http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Thursday 29 November, 2012

திருமந்திரம்-தந்திரம்07: பதிகம் . இதோபதேசம் - பாடல்கள்: 019.




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

==============================================
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:01: ஆறாதாரம்..............பாடல்கள்: 008 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:02: அண்டலிங்கம்........பாடல்கள்: 014
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:03: பிண்டலிங்கம்........பாடல்கள்: 004 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:04: சதாசிவலிங்கம்.....பாடல்கள்: 023
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:05: ஆத்மலிங்கம்.........பாடல்கள்: 010 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:06: ஞான லிங்கம்.........பாடல்கள்: 010
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:07: சிவலிங்கம்.............பாடல்கள்: 005 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:08: சம்பிரதாயம்..........பாடல்கள்: 014
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:09: திருவருள்வைப்பு .பாடல்கள்: 005
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:10: அருளொளி..............பாடல்கள்: 009 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:11: சிவபூசை...................பாடல்கள்: 021  
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:12: குருபூசை..................பாடல்கள்: 010 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:13: மகேசுவரபூசை......பாடல்கள்: 009
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:14: அடியார்பெருமை ..பாடல்கள்: 015 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:15: போசன விதி...........பாடல்கள்: 002
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:16: பிட்சா விதி............. .பாடல்கள்: 006 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:17: முத்திரை பேதம்....பாடல்கள்: 010
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:18: பூரணக் குகைநெறிச் சமாதி. பாடல்கள்: 008 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:19: சமாதிக் கிரியை.....பாடல்கள்: 013
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:20: விந்துற்பனம்.......... .பாடல்கள்: 006 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:21: விந்துசயம்...............பாடல்கள்: 037
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:22: ஆதித்தநிலை.........பாடல்கள்: 010 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:23: பிண்டாதித்தன்......பாடல்கள்: 003
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:24: மனவாதித்தன்...... .பாடல்கள்: 005 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:25: ஞானாதித்தன்........பாடல்கள்: 008
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:26: சிவாதித்தன்............ பாடல்கள்: 004 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:27: பசு லக்கணம்-பிராணன்-பாடல்கள்: 002
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:28: புருடன்.......................பாடல்கள்: 004 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:29: சீவன்...........................பாடல்கள்: 004
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:30: பசு................................பாடல்கள்: 002 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:31: போதன.......................பாடல்கள்: 006
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:32: ஐந்திரியம் அடக்கும் அருமை .. பாடல்கள்: 008 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:33: ஐந்திரியம் அடக்கும் முறைமை .பாடல்கள்: 013
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:34: அசற்குரு நெறி......பாடல்கள்: 005 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:35: சற்குரு நெறி..........பாடல்கள்: 018
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:36: கூடா ஒழுக்கம்.....பாடல்கள்: 005 

ஏழாம்  தந்திரம்:பதிக எண்:37: கேடு கண்டிரங்கல்.பாடல்கள்: 018
ஏழாம்  தந்திரம்:...........................: இதோபதேசம்.........பாடல்கள்: 019 

============================================== 
தந்திரம் 7- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -036
கூடுதல் பாடல்கள்  (365+019 =384)

==============================================
ஏழாம் தந்திரம் -
இதோபதேசம் – பாடல்கள் : 019
பாடல் எண் : 1
மறந்தொழி மண்மிசை மன்னாப் பிறவி
இறந்தொழி காலத்தும் ஈசனை உள்கும்
பறந்தல மந்து படுதுயர் தீர்ப்பான்
சிறந்த சிவநெறி சிந்தைசெய் யீரே.

பொழிப்புரை :   மண்மேல் உள்ள பிறவிகள் நிலையின்றிச் சின்னாளில் அழிந்தொழிவன வேயாம். ஆதலின் அவற்றுள் சில பிறவிகளை உயர்ந்தனவாகக் கருதி அப்பிறவியில் பிறக்க வேண்டும் என விரும்புதலை விட்டுவிடுங்கள். அங்ஙனம் விட்டு வீடுபெற விரும்பும் பொழுது அதன்பொருட்டுப் பிற நெறிகளை நாடாது, நெறிகள் அனைத்திலும் மிக மேலானதாகிய சிவ நெறியை நாடுங்கள். நாடி அதனை அடைந்து இறக்குங் காலம் உட்பட எக்காலத்தும் சிவனை இடைவிடாது நினையுங்கள். அவ்வாறு நினைந்தால் அவன் நலனடைதற் பொருட்டு அதற்கான வழிகளைத் தேடி எவ்விடத்தும் விரைந்து ஓடி அலையும் நம் அலைவை நீக்கியருளுவான்.
=======================================
பாடல் எண் : 2
செல்லு மளவும் செலுத்துமின் சிந்தையை
வல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை
இல்லை எனினும் பெரிதுளன் எம்மிறை
நல்ல அரன்நெறி நாடுமின் நீரே.
பொழிப்புரை :   நாங்கள், `ஒருகாலத்திலும் பிறத்தலும், இறத்தலும் இல்லாத%B
குறிப்புரை :
=======================================
பாடல் எண் : 3
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி யில்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே.

பொழிப்புரை :   உலகத்தார் பல சாதிகளைக் கூறுவராயினும் உண்மையில் உள்ளது ஒரு சாதியே. அது சிவ சாதி. உலகத்தார் பல கடவுளர்களைக் கூறிக் கொண்டாடு வராயினும் உண்மையில் உள்ள கடவுள் ஒருவனே. அவன் சிவன். இவற்றை நீவிர் முதலில் நன்றாக உணருங்கள். உணர்ந்தால், நமனும் உங்களை அணுகான்; வெட்கமின்றி முன்முன் பிறந்து இறந்த பிறப்புகளிலே மீண்டும் மீண்டும் பிறக்கும் நிலையும் உங்களுக்கு இல்லையாகும். அப்பால் மேற்கூறிய உண்மைகள் உங்கள் உள்ளத்தில் அசையாது நிலைபெற, அதன்வழிப் பின்னர்ச் சிவனை இடையறாது நினைந்து உய்தி பெறுங்கள்.
=======================================
பாடல் எண் : 4
போற்றிசெய் அந்தண் கயிலைப் பொருப்பனை.
நாற்றிசைக் கும்நடு வாய்நின்ற நம்பனைக்
காற்றிசைக் குங்கம ழாக்கையைக் கைக்கொண்டு
கூற்றுதைத் தான்றனைக் கூறிநின் றுய்மினே.

பொழிப்புரை :   இனி இங்கு நின்றும் இவ்வதிகாரத்தில் மேல் `` ஒருவனே தேவனும்` என ஒருதலைப் பட வலியுறுத்தி உணர்த்தி யருளிய, `சிவபிரானுக்கு ஆட்செய்வதையே நும் கடமையாகக் கொண்டு ஒழுகிப் பயன் பெறுங்கள்` என்பதையே பல்லாற்றானும் பன்னிப் பன்னி அறிவுறுத்துகின்றார்.  இதன் பொருள் வெளிப்படை.
குறிப்புரை :  நடுவாதல் - தலைமையிடத்தனாதல். பலபொருட்கும் தலையாதலை `நடுநாயகம்` என்பர். ``திசைக்கும் என்றது ஆகுபெயராய் அவற்றில் வாழும் உயிர்களை. ``நடுவாய் நின்றநம்பன்`` என்றதனால், ``அவனே யாவராலும் வணங்கப்படுவோன்`` என்பது குறிப்பு. காற்று, பிராணவாயு. அதுவே உடம்பின் உட்கூறுகள் பலவற்றையும் தக்கவாறு இயைவித்து இயங்கச் செய்தல் பற்றி. ``காற்றிசைக்கும் ஆக்கை`` எனவும், அக்காற்று உள்ள பொழுது மெல்லவும், நீங்கியபின் மிகவும் புலால் நாற்றம் வீசுவது உடம்பு என அதன் இழிவு தோன்ற, ``கமழ் ஆக்கை`` எனவும் கூறினார். நறுமணம் வீசுதலை, `கமழ்தல்` என்றல் மரபாகலின், இங்கு தீ நாற்றம் வீசுதலை, ``கமழ்தல்`` எனக் கூறியது இழித்தற் குறிப்பு. `இசைக்கும் ஆக்கை, கமழ் ஆக்கை`` எனத் தனித் தனி இயைக்க. ``கொண்டு`` என்றது `கருவியாகப் பற்றி` என்றபடி. `அவனைத் துதித்தால் உய்தி பெறுதல் திண்ணம்` என்பதை நிறுவ, ``கூற்றுதைத்தான்றனைக் கூறிநின்று`` என்றார்.
=======================================
பாடல் எண் : 5
இக்காயம் நீக்கி இனியொரு காயத்தில்
புக்குப் பிறவாமல் போம்வழி நாடுமின்
எக்காலத் திவ்வுடல் வந்தெமக் கானதென்(று)
அக்காலம் உன்ன அருள்பெற லாமே.

பொழிப்புரை :   `உயிராகிய நமக்கு உடல் எக்காலத்தில் வந்து பொருந்திற்று` என்று அக்காலத்தை ஆராய்ந்து உணரின், `அதனை நமக்குப் படைத்துக் கொடுத்ததலைவன் இவன்` என்பது புலனாகும். அது புலனாகவே, அவன் மீது அன்பு செல்ல அவனது அருளைப் பெறுதல் உண்டாகும். அவ்வாற்றால் இவ்வுடம்பைக் கழித்துவிட்டு, இனி மற்றோர் உடம்பில் புகுந்து பிறத்தல் இன்றி உய்ந்துபோம் வழியை நாடுங்கள்.
=======================================
பாடல் எண் : 6
போகின்ற வாறே புகுகின்ற அப்பொருள்
ஆகின்ற போதும் அரன்அறி வானுளன்
சாகின்ற போதும் தலைவனை நாடுமின்
ஆகின்ற அப்பொருள் அக்கரை யாகுமே.

பொழிப்புரை :   நீவிர் போகின்ற போக்கிலே உங்களைப் போக விட்டுத் தானும், அப்போக்கிற்குத் துணையாய் உடன் வருகின்ற முதற்பொருள் சிவனே. அவன் அவ்வாறு விடுதலும், உடன் புகுதலும் நீவிர் உண்மையை உணர்தற்கு உரிய காலம் வருவதை அறிதற்காகவே யாம். ஆகையால், வாழ்கின்ற பொழுது மட்டுமின்றிச் சாகின்ற பொழுதும் அவனை நினையுங்கள். ஏனெனில், அவனே பிறவியாகிய கடலுக்கு அப்பால் உள்ள கரையாவான்.
=======================================
பாடல் எண் : 7
பறக்கின்ற ஒன்று பயன்உற வேண்டின்
இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும்
சிறப்பொடு சேரும் சிவகதி பின்னைப்
பிறப்பொன் றிலாமையும் பேருல காமே.

பொழிப்புரை :   கூட்டில் சிறிது போது தங்கியிருந்து பின்பு இரையை நாடி அக்கூட்டைவிட்டுப் பறந்து போகின்ற பறவையைப் போல உடம்பில் சிறிது காலம் வாழ்ந்து பின்பு அவ்வாழ்வினும் வேறான பயனை நாடி அவ்வுடம்பை விட்டு ஓடுகின்ற உயிர், உண்மையாகவே தான் அடையத்தக்க பயனை அடைய வேண்டின் உடம்பை விட்டுப் பிரிகின்ற காலத்திலும் சிவனை மறவாமல் நினைக்கும். அவ்வாறு நினைத்தால் எல்லாச் சிறப்பினும் மேம்பட்ட சிறப்பாகிய, சிவ ஞானத்தின்வழி சிவகதியைச் சேரும் இனி அச்சிவகதிதான், ஏனையுலகங்கள் எல்லாவற்றையும் விடப் பெரியதாகிய உலகமும், அதனையும் கடந்த நிலைமையும் ஆகும்.
=======================================
பாடல் எண் : 8
கூடியும் நின்றும் தொழுதெம் இறைவனைப்
பாடி உளேநின்று பாதம் பணிமின்கள்
ஆடி உளேநின் றறிவுசெய் வார்கட்கு
நீடிய ஈற்றுப் பசுவது வாமே.

பொழிப்புரை :   எங்கள் சிவபெருமானை அவன் அடியவரோடு கூடியும், தனித்தும், பாடியும், ஆடியும் வணங்குவதுடன் உள்ளத்திலே யும் அவனது திருவடிகளை நினைந்து அடிபணியுங்கள். ஏனெனில், உள்ளத்திலே நினைந்து பணிபவர்கட்குக் கன்றையீன்ற பசு அக் கன்றைவிட்டுப் பிரியாதது போலக் கரவாது விளங்கி அருள் செய்வான்.
=======================================
பாடல் எண் : 9
விடுகின்ற சிவனார் மேலெழும் போது
நடுநின்று நாடுமின் நாதன்றன் பாதம்
கெடுகின்ற வல்வினை கேடில் புகழோன்
இடுகின்றான் நும்மை இமையவ ரோடே.

பொழிப்புரை :   எப்பொழுதாயினும் உடம்பை விட்டு நீங்குவதே யன்றி அதில் நிலைத்திராததாகிய உயிர் அவ்வாறு எப்பொழுதாயினும் உடம்பைக் கீழே வீழ்த்தி விட்டுத் தான்மேலே செல்கின்ற பொழுது வாழ்விற்கும், சாவிற்கும் இடைப்பட்ட நேரத்தில் சிவனது திருவடிகளை நினையுங்கள். நினைந்தால் உங்கள் வினைகள் கெட்டொழிவன. தான் மறைந்திருப்பினும் தனது செயல் எஞ்ஞான்றும் நிகழ்வதால் அதுபற்றி முடிவின்றி வருகின்ற புகழை உடையவனாகிய சிவன் உங்களைத் தேவர்களோடு தேவர்களாய்ச் சேர்ப்பான்.
=======================================
பாடல் எண் : 10
இன்புறு வீர்அறிந் தேஎம் இறைவனை
அன்புசெய் வீர்தவம் செய்யும் மெய்ஞ்ஞானத்துப்
பண்புறு வீர் பிறவித்தொழி லேநின்று
துன்புறு பாசத் துழைத்தொழிந் தீரே.

பொழிப்புரை :   மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்து உழல்வதாகிய அந்தத் தொழிலிற்றானே நின்று, அத்துன்பத்தை அடைதற்கு ஏதுவான வினைகளில் கிடந்து உழைத்துக் கெட்டவர்களே, கேளுங்கள். எம் இறைவனாகிய சிவன் எல்லா உயிர்கட்கும் என்றும் உறுதுணையாய் இருந்து உதவி வருதலை உணர்ந்து அவனிடத்திலே அன்பு செய்யுங்கள்; அதன் மேலும் தவத்தைச் செய்யுங்கள்; அப்பொழுது உண்மை ஞானத்தைப் பெற்ற சிறப்பை உடையவராவீர்கள். அச்சிறப்பால் நிலையான இன்பத்தை எய்துவீர்கள்.
=======================================
பாடல் எண் : 11
மேற்கொள்ள லாவதோர் மெய்த்தவம் ஒன்றுண்டு
மேற்கொள்ள லாவதோர் மெய்த்தாளும் ஒன்றுண்டு
மேற்கொள்ள லாவதோர் மெய்ந்நெறி ஒன்றுண்டு
மேற்கொள்ள லாம்வண்ணம் வேண்டிநின் றோர்க்கே.

பொழிப்புரை :   `யாவரும் மேற்கொள்ளத்தக்க நல்ல முறை எது` என்று அறிந்து அதனை மேற்கொள்ள விரும்புபவர்க்கு அம்முறை குறிப்பிடுகின்ற ஒப்பற்ற உண்மையான தவமும், ஒப்பற்ற அரு ளாற்றாலும், ஒப்பற்ற வீட்டு நெறியும் உள்ளன.
=======================================
பாடல் எண் : 12
சார்ந்தவர்க் கின்பங் கொடுக்கும் தழல்வண்ணன்
பேர்ந்தவர்க் கின்னாப் பிறவி கொடுத்திடும்
கூர்ந்தவர்க் கங்கே குரைகழல் காட்டிடும்
சேர்ந்தவர் தேவரைச் சென்றுணர் வாரே.

பொழிப்புரை :   பொதுவாக, `தேவரைச் சேர்தல்` என்பது தேவரை அவரை உணரும் நெறியிற் சென்று உணர்தலே யாகும். அம்முறையில் சிவபெருமான் தன்னைச் சார்ந்தவர்கட்கு இன்ப நிலையாகிய வீட்டையும், சாராது நீங்கினவர்கட்குத் துன்ப நிலையாகிய பிறப்பையும் கொடுப்பான். இதனை உணர்ந்து அவனிடத்தில் அன்பு மிகப் பெற்றவர்கட்கே அவன் தனது திருவடி நிழலைத் தருவான்.
=======================================
பாடல் எண் : 13
முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை
எத்தனைக் காலமும் ஏத்துமின் ஈசனை
நெய்த்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்
அத்தகு சோதி யதுவிரும் பாரே.

பொழிப்புரை :   வீடாகிய முடிநிலைப் பயனாயும், அப்பயனுக்கு நேர்வாயிலாகிய ஞானமாயும், அந்த ஞானத்தை முதற்கண் கேள்வி யால் உணர்த்தும் முத்தமிழின் ஒலியாயும் உள்ள சிவபெருமானையே அறிஞர் எத்துணைக் காலமாயினும் ஒழியாது துதித்து நிற்பர். அங்ஙனம் துதிக்கின்ற துதியில் அவன் தன்னுள்ளே நெய்யைக் கொண்டிருத்தலால் தன்னைப் பருகுகின்றவர்கட்கு இனிக்கின்ற பால்போல அவன் இனிப்பான். ஆகவே அறிவில் இனிக்கின்ற அறிவாயுள்ள அவனை அறிவுடையோர் விரும்பாமல் இருப்பரோ?
=======================================
பாடல் எண் : 14
நியமத்த னாகிய நின்மலன் வைத்த
உகமெத் தனையென் றொருவருந் தேறார்
பவமத்தி லேநின்று பாய்கின்ற தல்லால்
சிவமத்தை ஒன்றும் தெளியகில் லாரே.

பொழிப்புரை :   `ஒவ்வொரு பொருளையும் அதனதன் தன்மையில் நிற்குமாறு நிறுத்தி நடத்துபவனாகிய சிவபெருமான் அனைத்து உயிர்களையும் வீடு பெறுவிக்க எத்தனை யுகங்களை வரையறுத் திருக்கின்றான்` என்பதை அறிய வல்லவர் ஒருவரும் இல்லை, இந்நிலையில் அவரவரும் அச்சிவபரம் பொருளை உள்ளவாறு உணரும் நெறியால் உணர்ந்து பிறவியினின்றும் நீங்குதலையே ஒவ்வொருவரும் செய்தலே தக்கதாய் இருக்க, ஒருவரும் அதனைச் சிறிதும் செய்யாது, பிறவிக் கடலிலே குதித்து அதன் கரையைக் காணாது அமிழ்கின்றனர்.
=======================================
பாடல் எண் : 15
இங்கித்தை வாழ்வும் எனைத்தோ ரகிதமும்
துஞ்சொத்த காலத்துத் தூய்மணி வண்ணனை
விஞ்சத் துறையும் விகிர்தா எனநினை
நஞ்சற் றவர்க்கன்றி நாடாஒண் ணாதே.

பொழிப்புரை :   இவ்வுலகில் தமக்கு வருகின்ற நன்மை, தீமை இரண்டினையும் அவை ஒரு நிகரனவாக நிற்க வைக்கும் காலத்தில் மாணிக்க வண்ணனாகிய சிவபெருமானை, அவனது ஞானத்திலே விளங்கும் தனியொரு பொருளாக உணர்ந்து அவ்வாறான அவனது பெருமையைச் சொல்லி நினைக்கின்ற தூய மனம் உடையவர்க்கன்றி, அவனை உணர இயலாது.
=======================================
பாடல் எண் : 16
பஞ்சமும் ஆம்புவி சற்குரு பால்மன்னி
வஞ்சக ரானவர் வைகில் அவர்தம்மை
அஞ்சுவன் நாதன் அருநர கத்திடும்
செஞ்சநிற் போரைத் தெரிசிக்கச் சித்தியே.

பொழிப்புரை :   தமக்கு ஞானத்தை அளித்த நல்லருள் ஆசிரியரிடத்து அவரையும் ஏனைப் பலரொடு ஒப்ப நினைக்கும் நேர்மையில்லாத மனத்தையுடைய மாணாக்கர் நன்மாணாக்கருள் தாமும் ஒருவராய் இருந்து அவர்கள் போல ஒழுகிவருவாராயின் அவரது கரவொழுக்கத்தால் நாடு பஞ்சத்தை எய்தும். அவரை அணுகச் சிவனும் அஞ்சுவான். அதனால் அவரைப் பின்பு அவன் மீளுதற்கரிய நரகத்தில் இடுவான். நேர்மையான மாணாக்கரைக் கண்ணால் கண்டவர்கட்கும் நற்பேறு உண்டாம்.
=======================================
பாடல் எண் : 17
சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
அவனை வழிபட்டங் காமாறொன் றில்லை
அவனை வழிபட்டங் காமாறு காட்டும்
குருவை வழிபடிற் கூடலும் ஆமே.

பொழிப்புரை :   அளவற்ற தேவர்கள் சிவனையை நேராகச் சென்று கண்டு வழிபட்டனர். ஆயினும் அவர்கள் பின்பு துன்பம் இன்றி வாழ்ந்ததாக வரலாறில்லை. பின்பும் துன்பம் எய்தியதாகவே வரலாறுகள் உள்ளன. ஆகையால், என்றும் துன்பமில்லா வாழ்வைப் பெறும் வகையில் சிவனை வழிபடும் முறையைத் தெரிவிக்கின்ற குருவை வழிபட்டால், அவரது அருளால் அவ்வழிபாட்டில் நின்று துன்பம் இல்லாத நிலையை அடைதல் கூடும்.
=======================================
பாடல் எண் : 18
நரருஞ் சுரரும் பசுபாசம் நண்ணிக்
கருமங்க ளாலே கழிதலின் கண்டு
குருஎன்பவன் ஞானி கோதிலன் ஆனால்
பரம் என்றல் அன்றிப் பகர்வொன்று மின்றே.

பொழிப்புரை :   மக்களே யாகுக; அவரினும் மேற்பட்ட தேவரே யாகுக; எல்லோரும் பாசத்துட்பட்ட பசுக்களேயாய் வினைவழிவந்து நீங்கிப் போதலின், `குரு` எனப்படுபவன் அந்நிலையை உணர்ந்து பாசத்தின் நீங்கி நிற்றலால், `ஞானி` என வேறுவைத்து எண்ணப் படுதலால், அவனை, `பதி` எனவே கூறுதல் வேண்டுமன்றி, வேறு சொல்லுதற்கில்லை.
=======================================
பாடல் எண் : 19
ஆட்கொண் டவர்தனி நாயகன் அன்புற
மேற்கொண் டவர்வினை போயற நாடொறும்
நீர்க்கின்ற செஞ்சடை நீள்தன் உருவத்து
மேற்கொண்ட வாறலை வீவித்து ளானே.

பொழிப்புரை :   ஒப்பற்ற தலைவனாகிய சிவன் தான் குருவாகி வந்து ஆட்கொள்ளப் பெற்றவர்களுள் பின்னும் நாள்தோறும் அக்குரு வடிவின்கண் அன்பு மேலும், மேலும் மிகச் செய்கின்றவரது வினைகள் சேய்மைக்கண் விலகிக் கெடும்படி, தனது இயற்கை உருவத்தில் நீண்டசடையினிடத்தே கங்கையை அடக்கி வைத்திருப்பது போல் அவற்றின் ஆற்றலை அடக்கி அவரிடத்தே விட்டு நீங்காதிருப்பான்.
(ஏழாம் தந்திரம் முற்றியது)
=======================================
 


மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!