http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Saturday 28 April, 2012

திருமந்திரம்-தந்திரம்02-பதிகம்:8. அடிமுடி தேடல்(பாடல்கள்:10)

 (







பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
=================================================================
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:01: அகத்தியம்..................................பாடல்கள்: 002
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:02: பதிவலியில் வீரட்டம் எட்டு ....பாடல்கள்: 008
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:03: இலிங்க புராணம் .....................பாடல்கள்: 006 
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:04: தக்கன் வேள்வி..........................பாடல்கள்: 009 

இரண்டாம் தந்திரம்:பதிக எண்:05: பிரளயம் ......................................பாடல்கள்: 005
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:06: சக்கரப் பேறு ...............................பாடல்கள்: 004
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:07: எலும்பும் கபாலமும்.................பாடல்கள்: 001 
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:08: அடிமுடி தேடல்.........................பாடல்கள்: 010
=================================================================
இரண்டாம் தந்திரம் - 8. அடிமுடி தேடல்  (பாடல்கள்-10)

பாடல் எண் : 1
பிரமனும் மாலும் பிரானேநான் என்னப்
பிரமன்மால் தங்கள்தம் பேதைமை யாலே
பரமன் அனலாய்ப் பரந்துமுன் நிற்க
அரனடி தேடி அரற்றிநின் றாரே.

பொழிப்புரை :பிரமனும், திருமாலும் `நானே கடவுள், நானே கடவுள்` என்று சொல்லிப் போர் புரிய, அவர்களது பேதைமையை நீக்குதற் பொருட்டுச் சிவபெருமான் அனற் பிழம்பாய் ஒளிவீசி நிற்க, அவ்விருவரும் அவனது திருவடியைத் தேடிக் காணாமல் புலம்பினர்.
=============================================
பாடல் எண் : 2
அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண் டிலேன்என் றச்சுதன் சொல்ல
முடிகண்டேன் என்றயன் பொய்மொழிந் தானே.

பொழிப்புரை :மாலும் பிரமனும் முறையே சிவசோதியின் அடியையும், முடியையும் காண முயன்று அவற்றின் உருவத்தைக் காணமாட்டாதவராய் மீண்டும் முன்பு இருந்த இடத்தில் வந்து கூடிய பின்பு, திருமால், `நான் அடியைக் காணவில்லை` என்று உண்மையைச் சொல்ல, பிரமன், `நான் முடியைக் கண்டேன்` என்று பொய் சொன்னான்.
=============================================
பாடல் எண் : 3
ஆனே ழுலகுற நின்றஎம் அண்ணலுந்
தானே ழுலகில் தழற்பிழம் பாய்நிற்கும்
வானே ழுலகுறும் மாமணி கண்டனை
யானே அறிந்தேன் அவன்ஆண்மை யாலே. 

பொழிப்புரை :விரிந்த பரந்த அனைத்துலகிலும் நுண்ணியனாய் நிறைந்து நிற்கின்ற சிவபெருமான், பிரம விட்டுணுக்களது போர் காரணமாக அவ்விடங்களிலெல்லாம் பெரிய அனற் பிழம்பாய் நின்றருளினான். நின்றும் அவனை அவ்விடங்களில் ஓரிடத்தும் ஒருவரும் கண்டிலர். ஆயினும், நான் அவனை எல்லா இடத்திலும் காண்கின்றேன்; அது நான் அவனுக்கு ஆட்செய்கின்ற முறைமையாலாம்.
=============================================
பாடல் எண் : 4
ஊனாய் உயிராய் உணர்வங்கி யாய்முன்னஞ்
சேணாய்வா னோங்குந் திருவுரு வேஅண்டத்
தாணுவும் ஞாயிறுந் தண்மதி யுங்கடந்
தாண்முழு தண்டமு மாகிநின் றானே.

பொழிப்புரை :இயல்பாகவே பல உடம்புகளாயும், அவ்வுடம்பில் உள்ள உயிர்களாயும், அவ்வுயிர்களினுள் அறிவொளியாயும் எல்லையற்ற தனது பேராற்றலால் நிறைந்து நின்ற வடிவமே, பிரம விட்டுணுக்களின்முன் அண்டத்தைத் தாங்குகின்ற தூண்போல்வதாய் நீண்டு, சூரியசந்திர மண்டலங்களைக் கடந்து, தன்னால் ஆளப் படுகின்ற அண்டம் முழுதும் ஊடுருவ நின்றான் அம் மணிகண்டன்.
=============================================
பாடல் எண் : 5
நின்றான் நிலமுழு தண்டத்துள் நீளியன்
அன்றே அவன்வடி வஞ்சின ராய்ந்தது
சென்றார் இருவர் திருமுடி மேற்செல
நன்றாங் கழலடி நாடவொண் ணாதே.

பொழிப்புரை :சிவபெருமான், மண்ணும், விண்ணும் ஆகிய உலகம் முழுதும் நின்றும் வளர்ந்தும் நிற்பவன் அல்லனோ! அதனால், அவனது திருவுருவத்தைக் கண்டு பிரம விட்டுணுக்கள் இருவரும் அஞ்சுதலும், அறியாமையால் அதனை அளந்தறியச் சென்றவழி எய்த்து வருந்துதலும் இயல்பே.
============================================= 
பாடல் எண் : 6
சேவடி ஏத்துஞ் செறிவுடை வானவர்
மூவடி தாவென் றவனும் முனிவரும்
பாவடி யாலே பதஞ்செய் பிரமனும்
தாவடி யிட்டுத் தலைப்பெய்யு மாறே. 

பொழிப்புரை :சிவபெருமானிடம் எஞ்ஞான்றும் குறையிரத்தற்குக் கூடுபவர்களாகிய தேவர்களுட் சிலராகிய, மாவலியை நேரே பொருது வெல்லமாட்டாது வஞ்சனையால் மூவடி மண் இரந்து வென்ற மாயோனும், தானே அறிந்து படைக்கமாட்டாது வேதப் பாக்களை உருச்செய்து அறிந்து உலகங்களைப் படைக்கின்ற பிரமனும், அவருட் சிலரை நோக்கித் தவம்செய்து சிலவற்றைப் பெறும் முனிவர்களும் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை எதிரிட்டுக் காண வல்லராவரோ!
=============================================
பாடல் எண் : 7
தானக் கமலத் திருந்த சதுமுகன்
மானக் கருங் கடல் வாழித் தலைவனும்
ஊனத்தின் உள்ளே உயிர்போல் உணர்கின்ற
தானப் பெரும்பொரு ளண்மைய தாமே. 

பொழிப்புரை :தாமரை மலரை இடமாகக் கொண்டு இருக்கின்ற பிரமனும், பெரிய கடலில் நீங்காது, கிடக்கின்ற திருமாலும் எஞ்ஞான்றும் தங்கள் உடம்பினுள்ளே உள்ள உயிர் போலக் கருதி உள்கத்தக்க பெரும் பொருளாகிய சிவபெருமான், அவர்தம் புறக்கண்ணிற்கு அகப்படுவானோ!
=============================================
பாடல் எண் : 8
ஆலிங் கனஞ்செய் தெழுந்த பரஞ்சுடர்
மேலிங்ஙன் வைத்ததோர் மெய்ந்நெறி முன்னங்கண்
டோலிங் கனஞ்செய் துலகம் வலம்வருங்
கோலிங் கமைஞ்சருள் கூடலு மாமே.

பொழிப்புரை :அண்டங்கள் பலவற்றையும் பொருந்தி நின்ற சிவசோதி, அதன்பின் இவ்வாறு பிரம விட்டுணுக்களால் அடிமுடி அறியப்படாத நிலைமையைக் காட்டி நிலைபெறச் செய்த மேலான சிவநெறியை முன்னர் அறிந்து, உலகம் முழுதும் ஒருங்கே வழி படுகின்ற இலிங்க வடிவை வணங்கித் தம் குறையை எடுத்துக்கூறி முறையிட்டு, மக்கள் இவ்வுலகப் பயனையேயன்றி அவன் அருளைப் பெறுதலாகிய ஞானத்தையும் அடையலாம்.
=============================================
பாடல் எண் : 9
வாள்கொடுத் தானை வழிபட்ட தேவர்கள்
ஆள்கொடுத் தெம்போல் அரனை அறிகிலர்
கோள்கொடுத் தின்பங் கொடுத்துக்கோ ளாகத்தன்
தாள்கொடுத் தானடி சாரகி லாரே.
 

பொழிப்புரை :சிவபெருமான் திருமால் முதலிய தேவர்க்கும், இராவணன் முதலிய அரக்கர்க்கும் படைக்கலங்களை அளித் தருளிய செய்தியை அறிந்து அவ்வாறே தாமும் பலவற்றைப் பெற விரும்பி அவனை வழிபடுகின்ற தேவர்கள், எம்மைப் போல அவனுக்குத் தம்மை ஆளாகக் கொடுத்து அன்பினால் அவனை நினைப்பதில்லை. அதனால், தன் அடியார்களுக்கு முதலில் ஞானத்தைக் கொடுத்து, பின் பேரின்பத்தைத் தந்து, என்றும் புகலிடமாகத் தனது திருவடியை வழங்குகின்ற அவனது திருவடியை அத் தேவர்கள் காண்பதில்லை.
=============================================
பாடல் எண் : 10
ஊழி வலஞ்செய்தங் கோரும் ஒருவற்கு
வாழி சதுமுகன் வந்து வெளிப்படும்
வீழித் தலைநீர் விதித்தது காவெனும்
ஊழிக் கதிரோன் ஒளியைவென் றானே. 

பொழிப்புரை : பிரளய வெள்ளத்தில் ஆலிலைமேல் மிதந்து எங்கும் திரிந்து, `இனி என்ன செய்வது` என்று ஆராய்கின்ற திருமாலுக்கு மகனாக நான்முகன் தோன்றுவான். அதன்பின், ஊழிக் காலத்தில் எரிகின்ற சூரியனது ஒளியையும் வென்ற திருமேனி யனாகிய சிவபெருமான், `அழிந்த இவ்வுலகத்தை நீவிர் மீளப் படைத்துக் காமின்` என்று பணித்தருளுவான். அவ்வாற்றால் பின்பு படைப்பு முதலிய தொழில்கள் நிகழும்.
=============================================
 

மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரமாம் திருவாசகத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருவாசகரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!