http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Thursday 2 May, 2013

திருமந்திரம் - தந்திரம் 09: பதிகம் 26 & 27. வரையுரை மாட்சி, அணைந்தோர் தன்மை - பாடல்கள்: 03 & 22.

,
 பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
*************************************************
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:01: குருமட தரிசனம்..............................பாடல்கள்: 006 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:02: ஞானகுரு தரிசனம்..........................பாடல்கள்: 019 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:03: பிரணவ சமாதி..............பாடல்கள்:006
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:04: ஒளிவகை......................பாடல்கள்:017
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:05: பஞ்சாக்கரம்-தூலம்........பாடல்கள்:010
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:06: பஞ்சாக்கரம்-சூட்குமம்.பாடல்கள்...:005

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:07: அதிசூக்கும பஞ்சாக்கரம்.பாடல்கள்:003
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:08: காரண பஞ்சாக்கரம்........பாடல்கள்:003
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:09: மகா காரணபஞ்சாக்கரம்:பாடல்கள்:004

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:10: திருக்கூத்து.....................பாடல்கள்:002  
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:11: சிவானந்தக் கூத்து..........பாடல்கள்:008
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:12: சுந்தரக் கூத்து................பாடல்கள்:006

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:13: பொற்பதிக் கூத்து..........பாடல்கள்:011
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:14: பொற்றில்லைக்கூத்து....பாடல்கள்:013
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:15: அற்புதக் கூத்து..............பாடல்கள்:042
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:16: ஆகாசப்பேறு...................பாடல்கள்:010 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:17: ஞானோதயம்..................பாடல்கள்:011
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:18: சத்தியஞானானந்தம்...பாடல்கள்:009   
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:19: சொரூப உதயம்...........பாடல்கள்: 011
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:20: ஊழ்................................பாடல்கள்: 006 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:21: சிவரூபம்......................பாடல்கள்: 003
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:22: சிவதரிசனம்................பாடல்கள்:008 

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:23: முத்திபேதம் கருமநிருவாணம்.பாடல்கள்:002

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:24: சூனிய சம்பாடனை..........பாடல்கள்: 067

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:25: மோன சமாதி..................பாடல்கள்: 020

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:26: வரையுரை மாட்சி...........பாடல்கள்: 003
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:27: அணைந்தோர் தன்மை.....பாடல்கள்: 022 

*************************************************
தந்திரம் 9- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -027 
கூடுதல் பாடல்கள்  .........................................(293+003+022=318)

*************************************************
ஒன்பதாம் தந்திரம் - 26. வரையுரை மாட்சி  பாடல்கள்: 003
பாடல் எண் : 1
தான்வரை வற்றபின் ஆரை வரைவது
தான்அவன் ஆனபின் ஆரை நினைவது
காமனை வென்றகண் ஆரை உகப்பது
தூமொழி வாசகம் சொல்லுமின் நீரே.

பொழிப்புரை :  தூய்மையாகிய சுத்தாவத்தையைப் பயக்கும் முத்தி பஞ்சாக்கரக் கணிப்பினால் ஓர் ஆன்மா தனது ஏகதேச உணர்வாகிய சுட்டுணர்வு கழியப்பெற்ற பின் அஃது யாரை வரைந்து சுட்டியுணரப் போகின்றது? இனி அது தான் சிவமாகி விட்டபின்பு யாரைத் தியானப் பொருளாக வரைந்து கொண்டு தியானிக்கும்? அவாவின் வேரையே அஃது அறுத்து விட்டபின்பு அஃது யாரை விரும்பும்? மாணவர்களே, நீங்களே சொல்லுங்கள்.
*************************************************
பாடல் எண் : 2
உரையற்ற தொன்றை உரைசெயும் ஊமர்காள்
கரையற்ற தொன்றைக் கரைகாண லாகுமோ
திரையற்ற நீர்போலச் சிந்தைதெளி வார்க்குப்
புரையற் றிருந்தான் புரிசடை யோனே.

பொழிப்புரை :  கடலுக்கு கரையில்லை` என்பது தெளிவு. (`கரை` எனப்படுவன எல்லாம் தீவுகளே) அங்ஙனமாகவும் அதற்குக் கரையிருப்பதாகக் கருதிக்கொண்டு, அந்தக் கரையைச் சென்று காண முயலுதல் அறிவுடைமையாகுமோ? ஆகாது. அதுபோலச் சிவம் வியாபகப் பொருள்; சொல்லிற்குள்ளும் அடங்குவதன்று. அவ்வா றிருக்கவும், மாணவர்களே, நீங்கள், `சிவத்தை யாம் சொல்லாற் சொல்லி உணர்த்திவிடுவோம்` என்று உணர்த்த முயல்வீர்களேயானால், ஊமன் தனது கருத்தைப் பிறர்க்குத் தெளிவாக உணர்த்த முயலுங்கால் அடையும் இடர்ப்பாடுகளைத் தான் அடைவீர்கள் அடைந்தாலும் உங்கள் கருத்து நிறைவுறாது. உண்மையென்ன வெனில், `அலை யில்லாத கடல் ஒன்று இருக்குமேயானால் அதனோடு ஒத்துச் சிறிதும் சலனம் அற்றுத் தெளிந்த விரிந்த அறிவினையுடையாரது அறிவில் சிவன் வரம்பில் பொருளாய் ஒளிர்கின்றான்` என்பதே.
*************************************************
பாடல் எண் : 3
மனமாயை மாயைஇம் மாயை மயக்க
மனமாயை தான்மாய மற்றொன்றும் இல்லை
பினைமாய்வ தில்லை பிதற்றவும் வேண்டா
தனைஆய்ந் திருப்பது தத்துவந் தானே.
பொழிப்புரை :  மாயையின் உண்மை யாதாயினும் பொதுவாக `மாயை, மாயை` எனச் சொல்லிப் பலரும் முறை செய்வன எல்லாம் மாயா காரியங்களுள் ஒன்றாகிய மனத்தைக் குறித்தேயாம். (``மனம் எனவும் ஒரு மாயை எங்கேயிருந்து வரும்`` என்றார் தாயுமான வரும்.) இந்த மனமாகிய மாயை, `பிறரை மயக்குவது` என்பது இல்லாமல் அது மயங்கும்படி செய்க. அஃதாவது, `அதன் கொட்டம் அடங்கும்படி செய்க` என்பதாம். மனம் அடங்கிவிட்டால், ஆன்மாவை அலைப்பது வேறு எதுவும் இல்லை. ஆகவே, அப்பால் அடங்க வேண்டுவதாகவும் எதுவும் இல்லை. மனத்தின் வழிப்பட்டு உள்ளத்தில் தோன்றியவற்றைத் தோன்றியவாறே பலபடப் பேசும் பேச்சுக்களும் அற்றொழியும். அப்பால் புறப்பொருள்களைத் துருவித் துருவி ஆராய்வதை விடுத்து, ``நான் யார், என் உள்ளம் யார், ஞானங்கள் யார்`` என்பன போல உள்நோக்கி ஆன்மாத் தன்னையும், தலைவனையும் ஆராய்ந்து உணர்வதே மெய்ப்பொருளைக் கூட்டுவிக்கும் மெய்யுணர்வாகும்.
*************************************************
 ஒன்பதாம் தந்திரம் - 27. அணைந்தோர் தன்மை பாடல்கள்:022
பாடல் எண் : 1
மலமில்லைமாசில்லை மானாபி மானம்
குலமில்லை கொள்ளும் குணங்களு மில்லை
நலமில்லை நந்தியை ஞானத்தி னாலே
பலம்மன்னி அன்பில் பதித்துவைப் பார்க்கே.

பொழிப்புரை :  ஞானத்தைப் பெற்று` அதன் பயனாகச் சிவத்தில் புறம் போகாது, அன்பினால் தம்மை ஆழ்த்திவைத்திருப்பவர்கட்குப் புறத்தோற்றம் உலகத்தாரது தோற்றத்தோரடு ஒத்துத் தோன்றினும், உண்மையில் அவை இல்லையாம்.
*************************************************
பாடல் எண் : 2
ஒழிந்தேன் பிறவி உறவெனும் பாசம்
கழிந்தேன் கடவுளும் நானும்ஒன் றானேன்
அழிந்தாங் கினிவரும் ஆக்கமும் வேண்டன்
செழுஞ்சார் புடைய சிவனைக்கண் டேனே.

பொழிப்புரை : நல்லதொரு வளமான சார்பாய் உள்ள சீவனை நான் சார்ந்துவிட்டேன். அதனால், முன்பு எனக்குச் சார்பு போலத் தோன்றி என்னைப் பிறவிக் கடலிலே அலைய வைத்த பாசங்களினின்றும் நீங்கிவிட்டேன். இப்பொழுது நான் அப்பாசங்கட்கு மேலே போய்விட்டேன். `பரம்பொருள் வேறு நான்வேறு` என்பதன்றி, `ஒன்றே` எனப்படும் நிலையை `எய்தினேன்? ஆகவே, இறப்பதும், பின் பிறப்பதும் இனி எனக்குத் தவிர்க்க முடியாத சூழல் இல்லை.
*************************************************
பாடல் எண் : 3
ஆலைக் கரும்பும் அமுதும் அக் காரமும்
சோலைத்தண் ணீரும் உடைத்தெங்கள் நாட்டிடைப்
பீலிக்கண் ணன்ன வடிவுசெய் வாளொரு
கோலப்பெண் ணாட்குக் குறையொன்று மில்லை.

பொழிப்புரை : ஆலையில் இடப்பட்ட கரும்பும், சோறும், வெல்லக் கட்டியும், சோலையின் நடுவில் உள்ள பொய்கை நீரும் ஆகியவற்றை உடையது எங்கள் நாடு. அதில் அழகிய சாலம் வல்ல பெண்ணொருத்தியுள்ளாள். அவள் மயிலின் தோகையில் காணப்படும் வியத்தகு `புள்ளிகளைப்போல் பல பொருள்களை விளக்கத்தக்க வகையில் தோற்றுவிப்பாள். அதனால் பலர்க்குப்பல பயன்கள் விளைதலால் அவட்குப்புகழ் உளதேயன்றிச் சிறிதும் இகழ்வில்லை.
*************************************************
பாடல் எண் : 4
ஆராலும் என்னை அமட்டஒண் ணாதினிச்
சீரார் பிரன்வந்தென் சிந்தை புகுந்தனன்
சீராடி அங்கே திரிவதல் லா(து)இனி
யார்பாடுஞ் சாரா அறிவறிந் தேனே.

பொழிப்புரை : முதலடியை இறுதியில் கூட்டி, `இனிஎன்னை ஆராலும் அமட்ட ஒண்ணாது` என மாற்றியுரைக்க. அமட்டுதல் - அசைத்தல்; நிலைகலங்கச் செய்தல். சீர் - சிறப்பு. பிறர் ஒருவருக்கும் இல்லாத அருட்குணம். `சிந்தை` என்றது அறிவை, `அச்சீராடி எனச் சுட்டு வருவிக்க. ஆடுதல் - பயிலுதல் ஊடாடுதல்` என்னும் வழக்கையும் நோக்குக. அங்கு அவனிடத்தே. திரிதல் - உலாவுதல்; செயற்படுதல்.
*************************************************
பாடல் எண் : 5
பிரிந்தேன் பிரமன் பிணித்ததோர் பாசம்
தெரிந்தேன் சிவகதி செல்லும் நிலையை
அரிந்தேன் வினையை அயில்மன வாளால்
முரிந்தேன் புரத்தினை முந்துகின் றேனே.

பொழிப்புரை : நான் இப்பொழுது, முன்பு பிரமன் என் தலையில் எழுதி நியமித்த கட்டினின்றும் நீங்கிவிட்டேன். `ஊழ்வினைகள் வந்து என்னை ஒன்றும் செய்யா` என்பதாம்.) சிவனை அடையும் வழியைத் தெரிந்து கொண்டேன். இப்பொழுது நான்செய்யும் செயல்களால் நான் பின்பு நுகரக் கடவனவாகப் புண்ணியமோ, அல்லது பாவமோ எதுவும் முளைக்காதபடி `ஞானம்` என்னும் கூரிய வாளால் அவைகளை அறுத்தெறிந்தேன்ய (`எனக்கு ஆகாமியம் இல்லை` என்றபடி.) என்னை வெளியில் செல்லாதபடி தடுத்து வைத்துள்ள உடம்பாகிய சிறைக் கூடம் இடிந்த பாழாய்விடப் பெற்றேன். ஆகவே, நான் எங்கும் செல்கின்றேன். (கருவிகளின் வயப்பட்ட ஏக தேச நிலை நீங்கி, வியாபகமாகப் பெற்றேன்` என்பதாம்.)
*************************************************
பாடல் எண் : 6
ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும்
ஒன்றுகண்டீர்உல குக்குயி ராவதும்
நன்றுகண் டீர்இன் னமச்சிவா யப்பழம்
தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறே.

பொழிப்புரை : `கடவுள்` என்பதும், `தெய்வம்` என்பதும் வேறு வேறு. இரண்டும் ஒன்றல்ல. தெய்வம் எழுவகைப் பிறப்புக்களில் ஒரு பிறப்பு வகையைச் சேர்ந்ததது. அது தமிழில் `புத்தேள், அணங்கு` முதலிய பெயர்களால் குறிக்கப்படும்` கடவுள் பிறப்பில்லாது, அனைத்தையும் கடந்த நிற்கும் தனிமுதற் பொருள். கடவும் ஒன்றே; தெய்வங்கள் பல. மக்கள் அவர்தம் மரபுபடியும் விருப்பப்படியும் வேறு வேறு தெய்வங்களை வழிபடுவர். கற்புடை மகளிர் யாவர்க்கும் தெய்வம் கணவனே. கணவன் ஒரு தெய்வத்தை வழிபடுவானாயின் அவனோடு இசைந்த நின்று மனைவியும் அத்தெய்வத்தை வழிபடுவாள் ஆயினும், மனைவிக்கத் தெய்வம் கணவன் தான். இதனையே திருவள்ளுவர் ``தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்`` எனக் கூறினார். ஆகவே, மகளிர் கணவன் தொழாத தெய்வத்தைத் தாம் விரும்பி வழிபடுதல் குற்றமே யல்லது, கடவுளை வழிபடுதல் குற்றம் அன்றாம். ஏனெனில், கடவுள் யாவராலும் தெழத்தக்கவர்.
`மனைவி தன் கணவனைத் தவிரத் தான் ஒரு தெய்வத்தை வழிபடுதல் குற்றம்` என்பது எல்லார்க்கும் ஒப்பமுடிந்தது. இந் நிலையில், `மனைவி கடவுளைத் தொழலாமா, தொழக்கூடாதா என்னும் வினா, சமண பௌத்த மதங்களில் இல்லை. ஏனெனில் அவை `கடவுள் உண்டு` எனக் கொள்ளவில்லை. கடவுளைக் கொள்ளாத அம்மதங்கள், `தெய்வங்கள் உள` என நம்புகின்றன். ஆகவே, `மனைவி கணவனைத் தவிரப் பிற தெய்வங்களைத் தொழலாகாது` என மறுப்பதோடு அவை நின்றுவிடுகின்றன. `மனைவி கடவுளைத் தொழுதால் என்ன` என்று வினவினால், `அத்தொழுகை பயனற்ற செயல்` என்பது அம்மதங்களின் முடிவு. `கடவுள் உண்டு` எனக் கொள்கின்ற மதங்கள், `கடவுள் ஒன்றே` என்றும், `அஃது யாவராலும் தொழத்தக்கது` என்றுமே கூறும். தெய்வங்களும் கடவுள் அருளால் சில ஆற்றல்களைப் பெற்று விளங்குதலால் இவ் இடங்களில் `கடவுள்` என உபசரித்துக் கூறப்படும். கடவுள்பொது மக்களால் `தெய்வம்` என்றே` கருதி வழிபடப்பட்டு அவ்வழிபாட்டினை ஏற்று அவர்விருமிபிய பயனைத் தருதல் பற்றி, தெய்வம்` என உபசரித்துக் கூறப்படும். இம்மந்திரத்தில், ``உலகுக்கு ஒரு தெய்வம்` என்றமையால், கடவுளே `தெய்வம்` எனப்பட்டாமை தெளிவாம்.)

``ஒன்று கண்டீர் உலகுக்கு ஒரு தெய்வம்`` என்றது, `கடவுள் பல இல்லை`` ஒன்றே` என்பதைத் தெளிவித்தது. தெய்வங்களை யெல்லாம் `கடவுள்` எனக் கூறி, `அவற்றிடையே உயர்வு தாழ்வுகள் இல்லை` எனக் கொள்வோர், அநேகேசுர வாதிகள்` எனப்படுவர். `கடவுளே இல்லை` என்போர் நிரீச்சுரவாதிகள். அவருள் அநேகேசுர வாதிகள் கொள்கையை மறுத்ததே இதன் முதல் அடி. அக்கடவுள் உலகுக்கு உயிர்`, அஃதாவது, `எல்லாப் பொருளிலும் எள்ளினுள் எண்ணெய்போல் நிறைந்து அவ்வப் பொருள்களின் தன்மை பயன்படச் செய்வது` என்பதாம். ஒன்றாய கடவுள். இவ்வாறு அனைத்துப் பொருள்களிலும் அது அதுவாய் நிற்றலையே மாணிக்க வாசகர்.

``ஏகன், அநேகன் இறைவனடி வாழ்க`` என அருளிச்செய்தார். இந்நிலை `அந்தரியாமித்துவம்` எனப்படும். ஒன்றாய், உலகுக்கு உயிராய் உள்ள கடவுள் மந்திரம் `நமச் சிவாய` என்பதே உண்மை. அதன் உண்மைப்பொருளை உணர்ந்து பயில்கின்றவர்கள் கடவுள் இன்பம் கரையின்றி விளைதலைக் காண்பர். ஒரு பழத்தின் இனிமையை அதனைத் தின்று பார்த்தவர் அறிவாரேயன்றி, வாளா காண்பவர் அறியார். அதுபோல, யான் அதனைப் பயின்று அதனால் விளைந்த அதுபோல, யான் அதனைப் பயின்று அதனால் விளைந்த இன்பத்தைக் கண்டேன். (பயிலாதவர் அதனை அறிதல் அரிது) ஆகையால், அம்மந்திரத்தை உருவகமாகக் கூறினால், `கிடைத்தற்கரிய தனி ஓர் இனியகனி` என்று கூறலாம்.
[இம்மந்திரம் முடிவான பொருளைக் கூறுதலாலும் அப் பொருளை உள்ளவாறுணர்தல் அரிதாய் இருத்தலாலும் உரை இங்ஙனம் விரித்தெழுதப்பட்டது.]
*************************************************
பாடல் எண் : 7
சந்திரன் பாம்பொடுஞ் சூடும் சடாதரன்
வந்தென்னை ஆண்ட மணிவிளக் கானவன்
அந்தமும் ஆதியும் இல்லா அரும்பொருள்
சிந்தையின் மேவித் தியக்கறுத் தானே.

பொழிப்புரை : இதன் பொருள் வெளிப்படை.
குறிப்புரை :  `சந்திரனும், பாம்பும் பகைப் பொருள்கள்` என்பது புராணக் கொள்கை, அவை யிரண்டையும் சிவன் ஒருங்கே தனது முடியில் அணிந்துள்ளான். இது, `சிவன் உயிர்களை நடுவு நிலையில் நின்றே நோக்கியிருளுவன்` என்னும் குறிப்பையும், `உயிர்கல் அவை சார்ந்துள்ள உடம்பு காரணமாகப் பகைகொள்வனன்றி, இயற்கையில் அவற்றிடைப் பகையேதும் இல்லை என்னும் குறிப்பையும் உடைய தாகும். ஆகவே ``பாம்பும், மதியும் புனலும் தம்மிற் - பகை தீர்த்துடன் வைத்த பண்பா போற்றி``9 என்றது காண்க. இத்தகைய நடுவு நிலைமையும், பேரருளும், ஆதியந்தம் அற்ற நித்தியத் தன்மையும் உடைய சிவன் இனிது விளங்கப் பெற்ற நல்லறிவையுடைய பெரி யோர்க்குத் தியக்கம் (கலக்கம்) தோன்றுமாறில்லை என்பது குறிப்பு.  இதனால், `மோன சமாதி யுற்றார்க்கு நிலைகலங்கும் தன்மை யில்லை` என்பது ஏதுவுடன் குறிப்பால் உணர்த்தப்பட்டது.
*************************************************
பாடல் எண் : 8
பண்டெங்கள் ஈசன் நெடுமால் பிரமனைக்
கண்டங் கிருக்கும் கருக்கும் கருத்தறி வார்இல்லை
விண்டங்கே தோன்றி வெறுமன மாடியின்
துண்டங் கிருந்ததோர் தூறது வாமே.

பொழிப்புரை : `படைப்புக்காலத்தில் எங்கள் கடவுளாகிய சிவன் அரியை முன்படைத்து, அவன் வழியாக அயனைத் தோற்றுவித்து, படைத்தல், காத்தல்களைச் செய்வித்த, அவர்கள் செயலைக் கண் காணித்துக் கொண்டிருக்கின்றான்` என்று வேதாகமங்கள் கூறுகின்றன. இஃது உண்மையாமாற்றை அறிய மாட்டாதவர் `அரி, அயன்` என்போருள் ஒருவனையே `முதல்வர்` என்றும், `அவர் உள்ளிட்ட பலர் முதல்வர்` என்றும் கூறிப் பிணங்குகின்றனர். தோற்றம் உடையவர்களாய்ச் சிவனின் வேறாகத் தோன்றிச் செயலாற்றுவோர், `நமது தோற்றமும், செயல்களும் சிவனது சங்கற்பத்தால் நிகழ்வன` என்பதை எண்ணாத வேறு நிலை உடையவர்களாய் இருப்பராயின், அவரது நிலைமை, ஒரு முப்பொருளில் ஒரு பகுதி துண்டாகிப் பிரிந்தவழி உளதாகும் பாழ் நிலையையே எய்தும்.
*************************************************
பாடல் எண் : 9
அன்னையும் அத்தனும் அன்புற்ற தல்லது
அன்னையும் அத்தனும் ஆர்அறி வார்என்னை?
அன்னையும்அத்தனும் யானும் உடன் இருந்(து)
அன்னையும் அத்தனும் யான்புரந் தேனே.

பொழிப்புரை : இவ்வுலகில் எனக்குத் தாயாகவும், தந்தையாகவும், எல்லோராலும் அறியப்பட்ட அவ்விருவரும் `யான் பிறக்க வேண்டும்` என்று விரும்பித் தம்முட் கூடியதும், அதனால் யான் பிறந்ததும் உண்மை. ஆயினும் தங்களால் பிறந்த என்னை `யார்` என்று அவர்களில் ஒருவ ரேனும் அறிவாரோ? அறியார். அப்பால் வாழும் நிலை ஏற்பட்டது. அப்பொழுது முன்பு அவர்கள் என்னைக் காப்பாற்றியதுபோக அவர்களை யான் காப்பாற்றும் நிலை உண்டாயிற்று.
*************************************************
பாடல் எண் : 10
கொண்ட சுழியும் குலவரை உச்சியும்
அண்டரும் அண்டத் தலைவரும் ஆதியும்
எண்டிசை யோரும்வந் தென்கைத் தலத்துளே
உண்டனர் நான்இனஇ உய்ந்தொழிந் தேனே.

பொழிப்புரை : இம்மந்திரம் சிவனது அருளைப் பெற்றுச் சிவனைச் சார்ந்து நிற்கும் மோன சமாதியினர்க்கு உலகு அனைத்தும் தமது வியாபகத்துள்ளே அடங்கித் தோன்றுதலைச் சில வகைகளால் விளக்கிற்று.
*************************************************
பாடல் எண் : 11
நமன்வருன் ஞானவாள் கொண்டே எறிவன்
சிவன்வரின் நான்உடன் போவது திண்ணம்
பவம்வரும் வல்வினை பண்டே அறுத்தேன்
தவம்வரும் சிந்தைக்குத் தான்எதி ராமே.

பொழிப்புரை : ஞான நிட்டையில் நிற்கும் அறிவையுடையார்க்கு அவர்தம் உடல் நீங்கும் காலத்து அதனை நீங்கச் செய்து சிவனே முன் வந்தருளுவான். (ஏனையோர்க்கு யமதூதுவர் வந்து உடலை நீக்கி, உயிர்முன் நிற்றல்போல நில்லார்.) யான் தவத்தால் முன்பே பிறப்பிற்குக் காரணமான வினைகளை யெல்லாம் அருத்தொழித்துச் சிவனை மறவாமையாகிய நிட்டையில் நின்றேன். (ஆகவே, யம தூதுவர் என் முன்வாரார்.) `வந்தாலும், சிவனை உணரும் உணர்வாகிய வாளால் அவர்களை எறிய இயலும்` என்னும் உறுதியுடையேன். முற்கூறியவாறு சிவன் தான் என்முன் வருவான். வந்தால் அவனுடன் நான் மகிழ்ச்சியோடு செல்வது திண்ணம்.
*************************************************
பாடல் எண் : 12
சித்தம் சிவமாய் மலம்மூன்றும் செற்றவர்
சுத்த சிவமாவர் தோயார் மலபந்தம்
கத்தும் சிலுகும் கலகமும் கைகாணார்
சத்தம் பரவிந்து தானாம்என் றெண்ணியே.

பொழிப்புரை : மும்மலங்களையும் நீக்கித் தமது அறிவு சிவனது அறிவே யோகப் பெற்ற ஞானிகள், சீவராகாது, இயல்பாகவே பாசம் இன்மையால் தூயனாய் உள்ள சிவனேயாவர், ஆகையால் அவர்கள் மாயா மலமாகிய உடம்போடு கூடி, உலகில் உலவினாராயினும் அவற்றால் அவர் கட்டுறார். `சிவன் இல்லை` என அழித்துப் பேசுவாரது அழிப்புரையும், சிவனை அடைதற்கு இத்துணை விரைவு ஏன்` என மயக்க உரை கூறுவாரத் ஆரவார உரையும் `இவர்களது உரைகள் யாவும் பாசங்களுள் ஒன்றாகிய சுத்த மாயை அளிவினவே என எண்ணித்தம்பால் அணுகக் காணாதவராவர்.
*************************************************
பாடல் எண் : 13
நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம்
வினைப்பற் றறுக்கும் விமலன் இருக்கும்
வினைப்பற் றறுக்கும் விமலனைத் தேடி
நினைக்கப் பெறில்அவன் நீளியன் ஆமே.

பொழிப்புரை : நினைப்பு, மனம் முதலிய கருவிகள் செயற்படுதலால் நிகழ்வது. மறப்பு, கருவிகள் செயற்படாது ஒடுங்குதலால் நிகழ்வது. கருவிகள் இல்லாத பொழுது அறிவு நிகாழமை ஆணவ மல மறைப்பினாலாம், ஆகவே, ஆணவ மலம் நீங்கினால் கருவிகளால் ஆவதொன்றில்லை. ஆன்ம அறிவு எப்பொழுதும் அறிவாயே இருக்கும்; அறியாமையாகாது. இவை ஒளி குறைந்த கண்ணிற்குக் கண்ணாடி வேண்டாது, எப்பொழுதும் பார்வை நிகழ்வதும் போல்வனவாகும். ஆணவ மலத்தால் மறைக்கப்பட்ட அறிவு ஒளி குறையாத கண் போல்வது. பெத்தான்மாக்களது அறிவு ஆணவ மலத்தால் மறைக்கப் பட்டிருத்தலால் அவ்வறிவு மேற்குறித்த நினைப்பும், மறப்புமாய் நிலைமாறிக் கொண்டேயிருக்கும். முத்தான்மாக்களின் அறிவு ஆணவ மலம் நீங்கப் பெற்றமையால் மாற்றம் இன்றி, அறிவாயே விளங்கும். அதனால் அவைகட்குச் சிவம் மறைதல் இன்றி, விளங்கியே நிறுகும்.
*************************************************
பாடல் எண் : 14
சிவபெரு மானென்று நானழைத் தேத்தத்
தவபெரு மானென்று தான்வந்து நின்றான்
அவபெரு மான்` என்னை ஆளுடை நாதன்
பவபெரு மானைப் பணிந்துநின் றேனே.

பொழிப்புரை : நான் சிவபெருமானைச் சிவபெருமானாகவே அறிந்து, அப்பெயரையே சொல்லி ``சிவனே, சிவனை என்று ஓலம் இட்டுத் துதிக்க. `அந்த மெய்த்தவத்திற்கும் தலைவனே நான்` என்பான் போல அப்பெருமான் என்முன்னே வந்து நின்றான். இவ்வாறுதன் பெயரைச் சொல்லுவாரிடத்தெல்லாம் உடனே தோன்றுகின்ற அப்பெருமானை, `யார், யார் எவ்வெப்பெயரால் அழைக்கின்றாரோ, அவர் முன்னெல்லாம் அவர் கருதும் பெருமானார்களாய்த் தோன்றும் அருளாளன்` எனவும் அறிந்து நான் பணிபவனாயினேன்.
*************************************************
பாடல் எண் : 15
பணிந்துநின் றேன்பர மாதி பதியைத்
துணிந்துநின் றேன்இனி மற்றொன்றும் வேண்டன்
அணிந்துநின் றேன்உடல் ஆதிப் பிரானைத்
தணிந்துநின் றேன்சிவன் தன்மைகண் டேனே.

பொழிப்புரை : முதல்வகட்கெல்லாம் முதல்வனாய் முடிநிலை முதல்வனாயுள்ள சிவனையே நான் முதல்வனாகத் துணிந்தேன். அதனால் அவனையே நான் வணங்கினேன். இனி அவனை வணங்குதலைத் தவிர பிறிதொன்றையும் அவாவ மாட்டேன். அவனையே என்உள்ளத்தில் இருத்தினேன். அதனால், எனது முனைப்பு நீங்கப் பெற்றேன். அவனது உண்மை யியல்புகள் எல்லாம் எனக்கு அனுபவமாயின.
*************************************************
பாடல் எண் : 16
என்நெஞ்சம் ஈசன் இணையடி தான்சேர்ந்து
முன்னஞ்செய் தேத்த முழுதும் பிறப்பறும்
தன்னெஞ்சம் இல்லாத் தலைவன் தலைவிதி
பின்னஞ்செய்(து) என்னைபக் பிணக்கறுத் தானே.

பொழிப்புரை : எனது நெஞ்சம் சிவனது இரண்டு திருவடிகளையே சார்ந்து, அவற்றையே நினைத்து, அவற்றையே துதித்தலால், எனது பிறவித்தொடர் முடிவடைந்து அற்றொழியும்; இது திண்ணம். இனித் தனக்கு மனம் முதலிய மாயா கருவிகள் ஒன்றும் இல்லாதவனாகிய அவன், இப்பிறப்பிலும் நான் முகந்து கொண்டு வந்த ஊழ்வினையை எனக்கு ஆகாதபடி பிரித்து, எனது உடலுக்கே ஆகும்படி செய்தமையால், எனக்கு இன்பத்தில் மகிழ்ச்சியும், துன்பத்தில் வாட்டமும் ஆகிய முரண்பட்ட நிலைமைகள் இல்லாதபடி அறவே நீக்கிவிட்டான்.
*************************************************
பாடல் எண் : 17
பிணக்கறுத் தான்பிணி மூப்பறுத் தெண்ணும்
கணக்கறுத் தாண்டனன் காண்நந்தி என்னைப்
பிணக்கறுத் தென்னுடன் முன்வந்த துன்பம்
வணக்கலுற் றேன்சிவம் வந்தது தானே.

பொழிப்புரை : எங்கள் நந்தி பெருமான் என்னுடைய அறியாமையைப் போக்கினார். ஆகவே, என் உடம்பு நோய் உறு தலையும், முதுமை எய்தித் தளர்வுறுதலையும் போக்கி `அவை வரும் என்று எண்ணும் எண்ணங்களையும், அஃதாவது கவலையையும் போக்கி, என்னைத் தமக்கு ஆளாகக் கொண்டவராயினார். யானும் தொன்று தொட்டு என்னோடு கூடவே தொடர்ந்து வந்து கொண்டிருந்த வெறுப்பு விருப்புக்களைப் போக்கி, அவரையே சிவமாகக் கண்டு வழிபட்டேன். அதனால் சிவமே என்முன் வந்து நின்றது.
*************************************************
பாடல் எண் : 18
சிவன்வந்து தேவர் குழாமுடன் கூடப்
பவம்வந் திடநின்ற பாசம் அறுத்திட்(டு)
அவன்எந்தை ஆண்டருள் ஆதிப் பெருமான்
அவன்வந்தென் உள்ளே அகப்பட்ட வாறே.

பொழிப்புரை : சிவன் ஒருவனே எனக்குத் தந்தை; குருவாகி வந்து ஆட்கொள்ளும் முதற்கடவுள். அத்தகையோன் முன்பெல்லாம் எனக்கு அகப்படாதிருந்து, இப்பொழுது வந்து என் உள்ளத்திலே அகப்பட்டமை தேவர் கூட்டமும் உடன் வர அவன் பற்றி நின்ற பாசத்தை அரித்தமையாலேயாம்.
*************************************************
பாடல் எண் : 19
கரும்பும்செந் தேனும் கலந்ததோர் காயத்தில்
அரும்பும் அக் கந்தமும் ஆகிய ஆனந்தம்
விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின்
கரும்பும்முன் கைத்தது தேனும் புளித்ததே.

பொழிப்புரை : கருப்பஞ் சாற்றையும், தேனையும் கலந்து உண்டவழி, `அதன் இனிப்பு இத்தகையது` என வரையறுத்துச் சொல்ல வாராமைபோல, `இன்னது` என வரையறுத்துச் சொல்ல வாராத ஓர் இன்பம் இவ்வுடம்பிற்றானே உண்டாகின்றது. (அஃது அரிவையர் இன்பம். அதனால் அதனை மக்கள் பின்னும் வெறாதே விரும்பு கின்றனர்.) ஆயினும், மலரில் மணம் போல அறிவினுள் அறிவாய் எழுகின்றஓர் ஆனந்தம் உண்டு. (அது சிவானந்தம்) அதனை அடையவே உயர்ந்தோர்கள் விரும்புகின்றார்கள். அவர்கள் விரும்பியபடி அந்த ஆனந்தம் அவர்களது முயற்சியால் அவர்கள் அறிவிலே வெளிப்பட, அதனை அவர்கள் நுகர்ந்த பின் அவர்கட்கு மேலே, குறிப்பிட்ட கருப்பஞ்சாறு போன்ற இன்பங்களும் கசந்து விடுகின்றன; ஏதன் போன்ற இன்பங்களும் புளித்துவிடுகின்றன.
*************************************************
பாடல் எண் : 20
உள்ளம் சரியாதி ஒட்டியே மீட்டென்பால்
வள்ளல் அருத்தியே வைத்த வளம்பாடிச்
செய்வன எல்லாம் சிவமாகக் காண்டலால்
கைவளமின்றிக் கருக்கடந் தேனே.

பொழிப்புரை : வள்ளலாகிய சிசிவபெருமான் முதலில் `சரியை, கிரியை, யோகம்` என்னும் தவ நிலையில் என் உள்ளத்தில் உள்ளப்படும் பொருளாய்ப் பொருந்தி, பின்பு ஞான நிலையில் தனது அருளை வைத்த அந்தப் பயனையே நினைந்து நான் போற்றிக்கொண்டு, என்னால் நிகழ்த்தப்படும் செயல்களையெல்லாம் என் செயலாகக் காணாது அவன் செயலாகவே நான் கண்டுவருதலால், எனக்கெனச் செயலின்றி பிறவியைக் கடந்து நிற்கின்றேன்.
*************************************************
பாடல் எண் : 21
மீண்டார் கமலத்துள் அங்கி மிகச்சென்று
தூண்டா விளக்கின் தகளிநெய் சோர்தலும்
பூண்டாள் ஒருத்தி புவனசூ டாமணி
மாண்டான் ஒருவன்கை வந்தது தானே.

பொழிப்புரை : உலகியலிற் செல்லும் செலவிலிருந்து மீண்டவரது உள்ளக் கமலமாகிய தகளியில் ஞானமாகிய விளக்கு அணையாது எரியும்படி, தூண்டா விளக்கின் தகளியில் நெய்யையே, உலகத் தலைவியாகிய ஒப்பற்ற ஒருத்தி எடுத்துவார்க்கும் செயலை முன்சென்று மேற்கொண்டாள், அதனால், அவ்விளக்கின் ஒளி விளக்கத்தில், அனைவரிலும் மாட்சி மிக்கோள் ஒருவனது கை வன்மை இனிது நிகழ்ந்தது.
*************************************************
பாடல் எண் : 22
அன்புள் ளுருகி அழுவன் அரற்றுவன்
என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்
என்பொன் மணியை இறைவனை ஈசனைத்
தின்பன் கடிப்பன் திருத்துவன் நானே.

பொழிப்புரை : `தன்பால் காதல் மிக்க பெண்டினிடம் காதல் மிக்க ஆடவன் அவளது நலத்தை எவ்வாறு கண்டு, கேட்டு உண்டு, உயிர்த்து, உற்று அனுபவிப்பானோ அது போல என்பால் அருள்மிக்க சிவனிடத்தில் நான் அன்பு மிகுந்த அவனது ஆனந்தத்தைப் பல்லாற்றானும் அனுபவிக்கின்றேன் என்பது இம் மந்திரத்தின் திரண்ட பொருள். (திருத்துதல் - தனக்கு ஏற்ற வகையில் கொள்ளுதல். `தானே` என்பது பாடமன்று)
*************************************************

மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!