http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Saturday 16 February, 2013

திருமந்திரம்-தந்திரம்08: பதிகம் 21. பர லக்கினம்– பாடல்கள்: 14.




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
 

பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

==============================================
எட்டாம் தந்திரம்:பதிக எண்:01: உடலில் பஞ்சபேதம்..பாடல்கள்: 018 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:02: உடல் விடல்.................பாடல்கள்: 003  
 எட்டாம் தந்திரம்:பதிக எண்:03: அவத்தை பேதம்.............பாடல்கள்: 025 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:04: மத்திய சாக்கிராவத்தை .பாடல்கள்: 016
எட்டாம் தந்திரம்:பதிக எண்:05: அத்துவாக்கள்....................பாடல்கள்: 003 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:06: சுத்த நனவாதி பருவம் .பாடல்கள்: 040
எட்டாம் தந்திரம்:பதிக எண்:07: கேவல சகலசுத்தம்.......பாடல்கள்: 042 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:08: பராவத்தை..........................பாடல்கள்: 026  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:09: முக்குண நிற்குனங்கள்.பாடல்கள்: 001 

எட்டாம் தந்திரம்:பதிக எண்:10: அந்தாதி பேதம்................பாடல்கள்: 002 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:11:பதினொன்றாந்தானமும் `அவத்தை` எனக்காணல் பாடல்கள்:003 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:12:கலவு செலவுகள் – பாடல்கள்:002 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:13: நின்மலாவத்தை. ..........பாடல்கள்: 051 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:14: அறிவுதயம்......................பாடல்கள்: 014 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:15: ஆறந்தம்............................பாடல்கள்: 034  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:16: பதி, பசு, பாசம்...............பாடல்கள்: 020  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:17: அடிதலை அறியும் திறங்கூறல் .பாடல்கள்: 010  

எட்டாம் தந்திரம்:பதிக எண்:18: முக்குற்றம்....................பாடல்கள்: 002   
எட்டாம் தந்திரம்:பதிக எண்:19: முப்பதம்......................பாடல்கள்: 008 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:20: முப்பரம்.......................பாடல்கள்: 007
எட்டாம் தந்திரம்:பதிக எண்:21: பர லக்கணம்............பாடல்கள்: 014  
 
==============================================
 
தந்திரம் 8- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -021
கூடுதல் பாடல்கள்  (327+21=348)
============================================== 
எட்டாம் தந்திரம் - 21. பர லக்கணம் : பாடல்கள்-014

பாடல் எண் : 1
அதீதத்து ளாகி அகன்றவன் நந்தி
அதீதத்து ளாகி அறிவிலன் ஆன்மா
மதிபெற் றிருள் விட்ட மன்னுயிர் ஒன்றாம்
பதியிற் பதியும் பரவுயிர் தானே.

பொழிப்புரை : சிவன் நின்மல துரியாதீதத்தில் ஞேயமாய் வெளிப்பட்டுப் பின்பு அதனையும் நீங்கி நிற்பான். (அஃதாவது, `போக்கியப் பொருளாகாது நிற்பான்` என்றபடி. அவன் போக்கியப் பொருளாதல் பராவத்தைகளிலாம்) அந்நிலையில் உயிர் தற்போதத்தை இழந்து நிற்கும். ஞானத்தைப் பெற்று, அஞ்ஞானத்தினின்றும் நீங்கிய உயிரே, ஒன்றாகிய பதிப்பொருளில் அழுந்தி அதுவாகும். அங்ஙனம் ஆய பொழுது அந்த உயிரே `பரமான்மா` என்னும் பெயரைப் பெறும்.
**********************************************
பாடல் எண் : 2
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பதி
சோதி பரஞ்சுடர் தோன்றித் தோன்றாமையின்
நீதிய தாய்நிற்கும் நீடிய அப்பர
போதம் உணர்ந்தவர் புண்ணியத் தோரே.

பொழிப்புரை :  பதியாகிய பரம்பொருள் தோற்றமும் அழிவும் இல்லாதது. வியாபகமான பேரொளியாயும், அப்பொழுதே உயிர்க்குயிராய்க் கலந்து நிற்கும் மி நுண்ணிய விளக்காயும் உள்ளது. அஃது ஏனைப் பொருள்கள்போல எல்லார்க்கும் இனிது விளங்கித் தோன்றாது, ஒரு சிலர்க்கே விளங்கித் தோன்றுவதாய் நின்றே, கோட்டம் இன்றி, நடுவு நிலையதாயே உள்ளது. காலத்தைக் கடந்ததாகிய அந்தப் பரம் பொருளின் இயல்புகளை உணர்ந்தவர் தவம் செய்தவராவர்.
**********************************************
பாடல் எண் : 3
துரியங் கடந்து துரியாதீ தத்தே
அரிய இயோகங்கொண் டம்பலத் தாடும்
பெரிய பிரானைப் பிரணவக் கூத்தே
தெரியவல் லார்க்குத் துரிசில்லை தானே.

பொழிப்புரை :  யோகாவத்தையில், அனாகதம், விசுத்தி ஆஞ்ஞை, பிரமரந்திரம், துவாதசாந்தம் என்பன முறையே சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்னும் அவத்தைகட்குரிய தானங்க -ளாகும். அவற்றுள் துரியத்தானமாகிய பிரமரந்திரத்தையும் கடந்து, அதீதத் தானமாகிய துவாத சாந்தத்தில், அரிதாகிய அம்பலத்தில் பொருந்தி ஆடுபவன் பெரிய பெருமான்; மகாதேவன் அந் நடனத்தைக் காணுதல் பிரணவ கலைகளின் வழியாகவே கூடும் ஆகையால், அவ்வழியால் அக்கூத்தில் அவனைக் காணவல்லவர்க்கு மலக்குற்றங்கள் இல்லையாகும்.
**********************************************
பாடல் எண் : 4
செம்மைமுன் னிற்பச் சுவேதம் திரிதல்போல்
அம்மெய்ப் பரத்தோ(டு) அணுவன் உள்ளாயிடப்
பொய்ம்மைச் சகம்உண்ட போத வெறும் பாழில்
செம்மைச் சிவமேரு சேர்கொடி யாகுமே.

பொழிப்புரை :  மாணிக்க மணியின் செந்நிறம் முன் வந்து நின்ற போது, பளிங்கின் வெண்ணிறம் அந்தச் செந்நிறமாகவே திரிந்து காணப்படுதல் போல, வெளிப்பட்டு நின்ற அந்த நிலையான பரம்பொருள் முன்வந்து நின்றபொழுது ஆன்மாத் தன்வண்ணம் அப்பரம்பொருள் வண்ணமேயாக, அதனுள் அடங்கி நிற்கும் அப்பொழுது அதுகாறும் நிலையற்ற பிரபஞ்சத்தை நுகர்ந்து வந்த ஆன்ம ஞானம் பாச ஞானமாய் இருந்த நிலை அற்றொழியும். அவ்வொழிவில் சிவம் மேரு மலையாய் நிற்க. ஆன்மா அந்த மேருமலையை அடுத்த காக்கையாய் இருக்கும்.
**********************************************
பாடல் எண் : 5
வைச்ச கலாதி வருதத் துவம்கெட
வெச்ச இருமாயை வேறாக வேரறுத்(து)
உச்ச பரசிவ மாம்உண்மை ஒன்றவே
அச்சம் அறுத்தென்னை ஆண்டனன் நந்தியே.

பொழிப்புரை :  எனக்குக் குருவாகிய நந்திபெருமான் சிவபெருமானால் எனக்கென என்னோடு கூட்டி வைத்த கலை முதல் நிலம் ஈறாக வருகின்ற தத்துவங்கள் எல்லாம் தம்தன்மை கெட்டுச் சிவகரணங்களாகும் படியும், பின்பு அத்தத்துவங்கட்கு முதலாகிய அசுத்தமாயை. அதன் காரியங்களைச் செலுத்தி நிற்கின்ற கருவிகட்கு முதலாகிய சுத்தமாயை ஆகிய துன்பத்தைத் தரும் இருமாயைகளும் என்னைப் பொறுத்த மட்டில் காரண மாதற்றன்மை அடியோடு கெடும்படியும் செய்து, அதனால், யான் தடத்தசிவத்திற்கு மேலேயுள்ள சொரூபசிவத்தைத் தலைப்படும்படி. `இனியும் பிறவி வருமோ` என்னும் அச்சம் நிகழாதவாறு என்னை ஆட்கொண்டருளினார்.
**********************************************
பாடல் எண் : 6
என்னை யறிய இசைவித்த என்நந்தி
என்னை யறிவித்(து) அறி யாத இடத்துய்த்துப்
பின்னை ஒளியில் சொருபம் புறப்படத்
தன்னை யளித்தனன் தற்பர மாகவே.

பொழிப்புரை :  எனக்குக் குருவாகிய நந்திபெருமான், முதலில் என்னை யான் அறியுமாறு அறிவித்தருளினார். (கருவிக் கூட்டத்தினின்றும் என்னை வேறாக யான் உணரும்படி செய்தார்.) அதனால், என்னை யான் அறிந்தபின்பு, என்னையான் அறியாது நிற்கின்ற ஓர் இடத்திலே என்னைச் செலுத்தினார். (சிவபோத மிகுதியால் சீவ போதம் தோன்றாது நிற்கின்ற திருவருள் நிலையிலே செலுத்தினார்.) பின்னர் அங்ஙனம் நின்ற அந்த ஒளியினாலே அவ்வொளிக்கு முதலாகிய பொருள் புலப்பட்டது. புலப்பட்டபின் யான் அந்த மேலான பொருளே ஆகும்படி அதனை என் கைக்குள் வருமாறு அளித்தார்.
**********************************************
பாடல் எண் : 7
பரந்தும் சுருங்கியும் பார் புனல் வாயு
நிரந்த வெளியொடு ஞாயிறு திங்கள்
அரந்தம் அரன்நெறி யாய் அவை யாகித்
தரந்த விசும்பொன்று தாங்கிநின் றானே.

பொழிப்புரை :  சிவன்,
``நிலம், நீர், நெருப்பு, உயிர், நீள் விசும்பு, நிலாப், பகலோன்,
புலனாய மைந்தனோடு எண்வகையாய்ப் புணர்ந்து நின்றான்``.. எனவும்,
``இருநிலனாய்த், தீயாகி, நீரு மாகி,
இயமான னாய், எறியும் காற்றா மாகி,
அருநிலைய திங்களாய், ஞாயி றாகி,
ஆகாச மாய் அட்ட மூர்த்தி யாகி  ......... எம்மடிகள் நின்ற வாறே``l
எனவும் அருளிச் செய்தவாறு, ஐம்பெரும்பூதங்களும், `ஞாயிறு` திங்கள், என்னும் இரு சுடர்களும், ஆன்மாவும் ஆகிய எட்டினையும் தனக்குத் திருமேனியாகும்படி அவைகளில் வேறின்றிக் கலந்து நிற்கின்றான்.
**********************************************
பாடல் எண் : 8
சத்தின் நிலையினில் தானான சத்தியும்
தத்பரை யாய்நிற்கும் தான்ஆம் பரற்குடல்
உய்த்தகும் இச்சையில் ஞானாதி பேதமாய்
நித்தம் நடத்தும் நடிக்கும் மா நேயத்தே.

பொழிப்புரை :  `தத்` பதப் பொருளாகிய சிவன், தனது உண்மை நிலையில் உள்ள பொழுது அவனின் வேறாகாது அவனோடு ஒன்றாகியே நிற்கும் சத்தியும், `பரை` என நிற்கும். அஃதாவது யாதொன்றனையும் பற்றாது, தான் தனியே மேலானதாய் நிற்கும் என்பதாம். ``சத்தியும்`` என்னும் உம்மையால், சத்தியையுடைய சத்திமானாகிய சிவனும் அப்பொழுது `பரன்` என நிற்றல் பெறப்பட்டது. `பரசிவனாய் நிற்பன்` என்க. அந்தச் சத்தியே சிவனுக்கு வடிவம். என்றது, `சிவம் சத்தியே மயமானது` என்றபடி. இனி அந்தச் சத்தி, அருள் காரணமாக உயிர்களின் பொருட்டு ஐந்தொழிலாகிய நாடகத்தை மேற்கொண்டு செய்யும் பொழுது, தன்னிச்சையாகவே இச்சை, ஞானம், கிரியை முதலிய வகைகளாய்ப் பலவாகி, அவ்வைந் தொழிலை இடையறாது நடத்தும்.
**********************************************
பாடல் எண் : 9
மேலொடுகீழ் பக்கம்மெய் வாய்கண்ணா நாசிகள்
பாலிய விந்து பரஉட் பரையாகக்
கோலிய நான்கவை ஞானம் கொணர்வித்துச்
சீலமி லாஅணுச் செய்திய தாகுமே.

பொழிப்புரை :  முன் மந்திரத்தில் கூறிய சத்தி மேல், கீழ், புடை என்னும் இடங்களையும், மெய், வாய், கண், நா, மூக்கு என்னும் ஐம்பொறிகளையும், விந்து, நாதம், பர நாதம் என்னும் வாக்குகளையும், அவைகட்குப் பற்றுக்கோடாய் நின்று அவற்றின் பெயர்களையே தாமும் பெற்று நிற்கின்ற சுத்த தத்துவங்களையும் இங்ஙனம் பாகுபட்ட பல பொருள்களை உண்டாக்கி அவற்றால் எல்லாம் சரியை முதலிய நான்கினாலும் ஞானத்தை வருவித்து, இவ்வாறெல்லாம் அஞ்ஞானத்திற் கிடக்கின்ற உயிர்களை ஈடேற்றுதலாகிய செயல்களை உடையதாய் நிற்கும்.
**********************************************
பாடல் எண் : 10
வேறாம் அதன்தன்மை மேலும்இக் காயத்தில்
ஆறாம் உபாதி அனைத்தாகும் தத்துவம்
பேறாம் பரவொளி தூண்டும் பிரகாசமா
ஊறா உயிர்த்துண் டுறங்கிடும் மாயையே.

பொழிப்புரை : முன் மந்திரத்தில், `அணு` எனக் கூறப்பட்ட உயிரின் தன்மை தனியானது. ஆகவே, காணப்படாது நிற்கின்ற அந்த உயிருக்குக் காணப்படுகின்ற இந்த உடம்பில் உள்ள ஆறு அத்துவாக்களும் உபாதிகளேயாம். அஃதாவது, அதனை மாசு படுத்துகின்ற வேற்றுப் பொருள்களேயாம். அதனால், முப்பத்தாறு தத்துவங்களும் உயிர் தான் பெறுதற்குரிய மேலான ஒளியை அடைதற்குத் தூண்டு கின்ற சிறிய ஒளியாய் உதவுவதால், மாயையாலே உயிர் உறுதல், உயிர்த்தல், உண்டல் முதலியவைகளைச் செய்து, பின் அதிலிருந்து நீங்கியும் நிற்கும்.
**********************************************
பாடல் எண் : 11
தற்பரம் மன்னும் தனிமுதற் பேரொளி
சிற்பரந் தானே செகம்உண்ணும் போதமும்
தொற்பதந் தீர்பாழில் சுந்தரச் சோதிபுக்(கு)
அப்புறம் அற்றதிங் கொப்பில்லை தானே.

பொழிப்புரை :  `தத்` பதப் பொருளாகிய பதி, தன்னிலையில், நிலையான ஒப்பற்ற, முதன்மை வாய்ந்த பேரறிவே எனினும், அதுவே உயிர்களை நோக்கி இயங்கும் பொதுநிலையில் உயிர்களை உலகத்தை நுகரும்படி செய்கின்ற பாச அறிவாய் நிற்கும். (`திரோதான சத்தியாய் நிற்கும்` என்றாம். ) அந்தப் பாச அறிவால் உயிர் உலகத்தை நுகர்ந்து வருங்காலத்தில் அந்தப் பாச அறிவும், அதன் அறிவாகிய பசு அறிவும் நீங்கப் பெற்ற பொழுது, முன்சொன்ன பேரொளியிற்கலந்து, அதற்கு அப்பாலும்போய், முன்னை நிலையெல்லாம் நீங்கப்பெற்று நிற்கும். அப்பொழுது அதற்கு ஒத்ததும், உயர்ந்ததும் இல்லாத ஓர் உயர்வை அஃது அடையும்.
**********************************************
பாடல் எண் : 12
பண்டை மறைகள் பரவான் உடல் என்னும்
துண்ட மதியோன் துரியாதீ தன் தன்னைக்
கண்ட பரனும்அக் காரணோ பாதிக்கே
மிண்டின் அவன்சுத்த னாகான் வினவிலே.

பொழிப்புரை :  முதல் நூல்களாகிய வேதாகமங்கள், சில இடங்களில் சுத்த மாயையை, `சிவனுக்குத் திருமேனி` எனக் கூறும். அஃது உபசாரமே.
[``சுத்ததத் துவம் சிவன்றன் சுதந்திர வடிவ மாகும்;
நித்தம்என் றுரைப்பர் காலம் நீங்கிய நிலைமை யாலே``*
என்னும் சிவஞான சித்தியையும், அதன் உரையையும் காண்க.] ஏனெனில், சிவன் துரியத்தையும் கடந்து அதீதமூர்த்தி. (நின்மல துரியம் வரையிலே சுத்தமாயை உள்ளது) தத்துவசுத்தி, ஆன்மரூபம் ஆகியவற்றைக் கடந்து ஆன்ம தரிசனத்தைப் பெற்ற ஆன்மாவும் சிவ தரிசன சிவயோகங்களால் ஆன்ம சுத்தியை எய்தாது, காரணோபாதியாகிய சுத்தமாயையில் இருப்பானாயின் அவனது நிலையை நன்கு ஆராயுமிடத்து அவன் தூய்மை எய்தியவன் ஆகான்.
**********************************************
பாடல் எண் : 13
வெளி கால் கனல் அப்பு மேவுமண் நின்ற(து)
அளியா கியதற் பரங்காண் அவன்றான்
வெளி கால் கனல் அப்பு மேவுமண் நின்ற
வெளியாய சத்தி அவன்வடி வாமே.

பொழிப்புரை :  `மாயா காரியமாகிய உலகப்பொருள் அனைத்திலுமே பரமசிவன் அருள் காரணமாக நிறைந்திருக்கின்றான்` என வேதாகமங்கள் கூறும். அவ்வாறு கூறுவதற்கும், `அவனது சத்தியே அவ்வாறு நிறைந்துள்ளது` என்பதே கருத்து. பூதாகாயம் ஏனைப் பூதங்களில் எல்லாம் நிறைந்திருத்தல் போல அனைத்துலகங் களிலும் நிறைந்திருத்தல் பற்றி அச்சத்தி, `பரவெளி - பராகாயம்` எனக் கூறப் படுகின்றது. அந்தச்சத்தியே, உண்மையில் பரமனுக்கு திருமேனியாகும்.
**********************************************
பாடல் எண் : 14
மேருவி னோடே விரிகதிர் மண்டிலம்
ஆர நினையும் அருந்தவ யோகிக்குச்
சீர்தவம் செய்யின் சிவனருள் தானாகும்
பேரவும் வேண்டா பிறிதில்லை தானே.

பொழிப்புரை :  இடைகலை பிங்கலைகளை, `சந்திர சூரியர் வழி` எனக் கூறுதலால், அவ்வழியாக இயங்கும் பிராண வாயும் வலம் வரும் சுழுமுனை நாடியை, `மகாமேரு` என்றலும், அந்தச் சுழுமுனை நாடியின் நடுப்பாகமாகிய அநாகத விசுத்தி ஆதாரங்களை, `சூரிய மண்டலம்` என்றலும் யோக நூல் வழக்கு. அனாகதமாகிய இருதயம் பூசைத் தானமாகக் கொள்ளப்படும். அதனால், சுழுமுனை வழியாகச் சென்று இருதயத்தில் சிவபெருமானை நன்றாக நினைந்து வழிபடு பவனை, `மேருவினோடே சென்று விரிகதிர் மண்டிலத்தில் (சிவனை) ஆரநினையும் அருந்தவயோகி` (`சென்று`) என ஒரு சொல் வருவித்து, `விரிகதிர் மண்டிலத்தில்` என உருபு விரித்து கொள்க.) ``செய்யின்`` என்பது `செய்வதனால்` எனப் பொருள்தந்து நின்றது. ஆகவே, `அந்த அருந்தவ யோகிக்குச் சிவனருள் தானாகவே கிடைக்கும்` என்றும், `அவன் கைக்கொள்ள வேண்டிய சாதனம் வேறொன்றும் இல்லை யாகையால் அந்நெறியைவிட்டு அவன் விலகுதல் வேண்டா` என்றும் கூறினார்.
**********************************************
மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!