http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Tuesday 30 October, 2012

திருமந்திரம்-தந்திரம்07: பதிகம் எண் :07 & 08 . சிவலிங்கம், சம்பிரதாயம் -பாடல்கள்:005 & 014.




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

==============================================
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:01: ஆறாதாரம்..............பாடல்கள்: 008
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:02: அண்டலிங்கம்........பாடல்கள்: 014
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:03: பிண்டலிங்கம்........பாடல்கள்: 004 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:04: சதாசிவலிங்கம்.....பாடல்கள்: 023
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:05: ஆத்மலிங்கம்.........பாடல்கள்: 010 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:06: ஞான லிங்கம்.........பாடல்கள்: 010
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:07: சிவலிங்கம்.............பாடல்கள்: 005 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:08: சம்பிரதாயம்..........பாடல்கள்: 014
============================================== 
தந்திரம் 6- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -008
கூடுதல் பாடல்கள்  (069+005+014 =088)
==============================================
ஏழாம் தந்திரம் - 7. சிவலிங்கம் – பாடல்கள் 005
பாடல் எண் : 1
குரைக்கின்ற வாரிக் குவலயம் நீரும்
பரக்கின்ற காற்றும் பயில்கின்ற தீயும்
நிரைக்கின்ற வானிவை நீண்டகன் றானை
வரைத்து வலம்செயு மாறறி யேனே.

பொழிப்புரை :  ஒலிக்கின்ற கடலை ஆடையாக உடைய நிலவட்டம், நீர், பல செயல்கட்கும் பயன்பட்டு நிற்கின்ற நெருப்பு, எங்கும் பரந்து செல்கின்ற காற்று, அனைத் தையும் தன்னுள் முறைப்பட அடக்கி நிற்கின்ற வானம் இவை அனைத்துமாய் அவற்றில் நிறைந்து நிற்கும் வகையில் உயர்ந்து சென்று, முடிவில் வானத்தையும் கடந்து உயர்ந்தோனாகிய சிவனையான் உய்திபெறுதற்கு, `ஒரு சிறுவடிவினனாகக் கண்டு வலம்வருதல் முதலியவகையால் வழிபடுதல் எவ்வாறென அறிகின்றிலேன்.
=======================================
பாடல் எண் : 2
வரைத்து வலஞ்செயு மாறிங்கொன் றுண்டு
நிரைத்து வருகங்கை நீர்மலர் ஏந்தி
உரைத்தவன் நாமம் உணரவல் லார்க்குப்
புரைத்தெங்கும் போகான் புரிசடை யானே.

பொழிப்புரை :  மேற்கூறியவாறு நீண்டகன்று வரம்பிலனாகிய சிவனை வரம்புட்படுத்து வழிபடும் வழி ஒன்று இந்நிலவுலகில் உண்டு. அஃது யாதெனின், அலைகளை வரிசையாக்கி அதனாலே கரையை அடைகின்ற கங்கையாற்றின் நீரையும், பூக்களையும் கையிலே கொண்டு, அவனது பெயர்கள் பலவற்றையும் சொல்லி ஆட்டியும், சாத்தியும் வழிபட்டு அவனை அங்ஙனம் வழிபடப்பட்ட அவ்வடிவத்தில் வைத்து உணர்தலேயாகும். அங்ஙனம் உணரவல்லார் உளராயின் அவ்வடிவைப் பொள்ளல் செய்து அதனை விட்டு அவன் வேறு எங்கும் போய்விட மாட்டான்.
=======================================
பாடல் எண் : 3
ஒன்றெனக் கண்டேன்எம் ஈசன் ஒருவனை
நன்றென் றடியிணை நான்அவ னைத்தொழ
வென்றைம் புலனும் மிகக்கிடந் தின்புற
அன்றென் றருள்செயும் ஆதிப் பிரானே.

பொழிப்புரை :  `சிவபிரான் ஒருவனே ஒப்பற்ற தனிமுதற்பொருள்` என நான் உணர்ந்தேன். அதனால் `அவனை மேற்கூறியவாற்றால் `வழிபடுதல் ஒன்றே நன்னெறி` என உணர்ந்து வழிபடுந்தோறும் வழி படுந்தோறும் அவன் தனது பேரின்ப வெள்ளம் எனது ஐம்புலன்களில் அடங்காததாய் மிக்கெழுந்து என்பால் விளையப் பண்ணுதலை அப்பொழுது அப்பொழுதே செய்கின்றான்.
=======================================
பாடல் எண் : 4
மலர்ந்த அயன்மால் உருத்திரன் ஈசன்
பலந்தரும் ஐம்முகன் பரவிந்து நாதம்
நலந்தரும் சத்தி சிவன்வடி வாகிப்
பலந்தரும் லிங்கம் பராநந்தி யாமே.

பொழிப்புரை :  சிவன் தனது தடத்த நிலையில் `அயன், மால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன், சத்தி, சிவன், விந்து, நாதம் - என்னும் ஒன்பது நிலைகளில் நின்று உயிர்கட்கு அவன் நிலைகேற்ற பயனைத் தருவன் ஆகலின் அவை அனைத்துக்கும் பொதுக் குறியாவது இலிங்கத் திருமேனியே. அதனால் அதனைப் பராசத்தியோடே நிற்கும் பரசிவனாகிய சொரூப சிவனது குறியாகவும் உணர்ந்து வழிபடல் வேண்டும்.
=======================================
பாடல் எண் : 5
மேவி யெழுகின்ற செஞ்சுட ரூடுசென்(று)
ஆவி யெழுமள வன்றே உடல்உற
மேவப் படுவதும் விட்டு நிகழ்வதும்
பாவித் தடக்கிற் பரகதி தானே.

பொழிப்புரை :  உயிரை உடம்பில் நிறுத்திச் செயற்பட்ச் செய்ய எழுந்த விருப்பத்தால் கீழ்நோக்கிக் கிடந்தும் மேல் நோக்கி எழுந்தும் விளங்குகின்ற குண்டலினி சத்தியோடு உயிர் பொருந்தி செயற்படும் வரையிலுமே உடல் நிலைபெற்றிருக்கும். அச்செயற்பாடு நின்றவுடன் உடல் நீங்கிவிடும். ஆகவே, உடல் உள்ளவரையும் உள்ளே விரும்பி ஈர்க்கப்படுவதும், வெளியே விடப்படுவதால் நீங்கிச் செல்வதும் ஆகிய மூச்சுக் காற்றினை அவ்வாற்றின் அடக்கி நடுநாடி வழியே செலுத்து மாற்றால் இதுகாறும் கூறிவந்த அண்டலிங்கம் முதலிய அனைத்து இலிங்கங்களிலும் சிவனைப் பாவனை செய்து வழிபட்டால் மேலானகதி கிடைப்பதாகும்.
=======================================
ஏழாம் தந்திரம் - 8. சம்பிரதாயம்பாடல்கள் 014
பாடல் எண் : 1
உடல்பொருள் ஆவி உதகத்தால் கொண்டு
படர்வினைப் பற்றறப் பார்த்துக் கைவைத்து
நொடியின் அடிவைத்து நுண்ணுணர் வாங்கிக்
கடிய பிறப்பறக் காட்டினன் நந்தியே.

பொழிப்புரை :  எம் அருட்குரவராகிய நந்திபெருமான் எம் உடல், பொருள், ஆவி என்பவற்றை யாம் நீர் வார்த்து ஒப்புக் கொடுக்கச் செய்து அவை முழுவதையும் தம்முடையனவாக ஏற்றுக்கொண்டு, அதனால் விரிந்து கிடந்த எமது வினைப்பரப்பு முழுவதையும் ஒரு நொடியில் பற்றற்றொழியப்பண்ணி, அதன்பின் தமது திருக்கையை எம் தலைமேல் வைத்துத் தீண்டிப் பின்னும் தமது திருவடிகளை எம் தலைமேற் சூட்டி, இவ்வாற்றால் யாராலும் உரைப்படாதவற்றை யெல்லாம் உணரும் பேரறிவை எமக்குத் தந்து, வலிமை வாய்ந்த பிறவித் தொடக்கு அற்றொழியும்படி அருள்புரிந்தார்.
=======================================
பாடல் எண் : 2
உயிரும் சரீரமும் ஒண்பொரு ளான
வியலார் பரமும்பின் மேவும் பிராணன்
செயலார் சிவமும்சிற் சத்திஆ திக்கே
உயலார் குருபரன் உய்யக்கொண் டானே.

பொழிப்புரை :  சிவனை அடைய வேண்டினார்க்கு உடல் பொருள், ஆவிகளை அவனுடையனவாக ஒப்புவித்த பின்பும் மூச்சுக் காற்றினை இயக்கம் இடைவிடாது இயங்கியே நிற்கும் ஆதலின் அதுவும் அவர்கட்குச் சுமையாகும். அதனால், அதனையும் `ஆசிவன், ஆதிசத்தி` என்பவர்க்கு உரியன ஆகும்படி சிவகுரு நீர்வார்த்துக் கொடுக்கச் செய்து ஏற்றுக் கொள்வார்.
=======================================
பாடல் எண் : 3
பச்சிம திக்கிலே வைச்சஆ சாரியன்
நிச்சலும் என்னை நினை`என்ற அப்பொருள்
உச்சிக்குக் கீழது உள்நாக்கு மேலது
வைச்ச பதம்இது வாய்திற வாதே.

பொழிப்புரை :  தான் வடக்கு நோக்கி அமர்ந்திருந்து, என்னைக் கிழக்கு நோக்கிச் சிவனை தியானித்து இருக்கும்படி பணித்த என் ஞானாசிரியர், பின்பு, `சிவன் உன் சிந்தனைக்கு அகப்படவில்லை யாகையால் நீ என்னையே சிவனாகத் தியானம்செய்` என்று அருளிச்செய்தார். அவர் அங்ஙனம் அருளிச்செய்த அந்தத் தியானம் எனது உச்சிக்குக் கீழும், உள்நாக்கிற்கும் மேலும் ஆகிய புருவ நடுவில் நிகழ்வது. அவ்விடத்து நிகழ்வதாகிய அந்தத் தியானமானது சொல் நிகழ்ச்சியோடு கூடாது, மனத்தொழில் மாத்திரையாய் நிற்பதாகும்.
=======================================
பாடல் எண் : 4
பெட்டடித் தெங்கும் பிதற்றித் திரிவேனை
ஒட்டடித் துள்ளமார் மாசெலாம் வாங்கிப்பின்
தட்டொக்க மாறினன் தன்னையும் என்னையும்
வட்டம தொத்தது வாணிபம் வாய்த்ததே.

பொழிப்புரை :  `இவ்விடம், அவ்விடம்` என்பதில்லாமல் எங்கும் சென்று, எனது பிடிவாதக் கொள்கையையே வலிந்து கூறி வாயில் வந்தவற்றைப் பிதற்றிக் கொண்டு திரிந்து கொண்டிருந்த என்னைச் சிவகுரு எதிர்ப்பட்டு, எனது அகக்குற்றங்கள் எல்லாவற்றையும் ஒட்டடையை அடித்து நீக்குவது போல நீக்கி, அவைகளைத் தன் பக்கமாக எடுத்துக்கொண்டு, தன்னையும், என்னையும் ஒரு நிகராக வைத்துக் கொடுத்தும், கொண்டும் மாற்றிக்கொண்டான். என்னிடம் உள்ள குற்றங்களை முற்ற நீக்கினமையால், நாங்கள் இருவரும் ஒத்த வினையுடைய பொருளாயினோம். அதனால் கொடுத்துக் கொள்ளும் வாணிபம் தடையின்றி முடிந்தது.
=======================================
பாடல் எண் : 5
தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாம் தலைவன்
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
பிரிக்கின்ற விந்துப் பிணக்கறுத் தெல்லாம்
கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண்ட டேனே.

பொழிப்புரை :  உலகத்தார் உலக உணர்வைத் தருகின்ற நாதத்தின் புறப்போக்கினை நீக்கமாட்டாமையால் தன்னால் தாங்கப்படுகின்ற அனைத்துயிர்கட்கும் தலைவனாய் அவற்றின் உள்ளும் புறம்புமாய் உள்ள இறைவனது இருப்பையும், அவனது பெருந் தன்மையையும் சிறிதும் உணராது அல்லற்படுவர். யான் அவன் வந்து உண்மையை உணர்ந்தமையால் அந்த நாதத்தின் மாறுபாடாகிய புறநோக்கைப் போக்கி அவனது அருளையே கண்ணாகக் கொண்டு காணும் அக நோக்கினை எய்தினமையால் அவனது இருப்பையும், இயல்பையும் நன்கு உணர்ந்து கொண்டேன்.
=======================================
பாடல் எண் : 6
கூடும் உடல்பொருள் ஆவிக் குறிக்கொண்டு
நாடி அடிவைத் தருள்ஞான சத்தியால்
பாடல் உடலினிற் பற்றற நீக்கியே
கூடியே தான்அவ னாம்குறிக் கொண்டே.

பொழிப்புரை :  சிவன் தன்னை அடையும் செவ்வி வாய்ந்த உயிரையும், அதனது உடல் பொருள்களையும் தன்னுடையனவாக ஏற்றுக்கொள்ளுதலையே குறிக்கோளாகக் கொண்டு, அவ்வுயிர் வாழும் இடத்தை நாடி அடைந்து, தனது திருவடிகளை அதனது திருவடிகளை அதனது முடிமேற் சூட்டி, அதன்பின் வழங்கிய ஞானத்தின் துணையால் அவ்வுயிர் இழிவுடைய உடலில் முன்பு கொண்டிருந்த பற்றை அறவே விடுத்து, அச்சிவன் ஒருவனையே குறிக்களோகக் கொண்டு அவனை அடைந்து, தான் அவனேயாகிவிடும்.
=======================================
பாடல் எண் : 7
கொண்டான் அடியேன் அடிமை குறிக்கொள்ள
கொண்டான் உயிர்பொருள் காயக் குழாத்தினை
கொண்டான் பலம்முற்றும் தந்தவன் கோடலால்
கொண்டான் எனஒன்றும் கூறகி லேனே.

பொழிப்புரை :  சிவன், யான் அவனுக்கு அடிமையாதலை உண்மையாக உணரும்படி அவன் நேர் வந்து என்னை ஆட் கொண்டான். அதனால் என் ஆவி, உடல், பொருள் அனைத்தையும் தன்னுடையனவாக ஏன்று கொண்டான். அவையேயன்றி, யான் செய்யும் செயலால் விளையும் பயனையும் தன்னுடையனவாகக் கொண்டான். இங்ஙனம் அவைகளை அவன் கொண்டது புதிதாகாது முன்பே அவன் என்பால் கொடுத்து வைத்தவறஅறைத் திரும்பப் பெற்றுக்கொண்டதே யாகலின், என்னுடையவைகளை அவன் கொண்டு போய்விட்டான்` என்று யான் எங்ஙனம் முறையிட முடியும்? முடியாது ஆகையால் யான் பேசாதிருந்துவிட்டேன்.
=======================================
பாடல் எண் : 8
குறிக்கின்ற தேகமும் தேகியும் கூடில்
நெறிக்கும் பிராணன் நிலைபெற்ற சீவன்
பறிக்கின்ற காயத்தைப் பற்றிய நேர்மை
பிறிக்க அறியாதார் பேயுடன் ஒப்பரே.

பொழிப்புரை : வினைக்கீடாகக் குறிக்கப்பட்ட உடம்பும், அவ்வுடம்பைத் தன்னுடைய தாகக் கொள்ளும் உயிரும் ஒன்று சேர்ந்தவுடன், பிராணவாயுவும் நெறிப்பட்டு இயங்கத் தொடங்கும். (அங்ஙனம் இயங்குதல் உயிர் அவ்வுடம்பில் நிலைத்திருத்தற்குத் துணையாகவேயாம்) ஆகவே, அந்தப் பிராணவாயுவின் இயக்கத்தால் அந்த உடம்பில் நிலைபெற்றிருக்கின்ற அந்த உயிரிடமிருந்து அந்த உடம்பு ஒருகாலத்தில் பறிக்கவே படும். அதனால், உயிர் உடம்பின் வேறாயினும், அஃது அதனைப் பற்றி நிற்றற்குரிய காரணத்தை உணர்ந்து அவ்வுணர்வால், தம்மை உடம்பின் வேறாக உணராது, உடம்பாகவே மயங்கி உலக வாழ்வில் இச்சை கொண்டு அலைபவர் பேயோடு ஒப்பர்.
=======================================
பாடல் எண் : 9
உணர்வுடை யார்கட் குலகமும் தோன்றும்
உணர்வுடை யார்கட் குறுதுய ரில்லை
உணர்வுடை யார்கள் உணர்ந்தஅக் காலம்
உணர்வுட யார்கள் உணர்ந்துகண் டாரே.

பொழிப்புரை :  குருவருளால் ஞானத்தை உணர்வாட்கு உலகத்தின் இயல்பும் தோன்றும். (உம்மையால், உலகத்தைச் செயற்படுத்தி நிற்கின்ற முதல்வனது இயல்பும் தோன்றும்) ஆகவே, உலகத்தைப் பற்றாது விடுத்து முதல்வனையே பற்றி நிற்பர் ஆகையால் அவர்கட்கு உலகத்தால் இழைக்கப்படும் துன்பம் இல்லையாகும். (முதல்வனால் தரப்படும் இன்பமே விளயும்.) குருவருளால் ஞானம் பெற்றவர்கள் அதனை முதற்கண் கேள்வியளவாகவே உணர்ந்தாராயினும், பின்பு சிந்தித்துத் தெளிந்து கொள்வார்கள்.
=======================================
பாடல் எண் : 10
காயப் பரத்தின் அலைந்து துரியத்துச்
சால விரிந்து குவிந்து சகலத்தில்
ஆயஅவ் ஆறா றடைந்து திரிந்தேற்குத்
தூய அருள்தந்த நந்திக்கென் சொல்வதே.

பொழிப்புரை :  உடம்பாகிய சுமையைச் சுமந்து கொண்டே உலகெங்கும் திரிந்து, அவ்வுடம்பால் துரிய நிலையில் உணர்வு ஒடுங்கியும், சகல நிலையில் உணர்வு மிகவிரிந்தும் கருவிகள் முப்பத்தாறின் சேர்க்கையால் இவ்வாறெல்லாம் அலமந்து கிடந்த அடியேனுக்கு அக்கருவிகளில் ஒன்றோடும் படாது தூய்தாய் உள்ள திருவருளை வழங்கி அமைதியைக் கொடுத்தருளிய நந்தி பெருமானது கருணைக்கு நான் நன்று சொல்வது எவ்வாறு!
=======================================
பாடல் எண் : 11
நானென நீயென வேறில்லை நண்ணுதல்
ஊனென ஊனுயி ரென்ன உடன்நின்று
வானென வானவர் நின்று மனிதர்கள்
தேனென இன்பம் திளைக்கின்ற வாறே.

பொழிப்புரை :  குருவருளால் ஞானத்தைப் பெற்ற சகல வர்க்கத்தினர் பின்பு சிவன் ஆகாயம் போல வியாபகனாய் விளங்குதலை உணர்ந்து அதனால் சுட்டறிவை விட்டு எங்கும் வியாபகமாய் அவனை உணருமாற்றால் தேன் சுவையை நுகர்தல்போல அவனது தூய இன்பத்தை நுகருங்கால் அந்தச் சிவன் இவர்கட்குக் காட்சிப் படுதல், `நான் இன்பத்தைத் தருகின்றாய்` என இவ்வாறு வேறு நின்று நுகருமாறு அவன் இவரின் வேறாய் நிற்றல் அன்று. மற்று, இவர் உடம்பு போலவும், அவன் அவ்வுடம்பினுள் உள்ள உயிர் போலவும் உடனாய் நிற்கவேயாம்.
=======================================
பாடல் எண் : 12
அவனும் அவனும் அவனை அறியார்
அவனை அறியில் அறிவானும் இல்லை
அவனும் அவனும் அவனை அறியில்
அவனும் அவனும் அவன்இவன் ஆமே.

பொழிப்புரை :  உயிர்க்கு உறுதியறியாமை பற்றி மெய்ந்நெறியாளனால் `அவன்` என அயலவனாகக் குறிக்கப்படுபவனும், தன்போன்றாரால் அடையலாகாத மேல் நிலையை அடைந்தமை பற்றி உலகியலாளனால் `அவன்` என உயர்த்துக் கூறப்படும் மெய்ந்நெறியாளனும் ஆகிய இருவருமே சிவனை அறிந்திலர், அஃது எவ்வா றெனில், சிவனை ஆன்மா உண்மையாகவே அறிவுமாயின் அதன் அறிவில், அறிபவனும், (உம்மையால் அறியும் அறிவும்) இல்லையாகும். (மேற்கூறிய இருவர் அறிவிலும் அறிபவராகிய தம்மை அறியும் `யான்` என்னும், தமது அறிவை அறிகின்ற `எனது` என்னும் அறிவும் இருத்தலால் அவர் சிவனை அறிந்தாராதல் எங்ஙனம்?) அவ்விருவரும் `யான், எனது` என்பன முற்றும் அறும்படி சிவனை அறிந்தாராயின் அவருள் ஒவ்வொருவனும் ஒவ்வொரு காரணம் பற்றி மற்றவனை, `அவன்` என வேற்று நிலையில் வைத்து எண்ணும் நிலைநீங்கி, `இவன்` என ஒருநிலையில் வைத்து எண்ணும் நிலை உண்டாய் விடும்.
=======================================
பாடல் எண் : 13
நான்இது தான்என நின்றவன் நாடொறும்
ஊன்இது தான்உயிர் போல்உணர் வான்உளன்
வான்இரு மாமழை போற்பொழி வான்உளன்
நான்இது வாம்பரன் நாதனும் ஆமே.

பொழிப்புரை :  உயிர் என்றும் உடம்பு போல இருக்க அதன்கண் உயிர்போல நின்று அறிகின்ற ஒருவன் இருக்கின்றான். அவன், `இவ்வுயிர் நானே` எனத் திருவுளம் செய்து, அவ்வுயிரின் உள்ளத்தில் தனது கருணையை வானத்தில் உள்ள கரிய, பெரிய மேகம் மழையைப் பொழிவது போலப் பொழிவான். `இவ்வுயிர் யான்` எனத் திருவுளம் செய்கின்ற அவன் குருவுமாய் வந்து அருள்பவனாவான்.
=======================================
பாடல் எண் : 14
பெருந்தன்மைத் தான்என யான்என வேறாய்
இருந்ததும் இல்லைஅ தீசன் அறியும்
பொருந்தும் உடல்உயிர்போல் உண்மை மெய்யே
திருந்தமுன் செய்கின்ற தேவர் பிரானே.

பொழிப்புரை :  உண்மையை உண்மையாக உணர்ந்து உயிர்கள் செம்மை எய்தும் வண்ணம் செய்கின்ற சிவன், `தீர உயர்ந்த பெருந்தன்மையை உடையதான் அங்கே` எனவும், `தீர இழிந்த சிறுதன்மையை உடையயான் இங்கே` எனவும் இவ்வாறு வேறு வேறாய் முன்பு இருந்ததும் இல்லை. (உம்மையால், இனி இருக்கப் போவதும் இல்லை) மற்று, உடலில் உயிர் வேறறக் கலந்திருப்பது போல அவன் என்றும் என்னுள் ஒன்றாய்க் கலந்தேயிருக்கின்றான்; ஆயினும் அவனறிவான்; யான் அறிந்திலேன்.
=======================================


மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!