http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Wednesday 28 March, 2012

திருமந்திரம்-சிறப்பும் வரலாறும்.பகுதி-II பத்தாம் திருமுறை

திருமூலர்
வேத ஆகமச் சிறப்பு:
வேதம், ஆகமம் என்ற இரண்டு நூல்களைப் பற்றியும் திருமூலர் குறிப்பிடுகிறார். இரண்டுமே இறைவனிடமிருந்து வந்தவை: வேதம் பொது; ஆகமம் சிறப்பு என்பதும் அவர் கருத்து. ஆகமம் என்ற சொல்லுக்கு ‘வந்தது’ என்பது பொருள். இச்சொல், சிவபெருமானிடமிருந்து இந்நூல்கள் வந்தன என்பதைக் குறிக்கிறது. ஆகமம் என்ற சொல்லை மற்றொரு விதமாகவும் பிரித்துப் பொருள் காண்கிறார்கள். ஆ என்பது பாசம்; க என்பது பசு; ம என்பது பதி. எனவே இம்மூன்றையும் ஆகமம் கூறுகிறது.


திருமந்திரம்; தந்திரங்களும் உள்ளீட்டுச் செய்திகளும்:

தந்திரங்களின் உள்ளீட்டுச் செய்திகள்
தந்திர வரிசை
உள்ளீடு
ஒன்று
உபதேசம்,  யாக்கை நிலையாமை, கொல்லாமை
கல்வி, கள்ளுண்ணாமை
இரண்டு
சிவனின் எட்டுவகை வீரச் செயல்கள்
ஐந்தொழில்கள்; சிவனையும், குருவையும்
நிந்திப்பதால் வரும் துன்பங்கள்
மூன்று
யோகக் கலைகள், அஷ்டமாசித்திகள்
நான்கு
திரு அம்பலச் சக்கரம், நவகுண்டம், வயிரவ மந்திரம்
ஐந்து
இறைவனை அடைவதற்கு உரிய நூல் நெறிகள்:
சரியை, கிரியை, யோகம், ஞானம், சத்தி நிபாதம்
ஆறு
குருதரிசனப் பயன், திருநீற்றின் சிறப்பு, துறவு நிலை
ஏழு
ஆறு ஆதாரங்கள், சிவபூசை, குருபூசை, சமாதி அமைத்து வழிபடும் முறை, உயிர் இலக்கணம்
எட்டு
பக்திநிலை, முக்திநிலை
ஒன்பது
நுண்பொருள் விளக்கம் (சூனியசம்பாஷணை)

திருமந்திரம் - அரிய தொடர்கள்: 


திருமந்திரம் சைவ சமயத்திற்கு மட்டும் உரிய ஒரு சமய நூலாக அமையாது, உலக மக்களுக்கெல்லாம் அறத்தையும், ஆன்ம ஈடேற்றத்தையும், மருத்துவக் கூறுகளையும் எடுத்துரைக்கும் பொது நூலாக அமைந்துள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள அரிய பாடல் பகுதிகள் திருமந்திரத்தின் சிறப்புக்குக் கட்டியம் கூறி நிற்பன. 

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்.... பாடல் -2104

சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை... பாடல்: 5

ஆர்க்கும் இடுமின்: அவர்இவர் என்னன்மின்....பாடல்: 250

ஈசன் அடியார் இதயம் கலங்கிடத்
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்...பாடல்: 534

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்....
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே...பாடல்: 724

குருவே சிவம்எனக் கூறினன் நந்தி...பாடல்: 1581
மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்..பாடல்: 1726  
(நந்தி = இங்கே சிவபெருமானைக் குறிக்கும், ஆக்கை - உடல்)  இவைபோன்ற நூற்றுக்கணக்கான அரிய தொடர்கள் திருமந்திரத்துள் இடம்பெற்றுள்ளன.

அன்பே சிவம்:
 

திருமந்திரம் ஆகமத்தின் சாரமாக அமைந்திருந்தாலும் அனைவரும் உணரும் எளிமையும், இனிமையும் உடைய பாடல்கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அன்பே சிவம்என்ற தொடரைப் பலரும் அறிவர். மனிதர்கள் ஏனைய மனிதர்கள்பால் செலுத்தும் அன்பில்தான் உலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. உலகத்தில் தோன்றிய கடவுள் சார்புடைய மதங்களும், கடவுள் மறுப்புச் சமயங்களும் கூட அன்பினைப் பெரிதும் போற்றியே உரைக்கின்றன. திருவள்ளுவர் முதலிய அறநூலாசிரியர்களும் அன்பின் சிறப்பையும், இன்றியமையாமையையும் எடுத்துரைத்துள்ளனர். 

சைவர்களின் இறைவன் சிவன். அவன் யார்? அவன் இயல்பு எத்தகையது என்ற வினாக்களுக்குத் திருமூலர் தரும் விடை ஆழ்ந்த பொருட்சிறப்புடையது. அன்புதான் எங்கள் சிவன். சிவம் வேறு அன்பு வேறு என்பார் அறியாமை மிக்கவர்கள். இரண்டும் ஒன்றே என்று உணரும் உணர்வில் இறைமைப் பேறு வாய்க்கும்.
அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே...(திருமந்திரம்: 270)
என்பது அன்பின் சிறப்புரைக்கும் அரிய பாடல்.

மரமும் யானையும்: 


உலகம் வேறு, இறைவன் வேறானவன் என்று கருதும் கருத்து சமய நம்பிக்கை உடையவர்களிடமும் உள்ளது. குழந்தை மரத்தால் செய்யப்பட்ட யானை பொம்மையைக் கண்டு யானை! யானைஎன்று அஞ்சித் தாயிடம் தஞ்சம் அடைகிறது. தாயோ இது யானை இல்லை மரம் என்று கூறிக் குழந்தையின் அச்சம் நீக்குகிறாள் என்றால் குழந்தை கண்டது யானையா? மரமா? என்ற ஐயம் எழுகிறது. 

யானையாகக் கண்ட குழந்தைக்கு மரம் என்பது புலப்படவில்லை; மரம் என்ற தெளிவு பெற்ற தாய்க்கு யானை புலப்படவில்லை. இவற்றைப் போல் உலகத்தையும், உலகப் பொருள்களையும் இறைவனாகவே காண்பார்க்கு அவை புலப்படுவதில்லை. உலகமாகவே காண்பார்க்கு இறைமை புலனாவதில்லை. இவ்வழகிய உண்மையைத் திருமந்திரம் மிக அழகிய கவிதை ஒன்றில் வைத்து விளக்குகிறது.
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமே...(திருமந்திரம்: 2290)

இக்கருத்தையொட்டியே நாயைக்கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்ற பழமொழி எழுந்தது. எளிய இனிய எடுத்துக்காட்டுகளால் அமைந்துள்ள இத்தகு கவிதைகள் திருமந்திரத்தில் நிறைவாக இடம் பெற்றுள்ளன.


மனிதநேயப் பரிவு:
 

சைவம் மனித நேயத்தை வற்புறுத்தும் ஓர் அன்பு நெறி. சிற்றுயிர்கள் இடத்தும் கருணை காட்டவேண்டும் என்று அது வற்புறுத்துகின்றது. இறைவன் உலகத்தையும்,     நுகர் பொருள்களையும் உயிர்கள் பெற்று இன்புறுவதற்கே படைத்தளித்தான். உயிர்களிடமிருந்து இறைவன் அன்பு ஒன்றைத் தவிர வேறு யாது ஒன்றும் பெற விரும்புவதில்லை. ஆனால் சமயவாதிகள், சடங்கு நெறியில் பற்றுக் கொண்டு நின்று, மனிதனின் பசிக்கு உணவிட விரும்பாது இறைவனுக்குப் படையலிட்டு மகிழ்கின்றனர். இறைவன் மனிதன் அளிக்கும் உணவையும், படையலையும் உண்டு மகிழ்கின்றானா என்றால் இல்லை. இறைவன் கவனத்திலும் கணக்கிலும் அவனுக்குப் படைக்கப்படும் படையல் இடம் பெறுவதில்லை. அவன் கணக்கில் இடம்பெற விரும்பினால் பசித்திருப்போருக்கு உணவு அளியுங்கள். அதுவே அவனைச் சென்றடையும் அரிய பெருநெறி என்று காட்டுகிறார் திருமூலர்.
படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அதுஆமே...(திருமந்திரம்: 1857)

(படமாடக் கோயில் = இறைவன் உருவத்தை ஓவியமாக எழுதி வைத்துள்ள இடம், பகவன் = இறைவன், நடமாடக் கோயில் நம்பர் = நடமாடும் கோயிலாகிய மனிதர்கள், ஆமே = போய்ச் சேரும்) அது என்ன நம்பர்க்குஎன்று நீங்கள் முணுமுணுப்பது என் காதில் விழுகிறது; ‘நம்பர்என்ற சொல் நம்மவர், எம்மைப்போன்ற மனிதர்கள்என்ற பொருள் தரும். மனிதரின் உள்ளத்தில் இறைவன் குடி கொண்டுள்ளான். எனவே மனிதர்கள் இறைவனின் நடமாடும் கோயில்கள், நடமாடும் கோயில்களாகிய நம் போன்ற மனிதர்க்கு ஒன்று கொடுப்பது இறைவனுக்குக் கொடுப்பதற்கு ஒப்பாகும். 
 
வாழ்வியல் உண்மைகள்:


இறைவனைச் சென்று அடைதற்கு உரிய எளிய வழி குருவை வழிபடுதலால் கிட்டும். பிறன் மனை நோக்காத பேராண்மையை ஆடவர் பெறல் வேண்டும். காக்கை தன் இனத்தைக் கூவி அழைத்துக் கலந்து உண்பது போல், சக மனிதர் களோடு கலந்து உண்ணல் வேண்டத்தக்கது. கற்றவர்களுக்கு மட்டுமே பேரின்பம் வாய்க்கும். கேள்விச் செல்வமே மனிதர்களுக்கு உற்றதுணை. மிகுந்த காமமும் கள்ளுண்டலும் கீழோர் என்று அடையாளம் காட்டும். 

விரும்பியவாறு ஆண் அல்லது பெண் குழந்தை பெற்றுக் கொள்வதற்குரிய மூச்சுப்பயிற்சி முறை, (வியப்பாக உள்ளதா? திருமந்திரம் பாடலில் இவ்விவரம் தரப்பட்டுள்ளது: பாடல் எண்-482) குழந்தைகள் குருடாய், ஊமையாய், முடமாய்ப் பிறப்பதற்குரிய காரண விளக்கம், திருக்கோயில் வழிபாட்டின் இன்றியமை யாமை முதலான பல அரிய செய்திகளை வழங்கும் களஞ்சியமாகத் திருமந்திரம் அமைந்துள்ளது.

===========================================================
மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர். இரா. செல்வக் கணபதி அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.


No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!