http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Saturday 31 March, 2012

திருமந்திரம்-தந்திரம் 01: பதிகம்:05/2 (பாடல்:13-25/25) யாக்கை நிலையாமை.








பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
================================================================== 

விநாயகர் வணக்கம்...............................................................பாடல்கள்: 001
பாயிரம். பதிக்க வரலாறு.......................................................பாடல்கள்: 039
முதல் தந்திரம்:பதிக எண்:01: சிவபரத்துவம்.....................பாடல்கள்: 056
முதல் தந்திரம்:பதிக எண்:02: வேதச் சிறப்பு .....................பாடல்கள்: 006
முதல் தந்திரம்:பதிக எண்:03: ஆகமச் சிறப்பு ....................பாடல்கள்: 010
முதல் தந்திரம்:பதிக எண்:04: உபதேசம்.............................பாடல்கள்: 030
முதல் தந்திரம்:பதிக எண்:05: யாக்கை நிலையாமை....பாடல்கள்: 025
======================================================(142+025=167)

பதிகம் எண் :5. யாக்கை நிலையாமை (பாடல்கள்:13-25/25)பகுதி:II


பாடல் எண் : 13

மதுவூர் குழலியும் மாடும் மனையும்
இதுவூர் ஒழிய இதணம தேற்றிப்
பொதுவூர் புறஞ்சுடு காடது நோக்கி
மதுவூர வாங்கியே வைத்தகன் றார்களே.
 

பொழிப்புரை : எவன் ஒருவனையும் ஊரார் அவன் மனைவியும், செல்வமும், மாளிகையும் ஊரிலே நின்றுவிட, ஒரு நடைப்பரண்மேல் ஏற்றி, ஊர்க்குப் பொதுவாய்ப் புறத்தே உள்ள சுடுகாட்டை நோக்கிச் சுமந்து சென்று, உள்ளத்தில் அன்பு மேம்பட்டு எழ எடுத்து வைத்துவிட்டுப் போவதையே பார்க்கின்றோம்.

***************************************************

பாடல் எண் : 14

வைச்சகல் வுற்றது கண்டு மனிதர்கள்
அச்சக லாதென நாடும் அரும்பொருள்
பிச்சது வாய்ப்பின் தொடர்வுறும் மற்றவர்
எய்ச்சக லாநின் றிளைக்கின்ற வாறே 



பொழிப்புரை : இறந்தவனது உடம்பை ஊரார் கொண்டுபோய்ப் புறங்காட்டில் வைத்து நீங்கியதைக் காணும் பொழுது, என்றும் அச்சுப் போல உடன் இருந்து உதவும் என்று அறிவுடையோர் அறிந்து விரும் புகின்ற அந்த அரிய பொருளாகிய இறைவன் ஒருவனே பேரருள் காரணமாக அவரைப் பின் தொடர்ந்து செல்வான். பிறர் யாவரும் ஒன்றும் செய்யமாட்டாது இளைத்து வருந்துகின்றவர்கள் தாம்.

****************************************************

பாடல் எண் : 15

ஆர்த்தெழு சுற்றமும் பெண்டிரும் மக்களும்
ஊர்த்துறைக் காலே ஒழிவர் ஒழிந்தபின்
வேர்த்தலை போக்கி விறகிட் டெரிமூட்டி
நீர்த்தலை மூழ்குவர் நீதியி லோரே. 



பொழிப்புரை :கல்லென்று ஆரவாரித்து எழுகின்ற சுற்றத் தாரும், மனைவியரும், மக்களும் ஆகிய எல்லாரும் ஊர் எல்லையைக் கடந்து அப்பால் வரமாட்டாது அவ்வெல்லைக்குள்ளே நின்றொழிவார்கள். அதன்பின் பிறர், மரங்களை, வேரும் முனையும் போகத் தறித்துக் கொணர்ந்த விறகின் மேல் வைத்து நெருப்பை நன்றாக மூட்டி எரியப் பார்த்துவிட்டு, நீரிலே சென்று தலை முழுகுவார்கள்.

****************************************************

பாடல் எண் : 16

வளத்திடை முற்றத்தோர் மாநிலம் முற்றுங்
குளத்தின்மண் கொண்டு குயவன் வனைந்தான்
குடமுடைந் தால்அவை ஓடென்று வைப்பர்
உடலுடைந் தால்இறைப் போதும் வையாரே. 

பொழிப்புரை
:
  உலகமெங்கும் குயவர்கள் குளத்திலிருந்து மண்கொணர்ந்து தங்கள் அகத்தினுள்ளே முற்றத்தின்கண் பல குடங்களைப் பண்ணுகின்றார்கள். அக்குடங்கள் ஆளப்பட்டு உடைந்து விடுமானால், வறுக்கும் ஓடாகப் பயன்படும் என்று அகத்திலே சேமித்து வைப்பார்கள். ஆனால் பண்ணப்படும் முறையால் அக் குடத்தோடு ஒப்பனவாகிய உடம்புகள் சிதைந்தால், நொடிநேரமும் மக்கள் வீட்டில் வைத்திருக்க ஒருப்படார்.

****************************************************

பாடல் எண் : 17

ஐந்து தலைப்பறி ஆறு கடையுள
சந்தவை முப்பது சார்வு பதினெட்டுப்
பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்து
வெந்து கிடந்தது மேலறி யோமே. 



பொழிப்புரை :  தலைக்கூடைபோல உலகங்களைத் தாங்கி நடத்தும் சிவதத்துவங்கள் ஐந்து; அக்கூடையில் உள்ள பொருள்போல வித்தியா தத்துவம் ஏழும் பிரகிருதி ஒன்றும் ஞானேந்திரியம் ஐந்தும், கன்மேந்திரியம் ஐந்தும் ஆகிய பதினெட்டு: ஒரு வீட்டினுள் அமைந்த பல கட்டுக்கள் போல உடலில் ஆறு ஆதாரங்கள்; அக்கட்டுக்களில் அமைந்த அகன்ற முற்றம்போல வாயுக்கள் பத்தும்; நாடிகள் பத்தும், `காமம் குரோதம் முதலிய குற்றங்கள் ஆறும், நால்வகை வாக்கும் ஆகிய முப்பது; அம்முற்றத்தை மூடிய பந்தல் போல யோனி பேதத்தால் ஒன்பதாகிய மக்கள் உடம்பு, அப்பந்தலில் அமர்ந்து உண்ணும் பந்திபோலச் சத்தாதி ஐந்தும், வசனாதி ஐந்தும், குணம் மூன்றும், இன்ப துன்பங்களாகிய பயன் இரண்டும் ஆகிய பதினைந்து உளவாகி இயங்கின. ஆயினும், உடம்பு வெந்து கிடப்பதையே பார்க்கின்றோம். மற்றவை என்னாயின என்பதை அறியோம்.

****************************************************

பாடல் எண் : 18

அத்திப் பழமும் அறைக்கீரை நல்வித்துங்
கொத்தி உலைப்பெய்து கூழட்டு வைத்தனர்
அத்திப் பழத்தை அறைக்கீரை வித்துண்ணக்
கத்தி எடுத்தவர் காடுபுக் காரே. 



பொழிப்புரை : அட்டில் தொழில் செய்வார் வறிய குடும்பத் தலைவன் ஒருவனுக்கு அத்திப் பழத்தையும், அறைக் கீரை விதையையுமே திருத்தி உலையில் இட்டு உணவும், கறியுமாக ஆக்கிவைத்தார்கள். அந்த உணவை அக்கறியோடு உண்பதற்கு, வேண்டப்படாத கூரிய கத்தியை எடுத்து அவாவுடன் புகுந்த அத்தலைவன், அதற்குள்ளே சுடுகாட்டை அடைந்தான்.
****************************************************

பாடல் எண் : 19  
மேலும் முகடில்லை கீழும் வடிம்பில்லை
காலும் இரண்டு முகட்டலக் கொன்றுண்டு
ஓலையான் மேய்ந்தவ ரூடு வரியாமை
வேலையான் மேய்ந்ததோர் வெள்ளித் தளியே. 
 
பொழிப்புரை :  ஓலையால் வேய்ந்த வீட்டை, உடையவர் தாமே செய்யாமல், கூலியாளைக் கொண்டு செய்வித்தமையால் அவனால் செப்பமின்றி வேயப்பட்ட பொத்தற் குடில்போலும் உடம்பிற்கு மேலேயும் கவிப்பில்லை; கீழேயும் அடிநிலை இல்லை. ஒப்பிற்கு வைக்கப்பட்ட இரண்டு கால்களும், ஒரு நடு விட்டமுமே உண்டு.
****************************************************
பாடல் எண் : 20
கூடங் கிடந்தது கோலங்கள் இங்கில்லை
ஆடும் இலயமும் அற்ற தறுதலும்
பாடுகின் றார்சிலர் பண்ணில் அழுதிட்டுத்
தேடிய தீயினில் தீயவைத் தார்களே.
 
பொழிப்புரை கூடம் ஒன்று, முன்பு பல ஒப்பனைகளையும், கூத்துக்களையும் உடையதாய் இருந்தது. இப்பொழுதோ அக்கூடம் மட்டும் உள்ளது; அதில் இருந்த ஒப்பனைகளும், கூத்துக்களும் இல்லாது ஒழிந்தன; ஒழிந்தவுடன் மக்கள் திருப்பாடல்களைப் பண்ணோடு பாடுகின்றவர்களாயும், அழுகின்றவர்களாயும் நின்று, இறுதியில் அக்கூடத்தை, தேடிக்கொணர்ந்த விறகில் மூட்டப்பட்ட நெருப்பில் வேகவைத்துவிட்டார்கள்.
****************************************************
பாடல் எண் : 21
முட்டை பிறந்தது முந்நூறு நாளினில்
இட்டது தானிலை ஏதேனும் ஏழைகாள்
பட்டது பார்மணம் பன்னிரண் டாண்டினிற்
கெட்ட தெழுபதிற் கேடறி யீரே.. 
 
பொழிப்புரை :அறிவில்லாத மக்களே, தாய் வயிற்றில் முட்டையாய்த் தோற்றம் எடுத்த உடம்பு, முந்நூறு நாள் காலக் கணக்கில் அங்கே தங்கி வளர்ந்து பின்பு வெளிப்போந்தது. பின் பன்னிரண்டு ஆண்டுக் காலக்கணக்கில் அதற்கு மணவினை என்னும் பேச்சும் உலகத்தில் நிகழ்ந்தது; பின் எழுபது ஆண்டுக் காலக் கணக்கில் செயல் இழந்து கிடந்தது. இவ்வாறு அது ஒவ்வோர் இமையும் அழிவு நெறியிற் சென்று கொண்டிருத்தலை அறிந்திலீர். அதனால் உமக்குத் துணையாக நீவிர் தேடி வைத்துக் கொண்டது யாதும் இல்லை.
****************************************************
பாடல் எண் : 22
இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டால்
முடிஞ்ச தறியார் முழங்குவர் மூடர்
விடிஞ்சிரு ளாவ தறியா உலகம்
படிஞ்சு கிடந்து பதைக்கின்ற வாறே.
  
பொழிப்புரை :அகல் இருப்பினும், இருளை ஓட்டிப் பொருள்களை விளக்குகின்ற சுடரை அணைத்து விட்டால், அவ்வகலுக்கு உள்ள வாழ்நாள் முடிந்ததாம். (அது போல்வதே உடம்பின் வாழ்நாளும், அஃதாவது, உயிர் உள்ள அளவே வாழ்வும், அது நீங்கிய பொழுதே கேடும் உடம்பிற்கு உளவாகும்.) இதனை அறியாமல் உடம்பையே பொருளாகக் கருதி அறிவில்லாதவர் ஆரவாரிப்பர். பொழுது விடிந்தும் இருளில் கிடத்தலோடு ஒப்ப வழியறியாது தடுமாறும் குருடரைப் போல, மேற்சொல்லிய உடம்பின் இயல்பு கண்கூடாக விளங்கிநிற்கவும் உலகம் அதனை அறியாது உடம்பைப்பற்றிய பற்றில் அழுந்திக் கிடந்து, அதற்கு மேற்குறித்த நிலை வரும்பொழுது துயருறுதல் இரங்கத்தக்கது.
****************************************************
பாடல் எண் : 23
மடல்விரி கொன்றையன் மாயன் படைத்த
உடலும் உயிரும் உருவம் தொழாமல்
இடர்படர்ந் தேழாம் நரகிற் கிடப்பர்
குடர்பட வெந்தமர் கூப்பிடு மாறே. 
  
பொழிப்புரை :விடிந்தும் இருளாவது போலப் பெரிதும் அறியாமையில் கிடப்பவர், சிவபெருமான் படைத்த உடம்பும், உயிரும் கூடிவாழுங்காலத்தில் அவன் படைத்த குறிப்பின்படி அவனது திரு மேனியை வழிபடாமல், வேறு பலவற்றையே செய்திருந்து, அவை பிரியுங்காலத்து, அச்சத்தால் குடர் குழம்பும்படி யமதூதர் வந்து இரைந்து அழைத்துப் பிடித்துச் செல்லும் வழியிலே மிக்க துயரத்துடன் சென்று, ஏழாகச் சொல்லப்படும் நரகங்களில் அழுந்துவர்.
****************************************************
பாடல் எண் : 24
குடையுங் குதிரையுங் கொற்றவா ளுங்கொண்
டிடையுமக் காலம் இருந்து நடுவே
புடையு மனிதரார் போகும்அப் போதே
அடையும் இடம்வலம் ஆருயி ராமே. 


பொழிப்புரை: வாழ்நாளின் இடையாய காலத்தில் அமைச்சர் முதலிய மாந்தர் புடைசூழ, நடுவே வெண்கொற்றக் குடையும். பட்டத்துக் குதிரையும், வெற்றி வாளும் கொண்டு வீற்றிருந்து, அவர்களை விட்டுப் போகும் கடைமுறைக் காலத்தில் உயிர் சென்று அடையும் இடமே அதற்கு வலிமையைத் தருவது.
****************************************************
பாடல் எண் : 25
காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென்
பாற்றுளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென்
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டுங்
கூத்தன் புறப்பட்டுப் போனஇக் கூட்டையே. 

பொழிப்புரை: 
தோற்பை போன்றதாகிய இவ்வுடம்புள் இருந்து பல தொழில்களையும் செய்து இதனை உண்பிக்கின்ற கூத்தனாகிய உயிர் புறப்பட்டுப் போனபின் வெறுங்கூடு போல்வதாகிய இவ்வுடம் பினைப் பிறர் வாளாதே புறத்தில் எறிந்தமையால் காக்கைகள் கொத்தித் தின்னலும், கண்ணிற் கண்டவர் அருவருத்து இகழ்ந்து பேசு தலும் நிகழ்ந்தால் அதனால் இழக்கப்படுவதுதான் யாது! சுற்றத்தார் ஈமக் கடனை நன்கு முடித்துப் பால் தெளித்து அடக்கம் பண்ணப் பலரும் புகழ்ந்து போற்றினாலும் அதனால் பெறப்படுவதுதான் யாது!
****************************************************
மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத் தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!