http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Wednesday 20 February, 2013

திருமந்திரம்-தந்திரம்08: பதிகம் 31&32. அட்டதள கமல முக்குண அவத்தை, நவாத்தை அபிமானி – பாடல்கள்: 10 & 09.




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
 

பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

==============================================
எட்டாம் தந்திரம்:பதிக எண்:01: உடலில் பஞ்சபேதம்..பாடல்கள்: 018 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:02: உடல் விடல்.................பாடல்கள்: 003  
 எட்டாம் தந்திரம்:பதிக எண்:03: அவத்தை பேதம்.............பாடல்கள்: 025 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:04: மத்திய சாக்கிராவத்தை .பாடல்கள்: 016
எட்டாம் தந்திரம்:பதிக எண்:05: அத்துவாக்கள்....................பாடல்கள்: 003 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:06: சுத்த நனவாதி பருவம் .பாடல்கள்: 040
எட்டாம் தந்திரம்:பதிக எண்:07: கேவல சகலசுத்தம்.......பாடல்கள்: 042 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:08: பராவத்தை..........................பாடல்கள்: 026  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:09: முக்குண நிற்குனங்கள்.பாடல்கள்: 001 

எட்டாம் தந்திரம்:பதிக எண்:10: அந்தாதி பேதம்................பாடல்கள்: 002 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:11:பதினொன்றாந்தானமும் `அவத்தை` எனக்காணல் பாடல்கள்:003 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:12:கலவு செலவுகள் – பாடல்கள்:002 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:13: நின்மலாவத்தை. ..........பாடல்கள்: 051 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:14: அறிவுதயம்......................பாடல்கள்: 014 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:15: ஆறந்தம்............................பாடல்கள்: 034  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:16: பதி, பசு, பாசம்...............பாடல்கள்: 020 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:17: அடிதலை அறியும் திறங்கூறல் .பாடல்கள்: 010  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:18: முக்குற்றம்....................பாடல்கள்: 002   
எட்டாம் தந்திரம்:பதிக எண்:19: முப்பதம்......................பாடல்கள்: 008 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:20: முப்பரம்.......................பாடல்கள்: 007
எட்டாம் தந்திரம்:பதிக எண்:21: பர லக்கணம்............பாடல்கள்: 014
எட்டாம் தந்திரம்:பதிக எண்:22: முத்துரியம்...............பாடல்கள்: 008 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:23: மும்முத்தி..................பாடல்கள்: 004

எட்டாம் தந்திரம்:பதிக எண்:24: முச்சொருபம்..........பாடல்கள்: 007
எட்டாம் தந்திரம்:பதிக எண்:25: முக்கரணம்...............பாடல்கள்: 003 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:26:
முச்சூனிய தொந்தத்தசி.பாடல்கள்: 007
எட்டாம் தந்திரம்:பதிக எண்:27: முப்பாழ்.....................பாடல்கள்: 006 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:28: காரண காரிய உபாதி ..பாடல்கள்: 004  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:29: உபசாந்தம்..........பாடல்கள்: 006  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:30: புறங்கூறாமை...பாடல்கள்: 015

எட்டாம் தந்திரம்:பதிக எண்:31: அட்டதள கமல முக்குண அவத்தை ..பாடல்கள்: 010

எட்டாம் தந்திரம்:பதிக எண்:32: நவாத்தை அபிமானி.......பாடல்கள்: 009
==============================================  
தந்திரம் 8- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -032
கூடுதல் பாடல்கள்  (408+10+09=427)
==============================================



பாடல் எண் : 1
உதிக்கின்ற இந்திரன் அங்கி யமனும்
துதிக்கும் நிருதி வருணன் நல் வாயு
மதிக்கும் குபேரன் வடதிசை ஈசன்
நிதித்தெண் டிசையும் நிறைந்திநின் றாரே.

பொழிப்புரை : ``அண்ட பிண்டம் அவை சமம்``* *கோயிற் புராணம் - பதஞ்சலி சருக்கம் - 70. என்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்தது ஆதலின், இதய கமலம் எட்டிதழ்களை உடையதாகக் கொள்ளப்படுதல் போலவே நிலவுலகமும் எட்டிதழ்களையுடைய தாமரை மலர்களும், அவ்விதழ்களில் திசைக் காவலர்கள் இருப்பதாகவும் பாவித்து அவர்களை வழிபடல் வேண்டும் என்பது வைதிகக் கொள்கை. அவரளவிற்கு அது வேண்டுவதே என்பதை முதற்கண் கூறுகின்றார். இதன் பொருள் வெளிப்படை.
**********************************************
பாடல் எண் : 2
ஒருங்கிய பூவும்ஓர் எட்டித ழாகும்
மருங்கியல் மாயா புரியத னுள்ளே
சுருங்கிய தண்டின் சுழுனையி னூடே
ஒருங்கிய சோதியை ஓர்ந்தெழும் உய்ந்தே.

பொழிப்புரை : உயிர்களோடு ஒன்றி இயங்குகின்ற மாயா நகரத்தில் ஒன்றை ஒன்று ஒத்துள்ள தாமரைமலர்கள் எட்டிதழ்களையுடை யனவாகும். அவை உள்ளே நுணுகிய புழையை உடைய தண்டின்மேல் உள்ளன. அவற்றுள் ஒரு தண்டு `சுழுமுனை` எனப்படுகின்றது. அதனோடு உள்ள புழையால் மலர்கின்ற தாமரையில் விளங்குகின்ற ஒளியையே யோகிகள் காண்கின்றனர் ஆதலின் மற்றொரு தாமரையிலும் அந்த ஒளியையே பாவித்து உய்தி பெறுங்கள்.
**********************************************
பாடல் எண் : 3
மொட்டலர் தாமரை மூன்றுள மூன்றினும்
விட்டலர் கின்றனன் சோதி விரியிதழ்
எட்டல ருள்ளேர் பிரண்டல ருள்ளுறில்
பட்டலர் கின்றதோர் பண்டம் கனாவே

பொழிப்புரை : அரும்பாய் இருந்து அலர்த்த அலர்கின்ற தாமரை மலர்கள் உடலினுள்ளே ஒன்றல்ல; மூன்று உள்ளன. அந்த மூன்றிலுமே ஒளி வடிவான இறைவன் விளங்குகின்றான். எனினும், மேற்கூறிய எட்டிதழ்த் தாமரையிலே நின்றுவிடாமல் ஏறிச் சென்று இரண்டிதழ்த் தாமரையை அடைந்து அவனைத் தரிசித்தால், பிறந்து வளர்கின்ற உடம்பு கனவுக் காட்சியாய்விடும்.
**********************************************
பாடல் எண் : 4
ஆறே அருவி அகம் குளம் ஒன்றுண்டு
நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும்
கூறே குவிமுலைக் கொம்பனை யாளொடும்
வேறே யிருக்கும் விழுப்பொருள் தானே.

பொழிப்புரை : உடம்பினுள், முன் அதிகாரத்தில் கூறியவாறு உள்ள சிறுமலையினின்றும் தோன்றுவது ஆறு அன்று; அருவியே அந்த அருவியின் நீரை ஏற்கின்ற குளம் (ஏரி) ஒன்று உண்டு. அதில் விளையும் விளைவு வகைகளோ பல. ஆயினும் அவ்வினைவினது இயல்பு அறிதற்கரிதாய மிக நுட்பமாய் உள்ளது. அதனை வெளிப்படக் கூறினால், மாதொரு கூறனாகிய பரம்பொருளேயாம்.
**********************************************
பாடல் எண் : 5
திகையெட்டும் தேர்எட்டும் தேவதை யெட்டும்
அகையெட்டு மாய்நின்ற ஆதிப் பிரானை
வகையெட்டும் நான்கும்மற் றாங்கே நிறைந்து
முகையெட்டி னுள்நின் றுதிக்கின்ற வாறே.

பொழிப்புரை : தியானப் பொருள் பிராசாத கலைகள் பன்னிரண்டிலும் நிறைந்து, எட்டிதழ்த் தாமரையாகிய இதய கமலத்திலும் பொருந்தி வெளிப்படச் செய்கின்ற முறை, திசையெட்டும், அவற்றைக் காக்கின்ற தேவர் எண்மரும், அவர்தம் ஊர்தி முதலியனவும், ஐம்பெரும்பூதம், இருசுடர், உயிர் ஆகிய எட்டுப் பொருள்களும் ஆகிய அனைத்துமாய் உள்ள முதல்வனாகிய சிவபிரானை வெளிப்படச் செய்யும் முறையேயாம்.
**********************************************
பாடல் எண் : 6
ஏழும் சகலம் இயம்பும் கடந்தெட்டில்
வாழும் பரம்ஒன்(று) அதுகடந் தொன்பதில்
ஊழி பராபரம் ஊங்கியை பத்தினில்
தாழ்வு அது ஆன தனித்தன்மை தானே.

பொழிப்புரை : வைதிக முறையில் வழிபடினும், இதய கமலத்தின் எட்டிதழ்களில் கிழக்கு முதலாகத் தொடங்கி வலமாக ஏழ் எண்ணி ஏழாவதாகிய வட இதழ் ஈறாக உள்ள இதழ்களில் உள்ளவர்களாக மேற்சொல்லப்பட்ட திசைக் காவலர்களைச் சகல வருக்கத்து ஆன்ம வர்க்கத்தவராகவும், அடுத்த வடகீழ் இதழில் உள்ள ஈசானனை அவரின் மேம்பட்ட பிரளயாகல உருத்திரனாவும், எட்டையும் கடந்து மேலாக ஓங்கி நிற்கும் உயர்புற இதழில் சீகண்ட உருத்திரரை வைத்துச் சிவனாகவும், கீழ்நோக்கித் தூங்கும் கீழ்ப்புற இதழில் ஆதார சத்தியை வைத்து அச்சத்தியாகவும் பாவித்து வழிபடின் சிறப்புடைய சைவ வழிபாடாக அமையும்.
**********************************************
பாடல் எண் : 7
பல்லூழி பண்பிற் பகலோன் இறையவன்
நல்லூழி ஐந்தினுள் ளேநின்ற ஊழிகள்
செல்லூழி அண்டத்துச் சென்றவண் ஊழியுள்
அவ்வூழி உச்சியுள் ஒன்றின் பகவனே.

பொழிப்புரை : முதற்கடவுளாவான் உலகிற்குப் பலவகையான ஊழிகளைப் பகுத்து வைத்துத்தான் அவற்றில் அகப்படாது நிற்பவன். அங்ஙனம் பகுக்கப்பட்ட ஊழிகள் பெரும்பான்மையாக ஐந்தாகும். அவை நிவிர்த்திகலை யூழி முதலாக, சாந்தியதீதைகலை ஊழி ஈறானவையாம். அவற்றில் ஒன்றிலும் உள்ளாய் நிகழும் ஊழிகள் பல. ஒவ்வோர் ஊழியையும் கடந்து அனைத்து ஊழிகளும் முடிந்த பின்பும் அவற்றில் மாயையில் அனைத்து உலகங்களும் ஒடுங்கவும் தான் ஒடுங்காது மேல் நிற்பவன் எவனோ, அவனே முழுமுதற்கடவுள்.
**********************************************
பாடல் எண் : 8
புரியும் உலகினைப் பூண்டஎட் டானை
திரியும் களிற்றொடு தேவர் குழாமும்
எரியும் மழையும் இயங்கும் வளியும்
பரியும்ஆ காசத்தில் பற்றது தானே.

பொழிப்புரை : முதற் கடவுளால் ஆக்கி அளிக்கப்படும் உலகத்தின் திசைகள் எட்டாகப் பாகுபட்டு உள்ளன. `அத்திசைகளில் எட்டு யானைகள் நின்று உலகத்தைத் தாங்குகின்றன` என்பதும், `அந்த யானைகளைத் தங்கள் ஊர்திகளாகக் கொண்டு உலாவும் தலைவர்கள் உளர்` என்பதும் இருக்கட்டும். நெருப்பும், நீரும், ஓயாது இயங்கும் காற்றும் ஆகாசமாகிய வெளியைப் பற்றாகக் கொண்டுதான் இயங்குகின்றன. அதுபோல, அனைத்திற்கும் பற்றுக் கோடாய் உள்ளவன் அனைத்து ஊழிகளையும் கடந்து நிற்கின்ற அவனே.
**********************************************
பாடல் எண் : 9
ஊறும் அருவி உயர்வரை உச்சிமேல்
ஆறின்றிப் பாயும் அருங்குளம் ஒன்றுண்டு
சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரைப்
பூவன்றிச் சூடான் புரிசடை யோனே.

பொழிப்புரை : சுரந்து பாய்கின்ற அருவியை உடைய, உயர்ந்த மலை உச்சிக்குமேலே, தனக்கு வருவாயாகும் நதி எதுவும் இல்லாமல் தானே நிறைந்து, தனது நீரைக் கீழ் நிலங்கட்குப் பாய விடுகின்ற ஓர் அதிசயக் குளம் உண்டு. அக்குளத்தில் சேறும், கிழங்கும், இல்லாமலே செழிப்பான ஒரு கொடியிற் பூத்த அதிசயத் தாமரையும் ஒன்று உண்டு. அந்தத் தாமரைப் பூவைத் தவிர வேறு பூக்களைச் சிவன் விரும்பிச் சூடுதல் இல்லை.
**********************************************
பாடல் எண் : 10
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து
நின்றும் இருந்தும் நிலம்பல பேசினும்
வொன்றும் இருந்து விகிர்தனை நாடுவர்
சென்றும் இருந்தும் திருவுடை யோரே.

பொழிப்புரை : மும்மலங்களும் இறைவனது திருவுள்ளத்தோடு ஒத்துப்போகும் காலத்தில், அவனது திருவருளைப்பெற்று நிற்கும் பெரியோர்கள் உலகத்தார் ஆங்காங்கே நின்று கொண்டும், இருந்து கொண்டும், தங்கள் வாய்க்கு வந்த எவற்றைப் பேசினாலும் அவற்றைப் பொருட்படுத்தாது, ஐம்புலன்களை வெல்லுதலும் செய்து, நடந்தாலும், இருந்தாலும் சிவனை உணர்ந்தேயிருப்பர்.
**********************************************
எட்டாம் தந்திரம் - 32. நவாவத்தை அபிமானி-பாடல்கள்: 09
பாடல் எண் : 1
தொற்பத விசுவன் தைசதன் பிராஞ்ஞன்
நற்பத விராட்டன் பொன் கற்பன் அவ் வியாகிருதன்
பிற்பதச் சொல்இத யன் பிர சாபதியன்
பொற் புவிச் சாந்தன் பொருந்தபி மானியே.

பொழிப்புரை : வியாத்தன், தைசதன், பிராஞ்ஞன், விராட்டன், இரணிய கருப்பன், அவ்வியாகிருதன் இதயன், பிரசாபதி, சாந்தன் இம்முத்திறத்து ஒன்பது பெயர்களும் சீவ சாக்கிரம் முதலிய முத்திறத்து ஒன்பது அவத்தைகளிலும் சிவன் தான் காட்சிப்படும் முறையால் எய்தும் பெயர்களாம். ஆகவே, அவனை அத்தன்மையனாகக் காணும் காட்சியில் சீவனும் சார்ந்ததன் வண்ணமாம் தன்றன்மையால் அப்பெயர்களைப்பெற்று நிற்கும்.
**********************************************
பாடல் எண் : 3
சிவமான சிந்தையில் சீவன் சிதையப்
பவமான மும்மலம் பாறிப் பறிய
நவமான அந்தத்தின் நற்சிவ போதம்
தவமாம் அவையாகித் தானல்ல வாகுமே.

பொழிப்புரை : மேற்கூறிய சிவ துரியத்தில் சீவன் ``அவனே தானே ஆகிய அந்நெறி - ஏகனாகி`` நிற்றலால் `தான்` என்பதொரு முதல் இல்லையாய்விட, ``மல மாயை தன்னொடு வல்வினையின்றே ``* என்றபடி. பிறப்பிற்குக் காரணமாய் நின்ற மும்மலங்களும் அடியோடு கெட்டொழியும். ஒழியவே சீவபோதம் பராவத்தையின் இறுதியில் நிகழும் சாந்த சிவ போதமேயாம். அதனால் அந்நிலையில் அந்த சாகிய சீவன் செய்யும் செயல்களும் பிறப்பிற்கு ஏதுவாம் ஆகாமிய வினையாகாது சிவ போதத்தை நினைப்பிக்கின்ற தவங்களேயாய், மற்றும் தான் செய்தன ஆகாது சிவன் செய்தனவேயாகி விடும்.
**********************************************
பாடல் எண் : 4
முன்சொன்ன ஒன்பானின் முன்னுறு தத்துவம்
தன்சொல்லின் எண்ணத் தகாஒன்பான் வேறுள
பின்சொல்ல லாகும்இவ் வீரொன்பான் பேர்த்திட்டுத்
தன் செய்த ஆண்டவன் தான்சிறந் தானே.

பொழிப்புரை : இவ்வதிகாரத்து முதற்கண் சொல்லப்பட்ட ஒன்பது அவத்தைகளைப் போல அவற்றுக்கு முன்னே சீவன் தன் சொல்லால் சொல்லி எண்ணக் கூடாத ஒன்பது நிலைகள் உள்ளன. ஆகவே, அனைத்தையும் தொகுத்து நோக்கும்பொழுது பதினெட்டாகின்ற இவைகளினின்றும் சீவர்களைப் பிரித்துத் தானாகச் செய்துவரும் தலைவனாகிய சிவன் முத்தி நிலையில் தான் ஒருவனேயாகி விளங்கி நிற்கின்றான்.
**********************************************
பாடல் எண் : 5
உகந்தன ஒன்பதும் ஐந்தும் உலகம்
பகர்ந்த பிரான் என்னும் பண்பினை நாடி
அகைந்தெம்பி ரான்என்பன் அல்லும் பகலும்
இகந்தன வல்வினை ஈடறுத் தானே.

பொழிப்புரை : `உயிர்களின் பொருட்டு அவற்றிற்கு ஏற்புடைய வித்தை பதினான்கையும் செய்தருளிய முதல்வன்` என்று உயர்ந்தோர் யாவராலும் சொல்லப்படுகின்ற அத்தன்மையை உணர்ந்து நான் சிவனை ஏனைத் தேவரினின்றும் வேறு பிரித்து, `அவனே எங்கள் கடவுள்` என்று இரவும், பகலும் ஓயாது சொல்லிக் கொண்டிருப்பேன். அதனால், வரும் பிறப்புக்களில் என்னை வந்து பற்ற நின்ற வலிய வினைகள் இல்லாதொழிந்தன. மற்றும் இப்பொழுது தோன்றும் வினைகளையும் அவன் அழித்துவிட்டான்.
**********************************************
பாடல் எண் : 6
நலம்பல காலம் தொகுத்தன நீளம்
குலம்பல வண்ணம் குறிப்பொடு கூடும்
பலம்பல பன்னிரு காலம் நினையும்
நிலம்பல ஆறில்நன் னீர்மையன் தானே.

பொழிப்புரை : சிவன் உயிர்களுக்கான நல்லவழிகள் பலவற்றைச் சொல்லியருளிய காலம் எல்லையறியப்படாத பழமையுடையது. (`படைப்புக் காலம்` என்றபடி) உயிர்த் தொகுதிகள் அவ்வழிகள் பலவற்றில் தம் கருத்திற்கு ஏற்புடையவற்றைப் பற்றி அவற்றிற்கு ஏற்ற பயன்களை அடைந்து வருகின்றன. பெரும் பொழுது ஆறும், சிறு பொழுது ஆறுமாகிய பன்னிரண்டு காலங்களிலும் சிவபெருமானை நினைவதால் விளையும் பயன்களும் பல அங்ஙனம் நினைத்தற்குரிய இடங்களும் பல என்றாலும் ஆறு இடங்களில் (ஆறு ஆதாரங்களில்) சிவன் இனிது விளங்குபவனாய் இருக்கின்றான்.
**********************************************
பாடல் எண் : 7
ஆதி பராபரம் ஆகும் பராபரை
சோதி பரம் உயிர் சொல்லும்நல் தத்துவம்
ஓதும் கலை மாயை ஓரிரண்(டு) ஓர்முத்தி
நீதியாம் பேதம்ஒன் பானுடன் ஆதியே.

பொழிப்புரை : எல்லாவற்றிற்கும் மேலான முதற்பொருள் தன்னியல்பில் `சிவம்` என்றும், `சத்தி` என்றும் இரு கூற்றையுடையதாய் இருக்கும். அவற்றுள் சத்தி தனது ஒரு சிறு கூற்றில் `ஆதி` என்னும் பெயருடையதாய் நின்று, `அறிவு அருள், உயிர், தத்துவங்கள் வேதம் முதலிய நூல்கள், பஞ்சகலைகள், சுத்தமாயை, அசுத்த மாயை, பல சமயத்தாரும், ஆராய்ந்து கூறும் முத்திநிலைகள்` என்னும் ஒன்பது வகையாய் நிற்கும்.
**********************************************
பாடல் எண் : 8
தேறாத சிந்தை தெளியத் தெளிவித்து
வேறாம் நரகம் சுவர்க்கமும் மேதினி
ஆறாப் பிறப்பும் உயிர்க்கரு ளால்வைத்தான்
வேறாத் தெளியார் வினை உயிர் பெற்றதே.

பொழிப்புரை : அநாதியே பற்றிய மலத்தால் அறியாமையை யுடையதாய் நிற்கின்ற உயிர்களின் அறிவு அவ்வறியாமை நீங்கித் தெளிவடைதற் பொருட்டுத் தெளிவிற்கு வித்தாக, தம்முள் மாறுபட்ட நரகலோக சுவர்க்க லோகங்களிலும் பூலோகத்திலும் வினைக்கீடாகச் சென்று பிறக்கும் பிறப்புக்களையும் சிவன் உயிர்கட்கு அமைத்திருக்கின்றான். அங்ஙனம் அமைத்தது அருள் காரணமாகவேயாம். அதனை வன்கண்மையாக நினைக்கும் தங்கள் நினைப்பை விட்டு, அருளாகத் தெளியமாட்டாதார் தெளிதற்கு வாயிலான மானுடப் பிறப்பைப் பெற்றதும் வினையின் விளைவேயாம்.
**********************************************
பாடல் எண் : 9
ஒன்பான் அவத்தையுள் ஒன்பான் அபிமானி
நன்பாற் பயிலும் நவதத்துவம் ஆதி
ஒன்பானில் நிற்பதோர் முத்துரி யத்துறச்
செம்பாற் சிவம் ஆதல் சித்தாந்த சித்தியே.

பொழிப்புரை : இங்குக் கூறிவரும் ஒன்பான் அவத்தைகளிலும் சிவன் அபிமானியாய் நிற்கும் நிலைகள், அவ்வத்தைகளில் செயற்படும் தத்துவங்கள், மற்றும் சில இவற்றை உணர்ந்து அவ்வொன்பான் அவத்தைகளிலும் `துரியம்` எனப்படும் நிலையிலே நிற்றற்கண் பர துரியத்தில் சீவன் செம்மைச் சிவனாகிவிடுவதே சித்தாந்த நெறியின் முடிநிலைப் பயனாகும்.
**********************************************
மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!