http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Tuesday 30 October, 2012

திருமந்திரம்-தந்திரம்07: பதிகம் எண் :09 . திருவருள் வைப்பு -பாடல்கள்:021.




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

==============================================
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:01: ஆறாதாரம்..............பாடல்கள்: 008
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:02: அண்டலிங்கம்........பாடல்கள்: 014
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:03: பிண்டலிங்கம்........பாடல்கள்: 004 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:04: சதாசிவலிங்கம்.....பாடல்கள்: 023
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:05: ஆத்மலிங்கம்.........பாடல்கள்: 010 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:06: ஞான லிங்கம்.........பாடல்கள்: 010
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:07: சிவலிங்கம்.............பாடல்கள்: 005 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:08: சம்பிரதாயம்..........பாடல்கள்: 014
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:09: திருவருள்வைப்பு .பாடல்கள்: 005
============================================== 
தந்திரம் 6- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -009
கூடுதல் பாடல்கள்  (088+021 =109)

==============================================
ஏழாம் தந்திரம் - 9. திருவருள் வைப்புபாடல்கள் 021
பாடல் எண் : 1
இருபத மாவ திரவும் பகலும்
உருவது வாவ துயிரும் உடலும்
அருளது வாவ தறமும் தவமும்
பொருளது வுள்நின்ற போகம தாமே.

பொழிப்புரை :  `நாள்` என்பது, `இரவு, பகல்` என்னும் இருநிலைகளை உடையது. `பிறப்பு` என்பது, `உயிர், உடல்` என்னும் இரண்டின் கூட்டம். அவைபோலச் சிவனது திருவருட்பேறாவது, துறவும், நோன்பும் ஆகிய இரண்டின் நிகழ்ச்சியாகும். இனி அந்நிகழ்ச்சிக்குப் பயனாவது உயிர்க்குயிராய் உள்ள அந்த இன்பத்தை அறிந்து நுகர்தலேயாம்.
=======================================
பாடல் எண் : 2
காண்டற் கரியன் கருத்திலன் நந்தியும்
தீண்டற்கும் சார்தற்கும் சேயனாய்த் தோன்றிடும்
வேண்டிக் கிடந்து விளக்கொளி யான்நெஞ்சம்
ஈண்டிக் கிடந்தங் கிருளறு மாமே.

பொழிப்புரை :  (சிவனை உயிர்கள் அனாதியில் ஒராற்றானும் உணர்தல் இல்லை.) பின்பு உலகியல் உணர்வானே ஏனைப் பொருள்களைக் காண்டல், கருதல், தீண்டல், பற்றுதல் இவற்றைச் செய்தல் செய்து பெறுதல் போல அவனை அவ்வுயிர்பெற முயன்றால், அவனும் அவ்வகையினால் எல்லாம் அவற்றால் எய்துதற்கு அறி யனாய், அவற்றிற்கு மிகத் தொலைவில் உள்ளவனாகியே நிற்பான். பின்பு ஒரு காலத்தில் அவனே விருப்பத்தை உடையவனாகிப் புறத்தே விளங்கும் இல்லக விளக்குப் போலும் 3 தன்மையுடன் அகத்தில் தானே நல்லக விளக்காய் நீங்காது நிற்றலால், அவ்விடத்துள்ள அறியாமையாகிய இருள் அற்றொழியா நின்றது.
=======================================
பாடல் எண் : 3
குறிப்பினின் உள்ளே குவலயம் தோன்றும்
வெறுப்பிருள் நீங்கில் விகிர்தனும் நிற்கும்
செறிப்புறு சிந்தையைச் சிக்கென நாடில்
அறிப்புறு காட்சி அமரரும் ஆமே.

பொழிப்புரை :  முன் மந்திரத்திற் கூறியவாறு நிற்கும் நல்லக விளக்கை நோக்கும் நோக்கத்தால் முதற்கண் `யான்` என்றும், `எனது` என்றும் உயிர்மயங்குமாறு அதனோடு ஒற்றுமைப்பட்டு நின்ற உலகம், உண்மையில் அன்னவாகாது அதனின் வேறாய் அதன் அறிவினுள்ளே தோன்றும் அதன்பின் எல்லாவற்றிற்கும் தன்னையும், பிறரையுமே முதல்வராகக் கருதும் சீவபோதத்திற்குக் காரணமான மல இருள் நீங்க, `எல்லாம் அவனே` என்னும் சிவபோதம் நிலைத்து நிற்கும். அச்சிவபோதத்தின் வழிச் சிவனையே நாடுதல் ஒழிந்து மீட்டும் தனது அறிவாற்றலைப் பற்றாக நாடின், பெத்தான்மாக்களை அவர்களது அறிவிச்சை செயல்களைச் செயற்படுத்தி ஆள்கின்ற காரணக் கடவுளராம் நிலை எய்துவதாகும்.
=======================================
பாடல் எண் : 4
தேர்ந்தறி யாமையின் சென்றன காலங்கள்
பேர்ந்தறி யான்எங்கள் பிஞ்ஞகன் எம்மிறை
ஆர்ந்தறி வார்அறி வேதுணை யாம்எனச்
சார்ந்தறி வான்பெருந் தன்மைவல் லானே.

பொழிப்புரை :  எங்கள் இறைவனாகிய சிவன் எம்மை விட்டு ஒரு போதும் நீங்கியதில்லை. அதனை அனுபவமாக உணர்ந்த அனுபூதி மான்களது அறிவுரையை `இதுவே மநக்குத்துணையாவது` என்று பற்றி உணரவல்லவன் எவனோ அவனே பொரும்பொருள் தன்மையைத் தான் பெற வல்லவனாவன். அதனை முன்பே உணர்ந்து ஒழுகாமையால் பல காலங்கள் வீணாகவே கழிந்தன.
=======================================
பாடல் எண் : 5
தானே அழியும் வினைகள் அழிந்தபின்
நானே அறிகிலன் நந்தி யறியுங்கொல்
ஊனே யுருகி உணர்வை உணர்ந்தபின்
தேனே அனையன்நம் தேவர் பிரானே.

பொழிப்புரை :  முன் மந்திரத்திற் கூறியபடி ஆர்ந்தறிந்தார் அறிவை துணையாகச் சார்ந்தறிந்தமையால் உள்ளமேயன்றி உடம்பும் உருகுமாறு ஞானமே வடிவாய் நிற்கும். சிவமுதற் பொருளை உணர்ந்த பின் அம்முதல்வன் தேன்போல இனியனாய்த் தெவிட்டாது நின்றான். இந் நிலையில் சஞ்சித வினைகள் கெட்டொழிதலன்றி அவற்றிற்கு வேறு வழியில்லை. அங்ஙனம் அவை கெட்ட பின்பு யான் அவற்றை நுகர்வோனாதலும், சிவன் அவற்றை எனக்குக் கூட்டி நுகர்விப்போனாதலும் ஆகிய நிலைமைகள் எங்ஙனம் உளவாகும்! உளவதால் இல்லை.
=======================================
பாடல் எண் : 6
நானறிந் தன்றே யிருக்கின்ற தீசனை
வானறிந் தார்அறி யாது மயங்கினர்
ஊனறிந் துள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்
தானறி யான்பின்னை யார்அறி வாரே

பொழிப்புரை :  என்னுள் இருக்கின்ற இறைவனை அறியவேண்டியவன் யானே யன்றோ! (அந்நிலை இன்று யான் கைவரப் பெற்றேன்.) வானுலகம் ஒன்றையே அறிந்து நிற்கும் வானவர் அந்த அறிவால் தம்முள் இருக்கும் இறைவனை அறியாது மயங்குவாராயினர். ஒவ்வொருவனும் தனது உடம்பின் இயல்பையும், அந்த உடம்பினுள் உள்ள உயிரையும், அந்த உயிருக்குள் உயிராய் நின்று அதற்கு அறிவைத் தருகின்ற உள்ளொளியாகிய இறைவனையும் அறிந்து அவ்வாற்றால் பயன்பெற வேண்டியவன் அவனேயாய் இருக்க அவனவனும் அதனைச் செய்யாது கிடப்பானாயின் அவனுக்காக மேற்கூறியவைகளை யார் அறிவார்!
=======================================
பாடல் எண் : 7
அருள்எங்கு மான அளவை அறியார்
அருளை நுகரமு தானதுந் தேரார்
அருள்ஐங் கருமத் ததிசூக்க முன்னார்
அருள்எங்கும் கண்ணான தார்அறி வாரே.

பொழிப்புரை :  திருவருளின் பெருவியாபகம், அஃது அதனைப் பெற்றார்க்குப் பேரின்பம் விளைத்தல், காரணக் கடவுளது தொழில்கள் எல்லாவற்றிற்கும் அதுவே முதலாதல், அனைத்தையும் அது முற்றுற அறிதல் ஆகியவற்றை எல்லாம் அதனைப் பெற்றோர் அறிதலன்றிப் பெறாதார் சிறிதும் அறியமாட்டார்.
=======================================
பாடல் எண் : 8
அறிவில் அணுக அறிவது நல்கிப்
பொறிவழி ஆசை புகுத்திப் புணர்ந்திட்(டு)
அறிவது வாக்கி அடியருள் நல்கும்
செறிவோடு நின்றார் சிவமாயி னாரே.

பொழிப்புரை :  உயிர் அறிவுடையதாயினும் அவ்வறிவு ஆணவத்தால் தடுக்கப் பட்டமையின் அத்தடையை நீக்கி அஃது அறிவை அடையும்படி தொடுத்துப் பின்பு அவ்வறிவு பொறிகளின் வழிச் சென்று புலன்களை விரும்பிப் பாச அறிவாகும்படி செய்து, அவ்விடத்து அவ்வறிவு தான் விரும்பும் புலன்களை நுகர்தற்கு உடனாய் நின்று, பின்பு பாச அறிவாய் நின்ற அதனைப் பதியறிவாகச் செய்து, அவ்வாற்றால் பதிநிலையை எய்திய அடியார் குழாத்துள் இருக்க அருளுவதாகிய திருவருளை எய்தி அதுவே பற்றாக நின்றவரே சிவமாம் தன்மைப் பெருவாழ்வை எய்தினார்.
=======================================
பாடல் எண் : 9
அருளின் பிறந்திட்(டு) அருளின் வளர்ந்திட்(டு)
அருளின் அழிந்(து)இளைப் பாறி மறைந்திட்(டு)
அருளான அவ்வந்தத்(து) ஆரமு தூட்டி
அருளால் என்நந்தி அகம்புகுந் தானே.

அருளால் அமுதப் பெருங்கடல் ஆட்டி
அருளால் அடிபுனைந் தார்வமும் தந்திட்
டருளான ஆனந்தத் தாரமு தூட்டி
அருளால்என் நந்தி அகம்புகுந் தானே

பொழிப்புரை :  யான் எம்பெருமானது திருவருளாற்றான் பிறந்தேன்; வளர்ந்தேன்; இறந்தேன். உலகம் ஒடுங்கிக் கிடந்த பொழுது யான் ஓய்வாக இருந்தேன்; மீட்டும் உலகம் தோன்றிய பொழுதும் பிறந்து வாழவே விரும்பினேன். இவ்வாறு முடிவின்றிச் சுழன்று வந்த யான் அவனது அருளே வடிவாகி நின்ற அந்த இறுதிக்காலத்தில் அப்பெருமான் எனக்கு எல்லையில் இன்பத்தை வழங்கி என் உள்ளத்தில் நீங்காது நின்றான் எல்லாம் அவனது அருளாலேதான் நிகழ்ந்தன.
=======================================
பாடல் எண் : 10
பாசத்தில் இட்ட(து) அருள் அந்தப் பாசத்தில்
நேசத்தை விட்ட(து) அருள் அந்த நேசத்தின்
கூசற்ற முத்தி அருள் அந்தக் கூட்டத்தின்
நேசத்துத் தோன்றா நிலைஅரு ளாமே.

பொழிப்புரை :  என்னை எனது இயற்கைப் பாசம் தனது சத்தி கெடுதற்பொருட்டுச் செயற்கைப் பாகத்தில் இட்டுத் துன்புறுத்தியதும் திருவருளே (இது திரோதன கரியாய் நின்ற நிலை) இயற்பாசம் சத்தி கெட்ட பின்னர் யான் அச்செயற் கைப்பாசங்களையே மேலும், மேலும் விரும்பிய விருப்பத்தை விடச்செய்ததும் திருவருளே. பாசத் தொடர்பினால் மெய்ப்பொருளை அணுகக் கூசிய கூச்சம் நீங்கி அம்மெய்ப் பொருளை அடைந்து, அதனானே துன்பக் கடலினின்றும் கரை யேற்றுவித்ததும் திருவருளே, துன்பக் கடலினின்றும் கரையேறிய பொழுது விளைந்த எல்லையில்லாத இன்பத்தில் அவ்வின்பம் ஒன்றுமே தோன்றத்தான் தோன்றாது மறைந்ததும் திருவருளே.
=======================================
பாடல் எண் : 11
பிறவா நெறிதந்த பேரரு ளாளன்
மறவா அருள்தந்த மாதவன் நந்தி
அறவாழி யந்தணன் ஆதி பராபரன்
உறவாகி வந்தென் உளம்புகுந் தானே.

பொழிப்புரை :  சிவபெருமான் எனக்கு இனிப் பிறவா நெறியை அளித்த பெருங் கருணையை உடையவன். அதன்பின்னும் தன்னை யான் மறவாதிருக்கும் படியும் அருள்புரிந்தான். தவக்கோலத்தைப் பூண்டவன். அறக்கடலாய் அழகிய தட்பத்தையும் உடையவன். தனக்கொரு முதல் இன்றித்தானே எல்லாவற்றிற்கும் முதலானவன். எல்லாவற்றிற்கும் மேலொடு கீழாய் விரிந்தவன் l அத்தகையோன் தானே எனது உள்ளத்தைத் தகவு செய்து அதனுட் புகுந்தான்.
=======================================
பாடல் எண் : 12
அகம்புகுந் தான்அடி யேற்கரு ளாலே
அகம்புகுந் தும்தெரி யான்அரு ளில்லோர்க்(கு)
அகம்புகுந் தானந்த மாக்கிச் சிவமாய்
அகம்புகுந் தால்நந்தி ஆனந்தி யாமே.

பொழிப்புரை :  சிவன் உயிர்களது அறிவினுள்ளே அருளை நிறைவித்து, அதனால் இன்பத்தைப் பெருக்கி விளக்கமுற்று நின்றால் இன்பப் பொருளாய் அனுபவப் படுவான். அதனால் அடியேனுக்கு அவன் அங்ஙனம் அருளை வழங்கினமையால் கருவிகளின் வழியாக அன்றி, நேரே தலைப்பட்டுணரும் பொருளாயினான். ஆகவே, அருள் வழங்கப் பெறாதாரது அறிவினுள்ளும் இருப்பினும் அவர்கட்கு அவன் அங்ஙனம் உணரும் பொருளாதல் இல்லை.
=======================================
பாடல் எண் : 13
ஆயும் அறிவோ டறியாத மாமாயை
ஆய கரணம் அடைக்கும்ஐம் பூதங்கள்
ஆய பலஇந் திரிய மவற்றுடன்
ஆய அனைத்துமாம் அவ்வரும் செய்கையே.

பொழிப்புரை :  `பெத்த நிலையில் உள்ள உயிர்களிடத்தும் திருவருள் உளதாயினும் அது நேர்நிலையன்று` என மேற்கூறிய இயைபானே, அஃது அத்திருகல் நிலையில் நின்று செய்வனவற்றை இங்கு நின்றும் விரிக்கின்றார். மாயா காரியங்களைக் கருவியாகக் கொண்டு ஆராய்ந்து அறிந்து வரும் அறிவும், அக்கருவிகளும், அக்கருவிகளின் வழிப் புலன்களை ஆன்ம அறிவை அடையச் செய்கின்ற ஐந்து பூதங்களும் அப்புலன்களை நேராகவும், பிறவற்றின் வழியாகவும் கவர்கின்ற புற, அகப் பொறிகளும் ஆகிய அனைத்தும் திருவருளின் செயலால் ஆவனவேயாம்.
=======================================
பாடல் எண் : 14
அருளே சகலமும் ஆய பௌதிகம்
அருளே சராசரம் ஆய மலமே
இருளே வெளியே எனும்எங்கும் ஈசன்
அருளே சகளத்தன் அன்றிஇன் றாமே.

பொழிப்புரை :  ஆன்மாக்கள் சகல நிலையை எய்துதற்குக் காரண மான பூதகாரிய மாகிய சடப்பொருள்களும், சரமும் அசரமுமாய் உள்ள உயிர் வகைகளும் ஆகிய எல்லாம் திருவருளாலே ஆவனதாம். சிவனும் உயிர்களின் பொருட்டுத் திருமேனி கொள்ளுங்கால் திருவருளால் தானவற்றை உடையவன் ஆவான். இன்னும் அவன் ஆன்மாக்களுக்கு மயக்க உணர்வை உண்டாக்குதலும், பின்பு அதனை நீக்கி மெய்யுணர்வைத் தருதலும் திருவருளாலேதான். ஆகவே, திருவருள் இல்லையேல் ஒன்றும் இல்லையாம்.
=======================================
பாடல் எண் : 15
சிவமொடு சத்தி திகழ்நாதம் விந்து
தவமான ஐம்முகன் ஈசன் அரனும்
பவமுறு மாலும் பதுமத்தோன் ஈறா
நவமசை யாகி நடிப்பவன் தானே.

பொழிப்புரை :  சிவம் முதலாக உள்ள நவந்தரு பேதங்களாய் நிற்கும் சிவன் அங்ஙனம் நிற்றலும் திருவருளாலேதான்.
=======================================
பாடல் எண் : 16
அருட்கண் ணிலாதார்க்(கு) அரும்பொருள் தோன்றா
அருட்கண் உளோர்க்கெதிர் தோன்றும் அரனே
இருட்கண்ணி னோர்க்கிங் கிரவியும் தோன்றா
தெருட்கண்ணி னோர்க்கெங்கும் சீரொளி யாமே.

பொழிப்புரை :  திருவருளாகிய கண் வாய்க்கப் பெறாதார்க்கு சிவமாகிய நுண் பொருளின் இருப்புத் தோன்றாது. உலகமாகிய பருப் பொருள்களின் விசித்திரங் களே தோன்றும். திருவருளாகிய கண் வாய்க்கப் பெற்றோர்க்கு, சிவனது இருப்பு மட்டுமன்றி அவனேயும் புலப்பட்டுத் தோன்றுவான். இவை எவைபோலும் எனின், ஒளியில்லாத கண்ணை உடையவர்க்குப் பகலவனது ஒளிதானும் தோன்றாது இருள்மட்டுமே தோன்றுதலும், ஒளியுடைய கண்ணுடையார்க்கு அவனது ஒளிப் பரப்பேயன்றி அவனேயும் தோன்றுதல் போல்வனவாம்.
=======================================
பாடல் எண் : 17
தானே படைத்திடும் தானே அளித்திடும்
தானே துடைத்திடும் தானே மறைந்திடும்
தானே இவைசெய்து தான்முத்தி தந்திடும்
தானே வியாபித் தலைவனு மாமே.

பொழிப்புரை :  சிவபெருமானே எங்கணும் வியாபகனாய், ஐந் தொழிலையும் செய்யும் முதல்வனாயினும் அவன் அவன் அத்தன்மையனாய் நிற்றற்குக் காரணமாயிருப்பது அருளாயும், எல்லையின்றி விரிவதாயும், அனைத்தும் வல்லதாயும் அவனிடத்து உள்ள ஆற்றலேயாம்.
=======================================
பாடல் எண் : 18
தலையான நான்கும் தனதரு வாகும்
அலையா அருவுரு வாகும் சதாசிவம்
நிலையான கீழ்நான்கும் நீடுரு வாகும்
தொலையா இவைமுற்று மாய்அல்ல தொன்றே.

பொழிப்புரை :  (மேல், `ஞானலிங்க` அதிகாரத்தில் ``நாலனகீழ`` என்னும் மந்திரத்தில் சிவன்மேல் வைத்துக் கூறிய மூவகைத் தடத்தத் திருமேனிகளையும், அவற்றைக் கடந்த சொரூப நிலையையும் இம்மந்திரத்தில் திருவருளாகிய சத்திமேல் வைத்துக் கூறினார் என்க.)
=======================================
பாடல் எண் : 19
ஒன்றது பாலே உலப்பிலி தான்ஆகி
நின்றது தன்போல் உயிர்க்குயி ராய்நிலை
துன்றி அவைஅல்ல தாகும் துணையென்ன
நின்றது தான்விளையாட்(டு) என்னுள் நேயமே.

பொழிப்புரை :  எனது உள்ளத்தில் என் அன்பேயாய் நிற்கின்ற சிவம் தன்போல்வது பிறிதுபொருள் இல்லாது தனி ஓர் அறிவுப் பொருளாய் இருத்தலால் அழிவற்று, என்றும் உள்ளதாகின்றது. அஃது அங்ஙனம் ஒன்றேயாயினும் தன்னைப்போல் அறிவுடையனவாயும், அழிவில்லன வாயும் உள்ள எண்ணற்ற உயிர்க்கும் உள்ளுயிராய் நிற்றலால் பலவாகவும் ஆகின்றது, அங்ஙனம் ஆயினும் அவ்வுயிரின் தன்மயைத் தான் அடையாமல் தான் வேறு பொருளாகவே உள்ளது. இனி, ``அதன் விளையாட்டு`` எனப்படுவது, அஃது உயிர்களோடு பெத்தம், முத்தி இருநிலையிலும் உடனாய் நின்று, எஞ்ஞான்றும் அவற்றிற்கு அவ்வப்பொழுது ஆவனவற்றைச் செய்து உதுவுவதே யாகும்.
=======================================
பாடல் எண் : 20
நேயத்தே நின்றிடும் நின்மலன் சத்தியோ(டு)
ஆய்அக் குடிலையுள் நாதம் அடைந்திட்டுப்
போய்அக் கலைபல வாகப் புணர்ந்திட்டு
வீயத் தகாவிந்து வாக விளையுமே.

பொழிப்புரை :  முழுதும் திருவருளிலே பொருந்தி நிற்கின்ற சுத்த சிவன் அந்தத் திருவருள் காரணமாகச் சத்தியோடு கூடிச்சத்தனாய் நின்று, பின்பு சுத்த மாயையுள் பொருந்தி முதற்கண் நாத தத்துவத்தைத் தோற்றுவித்து, அத்தத்துவம் பற்றுக்கோடாக சூக்குமை முதலிய நால்வகை வாக்குக்களையும், அந்த வாக்கு முதலிய அனைத்தையும் தம்முள் அடக்கி நிற்கும் சாந்தியதீதை முதலிய ஐந்து கலைகளையும் தோற்றுவித்துப் பின்பு விந்து தத்துவத்தைத் தோற்றுவித்த பின்னரே உலகம் முழுதும் முறைப்படி தோன்றும்.
=======================================
பாடல் எண் : 21
விளையும் பரவிந்து தானே வியாபி
விளையும் தனிமாயை மிக்கமா மாயை
கிளையொன்று தேவர் கிளர்மனு வேதம்
அளவொன் றிலாஅண்ட கோடிக ளாமே.

பொழிப்புரை :  எல்லாக் காரியங்களின் தோற்றத்திற்கும் முதலாய் நிற்கின்ற பரவிந்துவே, பிற எல்லாப் பொருள்களையும் தன்னுள் அடக்கி வியாபகமாய் நிற்கும். அது மல கன்மங்களோடு விரவுதல் இன்றித் தூயதாயும் உள்ளது. அதனால் அது `மகாமாயை` எனவும் படுகின்றது. அஃது அபர முத்தர்களாகிய மந்திரமகேசுரர், அணுசதாசிவர் முதலியோருடைய தனுகரணங்களாகவும், சத்த கோடி மகாமந்திரங்களாகவும், வேத சிவாகமங்களாகவும் மேற்கூறியோருடன் மற்றும் விஞ்ஞான கலர்களும் வாழும் அளவற்ற அண்டங்களாயும் விளைந்து பயன்படும்.
=======================================



மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!