http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Saturday 28 April, 2012

திருமந்திரம்-தந்திரம்02-பதிகம்:12. திரோபவம் (பாடல்கள்:09)







 
பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
========================================================================

இரண்டாம் தந்திரம்:பதிக எண்:01: அகத்தியம்..................................பாடல்கள்: 002
 

இரண்டாம் தந்திரம்:பதிக எண்:02: பதிவலியில் வீரட்டம் எட்டு ....பாடல்கள்: 008
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:03: இலிங்க புராணம் .....................பாடல்கள்: 006 
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:04: தக்கன் வேள்வி..........................பாடல்கள்: 009
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:05: பிரளயம் ......................................பாடல்கள்: 005

இரண்டாம் தந்திரம்:பதிக எண்:06: சக்கரப் பேறு ...............................பாடல்கள்: 004
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:07: எலும்பும் கபாலமும்..................பாடல்கள்: 001 
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:08: அடிமுடி தேடல்..........................பாடல்கள்: 010
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:09: சருவசிருட்டி ...............................பாடல்கள்: 030
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:10: திதி.................................................பாடல்கள்: 009
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:11: சங்காரம்.....................................பாடல்கள்: 010 

இரண்டாம் தந்திரம்:பதிக எண்:12: திரோபவம்.................................பாடல்கள்: 009

=================================================(பாடல்கள்: 094 + 009 = 103 )
இரண்டாம் தந்திரம்-பதிகஎண்:12.  திரோபவம்(பாடல்கள்:09)

பாடல் எண் : 1
உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை
உள்ளம்விட் டோரடி நீங்கா ஒருவனை
உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனை உருவறி யாதே. 

பொழிப்புரை :  சிவன், ஆன்ம அறிவேயாயும், அவ்வறிவுக்கு அறிவாயும், அதனில் சிறிதும் பிரிவின்றியும் அதனோடு யாண்டும் உடனாயே நிற்பினும் அவ்வறிவு மல மறைப்பால் அவனது இருப்பை அறியமாட்டது.
=============================================
பாடல் எண் : 2
இன்பப் பிறவி படைத்த இறைவனுந்
துன்பஞ்செய் பாசத் துயருள் அடைத்தனன்
என்பிற் கொழுவி இசைந்துறு தோல்தசை
முன்பிற் கொளுவி முடிகுவ தாமே. 

பொழிப்புரை :  பின்னர் இன்பத்தைப் பெறுதற்குக் கருவியாம் பிறப்பை உயிர்கட்குக் கொடுத்த சிவன், அப்பிறப்பினுள் நிற்கும் பொழுது துன்பமயமான வினையால் விளையும் துயருள் அழுந்தவே வைத்துள்ளான். பிறவியால் வரும் மாசுடம்புகள் முன்னே சில காலம் துன்பத்தைத் தந்து, பின்பு ஓழிவனவாகும்.
=============================================
பாடல் எண் : 3
இறையவன் மாதவன் இன்பம் படைத்த
மறையவன் மூவரும் வந்துடன் கூடி
இறையவன் செய்த இரும்பொறி யாக்கை
மறையவன் வைத்த பரிசறி யாரே. 

பொழிப்புரை :  `உருத்திரன், மால், அயன்` என்னும் காரணக் கடவுளர்தாமும், மேல் உள்ள சீகண்ட உருத்திரரால் தமக்குத் தரப்பட்ட சிறந்த இயந்திரமாகிய உடம்புகள் கிடைக்கப் பெற்றுப் பொருந்தி நின்று உள்ளத்துள் ஒளிந்து நிற்கும் கள்வனாகிய சிவன் தம்மாட்டு வைத்த மறைப்பினை அறிய மாட்டார்கள்.
=============================================
பாடல் எண் : 4
காண்கின்ற கண்ணொளி காதல்செய் தீசனை
ஆண்பெண் அலியுரு வாய்நின்ற ஆதியை
ஊண்படு நாவுடை நெஞ்சம் உணர்ந்திட்டுச்
சேண்படு பொய்கை செயலணை யாரே. 

பொழிப்புரை :  சிவபெருமானைப் பொருள்களைக் காண்கின்ற கண்ணினது ஒளியைக் காதலிப்பதுபோலக் காதலித்து, சுவையற்ற நாவினை உடைய மனத்தால் நினைந்து, நெடுங்காலமாக வருகின்ற பிறப்பு இறப்புக்களை விட்டொழிதற்கு ஏதுவான தவத்தில் தலைப்படுகின்றிலர் உலகர்.
=============================================
பாடல் எண் : 5
தெருளும் உலகிற்குந் தேவர்க்கும் இன்பம்
அருளும் வகைசெய்யும் ஆதிப் பிரானும்
சுருளுஞ் சுடருறு தூவெண் சுடரும்
இருளும் அறநின் றிருட்டறை யாமே. 

பொழிப்புரை :  ஆதிப் பிரானகிய சிவபெருமான், பரிபாகம் பெற்ற உயிர்கட்கும், பரிபாகத்தால் ஞானத்தை எய்தினோர்க்கும் தனது திருவருள் நன்கு புலப்படும் வகையில் விளக்கத்தைத் தருவான். ஏனையோர்க்குப் பகலவனும், நிலாவும் பகலிலும், இரவிலும் இருள் நீங்க எரிப்பினும் இருள் பொதிந்து நிற்கும் அறைபோல நின்று மறைத்தலையே செய்வன்.
=============================================
பாடல் எண் : 6
அரைக்கின் றருள்தரும் அங்கங்கள் ஓசை
உரைக்கின்ற ஆசையும் ஒன்றொடொன் றொவ்வாப்
பரக்கும் உருவமும் பாரகந் தானாய்க்
கரக்கின் றவைசெய்த காண்டகை யானே.

பொழிப்புரை :  தான் ஒருவனே, நிலமுதல் நாதம் ஈறாய கருவிகள், நால்வகை வாக்குக்கள், நான்காகவும் எட்டாகவும் பத்தாகவும் மற்றும் பலவாகவும் சொல்லப்படுகின்ற திசைகள், ஒன்றோடு ஒன்று ஒவ்வாது பல்வேறு வகையினவாய் நிற்கின்ற உடம்புகளும் பிறவுமாகிய உருவங்கள், நிலவுலகம் முதலிய உலகங்கள் இவை அனைத்துமாய் நின்று, மெய்யுணர்வைத் தடுக்கின்ற அப்பொருள்களை ஆக்கிய, எல்லா உயிர்களாலும் அறிந்து அடையத்தக்க இறைவனே அத் தடையை நிகழ்விக்கின்ற மறக்கருணையைச் செய்கின்றான்.
=============================================
பாடல் எண் : 7
ஒளித்துவைத் தேனுள் ளுறவுணர்ந் தீசனை
வெளிப்பட்டு நின்றருள் செய்திடு மீண்டே
களிப்பொடுங் காதன்மை என்னும் பெருமை
வெளிப்பட்டிறைஞ்சின்நும் வேட்சியுமாமே.

பொழிப்புரை :  மறைத்தலைச் செய்கின்ற அவனை அவன் என்னேடு உடனாய் நிற்கின்ற அருட்டொடர்பை உணர்ந்து பிறர் அறி யாதவாறு என் உள்ளத்திலே மறைத்து வைத்தேன். அதனால், இனி அவன் எனக்கு வெளிப்படையாகத் தோன்றி அருள்புரிதல் திண்ணம். நீவிரும் என்னைப்போலவே அவனது அருட்டொடர்பை உணர்ந்து, அவ்வுணர்வினால் எழுகின்ற இன்பத்தோடு கூடிய `பேரன்பு` என்னும் சிறப்புத் தன்மை வெளிப்பட, அவனை அகத்தும், புறத்தும் வழிபடுவீர்களாயின், `அவன் எமக்கு எப்பொழுது வெளிநிற்பான்` என்று ஏக்கமுற்றிருக்கின்ற உங்கள் வேட்கை நிரம்புவதாகும்.
=============================================
பாடல் எண் : 8
ஒருங்கிய பாசத்துள் உத்தம சித்தன்
இருங்கரை மேலிருந் தின்புற நாடி
வருங்கரை ஓரா வகையினிற் கங்கை
அருங்கரை பேணில் அழுக்கது வாமே. 

பொழிப்புரை :  கடலில் அகப்பட்டவன் அதன் கரையை அடைந்து இன்புறவேண்டி நீந்தும்பொழுது அக்கரை அருகில் வருவதை அறியாதிருத்தல் போலவும், கங்கைக்கரையில் நிற்பவன் அதனுள் மூழ்காமல் கரையிலே நிற்றல்போலவும் மேலான சித்தாகிய ஆன்மா, கீழான மலத்துள் நின்று மாசும் துன்பமும் உடையதாகின்றது.
=============================================
பாடல் எண் : 9
மண்ணொன்று தான்பல நற்கல மாயிடும்
உண்ணின்ற யோனிகட் கெல்லாம் ஒருவனே
கண்ணொன்று தான்பல காணுந் தனைக்காணா
அண்ணலும் இவ்வண்ண மாகிநின்றானே. 

பொழிப்புரை :  மண் ஓன்றே கலங்கள் (பாத்திரங்கள்) பலவற்றிலும் பொருந்தி நிற்கின்றது. அதுபோலச் சிவபெருமான் ஒருவனே உயிர் கள் அனைத்தினுள்ளும் நிற்பான். ஆயினும், கண் பிற பொருளைக் காணுமாயினும், தன்னையும், தன்னொடு பொருந்தியுள்ள உயிரையும் காணாததுபோல, உயிர்கள் பிறவற்றை அறியுமாயினும், தம்மையும், தம்மோடு உடனாய் நிற்கின்ற சிவனையும் அறிதல் இல்லை.
=============================================


மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரமாம் திருவாசகத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருவாசகரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!