http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Friday 2 November, 2012

திருமந்திரம்-தந்திரம்07: பதிகம் எண் :12 & 13. குருபூசை, மகேசுவரபூசை - பாடல்கள்:010 & 009 .




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

==============================================
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:01: ஆறாதாரம்..............பாடல்கள்: 008 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:02: அண்டலிங்கம்........பாடல்கள்: 014
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:03: பிண்டலிங்கம்........பாடல்கள்: 004 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:04: சதாசிவலிங்கம்.....பாடல்கள்: 023
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:05: ஆத்மலிங்கம்.........பாடல்கள்: 010 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:06: ஞான லிங்கம்.........பாடல்கள்: 010
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:07: சிவலிங்கம்.............பாடல்கள்: 005 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:08: சம்பிரதாயம்..........பாடல்கள்: 014
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:09: திருவருள்வைப்பு .பாடல்கள்: 005

ஏழாம்  தந்திரம்:பதிக எண்:10: அருளொளி..............பாடல்கள்: 009 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:11: சிவபூசை..................பாடல்கள்: 021  
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:12: குருபூசை.................பாடல்கள்: 010 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:13: மகேசுவரபூசை.....பாடல்கள்: 009
============================================== 
தந்திரம் 6- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -013
கூடுதல் பாடல்கள்  (139+010+009 =158)
==============================================
ஏழாம் தந்திரம் - 12. குருபூசைபாடல்கள் 010
பாடல் எண் : 1
ஆகின்ற நந்தி யடித்தா மரைபற்றிப்
போகின் றுபதேசம் பூசிக்கும் பூசையும்
ஆகின்ற ஆதாரம் ஆறா(று) அதனின்மேற்
போகின்ற பொற்பையும் போற்றகின் றேனே.

பொழிப்புரை :  எனக்கு இனி வேறொரு துணையின்றாகத் தாம் ஒருவரே துணையாய் நிற்கின்ற நந்தி பெருமானது திருவடிகளைப் பற்றி நின்றே உயிர்கள் பற்றி ஒழுகுதற்குரிய இறைநூல், அவற்றின்வழி இறைவனை வழிபடும் வழிபாடு, அகக்கோயில்களாகிய ஆதாரங்கள், முப்பத்தாறு தத்துவங்கள், அத்தத்துவங்களைக் கடந்து அவையனைத் திற்கும் மேலே செல்கின்ற தூய்மை ஆகிய இவைகளை நான் கருத்தாக உணர்ந்து, உலகர்க்கும் உரைப்பேனாயினேன்.
=======================================
பாடல் எண் : 2
பெருந்தன்மை நந்தி பிணங்கிருள் நேமி
இருந்தன்மை யாலும்என் நெஞ்சிடங் கொள்ள
வருந்தன்மை யளனை வானவர் தேவர்
தருந்தன்மை யாளனைத் தாங்கநின் றாரே.

பொழிப்புரை :  சிவனது திருவருளை மிகப்பெற்ற நந்தி பெருமான், அப்பேறுடைமை பற்றியேயன்றிச் சிவனோடு மாறுபட்டுப் பகைச் செயலையே புரிகின்ற ஆணவ இருளுக்குப் பகலவனாய் இருத்தல் பற்றியும் அவரை முனிவரும், தேவரும் தம் இதயத்திலே எப்பொழுதும் வைத்துத் தியானிக்கின்றனர்.
=======================================
பாடல் எண் : 3
கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுறு மாமலர் இட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உணர்பவர்க் கல்லது
தேனமர் பூங்கழல் சேரஒண் ணாதே.

பொழிப்புரை :  காட்டில் பொருந்தியுள்ள கோடிக் கணக்கான சந்தன மரங்களின் கட்டைகளைத் தேய்த்தெடுக்கப்பட்ட நறுமணம் கமழ்கின்ற சந்தனத்தையும், அதுபோலவே ஆகாயம் அளாவக் குவிக்கபப்ட்ட பெருமை மிக்க மலர்கலையும் பயன்படுத்திச் சிவனை வழிபட்டாலும் உடம்பைத் தம்மின் வேறாக உணர்ந்து அதன்கண் உள்ள பற்றை விடுத்துச் சிவனையே பற்றாக உணர்பவர்க்கல்லது ஏனையோர்க்கு அவனது, தேன் நிறைந்த செந்தாமரை மலர்போலும் திருவடியைச் சேர இயலாது.
=======================================
பாடல் எண் : 4
மேவிய ஞானத்தின் மிக்கிடின் மெய்ப்பரன்
ஆவயின் ஞான நெறிநிற்றல் அற்சனை
ஓவற உட்பூ சனைசெய்யில் உத்தமம்
சேவடி சேரல் செயலறல் தானே.

பொழிப்புரை :  குருவருளால் கேள்வியாகப் பெற்ற ஞானத்தைப் பின் சிந்திதத்ல, தெளிதல் என்பவற்றின்பின் நிட்டையாக முதிரப் பெறின் அவ்விடத்தில் அந்த நிட்டையில் நிற்றலே பரசிவ பூசை யாகும். (ஆகவே அந்நிலையை அடைந்தவர்க்கு ஏனையோர்க்குக் கூறப்பட்ட சிவபூசைகள் வேண்டாவாம்) அந்நிலையை அடையாது கேள்வி முதலிய மூன்றில் நிற்போர்க்கு, ``உள்ளம் பெருங்கோயில்`` என்னும் மந்திரத்துட் கூறியவாறு செய்யும் ஞான பூசையே சாதனமும், அப்பூசையின் பயனாகத் தற்போதம் கழன்றிருத்தலே பயனும் ஆகும்.
=======================================
பாடல் எண் : 5
உச்சியுங் காலையு மாலையும் ஈசனை
நச்சுமின் நச்சி `நம` என்று நாமத்தை
விச்சுமின் விச்சி விரிசுடர் மூன்றினும்
நச்சுமின் பேர்நந்தி நாயக னாகுமே.

பொழிப்புரை :  உலகீர், `காலை, நண்பகல், மாலை` - என்னும் மூன்று போதிலும் சிவனை வழிபட விரும்புங்கள். அவ்வழிபாட்டில் `நம` என்பதை இறுதியில் உடைய மந்திரம் சிறப்புடையனவாகும் ஆதலால் அவற்றையே மிகுதியாக உங்கட்குப் பயனை விளைக்கும் வித்துக்களாக விதையுங்கள். அவ்வாறு விதைப்பதற்குரிய நிலமாய் விளங்குவன `கதிர், மதி, தீ` - என்னும் முச்சுடர்களுமாம். (ஆகவே, அவ்விடத்து அவற்றை விதையுங்கள்) அச்சிவன் `நந்தி` என்னும் பெயருடைய குருமூர்த்தியாயும் விளங்குவன்.
=======================================
பாடல் எண் : 6
இந்துவும் பானுவுமி யங்குந் தலந்திடை
வந்தித்த தெல்லாம் அசுரர்க்கு வாரியாம்
இந்துவும் பானுவுமி யங்காத் தலத்திடை
வந்தித்தல் நந்திக்கு மாபூசை யாமே.

பொழிப்புரை :  `சந்திர கலை` எனவும், `சூரிய கலை` எனவும் சொல்லப்படுகின்ற இடநாடி மூச்சும், வலநாடி மூச்சுக் காற்று இயங்கின் மனம் புறத்தே ஓடுதலல்லது அகத்தே அடங்கி நில்லாது. ஆகவே, அது பொழுது செய்யும் வழிபாடு குற்றம் உடைத்தாம் ஆதலின், ``அஃது அசுரர்க்கு வாரியாம்`` என்றும், மூச்சுக்காற்று இயங்காது அடங்கின் மனமும் புறத்தே ஓடாது அகத்தே அடங்கி நிற்கும். ஆகவே, அதுபொழுது செய்யும் வழிபாடு குற்றமில்லாதாம் ஆதலின், ``அது நந்திக்கு மாபூசையாம்`` என்றும் கூறினார். சிவ பூசையே பெரிய பூசையாதல் பற்றி, ``மாபூசை`` என்றார். மூச்சுக் காற்றை மேற்கூறிய இருவழிகளிலும் செல்லாது அடக்குதலே பிராணாயாமமாம். அம்முறையால் பிராணனை அடக்கியவழி கும்பகமாம். அப்பொழுது மூச்சுக் காற்று நடுநாடியிற் செல்லும். அங்ஙனம் செல்லும்பொழுது தியானங்கள் இனிது கைகூடும். ``எந்நிலையில் நிற்போரும் `வழிபாடு` என்பதை மேற்கொள்ளும்பொழுது பிராணாயாமம் செய்து செய்க`` என்றபடி. வாரி - வருவாய் அறவே விலக்குதற் பொருட்டு ``அசுரர்க்கு வாரியாம்`` என்றாரேனும், `பயன் அற்பமாம்` என்றலே கருத்து என்க.
=======================================
பாடல் எண் : 7
இந்துவும் பானுவு மென்றெழு கின்றதோர்
விந்துவும் நாதமு மாகிமீ தானத்தே
சிந்தனை சாக்கிரா தீதத்தே சென்றிட்டு
நந்தியைப் பூசிக்க நற்பூசை யாமே.

பொழிப்புரை :  சந்திர கலையும், சூரிய கலையுமாகச் சொல்லப் படுகின்ற மூச்சுக்காற்று அடக்கப்பட்டபொழுது நடுநாடி வழியாக மேல் ஏறி விந்துத்தானமாகிய ஆஞ்ஞையையும், நாதத்தானமாகிய ஏழாந்தானத்தையும் கடந்து அதற்குமேல் பிரம ரந்திரம் வழியாகப் பன்னிரண்டங்குல அளவுள்ள நிராதாரத்தே செல்லின் அந்நிலை `சாக்கிரத்தில் துரியம்` எனப்படும். அதனையும் கடந்திருப்பது மீதானம். அது சாக்கிரத்தில் அதீதத்தானம். அந்நிலையில் சிந்தனையைச் செலுத்திச் சிவனை வழிபடுதலே எல்லாவற்றிலும் மேலான வழிபாடாம்.
=======================================
பாடல் எண் : 8
மனபவ னங்களை மூலத்தின் மாற்றி
அநித உடல்பூத மாக்கி யகற்றிப்
புனிதன் அருளினிற் புக்கிருந் தின்பத்
தனிஉறு பூசை சதாசிவற் காமே.

பொழிப்புரை :  மனத்தின் ஓட்டத்திற்குக் காரணமாயுள்ள இட ஓட்ட வல ஓட்ட மூச்சுக் காற்றுக்களை அவ்வழியே ஓட விடாது தடுத்து நடு நாடி வழியாக ஓடும்படி மாற்றி, பூத காரியமாய் நின்று அழிகின்ற உடலை அவ்வாறு அழியாது நிலைத்திருக்கின்ற உடலாகச் செய்தற் பொருட்டு அதன் காரணமாகிய பூதங்களில் ஒடுக்கி அவையாகச் செய்யுமாற்றால் போக்கி, மீண்டு அது திருவருளினின்றும் தோன்றச் செய்யுமாற்றால் திருவருள் உடம்பாக ஆக்கி அதனுள் தான் புகுந்து சிவமாகி அதனானே சிவானந்தம் மேலிட நின்ற வழிபடும் வழிபாடே ஒப்பற்ற வழிபாடாகும். அதனையே சதாசிவ மூர்த்தி ஏற்பர்.
=======================================
பாடல் எண் : 9
பகலு மிரவும் பயில்கின்ற பூசை
இயல்புடை யீசற் கிணைமல ராகா
பகலு மிரவும் பயிலாத பூசை
சகலமுந் தான்கொள்வன் தாழ்சடை யோனே.

பொழிப்புரை :  பகலும், இரவும் ஆகிய கால வேறுபாடுகள் தோன்றுகின்ற பூசைகள் காலத்தைக் கடந்தவனாகிய சிவனுக்கு முற்றிலும் நேர்படும் பூசைகள் ஆகா. மற்று, அவ்வேறுபாடு தோன்றாத பூசைகளையே சிவன் முழுமையாக ஏற்பான்.
=======================================
பாடல் எண் : 10
இராப்பக லற்ற இடத்தே யிருந்து
பராக்கற ஆனந்தத் தேறல் பருகி
இராப்பக லற்ற இறையடி யின்பத்(து)
இராப்பகல் மாயை இரண்டடித் தேனே.

பொழிப்புரை :  இரவும், பகலும் ஆகிய கால வேறுபாடுகள் தோன்றாத ஆழ்ந்த தியான நிலையேயிருந்து, அதனால் விளைகின்ற சிவானந்தமாகி தேனை வேறுநினைவின்றிப் பருகினமையால், இரவும், பகலும் ஆகிய கால வேறுபாடுகள் இல்லாத இறைவனது திருவடியின்பத்தில் திளைத்து, மேற்கூறிய வேறுபாடுகளையுடைய காலமாகிய மாயா காரியம் இரண்டினையும் யான் போக்கிவிட்டேன்.
=======================================
ஏழாம் தந்திரம் - 13. மாகேசுர பூசைபாடல்கள் 009
பாடல் எண் : 1
படமாடக் கோயிற் பகவற்கொன் றீயின்
நடமாடக் கோயில் நம்பற்கங் காகா
நடமாடக் கோயில் நம்பற்கொன் றீயின்
படமாடக் கோயிற் பகவற்க தாமே.

பொழிப்புரை :  கொடித் துகில் ஆடுகின்ற இயங்காக் கோயிலினுள் எழுந்தருளி யிருக்கும் சிவனுக்கு ஒரு பொருளை ஏற்பித்தால் அஃது எங்கும் இயங்குகின்ற உடம்பாகிய கோயிலினுள் எழுந்தருளி யிருக்கின்ற சிவனுக்குச் சேரமாட்டாது; அங்கேயே இருந்துவிடும். ஆனால், எங்கும் இயங்கும் உடம்பாகிய கோயிலினுள் எழுந்தருளி யிருக்கும் சிவனுக்கு ஒரு பொருளை ஏற்பித்தால் அஃது அந்தச் சிவனுக்கு ஆதலுடன், கொடித்துகில் ஆடுகின்ற இயங்காக் கோயிலினுள் எழுந்தருளியிருக்கின்ற சிவனுக்கும் போய்ச் சேர்வதாகும்.
=======================================
பாடல் எண் : 2
தண்டறு சிந்தைத் தபோதனர் தாம்மகிழ்ந்து
உண்டது மூன்று புவனமும் உண்டது
கொண்டது மூன்று புவனமும் கொண்டதென்று
எண்டிசை நந்தி எடுத்துரைத் தானே.

பொழிப்புரை :  `சிவனிடத்தினின்று பிறிதொன்றால் நீக்கப்படாத உள்ளத்தினை யுடைய மாகேசுரர்கள் மனமகிழ்ந்து உண்ட பொருள் மூன்றுலகங்களும் உண்ட பொருளாகும்; (அவற்றிற்கு அது பயனாகும்` என்பதாம்) அதுபோலவே அவர்கள் பெற்றுக்கொண்ட பொருளும் மூன்றுலகங்களும் பெற்றுக்கொண்ட பொருளாம், என்று நந்தி பெருமான் எங்கட்குச் சிறந்தெடுத்துக் கூறினார்.
=======================================
பாடல் எண் : 3
மாத்திரை ஒன்றினில் மன்னி அமர்ந்துறை
ஆத்தனுக் கீந்த அரும்பொரு ளானது
மூர்த்திகள் மூவர்க்கும் மூவேழ் குரவர்க்கும்
தீர்த்தம தாம்அது தேர்ந்துகொள் வீரே.

பொழிப்புரை :  இப்பாடலின் பொருள் பின்வரும் குறிப்புரையால் இனிது விளங்கும்.
குறிப்புரை : `சீவன்` என்னும் பெயரின் முதலெழுத்து இரு மாத்திரையுடையதும், `சிவன்` என்னும் பெயரின் முதலெழுத்து ஒரு மாத்திரையுடையதும் ஆதல் பற்றி, `சீவன்` என்னும் நிலையில் நில்லாது, சிவனிடத்தில் நிலைத்து நின்று அவனேயான அடியவனை. `மாத்திரை யொன்றின் மன்னியமர்ந்துறை - ஆத்தன்` என்றார். சிவனடியார்கள் மாகேசுரன் எனப்படும் காரணத்தை விளக்கியவாறு. `மகேசுரவ   னுக்குள் அடங்கிநிற்பவன் மாகேசுவரன்` என்றபடி. ஆத்தன் - நம்புதற்குரியவன். `தன்னை நம்பினவர்க்கு உறுதியையே சொல்லுதலும், செய்தலும் உடையவன்` என்பதாம். எனவே, `மாகேசுரர் அத்தகையினர்` என்பது பெறப்பட்டது. சிறப் புணர்த்த வேண்டிச் சாதியொருமையாற் கூறினார். `இப்பெயர் ஆசாரி யனையே குறிக்கும், என்பாரும் உளர். அங்ஙனமாயின் இம்மந்திரம் `குருபூசை` என்னும் அதிகாரத்தில் உளதாக வேண்டும் என்க.
மூர்த்திகள் மூவர் - அயன், அரி, அரன். குரவர் - முன்னோர். ஏழ்குரவர், தந்தை முதலாக முறையானே முன் முன் நோக்க வரும் எழுவர். மூவெழுவராவார், தந்தைவழி தாய் வழி மனைவி வழி என்னும் மூவழியிலும் உள்ள முன்னோர் ஓரோர் எழுவர். ``தீர்த்தம்`` என்றது, `நீர்` என்னும் பொருட்டாய் நின்றது. அஃது ஆகுபெயராய் நீர்வழியாகக் கொடுக்கும் பொருளை உணர்த்திற்று. முன்னோர்க்குப் பாவனையாற் கொடுப்பன யாவும் நீர் இறைக்குமாற்றால் கொடுக்கப் படுதலை நினைக. இதனைத் திருவள்ளுவர், `தென்புலத்தார் கடன்` (திருக்குறள், 53) என்றார். மாகேசுர பூசை பெரும்பான்மையும் இல்லறத்தாராலே செய்யப்படும் ஆதலின், `அவர்க்கே சிறப்பாக உரிய விருந் தோம்பலில் மாகேசுர பூசையே சிறப்புடையது` எனக் கூறுபவர், `தென்புலத்தார் கடனும் அதுவே` என்பதை இதனாற் கூறினார். இனி, `அவர்க்குத் தெய்வ வழிபாடாவதும் இதுவே என்பதை, ``மூர்த்திகள் மூவர்க்கும்`` எனத் தேவருள் தலையாயினாரைக் கூறினார்.  `விருந்தோம்பல், தென்புலத்தாரை வழிபடல், தெய்வங்களை வழிபடல் என்பவற்றை அந்தணரை வழிபடுதலானே செய்தல் வேண்டும்` என்பது வைதிக நெறியே; அவைகளை மாகேசுரர் வழியாகச் செய்தலே சைவநெறி` என்பது இவ்வதிகாரத்துள் உணர்த்தப்படுதல் அறிக. இதனானே, `அந்தணர் பூசுரராயினும், மாகேசுரர் பூசிவர்` என்றதூஉமாயிற்று. இவர்களை, ``பராவுசிவர்`` (சிவஞான சித்தியார், சூ. 8. 35) என்றார் அருணந்தி தேவர்.
=======================================
பாடல் எண் : 4
அகர மாயிர மந்தணர்க் கீயிலென்
சிகர மாயிரஞ் செய்தே முடிக்கில்லென்
பகரு ஞானி பகலுண்பலத் துக்கு
நிகரிலை யென்பது நிச்சயந் தானே.

பொழிப்புரை :  அந்தணர் வாழும் வீதிகள் பலவற்றை அவர்கட்குத் தானம் செய்தலும், அவ்வீதிகளில் அவர்கட்கு உயர்ந்த மாட மாளிகைகள் பல கட்டித் தருதலும் ஆகிய இவற்றால் விளையும் பயன்கள் யாவும் மாகேசுரன் ஒருவனை வழிபட அவன் உண்டதனால் விளையும் பயனளவிற்கு ஒவ்வாது குறைவனவே என்பது உறுதி.
=======================================
பாடல் எண் : 5
ஆறிடு வேள்வி அருமறை சாலவர்
கூறிடு மந்தணர் கோடிபேர் உண்பதில்
நீறீடுந் தொண்டர் நினைவின் பயன்நிலை
பேறெனில் ஓர்பிடி பேறது வாகுமே.

பொழிப்புரை :  ஆறு அங்கங்களால் தெளிய உணர்த்தப்படும் வேள்விகளைச் செய்கின்றவரும், வேதமாகிய நூலை ஓதுகின்றவரும், முப்புரிநூல் அணிபவரும் ஆகிய அந்தணர்கள் கோடிபேர் உண்டு மகிழ் வதனால் உண்டாகின்ற பயனோடு திருநீற்றை யணிகின்ற சிவ னடியார் சிலர் உண்டு மகிழும் மகிழ்ச்சியால் விளைந்து நிலைக்கின்ற பயனை வைத்து எண்ணிப் பார்க்குமிடத்து, முன்னர்க் கூறிய பயன் பின்னர்க் கூறிய உணவில் ஒரு பிடியினால் விளையும் பயனளவேயாகும்.
=======================================
பாடல் எண் : 6
ஏறுடை யாய்இறை வாஎம் பிரான்என்று
நீறிடு வார்அடியார் நிகழ் தேவர்கள்
ஆறணி செஞ்சடை யண்ணல் இவரென்று
வேறணி வார்க்கு வினையில்லை தானே.

அத்தன் நவதீர்த்தம் ஆடும் பரிசுகேள்
ஒத்தமெய்ஞ் ஞானத் துயர்ந்தார் பதத்தைச்
சுத்தம தாக விளங்கித் தெளிக்கவே
முத்தியாம் என்றுநம் மூலன் மொழிந்ததே.

பொழிப்புரை :  `இடபத்தை ஊர்தியாகவும், கொடியாகவும் உடையவனே! இறைவா! எங்கள் பெருமானே` என்று சிவனை எப் பொழுதும் துதித்து அவனது அருள் வடிவாகிய திருநீற்றை அன்புடன் அணிகின்றவர்கள் அவனுக்கு அடியராவார்கள், அவர்களை `இவர்களே நிலவுலகில் காணப்படுகின்ற தேவர்கள்` என்றும், `சிவபெருமான்` என்றும் கருதி அவரை மக்களின் வேறாக வைத்து வழிபடு கின்றவர்கட்கு அவரால் முன்பு செய்யப்பட்டுக் குவிந்து கிடக்கின்ற வினைகள் கெட்டொழிதல் உறுதி.
=======================================
பாடல் எண் : 7
அழிதக வில்லா அரன்அடி யாரைத்
தொழுதகை ஞாலத்துத் தூங்கிருள் நீங்கும்
பழுது படாவண்ணம் பண்பனை நாடித்
தொழுதெழ வையகத் தோரின்ப மாமே.

பொழிப்புரை :  இறைமைக் குணங்களையுடைய சிவபெருமானை விரும்பி அவனை நாள்தோறும் தொழுது துயிலெழுதலை மட்டும் செய்தால், இவ்வுலகத்தில் உலகின்பத்தோடு சிறிது இறையின்பமும் உண்டாகும். ஆனால், தம் நிலையில் கெடுதல் இல்லாத மாகேசுரரை வழிபடுதலால், இவ்வுலகத்தில் நீங்குதற்கரிய அஞ்ஞானம் நீங்கி இறையின்பமே மிகக் கிடைக்கும்.
=======================================
பாடல் எண் : 8
பகவர்க்கே தாகிலும் பற்றில ராகிப்
புகுமத்த ராய்நின்று பூசனை செய்யும்
முகமத்தோ டொத்துநின் றூழிதோ றூழி
அகமத்த ராகிநின் றாய்ந்தொழிந் தாரே.

வித்தக மாகிய வேடத்தர் உண்டஊண்
அத்தன் அயன்மால் அருந்திய வண்ணமாம்
சித்தந் தெளிந்தவர் சேடம் பருகிடின்
முத்தியாம் என்றுநம் மூலன் மொழிந்ததே.

பொழிப்புரை :  சிலர் மாகேசுரரிடத்துச் சிறிதளவும் அன்பில்லா தவராய் மாகேசுவ ரனிடத்துச் சரண் புகுகின்ற பித்துக் கொள்ளிகளாய் அவனை மட்டும் பூசித்தலாகிய அந்த வழியிலே நெடுங்காலம் நின்று, அவனது அருள் மிகக் கிடையாத காரணம் யாதென்று ஆராய்ந்து, முடிபு காணாது இளைத்து விட்டார்கள்.
=======================================
பாடல் எண் : 9
தாழ்விலர் பின்னும் முயல்வர் அருந்தவம்
ஆழ்வினை ஆழ அவர்க்கே அறம்செய்யும்
ஆழ்வினை நீக்கி அருவினை தன்னோடு
போழ்வினை தீர்க்கும்அப் பொன்னுல காமே.

பொழிப்புரை :  உலகீர், பின்னும், பின்னும் நீர் மிக அழுந்த வருகின்ற எதிர் வினைகள் தோன்றாமல் ஆழ்ந்தே போகும்படி, பாசக் கட்டாகிய இழிநிலை யினின்றும் நீங்கி உயர்நிலையை எய்தினா ராயினும், மீட்டும் அந்த இழிநிலையில் பாசங்கள் வந்து வீழ்த்தாதபடி முன்பு செய்து போந்த அந்தச்சரியை முதலிய அரிய தவங்களைப் பின்னும் மாகேசுரர் விடாது செய்வர். அத்தகையோர்க்கே நீவிர் தானத்தையும், தருமத்தையும் செய்யுங்கள். அவ்வாறு செய்தால் அச்செயல்கள் உங்களுடைய எதிர்வினை, பழவினை, பயன்வினை என்னும் மூவகை வினைகளையும் அறவே அழிக்கும். அவ்வினைகள் அழியவே, மீளப் பந்த உலகில் வரும் பிறப்பு இன்றி, வீட்டுலகமே கிடைப்பதாகும்.
=======================================
 


மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!