http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Thursday 11 October, 2012

திருமந்திரம்-தந்திரம் 05: பதிகம் எண் :18 & 19. நிராசாரம்-007 & உட்சமயம்-016




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

======================================================
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:01: சுத்தசைவம் ................பாடல்கள்: 004
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:02:
சுத்தசைவம் ............பாடல்கள்: 004
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:03: மார்க்க
சைவம் ...........பாடல்கள்: 011
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:04: கடுஞ் சுத்தசைவம் .....பாடல்கள்: 005
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:05: சரியை..........................
..பாடல்கள்: 008
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:06: கிரியை...........................பாடல்கள்: 005
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:07: யோகம் ..........................பாடல்கள்: 010
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:08: ஞானம்...........................பாடல்கள்: 010
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:09: சன்மார்க்கம்.................பாடல்கள்: 010
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:10: சகமார்க்கம்..................பாடல்கள்: 007
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:11: சற்புத்திரமார்க்கம்.......பாடல்கள்: 007
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:12: தாசமார்க்கம்................பாடல்கள்: 005
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:13: சாலோக மாதி..............பாடல்கள்: 003
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:14: சாரூபம்.........................பாடல்கள்: 002
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:15: சாயுச்சம்.......................பாடல்கள்: 002
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:16: சத்திநிபாதம்...............பாடல்கள்: 016 
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:17: புறச் சமய தூடணம்..பாடல்கள்: 020
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:18: நிராசாரம்.....................பாடல்கள்: 007 
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:19: உட்சமயம்...................பாடல்கள்: 016
==========================================
தந்திரம் 5- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் 19
கூடுதல் பாடல்கள்  (129+007+016= 152)

தந்திரம் 5- பதிகம் 18. நிராசாரம் -பாடல்கள்: 007
தந்திரம் 5- பதிகம் 19. உட்சமயம்-பாடல்கள்: 016
==============================================
தந்திரம் 5- பதிகம் 18. நிராசாரம் -பாடல்கள்: 007
பாடல் எண் : 01
சிமையங்க ளாய்நின்ற தேவர்கள் ஆறு
சமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி
அமையறிந் தோம்என்பர் ஆதிப் பிரானும்
கமையறிந் தாருட் கலந்துநின் றானே.

பொழிப்புரை  மலைபோன்றவர்களாக மதிக்கப்படுகின்ற தேவர் பலருக்குரிய புறச்சமயங்களைத் தமக்கு உரியனவாகக் கொண்டோர் அவற்றின் நூல்களை ஓதி, `அதனால், நிறை நிலையை அறிந்து விட்டோம்` என்று பெருமை பேசிக்கொள்வார்கள். ஆயினும், முதற் கடவுளாகிய சிவபெருமான் அவர்களது உள்ளத்தில் தோன்றாது மறைந்து, பொறையுடைமை, வெகுளாமை முதலிய ஒழுக்கங்களை உடையவரது உள்ளத்திலே விளங்கி நிற்கின்றான்.
==============================================
பாடல் எண் : 02
பாங்கமர் கொன்றைப் படர்சடை யானடி
தாங்கு மனிதர் தரணியில் நேரொப்பர்
நீங்கிய வண்ணம் நினைவுசெய் யாதவர்
ஏங்கி உலகில் இருந்தழு வாரே.

பொழிப்புரை  நன்மை அமைந்த சிவபெருமானது திருவடிகளை எப்போதும் தாங்கி நிற்கின்ற மனத்தை உடையவர் இப்பூமியில் தமக்குத் தாமே ஒப்பாகும் பெருமையை உடையவராவார். அவ்வாறின்றி அவற்றை எஞ்ஞான்றும் நீங்கி நின்ற வண்ணமாய் ஒருபோதும் நினையாதவர் உலகில் விரும்பியது ஒன்றனையும் பெறாது வாளா இருந்து துன்புறுவார்கள்.
==============================================
பாடல் எண் : 03
இருந்தழு வாரும் இயல்புகெட் டாரும்
அருந்தவம் மேற்கொண்டங் கண்ணலை எண்ணில்
வருந்தா வகைசெய்து வானவர் கோனும்
பெருந்தன்மை நல்கும் பிறப்பில்லை தானே.

பொழிப்புரை வாழும் வழி யாதும் அறியாது திகைத்திருந்து அழுகின்றவர்களும், முன்னர் வாழ்வுடையராய் இருந்து பின்னர்க் கேடு எய்தினவர்களும் (தாம் முழுத் தீவினையும், அரைத் தீவினையும் உடையராய் இருத்தலை அறிந்து அவை ஒழிதற்பொருட்டு) அந்நிலை யில் அரிய தவம் செய்தலை மேற்கொண்டு சிவபிரானை நினைவரா யின், தேவ தேவனாகிய அவன் அவர்களது தாழ்நிலையை நீக்கி, உயர் நிலையைத் தருவன் - அதுவே யன்றி அவர்கட்குப் பிறப்பற்ற வீடுபேறும் உண்டாகும்.
==============================================
பாடல் எண் : 04
தூரறி வாளர் துணைவன் நினைப்பிலர்
பாரறி வாளர் படுபயன் தானுண்பர்
காரறி வாளர் கரந்து பிறப்பர்கள்
நீரறி வாளர் நெடுமுகி லாமே.

பொழிப்புரை  தூர்ந்த அறிவினை உடையோர் தோன்றாத் துணை யாயுள்ள இறைவனை நினைக்கமாட்டாது யாதொரு பயனையும் எய்தார். தூல அறிவினை உடையோர் வருவதை அனுபவித்துக் கொண்டிருப்பர். மயக்க அறிவினை உடையோர் உள்ளதை `இல்லை` என்று சொல்லி மறைத்து, அதனால், பின் வறியராய்ப் பிறப்பர். அறத்தின் தன்மையை அறிந்த அறிவினை உடையோர் பெரிய மேகம் போலப் பலர்க்கும் கைம்மாறு கருதாது உதவி, அதனால், பின் செல்வராய்ப் பிறப்பர்.
==============================================
பாடல் எண் : 05
அறிவுடன் கூடி அழைத்ததோர் தோணி
பறியுடன் பாரம் பழம்பதி சிந்துங்
குறியது கண்டும் கொடுவினை யாளர்
செறிய நினைக்கிலர் சேவடி தானே.

பொழிப்புரை   சிவனது திருவடியாகிய, ஞானத்தொடு பொருந்தி வருவித்துஏறிய ஒப்பற்ற ஓர் தோணி, வினையாகிய சரக்கினை அது நின்ற உடலாகிய மூடையோடு சிவலோகமாகிய பழைய நகரத்தை அடைந்து, இறக்கிவிடுகின்ற அறிகுறிகளை அறிந்தும், தீவினை யுடையோர் அத்திருவடிகளைப் பொருந்தி நிற்க எண்ணுவதில்லை.
==============================================
பாடல் எண் : 06
மன்னும் ஒருவன் மருவு மனோமய
னென்னின் மனிதர் இகழ்வரிவ் வேழைகள்
துன்னி மனமே தொழுமின் துணையிலி
தன்னையும் அங்கே தலைப்பட லாமே.

பொழிப்புரை  அழிவிலனாகிய இறைவன் தன்னை நினைப்ப வரது நினைவே வடிவாய் விளங்குபவன் என்று வேதாகமங்கள் சொல்லவும் அதனை அறியாது இவ்வுலகத்தில் உள்ள அறிவிலிகள் அவனை நினையாது இகழ்ந்தொழிவார்கள். நீவிர் அங்ஙனம் செய்யாது மனம் பொருந்தி அவனை வணங்குங்கள். வணங்கினால், அப்பொழுதே ஒப்பற்ற ஒருவனாகிய அவனை அடைதல் கூடும்.
==============================================
பாடல் எண் : 07
ஓங்காரத் துள்ளொளி உள்ளே உதயமுற்
றாங்கார மற்ற அனுபவம் கைகூடார்
சாங்காலம் உன்னார் பிறவாமை சார்வுறார்
நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே.

பொழிப்புரை  பிரணவத்தின் உள்ளே விளங்குவதாகிய ஒளியை அறிவினுள்ளே வெளிப்படுதலால் உண்டாகின்ற அனுபவத்தை அடையப் பெறார்; இறப்பு என்றாயினும் ஒருநாள் உளதாதலை நினையார்; அதனை நினைந்து, மேலும் பிறந்து இறத்தலை ஒழியும் நெறியைப் பற்றார்; வாளா சமயத்தை மட்டும் பற்றிக்கொண்டு அதன் பயனைப் பெறாதொழிகின்றார்கள் மக்கள்.
==============================================

தந்திரம் 5- பதிகம் 19. உட்சமயம்-பாடல்கள்: 016

பாடல் எண் : 01
இமையவர் தம்மையும் எம்மையும் முன்னம்
அமைய வகுத்த அனாதி புராணன்
சமையங்க ளாறுந்தன் தாளிணை நாட
அமையங் கழல்கின்ற ஆதிப் பிரானே.

பொழிப்புரை  தேவர்களையும், மக்களாகிய எம்மையும் உய்தி பெறுதற்குப் பொருந்தும் வகையினராகப் படைத்த அனாதியான பழையோன், அகச் சமயங்கள் ஆறும் தன் திருவடியையே நாடி நிற்கும்படி அமைய, அவற்றைக் கடந்து நிற்கும் முதல்வனாகின்றான்.
==============================================
பாடல் எண் : 02
ஒன்றதே பேரூர் வழிஆ றதற்குள
என்றது போலும் இருமுச் சமயமும்
நின்றிது தீதிது என்றுரை ஆதர்கள்
குன்று குரைத்தெழு நாயைஒத் தார்களே.

பொழிப்புரை  இதன் பொருள் வெளிப்படை.
==============================================
பாடல் எண் : 03
சைவப் பெருமைத் தனிநா யகன்றன்னை
உய்ய உயிர்க்கின்ற ஒண்சுடர் நந்தியை
எய்ய பெருமையர்க் கன்பனை இன்பஞ்செய்
வையத் தலைவனை வந்தடைந் துய்மினே.

பொழிப்புரை  அகச் சமயங்கள் அறிந்தோ, அறியாமலோ கருத்து வகையால் சைவத்தோடு ஒன்றி நிற்றலை அவருள் அறியாதாரை நோக்கி அதனையே இதுமுதலாக அறிவுறுத்துகின்றார். இதனை, சைவ சமயச் சிறப்பு என்பதொரு தனி அதிகாரமாகக் கொள்ளினும் பொருந்தும், சைவ சமயத்தால் கொள்ளப்படும் ஒப்பற்ற தலைவனும், மக்கள் உயிர் நெடிது வாழ்ந்து உய்தி பெறுதற் பொருட்டு உயிர்ப்பாய் இயங்கு கின்றவனும், சிறந்த ஞான வடிவானவனும், தன்னை உணரும் பெருமை யுடையவரிடத்துத் தானும் அன்பு செய்கின்றவனும், அனைத்துயிர்க்கும் முடிவில் அவை விரும்பும் பேரின்பத்தைத் தருபவனும், இவ்வியல்புகளால் உண்மைத் தலைவன் தானே ஆகின்றவனும் ஆகிய சிவபெருமானை நீவிர் நீங்கி நிற்றலை விடுத்து, அணுக வந்து அடைந்து பிழையுங்கள்.
==============================================
பாடல் எண் : 04
சிவனவன் வைத்ததோர் தெய்வ நெறியில்
பவனவன் வைத்த பழவழி நாடி
இவனவன் என்ப தறியவல் லார்கட்
கவனவ னங்குள தாங்கட னாமே.

பொழிப்புரை  தெய்வந் தெளிந்து அதன் இயல்பை ஆராயும் எல்லாச் சமயங்களையும் உலகில் ஆக்கி வைத்தவன் சிவபெருமானே எனினும் அவற்றுள் முற்பட்டதாகிய சமயம் சைவமே. அதனை அடைந்தோர் `இச்சமயக் கடவுளாகிய சிவனே ஏனைச் சமயங் களினும் நின்று பயன் தருகின்றான்` என்பதை உணர்வர். அங்ஙனம் உணர்ந்தவர்க்கு அவன் அச்சமயங்களில் ஏற்ற பெற்றியால் நின்று அருள்புரிதலும் விளங்கும்.
==============================================
பாடல் எண் : 05
ஆமா றுரைக்கும் அறுசம யாதிக்குப்
போமாறு தானில்லை புண்ணிய மல்லதுஅங்
காமாம் வழிஆக்கும் அவ்வே றுயிர்கட்கும்
போமாறவ் வாதாரப் பூங்கொடி யாளே.

பொழிப்புரை   பொருந்தும் வழியையே கூறுகின்ற அகச் சமயங்கள் ஆறுக்கும் தலைவனாகிய சிவபெருமானை நேரே சென்று அடைதற்குப் புண்ணியம் தவிர வேறில்லை. சைவத்தில் நிற்பவர்க்கேயன்றி பிறசமயங்களில் நிற்கும் அனைத்துயிர்கட்கும் மேற்செல்லும் வழியாகிய அந்தச் சிவசத்தியாகிய முதல்வியே அவ்வுயிர்கட்கு அச்சமயங்களைப் பொருந்தும் வழியாகக் கூட்டு விப்பாள்.
==============================================
பாடல் எண் : 06
அரனெறி யாவ தறிந்தேனும் நானும்
சிவநெறி தேடித் திரிந்தஅந் நாளும்
உரநெறி உள்ளக் கடல்கடந் தேறும்
தரநெறி நின்ற தனிச்சுடர் தானே.

பொழிப்புரை  அகமாகிய சிவநெறிகளைத் தேடித் திரிந்த அக்காலத்திலும் ஞான நெறியால், அளவற்ற எண்ணமாகிய கடலைக் கடந்து ஏறுதற்குரிய உயர்ந்த நெறியாய் உள்ள ஒப்பற்ற ஒளி நெறி யாவது சிவனது நெறியே யாதலை அறிந்தவனு மாயினேன் நானும்.
==============================================
பாடல் எண் : 07
தேர்ந்த அரனை அடைந்த சிவநெறி
பேர்ந்தவர் உன்னிப் பெயர்ந்த பெருவழி
ஆர்ந்தவர் அண்டத்துப் புக்க அருள்நெறி
போந்து புனைந்து புணர்நெறி ஆமே.

பொழிப்புரை  அறிவுடையோர் ஆராய்ந்து கண்டு பற்றிச் சிவனை அடைந்து உய்ந்த சைவநெறி, முன்னர் ஆராய்தல் இன்றி நீங்கினோர் பலர் பின்னர் ஆராய்ந்து மீண்டு வந்தடைந்த பெருமை யுடையதும், பொருந்தி நின்றோர் மேற்கதியைப் பெற்றதுமாகும். அதனால், அதுவே, யாவரும் புறநோக்கை விட்டுத் திரும்பிப் புகழ்ந்து அடைதற்குரிய நெறியாகும்.
==============================================
பாடல் எண் : 08
ஈரும் மனத்தை இண்டற வீசும் இய்
யூரும் சகாரத்தை ஓது முன் ஓதியே
வாரும் அரன்நெறி மன்னியே முன்னில் அத்
தூரும் சுடரொளி தோன்றலு மாமே.

பொழிப்புரை  இருதலைப் படுகின்ற மனத்தை அவ்வாறு இரண்டாதலினின்றும் நீங்க நீங்குங்கள்; நீக்கி, இகரம் ஊர்ந்த சகர எழுத்தை ஓதுங்கள். ஓதி, சிவனது நெறியில் எம்முடன் வாருங்கள்; வந்து அதில் நிலையாக நின்று அவனை நினைத்தால், உம்முள் மறைந்து நிற்கின்ற விளக்கொளி உங்கட்கு வெளிப்படுதல் கூடும்.
==============================================
பாடல் எண் : 09
மினற்குறி யாளனை வேதியர் வேதத்
தனற்குறி யாளனை ஆதிப் பிரானை
நினைக்குறி யாளனை ஞானக் கொழுந்தின்
அனைக்குறி காணில் அரன்நெறி ஆமே.

பொழிப்புரை   பெண்ணாகச் சொல்லப்படுகின்ற சத்தியாகிய நல்ல வடிவினையும், அந்தணர்கள் வேதத்தின்வழி வளர்க்கின்ற அக்கினி யாகிய வடிவினையும், அன்பர்கள் நினையும் நினைவாகிய வடிவினையும் உடைய சிவபெருமானை ஞானத்தின் முடிநிலை யாகிய அந்த வழியாற் காணுதல் உண்டாகுமாயின், அப்பொழுது சிவநெறி கைவந்ததாம்.
==============================================
பாடல் எண் : 10
ஆய்ந்துண ரார்களின் ஆன்மாச் சதுர்பல
வாய்ந்துண ராவகை நின்ற அரன்நெறி
பாய்ந்துணர் வார் அரன் சேவடி கைதொழு
தேய்ந்துணர் செய்வதோர் இன்பமு மாமே.

பொழிப்புரை   உண்மை நூல்களை ஆராய்ந்து உணர மாட்டாதவர் களது, ஏனைய பல திறமைகளும் பொருந்தி உணராதபடி நிற்பது சிவநெறி, அஃது, உண்மை நூல்களில் நுழைந்து அவற்றின் பொருளை உணர்கின்றவர்கள், அவ்வுணர்வின் வழியே சிவனது திருவடியை முதற்கண் அவற்றின் வேறாய் நின்று வழிபட்டுப் பின்னர், அவற்றோடு ஒன்றாய் இயைந்து நுகர்கின்ற இன்பமாய் உள்ளது.
.
==============================================
பாடல் எண் : 11
சைவ சமயத் தனிநா யகன்நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு
தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய
வையத் துளார்க்கு வகுத்துவைத் தானே.

பொழிப்புரை   `சைவ சமயத்தின் ஒப்பற்ற தலைவன்` எனப் பலராலும் அறியப்பட்ட சிவன் ஆன்மாக்கள் உய்தற்பொருட்டு அமைத்த ஞானநெறி ஒன்றே உள்ளது. அது, தெய்வத் தன்மை பொருந்திய சிவநெறியே. உலகத்தில் ஞானத்திற்குத் தகுதியுடையராய் உள்ளார் அதனை அடைந்து உய்தற்கு அந்த ஒன்றையே அவன் அமைத்திருக்கின்றான்.
==============================================
பாடல் எண் : 12
இத்தவம் அத்தவம் என்றிரு பேர்இடும்
பித்தரைக் காணின் நகும்எங்கள் பேர்நந்தி
எத்தவ மாகில்என்! எங்குப் பிறக்கில் என்!
ஒத்துணர் வார்க்கொல்லை ஊர்புக லாமே.

பொழிப்புரை   `இத்தவம், அத்தவம்` என்று தவங்கள் பல இருப்பனபோலச் சுட்டிப் பேசும் பித்தர்களைக் காணும்போதெல்லாம் எங்கள் பெரும்பெருமானாகிய சிவன் நகைப்பான். ஏனெனில், எந்தச் செயலாய் இருந்தால் என்ன? எந்தச் சமயத்தில் பிறந்தால் என்ன? தவத்தையும், அதனால் அடையப்படும் இறைவனையும் சிவநெறி யாளரோடு ஒத்த உணர்வினராய் உணர்பவர்கட்கு விரைவில் வீடு பெறுதல் கூடுவதாகும்.
==============================================
பாடல் எண் : 13
ஆமே பிரான்முகம் ஐந்தொடும் ஆருயிர்க்
காமே பிரானுக் கதோமுகம் ஆறுள
தாமேய் பிரானுக்கும் தன்சிர மாலைக்கும்
நாமேய் பிரானுக்கு நாரியல் பாமே.

பொழிப்புரை  சிவபெருமானுக்குத் தனது நிலைக்கு உரியன வான ஐந்து முகங்களோடு, கீழ்நிலையில் உள்ள உயிர்களுக்கு உரிய அதோமுகமும் உண்டு. இவ்வாறாக உள்ள ஆறுமுகங் கட்கும், அவன் அணிந்திருக்கின்ற தலைமாலைக்கும் உயிர்கள் அச்சத்தைப் பொருந்துகின்ற அப்பெருமானுக்கு அருள் இயல்பாய் உள்ளது.
==============================================
பாடல் எண் : 14
ஆதிப் பிரான் உல கேழும் அளந்தஅவ்
வோதக் கடலும் உயிர்களு மாய்நிற்கும்
பேதிப் பிலாமையின் நின்ற பராசத்தி
ஆதிக்கண் தெய்வமும் அந்தமும் ஆமே.

பொழிப்புரை  முதற் கடவுளாகிய சிவபெருமான், நிலவுலகத் தில் உள்ள ஏழு பொழில்களையும் (தீவுகளையும்) சூழ்ந்த ஏழு கடலாயும், அப்பொழில்களில் வாழ்கின்ற அனைத்து உயிர்களாயும் நிற்பான். அவனின் வேறுபடாநிற்கின்ற சத்தி, ஆக்கல் அழித்தல்களைச் செய்யும் கடவுளரிடத்துப் பொருந்தி அவர்கள் வழியாக அத்தொழில்களை நிகழ்த்துவாள்.
==============================================
பாடல் எண் : 15
ஆய்ந்தறி வார்கள் அமரர்வித் தியாதரர்
ஆய்ந்தறி யாவண்ணம் நின்ற அரன்நெறி
ஆய்ந்தறிந் தேன்அவன் சேவடி கைதொழ
ஆய்ந்தறிந் தேன்இம்மை அம்மை கண்டேனே.

பொழிப்புரை  எல்லாவற்றையும் ஆய்ந்து அறிபவர்களாகிய தேவர்கள், வித்தியாதரர் முதலியோர் ஆய்ந்து அறிய இயலாதவாறு உள்ள சிவனது நெறியை, நான் ஆய்ந்தறிந்தேன். அதன்பின் அச் சிவனது திருவடிகளை வழிபடும் முறைமையையும் ஆய்ந்தறிந்தேன். அதனால், இம்மை அம்மை இரண்டின் இயல்புகளையும் நன்குணர்ந்தேன்.
==============================================
பாடல் எண் : 16
அறியஒண் ணாத உடம்பின் பயனை
அறியஒண் ணாத அறுவகை ஆக்கி
அறியஒண் ணாத அறுவகைக் கோசத்
தறியஒண் ணாததோர் அண்டம் பதிந்ததே.

பொழிப்புரை  அறிதற்கு அரிதாகிய மானுட உடம்பின் பயனை அறிதற்குத் தடையாக ஆறுசமயங்களைப் படைத்து, அறிதற்கு அரிய ஆறு ஆதாரங்களை உடைய உடம்பாகிய பிண்டத்தில், அறிதற்கு அரிதாகிய ஓர் அண்டம் பொருந்தியுள்ளது.

(ஐந்தாம் தந்திரம் – முற்றியது.)
==============================================


மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!