

பொழிப்புரை : [இம்மந்திரம் ஒட்டணியாய் நின்றது.]
வில்லினிடத்து விசையைத் தருகின்ற நாணை ஏற்றி, அதன்கண் அம்பைப்பூட்டி தொலைவில் உள்ள இலக்கை எய்ய வல்லார் அங்ஙனம் எய்வாராயின் அந்த இலக்கிற்குக் குறுக்கே நிற்கின்ற கொலையானைகள் ஐந்தும் அந்த அம்பாலே வீழ்ந்துவிடும். (அம்பு இலக்கைச் சென்று அடையும்.) இனி அவ்வாறு எய்யும் ஒருவன் தனக்கு வாய்ப்பான இடத்தில் இருந்து கொண்டு எய்யும் பொழுது அச்சாதனையால் இனியதோர் ஒளி மாணிக்கக்கலன் போல் வெளிப்பட்டு விளங்கும்.
**********************************************
எட்டாம் தந்திரம் - 36. `தத்துவமசி` மகாவாக்கியம் : பாடல்கள் : 017
பாடல் எண் : 1
சீவ துரியத்துத் தொம்பதம் சீவனார்
பாவு பரதுரி யத்தினில் தற்பதம்
மேவு சிவதுரி யத்(து)அசி மெய்ப்பதம்
ஓவி விடும்தத் துவமசி உண்மையே.

பொழிப்புரை : (`வேதாந்த மகாவாக்கியங்கள் சில உள` என்பதும், அவற்றின் இயல்பும் மேற்குறித்த அதிகாரங்களில் சொல்லப்பட்டன. அவ்வாக்கியங்களில் `தத்துவமசி` என்னும் வாக்கியமே சிறப்பாகக் கூறப்படுதலால் அது பற்றியே இங்குக் கூறுகின்றார். வடமொழியில் `தத்+த்வம்+அஸி` என்னும் மூன்று பதங்களின் சேர்க்கையே `தத்துவமஸி` என்று ஆகின்றது. தத் - அது. த்வம் - நீ, அஸி - ஆகின்றாய். தத்துவமஸி - அது நீயாகின்றாய். இங்ஙனமாயினும் `ஆகின்றாய்` என்பதனால், `நீ அது ஆகின்றாய், என்பதே கருத்து, த்வம், `துவம்` என வருகின்றது. `தொம்` என மரூஉவாகவும் வரும். இங்குக் குறித்த கருத்துப் பற்றி நாயனார், `தொந்தத்தசி என்றே கூறுவார்)  `தத்துவமசி` என்பதை, `தொம், தத், அசி என வைத்து நோக்கினால் முதற்கண் உள்ள `தொம்` என்பது, மேல் `முத்துரியம்` என்பவற்றில் சீவ துரியமாகிய யோகாவத்தையாகிய சகலத்திற் சுத்தா வத்தை நிலையில் தியான சமாதிகளில் உள்ள சீவான்மாவைக் குறிக்கும். `தத்` என்பது பர துரியமாகிய பர முத்தியில் அடையப்படும் சொரூப சிவத்தைக் குறிக்கும். `அசி` என்பது, நின்மல துரியமாகிய சிவ யோகத்தில் சீவான்மா பரமான்மாவாகிய சிவனேயாய் அவனோடு ஏகமாகி விடுதலைக் குறிக்கும். இதுவே `தத்துவமசி` மகாவாக்கியத்தின் உண்மைப் பொருள். இப்பொருளைச் சில மதங்கள் தள்ளிவிடுகின்றன.
**********************************************
பாடல் எண் : 2
ஆறா றகன்ற அணுத்தொம் பதம் சுத்தம்
ஈறான தற்பதம் எய்துப சாந்தத்துப்
பேறா கியசீவன் நீங்கிப்பிர சாதத்து
வீறான தொந்தத் தசிதத்வ மசியே.

பொழிப்புரை : (சகலாவத்தையில் தொம்பதப்பொருளாய் நின்ற தத்துவவன்ன ரூபியான ஆன்மாச்) சுத்தாவத்தையில் தத்துவம் அனைத்தினின்றும் நீங்கித் தூயதாய்த் தொம்பதப் பொருளாய் நிற்கும். தத்பதப் பொருளாகிய, எல்லாப் பொருட்கும் முடிவாய் உள்ள சொரூப சிவம் எப்பொழுதுமே பரதுரியத்தில் உள்ளது. அதனை அத்துரியத்தில் அடைந்த ஆன்மா அவ்வாறு குருவருளால் அசுத்தத்தின் நீங்கிச் சுத்தத்தை எய்தி, சிவமாய் நிற்கும் பேற்றினையளிக்கின்ற, `தொம் தத்தசி` என்னும் பதத்தின் பொருளே `தத்துவமசி` மகாவாக்கியத்தின் பொருளாகும்.
**********************************************
பாடல் எண் : 3
துவம்தத்தசியே தொந்தத் தசியும்
அவைமன்னா அந்நு வயத்(து) ஏகம்ஆன
தவவுறு தத்வ மசிவேதாந் தத்துச்
சிவமாம் அதுவும்சித் தாந்தவே தாந்தமே.

பொழிப்புரை : `துவம் தத் அஸி` என்பதே தொந்தத்தசி என்பது மேலே சொல்லப்பட்டது. அவை இரண்டுமே நீக்கப்படாது நிலை பெற்று நின்று, பொருள்கோள் முறையில் ஒன்றாய் இயைகின்ற இயைபினால் ஒன்றேயாகின்றன. இனி, வேதாந்தத்தில் பெரிதும் பயின்று வருகின்ற `தத்துவமசி` என்னும் மகாவாக்கியம் வேதாந்தம் சீவன் சிவமாதலையே குறிப்பது. ஆகிவே, அதனை, சித்தாந்த மகாவாக்கியம்` என்றும் சொல்லலாம், `இல்லை, வேதாந்த மகாவாக்கியந்தான்` என்றும் சொல்லலாம்.
**********************************************
பாடல் எண் : 4
துரியம் அடங்கிய சொல்லறும் பாழை
அரிய பரம்என்பர் ஆகார்இ தன்றென்னார்
உரிய பரம்பர மாம் ஒன் றுதிக்கும்
அருநிலம் என்பதை யார்அறி வாரே.

பொழிப்புரை : துரியத்தைக் கீழ்ப்படுத்தி நிற்கும். துரியாதீத நிலை, சுட்டுணர்வினால், உணரவும், சொல்லாற் சொல்லவும் வாராமையால் அந்நிலையை எய்தாதவர்க்கு அது வெறும் பாழ்போல்வதாகும். அதனால் அவர் அதில் விளங்கும் பொருளை, ஒருவராலும் அடைய இயலாத ஒரு தனிப் பொருள் என்று கூறுவர். அதனை வேறு சிலர், `அஃது இன்னது ஆம் - என்றும், இன்னது அன்று` என்றும் அநிர்வசனீயமாகக் கூறுவர் ஆயினும், `அந்தத் துரியாதீத நிலை அனுபவிக்கத் தக்க, மிக மேலான, ஒன்றேயான ஒப்பற்ற ஒரு பெரும் பொருள் விளங்குகின்ற நிலை` என்பதை அறிபவர் யார்!
**********************************************
பாடல் எண் : 5
தொம்பம் தத்பதம் சொல்லும் அசிபதம்
நம்பிய முத்துரி யத்தும்மேல் நாட ஏ
யும்பத மும்பத மாகும் `உயுர்பரம்
செம்பொறா ளான சிவம்`என லாமே.

பொழிப்புரை : மேற்கூறிய, சீவ துரியம், சிவ துரியம் பரதுரியம் என்னும் மூன்று துரியத்திலுமே தொம்பதப் பொருளாகிய ஆன்மா, தத்பதப் பொருளாகிய சிவத்தை, அசிபதத்தின் வழியாக, மேல் நோக்கு உணர்வினால் உணருமாயின், பரதுரியத்திற்போலவே ஏனை, இரு துரியங்களிலும் அது சிவமாகியே நிற்கும் (சீவனாகி நில்லாது` என்பதாம்.)
**********************************************
பாடல் எண் : 6
வைத்த துரிய மதில்சொரூ பானந்தத்(து)
உய்த்த பிரணவ மாம்உப தேசத்தை
மெய்த்த இதயந்து விட்டிடும் மெய்யுணர்
வைத்த படியே அடைந்துநின் றானே.

பொழிப்புரை : `தத்துவமசி` என்னும் உபதேசத்தையேயன்றிப் பிரணவ உபதேசத்தை ஒருவன் தனது நிலையான உள்ளத்தில் அழுத்தி வைப்பினும் அதனால் விளையும் மெய்யுணர்வினால் அவன் தன்னை ஆசிரியர் ஆக்கி வைத்த சிவநிலையை இழக்காது அடைந்து நிற்பவனாவான்.
**********************************************
பாடல் எண் : 7
நனவாதி ஐந்தையும் நாதாதி வைத்துப்
பினமாம் மலத்தினைப் பின்வைத்துப் பின்சுத்தத்
தனதாம் சிவகதி சத்தாதி சாந்தி
மனவாச கங்கெட்ட மன்னனை நாடே.

பொழிப்புரை : `அகாரம், உகாரம், மகாரம், விந்து, நாதம்` என்னும் பிரணவ கலைகள் ஐந்தையும் முறையே யோகாவத்தையில் சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்னும் அவத்தைகளாகிய `பிரணாயமம், பிரத்தியாகாரம், தாரணை: தியானம், சமாதி` என்னும் ஐந்திலும் பொருந்த வைத்துப் பயின்றால், உன்னின் வேறாகாது உடனாய் ஒன்றி நின்ற ஆணவ மல சத்தி உன்னின் வோறாய்ப் பிரியும். அங்ஙனம் அது பிரியுமிடத்து நின்மலாவத்தையில் சாக்கிரம் முதலிய ஐந்திலும் மேற்சொல்லியவாறே அகாரம் முதலிய கலைகளை வைத்துப் பாவிக்க, ஆணவ சத்தி உன்னை மறைக்க மாட்டாது. கீழ்ப் பட்டு அடங்கும். அஃது அடங்கவே, ஆன்ம சுத்தி உண்டாகி, அதன் பின் ஆன்ம லாபமும் கிடைக்கும். இவ்வாறு சத்தாதி ஐம்புலன் களையும் உணரும் ஐம்பொறிகளையும், அவற்றின் வழி ஓடுகின்ற மனத்தையும், அதற்குமேல் வாக்கையும் கடந்த தலைவனாகிய சிவனை நீ உணர்வாயாக.
**********************************************
பாடல் எண் : 8
பூரணி யாவது புறம்பொன் றிலாமையால்
பேர்அணி யாதது பேச்சொன் றிலாமையால்
ஓர்அணை யாதது ஒன்றும் இலாமையால்
காரணம் இன்றியே காட்டும் தகைமைத்தே.

பொழிப்புரை : (முன் மந்திரத்தில் ``மன்னன்`` என ஆண்பாலாகச் சொல்லப்பட்ட சிவம்) தனக்குப் புறம்பாகயாதொரு பொருளும் இல்லாதபடி எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி நிற்றல் பற்றி, `பூரணத்துவம் உடையது` என்று சொல்லபடுகின்றது. (அஃதன்றி, `அது தவிர வேறு பொருள் இல்லை` என்னும் கருத்தில் `அது பூரணத்துவம் உடையது` என்று சொல்லப்படவில்லை.)
``அகிலாண்ட கோடி யெல்லாம்
தன் அருள் வெளிக்குளே தங்கும்படிக்கு இச்சை வைத்து``
என்னும் தாயுமானவர் பாடல் இங்கு நோக்கத் தக்கது.
வாக்கைக் கடந்து நிற்றலால் அஃது எந்த ஒரு பெயராலும் திட்டமாகச் சொல்ல ஒண்ணாதது. குணங்குறி ஒன்றும் இன்மையால் உயிர்களால் அனுமித்து உணரப்படாதது. ஆயினும் பிற காரணங்களால் காட்டப்படாது, தன்னாலே தான் காட்டப் படுவதாம்.
**********************************************
பாடல் எண் : 9
`நீஅது ஆனாய்` எனநின்ற பேரூரை
ஆய்`அது ஆனேன்` என்னச் சமைந்(து) அறச்
சேய சிவமாக்கும் சீர்நந்தி பேரரு
ளாய்அது வாய்அனந் தானந்தி யாமே.

பொழிப்புரை : `நீ அது ஆகிறாய்` என்னும் பொருளதாய் ஆசிரியர் மாணவனுக்கு உபதேசிக்கின்ற `தொம்தத்தசி` (தத்துவமசி) என்னும் அந்த மகாவாக்கியமே, மாணாக்கன் பயில்கையில், `நான் அது ஆனேன்` என்னும் பொருளதாகிய `அஹம்பிஹ்மாஸ்மி` என்னும் மகாவாக்கியமாய் நின்று, சிவனை அதன் பாசங்கள் முற்றும் அற்றொழியப் பண்ணி, வாக்கு மனங்கட்கு அப்பாற்பட்ட சிவமாகச் செய்யும். அங்ஙனம் பயில்கின்ற சீவன் முதலில் சிவனது அருளே தானாய்ப் பின்பு சிவனேயாய், அவனது முடிவில்லாத ஆனந்தத்தை அனுபவிப்பதாகும்.
**********************************************
பாடல் எண் : 10
உயிர்பரம் ஆக உயர்பர சீவன்
அரிய பரம்ஆக அச்சிவம் வேதத்
திரயிலும் சீராம் பராபரன் என்ன
உரிய உரையற்ற ஓம்மயம் ஆமே.

பொழிப்புரை : முன் மந்திரத்திற் கூறிய முறையால் சீவன் சிவமான பொழுது, அது `சீவான்மா` எனப்படாது, பரமான்மா` என்றே சொல்லப்படும். (இவ்வாறு சருவஞ் ஞானோத்தரத்தில் சொல்லப்பட்டது. என்பதைச் சிவஞான போத ஆறாம் சூத்திர மாபாடியத்தில் காண்க.) அங்ஙனம் சொல்லப்படுமாறு சீவன் சிவமேயாய் விட்ட பொழுது, அவ்வாறான அந்த ஆக்கச் சிவம், மூனறு வேதங்களிலும் பராபரம்` எனப் புகழ்தற்கு உரியது. சொல் இறந்ததும், பிரணவமே வடிவானதும் ஆன அந்தச் சிவமேயன்றி, வேறன்றாம்.
**********************************************
பாடல் எண் : 11
வாய்நாசி யேபுரு மத்தகம் உச்சியில்
ஆய்நாசி உச்சி முதலவை யாய்நிற்கும்``
தாய்நாடி யாதிவாக் காதி கலாதிகள்
சேய்நா டொளியாச் சிவகதி ஐந்துமே.

பொழிப்புரை : மேல் வாயின்கண் உள்ள, நாசிக்குச் செல்லும் வழியிடம், (என்பது நாக்கின் அடிக்கு மேல் உள்ள இடம். இஃது `அண்ணம்` எனப்படும்.) புருவ நடு, நடு நெற்றி, உச்சித் தலை என்னும் நான்கும் சுழுமுனை வழியாகச் செல்லும் பிராணன் செல்லும் வழிகளில் சிறப்பானவையாகும். அவற்றிலும் புருவ நடுவும், உச்சியும் சிறப்பிற் சிறப்பானவை. சுழுமுனை நாடிக்கும் முலதாய் உள்ள மூலா தாரத்தில் உறங்கிக் கிடக்கின்ற, நால்வகை வாக்கிற்கும் முதலாகிய குண்டலி சத்தி எழுந்தோங்கிப் பிராணனுடன் மேற்சொல்லிய இரண்டிடங்களை அடைந்து, அவற்றிற்கு அப்பால் உள்ள பொருளைக் காணும் ஒளியாக அமையுமாயின் அப்பொழுது, `கலை, காலம், நியதி, வித்தை, அராகம்` என்னும் ஐந்து தத்துவங்களும் சிவகதியை அடைவதற்குத் துணையாகிவிடும்.
**********************************************
பாடல் எண் : 12
அறிவறி யாமை இரண்டும் அகற்றிச்
செறிவறி வாய்எங்கும் நின்ற சிவனைப்
பிறிவறி யாத பிரான்` என்று பேணார்
குறியறி யாதவர் கொள்ளறி யாரே.

பொழிப்புரை : கருவி கரணங்களால் வரும் அறிவைக் கொண்டு புறப்பொருள்களை அறிந்து வருகின்ற சிற்றறிவையும், கருவிகள் முடங்கியவழி ஆணவ மலத்தால் உண்டாகின்ற அறியாமையும் ஆகிய இரண்டையும், எங்கும் நிறைந்துள்ள சிவனது பேரறிவால் நீங்கும்படி நீக்கி, அந்த அறிவினாலே சிவனை, `அவனே உயிர்களில் என்றும் நீக்க மின்றி நிறைந்திருக்கின்ற முதல்வன்` என உணர்ந்து அவனையே பற்றி நிற்கும் முறையை அறியாதவர்கள் (தாம் மெய்ப்பொருளை அறிந்து பற்றிவிட்டதாகக் கருதிக்கொள்ளினும்) அது மாட்டாதவரே ஆவர்.
**********************************************
பாடல் எண் : 13
அறிவார் அறிவன அப்பும் அனலும்
அறிவார் அறிவன அப்பும் கலப்பும்
அறிவான் இருந்தங் கறிவிக்கி னல்லால்
அறிவான் அறிந்த அறிவறி யோமே.

பொழிப்புரை : பொருள்களைத் தாமாக அறிபவர் யாவரும் அறியும் பொருள்கள் காட்சிப் பொருள்களே. அவையேயன்றிக் கருத்துப் பொருள்களும் உள ஆதலால், அவற்றை அறிவிப்பவன் ஒருவன் இருந்துகொண்டு அறிவித்தாலன்றி, அறிபவன் தானே அறிந்து பெற்ற அறிவாக நாம் எந்த அறிவையும் அறிகின்றிலம்.
**********************************************
பாடல் எண் : 14
 அடிதொழ முன்னின் றமரர்கள் அத்தன்
முடிதொழ ஈசனும் முன்னின் றருளிப்
படிதொழ நீபண்டு பாவித்த எல்லாம்
கடிதெழக் காண்என்னும் கண்ணுத லானே.

பொழிப்புரை : சிவபெருமானைத் தேவர்கள் அவன் திருமுன் நின்று அவனது திருவடிகளைத் தலை வணங்கிப் பணிய, அவனும் அவர்கட்கு முன்னின்று அவர்கள் வேண்டுவனவற்றை அளித்தருளுவன். இனி, உலகமெல்லாம் `ஞானி` என்று வணங்கும்படி நிற்கின்ற உனக்கு அவன், நீ முன்பு யோக பாவனையில் பாவனையாகப் பாவித்தவைகளையெல்லாம் இப்பொழுது விரைவில் உண்மையாய் விளங்கக் கண்டு இன்புறுவாயாக` என்று அருள்புரிவான்.
**********************************************
பாடல் எண் : 15
நின்மல மேனி நிமலன் பிறப்பிலி
என்னுளம் வந்(து) `இவன் என் அடியான்` என்று
பொன்வளர் மேனி புகழ்கின்ற வானவன்
நின்மலன் ஆகென்று நீக்கவல் லானே.

பொழிப்புரை : வேதங்களில், `பொன்னிறம் விளங்க நிற்பவன்` (இரணிய கருப்பன்) எனப் புகழப்படுகின்ற சிவன், இயல்பாகவே மலம் இல்லாத தூயோன் ஆதலின் பிறப்பில்லாதவனாய் அருளே திருமேனியாகக் கொண்டு, `இவன் என்னுடைய அடியவன்` என்று கருணைகூர்ந்து, என் உள்ளம் மகிழும்படி என் எதிர்வந்து இவனும் என்னைப் போல மலம் நீங்கித் தூயன் ஆகுக` எனக் கருதுதல் செய்து, அவ்வாறே நீங்குதற்கரிய எனது மலத்தை நீக்கவல்ல வனாயினான்.
**********************************************
பாடல் எண் : 16
துறந்துபுக் குள்ளொளி சோதியைக் கண்டு
பறந்தஎன் உள்ளம் பணிந்து கிடந்தே
மறந்தறி யாஎன்னை வானவர் கோனும்
இறந்து பிறவாமல் ஈங்குவைத் தானே.

பொழிப்புரை : நான் இவ்வுலகில் `யான், எனது` என எனக்கு இருந்த பற்றை எனது புண்ணிய வசத்தால் துறந்து, வித்தியா குரு, கிரியா குரு இவர்களால் என் உள்ளே ஒளிந்து நிற்கும் ஒளியாகிய சிவனை ஓராற்றால் கண்டு, முன்பு அலையாய் அலைந்து கொண்டிருந்த எனது மனம் ஒருங்கி அவனிடத்தே அடங்கிக் கிடக்க, அதனால் அவனை மறவாதவனாகிய என்னை அவனும், இறத்தலும், பின்பு பிறத்தலும் ஆகிய இவைகளை அடையாதபடி செய்து, பின்னும் இவ்வுலகிலே இருக்க வைத்தான்.
**********************************************
பாடல் எண் : 17
மெய்வாய்கண் மூக்குச் செவியெனும் மெய்தோற்றத்(து)
ஐவாய அந்தக் கரணம் அகிலமும்
எவ்வாய் உயிரும் இறைஆட்ட ஆடலால்
கைவாய் இலாநிறை எங்கும்மெய் கண்டதே.

பொழிப்புரை : `மெய், வாய், கண், மூக்கு, செவி` எனப் படுகின்ற ஐந்து புற அறிவுக் கருவிகளும், `மனம், புத்தி, சித்தம், அகங்காரம்` எனப்படுகின்ற நான்கு அக அறிவுக் கருவிகளும், பிறவும் கூடிய உடம்புகளும், அறிவின்றி விரிந்து பரந்துள்ள பல உலகங்களும், அவற்றைச் சார்ந்து எவ்விடத்தும் அறிவையும் இன்பத்துன்ப நுகர்ச்சிகளையும் பெற்று வருகினற அளவற்ற உயிர்களும் ஆகிய அனைத்தும் சிவன் ஆட்டவே ஆடுகின்றன. இதனை, ``ஆட்டு வித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே``* என்னும் திருமுறையும், ``அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது`` என்னும் முதுமொழியும் விளக்கி நிற்கின்றன. அதனால் சிவனது கை, வாய் முதலிய உறுப்புகளுள் யாதொன்றும் இல்லாத பெருநிறைவு எங்கும் உள்ளதாகிய அத்துவித உண்மை அருளாளரால் நன்குணரப்பட்டது.
**********************************************
மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!