http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Saturday 28 April, 2012

திருமந்திரம்-தந்திரம்02-பதிகம்:10. திதி (பாடல்:09)









பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
========================================================================
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:01: அகத்தியம்..................................பாடல்கள்: 002
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:02: பதிவலியில் வீரட்டம் எட்டு ....பாடல்கள்: 008
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:03: இலிங்க புராணம் .....................பாடல்கள்: 006 
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:04: தக்கன் வேள்வி..........................பாடல்கள்: 009
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:05: பிரளயம் ......................................பாடல்கள்: 005

இரண்டாம் தந்திரம்:பதிக எண்:06: சக்கரப் பேறு ...............................பாடல்கள்: 004
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:07: எலும்பும் கபாலமும்..................பாடல்கள்: 001 
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:08: அடிமுடி தேடல்..........................பாடல்கள்: 010
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:09: சருவசிருட்டி ...............................பாடல்கள்: 030
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:10: திதி.................................................பாடல்கள்: 009

=================================================(பாடல்கள்: 075 + 009 = 084 )
இரண்டாம் தந்திரம்-பதிகஎண்-10.  திதி  (பாடல்கள்: 09)

பாடல் எண் : 1
புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப்
புகுந்துநின் றான்புகழ் வாய்இகழ் வாகிப்
புகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப்
புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே. 

பொழிப்புரை : என்றும் உள்ளவனாய், எனது உள்ளத்தில் புகுந்து நீங்காது நிற்கின்ற சிவபெருமான், `ஒளி, இருள் - புகழ், இகழ் - உடல், உயிர்` முதலிய மறுதலைப் பொருள்களிலும் அவை அவையாய்த் தொடர்ந்து நீங்காது நிற்கின்றான்.
=============================================
பாடல் எண் : 2
தானே திசையொடு தேவரு மாய்நிற்கும்
தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்கும்
தானே கடல்மலை யாதியு மாய்நிற்கும்
தானே உலகில் தலைவனு மாமே. 

பொழிப்புரை : சிவபெருமான் தான் ஒருவனே பல பொருள் களினும் நிறைந்து நின்று அவற்றை நிலைப்பித்தலுடன், அவற்றைத் தன் இச்சைவழி நடத்துபவனுமாகின்றான்.
=============================================
பாடல் எண் : 3
உடலாய் உயிராய் உலகம தாகிக்
கடலாய்க் கார்முகில் நீர்பொழி வானாய்
இடையாய் உலப்பிலி எங்குந்தா னாகி
அடையாப் பெருவெளி அண்ணல்நின் றானே. 

பொழிப்புரை : சிவபெருமான் இவ்வாறு எல்லாப்பொருளிலும் நிறைந்து நிற்றல், அவன் பிறபொருள்களால் அடைக்கப்படாத பெருவெளியாய் நிற்றலினாலாம்.
=============================================
பாடல் எண் : 4
தானொரு காலந் தனிச்சுட ராய்நிற்கும்
தானொரு கால்சண்ட மாருத மாய்நிற்கும்
தானொரு காலந் தளிமழை யாய்நிற்கும்
தானொரு காலந்தண் மாயனு மாமே.

பொழிப்புரை : சிவபெருமான் உயிர்களது அறிவு நிலைக்கு ஏற்பக் கதிர்க்கடவுள், வளிக்கடவுள், மழைக்கடவுள், (இந்திரன்) முதலிய பல்வேறு கடவுளராய்த் தோன்றுவான். ஆதலின், அவன் திருமாலாய்த் தோன்றுதலில் வியப்பில்லை.
=============================================
பாடல் எண் : 5
அன்பும் அறிவும் அடக்கமு மாய்நிற்கும்
இன்பமும் இன்பக் கலவியு மாய்நிற்கும்
முன்புறு காலமும் ஊழியு மாய்நிற்கும்
அன்புற ஐந்தில் அமர்ந்துநின் றானே. 

பொழிப்புரை : திருவருளால் ஐம்பூதங்களிலும் நிற்கும் சிவ பெருமானே, குணங்கள் மூன்றாயும், காலங்கள் மூன்றாயும் நிற்பான்.
=============================================
பாடல் எண் : 6
உற்று வனைவான் அவனே உலகினைப்
பெற்று வனைவான் அவனே பிறவியைச்
சுற்றிய சாலும் குடமுஞ் சிறுதூதை
மற்றும் அவனே வனையவல் லானே. 

பொழிப்புரை : முதற்கண் உலகுயிர்களை அவற்றிற்கு அம்மை அப்பனாய் நின்று படைப்பவனும் சிவபெருமானே. பின்பு அவற்றைத் தன் மக்களாகக் கொண்டு புரப்பவனும் அவனே. இவை `தேவர், மக்கள்` என்னும் சிறப்புடைப் பிறப்பினர்க்கு மட்டுமன்று; `விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம்` என்னும் சின்னஞ்சிறிய பிறவிகட்குமாம்.
=============================================
பாடல் எண் : 7
உள்ளுயிர்ப் பாயுட லாகிநின் றான்நந்தி
வெள்ளுயி ராகும் வெளியாய் விளங்கொளி
உள்ளுயிர்க் கும்உணர் வேயுட லுட்பரம்
தள்ளுயி ராம்வண்ணந் தாங்கிநின் றானே.

பொழிப்புரை : `தூய உயிர்` எனப்படும் பரமான்மாவாகிய பெருவெளியாய், தூய்மையின்றி மாசுண்டு கிடக்கும் சீவான்மாவாகிய உயிரினுள் அறிவு தோன்றுதற்கு ஏதுவாய் நிற்பதாய இயற்கை அறிவே உயிரின் உடலையும் இடமாகக்கொண்டு நிற்கும் `பரம்பொருள்` எனப்படுவது. அதனை இழந்துநிற்கும் உயிர் அதுவாம் வண்ணம், அதன் உடலாயும், அவ்வுடல் வாழ்வுறுதற்கு அதனுள் நிற்கும் உயிர்ப் பாயும் உள்ள சிவபெருமானே அதனைக் காத்து நிற்கின்றான்.
=============================================
பாடல் எண் : 8
தாங்கருந் தன்மையும் தானவை பல்லுயிர்
வாங்கிய காலத்தும் மாற்றோர் பிறிதில்லை
ஓங்கி எழுமைக்கும் யோகாந்தம் அவ்வழி
தாங்கிநின் றானும்அத் தாரணி தானே. 

பொழிப்புரை : சிவபெருமான் பல உயிர்களையும் அவற்றது உடலில் நிறுத்திக் காக்கின்ற காலத்தில் அக் காத்தல் தொழிலை அரிதாகுமாறு செய்பவரும், அவைகளை அவற்றது உடம்பினின்றும் பிரிக்கின்ற காலத்தில் அப்பிரித்தல் தொழிலை அரிதாகுமாறு செய்பவருமாக அவனுக்கு எதிராவார் பிறர் இல்லை. இனி விடாது வந்த எழுவகைப் பிறப்பிற்கும் முடிவாவது ஞானமே. அந்நெறியில் அவ்வுயிர்களைப் பிறழாது நிற்பிப்பவனும் அச் சிவபெருமானே.
=============================================
பாடல் எண் : 9
அணுகினுஞ் சேயவன் அங்கியிற் கூடி
நணுகினும் ஞானக் கொழுந்தொன்றும் நல்கும்
பணிகினும் பார்மிசைப் பல்லுயி ராகித்
தணிகினும் மன்னுடல் அண்ணல்செய் வானே. 

பொழிப்புரை : அண்ணலாகிய சிவபெருமான், உயிர்களோடு உடனாய் நிற்பினும், அவற்றால் அறிதற்கரியனே. யோக முறையால் பிராண வாயுவை அடக்கி மூலாதாரத்தினின்றும் எழுப்பப்படும் அங்கியின்வழி மேல்நிலமாகிய புருவ நடுவை அடைந்து தியான சமாதிகளால் அவனை உணரினும், உண்மையில் ஞான முதிர்ச்சி ஒன்றுமே அவனைப் பெறுவிக்கும். அதனால், சரியை முதலிய மூன்றால் அவனை வழிபடும் தவநெறியில் நிற்பினும், அதனில் செல்லாது உலகரோடு கூடி அவநெறியில் தாழினும் அவன் பிறவியை அறுத்தல் இன்றி அதனைக் கூட்டவே செய்வான்.
=============================================


மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரமாம் திருவாசகத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருவாசகரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!