http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Sunday 31 March, 2013

திருமந்திரம் - தந்திரம் 09: பதிகம் 23 & 24/I. முத்திபேதம், கரும நிருவாணம்-பாடல்கள்: 02 & 67/I.

,
 பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
*************************************************
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:01: குருமட தரிசனம்..............................பாடல்கள்: 006 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:02: ஞானகுரு தரிசனம்..........................பாடல்கள்: 019 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:03: பிரணவ சமாதி..............பாடல்கள்:006
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:04: ஒளிவகை......................பாடல்கள்:017
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:05: பஞ்சாக்கரம்-தூலம்........பாடல்கள்:010
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:06: பஞ்சாக்கரம்-சூட்குமம்.பாடல்கள்...:005

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:07: அதிசூக்கும பஞ்சாக்கரம்.பாடல்கள்:003
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:08: காரண பஞ்சாக்கரம்........பாடல்கள்:003
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:09: மகா காரணபஞ்சாக்கரம்:பாடல்கள்:004

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:10: திருக்கூத்து.....................பாடல்கள்:002
 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:11: சிவானந்தக் கூத்து..........பாடல்கள்:008
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:12: சுந்தரக் கூத்து................பாடல்கள்:006

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:13: பொற்பதிக் கூத்து..........பாடல்கள்:011
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:14: பொற்றில்லைக்கூத்து....பாடல்கள்:013
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:15: அற்புதக் கூத்து..............பாடல்கள்:042
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:16: ஆகாசப்பேறு...................பாடல்கள்:010 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:17: ஞானோதயம்..................பாடல்கள்:011
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:18: சத்தியஞானானந்தம்......பாடல்கள்:009
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:19: சொரூப உதயம்...........பாடல்கள்: 011
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:20: ஊழ்................................பாடல்கள்: 006 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:21: சிவரூபம்......................பாடல்கள்: 003
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:22: சிவதரிசனம்................பாடல்கள்:008

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:23: முத்திபேதம் கருமநிருவாணம்.பாடல்கள்:002
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:24: சூனிய சம்பாடனை..........பாடல்கள்:067  
*************************************************
தந்திரம் 8- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -024 
கூடுதல் பாடல்கள்  .........................................(204+002+067=273)

*************************************************


ஒன்பதாம் தந்திரம்-23. முத்திபேதம் கருமநிருவாணம் : பாடல்கள் : 02
பாடல் எண் : 1
ஓதிய முத்தி அடைவே உயிர்ப்பர
பேதமி லாச் சிவம் எய்தும் துரியம்அ
நாதி சொரூபம் சொரூபத்த தாகவே
ஏத மிலாநிரு வாணம் பிறந்தததே.

பொழிப்புரை :  நூல்களில் சொல்லப்பட்ட முத்தி, வரிசைப்பட்ட `துரியம், துரியாதீதம்` என இரண்டாகும். அவற்றுள் துரிய முத்தியாவது, ஆதியாய், ஆயினும் பரத்தோடு வேற்றுமையில்லாத சிவத்தை அடைந்து நிற்றலும், துரியாதீத முத்தியாவது, அநாதியாகிய பரத்தை அடைந்து நிற்றலும் ஆம் பரத்தை அடைந்த உயிர் பின் எவ்வாற்றானும் மீளா நிலையே அனைத்தும் நீங்கிய முடிநிலை முத்தியாகும்.
*************************************************
பாடல் எண் : 2
பற்றற் றவர்பற்றி நின்ற பரம்பொருள்
கற்றவர் கற்றுக் கருதிய கண்ணுதல்
சுற்றற் றவர் சுற்றி நின்றஎன் சோதியைப்
பெற்றுதற் றவர்கள் பிதற்றொழிந் தாரே.

பொழிப்புரை :  பரத்தை எய்துதலாகிய அதீத நிலையை அடைந் தவர்களே உலகர் செய்யும் செயல்களினின்றும் முற்றும் நீங்கினவராவர்.
*************************************************
ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை : பாடல்கள் 067 பாகம்-I
பாடல் எண் : 1
காயம் பலகை கவறைந்து கண்மூன்று
ஆயம் பொருவ(து)ஓர் ஐம்பத்தோ ரக்கரம்
ஏய பெருமான் இருந்து பொருகின்ற
மாயக் கவற்றின் மறைப்பறி யேனே.

பொழிப்புரை :சிவன் கொடுத்த பொருளை அஃது அன்னதாதலை அறியாது தம்முடையன வாகக் கருதிச் சிவனுக்கும், சிவனடியார் களுக்கும் கொடுக்க மறுத்தவர்களது பொருளை மூர்க்க நாயனார் சூதாடிப் பறித்ததுபோல தம்மையுணருமுகத்தால் தமையுடைய தன்னை உணரற்பால வாகிய உயிர்கள் அதனைச் செய்யாது, தம் கருவி கரணங்களைத் தாம் விரும்பும் வகையிற் செலுத்தி அல்ல லுறுதலை அறிந்த சிவபெருமான் அவைகள் அறியாமல் அவை களோடு கூடியிருந்தே அக்கருவி கரணங்களின் வழித் தன் வழியில் அவைகளைத் திருப்புதலாகிய சூதாட்டத்தினைச் செய்வதாகக் குறிப்பிட்டு, ஆயினும், சூதாடுவோர் பிறர் தமக்கு எதிர் இருந்து தம் பொருளைக் கவரமுயலுதலை நன்கு அறிதல் போல உயிர்கள் சிவனை அறிந்து கொள்ள வில்லை` எனக் கூறுகின்றார்.  நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்துச் சம்பாதித்த பொருளாயினும் அப்பொருளை கட்குடிக்கும், கவறொடுதலுக்கும் ஒருவன் பயன்படுத்துவானா யின் அஃது அவனுக்குப் பாவமேயாதல் போல, மூர்க்க நாயனார் சூதாடிப் பொருள் ஈட்டினாரா யினும் அதனை அவர் சிவனுக்கும், சிவன் அடியார்களுக்குமின்றி, வேறுவகையில் செலவிடாமையால், அஃது அவர்க்குச் சிவ புண்ணியமேயாயிற்று. வாதவூரடிகள் பாண்டியன் பணத்தைச் செலவிட்டது இத்தகையதோ. சிவன் மறைந்து நின்று செய்யும் செயலும் இப்படிப்பட்டதே.  உயிர்களை நன்னெறியில் செல்ல ஏவிய சிவபெருமான், அதன் பொருட்டு அவைகட்கு வேண்டும் துணைப் பொருள்களை நிரம்பக் கொடுத்திருந்த போதிலும் அவைகள் அவற்றை மாற்று வழியிற் செலுத்துதலால், அச்செயலை அவன் மறைந்து நின்று மாற்றுகின்றான். அஃது ஒரு சூதாடியின் செயல் போன்றுள்ளது. ஆகவே சிவபெருமானாகிய சூதாடிக்கு உயிர்கட்கு அவனால் தரப்பட்ட உடம்புகளே சூதாடும் பலகைகள். சாக்கிரம் முதலிய மூன்றவத்தை இடமாகிய புருவ நடு, கண்டம், இருதயம் ஆகியவையே சூதாடு களம். உடம்பின் புறத்தும், அகத்தும் உள்ள கருவிகளே உருட்டியோ, குலுக்கியோ பந்தயம் பெறும் கருவிகள். எழுத்தும், சொல்லும், சொற்றொடருமாய் உணர்வைத் தரும் மொழிகளே. அக்கருவிகளின் வழிப்பெற்ற பந்தயத்தின் படி காய்களை இடம் பெயர்த்து வைத்து, வெற்றி தோல்வியைத் துணிகின்ற வரைகோடுகள் அல்லது கட்டங்கள், இவை -களில் பலகை, களம், உருள் கட்டம் ஆகியவற்றை எல்லாவற்றையும் அறிகின்ற உயிர்கள் அவற்றின் வழித் தம்மை வஞ்சிக்கின்ற சிவன் ஒருவனை அவன் தம்முடன் கூடவேயிருந்தும் அறியவில்லை.
*************************************************
பாடல் எண் : 2
தூறு படர்ந்து கிடந்தது தூநெறி
மாறிக் கிடக்கும் வகையறி வார் இல்லை
மாறிக் கிடக்கும் வகையறி வாளருக்(கு)
ஊறிக் கிடக்கும் என் உள்ளன்பு தானே.

பொழிப்புரை : அனைவரும் சிறிதும் துன்பம் இன்றி மிக இன்பத்துடன் நடந்து செல்லத் தக்க நல்ல வழி ஒன்று இருக்கின்றது. ஆயினும் முட்புதர்கள் பல அதனை மூடிக்கிடக்கின்றன. அதைத் தெரிந்து அப்புதர்களை நீக்கி நல்வழியைக் கண்டு நடப்பவர் மிகச் சிலராகவே யிருக்கின்றனர். அந்தச் சிலர்மேல்தான் எனது உள்ளத்தில் உள்ள அன்பு கரந்து பாய்கின்றது.
*************************************************
பாடல் எண் : 3
ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில்
சாறு படுவன நான்கு பனைஉள
ஏறற் கரியதோர் ஏணியிட்(டு) அப்பனை
ஏறலுற் றேன் கடல் ஏழுகணஅ டேனே.

பொழிப்புரை :ஆறு தெருக்கள் - அறிவினால் மிக்க அறு சமயங்கள். அவை அனைத்தும் சந்திக்கின்ற சந்தியிடம் - பக்குவான்மா. அதற்கு வீடு பேறாகிய சாற்றைத் தருவனவாய் முறைப்பட மேட்டு நிலத்தில் உயர்ந்து உயர்ந்து நிற்கும் நான்கு பனை மரங்கள் - சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆறு தெருவில் செல்பவர்களில் யாரும் அந்தப் பனை மரங்களில் ஒன்றிலேனும் ஏற இயலாது. அவற்றை விடுத்துச் சிவ குருவினை அருளால் சிவ நெறியை அடைந்தோரே அவற்றில் ஏற இயலும் ஆகையால், அந்தச் சிவநெறியே அந்தப் பனைமரங் களில் ஏறுதற்கு அரிதல் கிடைக்கும் ஏணி. அந்த ஏணி வழியாக நான் அவற்றில் முறையாக ஏறினேன். ஏறியவுடன் எழுவகைப் பிறவியாகிய கடல்கள் ஏழினது கரையையும் கண்டு கொண்டேன்.
*************************************************
பாடல் எண் : 4
வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது
தொழுது கொண் டோடினார் தோட்டக் குடிகள்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே.

பொழிப்புரை :என்னுடைய தோட்டத்தை ஒருசிலர் தங்களுடைய தாக ஆக்கிக்கொண்டு அவர்கள் விருப்பம்போல அதனைப் பயன் படுத்தி வந்தனர். இருப்பினும் அவர்களுக் கிடையே நான் ஒட்டி ஒன்றிச் சிறிது இடத்தைத் தோண்டிக் குழிசெய்து, எனக்குப் பழக்க -மான உணவாகிய கத்தரிக்காயைப் பெறவேண்டி அதன் விதையை ஊன்றினேன், ஆயினும் அந்த விதையினின்று பாகற் கொடி முளைத்துப் படர்ந்தது. படர்ந்த அக்கொடியோ பூசணிப் பூவைப் பூத்தது. அந்தப் பூவோ வாழைக் காயைக் காய்த்தது. அந்தக் காய் பழுத்ததைப் பார்த்துவிட்டு, முன்பு வலிசெய்து குடியிருந்த அந்த அற்பர்கள், `ஐயா, உங்கள் தோட்டம் மிகப்பெரிய புதுமைகள் விளைகின்ற தோட்டமாய் உள்ளது; உங்களுக்கு ஒரு கும்பிடு` என்று சொல்லிக் கும்பிட்டு விட்டு ஓடிவிட்டார்கள்.
*************************************************
பாடல் எண் : 5
ஐயென்னும் வித்தினில் ஆனை விளைப்பதோர்
செய்யுண்டு செய்யின் தெளிவறி வார்இல்லை
மையணி கண்டன் மனம்பெறின் அந்நிலம்
பொய்யொன் றுமின்றிப் புகல்எளி தாமே.

பொழிப்புரை :`` என்று வியக்கத்தக்க மிகச் சிறிய பொருளையே (கடுகு, மிளகு, கொத்துமல்லி போன்ற பொருள்களையே) விளைக்கக் கூடிய விதைகளை இட்டால், அவற்றிலிருந்தே ஆனைபோன்ற மிகப்பெரிய (மாங்காய், தேங்காய், பலாக்காய் போன்ற) பொருள் -களையே விளைவிக்கின்ற அதிசய நிலம் ஒன்று உண்டு. அஃது அத்தன்மைத்தாதலை அறிந்து அதில் விதை விதைக்கின்றவர்கள் உலகத்தில் பலர் இல்லை. அந்த நிலம் சிவன் மனம் வைத்தால், தவறாமல் எளிதில் அடையப்பெறுவதாகும்.
*************************************************
பாடல் எண் : 6
பள்ளச்செய் ஒன்றுண்டு பாழ்ச்செய் இரண்டுள
கள்ளச்செய் அங்கே கலந்து கிடந்தது
உள்ளச்செய் அங்கே உழவுசெய் வார்கட்கு
வெள்ளச்செய் யாகி விளைந்தது தானே.

பொழிப்புரை : மக்களில் ஒவ்வொருவருக்கும் உள்ளது ஒரு நிலந்தான். அந்த நிலத்தில் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே நீர் எளிதில் பாய்ந்து விளைவைத்தரக் கூடியதாய் உள்ளது மற்றை இரண்டு பகுதிகள் நீர் செல்லாது, முரம்பாய்க் கிடக்கின்றன. மூன்றிலும் உழமுடியாதபடி கருங்கற்கள் உள்ளன. இவற்றைச் சமப்படுத்தி உழ வல்லவர்கட்கு அந்த ஒரு நிலமே வேண்டுமளவு நீர் தேங்கி நிற்கின்ற நிலமாய், நல்ல விளைவைத் தருகின்றது.
*************************************************
பாடல் எண் : 7
மூவணை ஏரும் உழுவது முக்காணி
தாம்அணை கோலின் தறியுறப் பாய்ந்திடும்
நாவணை கோலி நடுவிற் செறுஉழார்
காலணை கோலிக் களர்உழு வார்களே.

பொழிப்புரை :மூன்றாகப் பொருந்தியுள்ள ஏர்கள் மக்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளன. (அவை, `இடை, பிங்கலை, சுழுமுனை` என்னும் மூன்றும் நாடிகள் வழியாகச் செல்லும் பிராண வாயுக்கள், வழி பற்றி இவை மூன்றாயின.) அந்த ஏர்கள் அனைத்தும் உழுதுகொண்டிருப்பது முக்காணி (முக்கால் மா) அளவான சிறிய நிலத்தையே, (ஒரு மாவில் நான்கில் ஒரு பங்கு `காணி` என்னும் பெயரை உடையது. ஆறு ஆதாரங்களில் முதலாவதாகிய மூலாதாரம் முக்கோண வடிவினது ஆதலின், அதனை ``முக்காணி`` என்றார். சுவாசம் இயல்பாக மூலாதாரத்தினின்று எழுந்து இயங்கிக் கொண்டிருக்கின்றது) அந்த ஏர்களைத் தடை செய்து செலுத்தினால் அவை குறித்த வழியில் இயங்கிப் பயன் தர வல்லன அவ்வாறு அவற்றைக் குறித்த வழியில் செலுத்திச் சில சொற்களால் அதட்டி அடக்கி, நடுவில் உள்ள நல்ல நிலத்தை உழுதால் நல்ல பலன் கிடைக்கும். மக்கள் அவ்வாறு அந்த நல்ல நிலத்தை உழாமல், வடிகாலை மட்டும் பெரிதாக்கிக் களர் நிலத்தை உழுது கொண்டிருக்கின்றார்கள்.
*************************************************
பாடல் எண் : 8
ஏத்தம் இரண்டுள ஏழு துரவுள
மூத்தோன் இறைக்க இளையோன் படுத்தநீர்
பத்தியிற் பாயாது பாழ்ப்பாய்ந்து போயிடின்
கூத்தி வளர்த்ததோர் கோழிப்பு ள்ளாமே.

பொழிப்புரை : (`ஏத்தம்` என்பதுதான் நீர் இறைக்கும் ஏத்தத்தின் பெயர். அஃது அறியாதார் `ஏற்றம்` என்பர்.) ஏத்தம் இரண்டு - இடை நாடி, பிங்கல நாடி. ஏழு தூவு - ஆறு ஆதாரங்களும், சகஸ்ராரமும், (துரவு - கிணறு) மூத்தோன் - `அகங்காரம்` என்னும் அந்தக் கரணம். இதுவே பிராணவாயுவை இயக்குவது. இளையான் - `மனம்` என்னும் அந்தக் கரணம். (பிராண வாயு இயங்குதலாலே உயிர் அறிவு பெற்று விளங்குகின்றது. அந்த அறிவை நீராகவும், அந்த அறிவு நிற்கும் இடங்களைத் துரவாகவும் பிராண வாயுவின் இயக்கத்தால் உயிரின் அறிவு பிரவர்த்திக்கச் செய்யும் செயலை நீரைப் பயன்படுத்த இறைப்ப தாகவும், அறிவு மனத்தின் வழியே சென்று பயன் விளைத்தலின் மனத்தை நீரை வேண்டும் இடத்திற்குக் கொண்டுபோய்ப் பாய்ச்சுபவ னாகவும் கூறினார். உயிர்க்கு அறிவை உண்டாக்கும் கருவியை நீர் இறைக்கும் மூத்த சகோதரனாகவும், அறிவைக் கொண்டு போய்ப் பயன் படுத்தும் கருவையை, நீரை வேண்டுமிடத்தில் பாய்ச்சும் இளைய சகோதரனாகவும் கூறினார்.) பிராண வாயு நடு நாடியாகிய சுழுமுனையில் சென்றால், ஞானமாகிய பயன் விளையும். அதனால் அதனை, ``பாத்தி`` என்றார். பிராண வாயுவை மனம் சுழுமுனையிற் செலுத்தாது வெளியில் செலுத்தி, அஞ்ஞானமே விளையப் பண்ணுதலால் மூத்தோன் ஓர் ஏத்தத்தின் வழியாக (இடைகலை வழியாக) நீரைத் துரவுக்குத் தந்து மற்றோர் ஏத்தத்தின் வழியாக (பிங்கலை வழியாக) வெளியேற்ற, `அந்நீர் பாத்தியிற் பாயாது, பாழ் நிலத்தில் பாய்கின்றது` என்றார்.
*************************************************
பாடல் எண் : 9
பட்டிப் பசுக்கள் இருபத்து நால்உள
குட்டிப் பசுக்கள்ஓர் ஏழ்உள ஐந்துள
குட்டிப் பசுக்கள் குடப்பால் சொரியினும்
பட்டிப் பசுவே பனவதற்கு வாய்த்தவே.

பொழிப்புரை : பட்டி - தொழுவம். `பட்டியில்` என ஏழாம் வேற்றுமை உருபு விரிக்க. பட்டி, தூல, சூக்கும பர தேகங்களும், திரோதான சத்தியும். கன்றை, ``குட்டி`` என்றது மரபு வழுவமைதி. குட்டிப் பசுக்கள் - கன்றையுடைய பசுக்கள். பின்னால், ``குட்டிப் பசுக்கள்`` எனக் கூறி, முன்னே வாளா, ``பசுக்கள்`` என்றமையால், அவை தன்றை ஈனாத மலட்டுப் பசுக்களாயின. கன்றையீனாத பசுக்குள் துளிப் பாலும் தாராமையும் கன்றை யீன்ற` பசுக்கள் குடம் குடமாகப் பாலைத் தருதலும் வெளிப்படை. அவ்வாறிருந்தும் அனைத்தையும் பட்டிக்குள் வைத்துள்ள பார்ப்பானுக்கு மலட்டுப் பசுக்கள்தாம் தெரிந்தன; கன்றையுடைய பசுக்கள் தெரியவில்லை. இதற்கு அவன் கண்ணில் உள்ள கோளாறு காரணம்.
*************************************************
பாடல் எண் : 10
ஈற்றுப் பசுக்கள் இருபத்து நால்உள
ஊற்றுப் பசுக்கள் ஒருகுடம் பால்போதும்
காற்றுப் பசுக்கள் கறந்துண்ணும் காலத்தில்
மாற்றுப் பசுக்கள் வரவறி யோமே.

பொழிப்புரை :ஈற்றுப் பசுக்கள் - ஈன்றணிய. அஃதாவது, கன்றை யீன்று ஒன்றிரண்டு நாட்களேயான பசுக்கள். இவைகளின் பாலும் பூசைக்கோ, வேள்விக்கோ பயன்படாது. மக்களுக்கு உணவாக்கூட ஆகாது. பயன்படாமை பற்றி மேல், `மலட்டுப் பசுக்கள்` எனக் கூறியவற்றையே, `ஈற்றுப் பசுக்கள்` எனக் கூறினும் இழுக்கில்லை என்னும் கருத்தால் இங்கு இவ்வாறு கூறினார். எனவே, முன் மந்திரத்திற் கூறிய அந்த இருபத்து நான்கே இங்குக் கூறிய இருபத்து நான்கும் ஆகின்றன. முன் மந்திரத்தில், ``குட்டிப் பசுக்கள்`` எனக் கூறியவைகளை இங்கு ``ஊற்றுப் பசுக்கள்`` என்றார். `பாலைச் சுரந்து பொழியும் பசுக்கள்`` என்றபடி. `தனித் தனி ஒவ்வொரு குடம்` என்க. `குடமாக` ஆக்கம் விரிக்க. `புகுதும்` என்பது. `போதும்` என்றபடி ``காற்று`` என்பது பகாப் பதமாய்ப் பிராணனையும், `கால்+று` எனப் பகுபதமாய், கறக்கும்படி துன்புறுத்தப்படும் பசுக்களையும் சிலேடை வகையால் குறித்து நின்றது. காலுதல் - கக்குதல். அஃது இங்குப் பாலைப் பொழிதலைக் குறித்தது. காணுதல், தன்வினை. காற்றுதல், பிறவினை. காற்றுதல், இங்குப் பாலைக் கொடுக்கப்பண்ணுதல். சில பொல்லாத பசுக்கள் கன்றை யீன்றாலும், கன்றுக்கும் பால்கொடாது உதைத்துத் தள்ளும். யாரையும் கறக்கவிடா அப்படிப்பட்ட பசுக்களை அடித்துத் துன்புறுத்தியும், மடியில் மருந்து பூசியும் வலியுறுத்திப்பால் கொடுக்கப் பண்ணுவர்.
*************************************************
பாடல் எண் : 11
தட்டான் அகத்தில் தலையான மச்சின்மேல்
மொட்டாய் எழுந்தது செம்பாய் மலர்ந்தது
வட்டம் படவேண்டி வாய்மை மறைத்திட்டுத்
தட்டான் அதனைத் தகைந்துகொண் டானே.

பொழிப்புரை :தட்டான் ஒருவனது இல்லத்தின் மச்சுமேல், அவன் நண்பன் ஒருவன் தட்டானிடம் இருந்த நம்பகத்தால், `மொட்டு` என்னும் அளவில் பொன்னை வைத்திருந்தான். அது பின்பு அதிசய மாகச் `செம்பு` அளவாக விரிவடைந்தது. அதன் பயன் அனைத்தையும் தட்டான் தனதாக்கிக் கொள்ள எண்ணி உண்மையை மறைத்து, முழுவதையும் கவர்ந்து கொண்டான். (நண்பன் ஏமாற்றப்பட்டான்.)
*************************************************
பாடல் எண் : 12
அரிக்கின்ற நாற்றங்கால் அல்லற் கழனித்
திரிக்கின்ற ஓட்டம் சிக்கெனக் கட்டி
வரிக்கின்ற நல் ஆன் கறவையைப் பூட்டினேன்
விரிக்கின்ற வெள்ளரி வித்தும்வித் தாமே.

பொழிப்புரை : நெற்கதிரை அரி அரியாகக் கொள்ளும்படி மிக விளையக்கூடிய நல்ல வயலைப் புல்லும், பூடுகளும் ஆகிய களையைத் தந்து துன்பம் விளைக்கின்ற கழனியாக மாற்றுகின்ற ஒழுக்கலை உறுதியாக அடைத்து, உழும்பொழுதே பாலைப் பொழிந்து கொண்டு போகின்ற வலிய பசுக்களைப் பூட்டி உழுதலா, படர்ந்து செல்கின்ற வெல்ளரி விதையும் செந்நெல் விதையாய்ச் சிறந்த பயனைத் தரும்.
*************************************************
பாடல் எண் : 13
இடாக்கொண்டு தூவி எருகிட்டு வித்திக்
கிடாய்க்கொண்டு பூட்டிக் கிளறி முளையை
மிடாக் கொண்டு சோறட்டு மெள்ள விழுங்கார்
அடர்க்கொண்டு செந்நெல் அறுக்கின்ற வாறே.

பொழிப்புரை :இங்கு, ``சோறு`` எனப்பட்டது வீடுபேறாதல் தெளிவாகலின், அதுபற்றி ஏனையவும் அதற்கு ஏற்பனவாக உய்த்துணர்ந்து கொள்ளப்படும்.
*************************************************
பாடல் எண் : 14
விளைந்து கிடந்தது மேலைக்கு வித்து
விளைந்து கிடந்தது மேலைக்குக் காதம்
விளைந்து விளைந்து விளைந்தகொள் வார்க்கு
விளைந்து கிடந்தது மேவுக் காதமே.

பொழிப்புரை :உயிர்களாகிய உழவர்களுக்கு இம்மைக் காலம் முடிவதற்குள்ளே மறுமை தோன்றுதற்கு விதை விளைந்து கிடக்கின்றது. அஃது `ஆகாமியம்` என்னும் வினையாம். பிராரத்தத்தின் பயன் விளையும் பொழுது அதுபற்றி மகிழ்ச்சியோ, வருத்தமோ கொள்ளாது ஒட்டின்றிருப்போருக்கு ஆகாமியம் தோன்றாது. மகிழ்ச்சி வருத்தங்களால் அதில் அழுந்துகின்றவர்கட்கு அவை பற்றி நிகழும் முயற்சிகள் ஆகாமியமாய்த் தோன்றிச் சஞ்சிதமாய் நிலைபெறும்.) இம்மை முடிவெய்தப் பெற்ற உயிர் மறுமையில் செல்லும் இடம் இந்நிலம். சுவர்க்க லோகம், நரக லோகம் என்பன ஆதலாலும், அவற்றிடையே உள்ள தொலைவு வேறுபட்டன ஆதலாலும் `இந்த உயிர் இன்ன இடத்தில் செல்லும்` என்னும் வரையறையும் அஃது இங்குச் செய்த வினையால் வரையறுக்கப் படுதலை, ``மேலைக்குக் காதம் விளைந்து கிடந்தது`` என்றார். காதம் - வழியளவு. இப்படி, `முன் விளைந்ததிலிருந்து பின் விளைவு; பின்பு அதிலிருந்து பின் விளைவு என்று விளைவு இடைவிடாது தொடர்ந்து கொண்டே போவதால். அந்த வினையின் பயனைக் கொள்கின்ற உயிர்களுக்கு அவை மாறி மாறிச் செல்லும் மூன்று உலகங்களும் `இது` என்பது முன்னதாகவே வரையறுக்கப்படுகின்றன.
*************************************************
பாடல் எண் : 15
களர்உழு வார்கள் கருத்தை அறியோம்
களர்உழு வார்கள் கருதலும் இல்லை
களர்உழு வார்கள் களரின் முளைத்த
வளர்இள வஞ்சியி மாய்தலும் ஆமே.

பொழிப்புரை : வினை நிலம் இருக்கப் புல்லும் முளையாத களர் நிலத்தை உழுகின்றவர்கள் அதில் தப்பித் தவறி முளைத்த வஞ்சிக் கொடியின் பொலிவினைக் கண்டு, `அஃது உணவாகும்` என்று மயங்கிப் பின் அஃது அவ்வாறு ஆகாமையால். பட்டினியால் இறத்தலும் கூடுவதே. இவ்வாறு களர் நிலத்தை உழுகின்றவர்கள் `நாம் ஏன் இதனை உழுகின்றோம்` என்றும் எண்ணுவதில்லை. ஆகவே, அவர்களது குறிக்கோளாக நாம் ஒன்றையும் அறியவில்லை.
*************************************************
பாடல் எண் : 16
களர்உழு வார்கள் கருத்தை அறியோம்
களர்உழு வார்கள் கருதலும் இல்லை
களர்உழு வார்கள் களரின் முளைத்த
வளர்இள வஞ்சியி மாய்தலும் ஆமே.

பொழிப்புரை :கூப்பிடு - கூப்பிடுதல்ஓ உரக்கக் கத்தி வெருட்டுதல். முதனிலைத் தொழிற்பெயர். அதனைச் சிறிதும் மதியாத குறுநரிகள் (குள்ள நரிகள்) ஐம்பொறிகள். அவைகட்கு இடமாய் உள்ள கொட்டகாரம் உடம்பு. யாப்பிடல், கட்டுதல். அஃது ``ஆப்பிடு`` என வந்தது. பாசம் - கயிறு. ``ஆப்பிடு பாசம்`` இறந்த கால வினைத் தொகை. கயிறு, வினை, அதில் உயிராகிய மகன் எப்படியோ அகப் பட்டுக் கொண்டான். அவன் அவ்விடத்திலேயே நெருப்பை உண்டாக்கி (சில புண்ணியங்களைச் செய்து) கயிற்றை எரித்துவிட்டுச் சிலநாள் உலாவியிருந்தான். அதை அறிந்து நன்றே அங்குப் புகுந்த மகள் ஒருத்தியின் துணை கிடைத்தமையால் (திரோதான சத்தி அருட்சத்தியாய்ப் பதிந்ததனால்) அந்தக் கொட்டகையை விட்டு வெளியேறி (உடம்பை விட்டு நீங்கி) நல்லதோர் இல்லத்தை (சிவத்தை) அடைந்து இன்பத்துடன் இருக்கின்றான்.
*************************************************
பாடல் எண் : 17
மலைமேல் மழைபெய்ய மான்கன்று துள்ளக்
குலைமேல் இருந்த கொழுங்கிளி வீழ
உலைமேல் இருந்த உறுப்பெனக் கொல்லன்
முலைமேல் அமிர்தம் பொழியவைத் தானே.

பொழிப்புரை : (மலைமேல் மழை பெய்தால், அங்கு வாழும் மான்கன்று வெப்பம் நீங்கிக் குளிர்ச்சியெய்தித் துள்ளத்தானே செய்யு?) யோகிகள் சுழுமுனா நாடியை `மேரு` என்பர் ஆகலான். இங்கு ``மலை`` என்றது அதனையே. மான் கன்று, அதில் உள்ள ஆதாரங்களைச் சார்ந்து நினைக்கும் அந்தக் கரணங்களை. துள்ளுதல், மகிழ்ச்சியெய்தல். கொல்லன் - கருமான்; இரும்புத் தொழில் செய்பவன். இங்கு ``கொல்லன்`` என்றது யோகியை. உலை, கொல்லன் உலை. என்றது மூலாதாரத்தை. அதில் அக்கினியிருத்தலால் ``உலை`` எனப்பட்டது. மூலாக்கினியை ஓங்கி எரியச் செய்தலின் யோகி ``கொல்லன்`` எனப் பட்டான். கொல்லனது உலைமேல் உறுப்பாவது இரும்பு. ``என`` என்றது உவம உருபு. ``அமிர்தம் பொழிய வைத்தான்`` என்றது. `அமிர்தத்தைப் பொழியும்படி செய்து விட்டான்`, அஃதாவது, உலைமேல் உறுப்பை வெதுப்புவதுபோல வெதுப்பிவிட்டான்` என்றதாம் ``முலைமேல் அமிர்தம்`` என்னும் குறிப்பால்` ``ஒருத்தியை`` என்னும் சொல்லெச்சம் வந்து இயைந்தது. ஒருத்தி, குண்டலினி சத்தி. `மூலாக்கினி வெதுப் பிய தால், குண்டலினி சத்தி விழித்தெழுந்து, தனது அமிர்தத்தைப் பொழிவா ளாயினாள்` என்றபடி. `தனது முலைமேல் அமிர்தத்தை` என்க. ``மேல்`` என்றது, `ததும்பி வழிகின்ற` என்னும் குறிப்பினது. ``குலைமேல் இருந்த கொழுங்கனி`` அருட் சத்தி. வீழ்தல், நிபாதமாதல். அந்தக் கனி சுவை மிகுதற்குக் குண்டலி சத்தியின் அமுதமும் வேண்டப்பட்டது.
*************************************************
பாடல் எண் : 18
பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரு மின்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ப் பொழியுமே.

பொழிப்புரை :பார்ப்பான், கடவுளைத்திரு உருவிலாயினும், தீயிலாயினும் வைத்து வழிபடுவன், அவனுக்குப் பாற்பசுக்கள் இன்றி யமையாதன. அத்தகைய பசுக்கள் ஐந்து உள்ளன. ஆயினும் பார்ப்பான் பசுமேய்க்க மாட்டான். மேய்ப்பவர் வேண்டும். அவர் யாரும் அவனுக்குக் கிடைக்கவில்லை. அதனால் அவன் அவிழ்த்து ஓட்டிய அப் பசுக்கள் தம் மனம்போன போக்கிலே போய்க் கொட்டிலுக்கு வாராமலே உள்ளன. மேய்ப்பவர் கிடைத்தால், அவை வழிப்பட்டு வந்து வேண்டிய அளவு பாலைக் கொடுக்கும். (மேய்ப்பவர் கிடைக்கவில்லையே!)
*************************************************
பாடல் எண் : 19
ஆமாக்கள் ஐந்தும் அரிஒன்றும் முப்பதும்
தேமா இரண்டொடு தீப்புலி ஒன்பதும்
தாமாக் குரம்கொளின் தம்மனத் துள்ளன
மூவாக் கடாவிடின் மூட்டுகின் றாரே.

பொழிப்புரை : ஒரு காட்டிலே ஐந்து காட்டுப் பசுக்கள். முப்பத் தொரு சிங்கங்கள், தெய்வத் தன்மை வாய்ந்த இரண்டு குதிரைகள், ஒன்பது கொடிய புலிகள், காட்டெருமைக் கடாக்கள் வாழ்கின்றன. அங்குச் செல்வோர் அவைகளில் இரண்டு குதிரைகளை மட்டும் தம் வசப்படுத்தி, அவற்றின்மேல் தக்கபடி ஏறிச் செல்வாராயின், மேற் கூறிய கொடுவிலங்குகள் யாவும் அவர் விருப்பப்படி அடங்கி நடக்கும். மாறாக, குதிரைமேல் ஏறாது, கட்டுடல் வாய்ந்த அந்தக் கடாக்களின் மேல் ஏறுவாராயின், மேற்சொல்லிய கொடுவிலங்கு களையும் வெறியேற்றித் தாமே தமக்குத் துன்பத்தை வருவித்துக் கொள்பவராவார்.
*************************************************
பாடல் எண் : 20
எழுதாத புத்தகத்(து) ஏட்டின் பொருளைத்
தெருளாத கன்னி தெளிந்திருந் தோத
மலராத பூவின் மணத்தின் மதுவைப்
பிறவாத வண்டு மணம்உண்ட வாறே.

பொழிப்புரை :எழுத்துக்கள் எழுதப்படாத ஏடு ஒன்று உள்ளது; அதை, `புத்தகம்` என்கின்றனர். அந்தப் புத்தக்கத்தைப் பார்க்காமலே ஒரு பெண் அதில் உள்ள பொருளைத் தானே உணர்ந்து, பிறருக்கும் உணர்த்துகின்றாள். (இது நிற்க. மற்றொரு செய்தி.) மலராத மலர் ஒன்று உள்ளது; அதில் தேனை, பிறவாத வண்டு ஒன்று அதன் மணத்தின் வழியாக அறிந்து சென்று உண்கின்றது. (இவைகளை யெல்லாம் `நம்ப முடியாது` என்றாலும், உண்மையான அதிசய நிகழ்ச்சிகளாய் உள்ளன.)
*************************************************
பாடல் எண் : 21
போகின்ற பொய்யும் புகுகின்ற பொய்வித்தும்
கூகின்ற நாவலின் தருங்கனி
ஆகின்ற பைங்கூழ் அவையுண்ணும் ஐவரும்
வேகின்ற கூரை விருத்திபெற் றாரே.

பொழிப்புரை : பறவைகள் தங்கிக் கூவுகின்ற நாவல் மரத்தினின்றும் உணவாய் அமைகின்ற கனிகள் சில பயன்படாத இடத்தில் உதிர்வனவாயும், சில, மரத்திற்கு அடியில் உதிர்ந்தும் புதர் முதலிய வற்றால் பயன்படாதனவாயும் போய்விட, அந்த நாவல் மரத்தை உள்ளடக்கியுள்ள குடிலில் வாழ்கின்ற ஐவர், வேறிடத்தில் வளர்ந்த பயிர் தருகின்ற நெல்லை உண்டு வாழ்கின்றனர். அந்தக் குடிலோ சில நாட்களில் வெந்தொழிவதாய் உள்ளது.
*************************************************
பாடல் எண் : 22
மூங்கில் முளையில் எழுந்ததோர் வேம்புண்டு
வேம்பினைச் சார்ந்து கிடந்த பனையில்ஓர்
பாம்புண்டு பாம்பைத் துரத்தித்தின் பாரின்றி
வேம்பு கிடந்து வெடிக்கின்ற வாறே.

பொழிப்புரை :முளை, நிலத்தளவில் நிற்பதாகலின், அது அடி நிலத்தில் உள்ள மூலாதாரத் தைக் குறித்தது. சுவாசம் எழுதற்கு வழியை உடைத்தாய் இருத்தலின் அம்முளை உள்துளையை உடைய ``மூங்கில்`` எனப்பட்டது. வேம்பு, நல்லதொரு மருந்து ஆதலின், காய சித்தியைத் தருவதாகிய சுவாசமே ``வேம்பு`` எனப்பட்டது. அந்த வேம்பு மேற்கூறிய மூங்கில் முளையினின்றும் எழுவதாதலை அறிக. பனை, சுழுமுனா நாடி. அதனையே சுவாசம் சார்ந்திருப்பினும், ஒற்றுமைபற்றிச் சுழுமுனை சுவாசத்தைச் சார்ந்திருப்பதாக வைத்து, ``வேம்பினைச் சார்ந்து கிடந்த பனை`` என்றார். கிடந்த பனை என்ற அனுவாதத்தால், `வேம்பினைச் சார்ந்து பனை கிடந்தது` என்பதும் பெறப்பட்டது. குண்டலி சத்தி சுழுமுனையைப் பற்றியிருப்பது ஆகலின் அதனை, ``வேம்பினைச் சார்ந்து கிடந்த பனையில் ஓர் பாம்புண்டு`` என்றார். அந்த பாம்பு நன்கு துயின்று கொண் டிருப்பதால், அதனோடு பனையைப் பற்றியிருக்கின்ற வேம்பினைத் தின்றல் கூடாததாய் உள்ளது. அந்தப் பாம்பினை எழுப்பி விலகச் செய்தால் வேம்பினைத் தின்ன முடியும். அதனைச் செய்ய வல்லவர் இல்லை. அதனால் வேம்பு வீணே வற்றி வெடித்துப் போகின்றது.
*************************************************
பாடல் எண் : 23
பத்துப் பரும்புலி யானை பதினைந்து
வித்தகர் ஐவர் வினோதகர் ஈரெண்மர்
அத்தகு மூவர் அறுவர் மருத்துவர்
அத்தலை ஐவர் அமர்ந்துநின் றாரே.

பொழிப்புரை :(சித்தாந்தத்தில், `கருவிகள் தொண்ணூற்றாறு` என்பவற்றில் `தத்துவம் முப்பத்தாறு, தாத்துவிகம் அறுபது` எனச் சொல்லப்படுகின்றன. படைப்புக் காலந்தொட்டு, அழிப்புக் காலம் வரையில் நிலைத்து நிற்கும் கருவிகள் தத்துவம். அவற்றின் காரியங் களாய், இடையே தோன்றியழிவன தாத்துவிகம். ஆகவே, தாத்துவிகங்கள் யாவும் தூல உடம்பில் உள்ளனவாம். அது பற்றி அத்தாத்துவிகங்களை மட்டுமே இம் மந்திரத்தில் குறிக்கின்றார்.)
*************************************************
பாடல் எண் : 24
இரண்டு கடாக்களுண் டிவ்வூரி னுள்ளே
இரண்டு கடாக்கட் கொருவன் தொழும்பன்
இரண்டு கடாவும் இருத்திப் பிடிக்கின்
இரண்டு கடாவும் ஒருகடா ஆமே.

பொழிப்புரை :(மேல், ``ஆமாக்கள் ஐந்து`` என்னும் மந்திரத்தில்,* `பிராண வாயுத் தன்னை அடக்குவார்க்குக் குதிரையாயும், அல்லாதார்க்குக் கடாவாயும் நிற்கும்` எனக் கூறியதனை இங்கு வேறோராற்றான் வலியுறுத்துகின்றார்.  இரண்டு கடாக்கள், இடநாடி வலநாடிகள் வழியாக இயங்குல் பிராணன். அஃது ஒன்றேயாயினும் இயக்கவகையால் இரண்டாகின்றது. இவ்வூர், இந்தத் தூல தேகம். தொழும்பன் - அடியான். ஆண்டான் சொற்படி அக்கடாக்களை மேய்ப்பவன். அஃது அகங்கார தத்துவம். ஆன்மாவாகிய ஆண்டான் அந்தக் கடாக்களை அந்த அடிமையினிடம் விடாமல் தானே தன்னிடத்தில் கெட்டியாகப் பிடித்து வைப்பானே யானால், அந்த இரண்டு கடாக்களும் ஒரு கடாவாய் விடும். அஃதாவது, `இடை நாடி பிங்கலை நாடி வழியாக இயங்காமல், சுழுமுனை நாடியில் நின்றுவிடும்` என்பதாம்.
*************************************************
பாடல் எண் : 25
ஒத்த மணற்கொல்லை யுள்ளே சமன்கூட்டிப்
பத்தி வலையில் பருத்தி நிறுத்தலால்
முத்தம் கவறாக மூவர்கள் ஊரினுள்
நித்தம் பொருது நிரம்பிநின் றார்களே.

பொழிப்புரை : பயிரிடுதற்கு ஏற்புடைய ஒரு கொல்லையை, அதனுட்கிடக்கும் மேடு பள்ளங்களைச் சமன் செய்து, வரம்பு கோலி, வரிசை வரிசையாக வேலியைக்கட்டிப் பருத்தியை நான் பயிரிட்டதனால், எங்கள் ஊரில் உள்ளவர்களில் மூவர் யான் கொண்டிருந்த உள்ள நட்பையே சூதாடு கருவியாகக் கொண்டு இடைவிடாது என்னுடன் சூத பொருது, இப்பொழுது அதை விட்டுவிட்டார்கள்.
*************************************************

மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா

2 comments:

  1. உங்கள் பாதம் பணிகிறேன்
    அன்புடன் கோயம்புத்தூர் பாலசுப்ரமணியம் திருமுலர் அருள்வார் திருமந்திரம் படியுங்கள் உங்கள் பாதம் பணிகிறேன்

    ReplyDelete
  2. Hotel and Casino - Mapyro
    Experience Las Vegas casino, entertainment and dining with all the fun of a classic Las Vegas 남양주 출장마사지 casino, 아산 출장마사지 with 공주 출장샵 more onsite 경기도 출장마사지 restaurants, shopping and more. Rating: 울산광역 출장샵 2.6 · ‎921 reviews

    ReplyDelete

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!