http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Saturday 31 March, 2012

திருமந்திரம்-தந்திரம் 01: பதிகம்:04/2 (பாடல்:16-30/30) உபதேசம்.






பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
================================================================== 

விநாயகர் வணக்கம்...............................................................பாடல்கள்: 001
பாயிரம். பதிக்க வரலாறு.......................................................பாடல்கள்: 039
முதல் தந்திரம்:பதிக எண்:01: சிவபரத்துவம்.....................பாடல்கள்: 056
முதல் தந்திரம்:பதிக எண்:02: வேதச் சிறப்பு .....................பாடல்கள்: 006
முதல் தந்திரம்:பதிக எண்:03: ஆகமச் சிறப்பு ....................பாடல்கள்: 010
முதல் தந்திரம்:பதிக எண்:04: உபதேசம்.............................பாடல்கள்: 030
=====================================================(112+030=142)



பதிகம் எண் :4. உபதேசம்(பாடல்கள்:16-30/30)பகுதி:II

பாடல் எண் : 16
சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே
சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே
சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடம்
சோம்பர்கண் டார்அச் சுருதிக்கண் தூக்கமே. 

பொழிப்புரை :செயலறுதியில் நிற்கும் சிவசித்தர்கள் இருப்பதும் கிடப்பதும் மாசொடு படாததாய பரவெளியிலேயாம். ஆகவே, அவர்தம் உணர்வு நிற்கும் இடம், வேதம் எட்டமாட்டாது நின்றுவிட்ட இடமாம். அதனால், அவர்களும் அவ்வேதத்தை நோக்குதற்கண் மறதியே பெற்றார்.
****************************************************
பாடல் எண் :17
தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே.
 
பொழிப்புரை : சிவசித்தர் வேதம் முதலாகிய கலைகளை உணர் தலையும் மறந்து நின்றமையால், சிவலோகம் முதலிய பல உலகங்களையும், சிவமுதற் பொருளோடே தாம் என்றும் ஒன்றாய் நிற்கும் பெற்றியையும், அதனானே சிவானந்தம் தமக்கு வேறாய் வந்து விளை யாமல், தம் உள்ளே இருந்து ஊற்றெடுத்தலையும் தம் அறிவினுள்ளே விளங்கக் கண்டு வியந்தார்கள். ஆதலின், அவரது பெருமை சொலற்கரிதாம்.
****************************************************
பாடல் எண் : 18
எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை
அவ்வா றருள்செய்வன் ஆதி யரன்தானும்
ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடுஞ்
செவ்வானிற் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கம். 

பொழிப்புரை : அனாதியாய் நிற்கின்ற சிவன் ஆதியாய் நின்று ஆன்மாக்களது அறிவின் எல்லையை எவ் வெவ்வளவினவாகக் காண்கின்றானோ அவ் வவ்வளவிற்கேற்பவே அவைகட்குத் தானும் தனது திருவருளைத் தருவன், அவன், நிகரில்லாத அருள்வெளியில். தனது சத்தி துணையாய் நிற்கப் பல்வேறான பொதுச் செயல்களைப் புரிகின்ற, நடுவுநிலையாகிய வானத்தில் உள்ள ஞான சூரியனும், மாணிக்க மணியும் ஆகலின்.
****************************************************
பாடல் எண் : 19
மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்
மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்
ஆணிப்பொன் மன்றினில் ஆடுந் திருக்கூத்தைப்
பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே
 
பொழிப்புரை : மாணிக்க மணிக்குள்தானே மரகத ஒளி வீசி னாற்போலவும், மாணிக்க மாளிகைக்குள்ளே மரகதநிலை காணப் பட்டாற்போலவும், மாற்றுயர்ந்த பொன்னாலாகிய அம்பலத்துள் நின்று அவன் ஆடுகின்ற திருக்கூத்தினை விரும்பி வணங்கினோர் பெற்ற பேற்றினை இவ்வளவினது என்று சொல்லுதல் கூடுமோ!
****************************************************
பாடல் எண் : 20
பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி
பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன்
பெற்றார்அம் மன்றிற் பிரியாப் பெரும்பேறு
பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே.
  
பொழிப்புரை :மேற்கூறிய ஆணிப்பொன் மன்றினில் ஆடுந் திருக்கூத்தினை அம்மன்றினின்றும் நீங்காது பேணித் தொழுகின்ற பேற்றினைப் பெற்றவர், இவ்வுடம்பு நீங்கியபின் சிவனோடு ஒன்றாகின்ற பெருநிலையையும், அதனால் விளையும் பிறவாமை யாகிய பெரும்பயனையும், அப்பயன் வடிவான திருக்கோயில் வழிபாட்டினை ஒழியாது செய்யும் பெரிய பேற்றினையும், அப்பேற்றினால் உலகத்தாரொடு பேசாது நிற்கும் பெருமையையும் பெற்றவராவர்.
****************************************************
பாடல் எண் : 21
பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல்
அருமை எளிமை அறிந்தறி வாரார்
ஒருமையுள் ஆமைபோல் உள்ளைந் தடக்கி
இருமையுங் கெட்டிருந் தார்புரை அற்றே.
 
பொழிப்புரை பிறரது பெருமை சிறுமைகளை அறிந்து அவற்றிற்கு ஏற்ப அரியனாயும், எளியனாயும் நிற்கின்ற முறைமையை எங்கள் சிவபெருமான் அறிவதுபோல அறிவார் பிறர் யார்? ஒருவரும் இல்லை. அதனால், மேற்குறித்த அவன் அன்பர் இவ்வொரு பிறப்பிலே, ஆமை தனது ஐந்துறுப்புக்களையும் தனக்குக் காவலாய் உள்ள ஓட்டிற்குள் அடக்குதல்போல, புலன் அவா ஐந்தனையும் தமக்கு அரணாய் உள்ள அவனது திருவருளினுள் அடக்கி, இம்மை யின்பம், மறுமையின்பம் இரண்டையும் உவர்த்துக் குற்றம் அற்று இருக்கின்றனர்.
****************************************************
பாடல் எண் :22


புரைஅற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல்
திரைஅற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும்
உரையற் றுணர்வோர் உடம்பிங் கொழிந்தாற்
கரையற்ற சோதி கலந்தசத் தாமே.

பொழிப்புரை : குற்றம் அற்ற பாலில் உள்ள நெய் அப்பாலினுள் வேற்றுமையின்றிக் கலந்து நிற்றல்போல, ஞானாசிரியன் அறிவுறுத்த சொல்லை அலைவற்ற உள்ளத்தில் வேற்றுமை அற்றுக் கலந்து நிற்குமாறு உணர்ந்து அப் பொருளில் அழுந்திநிற்பவர், தம் உடம்பு இங்கு வீழ்ந்த பின்னர் அவரது ஆன்மாத் தன் இயற்கை வியாபகத்தைப் பெற்று, என்றும் வேற்றுமையின்றிக் கலந்து நிற்கின்ற மெய்ப்பொருளேயாய் விடும்
****************************************************
பாடல் எண் : 23
சத்த முதல்ஐந்துந் தன்வழித் தான்சாரில்
சித்துக்குச் சித்தன்றிச் சேர்விடம் வேறுண்டோ
சுத்த வெளியிற் சுடரிற் சுடர்சேரும்
அத்தம் இதுகுறித் தாண்டுகொள் அப்பிலே.

பொழிப்புரை : சடமாகிய சத்தம் முதலிய தன்மாத்திரைகள் முதலாக உள்ள கருவிகள் யாவும், சடமாகிய தத்தம் காரணத்துள்ளே சென்று சேர்ந்துவிடுமாயின் அதன்பின் சித்தாகிய ஆன்மாவிற்குச் சித்தாகிய சிவத்தையன்றிச் சாருமிடம் வேறுண்டோ? இல்லை. அதனால் அந்நிலையில் அப் பயனைத் தரக் கருதியே குருவாய் வந்து ஆண்டுகொண்ட திருவருளாகிய வெள்ளத்தின் செயலால், தூய பரவெளியில் விளங்கும் சிவமென்னும் ஞாயிறாகிய பேரொளியிடத்து ஆன்மா என்னும் விண்மீனாகிய சிற்றொளி சென்று சேர்ந்து ஒன்றாய்விடும்.
****************************************************
பாடல் எண் : 24
அப்பினிற் கூர்மை ஆதித்தன் வெம்மையால்
உப்பெனப் பேர்பெற் றுருச்செய்த அவ்வுரு
அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோற்
செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே.

பொழிப்புரை : கடல்நீரில் ஒன்றாய் நிற்கும் உவர்ப்புப் பின் ஞாயிற்றின் வெப்பத்தால் அந்நீரின் வேறாய் உருவெய்தி `உப்பு` எனப் பெயர்பெற்ற அப்பொருள், அந்நீரில் சேர்ந்தவழி அவ்வுரு வொழிந்து வேறுகாணப்படாது அந்நீரோடு ஒன்றாகும் முறைமை போல, உயிர் சிவத்தோடு என்றும் ஒன்றாயே இருத்தற் குரியதாயினும், ஆணவ மலத்தின் தடையால், அநாதியே வேறாய்ப் பசுத்தன்மை எய்திச் சீவன் எனப் பெயர்பெற்று மாயை கன்மங்களையும் உடையதாய் உழன்று, அத்தடை நீங்கப்பெற்ற பின்னர்ச் சிவத்தோடு சேர்ந்து வேறாய் நில்லாது ஒன்றாய்விடும்.
****************************************************
பாடல் எண் :25
அடங்குபே ரண்டத் தணுஅண்டஞ் சென்றங்
கிடங்கொண்ட தில்லை இதுவன்றி வேறுண்டோ
கடந்தொறும் நின்ற உயிர்கரை காணில்
திடம்பெற நின்றான் திருவடி தானே. 
. 
பொழிப்புரை : எல்லாப்பொருளும் அடங்கி நிற்கும் இடமாகிய `அண்டம்` என்னும் பேருருண்டையுள் அணு என்னும் சிறியதோர் உருண்டை அடங்கி நிற்பதல்லது, அதற்குப் புறம்பாய் வேறோ ரிடத்தில் நிற்றல் இல்லை. அதுபோலப் பலவகை உடம்புகளை எடுத்து அவற்றின் அளவாய் நிற்கின்ற சிற்றுயிர்களுக்குப் பிறவிக் கடலினின்றும் நீங்கி அலமராது நிலைத்து நிற்கும் கரையை அடைவதாயின் அக்கரை, என்றும் அலமரல் இல்லாது ஒருபெற்றியே நிற்பவனாகிய சிவபெருமானது திருவடியே. இதுவன்றி வேறு கரை உண்டோ?
****************************************************
பாடல் எண் : 26
திருவடி யேசிவ மாவது தேரில்
திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில்
திருவடி யேசெல் கதியது செப்பில்
திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே. 
. 
பொழிப்புரை :உண்மை நூல்களைத் தெரிந்தெடுத்து அவற்றில் சொல்லப்பட்ட பொருள்களைச் சிந்தித்து அறுதியிட்டுச் சொல்லுமிடத்து, மெய்ப்பொருளைத் தம் உள்ளத்தில் ஒருதலையாக உணர்ந்து பற்ற வேண்டுவோர்க்குச் சிவபெருமானது திருவடி ஒன்றே பரம்பொருளும், வீட்டுலகமும், துறக்க உலகங்களுமாகும். ஆதலின், அதனைத் தவிர உயிர்கட்குப் பற்றுக்கோடு வேறில்லை.
****************************************************
பாடல் எண் :27
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே. 
 
பொழிப்புரை :  `பெத்தநிலை நீங்கும் பருவத்துச் சிவன் குருவாய் வந்து தனது திருவடி ஞானத்தை வழங்குவான்` எனவும், `அத்திருவடி ஞானத்தைப் பெற்றபின் நிகழ்வன இவை` எனவும் முறைப்படக் கூறி முடித்தபின், அப்பேறு அனைத்தையும் வழங்கிய குருமூர்த்தியை மறத்தல் பெரிதும் உய்தியில்லதோர் குற்றமாம் ஆதலின், அக்குற்றத் திற்கு ஆளாகாது என்றும் அக்குருமூர்த்தியை மறவாது, `சிவம்` எனவே கண்டு வழிபடல் வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றார். ஞான குருவினது திருவுருவைச் சிவனது அருட்டிரு மேனியாகக் காணுதல், அவரது திருப்பெயரைச் சிவனது திருப்பெயராகிய திருவைந்தெழுத்தோடு ஒப்பதாகக் கொண்டு எப்பொழுதும் சொல்லுதல், அவர் இடும் கட்டளை மொழிகளைச் சிவனது அருளா ணையாகப் போற்றிக் கேட்டல், அவரது திருவுருவை உள்ளத்துள் உள்குதல் என்னும் இவைகளே உண்மை ஞானத்தைத் தருவனவாகும்.
****************************************************
பாடல் எண் : 28
தானே புலன்ஐந்துந் தன்வச மாயிடும்
தானே புலன்ஐந்துந் தன்வசம் போயிடும்
தானே புலன்ஐந்துந் தன்னில் மடைமாறும்
தானே தனித்தெம் பிரான்தனைச் சந்தித்தே. 

பொழிப்புரை : ஒருவன், `நான்` என்னும் முனைப்பு இன்றி ஞானாசாரியரை அடுத்து நிற்பானாயின், அவனது ஐம்புல ஆசை தன்னியல்பில் உலகப் பொருள்கள் மேல் செல்லாது அவன் வழிப்பட்டுச் சிவனிடத்திற் செல்வதாய்ப் பள்ளமடையில் வீழ்ந்து பயனின்றிக் கழிந்துகொண்டிருந்த நீர் அம்மடை அடைக்கப்பட்ட வழித்தேங்கி நின்று மேட்டுமேடையிற் போய்ப் பாய்ந்து பயன்தருதல் போலத்தன் அறிவினிடத்தே மாறுவதாகும்.
****************************************************
பாடல் எண் : 29
சந்திப் பதுநந்தி தன்திருத் தாளிணை
சிந்திப் பதுநந்தி செய்ய திருமேனி
வந்திப் பதுநந்தி நாமம்என் வாய்மையால்
புந்திக்குள் நிற்பது நந்திபொற் போதமே.
 
பொழிப்புரை : நான் எப்பொழுதும் உடலால் பணிவது எனக்கு ஞானாசிரியராகிய நந்தி பெருமானது இரண்டு திருவடிகளையே. மனத்தால் நினைப்பது அவரது அருட்டிரு வுருவத்தையே. வாயாற் சொல்வது அவரது திருப்பெயரையே. என் அறிவினுள் நிலைத்து நிற்பது அவரது பொன்மொழியே.
****************************************************
பாடல் எண் : 30
போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்
போதந் தனில்வைத்துப் புண்ணிய ராயினார்
நாதன் நடத்தால் நயனங் களிகூர
வேதந் துதித்திடப் போயடைந்தார் விண்ணே.
  
பொழிப்புரை :உண்மை ஞானத்தை வழங்குகின்ற அருளுரு வினரான எங்கள் நந்தி பெருமானைத் தங்கள் நெஞ்சில் மறவாது நினைந்து ஞானம் முதிரப் பெற்றவர்களே இவ்வுலகில் சிவபெருமானது ஆனந்த நடனத்தால் கண்ணும் களிகூர வாழ்ந்து, இவ்வுடம்பு நீங்கியபின் வேதமும் போற்றுமாறு சென்று பரவெளியை அடைந்தார்கள்; ஏனையோர் மீளவும் பிறவிக்கு ஆளாயினர்.
****************************************************
மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத் தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!