http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Thursday 29 March, 2012

திருமந்திரம்-தந்திரம் 01: பதிகம்:01/1 (பாடல்:01-20/56) பகுதி-I சிவபரத்துவம்



பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம்
237 பதிகங்கள், 3000 பாடல்கள் : பொழிப்புரை : முனைவர் சி.அருனைவடிவேல் முதலியார்.
-------------------------------------------
விநாயகர் வணக்கம் .......................................பாடல்கள்:01 
பாயிரம் : பதிக வரலாறு: ...........பாடல்கள்:39
முதல் தந்திரம்: 27-பதிகங்கள்:
பதிகம் 01. சிவபரத்துவம் (01-20/56) பகுதி-I
பாடல் எண் : 01
சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை
அவனொடொப் பார்இங்கும் யாவரும் இல்லை
புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்
தவனச் சடைமுடித் தாமரை யானே.

பொழிப்புரை தேவருள்ளும் ஒருவரும் சிவனோடு நிகர்ப்பவர் இல்லை; மக்களுள்ளும் அவனொடு ஒப்பவராவார் இல்லை; ஆதலின், இயல்பிலே உலகைக் கடந்து நின்று உணர்வுக் கதிரவனாய் (ஞான சூரியனாய்) விளங்கும் முதற்கடவுள் அச்சிவபெருமானே.
****************************************************
பாடல் எண் : 02
அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறறி யேனே.

பொழிப்புரை : சிவபெருமானைத் தவிர இறவாதவர் பிறர் இல்லை; அவனை உணராது செய்யும் செயல் சிறந்த தவமாதல் இல்லை; அவனது அருளின்றி மும்மூர்த்திகளால் யாதொரு செயலும் நடவாது. அவனது அருளின்றி முத்திக்கு வழி இல்லை.
****************************************************
பாடல் எண் : 03
முன்னையொப் பாயுள்ள மூவர்க்கு மூத்தவன்
தன்னையொப் பாயொன்றும் இல்லாத் தலைமகன்
தன்னையப் பாஎனில் அப்பனு மாய்உளன்
பொன்னையொப் பாகின்ற போதகத் தானே.

பொழிப்புரை : பொன்போலும் மேனியையுடைய, யானைத்தோற் போர்வையாளனாகிய சிவபெருமானே! ஊழிகளுள் ஒன்றில் ஒருவர் மற்றிருவரையும், பிறிதொன்றில் மற்றொருவர் ஏனை இருவரையும் படைக்குமாற்றால் தம்முள், `முன்னோர், பின்னோர்` என்னும் வேறுபாடில்லாத மும்மூர்த்திகளுக்கும் என்றும் முன்னோன்; அத்தன்மை பிறருக்கு இன்மையால், தன்னை ஒப்பாகின்ற பொருள் பிறிதொன்றும் இல்லாத பெருந்தலைவன்; தன்னை, ``அப்பா`` என்று அழைப்பவர்க்கு அப்பனுமாய் இருக்கின்றான்; (உம்மையால்) ``அம்மே`` என்று அழைப்பவர்க்கு அம்மையாயும் இருக்கின்றான்.
****************************************************
பாடல் எண் : 04
தீயினும் வெய்யன் புனலினுந் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறி வார்இல்லை
சேயனு மல்லன் அணியன்நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.

பொழிப்புரை :   நீண்ட சடையை உடையவனாகிய சிவபெருமான், தேறுங்கால் நெருப்பினும் வெம்மை உடையன்; அருளுங்கால் நீரினும் தண்மையுடையவன்; ஆயினும், அத்தகைய அவனது ஆற்றலின் தன்மையை அறியும் உலகர் இல்லை. உலகர்க்கு இவ்வாறு அறியப்படாத சேய்மைக்கண் உளனாகிய அவன், மெய்யன்பர்க்கு அவ்வாறின்றி நன்கறியப்படும் அணிமைக்கண் உள்ளவனாய்த் தாயினும் மிக்க தயவுடையனாவான்.
****************************************************
பாடல் எண் : 05
பொன்னாற் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி
என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்
தன்னால் தொழப்படு வாரில்லை தானே.

பொழிப்புரைஎன்னால் வணங்கப்படுகின்ற எங்கள் சிவபெருமான், தனது பொற்சடை பொன்னால் செய்யப்பட்டனவே என்னும்படி பின்னலோடு விளங்குமாறு இருப்பவன். ``நந்தி`` என்னும் பெயர் உடையான். அவனால் வணங்கப்படுபவர் ஒருவரும் இல்லை.
****************************************************
பாடல் எண் : 06
அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில்
இயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லை
முயலும் முயலின் முடிவும்மற் றாங்கே
பெயலும் மழைமுகிற் பேர்நந்தி தானே.

பொழிப்புரை : எங்கள் சிவபெருமானது பெருமையை நோக்குமிடத்து அவனோடொத்த பெருங்கடவுள் சேய்மையிலும் இல்லை; அண்மையிலும் இல்லை என்பது புலப்படும். உழவும், உழவின் பயனும், அவற்றிற்கு முதலாயுள்ள மழையும், அம் மழையைத் தருகின்ற மேகமும் ஆகிய எல்லாம், `நந்தி` என்னும் பெயருடைய அவனேயன்றிப் பிறர் இல்லை.
****************************************************
பாடல் எண் : 07
கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்
எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர்
மண்ணுறு வார்களும் வானுறு வார்களும்
அண்ணல் இவன்என் றறியகி லார்களே.

பொழிப்புரைசிவபெருமான் என்றும் ஒரு பெற்றியனாய் அழிவின்றி இருக்கவும், அளவற்ற தேவர்கள் அழிந்தனர் என்று புராணங்கள் முழங்கவும், மண்ணிலும், விண்ணிலும் உள்ள பலர் அப்பெருமானை, `இவனே முதல்வன்` எனத் துணியமாட்டாத வராகின்றனர்.

****************************************************
பாடல் எண் : 08
மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்
எண்ணளந் தின்னம் நினைக்கிலார் ஈசனை
விண்ணளந் தான்தன்னை மேல்அளந் தாரில்லை
கண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே.

பொழிப்புரை : திருமால், பிரமன் முதலிய தேவர்களும் இன்னும் சிவபிரானது பெருமையை ஓர்ந்து தெளியவில்லை. ஆகவே, அண்டத்தின் அப்புறத்தும் உள்ள அவனது பரப்பை அளந்து கண்டவர் யார்? ஒருவரும் இல்லை. அவன் எவ்விடத்தையும் உள்அடக்கி அவை அனைத்தையும் கடந்து நிற்கின்றான்.
****************************************************
பாடல் எண் : 09
அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண் டிலேனென் றச்சுதன் சொல்ல
முடிகண்டே னென்றயன் பொய்மொழிந் தானே.

பொழிப்புரை `சிவபெருமானது பெருநிலை (வியாபகம்) ஒருவராலும் அளத்தற்கரிது` என்பதற்கு, அயன், மால் இருவரும் அப்பெருமானது அடிமுடி தேடிக் காணமாட்டாது அல்லற்பட்ட வரலாறே போதிய சான்றாகும்.

****************************************************

பாடல் எண் : 10
கடந்துநின் றான்கம லம்மல ராதி
கடந்துநின் றான்கடல் வண்ணன்அம் மாயன்
கடந்துநின் றான்அவர்க் கப்புறம் ஈசன்
கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே.

பொழிப்புரை :   பிரமனும், திருமாலும் ஓரோர் எல்லையளவில் பெருநிலை (வியாபகம்) உடையவராயினும், அனைவரினும் மேம்பட்ட பெருநிலையுடையவன் சிவபெருமான். அவன் அத்தகையனாய்ப் புறத்து நிற்பினும், எப்பொருளிலும் நிறைந்து அவற்றை அறிந்து நிற்கின்றான்.

****************************************************
பாடல் எண் : 11
ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற
வேதியு மாய்விரிந் தார்ந்திருந் தான்அருட்
சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்
நீதியு மாய்நித்த மாகிநின் றானே.

பொழிப்புரை : அருளாகிய ஒளி உருவினனாயும், என்றும் குறைதல் இல்லாத அவ்வருள் காரணமாக அனைத்துயிர்க்கும் நடுவுநிலைமையனாயும், அழிவில்லாதவனாயும் உள்ள சிவ பெருமான், தானே உலகிற்கு முதலாகியும், முடிவாகியும், பல்வகை உடம்பிலும் காணப்படுகின்ற இன்ப துன்பங்களாகியும் பரந்து நிறைந்திருக்கின்றான்
****************************************************
பாடல் எண் : 12
கோது குலாவிய கொன்றைக் குழற்சடை
மாது குலாவிய வாள்நுதல் பாகனை
யாது குலாவி அமரருந் தேவரும்
கோது குலாவிக் குணம்பயில் வாரே.

பொழிப்புரை :   திருத்தி விளங்கிய, கொன்றை மாலையணிந்த குழல்போலும் சடையை உடைய, அழகு விளங்கும் மங்கையைப் பாதியில் உடைய சிவபெருமானை மும்ம்மூர்த்திகளும், தேவர்களும் எதனை விரும்பிக் குற்றத்தையே குணமாகக் கொண்டாடி வணங்குகின்றார்கள்?
****************************************************
பாடல் எண் : 13
காயம் இரண்டுங் கலந்து கொதிக்கினும்
மாயங் கத்தூரி யதுமிகும் அவ்வழி
தேசங் கலந்தொரு தேவனென் றெண்ணினும்
ஈசன் உறவுக் கெதிரில்லை தானே.

பொழிப்புரை :   ``காயம், கத்தூரி`` என்னும் இரண்டையும் கலந்து கொதிக்க வைத்தாலும் அவ்விடத்து வியப்புண்டாகுமாறு கத்தூரியின் மணம் காயத்தின் மணத்தை அடக்கி மேற்பட்டு விளங்கும்; அதுபோல, உலகத்தார் சிவபெருமானை ஏனைத் தேவர் பலரோடு ஒப்ப வைத்து எண்ணினாலும், சிவபெருமானது திருவருளுக்கு ஏனைத் தேவரது அருள் ஈடாகாது; சிவனருளே மேம்பட்டு விளங்கும்.
****************************************************
பாடல் எண் : 14
அதிபதி செய்து அளகையர் வேந்தனை
நிதிபதி செய்த நிறைதவம் நோக்கி
அதுபதி யாதரித் தாக்கம தாக்கின்
இதுபதி கொள்ளென்றான் எம்பெரு மானே.

பொழிப்புரை :   அளகை நகரில் உள்ள இயக்கர்க்குத் தலைவனாகிய குபேரனை அவன் செய்த மிக்க தவத்தைக் கண்டு அவனை அந்நகருக்குத் தலைவனாகச் செய்து, அந்த அளகை நகரத்தைச் சுட்டி, `இதுதான் உனது நகர்; இதனை நீ நன்கு அறிந்து, செல்வத்தைப் பெருக்குவதாயின் ஏற்றுக்கொள்` என்று எங்கள் சிவபிரானே வழங்கினான்.
*************************************************

பாடல் எண் : 15
இதுபதி ஏலங் கமழ்பொழில் ஏழும்
முதுபதி செய்தவன் மூதறி வாளன்
விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி
அதுபதி யாக அமருகின் றானே.

பொழிப்புரை சந்திரனைத் தரித்துள்ளவனாகிய சிவபெருமான், இவ்வுலகத்தில் ஏலம் முதலியவற்றின் மணங் கமழ்கின்ற சோலையின் பெயராகிய `பொழில்` என்பதனையே தமக்கும் பெயராகக் கொண்ட ஏழு தீவுகளையும், இவ்வுலகிற்கு மேலே ஒன்றைவிட ஒன்று நூறு கோடி யோசனை விரிவுடையனவாகிய பல உலகங்களையும் தோற்றுவித்தவன்; அவ்வளவையும் ஆக்கிக் காத்து அழிக்குமாற்றை அறிந்த பேரறிவுடையவன். அவன் தன்னை நோக்கிச் செய்யும் மெய்த்தவத்தைக் கண்டு அத்தவத்தையே தனக்கு இடமாக விரும்பி வீற்றிருக்கின்றான்.
****************************************************
பாடல் எண் : 16

முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறனெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசர் உருவம்
கடிமலர்க் குன்றம் அலையது தானே

பொழிப்புரைஉயிர்கட்கு இறப்பையும், பிறப்பையும் பண்டே அமைத்து வைத்த தலைவன் நிலைபெற்று நிற்கின்ற தவநெறியைக் கூறும் நூல்கள் யாவை என ஆராயின், அவை இடிபோலவும், முரசு முதலிய பறைகள் போலவும் அனைவரும் அறிய முழங்கும்; அவனது திருவுருவம் மலைபோலவும், கடல் போலவும் நன்கு விளங்கித் தோன்றும்.
****************************************************
பாடல் எண் : 17
மனத்தில் எழுகின்ற மாயநன் னாடன்
நினைத்த தறிவ னெனில்தாம் நினைக்கிலர்
எனக்கிறை அன்பிலன் என்பர் இறைவன்
பிழைக்கநின் றார்பக்கம் பேணிநின் றானே

பொழிப்புரைகண்ணிற்குப் புலப்படாது கருத்தினுள்ளே நிற்கின்ற கள்வனாகிய சிவன், யாவர் எதனை எண்ணினும் அதனை அறிவான் என்று உண்மை நூல்கள் கூறவும், உலகர் அவனை நினைத்து அவன் அருளைப் பெறுகின்றார்களில்லை. நினையாமலே ஒவ்வொருவரும் `சிவன் எங்களுக்கு அருள் பண்ணவில்லை` என்று நொந்து கொள்கின்றார்கள். உண்மையில் சிவன், பிறவற்றை நினையாது தன்னை நினைப்பவர் பக்கமே விரும்பி நிற்கின்றான்.
****************************************************
பாடல் எண் : 18
வல்லவன் வன்னிக் கிறையிடை வாரணம்
நில்லென நிற்பித்த நீதியுள் ஈசனை
இல்லென வேண்டா இறையவர் தம்முதல்
அல்லும் பகலும் அருளுகின் றானே..

பொழிப்புரை :  உலகீர், எல்லாம் வல்லவனாய், கடல் நீரை, `தீக்கடவுளாகிய வடவையிடத்து அடங்கிநிற்க` என மிகுந்து வாராமல் நிற்கச்செய்த அருளாணை உடையவனாகிய சிவபெருமானை, நுண்ணுணர்வின்றி, `இல்லை` எனக் கூறிப்பிணங்குதல் வேண்டா; அவன் அயன், மால் முதலிய கடவுளர்க்கு முதல்வனாய் நின்று, எப்பொழுதும் உயிர்கட்கு நலம் புரிந்து வருகின்றான்.
****************************************************
பாடல் எண் : 19
போற்றிசைத் தும்புகழ்ந் தும்புனி தன்னடி
தேற்றுமின் என்றுஞ் சிவனடிக் கேசெல்ல
மாற்றிய தென்று மயலுற்ற சிந்தையை
மாற்றிநின் றார்வழி மன்னிநின் றானே.

பொழிப்புரை : `நமது மனமே நம்மை நன்னெறியினின்று மாற்றி விட்டது` என்பதை உணர்ந்து, மயக்கம் பொருந்திய அம்மனத்தை மாற்றித் தெளிந்தவரது வழியிற்றான் சிவபெருமான் மறைவின்றி விளங்கி நிற்கின்றான். அதனால், உலகீர், அவனது திருவடி நிழலில் செல்வதற்குப் பன்முறை வணக்கம் கூறியும், பலவாற்றால் புகழ்ந்து பாடியும் அவனது திருவடிகளை என்றும் தெளிந்து நின்மின்கள்.
****************************************************
பாடல் எண் : 20
காணநில் லாயடி யேற்குற வாருளர்
நாணநில் லேன்உன்னை நான்தழு விக்கொளக்
கோணநில் லாத குணத்தடி யார்மனத்
தாணிய னாகி அமர்ந்து நின் றானே.

பொழிப்புரை : `இறைவனே! நீ முன்முன் தோன்றினால் உன்னைத் தழுவிக்கொள்ளுதற்கு நான் சிறிதும் நாணமாட்டேன்; எனக்கு உன்னையன்றி உறவாவார் யாருளர்! யான் காணும்படி வெளி நின்றருள்` என்று மாறுபாடின்றி இரக்கின்ற பண்புடைய அடியவர் உள்ளத்திலே சிவன் அறையப்பட்ட ஆணிபோல்பவனாய் வீற்றிருக்கின்றான்.
****************************************************

மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா...

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!