http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Wednesday 31 October, 2012

திருமந்திரம்-தந்திரம்07: பதிகம் எண் :10 . அருளொளி -பாடல்கள்:009.




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

==============================================
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:01: ஆறாதாரம்..............பாடல்கள்: 008
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:02: அண்டலிங்கம்........பாடல்கள்: 014
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:03: பிண்டலிங்கம்........பாடல்கள்: 004 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:04: சதாசிவலிங்கம்.....பாடல்கள்: 023
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:05: ஆத்மலிங்கம்.........பாடல்கள்: 010 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:06: ஞான லிங்கம்.........பாடல்கள்: 010
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:07: சிவலிங்கம்.............பாடல்கள்: 005 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:08: சம்பிரதாயம்..........பாடல்கள்: 014
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:09: திருவருள்வைப்பு .பாடல்கள்: 005
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:10: அருளொளி..............பாடல்கள்: 009
============================================== 
தந்திரம் 6- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -010
கூடுதல் பாடல்கள்  (109+009 =118)

==============================================
ஏழாம் தந்திரம் - 10.அருளொளிபாடல்கள் 009
பாடல் எண் : 1
அருளில் தலைநின் றறிந்தழுந் தாதார்
அருளில் தலைநில்லார் ஐம்பாசம் நீங்கார்
அருளின் பெருமை அறியார் செறியார்
அருளின் பிறந்திட்(டு) அறிந்தறி வாரே.

பொழிப்புரை :  திருவருளைப் பெற்று அதனானே அதன் இயல்பை உணர்ந்து அதிலே அழுந்தாதவர்கள் அத்திரு வருளோடு இயைந்து ஒழுகும் ஒழுக்கத்தில் நில்லார், அங்ஙனம் நில்லாமையால் அவர் ஐம் பாசங்களினின்றும் நீங்கதலும் இல்லை. பாசங்களின் நீங்காமையால் அவர் திருவருளின் பெருமையை அறிந்து அதனை அடைய முயல மாட்டார். திருவருளைப் பெற்றோர் தமது வினைப்பிறப்பே அருட்பிறப்பாகப் பெற்று, திருவருளின் பெருமை அறிந்து அதில் அழுந்துதலும் செய்வர்.
=======================================
பாடல் எண் : 2
வாரா வழிதந்த மாநந்தி பேர்நந்தி
ஆரா அமுதளித் தானந்த பேர்நந்தி
பேரா யிரம்உடைப் பெம்மான்பேர் ஒன்றினில்
ஆரா அருட்கடல் ஆடுகென் றானே.

பொழிப்புரை :  `நந்தி` என்னும் பெயரை உடைய சிவன், இனிப் பிறந்து உலகின்கண் வாராது என்றும் ஒருபடித்தாய் இருத்தற்குரிய வழியை எனக்குத் தந்தமையால் பெரியரிற் பெரியன் ஆகின்றான்; அந்நிலையில் அதுவெறும் வறுநிலையாய் இல்லாது உண்ண உண்ணத் தெவிட்டாத இனிக்கின்ற இன்பத்தை வழங்கினமை யால் அவன் ஆனந்தமயன் ஆகின்றன். அவன் தனது அளவில்லாத பெருமை காரணமாக அளவற்ற பெயர்களை உடையன். அவற்றுள் எந்தப் பெயரையேனும் சொல்லி அதன் பொருளை உணரும் முகத்தால் அவனது திருவருளால் விளைகின் மேற்கூறிய இன்பக்கடலில் எஞ்ஞான்றும் மூழ்கியிருக்குமாறு எனக்கு அருள்செய்தான்.
=======================================
பாடல் எண் : 3
ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்
தேடியும் கண்டேன் சிவன்பெருந்தன்மையைக்
கூடிய வாறே குறியாக் குறிதந்தென்
ஊடுகின் றாள்அவன் தன்அருள் உற்றே.

பொழிப்புரை :  திருவருளை நிரம்பப் பெறாத நிலையில் யான் அவனது உண்மை நிலையை எனக்கு இயன்றவகையில் ஆடுதல், பாடுதல் முதலியன செய்து அறிய முயன்றேன். அதன் பயனாக அவனது அருளை நிரம்பப் பெற்றமையால், அவன் என் அறிவால் நோக்காது அவன் அருளால் நோக்கும் முறையை உணர்த்தி, அவ்வாறு நோக்கிய பொழுது அவன் என்னின் வேறாகாது என்னுள்ளே விளங்கினான்.
=======================================
பாடல் எண் : 4
உற்ற பிறப்பும் உறுமல மானதும்
பற்றிய மாயா படலம் எனப்பண்ணி
`
அற்றனை நீ`என் றடிவைத்தான் பேர்நந்தி
கற்றன விட்டேன் கழல்பணிந் தேனே.

பொழிப்புரை :  `நந்தி` என்னும் பெயரை உடையவனாகிய சிவன், யான் தொன்று தொட்டு என்னைப் பொருந்தி வந்தனு கரண புவன போகங்களும், அவற்றிற்கு நிமித்தமாய் அநாதியே என்னைப் பற்றி நின்ற ஆணவமும் என்னோடு என்றும் இயற்கையாய் நீங்காது நிற்கும் குணங்களாகாது, ஒரு காலத்தில் விட்டு நீங்கும் குற்றத் தொகுதியே ஆதலை உணரச் செய்து, `அக்குற்றங்கள் அனைத்தினின்றும் நீங்கி இது பொழுது நீ தூயையாய் நிற்றலையும் பார்` என்று காட்டினான். அதனால் நான் மாயா காரியங்களால் பெற்ற பாச அறிவை நீக்கினேன்; அவனது அருள் வழியிலே நின்றேன்.
=======================================
பாடல் எண் : 5
விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னை வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே.

பொழிப்புரை :  பாசஞான பசுஞானங்களாய்த் திரிபு கொள்கின்ற மருளில் பொருந்திய உயிரின் உணர்வாகிய திரியில் பதிஞானமாகிய திருவருள் என்னும் சுடரைக் கொளுத்தி அஃது எரிந்து வீசுகின்ற ஒளியினால் எல்லாப் பொருட்கும் இடம் தந்து வியாபகமாய் நிற்கின்ற ஆகாயம் போன்று எல்லையற்று நிற்கும் சிவத்தைத் தரிசியுங்கள். அப்பொழுது அந்தத் திருவருளின் ஒளியில் பாசம் காரணமாக முன்பு உளவாகிய துன்பங்கள் யாவும் முழுதுமாக அற்றொழியும். இவ்வாறு பசுஞானமாகிய அறிவைப் பதிஞானமாய் விளங்கச் செய்கின்ற திருவருளாகிய விளக்கைப் பெற்றவர்களே அந்த விளக்கினுள்ளே விளங்கும் மற்றொரு விளக்காய் விளங்குவார்கள்.
=======================================
பாடல் எண் : 6
ஒளியும் இருளும் ஒருகாலும் தீரா
ஒளியுளோர்க் கன்றோ ஒழியா தொளியும்
ஒளியிருள் கண்டகண் போல்வே றாய்உள்
ஒளியிருள் நீங்கி உயிர்சிவம் ஆமே.

பொழிப்புரை :  `ஒளி, இருள்` என்றும் இரண்டில் எதுவும் எக் காலத்திலும் அழிந்தொழிவதில்லை. (ஒளி வரும் பொழுது இருள் அடங்கியிருக்குமேயன்றி அழிந்து போவதில்லை. அஃது ஒளி நீங்கியபொழுது மீட்டும் இருள் வருதலைக் கொண்டு அறிந்துக் கொள்ளப்படும். இந்நிலையில்,) நீங்காது நிற்கும் ஒளியோடு கூடிய கண்ணிற்கே ஒருஞான்றும் இருளோடு கூடும் நிலை வாராது ஒளி யாகவே விளங்கும் நிலை உளதாகும். ஆகவே, ஒளியோடு கூடும் பொழுது ஒளியாயும், இருளோடு கூடும்பொழுது இருளாயும் நிற்கின்ற கண்போல்வது ஆன்மா. அஃதாவது கண் ஒளிப் பொருளுமன்று; இருட்பொருளுமன்று; அவ்விரண்டினும் வேறு. ஆயினும் ஒளியோடு கூடியபொழுது ஒளியாயும், இருளோடு கூடி யிருளாயும் நிற்கும். அது போல ஆன்மாப் பதியும் அன்று; பாசமும் அன்று. அவ்விரண்டினும் வேறு. ஆயினும் பதியோடு கூடிய பொழுது பதியாயும், பாசத்தோடு கூடியபொழுது பாசமாயும் நிற்கும். ஒளிவந்தபொழுதும் இருள் அழிவ தில்லை. ஆயினும் ஒளியின்முன் இருள்தோன்றாது அடங்கியிருக்கும். ஒளிவருவதும், போவதுமாய் இருப்பின்கண் ஒளியாயும், இருளாயும் வேறு வேறு நிலைகளை அடையும். வந்த ஒளி பின் நீங்காது நிற்பின் கண் அவ்வொளியே யாய்ப் பின் இருளாக மாறாது. அதுபோல, மாயா கருவிகள் வந்து கூடுவனவும், பிரிவனவுமாகிய புற ஒளிகளாகும். அதனால் அவற்றோடு கூடிய உயர் அறிவாயும், அறியாமையாயும் மாறி மாறி நிற்கும். திருவருளாகிய ஒளிவந்த பின் நீங்காதே நிற்கும் அகவொளியாகும். அதனால் அதனோடு கூடிய உயிர் பின்பு ஒரு ஞான்றும் இருளாகாது ஒளியேயாய்ச் சிவமாய் விளங்கும்.
=======================================
பாடல் எண் : 7
புறமே திரிந்தேனைப் பொற்கழல் சூட்டி
நிறமே புகுந்தென்னை நின்மல னாக்கி
அறமே புகுந்தெனக்(கு) ஆரமு தீந்த
திறமேதென் றெண்ணித் திகைத்திருந் தேனே.

பொழிப்புரை :  சிவன் தனது திருவுளப் பாங்கிற்கு மாறான வழியில் சென்று உழன்று கொண்டிருந்த என்னை அதற்குக் காரணமான அறியாமையைத் தனது திருவடிகளை என் சென்னி மேல் சூட்டு மாற்றால் போக்கி ஆட்கொண்டு, அதனால் தூய்மை பெற்ற எனது உள்ளத்திலே அவன் நீங்காது புகுந்து நிற்குமாற்றால் யான் அவனது அருளேயாய் நிற்கச் செய்து, அதனால், எனது இயற்கையை எய்திய எனக்கு அவனது அரிய இன்பத்தை அவன் தந்தவாறு எவ்வாறு என எண்ணி யான் ஒன்றும் தோன்றாது நிற்கின்றேன்.
=======================================
பாடல் எண் : 8
அருளது என்ற அகலிடம் ஒன்றும்
பொருளது என்ற புகலிடம் ஒன்றும்
மருளது நீங்க மனம்புகுந் தானைத்
தெருளுறும் பின்னைச் சிவகதி யாமே.

பொழிப்புரை :  பக்குவம் எய்தியபொழுது ஆணவ மலம் நீங்கத் திருவருட் பதிவு உயிரினிடத்து நிகழும். அப்பொழுது தான் உயிர் தன்னையும், தலைவனையும் உணரும் நிலையைப் பெறும். அப்பேற்றால் அது திருவருளாகிய பரவெளியிற் சென்று, அதன்கண் விளங்குகின்ற சிவத்தைப் புகலாக அடையும். அவ்வாறு அடைந்து நிற்றலே உயிர்பெறும் முடிநிலப் பேறாகும்.
=======================================
பாடல் எண் : 9
கூறுமின் நீர்முன் பிறந்திங்(கு) இறந்தைமை
வேறொரு தெய்வத்தின்மெய்ப்பொருள் நீக்கிடும்
பாறணி யும்உடல் வீழவிட்(டு) ஆயுயிர்
தேறணி யாம்இது செப்பவல் லீரே.

பொழிப்புரை :  உலகீர், திருவருளை உள்ளவாறு நீர் உணர்ந்தீ ராயின், சிவனை யொழித்து ஒழிந்த தெய்வங்களுள் எதுவாயினும் அது பல்கால் பிறந்து வாழ்ந்து இறந்தமையை வேதாகம புராணங்களைச் சான்று காட்டிப் பலர்க்கும் விளக்கிக் கூறுங்கள். அங்ஙனம் கூறுமாற்றால் அவர்கள் வேறு எந்தத் தெய்வத்தையும் அதனிடத்து மெய்ப்பொருள் தன்மையை ஏற்றி மயங்கும் மயக்கத்தை நீக்குங்கள். இவ்வாறு செய்தலே பருந்துகள் கூட்டமாகக் கூடி உண்ணத்தகும் இவ்வுடல் அங்ஙனம் ஆகும்படி கீழே வீழ்ந்த காலத்தில் அரிய உயிர்தான் தனது உண்மை நிலையைத் தெரிந்து உய்யும் வழியாகும். ஆயினும், இவ்வாறு செய்ய நீர் மாட்டுவீரோ?
=======================================
 


மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!